Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ரீங்காரம் – 2.1

🎶 மேரே ரங்கு மெய்ன் ரங்குனே வாலி
பரி ஹோ யா ஹு பரியோன் கி ராணி
யா ஹு மேரி பிரேம் கஹானி?
மேரே சவாலோன் கா ஜவாப் தோ, தோ னா 🎶

1989-களின் காலகட்டத்தில் வெளிவந்த ஹிந்தித் திரைப்படப் பாடல் அது. அமைதியான மாலை வேளையில் அந்த அறைக்குள் ஒலிப்பெட்டி வாயிலாக ஒலித்துக் கொண்டிருந்தது. உறங்காமல் கண்மூடி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணுக்கு, அதைக் கேட்கக் கேட்க மீண்டும் மீண்டும் அந்த இசையையே நாடிச் செல்லத் துடித்தது மனம்.

அப்பாடலின் வரிகள் புரியவில்லை. அதைத் தெரிந்துகொள்வதற்காகவே வடமாநில நண்பன் ஒருவனைப் பிடித்து அதன் அர்த்தத்தைக் கேட்ட பிறகு, இசை இன்னும் இனித்தது. இசையில் மயங்கிச் சுற்றம் மறக்கும் மக்களில் அவளும் ஒருத்தி. அதேநேரம், சுற்றத்தை மறக்க வேண்டிய அவசியமும் அவளுக்கு இல்லை; கவலைகள் அவளை அண்டியதே இல்லை. ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலும், அவை தீர்க்கப்பட்ட பின்னரே அவளது குடும்பத்தினர் அவளிடம் எடுத்து வருவார்கள்.

இரண்டு தலைமுறையாகவே செல்வச் செழிப்பான குடும்பம் அது. பிள்ளைகள் ‘இது வேண்டும்’ எனக் கேட்கும் முன்பே, அவர்கள் ஆசைப்பட்டது கையில் வந்து சேரும். கஷ்டம், நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள் அந்த வீட்டின் பிள்ளைகள். சேலம் மாநகரின் புகழ்பெற்ற ‘வேலவன் டெக்ஸ்டைல்ஸ்’ துணிக்கடையின் உரிமையாளர்கள் அந்த வீட்டின் ஆண்கள். தாத்தா காலத்தில் கடன் வாங்கி, சற்றுப் பெரிய அளவிலேயே தொடங்கப்பட்ட கடை அது. கடையின் தோற்றமோ அல்லது தரமோ… எது மக்களின் கவனத்தை ஈர்த்தது எனத் தெரியவில்லை, ஆனால் கடை நல்ல லாபத்தில் ஓடிக்கொண்டிருந்தது.



Advertisement

எறும்பாய உழைத்த வேலுவுக்குத் துணையாக, விவரம் தெரிந்த உடனே அவரது புதல்வர்கள் களத்தில் இறங்கினர். மூத்தவர் சேந்தன், இளையவர் முரளி. மூன்றாவதாக அந்த வீட்டின் செல்லப் பெண் நிர்மலா. புதல்வர்களிடம் பாகுபாடு காட்டாத அந்தப் பெரியவர், மகளிடம் மட்டும் தனிப் பிரியம் வைத்திருப்பார். இதனாலோ என்னவோ, வேலுவின் மனைவி சம்பூரணம் எப்போதும் மகன்கள் பக்கமே நிற்பார்.

மூத்தவர் சேந்தன், கல்லூரி முதலாம் ஆண்டோடு தந்தைக்கு உதவியாக நிற்க வேண்டிப் படிப்பை நிறுத்திக்கொண்டார். அதனால் இளையவர் முரளி கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தார். மகளை இன்னும் சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசையில், அவளைப் பொறியியல் கல்லூரியில் சேர்த்துப் பெருமிதம் கொண்டார் வேலு. யாராவது கட்டிடம் பற்றிப் பேசத் தொடங்கினாலே, “சந்தேகம்னா என்கிட்ட சொல்லுய்யா… என் பொண்ணுகிட்ட சொல்லிப் பார்த்திடலாம்!” என்பார். நிர்மலாவோ, “அப்பா… நான் காலேஜ் போய் ரெண்டு மாசம்தான் ஆகுது!” எனக் கூறினாலும் அவர் நம்ப மாட்டார்.

தந்தையின் பாசம் மகள் மேல் அதிகம் இருந்தாலும், தங்கள் மேல் அவர் வைத்திருக்கும் அன்பிற்கும் பஞ்சமில்லை என்பதை உணர்ந்த மகன்கள், தந்தையின் இத்தகையச் செயல்களைச் சிரிப்போடு கடந்துவிடுவார்கள். “கணக்கு கூட வராது… இதுல கணக்கா வீடு கட்டுதாக்கும்!” எனத் தாடையை இடித்துச் செல்லும் சம்பூரணத்தின் பேச்சில், நிர்மலாவையும் வேலுவையும் தவிர அனைவரும் சிரிப்பை அடக்கிக் கொள்வார்கள்.

Advertisement

அழகான குடும்பம். அவ்வப்போது வரும் சிறு நஷ்டங்களைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்துக் கடையை மேன்மேலும் உயர்த்தினார் வேலு. இப்போதும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் இவர்களது கடையைத் தேடி வரும் மக்கள் கூட்டம் நகரத்திலிருந்து கிராமம் வரை நீண்டுள்ளது. ‘இந்தக் கடையின் ராசி அப்படி’ என்பதுதான் அந்தப் பகுதியில் நிலவும் பேச்சு.

Advertisement

கடையின் வாரிசுகளுக்கு வருவோம். நிர்மலா படித்து முடித்த கையோடு, அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு கட்டிட வல்லுநரின் மகனுக்கு அவளைத் திருமணம் முடித்து வைத்தார் வேலு. தங்கள் மகளின் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். உடனே மகன்களுக்குப் பெண் பார்க்கத் தொடங்க, “நிர்மலா குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிப் பாசத்தாலயே குளிப்பாட்டணும்… அதுவரை திருமணம் வேண்டாம்ப்பா!” என்றுவிட்டார் சேந்தன்.

கூறியது போலவே நிர்மலா – ஜெயபாலன் தம்பதிக்குச் ‘சஞ்சீவ்’ என்னும் புதல்வன் பிறக்க, குடும்பமே விமர்சையாகக் கொண்டாடியது. அவனுக்கு இரண்டு வயது வரும் வரை திருமணப் பேச்சை எடுக்காமல் இருந்த சேந்தனை, நிர்மலாதான் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். திருச்சியில் ‘மரகதவல்லி’ என்னும் பெண்ணைப் பார்த்தனர். அடுத்த ஒன்றரை வருடத்தில் அவர்களுக்கு ‘வீராந்தகன்’ என்னும் ஆண் மகன் பிறந்தான்.

இளையவர் முரளிக்கு ஜாதக ரீதியாகத் திருமணம் சற்றுத் தள்ளிச் செல்ல, சேந்தனுக்கு ‘நவீன்’ என்னும் இரண்டாவது மகன் பிறந்து இரண்டே மாதங்களில் முரளிக்கும் திருமணம் உறுதியானது. மரகதவல்லியின் உறவு முறையிலேயே ‘பூங்கோதை’யைத் தேர்ந்தெடுத்தனர். முரளி – பூங்கோதை தம்பதிக்கு அழகிய பதுமையாகப் பிறந்தவள்தான் சக்தி.

Advertisement

குடும்ப வளர்ச்சிக்கு ஏற்பத் தொழிலோடும், வீட்டோடும் பிள்ளைகளும் வளர்ந்தனர். பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இருந்தாலும், ஒழுக்கத்தில் மட்டும் அந்தக் குடும்பத்தில் கடும் கண்டிப்பு இருந்தது.

“சக்தி… குளிச்சிட்டியாடா?” – சத்தமாக ஒலித்த பெரியன்னையின் குரலில் கண் விழித்தவள், தன் கோலத்தைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டாள். மங்கிய சாம்பல் நிறப் பெரிய டீ-ஷர்ட்டும், வெள்ளை நிற அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தாள். கழுத்தைத் தாண்டி இரண்டு இன்ச் வளர்ந்திருந்த கூந்தலை அள்ளிக் கிளிப் போட்டு வைத்திருந்தாள்.

“ஆ… தலை காய வச்சுட்டு இருக்கேன் வள்ளிம்மா!” – இப்போது அன்னை பார்த்தால் அவ்வளவுதான் என உணர்ந்தவள், கைக்குக் கிடைத்த துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள்.

வேகமாக ஒரு குளியலைப் போட்டுவிட்டு, உடையை அணிந்து காற்றாடியின் கீழ் நின்றாள். என்னதான் குளிர்சாதன வசதி இருந்தாலும், இந்த நிலத்துக்காற்றை நாடும் காற்றாடியைத் தான் அவளது மனம் நாடுகிறது. சிகையைச் சிறிது உலரவிட்டு, கண்ணாடி முன்பு நின்று தன்னுடைய தோற்றத்தைப் பார்த்தவளுக்குள் ஒரு திருப்தியான புன்னகை.

தங்க நிற ரவிக்கை, அதில் பட்ரோஸ் நிறச் சரிகை கைகளில் கச்சிதமாக இடம் பிடித்திருந்தது. இடையில் அதே தங்க நிறத்தில் மினுமினுக்கும் பாவாடை, அதன் இறுதியில் கையில் இருந்ததை விடச் சற்று கூடுதலான சரிகை வேலைப்பாடுகள். அவளது சந்தன நிற மேனிக்கு, அந்தத் தங்க நிறம் போட்டி போடுவது போல அத்தனை எடுப்பாக இருந்தது. தலைமுடியை முழுதாக உலர்த்தியவள், அழகாக வாரி, முகத்திற்குச் லேசான ஒப்பனை செய்து முடித்துப் பட்ரோஸ் நிறத் தாவணியை உடுத்தினாள். இறுதியாகச் சிறிய பொட்டு வைத்து நெற்றியை அலங்கரிக்க, ஒரு நிமிடம் தனக்கே தான் அழகாகத் தெரிவது போலத் தோன்றியது. “இந்த அழகு அனைத்திற்கும் காரணம் அந்தத் தாவணிதான்” என அதனை வாங்கிக் கொடுத்த சகோதரனிடம் மனதிற்குள் நன்றி கூறிக் கொண்டாள்.

“சக்திம்மா!” பாட்டியின் குரல் கேட்டு வேகமாக அறையை விட்டு இறங்கி வந்தவளை, வீடே இமை சிமிட்டாமல் பார்த்தது. இருபத்தி நான்கு வயதிற்கே உரிய அழகு அவளது முகத்தில் ஜொலிக்க, வீட்டின் ஒரே பெண் வாரிசின் மேல் எவர் கண்ணும் பட்டுவிடக் கூடாதென அவளைப் பார்த்தவுடனேயே முடிவெடுத்துவிட்டார் சம்பூரணம்.

“குளிக்கலையா சக்தி?” சக்தி என்னும் உச்சரிப்பில் அழுத்தத்தைக் கூட்டி வினவிய நவிரன், அவள் அருகே வந்ததும் மூக்கை மூடிக்கொண்டு கையை காற்றில் அசைக்க, “பெரியப்பா!” எனச் சிணுங்கலோடு தன் பெரிய ஆயுதத்தைக் கையில் எடுத்தாள் சக்தி.

“உன் மூஞ்சியைக் கண்ணாடியில பார்த்திருக்கியாடா? புள்ளையைச் சொல்ல வந்துட்டான்! நீ ரொம்ப அழகா இருக்கடா சக்திம்மா” என்றார் அவளது தந்தை, மகளின் கன்னம் தட்டி நிறைவான சிரிப்போடு. அவரை அணைத்துக்கொண்டவள், “லவ் யூ பெரியப்பா” என்றாள் தன் சகோதரன் நவிரனுக்கு ஒழுங்கு காட்டியபடி.

அனைவரது பார்வையும் இவர்கள் மீது இருக்க, தொண்டையைக் கனைத்துத் தன்னுடைய இருப்பைக் காட்டினார் வேலு. பேத்தியின் பார்வை தன் மேல் படியவும், அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். தாத்தாவின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செய்கையில் வீட்டின் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

“அப்படிப் பார்த்தா எல்லாத்தையும் நாங்க மறந்துடணுமா? நான் அவர் மேல கோவமா இருக்கேன்னு சொல்லுங்க பெரியப்பா. இவர் பண்ற எல்லாத்தையும் நாம அமைதியா கேக்குறதாலதான் இந்த அளவுக்கு ஆட்டம் போடுறார்!”

“சக்தி… தாத்தாகிட்ட மரியாதையா பேசு. பல்லத் தட்டிடுவேன் பார்த்துக்கோ!” பூங்கோதை மகளை பார்த்து கண்ணை உருட்டி மிரட்ட, சக்தியின் கண்கள் கலங்கின.

“நான் பேசுறதுதான் உங்களுக்குத் தெரியுதா? அவர் என்கிட்ட சொன்னதைப் பத்தி உங்க யாருக்கும் கவலை இல்லை. அவருக்கு… அவர்…” வேலு சொன்ன பொய்யைச் சொல்ல முடியாமல் அழுதவளைத் தன்னுடைய அணைப்பிற்குள் இழுத்துக் கொண்டான் வீராந்தகன்.

“நானும் கேட்கணும்னு நினைச்சேன் தாத்தா. அவளை வரவைக்கணும்னா உங்களுக்குச் சொல்ல வேற பொய்யே கிடைக்கலையா? உங்க உயிரோட விளையாடித்தான் அவளை வரவைக்கணுமா?” வீராவின் அழுத்தமான குரலில் பெரியவர் சற்றுப் பயந்துதான் போனார்.

“இல்ல வீரா… நீங்க எல்லாரும் சொல்லியும் அவ வரலைன்னதும்…”

வீரா குறுக்கிட்டு, “தப்பு தாத்தா! நம்மளோட அன்பு அவளுக்குப் பக்கபலமா இருக்கணுமே தவிர, என்னைக்குமே வேதனையைத் தரக்கூடாது” எனப் பெரியவரை எச்சரித்தவன், “அழுகாதடா சக்தி” எனத் தங்கையையும் ஆறுதல்படுத்தினான்.

“சக்திம்மா… சாரிடா” பேத்தியை நோக்கி வேலு வந்து கெஞ்ச, அவளோ தன் அண்ணன் வீராவோடு ஒன்றி நின்றாள்.

“அண்ணா… என்னோட முதல் ப்ராஜெக்ட், உடனே வர முடியாதுன்னு சொன்னேன். இதோ இவர்கிட்டேயும் சொல்லிட்டுதான் போனேன்” என வேலுவைக் கை காட்டினாள் சக்தி.

“கோபப்படாதடா… தாத்தா உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்” என ஒரு நகைப்பெட்டியை அவர் நீட்ட, சக்தியின் முகம் இன்னும் சுருங்கியது. அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட வேலு, “தாத்தா முட்டி போட்டுக்கிறேன்… யானை சவாரி வர்றியாடா?” எனத் தாழ்மையுடன் கேட்டார்.

அடக்கிய சிரிப்போடு அவர் கேட்க, உணர்ச்சிகளை மறைக்கத் தெரியாத சக்தி, சிரிப்பும் கண்ணீருமாக “இப்பொழுதும் வேண்டாம்” என்றாள். அவளது கோரிக்கை என்னவென்று புரிந்த பெரியவர், “தாத்தாவுக்கு எதுவும் ஆகாதுடா. என் சக்திக்குக் கல்யாணம் பண்ணி வைச்சு, அவளோட குழந்தைக்குக் கல்யாணம் பண்ற வரைக்கும் நான் இப்படி ஓடி ஆடி உன் கூடவேதான் இருப்பேன்” என்றார்.

சகோதரன் தோளில் சாய்ந்தவாறே இடது கையை நீட்டி, “ப்ராமிஸ்?” எனக் கேட்ட பேத்தியின் கையில் சத்தியம் செய்து கொடுத்தார் தாத்தா. அடுத்த கணமே அண்ணனின் அணைப்பிலிருந்து விடுபட்டு, தாத்தாவின் பாசக் கூட்டுக்குள் தஞ்சம் புகுந்தாள் அந்தப் பெண்கிளி.

இன்று வேலுவின் எண்பத்தி ஐந்தாவது பிறந்தநாள். காலையில் விருந்து, மாலையில் முருகன் கோவிலில் பூஜை என ஏற்பாடுகள் அமர்க்களமாக இருந்தன. இதற்காகத்தான் வேலையில் இருந்த பேத்தியைத் தனக்கு உடல்நிலை சரியில்லை எனப் பொய் கூறி வரவழைத்திருந்தார் வேலு. அவருக்குப் பேத்தி அருகில் இருக்க வேண்டும்; ஏதோ தன் அன்னையே அவள் ரூபத்தில் வந்து பிறந்ததாக அவர் கருதுவார். அதனாலேயே வீட்டில் என்ன நடந்தாலும், மகன்களுக்கு நிகராகப் பேத்தியையும் முன்னிறுத்துவார் வேலு.

“பேத்தி வந்ததும் என்னை மறந்துட்டீங்க!” சிறுபிள்ளை போல வாசலில் நின்ற நிர்மலா, தன் தந்தையிடம் போலியாகக் கோபம் காட்ட, சக்தியோ வேண்டுமென்றே தாத்தாவை விட்டு நகராமல் நின்றாள்.

“எல்லாத் தப்பும் உங்க மேலதான் அத்தை. சஞ்சீவ் அத்தான் அடுத்து ஒரு பெண்ணை இந்த வீட்டுக்குக் கொடுத்திருந்தா, நம்ம ரெண்டு பேருக்கும் உதவியா இருந்திருக்கும்” எனச் சலிப்பாகக் கூறிய நவிரன், அவர் கையைப் பிடித்து உள்ளே இழுத்தான்; கூடவே தன்னுடைய வருத்தத்தையும் முன்வைத்தான்.

“எதுக்குக் கவலை மாப்பிள்ளை? ‘ம்’னு சொல்லு… பொண்ணு பார்த்து வைக்கிறேன். அடுத்த வருஷம் உன் தங்கச்சிக்குப் போட்டியா ரெண்டு பெண்களை இறக்கிடுவோம்!” பளிச்சென மின்னும் இங்க் ப்ளூ சட்டையும், வெள்ளை நிறக் காற்சட்டையும் அணிந்து வந்த சஞ்சீவியைப் பார்த்ததும் சேந்தன் மற்றும் முரளியின் முகம் மலர்ந்தது. மயக்கும் தோற்றம் இயற்கையிலேயே அமையப்பெற்றவன் சஞ்சீவ். இப்போது படிப்பு, பொறுப்பு என வளர்ந்து இன்னும் வசீகரமாய் இருந்தான். இருந்தும் அவன் முகத்தில் எப்போதும் குடியிருக்கும் அந்த இலகுத்தன்மையும் சிரிப்பும் அவனுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

“சும்மா இருங்க அத்தான். அங்கே பாருங்க… வீரா முறைக்கிறான்!” சஞ்சீவும் நவிரனும் தனியாக அமர்ந்தனர். “இவன் ஏன்டா உன் அப்பா, தாத்தாவுக்கு எல்லாம் மேல இருக்கான்?” எனச் சஞ்சீவ் நவிரன் காதில் கிசுகிசுக்க, “உர்ருன்னு இருந்தா என்ன, இல்லைன்னா என்ன… உங்களை விடச் சின்னவன், அவனே கல்யாணம் பண்ணிக்கிட்டான். நீங்க இன்னும் மொட்டை…”

“நவி…” சஞ்சீவ் சிரிப்போடு எச்சரிக்க, “முரட்டு சிங்கிள்னு சொல்ல வந்தேன் அத்தான்!” என நவிரன் லாவகமாக மழுப்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!