Skip to content
Post Views: 1,186
மறுநாள் காலை விடியலிலேயே பூவினியின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
அங்கே ரஞ்சித் அப்போதுதான் விழித்திருக்க அவனது அப்பா கதிரேசன் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தார்.
Advertisement
குமரன் உள்ளே நுழையவுமே, “மாப்ள வாங்க வாங்க. மல்லிகா இந்தா மாப்ள வந்துருக்காரு பாரும்மா.” என்று வரவேற்றார்.
“மாமா, ரஞ்சித் எங்க?” கேட்டவன் அவர் அறையைக் காட்டவும் அறைக்குள் வந்தான்.
Advertisement
Advertisement
உள்ளே வந்தவன் ரஞ்சித்தைப் பார்க்க அவன் கால்களில் இன்னும் கட்டு அகற்றப் பட்டிருக்கவில்லை. “இப்ப எப்படி இருக்க ரஞ்சித். மறுக்கா டாக்டர எப்ப பாக்கணும்?”
“முன்னக்கி இப்பத் தேவலாம் மாமா. ரெண்டு நாளா வலி கூட ரொம்ப இல்ல. இன்னும் ஒரு பத்து நாள்ல நடக்க பழகலாம்ன்னு சொன்னாங்க. அப்புறம் பிசியோ பண்ணனும். எப்படியும் இன்னும் மூணு நாலு மாசம் இப்படித்தான் போகும் போல மாமா.” சொன்னவனின் குரலில் அதீத வருத்தமும் விரக்தியும் அப்பிக் கிடந்தது.
Advertisement
“அதெல்லாம் சரியாப் போகும் ரஞ்சித்.”
“எப்புடி மாமா. என்னாலதே இம்புட்டுப் பாடு. பூவு வாழ்க்கயும் போயி, நாந்தே அன்னைக்கு, …”
“போதும் டா, இன்னமும் நடந்தத சொமந்துக்கிட்டே திரியாத. அப்புறம் உன்னால அந்த சொமயத் தாண்டி நடக்கவே முடியாது.”
“இப்பவும் நா முன்ன மாதிரி நல்லா நடக்க முடியாதே மாமா.” சொன்னவனின் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.
“இதையே நெனச்சு எம்புட்டு நாத்தே நீ வருத்தப் படுவ. கண்டத்தையு நெனைக்காம என்ன செய்யலான்னு யோசிய்யா. சும்மா இப்பிடிக் கெடந்தா மனசு இன்னமும் குப்பையாத்தேம் போகும்.”
“ஹ்ம்ம், சரித்தே.”
“என்ன டா ஓஞ் சரியே சரியில்லையே.”
“பின்ன என்ன மாமா, எந்நேரமும் வாத்தியாவேதே சுத்துவிய போலயே.”
“ஹுக்கும், வாத்தியாரு சொல்லவும் நீயும் அப்டியே பயந்து கேக்குற பாரு.”
“மாமா எங்கப்பாட்ட இருவத்தஞ்சு வருசமா இப்படி பாடங் கேக்குறேன். இப்ப நீங்க வேறயா.” சொன்னவனின் சிரிப்பொலியை கேட்டபடி உள்ளே வந்தார் கதிரேசன்.
“இந்தாங்க மாப்ள காப்பிய குடிங்க. மருகய்யே மாமா பேசுனாகளா?” மெல்ல பேச்சைத் தொடங்கினார்.
“மாமா மன்னிச்சுக்குங்க. அன்னைக்கு நா அம்புட்டு பேரும் இருக்கையிலே கெளம்பி போயிருக்கக் கூடாதுதே. அந்த நிமிஷம் எனக்கு என்ன செய்யணும்ன்னு தெரியல மாமா.”
“சங்கடப்படாதிய மாப்ள. உங்க விருப்பமில்லாம எம் பொண்ண கட்டிக்க சொன்னது தப்புத்தே.”
“ஐயோ, அதெல்லா ஒண்ணுமில்ல. விருப்பம் விசயமில்ல மாமா. இம்புட்டு அவசரமா இந்தக் கல்யாணம் அவசியமான்னுதே,…” என்று குமரன் தயங்கவுமே,
“உங்க ஐயா உங்கட்ட சொன்னாகளான்னு தெரியல. சம்மந்தி வீடு பூவினிய கூட்டிட்டு போக சொன்னாகளே தவிர எம் பேரனுக்கு ஒரு வழியுஞ் சொல்லல.” சொல்லும் போதே கதிரேசனின் வேதனை மேல பேசவிடாமல் செய்தது.
“ஐயா, சொன்னாக மாமா. இனி மகிழே எம் பொறுப்பு மாமா. நீங்க அத நெனக்காதிய.”
“அதில்ல மாப்ள, எம் பொண்ணு வாழ்க்கையும் போயி, மகனுக்கும் இம்புட்டு லட்சம் செலவழிச்சு, இனி பேரனயும் பாக்க, எனக்கும் இதுக்கு மேல சத்தியில்ல.”
“தெரியிது மாமா. ஆனாலும் பூவினிக்கும் மனசு கொஞ்சம் தேரணுமே. அதேன் கல்யாணத்தக் கொஞ்ச நாச்செண்டு,..”
“ஐயோ அதெல்லா சரிப்படாது ய்யா. சம்மந்தி வீட்டுல மனசு மாறிப் போச்சுன்னா எம் மக வாழ்க்க போயிரும். நீங்க பூவினிக்காக யோசிச்சு பேசுறிய, சந்தோசந்தே. உங்கள நாங்க கட்டாயப்படுத்தல. ஆனா பொண்ணுக்கு அப்பாவா எனக்கு இது பெரிய சுயநலந்தே.“
“மாமா எனக்கு சம்மதந்தே. நீங்க சங்கடப் பட்டுக்காதிய.”
“அதான் மாப்ள அவுக பூவினிய உங்களுக்கு கேட்கவும் நானும் அவ அம்மாவும் சம்மதம்ன்னு மறுநாளே உங்க பெரியப்பாகிட்ட சொல்லிட்டோம். பூவினி தைரியமனாவதே. தெளிஞ்சுக்குவாய்யா.” என நம்பிக்கையாய் சொன்னவரின் நம்பிக்கையை குமரன் அதற்கு மேலும் பேசி உடைக்க விரும்பவில்லை.
“மாமா என்னமும் நெனச்சு மனச கொழப்பிக்காதிய. அன்னைக்கு ஒரு வேகத்துலதே எந்திருச்சு போனேனே தவிர வேற ஒண்ணுமில்ல. நீங்க ரஞ்சித்த நல்லா பாருங்க. கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” என்று அவர் விரும்பிய பதிலையே சொல்லிவிட்டு திரும்பி வந்திருந்தான்.
அன்று மாலையே நடந்ததைப் பூவினியிடம் சொல்ல அவளோ வழக்கம் போல ‘ம்’ என்று முடித்துவிட்டாள். ஓரெழுத்து ஒரு மொழியாக இருக்கும் இந்த ‘ம்’க்கு மட்டும் பல அர்த்தங்கள் போல.
அன்றிலிருந்து அவள் சொல்லும் அந்த ‘ம்’களுக்கு பொருள் புரியாமல் இவனிருக்க, அவளோ ‘தன் கவலை தனக்கு’ என தனி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாள்.
இவனாலும் அதற்குமேல் என்ன செய்துவிட முடியும். வாழ்க்கை செல்லும் பாதையில்தானே நாம் செல்ல முடியும். நமக்கான பாதையை நாமே அமைக்கும் வாய்ப்பு விதி தந்தால் மட்டுமே உண்டு.
யோசனையோடு காபியைக் கலந்தவன் தனக்கும் அப்பத்தாவிற்கும் எடுத்துக்கொண்டு வெளிவாசலுக்கு வந்தான்.
தூறல் ஓய்ந்தும் தூவானம் ஓயாத வானம், அந்த மின்விளக்கின் மஞ்சள் ஒளியில் வெள்ளிப் பஞ்சுமிட்டாய் போல எங்கும் பறந்தது.
மகிழ மரத்தின் கரும்பச்சை இலைகள் இருளின் நிறம் பூசி அதில் மேலும் மஞ்சள் ஒளிபட்டு கருப்புத் தங்கம் போல தகதகத்தது.
மரத்தில் பூக்கள் மருந்துக்கும் இல்லை. ஆனால் அதன் வாசனை மட்டும் மண்ணைவிட்டு மங்காமல் அவன் நாசியில் நுழைந்து மனத்தை நிறைத்தது.
கையில் இருந்த காபியின் மணத்தைவிட அந்த வெளிப்புறத்தின் சுகந்தத்தை கண்கள் மூடி சுவாசம் முழுவதும் நிரப்பிய பின்பே காபியை அப்பத்தாவை நோக்கி நீட்டினான்.
“அப்பத்தா இந்தாங்க, நல்லா சூடா இருக்கு, குடிங்க. கிண்ணத்தோட தரவா?” பேசியபடியே சிறு கிண்ணத்தில் காப்பியும் கூடவே ஒரு குவளையும் கொடுத்தான்.
அவனதை எடுத்தவன் மகிழ மரத்தடிக்கு செல்ல “ஏலேய், எந்நேரமும் மரத்தடிக்கு போவாதடா. பூச்சி பொட்டு கெடக்கும். என்னமும்ன்னா என்ன செய்ய?” சற்று வேகமாகவே வந்தது வள்ளியம்மாவின் குரல்.
“அப்பத்தா எங்கயும் போகல விடு. வழக்கம் போல உம் பக்கத்துலயே வாறேன்.” அலுத்துக் கொண்டாலும் அருகில் சென்று அமர்ந்தான். வயதானலும் கலையான வள்ளியமாளின் முகம் கவலையால் சுருங்குவது குமரனுக்கும் மனத்தை சுனக்கியது.
“என்ன அப்பத்தா, மரத்தடியில காப்பி குடிக்கிறது எனக்கு என்ன புதுசா? வருசத்ததோட அங்குன நின்னுதே குடிக்கிறேன். உனக்கு என்ன மனசுல கோளாறோ அத சொல்லுத்தா. சும்மா என்னைய குத்தஞ் சொல்லுற நீ?“
அவன் கேட்டதுதான் தாமதம், வள்ளியம்மாள் மனக் குமுறலெல்லாம் குரல்வலையைத் தாண்டிக் குதித்தது.
”என்னன்னுடா நாஞ் சொல்ல. எஞ் சிங்கத்த, அடிச்சு கொண்டாக்கூட ஊரு சனம் வேணும். உங்கண்ணே ஆளு பீமணாட்டம். உங்க அய்யன் போலே. இந்நேரம் அப்பத்தா காபின்னு வந்துருவான். அவுக ஆத்தா போடுறதயா குடிப்பான். காப்பிக்கி மாத்திரம் அப்பத்தான்னு இங்குனதே வருவான். ஹ்ம்ம். இன்னைக்கு நா இருக்கேன். ஆனா அழகு பெத்த எம்பேரன்…. “ என கதறி அழுதவரை குமரன் அணைத்துப்பிடிக்க, இருளில் இருந்து அதிர்ந்து விழித்தபடி வாசலில் வந்து நின்றாள் பூவினி.
ஒரு மொட்டுப்போல நம்முள் மலரத் துடிக்கும் அன்பு அத்தனை சீக்கிரம் மலர்ந்துவிடுமா என்ன? மண்ணில் விழுந்து எல்லாம் இழந்து தன்னையும் சேர்த்து இழந்தால் தானே ஒரு விதை முளைக்கும். நமக்கான அன்பும் அது போலத்தான். காலம் வரும் காத்திருப்போம்.
error: Content is protected !!