Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

75. இந்த்ரவாணி - நாயகியின் நாயகன்

நாயகியின் நாயகன் – 7

மாதவன் கொண்டு வந்திருந்த உணவை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தாள் ரம்பா. இரவு கொடுத்திருந்த மருந்தின் தாக்கம் இப்போது தான் குறைந்திருந்தது. அவளின் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். 



Advertisement

பதினாறு அழைப்புகள் ஏற்கப்படவில்லை என்று இருந்தது. 

“அப்பா பேசினாரா.. என்ன சொன்னீங்க? மயக்கம் போட்டேன், ஹாஸ்பிட்டல் போனேன்னு சொன்னீங்களா?” என்று படபடவென பேசினாள். 

Advertisement

Advertisement

“ப்ச்.. நான் எதுவும் பேசல. எங்கப்பாக்கு கூப்பிட்டிருப்பார் போல, அவங்க தான் விவரம் சொன்னாங்களாம். அனேகமா இந்நேரம் வந்துட்டு இருப்பார்.” 

“அச்சோ.. போச்சு. வந்தார்னா அவ்ளோதான்..” 

Advertisement

மாதவனுக்கு கடுப்பாக வந்தது. ஆனாலும் கோபத்தை அடக்கிக் கொண்டான். 

அதற்குள் கீழே பேச்சுச் சத்தம் பலமாக கேட்டது. 

மாதவன் வெளியே வருவதற்குள் ரம்பாவின் குடும்ப உறுப்பினர்கள் பத்து பேர் மாடியேறி வந்திருந்தார்கள். அவர்களுடன் மாதவனின் குடும்பமும் பின்னால் வர, 

“ரம்பா.. செல்ல மகளே. என்னாச்சும்மா. மயக்கம் போட்டு விழுந்துட்டன்னு சொன்னதும் எங்களுக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. போட்டது போட்டபடி ஓடி வந்துட்டோம். சரி காலைல நேரத்தோட எழுந்திருக்கல போல, அதான் லேட்டா பேசுவன்னு காத்திட்டு இருந்தது தப்பா போச்சு.” ரம்பாவின் அப்பா அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசியதும், 

“ஆமாம்மா.. கல்யாணத்தை நேர்ல  பாக்க முடியலையேன்னு நானே வருத்தத்தில் இருந்தேன். சாவகாசமா நாங்க கூப்பிட்டதும்  உங்க வீட்டு ஆளுங்க சொல்றாங்க. மாசமா இருக்க பிள்ளையை கவனமா பாத்துட்டு இருந்திருக்க வேணாம்..?” ரம்பாவின் அம்மா திலகம், ரம்பாவின் தலையை வருடிக் கொண்டே பேசினார். 

“நைட்டே ஏங்க சொல்லல.. நாங்க உடனே கிளம்பி வந்திருப்போம் இல்ல..” 

“இல்ல காலையிலையாவது இப்படி நடந்துச்சுன்னு சொல்லிருக்கலாம்” 

“அப்பக்கூட அவங்களா சொல்லனும்னு அவங்களுக்கு தோணல இல்ல.‌.”

ஆளாளுக்கு கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே இருந்தனர். 

ராமச்சந்திரனே விழித்தார். யாருக்கு, என்ன பதில் சொல்வது என்று. 

“அப்பா.. எனக்கு ஒன்னும் இல்லப்பா. நேத்து வந்த டென்ஷன், சரியா சாப்பிடாதது எல்லாம் சேந்து தான்ப்பா அப்படி ஆயிருச்சு. நான் நல்லாத்தான் இருக்கேன். நேத்து ட்ரிப்ஸ் போட்டு மருந்து தந்தாங்க இல்ல. என்னை மீறி நல்லா தூங்கிட்டேன்..” 

“அய்யோ ..காலைல இருந்து சாப்பிடலையா..ஏங்க நேத்து இங்க தானே அவ்ளோ நேரம் இருந்துட்டு வந்தீங்க.. புள்ளை சாப்பிட்டுச்சா இல்லையான்னு பாக்கலையா..?” 

“ஏம்மா.. ஒரு வீட்ல கட்டிக் கொடுத்தப்புறம் ரம்பா அவங்க பொறுப்பா.. நம்ம பொறுப்பா..? இதெல்லாம் மாப்பிள்ளை பாத்துக்கனும். ஏன் மாப்பிள்ளை நீங்க என்‌ பொண்ணு மேல் எதுவும் கோவத்துல கவனிக்காம விட்டீங்களா..?” 

ரம்பா, மாதவனைப் பார்த்தாள். அவன் திருதிருவென்று விழித்தான். 

“அப்பா.. அதெல்லாம் அவர் நல்லாத்தான் பாத்துக்கிட்டார். காலைல கூட சூடா கஞ்சி, மதியம் சாப்பாடு எல்லாம் இங்கேயே கொண்டு வந்தார். மாத்திரை எடுத்துக் குடுத்தார். நல்லாத்தான்ப்பா இருக்கேன்.” 

ரம்பா கெஞ்சலாக பேசியதும் திருத்தாண்டவம் மனம் ஆறியது. 

“சம்பந்தி, எப்படியும் நாங்க மறுவீட்டுக்கு புள்ளைங்களை கூட்டிட்டு போணும்னு தான் பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நாங்களே கெளம்பி வர வேண்டியதா போச்சு. நேரத்தோட நாங்க கூட்டிட்டு கிளம்பிடறோம். மாப்பிள்ளை டக்குனு உங்க டிரஸ்லாம் எடுத்து பேக் பண்ணுங்க. அம்மாடி, நீ அப்படியே கிளம்பு..” திருத்தாண்டவம் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை. தகவலாக கூறினார். 

“வந்ததும் கிளம்பனும்னு சொல்றீங்க. இருங்க. சாயந்திரம் டிபன் எதாவது சாப்பிட்டு போலாம்..” ராமச்சந்திரன் அவரிடம் சொன்னதும்,

“அட சாப்பாட்டுக்கு கொறைவா என்ன எங்க வீட்ல. நேரத்தோட போனாத்தானே எங்க வீட்டு சடங்கெல்லாம் பண்ண முடியும். வாங்க கிளம்பலாம்.” என்று திலகம் படபடவென சொன்னார். 

கற்பகமும், காஞ்சனாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

ராமச்சந்திரனுக்கோ முப்பது கோடி மேலேயே நினைவு இருந்தது. ‘இவர் என்ன வெறுங்கையை வீசிக் கொண்டு வந்திருக்கிறார்’ என்று நினைத்தவர், 

“சம்பந்தி.. ரம்பாக்கு நாங்களே துணிமணிலாம் எடுக்கலாம்னு இருந்தோம். நீங்க வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க. நீங்க எப்போ ஊர்ல இருந்து வரீங்கன்னு சொல்லுங்க. அதுக்குள்ள வாங்கி வச்சிடறோம்” 

“அட.. நாங்க எல்லாம் காலையிலேயே எடுத்து வச்சிட்டோம். சீர் வரிசைக்கு ஆர்டர் தந்தாச்சு. என் பொண்டாட்டி தான் அவங்க வீட்ல பத்துமோ, பத்தாதோன்னு இங்கயே பெருசா ஒரு வீடு வாங்கி அதுல கொண்டு வந்து வச்சிடலாம்னு சொன்னா..” திருத்தாண்டவம் சொல்லியதும் அதிர்ந்தது என்னவோ, ரம்பாவும் ராமச்சந்திரனும் தான். 

“அப்பா.. தனி வீடுலாம் வேணாம். எனக்கு நம்ம வீடு மாதிரி நிறைய ஆளுங்க இருந்தாத்தான் நல்லா இருக்கும். இவங்க வீட்லயே நிறைய பேரு இருக்காங்க..‌ நீங்களும் எல்லாரும் அடிக்கடி வந்துட்டு போனீங்கன்னா நான் லோன்லியா ஃபீல் பண்ண மாட்டேன்” 

“சரிம்மா சரிம்மா. நான் இங்கேயே எல்லாத்தையும் அனுப்பி வச்சிடறேன். மொதல்ல நாம ஊருக்கு கிளம்புவோம். மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டு வாங்க.” 

“அட.. இங்க என்ன இப்படி வேக்குது‌.. வாங்க கீழ் போய் வெளியில் நிக்கலாம்..” திலகா சொல்ல, ராமச்சந்திரன் முகத்தில் ஈயாடவில்லை. 

“சம்பந்தி வாங்க கீழ போகலாம். ஹால்ல ஏசி போட்டிருக்கு‌‌..” ராமச்சந்திரன் சொல்ல, 

அனைவரும் கீழே வந்தனர். அதற்குள் காஞ்சனா, கற்பகம் இருவரும் அனைவருக்கும் பழச்சாறு, உண்பதற்கு சிறு திண்பண்டங்கள் என கொண்டு வந்து வைத்தனர். 

“திலகா.. இது தான் நம்ம சம்பந்தி, இது அவர் பெரிய பையன் மருதன், அவர் மனைவி அவங்க.. அந்த பொண்ணோட அப்பா யாரு தெரியுமா..இந்த தொகுதி எம்.எல்.ஏ. அப்புறம் சம்பந்தியோட மனைவிங்க‌ இவங்க.” என்று பொதுவாக சொன்னார் திருத்தாண்டவம். 

“மனைவிங்கன்னா‌. இரண்டு பேரா… ஒரே வீட்லயா.. ஏன் மாப்பிள்ளை இப்படி இருக்கார்னு இப்போதான் தெரியுது..” என்று நக்கலாக திலகா சொன்னதும் அவருடன் வந்தவர்கள் சிரித்தனர். ராமச்சந்திரனுக்கு முகத்தில் அடித்தார் போன்று இருந்தது. 

“அம்மா..” படியில் இறங்கி வந்த ரம்பா சற்று சத்தமாக திலகாவை கூப்பிட்டதும், அங்கு சட்டென அமைதி நிலவியது. 

“எனக்கு ஏற்கனவே மாதவன் இதை பத்தி சொல்லியிருந்தார் மா. அவங்க ஓன் சிஸ்டர்ஸ். அதுவுமில்லாம அவங்க சிட்டுவேஷன் தெரியாம நாம இப்படில்லாம் பேசக்கூடாது. இது கிண்டல் பண்ணி சிரிக்கிற விஷயமில்ல.. போலாம் பா வாங்க. அத்தைஸ் டாட்டா.. நான் போய்ட்டு வந்திடறேன்.. பெரிய மாமா பை. சின்ன மாமா… “ என்று கூப்பிட்டாள் ரம்பா. மருதன் அமைதியாக நிற்க,

“மருதன் மாமா.. உங்களைத்தான் பை.. ரேணுக்கா… நான் வந்து உங்களோட பேசறேன்…. அப்புறம் எங்க… ரதி…. அண்ட் மாறன்.?” 

“அவங்க போய்ட்டாங்க மா..” ரேணு முந்திக் கொண்டு சொல்ல, மருதன் அவள் கையை அழுத்திப் பிடித்து, “நீ ஊருக்கு போய்ட்டு வாம்மா.. அவங்க பக்கத்தில் இருக்க கோவிலுக்கு போய் இருக்காங்க‌‌… வந்து பேசிக்கலாம்.” என்றான்‌.

அனைவரும் கிளம்பினர். மாதவனுக்கோ தர்மசங்கடம் தான். 

அடைமழை ஓய்ந்தது போலிருந்தது. மருதன் அவன் அப்பாவை பார்த்தான். அவர் முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது. 

மாடியறையில் ரேணு மருதனிடம், 

“அப்பா.. என்ன மாதிரி ஒரு குடும்பம். என்னவோ வானத்தில இருந்து குதிச்ச மாதிரி… அவங்கம்மாவும் அந்த ஆளுங்களும். இந்த ரம்பாவை பத்தி ஜட்ஜ் பண்ணவே முடியலங்க. அவ அப்பா மாதிரியா.. இல்ல அவங்க அம்மா மாதிரியா.. ஆனா ஒன்னு மட்டும் புரியுது‌.. மாதவனும், உங்கப்பாவும் இந்த குடும்பத்தில் நல்லா மாட்டிக்கிட்டு அவஸ்தை படப்போறாங்கன்னு தெரியுது..” 

“எனக்கும் புரியல ரேணு.. இவங்க குடும்பம் எப்படின்னு‌. ஆனா உங்க வீட்லயும் அவ்ளோ பணம் இருந்தும் மாமாவோ, உங்க வீட்டு ஆளுங்களோ இப்படி இல்ல..அதுவே எனக்கு பெரிய நிம்மதி.‌‌” 

“ஆமா ஆமா.. நாங்க இளிச்சவாயா இருக்குறதால தான் எங்க தலையில் நல்லா மிளகா அரைக்கறீங்க. எங்கப்பா நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறதால தான் அவரை நல்லவர் லிஸ்ட்ல வச்சிருக்கீங்க.” 

“அப்படியில்ல ரேணு.. அப்பாவும் மாமாவும் ப்ரெண்ட்ஸ்னால தான் அந்த உரிமையை எடுத்துக்கறோம்.. ஹ்மமா..ஆனா அந்தம்மா பேசினது டூ மச் தான்.” மருதனுக்கு ஆறவேயில்லை.

“ஏங்க.. உங்கப்பா மாறன்ட்ட இந்த கண்டிஷன் போட்டுத்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துட்டு இருந்துருக்கார் போல. நமக்குத்தான் தெரியல..” 

“ஆமா ரேணு.. மாறனும் அழுத்தக்காரன் தான்‌.. சொல்லவே இல்ல இல்ல..” 

“அது அவனுக்கு கொஞ்சம் சூடு, சொரணை அதிகம். அதான்…” 

“ஓ அப்ப எனக்கு இல்லன்னு சொல்றியா..” 

“உங்களுக்கு மட்டும் இல்ல.. உங்கம்மாக்களுக்கும் தான்.” 

“அடியே ஊர்ல இப்படிப்பட்ட மாமியாருங்க கிடைப்பாங்களா.. இல்ல என்ன மாதிரி புருஷன் தான் கிடைப்பானா..? என்னமோ உன் கொழுந்தன் தான் ரொம்ப நல்லவன்னு சர்ட்டிபிக்கேட் குடுக்கற” 

“அவன் நல்லவன்னு இல்ல.. முதல்ல இமோஷனல் இடியட் இல்ல..எப்போ எதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு அவனுக்குத் தெரியும்.” 

“ஏண்டி நான் அப்போ இடியட்டா.. எங்கம்மாங்க இடியட்ஸா” 

“இல்லியா பின்ன. நீங்களும் உங்கம்மாக்களும், மாதவன் பண்ணத்தப்புக்கெல்லாம் பாசம்ங்கற பேர்ல அவனுக்கு சப்போர்ட் பண்ணீங்க‌. பாசம்னு வந்துட்டா உங்களுக்கெல்லாம் எதைப் பத்தியும் கவலை இல்லை. கண்ணமூடிட்டு உங்க குடும்பத்துக்காக மல்லுக்கட்டுவீங்க. ஆனா மாறன் அப்படி இல்ல. மாதவன் பண்ணது தப்புன்னு சொன்ன ஒரே ஆள் அவன்தான். நீங்க என்ன பண்ணீங்க?” 

“மாதவன் ரதி மேல் ஆசைல தான் அப்படி பண்ணான்னு தான் அவனுக்கு நான் சப்போர்ட் பண்ணேன்.” 

“ஒருவேளை ரதியை கல்யாணம் பண்ணப்புறம் இப்படி ரம்பா விஷயம் தெரிய வந்திருந்தா, என்ன ஆயிருக்கும்.?” 

“அய்யோ.. அவ்ளோதான்..எத்தனை பேர் லைஃப் நடுக்கடல்ல நின்ன கப்பல் மாதிரி நின்னிருக்கும்”

“மாதவனோட சேர்த்து உங்கப்பாவையும், உங்களையும் உள்ள தள்ளியிருப்பாங்க. எங்கப்பா போலீஸை கூப்பிடலாம்னு சொன்னதும் தான் இந்த மாதவன் ரம்பாவை கல்யாணம பண்ண சம்மதிச்சான். இல்லன்னா முரண்டு பிடிச்சிருப்பான். எங்கப்பான்னா எங்கப்பா தான்..” 

“ஆமா அது ஒருவிதத்தில் கரெக்ட் தான்.. ஆனா ரேணு… இந்த மாறன் எப்படி திடீர்னு ரதியை கல்யாணம் பண்ணான்..?” 

“ஏன்னா அவனுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்திருக்கு.. எப்படியோ ரதி லைஃப் சேஃப்.. ரம்பா மாதிரி ஒரு பொண்ணு மாதவனுக்கு தேவைதான்… “

……

மேற்கில் சூரியன் தன் ஆக்ரோஷத்தை குறைத்து ஒரு குழந்தை விளையாடும் ஆரஞ்சு பந்துப் போல் வானத்தில் மிதந்துக் கொண்டிருந்தது. 

அதன் கதிர்கள் இளம் வெயிலாக ரதி, மாறன் தங்கியிருக்கும் வீட்டின் பின்புறம் தரையில் வீழ்ந்திருந்தது. 

ரதி அங்கேயிருந்த திண்ணையின் மேல் அமர்ந்து தன் அலைபேசியில் ஏதோ ஒரு பாடலை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

மணக்க மணக்க இஞ்சி, ஏலக்காய், லவங்கம் சேர்ந்த தேநீரின் வாசனை அவளருகில் வர, திரும்பி பார்த்தாள்‌.

“ஹலோ…என்ன இங்க வந்து உட்கார்ந்துட்ட..இந்தா டீ..சுவை, மணம், திடம்லாம் கரெக்டா இருக்கான்னு பார்த்து சொல்லு..” என்று கோப்பையை நீட்டினான்.

“அட.. நீங்களே போட்டுட்டீங்களா.. வாசனை வரப்ப நினைச்சேன். ஆனா உங்க வீட்ல இருந்து வருதோன்னு நினைச்சிட்டு இருந்தேன்.” 

“ம்ம்.. எனக்கு அம்மாங்க கிட்ட இருந்து இந்த பழக்கம் தொத்திக்கிடுச்சு. சாயந்திரம் இந்த டைம்க்கு குடிக்கலன்னா அவ்ளோ தான்.” 

“எனக்கும் அப்படித்தான். ஆனா என்னை கூப்பிட்டிருக்கலாம் இல்ல.” 

“இதுல என்ன இருக்கு. நாம் ஹவுஸ் மேட்ஸ்னு சொன்னது மறந்திடுச்சா. எந்த வேலையாக இருந்தாலும் நாம ஈக்குவலா ஷேர் பண்ணிக்கலாம். நீ டீ குடி.. ம்ம்ம்.. ரதி..” 

“சொல்லுங்க..‌”

“இல்ல.. உன்னை நீ வா போன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். உனக்கு ஓகேவா..” 

“அப்படியா நான் கவனிக்கவே இல்ல.. இட்ஸ் ஓகே. எப்படியும் என்னை விட நீங்க பெரியவராதான் இருப்பீங்க” 

“அட அவ்ளோலாம் இல்ல.. எனக்கு இருபத்தியாறு. உனக்கு?” 

“இருபத்திரெண்டு” 

“ம்ம்ம்.. என்ன படிச்சிருக்க” கேட்டுக்கொண்டே எதிரில் அமர்ந்தான். 

“நான் இங்க கலசப்பாக்கம் காலேஜ்ல பி.ஏ எகனாமிக்ஸ் படிச்சேன். பி.எட் பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா தறி வேலை சரியா இருந்ததால் படிக்கல”

“ம்ம்ம். பொருளாதார மேதையா வர வேண்டியவங்களை இந்த சின்னக்கூட்டில் அடைச்சிட்டேன்னு சொல்லு” 

“நீங்கதானே நீ சுதந்திரமான பறவை.. கூடடைய இது ஒரு இடம்னு சொன்னீங்க” 

“அடேங்கப்பா” 

“ம்ம்.. நீங்க என்ன படிச்சிருக்கீங்க.” 

“நான் கெமிக்கல் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். இப்போ ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி தொடங்கலாம்னு லோன் கேட்டிருக்கேன் பேங்க்ல.” 

“ஓ… சுயமரியாதையா.. அப்பாக்கிட்ட வாங்க மாட்டேன்னு” 

“ம்ம்..‌ ஆமா அதுவும் தான். அம்மா சொல்வாங்க. பாவப்பட்ட பணத்தில் தொடங்கின தொழில் உருப்படாதுன்னு. மருதன் அண்ணன் ஜவுளிக்கடை கூட அண்ணன் லோன் வாங்கி அப்புறம் , அண்ணியோட நகைகளை வச்சு ஆரம்பிச்சுச்சு. மாதவனுக்கு மட்டும் தான் அப்பா கடை வச்சு தந்தார்” 

“ம்ம்.. எனக்கு ஒரு டவுட்.. உங்க மாதவன் அண்ணா என்னை கல்யாணம் பண்ணனும்னு கேட்டப்ப உங்கப்பா அவரை மிரட்டலையா ?” 

“ம்ம்ம் அது ஒரு பெரிய கதை. அப்பா எல்லா விஷயமும் சொல்லி மிரட்டினார். ஆனா அவனுக்கு தெரியும். எங்க வீட்ல எல்லாரும் செண்டிமெண்டா எதாச்சும் பண்ணா உடனே எதிர்த்து பேச மாட்டாங்கன்னு. அதனால் எப்போ பார்த்தாலும் ரதியை கல்யாணம் பண்ணலன்னா செத்துருவேன்னு சொல்லியே எல்லாரையும் ஓகே சொல்ல வச்சுட்டான்” 

“ஹ்ம்ம்.. ஒரு வேளை எங்களுக்கு கல்யாணம் நடந்து அதுக்கு அப்புறமா ரம்பா விஷயம் தெரிய வந்திருந்தா, என்னால் யோசிச்சு பாக்கவே முடியல” 

“அப்பவும் நான் உனக்காக நின்னிருப்பேன்” 

“எப்படி அன்னிக்கு மண்டபத்துல சொன்ன மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்கறேன்னா” என்று சிரித்தாள். 

“ம்ம். கல்யாணம் பண்றேன்னு இல்ல… அந்த வாழ்க்கைல இருந்து உன்னை பத்திரமா வெளியே கொண்டு வந்து நீ என்ன நினைக்கிறியோ அதை செய்னு சொல்லியிருப்பேன்” 

“அதான் ஏன்னு கேட்கிறேன்.. என்‌மேல் அப்படி என்ன கரிசனம்?” 

“ம்ம்.. இது ஒரு பரிகாரம் மாதிரின்னு வச்சுக்கோயேன்” 

“ம்ம்ம் அப்பிடின்னா” 

“அம்மாங்களை அவங்க வீட்ல பணம் இல்லேன்னு ஒரே காரணத்தால எங்க தாத்தா அவங்க ரெண்டு பேரையும் என் அப்பாவுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டார். குழந்தை இல்லன்னு ஒரு வருஷம் தான் வெயிட் பண்ணியிருக்காங்க. அதுக்குள்ள காஞ்சனா அம்மாவையும் கட்டிட்டு வந்துட்டார் அப்பா. அதுல இருந்து அவங்க ரெண்டு பேருமே இந்த வாழ்க்கைக்குள்ள சிக்கிக்கிட்டு வெளிய வர முடியாத சிறைப் பறவைங்களா ஆயிட்டாங்க. செக்கு மாடு மாதிரி எங்கப்பா, நாங்க, பேரப்பசங்க இதான் அவங்க வாழ்க்கை. அப்ப அதே மாதிரி இன்னொரு பொண்ணு வாழ்க்கை அமைஞ்சிடக்கூடாதுன்னு போராடியிருப்பேன்” 

சட்டென்று மாறன் விழிகள் கண் கலங்கியிருந்தது. 

ரதி, அவனையே ஆழ்ந்து பார்த்தாள். அவள் மனதின் ஓரத்தில் தனக்காக, தன் அழகுக்காக இவனும் திருமணம் செய்துக் கொண்டானோ என்ற எண்ணம் இருந்தது. அது இப்போது கானல் நீராய் போனது. 

“ஹ்ம்ம் பணம் மட்டும் இல்லன்னா நாம நினைக்கற வாழ்க்கை நமக்கு கிடைக்காது. பணம் இருந்திருந்தா அம்மாவை இன்னும் கொஞ்ச நாள் காப்பாத்திருக்கலாம். பணம் இருந்திருந்தா எங்க தறிங்களையும், தாத்தாவோட பெரிய வீட்டையும் விக்க வேண்டி இருந்திருக்காது.. அவங்களும் கூட கொஞ்ச நாள் உயிரோட இருந்திருப்பாங்க. பாவம் அவங்க சம்பாதிச்சிருந்த எல்லாம் கைவிட்டு போனதை பாத்து பாத்து மனசை ரணமாக்கிக்கிட்டு செத்துருக்க மாட்டாங்க‌. உங்களுக்கு தெரியுமா?‌ தாத்தா தலைவராக இருந்த வரைக்கும் தறியில வேலை செய்யறவங்க வீட்டுக் கல்யாணம்னா எங்க தறியிலேயே கூரைப்புடவையும், பட்டுப்புடவையும் நெஞ்சு தருவாரு. யாராச்சும் தாலி வாங்க முடியலன்னா தாலி வாங்க காசு தருவாரு. பட்டினியா யாரும் இருக்க கூடாது அவருக்கு‌‌.. எங்க வீட்ல பின்னாடி கட்டுல அடுப்பு எரிஞ்சிட்டே இருக்கும். அவ்ளோ செஞ்சும் எங்க குடும்பம் இப்படி சின்னாபின்னமாகி போச்சு. நானும் வாங்கின கடனுக்காக 

விலை போய் இங்க வந்து இருக்கேன்..” என்று கண்ணீரோடு மறையச் போகும் சூரியனை பார்த்து சொன்னாள். 

“ரதி.. விடு. நீ விலை போய் வந்தவ இல்ல. விலைமதிக்க முடியாத ஒருத்தியாத்தான் வந்திருக்க… அது உனக்கு கூடிய சீக்கிரம் புரியும். காசு எப்பவும் நிலையானதில்ல. ஒருத்தர்ட்ட தான் இருக்கும்னு. கண்டிப்பா நீயும் இதே ஊர்ல மத்தவங்களுக்கு உதவற இடத்தில் இருப்ப.அப்ப உங்க தாத்தா உன் வடிவில் இருப்பாரு..” 

கண்ணீரில் நனைந்த அவளின் கண்கள் பளபளத்தன.‌ 

“ஆனா எல்லாத்துக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சிருக்க.. நல்லது தான்..நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடியுது..” 

“நினைவுகள் தான் மகத்தான மருந்து. அது மட்டும் இல்லன்னா நான்லாம் மனநல மருத்துவரை பாக்க வேண்டியதா இருந்திருக்கும். நினைவுகளை மெல்ல ஞாபகத்தில் கொண்டு வந்து அந்த நாட்களை மனசார திரும்ப வாழ்ந்து பாத்துக்கறதால தான் என் தனிமைக்கு ஒரு துணை கிடைக்குது.” 

‘ உன் தனிமை வாழ்க்கையில் ஒரு துணையெழுத்தாக நான் எப்போதும் வருவேன் ரதி..’ மனதுக்குள் சொல்லிக் கொண்டான் மாறன். அவனின் மன சிம்மாசனத்தில் அவள் மகாராணியாக அமர்ந்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!