Skip to content
Post Views: 765
“டேய் என்னடா.. நடுராத்திரில இப்படி கத்தற..” ராமச்சந்திரன் வியர்க்க விறுவிறுக்க அவனிடம் கத்தினார்.
Advertisement
“அப்பா.. அவ.. அந்த ரம்பா. மயக்கம் போட்டு கீழே விழுந்திட்டாப்பா. தண்ணி தெளிச்சும் எந்திரிக்கவே இல்ல. பயமா இருக்குப்பா..”
“அய்யோ என்னடா சொல்ற.. “ காஞ்சனாவும், கற்பகமும் ஒரே குரலில் சொல்லியதும்,
Advertisement
Advertisement
“டேய் மாதவா.. அந்த பொண்ண திட்டினியா.. இல்ல அடிச்சியா..எங்க நகரு.. நான் போய் பாக்கறேன்.” என்று அவனை தள்ளி விட்டு அவனின் அறைக்குள் சென்றான் மருதன்.
சுவற்றின் மூலையில் விழுந்து கிடந்தவளை பார்த்ததும் பதறி விட்டது அவனுக்கு.
Advertisement
“அய்யோ என்ன பண்ணினடா அவளை. அடிச்சே கொன்னுட்டியா..” என்று அவன் பின்னே வந்த ராமச்சந்திரன் கத்தினார். அதற்குள் ரேணுவும், ரதியும் அவளை தூக்கி அமர வைத்தனர்.
“அப்பா.. அமைதியா இருங்கப்பா.. ரேணு.. மெதுவா கன்னத்தை தட்டி பாரு..தண்ணி தெளி.” மருதன் சொன்னதும்,
“ரம்பா.. எழுந்திரு.. என்ன ஆச்சு உனக்கு… இங்க பாரு..” என்று மெதுவாக அவளை கன்னத்தை தட்டி கூப்பிட்டாள் ரேணு. அவளின் நாடியை பிடித்து பார்த்த ரதி,
“மயக்கமா தான் இருக்காங்க..ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்டலாம். பிரக்னன்டா வேற இருக்காங்க இல்ல. லேட்டாக்க வேண்டாம்..” என்று சொல்லவும்,
“டேய் மாதவா தூக்கு டா.. மாறா.. காரை எடு.” என்று மருதனும் சேர்ந்து ரம்பாவின் கால் பகுதியை பிடித்து தூக்கி வர, காரில் அவளை ஏற்ற உதவி தானும் அமர்ந்துக் கொண்டாள் ரதி.
“நானும் வரட்டுமாங்க” ரேணு கேட்க,
“வேணாம் ரேணு. அப்பா, அம்மாவல்லாம் பாத்துக்க. நாங்க போய்ட்டு வரோம்.” மருதன் சொல்லவும் காரை வேகமாக செலுத்தினான் மாறன்.
பித்து பிடித்தது போல் அமர்ந்து இருந்தான் மாதவன்.
வீராப்பாக ரம்பாவிடம் பேசி விட்டானே தவிர, அவள் சொல்லியபடி அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவளின் தந்தைக்கு என்ன பதில் சொல்வது.. முதலில் அவனது அப்பாவும், சகோதரர்களுமே அவனை சும்மா விட மாட்டார்கள்.
பின் இருக்கையில் ரம்பாவை தன் மடியில் படுக்க வைத்து தலையை தடவிக் கொடுத்தபடி வந்துக் கொண்டிருந்தாள் ரதி. அதற்கும் பின் இருக்கையில் மருதன் கோபமாக அமர்ந்திருந்தான்.
எப்படியோ விரைவாக ஆரணி செல்லும் வழியிலுள்ள அந்த பிரபல மருத்துவமனையில் அவளை சேர்த்து விட்டு வெளியே பதற்றத்துடன் நின்றிருந்தனர் நால்வரும்.
“அண்ணா.. என்னன்னா அவங்களுக்கு ஒன்னும் இருக்காது இல்ல. பாவம் மாசமா வேற இருக்காங்க.” மாறன் கேட்டதும்,
“டேய் இருக்காது டா.. நீ கவலைப்படாத. மாதவா.. என்ன நடந்துச்சுன்னு இப்போவாச்சும் சொல்லு.”
ரதியை பற்றி அவள் பேசியதை மட்டும் மறைத்து விட்டு மீதி கதையை சொன்னான் மாதவன்.
“அறிவிருக்காடா உனக்கு. அவளை பாத்தா பொய் சொல்ற மாதிரி இருக்கா.? இல்ல அவங்கப்பாவ பார்த்தா அப்படி தப்பா அவளை வளர்த்திருக்க மாதிரி இருக்கா.? நீ கல்யாண மண்டபத்துல பேசின பேச்சு அப்படி. அவ கோபத்தில கத்தறான்னு விட்டுட்டு போக வேண்டியது தானே டா. என்னலாம் பேசி வச்சிருக்க? அந்த பொண்ணு என்ன பாடு பட்டிருக்கும்.” மருதன் கேட்டதும் மாதவன் முகம் தொங்கிப் போனது.
“அண்ணா.. கோபத்துல பேசிட்டேன் ணா. அவ என்ன என்ன வார்த்தையெல்லாம் பேசினா தெரியுமா.. நான் கொஞ்சம் மறைச்சு சொல்லிருக்கேன்”
“டேய் மாதவா.. மாறா.. உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன். கல்யாணம் ஆகற வரைக்கும் நம்ம வாழ்க்கை வேற. கல்யாணம் ஆகிட்ட பிறகு நம்ம வாழ்க்கை வேற. நமக்காக ஒரு பொண்ணு தன் வீட்டில் ராணி மாதிரி வாழ்ந்துட்டு இங்க வந்து வேலைக்காரி மாதிரி இருக்கா. நமக்காக அவ சொந்த விருப்பு வெறுப்பு எல்லாம் விட்டுட்டு நம்ம குடும்பத்தை அனுசரிச்சு போறா. அவளுக்கும் சில சங்கடம் இருக்கும். விருப்பு, வெறுப்பு இருக்கும். அதெல்லாம் எங்க காமிப்பா.? நம்மகிட்ட தான். அவ கோபத்துல பேசறப்ப விட்டுக் கொடுத்து போறதால நாம ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டோம். பதிலுக்கு பதில், பழிக்கு பழின்னு வாங்க ஆரம்பிச்சா அந்த குடும்பம் சின்னாபின்னமாகி போய்டும். இனி எந்த காரணம் கொண்டும் உங்களை நம்பி வந்த பொண்ணை கண்கலங்க விட்றாதீங்க.”
“சரிங்கண்ணா..” இரண்டு பேரும் ஒரு சேர சொன்னார்கள். ரதி தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அதற்குள் செவிலி ஒருவர் வெளியே வந்து,
“பேஷண்ட்டோட ஹஸ்பெண்ட் யாருங்க..” என்றார்.
“போடா மாதவா.. இவர் தாங்க” என்றான் மாறன்.
தயங்கி தயங்கி உள்ளே சென்றான்.
“எப்படி இவங்களுக்கு மயக்கம் வந்துச்சு. சரியா ஒன்னும் சாப்பிடல போல. ப்ரெக்னென்டா வேற இருக்காங்க.. சரியா பாத்துக்க வேணாமா..?கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது..?”
“இன்னிக்கு தான்..டாக்டர்.”
“என்ன ஆனிவர்சரியா.. கழுத்தில் புது கயிறு இருக்கு..”
“இல்ல டாக்டர்.. இன்னிக்கு காலையில் தான் கல்யாணம் ஆச்சு..” என்றான். பதறி போய் அவனை பார்த்தனர் மருத்துவரும், இரண்டு செவிலியரும். அவன் முகத்தில் எந்த வித சலனமுமில்லை.
“ஹ்ம்ம்.. எத்தனையாவது மாசம் இது.”
“ரெண்டு” என்றதும் சிரித்தனர் செவிலியர். மருத்துவர் முறைத்ததும் அமைதியாய் மாதவனை பார்த்தனர்.
“ஒன்னும் பயப்பட வேணாம். பிபி ப்ளக்ட்சுவேட் ஆயிட்டே இருக்கு. சரியா சாப்பிடாதது, ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்ந்து தான் மயக்கம் வந்திருக்கு. பேபி சேஃப். அவங்களும் கொஞ்ச நேரத்தில் கண்ணு முழிச்சிருவாங்க. ஆனா இனிமே கரெக்டா பாத்துக்கோங்க.”
மாதவன் வெளியே வந்து மருத்துவர் சொன்னதை சொல்லியதும் தான் மூவருக்கும் த்ருப்தி வந்தது.
மருதன் உடனே வீட்டிற்கு அழைத்து சொன்னான்.
அனைவரும் காத்திருந்து ரம்பாவுடன் வீடு திரும்ப விடியலே வந்து விட்டது. அவளை கைத்தாங்கலாக ரதி அழைத்து சென்று படுக்க வைத்தாள். மாதவன் பூனைக்குட்டி போல மெதுவாக வந்து அறைக்குள் நுழைந்ததும் “தாங்க்ஸ்…” என்றான்.
வியப்பாக பார்த்து தலையை ஆட்டினாள் ரதி. அவள் திரும்பி செல்ல யத்தனித்ததும்,
“ரதி..” என்றழைத்தான்.
“ம்ம்.” என்றாள்.
“சாரி எல்லாத்துக்கும். இனி உன் வாழ்க்கை மாறனோட நல்லா இருக்கனும். முடிஞ்சா எல்லாத்தையும் மறந்திடு.” என்று அவன் சொன்னதும், லேசான ஆச்சர்யத்துடன் மெதுவாக தலையை ஆட்டிக் கொண்டாள்.
அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் அனைவரும் தாமதமாகவே எழுந்தனர்.
பத்தாத குறைக்கு முன் தின இரவு நடந்த சம்பவங்கள் அவர்களை மனதளவிலும் தளர செய்திருந்தன.
காலையில் ரம்பாவிற்கு மட்டும் சூடாக கஞ்சி செய்து தந்துவிட்டு, மற்றவர்களுக்கு ஒரு வழியாக மதிய சாப்பாடே செய்து விட சொல்லியிருந்தனர் கற்பகமும், காஞ்சனாவும்.
மருதனின் பிள்ளைகள் இருவரும் ரதியுடன் விளையாடிக் கொண்டிருக்க, ரேணு அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு அனைவரையும் அழைத்தாள்.
அனைவரிடமும் இறுக்கமே குடிக்கொண்டிருக்க, அமைதியாக உண்டு முடித்தனர். மாதவன் சாப்பிட்டு விட்டு ரம்பாவுக்கு தட்டில் உணவு எடுத்துச் சென்றான்.
வெற்றிலை பாக்குத்தட்டுடன் வரவேற்பறையில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார் ராமச்சந்திரன்.
அவர் எதிரில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தான் மருதன்.
அப்போது கையில் இரு பெட்டிகளுடன் ரதியும், மாறனும் வந்தனர். காஞ்சனா, வேலையாக இருந்த கற்பகத்தை கையில் இடித்து அவர்களை காண்பிக்க,
“ என்ன மாறா.. எங்க கிளம்பற? நேத்து தான்டா கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள வேலை விஷயமா கிளம்பிட்டியா..?”
“ அம்மா.. நாங்க வெளிய போறோம் மா.”
“மாறா.. சொல்லவே இல்ல.. அதுக்குள்ள
ஹனிமூன் ப்ளான் போட்டுட்டியா” என்றாள் ரேணு.
மருதன் அவளை முறைக்க,
“அண்ணி. வீட்டை விட்டு வெளியே போறோம்னு சொன்னேன்”
“டேய்.. என்னடா அடுத்த பஞ்சாயத்தா.. எப்பா இன்னிக்கு ஒருநாளாவது விடுங்கப்பா. நேத்தில இருந்து அலைஞ்ச அலைச்சல் எனக்குத்தான் தெரியும். நெஞ்சை படபடன்னே வச்சிருங்க.” மருதன் படபடத்தான்.
“அண்ணா.. அப்பாட்ட சொன்ன மாதிரி நாங்க கிளம்பறோம்ணா. அம்மா.. ரதிட்ட இருந்து இந்த நகைகளை வாங்கிக்கோங்க. செக் பண்ணிக்கோங்க. சரியா இருக்கான்னு..
அண்ணா.. தாலி மட்டும் ரதிட்ட இருக்கு. அதுக்கு உண்டான பணத்தை நான் தந்திடறேன்”.
“மாறா.. என்னடா இது. மருமகளுக்கு போட்டதை எதுக்கு டா கழட்ட சொன்ன?” கற்பகம் கேட்க, ராமச்சந்திரன் அவளை முறைத்தார்.
“மாறா விளையாடாத டா. எதுக்கு இப்போ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க. யார் உன்னை கழட்டி தர சொன்னா ரதி.?” மருதன் கேட்டதும் அவள் மாறனைப் பார்த்தாள்.
“ஓ சாருக்கு கௌரவம் வந்திடுச்சோ.. அவரா சம்பாதிச்சு வாங்கித் தரேன்னு சொன்னாரா.. “
“அண்ணா அது அப்பா போட்டது
. அவர் காசுல வாங்கினது. நியாயப்படி நான் கொடுத்துட்டு தான் போகனும்”
“டேய் அதான் ரதியை கல்யாணம் பண்றதுக்கு நாமளா கொடுத்ததுன்னு சொல்லியாச்சே..அப்புறம் என்னடா..”
“அண்ணா.. உங்களுக்கு தெரியாதுண்ணா.சொல்லாம விட்டது என் தப்பு. ஆனா அதுக்கு நேரமும் கிடைக்கல.”
“என்னடா.. புது கதையா. ரேணு, உனக்கு தெரியுமா..?”
“என்னை ஏன் இழுக்கறீங்க.இங்க உங்களுக்கு தெரியற விஷயங்க கூட எனக்கு தெரியாது. அவ்ளோ ரகசியமா என்கிட்ட சொல்லாம பொத்தி வச்சுப்பாங்க” பெரியவர்களை பார்த்துக் கொண்டே கூறினாள் ரேணு.
“மாறா. எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.ரெண்டு பேரும் உள்ள போங்க.” மருதன் சொன்னதும்,
“எல்லாரும் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. நான் ரதியை கல்யாணம் பண்ணிக்கனும்னா இந்த வீடு, சொத்து, நம்ம பிஸ்னஸ் எதுலயும் எனக்கு உரிமை இல்லன்னு அப்பா சொன்னார். அதுக்கு சம்மதிச்சு தான் நான் ரதியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ எதுவும் வேணாம்னு தான் அவர் சொன்ன மாதிரி வெளியே போறேன்.”
அவன் சொன்ன போதே, காஞ்சனா அழ ஆரம்பித்து இருந்தார்.
கற்பகம் அவரை சமாதானப்படுத்த,
“எதுக்கு இவ்வளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கீங்க.?” நம்ம பையனை வெளியே போன்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?” ராமச்சந்திரனை பார்த்து கேட்டும் அவரிடம் எந்த சலனமுமில்லை.
“அம்மா.. ப்ளீஸ் யாரும் எந்த விளக்கமும் கேட்க வேண்டாம். நான் எப்பவும் உங்க பையனா தான் இருப்பேன். சொத்துக்கு தானே உரிமையில்லை..உறவுக்கு உரிமை இருக்கு இல்ல..”
“தம்பி.. எங்களுக்கு இந்த வீட்ல உரிமை இருக்கு இல்ல. நாங்க சொல்றோம், நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது..” கற்பகம் சொன்னதும்,
“அடி செருப்பால. என்னமோ உங்க வீட்ல இருந்து வாங்கிட்டு வந்து இந்த சொத்தெல்லாம் உருவாக்கின மாதிரி ரெண்டு பேரும் பேசறீங்க. நான் உருவாக்கினது இதெல்லாம். என் பணத்தையே அனுபவிச்சிட்டு நான் வேணாம்னு சொல்ல சொல்ல போய் அந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்டறான்னா நான் பாத்துட்டு இருக்கனுமா..? இப்ப எந்த பணக்காரன் வந்து மாதவியை கட்டுவான்?. இதுல இவன் இங்கேயே குடும்பம் நடத்திட்டு இருந்தா மாச சம்பளம் வாங்கறவன் கூட பொண்ணு கேட்டு வரமாட்டான்.” ராமச்சந்திரன் மீசையை முறுக்கி விட்டு பேசியதை பார்த்ததும்,
“அப்பா.. என்னப்பா இது. அவன் அப்படி அந்த நேரத்துல ரதியை கல்யாணம் பண்ணலன்னா மாதவனுக்கு என்னவாயிருக்கும், ரம்பா வாழ்க்கை என்னவாயிருக்கும்? ஊர்க்காரங்களை எப்படி சமாளிச்சிருப்பீங்க? அவன் பண்ணது நல்லதுக்கு தான். மாறா, ரதியை கூட்டிட்டு உள்ள போ..” மருதன் சொன்னதும்,
“அவனே வெளிய போறேன்னு சொன்னதுக்கு அப்புறம் உங்களுக்கலாம் என்ன பிரச்சினை. இந்த வீட்ல இருக்கறதுக்கு ஒரு தகுதி வேணும்..”
அதற்கு மேல் அங்கே நின்றால் ரதி கஷ்டப்படுவாள் என்று அவசரமாக,
“அண்ணா.. நாங்க கிளம்பறோம் ணா.”
சொல்லிவிட்டு ரதியை கண் காண்பித்து வாசலை நோக்கி நடந்தான் மாறன்.
“டேய் நில்றா. இந்த வீட்ல தான நீ இருக்கக்கூடாது. தாத்தா வீடு பக்கத்துல பூட்டித்தானே கிடக்குது. நான் சாவி எடுத்துட்டு வரேன். அந்த வீடு நம்ம நாலு பேருக்கும் தான். அதுல அப்பாக்கே உரிமை இல்ல..அதனால அங்கருந்து யாரும் உன்னை வெளியே போக சொல்ல முடியாது..”
“ஏண்டா என் பேச்சை மதிக்கவே கூடாதுன்னு இப்படியெல்லாம் பண்றீங்களா? அவனுக்கு பணம் வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம்னு தெரியணும்னு தான் வெளியே போக சொன்னேன். நான் என்ன கொடுமைக்காரனா? அப்படி நினைச்சே எல்லாரும் ஆளாளுக்கு பண்றீங்க..தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு சொல்வாங்க.. ஆனா நீங்க தகப்பனுக்கு எதிரா தான் எல்லாத்தையும் பண்ணுவேன்னு பண்றீங்க இல்ல…” என்றார் ராமச்சந்திரன்.
சத்தம் கேட்டு மாதவன் படியிறங்கி வந்தான். ரேணுவும், மாதவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன நடக்குது இங்க. இவ்வளோ சத்தமா இருக்கு..?”
“வாடா புண்ணியவானே.. நீ புள்ளையார் சுழி போட்டு எல்லாத்தையும் ஆரம்பிச்சு வச்ச.. இப்போ பாரு மாறனையும், ரதியையும் அப்பா வெளியே போக சொல்றாரு..”
“அப்பா.. எதுக்குப்பா அவங்களை வெளியே போக சொல்றீங்க. அதான் பிரச்சினை முடிஞ்சுடுச்சு இல்ல..?”
“ஹாங்.. வா.. இப்படி பக்கத்தில உட்காரு கதை சொல்றேன். ரெண்டு மாசமா என் பிபியை ஏத்தின நீ எதுவும் பேசாத. அவன் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டுத்தானே கல்யாணம் பண்ணான். கால் ஊன ஒரு இடம் இல்லாம அவஸ்த்தைப்பட்டா அப்போ தெரியும்…”
“அப்பா..” மாதவன் அழைக்கத் தொடங்கியதும்,
“டேய் விட்றா.. நாங்க கிளம்பறோம்.” என்று அவனின் அம்மாக்களை பார்த்தான் மாறன். இருவரும் கண்கலங்க நின்றனர்.
இருவரிடமும் சென்று கால்களில் விழுந்தான்.
“மாறா. யார்னா எதாச்சும் சொல்லட்டும், நீ தாத்தா வீட்ல தான் தங்கனும். இரு வரேன்” என்று மருதன் பாட்டுக்கு அவனின் அறை நோக்கி சென்றான்.
மாறன் சுற்றிலும் பார்த்தான். அவனின் தந்தையை தவிர அத்தனை பேரும் அதற்கு ஆமோதித்து அவனிடம் சம்மதத்தை எதிர்பார்ப்பது அவரவர்களின் கண்களிலேயே தெரிந்தது.
வேறு வழியின்றி அமைதியாக நின்றான்.
சாவி கொடுத்ததும் மாறனும், ரதியும் அருகில் இருந்த அவர்களின் பூர்வீக வீட்டிற்கு சென்றனர்.
தாழ்வாரத்துடன் அமைந்த ஓட்டு வீடு. அந்தக்கால தூண்கள் திண்ணை நெடுக்க நின்றிருந்தன. வீட்டை சுற்றிலும் இடமும், ஒரு சிறிய கிணறும் இருந்தது.
கதவை திறக்கும் போதே கதவில் இருந்த பெரிய பித்தளை பிடியும், அதைத்தாங்கிய இரட்டை பித்தளை யானைகளும் அத்தனை வேலைப்பாடாய் இருந்தது.
வீட்டுக்குள் நடுவில் சிறிய முற்றம் இருந்ததை பார்த்ததும், ரதிக்கு ஒரு துள்ளல் வந்ததை மாறன் கவனித்தான்.
“வீடு ஓகே வா ரதி. ஒன்னும் பெருசா வசதி இருக்காது. நாங்க சின்ன பிள்ளையா இருக்கப்ப வளர்ந்ததெல்லாம் இங்க தான். தாத்தா, அவ்வாக்கு படைக்க மட்டும் தான் அம்மாங்க இங்க வந்து சமையல் பண்ணி படைப்பாங்க. அப்பப்ப அண்ணன் வேலைக்காரங்களை வச்சு சுத்தம் பண்ணும்.” என்றான்.
“வசதி இல்லைன்னா என்ன? அப்படி எங்க வீட்லயும் பெருசா எந்த வசதியும் இல்ல. ஆனா இந்த வீட்டை பாத்தப்ப எங்க பழைய வீடு ஞாபகம் வந்துச்சு. அது எட்டுக் கட்டு வீடு, திண்ணை, தூண், முற்றம்னு அவ்ளோ அழகா இருக்கும்… எல்லாம் போனதும் நான் ரொம்ப மிஸ் பண்ணேன் அதெல்லாத்தையும். இப்ப நினைச்சா கூட எங்க தாத்தா, பாட்டி வாசனை நிரம்பி இருக்கற அந்த வீடு ஞாபகத்துல வந்து நிக்கும். அப்புறமா ஒரு பெரிய தறி அங்க…” என்றபடியே கூடத்தின் ஓரத்தில் பார்த்தாள்.
“ஹை.. எங்க வீட்ல இருக்க மாதிரியே பெரிய பழைய தறி.” என்று பதினாறு வயது பெண் போல ஓடி ஆசையாக அந்த தறியை தடவிக் கொடுத்தாள்.
“பாவு போடறது, நூல் திரிக்கறது, நூல் அறுந்துட்டா எடுத்து தரதுன்னு நான் எப்பவும் தாத்தா கூடயே சுத்திட்டு இருப்பேன். அப்போ பத்து தறி இருந்துச்சு எங்க வீட்ல. அப்பா, தாத்தா, நான், வேலைக்கு ஆளுங்கன்னு அந்த இடமே கலகலன்னு இருக்கும்.” அவளின் கண்கள் நீர்க்கோர்க்க ஆரம்பித்தன. அவளின் கரங்கள் தன்னிச்சையாக நூலை தறியில் மாட்டும் இடத்தை தடவிக் கொடுத்தன.
மாறன் அவளின் அருகில் வந்து நின்றான். அவனின் மூச்சுக் காற்று அவளின் அருகில் உணர்ந்தது அவளின் உடல். அவசரமாக திரும்பி பார்த்தாள்.
“பயப்படாதீங்க. இங்க தறிக்குழியில இருக்கு பாருங்க மூங்கில் பெட்டி. அதுல அவ்வாவோட பட்டுப்புடவை இருக்கும். அதை காமிக்க தான் வந்தேன்”
அவன் பெட்டியை திறந்து அந்த புடவையை எடுத்தான். ஒரு சாண் அளவுக்கு அரக்கு நிற பார்டர். மாம்பச்சை நிற புடவை. பார்டரில் கிளியுடன் கூடிய மீனாட்சி, கிரீடத்துடன் கூடிய பெரிய நாயகி, கரும்புடன் கூடிய காமாட்சி என்று ஒரு வரிசை. அதைத் தொடர்ந்து யாழும், வீணையும், மிருதங்கமும் ஒரு வரிசை. இப்படியே மாறி மாறி அழகான தங்க நிற பார்டரில் நூல் கோர்த்து செய்த வரிசை இருந்தது.. ரதியின் கண்கள் விரிந்தன. அதைத் தொட்டு பார்த்தாள்.
“அவ்வாவுக்கு தங்க சரி போட்டு பட்டுப்புடவை அந்தக் காலத்திலேயே எங்க தாத்தா அவர் கையாலேயே நெஞ்சு கொடுத்தாராம். அதை அவங்க கடைசி வரைக்கும் பொக்கிஷமா வச்சிருந்தாங்க. அம்மாங்க நம்ம தறியில வருஷா வருஷம் வெள்ளி சரி போட்டு ஒரு புடவை நெஞ்சுத்தர சொல்லி பெரிய நாயகிக்கு கொடுப்பாங்க. இங்கேயும் ஒரு புடவை வச்சு படைச்சு யாராச்சும் ஏழை பொண்ணுக்கு தருவாங்க.”
“ஓ.. உங்கப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்குவாரா..”
“ம்ம்.. அதுக்கெல்லாம் அம்மாங்க ஒரு செண்டிமெண்ட் கதை வச்சிருப்பாங்க. எங்க அத்தை கல்யாணம் ஆகாம செத்து போய்ட்டாங்களாம். அதனால வருஷா வருஷம் பூவாடைக்காரிய கும்புட்டு யாருக்காச்சும் குடுத்தா தான் நம்ம வீடு, கடை எல்லாம் நல்லா இருக்கும்னு சொல்லி அவரை சம்மதிக்க வச்சிருக்காங்க. என்ன அம்மனுக்குத்தான் கம்பி மாதிரி, மெல்லிசா ஒரு வெள்ளி சரி போட்டு நெய்ய சொல்லுவாரு…”
“ஓஹோ..நான் போய் வீட்டை பாக்கவா.. கிச்சன் எங்க இருக்கு?”
“ம்ம். இது இனிமே நம்ம வீடு. எங்க வேணாலும் நீ போகலாம். நோ ரெஸ்டிரிக்ஷன்ஸ்..”
அவனுக்கு மெலிதாக தலை அசைத்து விட்டு, உள்ளறைக்கு சென்று பார்த்தாள். சமைக்கத் தேவையான பாத்திரங்கள் இருந்தன. மளிகை மட்டுமே வாங்க வேண்டும்.. சட்டென அவளின் தந்தை ஞாபகம் வந்தது. நேற்று அவர் திருமணம் முடிந்து கிளம்பிச் சென்ற பிறகு அவரிடம் எதுவும் பேசவே இல்லை. இவளும் நடந்த களேபரத்தில் மறந்தே போய்விட்டாள்.
அலைபேசியை ஓடி வந்து எடுத்தவள், அவருக்கு அழைத்தார். இரு முனைகளும் கண்ணீரில் நிரம்பின.
நடந்ததை அவள் காதில் வைத்து பேசியபடியே, அவனிடம் செய்கையில் அவன் அலைபேசி எண்ணை கேட்டாள்.
அவளிடம் நெருங்கி வந்தவன், அவளின் கைகளை பிடித்து தன் பேனாவால் அவனின் அலைபேசி எண்களை எழுதினான்.
தந்தையிடம் பேசுவதால் அவளால் எதுவும் பேச முடியவில்லை.
தாலி கட்டும் போது கூட அவனின் விரல்கள் அவள் மேல் படவில்லை. ஆனால் இப்போது அவனின் ஸ்பரிசத்தை அவளின் கைகள் உணர்ந்தது. அதன் வழியே அவள் உடல் முழுதும் கூட உணர்ந்தது. சிறிய சில்லிப்பை அவளின் கரங்களில் மாறன் உணர்ந்தான். அவளை அழுத்தமாக பார்த்து விட்டு அவர்களின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று உடமைகளை அலமாரிகளில் அடுக்கினான்.
அவனையே பார்த்துக் கொண்டு பேசி முடித்து, அவனின் அலைபேசி எண்ணை சேமித்து, வாட்சப்பில் மளிகை பொருட்களின் பட்டியலை அனுப்பி வைத்தாள்.
அவளின் எண்ணை அந்த செய்தியை பார்த்ததும் தெரிந்துக் கொண்டான்.
“அன்புள்ள ரதி” என்று சேமித்தான்.
கட்டிலில் படுத்தவாறு அவன் இருக்க, அவனின் டைரியில் எழுத்துக்கள் இடம்பிடித்தன.
“அன்புள்ளவளுக்கு.. நமக்குள் இடைவெளி குறைந்துவிட்டது. வாழிடம் ஒன்றாய் ஆனது போல, இனி ஒருவருக்குள் ஒருவர் இடம்பிடிப்போம்.”
error: Content is protected !!