Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்Uncategorized

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-10

அத்தியாயம் -10

அன்பில் துயிலும் இதயத்தின் லயத்திற்கு கூதல் காற்றில் கன்னக் கதுப்புகளைத் ஏந்தும் உள்ளங்கைகளின் இளஞ்சூட்டுப் பதம்.”

ஆதிரை அந்த அறையை விட்டு வெளியேறிய பின், மித்ரனால் அந்த இருக்கையில் ஒரு நிமிடம் கூட அமர முடியவில்லை. இன்னும் மூன்று ஆய்வாளர்கள் தங்கள் திட்டங்களை விளக்க வேண்டியிருந்தது. அவர்களின் குரல்கள் மித்ரனின் காதுகளில் விழுந்ததே தவிர, மூளைக்குச் செல்லவில்லை. அவன் கண்கள் அந்த வெற்று மேடையையே பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே சற்று முன் ஆதிரை நின்றிருந்தாள். இருபது வருடங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் பார்த்த அதே ஆதிரை… ஆனால் இப்போது அவளது விழிகளில் ஒரு புதிய தெளிவும், அதே சமயம் ஒரு ஆழமான ரணமும் தெரிந்தது. மதிய இடைவேளையின் போது, மாலினி அவனருகில் வந்தாள். மித்ரனின் முகம் பேயறைந்தது போல் இருப்பதை அவள் கவனித்தாள். மாலினிக்குத் தெரியும், ஆதிரை மித்ரனை விட்டுச் சென்றபோது அவன் எவ்வளவு சிதைந்து போயிருந்தான் என்று. அந்த மன வேதனையிலிருந்து அவன் மீண்டு வர எத்தனை காலம் பிடித்தது என்பதும் அவளுக்குத் தெரியும். அமைதியாக ஆதிரையின் விண்ணப்பத்தை (Application profile) அவனிடம் நீட்டினாள். மித்ரன் நடுக்கத்துடன் அந்தத் தாள்களைப் புரட்டினான். ஆதிரை… இப்போது ஒரு விஞ்ஞானி. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள சி.இ.சி.ஆர்.ஐ (CECRI) கிளையில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறாள். அங்கிருந்துதான் இந்த ஆராய்ச்சித் திட்டத்திற்காக விண்ணப்பித்திருக்கிறாள். அவளது சாதனைகள், அவளது உழைப்பு எல்லாம் அந்தத் தாள்களில் தெரிந்தன.



Advertisement

அமர்வு முடிந்த அடுத்த விநாடியே, மித்ரன் அங்கிருந்து வெளியேறினான். அவனால் ஒரு நொடி கூட தாமதிக்க முடியவில்லை.

அதே சமயம், ஆதிரையும் கண்மணியும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு மண்டபம் நோக்கிப் புறப்பட்டனர். கோவில் பிரசாதத்தை உண்டுவிட்டு, காரின் பின் இருக்கையில் கண்மணி சோர்வினால் உறங்கிப் போயிருந்தாள். ஆனால் ஆதிரைக்குத் தூக்கம் வரவில்லை. கார் ஜன்னல் வழியே ஓடும் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது மனதுக்குள் மித்ரனின் முகம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. கண்மணி சோர்வினால் உறங்கிவிட, காரின் ஸ்டீரியோவில் மெல்லிய சத்தத்தில் அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. காரின் ஸ்டீரியோவில் அந்த ” பாடல் மெல்ல ஒலிக்கத் தொடங்கியது. ஆதிரை ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, பாடலின் வரிகள் அவள் இதயத்தில் ஊடுருவின.

“நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே… கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே…”

Advertisement

அந்த வரிகளைக் கேட்கும்போது ஆதிரையின் கண்கள் கசிந்தன. இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் அந்த அன்பு இன்னும் மங்காமல் அப்படியே இருப்பதை அந்தப் பாடல் உணர்த்தியது. மித்ரன் இல்லாமல் அவள் கழித்த அந்த ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக அவளுக்குத் தெரிந்தது.

Advertisement

“நான் உனை காணும் வரையில் தாபத நிலையே… தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே… ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்… நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்…”

இந்த வரிகள் அவளது இப்போதைய நிலையை அப்படியே பிரதிபலிப்பதாகத் தோன்றியது.

அவனது அந்தப் பார்வை… அதில் தெரிந்த ஏக்கம், கோபம், தவிப்பு என அனைத்தும் அவளைத் துளைத்தன. “மித்ரன்… ஏன் இப்படி?” என்று அவள் மனம் தேம்பியது. இருபது ஆண்டுகளுக்கு முன் பன்னீர் மரத்தடியில் சைக்கிள் கூடை நிறைய பூக்களுடன் அவள் நின்றிருந்தபோது, அவன் அவளை நோக்கி வந்த அதே விநாடி மீண்டும் அவள் நினைவில் வந்து போனது.

Advertisement

“நீர் வழியே மீன்களைப் போல் என் உறவை நான் இழந்தேன்… நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன்…”

ஆதிரை ஜன்னல் கண்ணாடி வழியாகத் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தாள். மித்ரன் அருகில் இருந்தும் அவனைத் தொட முடியாத, பேச முடியாத ஒரு துறவு நிலையைத் தான் அடைந்திருப்பதை எண்ணி அவள் மனம் கசிந்தது.

“மணல் ஊறும் மழையாய் மடி மீது விழவா வா… அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழவா…

பாடலில் வரும் அந்த உணர்ச்சி, அவளது அழுகையை இன்னும் அதிகப்படுத்தியது.

மித்ரன் தன் சீனியராக அறிமுகமான அந்த நாட்கள், அவன் கருந்துளைகளைப் பற்றி விளக்கியபோது அவன் அறிவின் தீட்சண்யத்தில் அவள் விழுந்த தருணங்கள் என அனைத்தும் அவள் கண்முன் சித்திரங்களாக விரிந்தன. “காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்யும்போது நாம் நம் பிம்பங்களையே சந்திப்போம்” என்று அவன் அன்று சொன்னது எவ்வளவு நிஜம்! இன்று அவள் தன் கடந்த காலத்தையே நேருக்கு நேர் சந்தித்துவிட்டு வந்திருக்கிறாள்.

ஆதிரையின் கண்கள் கசிந்தன. மித்ரனை மீண்டும் சந்தித்த அந்தத் தருணம் அவளுக்குள் ஒரு புதிய போராட்டத்தைத் தொடங்கியிருந்தது.

கார் ராமநாதபுரத்தைத் தாண்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில் மின்னலென விரைந்தது. மண்டபத்தின் எல்லையைத் தொட்டபோது, கடலோரக் காற்றின் ஈரப்பதம் ஆதிரையைத் தீண்டியது. மெல்லக் கண் விழித்த கண்மணி, ஜன்னல் வழியே தெரிந்த தெரிந்த அடையாளங்களைக் கண்டு, “அம்மா… ஊர் வந்துருச்சுமா…” என்று ஆதிரையின் கையைப் பிடித்து உலுக்கினாள்.

ஆதிரை நிமிர்ந்து அமர்ந்தாள். அந்தச் சின்னஞ்சிறிய வீதிகள், சுமார் நூறு குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் அந்த அமைதியான பகுதி… அவளது புகலிடம். கார் மெல்லத் திரும்பி, அவளது வீட்டின் தெரு முனையில் நின்றது.

அங்கே…

வீட்டின் இரும்புக் கிரில் கதவிற்கு அருகில், ஒரு கார் நின்றிருந்தது. அதன் மீது சாய்ந்தபடி, மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு மித்ரன் நின்றிருந்தான். மித்ரன் மதுரையிலிருந்து மண்டபம் நோக்கிப் பறந்து வந்து சேர்ந்திருந்தான். மாலினி கொடுத்த அந்தப் படிவத்தில் இருந்த முகவரியைக் கொண்டு அவன் ஆதிரையின் இருப்பிடத்தைக் கண்டறிவது சிரமமாக இருக்கவில்லை.  அவனது கண்கள் ஆதிரையின் காரையே வெறித்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் அத்தனை காலக் காத்திருப்பும், ஆத்திரமும், அதையும் தாண்டிய அளவற்ற காதலும் ஒருசேரத் தெரிந்தன.

காரை விட்டு இறங்கிய ஆதிரை அப்படியே சிலையாக நின்றாள். “மித்ரன்…” அவளது இதழ்கள் ஒலியின்றித் துடித்தன. “அம்மா… அப்பாமா! அதோ பாருமா… அப்பாவேதான்!” என்று துள்ளிக் குதித்தபடி காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.

மித்ரன் அப்படியே நிலைகுலைந்து போனான். இத்தனை வருடங்களாகத் தன் மனக்கண்ணில் மட்டும் பார்த்துக் கொண்டிருந்த தன் பிம்பம், இதோ இரத்தமும் சதையுமாக, தன் கண்களையே கொண்ட ஒரு சிறுமியாகத் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு அவன் கண்கள் கலங்கின. கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தவன், மண்டியிட்டு அமர்ந்து, ஓடி வந்த கண்மணியை அப்படியே வாரியணைத்துக் கொண்டான். அவனது இறுக்கமான இதயம் இப்போது ஒரு மெழுகுதிரியைப் போல உருகத் தொடங்கியது.

“கண்மணி…” என்று அவன் அழைத்தபோது, அவனது குரல் கரகரத்தது. அவளது பிஞ்சு விரல்கள் மித்ரனின் தாடியைச் சுட, “ஏன்பா இவ்வளவு லேட்டு? அம்மா எப்போவுமே உங்களைச் சொல்லிக்கிட்டே இருப்பாங்கப்பா…” என்று அவள் மழலையில் சொல்ல, ஆதிரை மெல்ல அவர்களை நோக்கி நடந்தாள். “ஆதிரை ஒரு கணம் அப்படியே நின்றாள். அவளது மூளை ஆயிரம் கேள்விகளை அடுக்கியது. ஆண்டுகால பிரிவு, சொல்லப்படாத காரணங்கள், பாதியில் நின்ற உரையாடல்கள் என அவன் மீது அவளுக்குக் கோபமும் ஆதங்கமும் இருக்கத்தான் செய்தது. அவனிடம் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்கள் ஒரு பெரும் பட்டியலாகவே அவள் மனதுக்குள் இருந்தது. ஆனால், அடுத்த நொடி அவள் தன் கண்கள் வழியே பார்த்த காட்சி, அவளது அத்தனை பிடிவாதங்களையும் கரைத்துவிட்டது.

மித்ரனின் விரல்களை அத்தனை உரிமையுடன் பற்றிக்கொண்டு, “வாங்கப்பா…” என்று கண்மணி அவனை வீட்டிற்குள் இழுக்கின்ற விதம், ஆதிரையின் இதயத்தை மென்மையாக்கியது. “வாங்க மித்ரன்…” என்றாள். இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் அந்த வீடு இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தது.

ஆதிரை தீர்மானித்தாள். இப்போது தன் தனிப்பட்ட காயங்களை விட, கண்மணிக்குத் தன் தந்தையின் அரவணைப்பு கிடைப்பதே மிக முக்கியம் என்று அவள் உணர்ந்தாள்.

மித்ரன் அந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்ததுதான் தாமதம், கண்மணிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தன் தந்தையின் கையை ஒருபோதும் விடக்கூடாது என்பது போல கெட்டியாகப் பற்றிக்கொண்டாள்.

“ப்பா… இங்க வாங்க! நான் உங்களுக்கு எல்லாத்தையும் காட்டணும்,” என்று அவனை இழுத்துச் சென்றாள். ஹாலில் இருந்த ஒரு மர அலமாரியின் முன் அவனை நிற்க வைத்தாள். அங்கே வரிசையாகக் கேடயங்களும், பதக்கங்களும் மின்னின.

“இங்க பாருங்கப்பா… நான்  இன்டர்-ஸ்கூல் மீட்ல எலோகுஷன்ல (Elocution) ஃபர்ஸ்ட் பிரைஸ்,  அப்புறம் போயட்ரில (Poetry) செகண்ட், குவிஸ்ல (Quiz) செகண்ட்…” என்று அவள் ஒவ்வொன்றாக விரல் நீட்டிச் சொல்லச் சொல்ல, மித்ரனின் இதயம் பெருமிதத்தில் விங்கியது.

“பார்ரா… செம்ம குட்டிமா நீ! நீ யாரு… என் பொண்ணு இல்ல? அப்படித்தான் கலக்கணும்!” என்றான்.

பின் மித்ரன் தாகமாக இருக்கிறது என்று சொல்ல, கண்மணி “இருங்கப்பா… நான் தண்ணி கொண்டு வர்றேன்” என்று உற்சாகமாகச் சமையலறைக்குள் ஓடினாள். அவளது அந்தச் சிறு காலடிச் சத்தம் மறையும் வரை காத்திருந்த மித்ரன், மெல்ல ஆதிரையை ஏறிட்டுப் பார்த்தான்.

இருவருக்கும் இடையே அந்த அறையின் மௌனம் ஒரு பெரும் சுவராக நின்றிருந்தது. மித்ரன் தன் தொண்டையைச் சரிசெய்து கொண்டு, மிகவும் மென்மையான குரலில் கேட்டான், “எப்படி இருக்க ஆதி?”

ஆதிரை அவனை நேராகப் பார்க்கவில்லை. ஜன்னல் திரையைச் சரி செய்வது போலப் பாவனை செய்தபடி, “ம்ம்… இருக்கேன்…” என்று ஒற்றைச் சொல்லில் முடித்துக் கொண்டாள். அந்தப் பதிலில் ஒரு நீண்ட காலத் தனிமையும், வைராக்கியமும் கலந்திருந்தது.

மித்ரன் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவளிடம் இன்னும் நிறையப் பேச வேண்டும் என்று அவன் உள்ளம் துடித்தது. “என்ன… திடீர்னு சி.இ.சி.ஆர்.ஐ-ல (CECRI) ஜாயின் பண்ணிருக்க? என்னவா இருக்க அங்க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.

ஆதிரை இப்போது அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் இன்னும் அந்தப் பழைய காயங்களின் வடு மறையவில்லை. “ஆமா… டாக்டர் பொற்சோழன், அவரோட ஒரு புராஜெக்ட்ல ‘ரிசர்ச் அசோசியேட்’ (Research Associate) வேகன்சி ஒரு வருஷத்துக்கு இருந்தது. அதுலதான் ஜாயின் பண்ணினேன். இப்போ அதுலதான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன்,” என்றாள் நிதானமாக.

ஆதி… நான் உன்ன…” என்று மித்ரன்  சொல்லத் தொடங்க, அதற்குள் கண்மணி கையில் தண்ணீர் செம்போடு உள்ளே வந்தாள். “இந்தாங்கப்பா தண்ணி!”

மித்ரன் எவ்விதத் தடையுமின்றி, “ஆதி, நான் கொஞ்சம் ஃபிரெஷ் அப் ஆயிட்டு வர்றேன்,” என்று மிகவும் இயல்பாகச் சொல்லிவிட்டு உள்ளே நடந்தான். “வாங்கப்பா… நான் நம்ம ரூமுக்குக் கூட்டிப் போறேன்,” என்று கண்மணி அவனது கையைப் பிடித்துத் தன் அறைக்கு இழுத்துச் சென்றாள். அவர்கள் இருவரும் உள்ளே செல்வதையே ஆதிரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மித்ரனும் கண்மணியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தங்களுக்குள் ஒரு தனி உலகத்தையே உருவாக்கிக் கொண்டார்கள். அப்பாவிடம் காட்ட வேண்டியவை, சொல்ல வேண்டியவை என கண்மணியிடம் கதைகள் தீரவே இல்லை. மித்ரனும் எவ்வித அலுப்புமின்றி, அவளது ஒவ்வொரு சிறு வெற்றியையும் ஆச்சரியத்துடன் கேட்டு அவளைக் கொண்டாடினான். அவர்களின் சிரிப்புச் சத்தம் அந்த வீடு முழுவதும் நிறைந்தது.

ஆனால், சமையலறையில் இருந்த ஆதிரையின் நிலை அப்படியே நேர்மாறாக இருந்தது. வெளியே கேட்கும் அவர்களின் அந்த இன்பமான உரையாடல், அவளுக்குள் ஒரு இனம் புரியாத வலியைத் தந்தது. “எவ்வளவு சீக்கிரம் அவனோடு ஒட்டிக் கொண்டாள்?” என்ற ஆதங்கம் ஒருபுறம், “இத்தனை காலம் எங்கே போனாய்?” என்ற கேள்வி மறுபுறம் என அவள் மனதிற்குள் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அவள் இன்னும் இன்னும் இறுகினாள். தன் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல், இயந்திரத்தனமாக இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கினாள்.

இருட்டிய பிறகு, மூவருக்கும் தலா இரண்டு தோசைகளை வார்க்கத் தொடங்கினாள். அந்தப் பகுதியில் நிலவிய உப்புக்காற்றின் ஈரப்பதம் தோசைக்கல்லின் சூட்டில் ஆவியாகி ஒரு மணம் தந்தது.

“சாப்பிட வாங்க…” என்று அவள் குரலில் ஒரு அந்நியத்தன்மை கலந்திருந்தது.

மித்ரனும் கண்மணியும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தார்கள். இத்தனை   ஆண்டுகளுக்குப் பிறகு, கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு, தன் மனைவியின் கையால் ஒரு வேளை உணவைப் பெறப்போகிறோம் என்ற எண்ணமே மித்ரனின் மனதிற்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஆதிரை கொண்டு வந்து வைத்த அந்த மொறுமொறுப்பான தோசையை ஒரு துண்டு பிய்த்து வாயில் வைத்தான். அதே சுவை…

அவளது அன்பும், கோபமும், வைராக்கியமும் கலந்த அந்த உணவை உண்டபோது, அவனுக்குத் தாளாமல் ஒரு கணம் விக்கல் எடுத்து புரையேறியது. “க்ஹ்ஹ்…” என்று அவன் இரும, சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.

அவன் கேட்காமலேயே அவள் அந்தத் தண்ணீர்ச் செம்பைத் தட்டில் வைத்து அவனிடம் நீட்டினாள். அவளது முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை, ஆனால் அந்தச் செயல் அவனுக்குள் ஒரு பெரும் நம்பிக்கையைத் தந்தது.

“இன்னும் இவள் மனதில் அங்கேயே தான் நான் இருக்கிறேன்” என்று அவன் அகமகிழ்ந்து போனான். அவளது மௌனம் ஆயிரம் வசவுகளை விடக் கொடியதாக இருந்தாலும், அவள் காட்டும் இந்தச் சிறு கவனிப்பு அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

இரவு உணவு முடிந்ததும், கண்மணியின் உற்சாகம் இரட்டிப்பானது. “அப்பா… இங்க பாருங்க, நான் தினமும் பார்க்குற கார்ட்டூன்! இது ரொம்ப ஜாலியா இருக்கும், நீங்களும் என்கூட சேர்ந்து பார்க்கணும்” என்று கட்டளையிட்டபடி டிவியைப் போட்டாள். டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் ஓடத் தொடங்கியது. அந்தப் பழைய பூனை-எலி சண்டை, வீட்டின் நிசப்தத்தை உடைத்துக் கிண்டலாக ஒலித்தது

டிவிக்கு நேர் முன்னால் இருந்த பீன் பேகில் (Bean bag) கண்மணி அமர்ந்து கொள்ள, ஹாலில் இருந்த அந்தச் சிறிய சோபாவில் அமர வேண்டிய கட்டாயம் ஆதிரைக்கும் மித்ரனுக்கும் ஏற்பட்டது. அது ஒரு சிறிய சோபா என்பதால், இருவரும் மிக நெருக்கமாக அமர வேண்டியிருந்தது. மித்ரனுக்கும் ஆதிரைக்கும் இடையே இருந்த அந்தச் சில அங்குல இடைவெளி, ஒரு பெரும் கடலைப் போலத் தோன்றியது. மித்ரன் டிவியைப் பார்ப்பது போலத் தெரிந்தாலும், அவனது கவனம் முழுக்க ஆதிரையின் மீதே இருந்தது. அவளது முகத்தில் ஓடும் உணர்ச்சிகளை அவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

ஆதிரைக்குள் இப்போது குழப்பம். “என்ன இவர்? இப்போது ஒன்றும் நடக்காதது போல் இத்தனை இயல்பாகப் பழகுகிறாரே? ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை ‘ஏன் இப்படிப் பிரிந்து வந்தாய்?’ என்று கேட்க மாட்டாரா?” என்று அவள் மனம் குமுறியது. ஆதிரையின் மனதுக்குள் ஒரு தீயாக எரிந்து கொண்டிருந்தது அந்தப் பெயர்!  சந்தியா!

மித்ரனோ, இத்தனை  ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே கூரையின் கீழ், ஒரே சோபாவில்… அந்த நெருக்கத்தை மெல்ல அனுபவித்துக் கொண்டிருந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!