Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

75. இந்த்ரவாணி - நாயகியின் நாயகன்

நாயகியின் நாயகன் – 8

“என்ன ரதி மேடம்.. காலையிலேயே தறி இன்ஸ்பெக்ஷன் ஆரம்பிச்சாச்சா..” 

மாறன் கேட்டுக் கொண்டே வந்தான்.. 



Advertisement

“ஆமா…சும்மா நூல் கோர்த்து ஓட்டிப் பாக்கலாம்னு பாத்தேன். ஆனா ஸ்டரக் ஆகுது‌‌.. ரொம்ப நாள் யூஸ் பண்ணாமயே இருக்கா?” 

“இல்லையே போன தீபாவளிக்கு தான் அம்மனுக்கு சாத்த புடவை நெஞ்சாங்க.. என்னன்னு தெரியலையே..” 

Advertisement

Advertisement

அவன் தறியில் அவனுக்குத் தெரிந்த விதத்தில் இப்படியும் அப்படியுமாக அசைத்துப் பார்த்தான். 

“என்னடா ஏதோ தகரடப்பாவை உருட்டற மாதிரி அதை உருட்டிட்டு இருக்க..?” கேட்டபடியே மருதன் வர, 

Advertisement

“அண்ணா… ரதி சும்மா ஓட்டிப்பாக்கலாம்னு பார்த்தா ஸ்டரக் ஆகுதுன்னு சொன்னாங்க. அதான்..” 

“ரதி.. இதை ஓட்டியே ரொம்ப வருஷங்களாகுது. அதான் இப்படி சத்தம் வருது.” 

“இப்பத்தான் தீபாவளிக்கு ஓட்டினதா சொன்னார்ணா இவர்..இல்லையா?” மாறனை பார்த்துக் கொண்டே கேட்டாள்.‌ அவன் அசடு வழிய நின்றான்.

“அது சரி.. இங்க புடவை தான் வச்சு படைச்சாங்க.. நெய்யல. இவனுக்கு என்ன தெரியும்..? அது தாத்தா உட்கார்ந்தது.. அதுக்கு அப்புறமா யாரும் அதுல நெய்ய உட்காரது இல்ல. அதுவுமில்லாம கைத்தறியை இப்போ அதிகமா யார் உபயோகப்படுத்தறாங்க. நெய்யறவங்களும் இல்ல.. உடுத்தறவங்களும் இல்ல… உங்கப்பா மாதிரி ஒன்னு இரண்டு ஆட்கள் தான் விடாப்பிடியா கைத்தறிய யூஸ் பண்றாங்க. அதெல்லாம் இருக்கட்டும்… நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா? வீட்ல சமைக்க எதுவும் இருக்காதுனு நினைக்கிறேன்‌. நான் போய்ட்டு வாங்கிட்டு வந்திடறேன்.. ம்ம்ம.. அப்புறம் அப்பா கிளம்பினதும் அம்மாங்க, ரேணுலாம் கிளம்பி வரேன்னு சொன்னாங்க.” 

“அண்ணா.. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். வெளிய தான் போறேன்..வாங்கிட்டு வந்திடறேன்” 

“ஏன்டா.. இது ஒன்னும் அப்பா காசுல வாங்கல்… நான் தான் வாங்கிட்டு வரேன்னு சொன்னேன். இப்ப அவசரத்துக்கு வச்சுக்கோங்க. அப்புறமா நீ வாங்கிக்க.. ரதி உனக்கு எதுவும் தேவைப்படுதா…” 

“இல்லண்ணா.. ஒன்னும் இல்ல.. நான் அப்படியே போய்ட்டு அப்பாவை பாத்துட்டு என் திங்க்ஸ் கொஞ்சம் அங்க இருக்கு, அதையும் எடுத்துட்டு வந்திடலாம்னு பாக்கறேன்.” 

“நீ வரப்ப அப்பாவையும் கூட்டிட்டு வந்திடு. அப்படித்தானே கல்யாணத்துக்கு முன்ன பேசினோம்..” 

“அது சரியா வராதுண்ணா.. நாங்க வெளியே வேற வீட்ல இருந்திருந்தா அப்பாவை கூட்டிட்டு வந்திருக்கலாம். ஆனா இங்க எப்படி..? அதுவுமில்லாம தறியையும் அங்க வச்சிட்டு எப்படி வருவாரு.. ?நான் தினமும் அங்க போய்ட்டு வரலாம்னு இருக்கேன் அண்ணா..” 

“ம்ம். அதுவும் சரிதான். ஆனா நீ தினமும் போய் அங்க வேலை பாக்க வேணாம். ஆளுங்களை போட்டுக்கோங்க. உனக்கு போரடிச்சா நம்ம கடைக்கு வா. இவனும் எப்படியும் பேங்க், லோன்னுன்னு அலையப் போய்டுவான்.” 

“ம்ம்ம்.. பாக்கறேன் அண்ணா..” என்று இழுத்து முடித்தாள். மருதன் அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பியதும், 

“ரதி, அண்ணா சொன்னதுக்கு 

யோசிக்காத. நீ அப்பாவை பாத்துட்டு, அப்படியே உனக்கு பிடிச்ச வேலையை செய். நான் உன்னை போறப்ப ட்ராப் பண்ணிட்டு வரப்ப வந்து கூட்டிட்டு வந்திடறேன்.” என்றான். அவள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த விஷயத்திற்கு அவனாக ஒரு பதிலை அளித்து விட்டான். 

“ம்ம்ம்.. தாங்க்ஸ். நீங்க குளிச்சிட்டு வரதுக்குள்ள நான் கிளம்பிடறேன்..” 

“ம்ம் சரி. இன்னிக்கு மட்டும் நாம வெளிய சாப்பிட்டுக்கலாம். அப்படியே உங்கப்பாக்கு எதாவது வாங்கிட்டு போகலாம்.” என்றான். 

உதட்டோரம் முதன் முறையாக விரக்தியில்லாத சிரிப்பு வந்தது அவளுக்கு. 

அறைக்குள் வந்தவள் அலமாரியை திறந்தாள். அதிலிருந்து வந்த அந்த பழைய வீட்டின் வாசமும், அகில் கட்டைகளின் துகள்கள் சேர்ந்த வாசனையும் அவளை மயக்கின. 

அவளின் புடவைகளுடன், அழகாக ரவிக்கைகளும் தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

ஒரு நிமிடம் அப்படியே எட்டி வெளியில் பார்த்தாள். தனது சான்றிதழ்களை அழகாக அடுக்கி வைத்து விட்டு, துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு மாறன் திரும்பினான். அவன் திரும்பியதும் இவள் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. சட்டென அதை உணர்ந்து தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள் ரதி. 

“ரதி..” 

“ஆங்.. என்ன சொல்லுங்க” 

“என்னமோ தலை மட்டும் தனியா என்னை எட்டிப் பாத்துச்சே.. அதான் அதுக்கு எதுக்கு சிரமம்..? முழுசா நானே வந்து நின்னுட்டா, பொறுமையா பாத்துக்கட்டுமேன்னு வந்தேன்..” என்றான். 

“ஆஹான்..அப்படி ஒன்னும் யாரும் சைட் அடிக்கல… சும்மா கப்போர்ட்ல அழகா அடுக்கி வச்சிருக்கீங்களேன்னு பாத்தேன்..” சொல்லிவிட்டு உதட்டை கடித்துக் கொண்டாள். 

“சைட் அடிச்சாலும் யாரும் ஒன்னும் சொல்லப் போறதில்ல..” 

“ம்ம்.. அடிக்க தோணின்னா சொல்றேன்.. நீங்க போய் கிளம்புங்க..” என்றாள். 

சிரித்துக் கொண்டே அவன் குளிக்கச் சென்றான். 

அவனுடன் இத்தனை இயல்பாக அரட்டை அடிக்கும் அளவுக்கா, தான் மாறி விட்டோம் என்று தோன்றியது அவளுக்கு. 

மெல்லிய சிரிப்புடன் ஒரு இளம்பச்சை நிற கைத்தறி புடவையை எடுத்து உடுத்தினாள். அதற்கு தோதாக 

முத்து மணிகள் கோர்த்த  கழுத்துடன் ஒட்டிய மாலையை 

அணிந்தாள். புதுத் தாலி உண்மையிலேயே ஒரு வனப்பை அவளுக்குத் தந்தது. மெதுவாக அதை வருடினாள். 

‘நான் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கறேன்.’ 

மாறன் சொன்னது காதில் ஒலித்தது. 

அவள் கதவை திறக்கும் போது மாறன் கிளம்பி இருந்தான். 

வெள்ளை சட்டையும், சந்தன கலர் பேண்ட்டும், மெல்லிய சந்தன கீற்று நெற்றியில், அதனுடன் அவனின் பளபளக்கும் கண்களும், அவனை அழகாக தான் காட்டியது‌. சராசரிக்கும் சற்று உயரமான அவன் தேகம், உடற்பயிற்சியால் மெருகேறின அளவான தோள்கள், அவன் தலையை கோதி விடும் விரல்களின் நீளம் என எந்த பெண்ணையும் திரும்பி பார்க்க வைப்பவன்‌ என்று தோன்றியது. 

தலையை சீவிக்கொண்டே, 

“யாரோ சைட் அடிக்கிறதுக்கு முன்னாடி சொல்றேன்னு சொன்னாங்க. சொன்னா இன்னும் நல்லா மேக்கப் போட்டு ரெடியாயிருப்பேனே” என்றான் கண்ணாடியை பார்த்துக் கொண்டே.. 

“ஹலோ.. நான்‌ சைட்லாம் அடிக்கல.. இப்போதான் உங்களை முழுசா கவனிக்கிறேன். அதான் கொஞ்சம் நேரமாயிருச்சு…” 

“எந்த ஹீரோயினுக்கும் அவங்க சைட் அடிக்கறவங்க ஹீரோதான்.” 

“அப்படியே ஹீரோன்னு நினைப்புத்தான் ..” 

“உங்களை ஹீரோயின்னு ஒத்துக்கறீங்க.. அப்ப நான் ஹீரோ தான்..” என்றான் மாறன். உதட்டை சுழித்து விட்டு, 

“நல்லா ப்ளிர்ட் பண்றீங்க..”என்றாள். 

“ ரதி.. நான் கலகலன்னு பத்து பேர் இருக்க வீட்ல பிறந்தவன். ஹாஸ்டல்ல கூட என்னை சுத்தி ஒரு கேங்க் இருக்கும்.. இங்க நீயும் நானும் தான் இருக்கோம். சும்மா கலாட்டா பண்ணாத்தானே இந்த வீட்ல கொஞ்சமாச்சும் சத்தம் இருக்கும்.” 

சட்டென கண்கள் கலங்கின ரதிக்கு. 

“என்னால தானே உங்களுக்கு இந்த நிலைமை. உங்க வீட்ல நீங்க எப்பிடி இருந்திருக்கலாம்? என்னால கஷ்டப்பறீங்க..”

“ரதி.. இப்படி கண்கலங்கிட்டு இருக்கிறது எனக்கு பிடிக்காது. முதல்ல நீயும் நானும் இந்த வீட்ல நம்ம லைஃப்பை ஸ்டார்ட் பண்ண தான் வந்திருக்கோம். கணவன், மனைவியா இல்லன்னா கூட நண்பர்களா நம்ம வாழ்க்கையை முதல்ல ஸ்டடி பண்ணிக்கலாம். அப்புறம் வாழ்க்கை அதன் போக்குல எப்படி போகுதோ அப்படி போகட்டும். நான் சும்மா உன்னைக் கேலி பண்ணது,  உம்முன்னு இருக்க இந்த முகம் லேசான வெட்கத்துல சிரிக்கறப்ப ஒரு அழகு வருமே அதை ரசிக்கத்தான். வேற ஒன்னும் இல்ல.. நம்மை சுத்தி ஒரு நல்ல வைப் இருந்தா நாமளும் நல்லா இருக்கலாமில்ல..?” என்றான்.. 

அவனின் கண்களை பார்த்துக் கொண்டே அவன் பேசியதற்கு தலையசைத்தாள். 

ஏனோ வண்ணமயமான, அற்புதமான வாழ்க்கைக்கு ஒரு அடித்தளம் அமைப்பது போல் இருந்தது அவர்கள் ஒன்றாக இரு சக்கர வாகனத்தில் கிளம்பியது. வரும் வழியிலேயே அவர்கள் ஒரு சிறிய கடையில் உணவை உண்டுவிட்டு விஸ்வத்திற்கும் இட்லி வாங்கி கொண்டு வந்தார்கள். ஓரளவு நெருங்கிய நட்பு அவர்களிடையே மலர்ந்திருந்தது. 

ரதியின் வீட்டு வாசலில் வாகன சத்தம் கேட்க, விஸ்வம் வெளியில் வந்தார். 

பெரிய வீட்டு மாப்பிள்ளை என்பதால் ஒரு பணிவு அவரிடம் தோன்ற அவனை பார்த்து இரு கரங்களை கொண்டு வணக்கம் செலுத்தினார்.

“மாமா.. கையை கீழ இறக்குங்க. நான் தான் உங்களுக்கு மரியாதை பண்ணனும். சரி ரதிய விட்டுட்டு போக வந்தேன்.. நான் வேலை முடிச்சிட்டு வரப்ப அவளை கூப்பிட்டுக்கறேன்” என்று அப்படியே  கிளம்ப யத்தனித்தான்.

விஸ்வத்திற்கு இன்னும் அதிகமாகவே அவன் மேல் மரியாதை வந்தது. 

“அட அதுக்குள்ள கிளம்பறீங்க. ரதி போய் தம்பிக்கு காபி போட்டு குடும்மா. பசும்பால் வாங்கி வச்சிருக்கேன்..உள்ளே வாங்க மாப்பிள்ளை” என்றார். 

ரதி அவனை பார்த்தாள். சரியென்று தலையை ஆட்டினான் மாறன். 

அவள் காபியை கலக்க உள்ளே சென்றாள். 

“மாமா.. ரதி உங்கள்ட்ட நாங்க தனியா வந்துட்டதை சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். நீங்க ஏன் தனியா கஷ்டப்படனும்னு அங்க வர சொன்னாரு அண்ணா கூட. ரதி தான் வேண்டாம்னு சொல்லிட்டா..நீங்க தனியா சமாளிப்பீங்களா?”

“ரதி ஒரு நல்ல இடத்தில வாக்கப்பட்டதே எனக்கு நிம்மதியா இருக்கு மாப்பிள்ள.. அதிலேயே மிச்ச இருக்க காலத்தை ஓட்டிருவேன்.எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல” 

“ம்ம்.. பட்டு வாங்க இங்க வராங்களா?” 

“ஏதோ அப்பப்ப.. உங்களுக்கு தெரியாதது இல்ல.. அப்பா சென்னைல பெரிய கடைங்களுக்கு இங்க  அக்ரீமெண்ட போட்டு நெய்யறதுக்கு கடைங்களை இணைச்சிட்டதுக்கு அப்புறமா அந்த கடைங்க தான் அதிகமா வியாபாரம் பண்றாங்க..” 

“ஏன் நீங்க அதுல சேரலையா..” 

தர்மசங்கடமாக அவனை பார்த்தார் விஸ்வம். 

“இல்ல.. எனக்கு இந்த பிஸ்னஸ் பத்தி தெரியல.. அதான் கேட்கிறேன்..”‌

விஸ்வம் அமைதியாக பார்க்க, 

“ம்ம்.‌ இந்தாங்க சூடா காபி.. குடிங்க..” ரதி நீட்ட, அவர்கள் இருவரையும் பார்த்தான் மாறன். 

“ஹ்ம்ம்.‌ நான் ஒரு புது கம்பெனி தொடங்கலாம்னு பேங்க் போறேன் மாமா.. வேலை முடிச்சிட்டு வந்து கூப்டுக்கறேன்.‌” என்று அவளை அழுத்தமாக பார்த்து தலையை ஆட்டிவிட்டு கிளம்பினான் மாறன்.ரதியும் வெளியே வந்து அவனை வழியனுப்ப, 

“மாப்பிள்ளை ரொம்ப தங்கமா இருக்கார் மா.. நீயும் அவரும் ஓரளவுக்கு பழகிட்டீங்க இல்ல.. பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ரதி.. உன்னை ஒரு நல்ல இடத்தில ஒப்படைச்சிட்டேன்” 

“ம்ம்.. அவர் நல்லவர் தான்பா. பாவம் என்னால் தான் அவருக்கு சிரமம். உங்க எல்லாருக்கும் நான் ஒரு தடைக்கல்லாவே நிக்கறேன்..” 

“ஏம்மா.. அப்படி சொல்ற. அவரு சந்தோஷமா தான் இருக்கார். நீ உள்ள போய் வரப்பலாம் உன் மேலேயே தான் அவருக்கு கண் இருந்துச்சு. உன்னை நிஜமாவே பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார் போல..” 

சிறு ஆச்சர்யத்தோடு அவரை பார்த்தாள் ரதி. 

மிச்சம் வைத்திருந்த வேலைகளை இருவரும் கதைகளை பேசிக் கொண்டே செய்தனர். உண்மையிலேயே விஸ்வம் இத்தனை நாட்களில் இல்லாமல் ஒரு விடுதலையை உணர்ந்து அனுபவித்தது போல இருந்தது ரதிக்கு. வானொலியில் அவருக்கு பிடித்த பழைய பாடல்கள் ஒலிக்கும் விவிதபாரதிக்கு அலைவரிசையை மாற்றினாள். 

அவர்களுக்கு பிடித்த சமையலை இருவருக்குமாக செய்தாள். ஏனோ அவளுக்குமே மாறனை பற்றி குறை சொல்ல ஒன்றுமே இல்லை. இனி அவளுக்கு அவள் எதிர்காலத்தை பற்றிய கனவுதான். 

“அப்பா.. எனக்கு ஒரு கூரைப்படவை நெஞ்சு வைக்கறீங்களா?”

“இப்போ எதுக்கும்மா கூரை புடவை..?” 

“அடுத்த வாரம் தாராக்கா கல்யாணம் பா. மறந்திட்டீங்களா? எத்தனையோ வரன் தள்ளிப்போய் இப்போதான் கல்யாணம் நிச்சயமாச்சுன்னு சொன்னாங்க… ராணிப்பேட்டக்கு போகனும். அன்னிக்கு நீங்க கண்டிப்பா வரணும்.” 

“அட இப்பதான் ஞாபகம் வருது. நான் நெஞ்சுத்தரேன். ஆனா நீயும் மாப்பிள்ளையும் போய்ட்டு வாங்க.. நான் எதுக்கு அங்க?” 

“ம்ம்.. என்னப்பா நீங்க. சரி நான் சொல்றேன். அவர் ஒருவேளை வரலைன்னா நீங்க தான் என் கூட வரணும். நித்யாவும், விஜியும் வரேன்னுட்டாளுங்க” 

மாலை ரதியும், மாறனும் வீடு திரும்பியபோது, அவர்களை வரவேற்றது அவளின் மாமியார்களும், ரேணு மற்றும் பிள்ளைகள். 

ஆதன், அல்லி இருவரும் ரதியின் காலை கட்டிக் கொண்டு தூக்கச்சொல்லி அடம் செய்ய, மாறன் வந்து ஆதனை  அவன் தலைக்கு மேல் உயர்த்தி தோளில் அமர வைத்துக் கொண்டான். அல்லியை ரதி தூக்கிக் கொண்டாள். இருவரும் நடந்து வருவதை பார்த்து காஞ்சனா இருவரையும் நெட்டி முறித்து தலையில் திருஷ்டி கழித்தார்.

“என் கண்ணே பட்டுடும் போல, அவ்வளவு அழகா இருக்கு உங்க ரெண்டு பேரையும் பாக்க.. அவ்வளவு பொருத்தமான ஜோடி..” காஞ்சனா சொல்ல, கற்பகமும் ஆமோதித்தார். 

“என்ன இன்னிக்கே பேக் டூ ட்யூட்டியா ரெண்டு பேரும். அப்படியே ஈவ்னிங் எங்கனா வெளிய போய்ட்டு வரது தானே..?” ரேணு கேட்டாள். 

“அண்ணி… பேங்க், அப்படியே நம்ம விஏவோ ஆபிஸ்னு சுத்திட்டு வந்தது செம டயர்ட் அண்ணி.‌ ரதியும் அவங்க அப்பா கூட தறில வேலை பார்த்தாங்க.. பாக்கவே டயர்டா இருக்கவே வீட்டுக்கு அப்படியே கூட்டிட்டு வந்துட்டேன்.” 

“எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு மாறா. இனிமே எல்லாம் அந்த ரேணுகாம்பா தான் பாத்துக்கணும்” 

“நானிருக்க பயமேன் அத்தை..” ரேணு சொல்ல, 

“நான் படவேட்டம்மனை சொன்னேன் டி.. உன்னைய சொன்ன மாதிரி நீயே வந்து முன்ன நிக்கற” காஞ்சனா சொல்ல, 

“தெரியும் அத்தை. இருந்தாலும் நான் முன்ன நிக்கறப்ப இந்த வீட்டுக்கு எந்த குறையும் வந்திடாது. அப்பறம் காலைல  கோவிலுக்கு போறதை பத்தி சொல்லனும்னு சொன்னீங்க.. அதை சொல்லலையா?”

“ஆமா.. ஆமா.. மாறா.. நாளைக்கு காலைல நாம எல்லாரும் படவேட்டுக்கு போய்ட்டு அங்க பொங்கல் வச்சிட்டு, அப்படியே பெரிய நாயகிக்கு ஒரு புடவை சாத்திட்டு மலைக் கோவிலுக்கும் போய்ட்டு வந்திடலாம்பா…”  கற்பகம் சொல்ல, 

“எல்லாருமாம்மா.. அப்பா என்ன சொல்வாரு?” 

“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்.. நாம போய்ட்டு வந்திடலாம்..” 

“மாதவனும் ரம்பாவும் வர்றாங்க இல்ல. அவன் எப்படிம்மா பாத்துக்கறான் அந்த பொண்ணை..?” 

“அவங்கதான் கிருஷ்ணகிரிக்கு போய்ட்டாங்களே மாறா.. அந்த பொண்ணு குடும்பம் ஒரு பெரிய அலட்டல் குடும்பம் மாறா.. காலைல ஒரு அலப்பறைய குடுத்துட்டு ரெண்டு பேத்தையும் கிளப்பி கூட்டிட்டு போயிருச்சுங்க.. ரம்பா அதுல யாரை மாதிரின்னு தான் தெரியல..ரதி மாதிரி அமைதியா இருந்துட்டா பரவால்ல..” என்று ரதியை பார்த்துக் கொண்டே ரேணு சொன்னாள். 

குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மாறன் ரதியை பார்க்க, அவள் லேசாக தலையை குனிந்துக் கொண்டாள். அவசரமாக அவர்கள் இருவரையும் ரேணு கண்ணால் காண்பித்தாள்‌ தன் இரு அத்தைகளுக்கும். அவர்களும் தலையை ஆட்டிக் கொண்டனர் லேசான சிரிப்புடன்.‌

வெவ்வேறு கதைகளை பேசி விட்டு வந்தவர்கள் அவர்கள் வீட்டுக்கு செல்ல, 

“எல்லாரும் என்னை ஏத்துக்கிட்டாங்கன்னு எனக்கு ஆச்சர்யமாவே இருக்கு.‌..” 

“ஏன் உனக்கென்ன.. எப்படியும் நீ தான் மருமகன்னு ஏற்கனவே பிக்ஸ் ஆகியிருந்தது தானே..” 

“இருந்தும் உங்கப்பா அவ்வளவு மனசு கஷ்டத்தோட தானே என்னை ஏத்துக்கிட்டார். ஆனா இவங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்கவே இல்ல.. ரேணுக்காவும் ரம்பாவும் பெரிய இடத்து பொண்ணுங்க. அதுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவ நான்…” 

“அட.. எதுக்கு உனக்கு இத்தனை காம்ப்ளக்ஸ். அப்படில்லாம் அண்ணியோ அம்மாவோ நினைக்க மாட்டாங்க. ரம்பாவும் அந்த மாதிரி ஆளா தெரியல. அப்பாவை கண்டுக்காத.. அவர் எப்பவும் அப்படித்தான். தான் அனுபவிக்காத பணம், செல்வாக்கு எல்லாம் அவரோட பசங்க அனுபவிக்கனும்னு ஆலா பறக்கிற குணம். நீ எதையும் போட்டு மனசை குழப்பிக்காத..” 

“ம்ம்.. எனக்கு உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்..” 

“ம்ம் எதை வேணாலும் கேட்கலாம்..” 

“உங்கம்மாங்க ரெண்டு பேருக்கும் அவங்கவங்க பசங்கன்னு தனி தனி பாசம் லா இல்லையா.. ரெண்டு பேரும் உங்க நாலு பேருக்கும் பேசுறாங்க. கண் கலங்கறாங்க..” 

“ம்ஹூம். அதெல்லாம் எப்பவுமே இருந்ததில்லை. ரெண்டு பேருக்கும் நாங்க நாலு பேருமே பசங்க தான். இன்ஃபாக்ட் எங்களுக்கெல்லாம் ஓரளவுக்கு விவரம் தெரியற வரைக்கும் நாங்க உண்மையிலேயே யாரோட பசங்கன்னு தெரியாது. ரெண்டு பேருமே அம்மாங்க தான். சொந்தக்காரங்க வரப்ப போறப்ப பேசிக்கறதை வச்சுத்தான் நாங்களும் தெரிஞ்சுக்கிட்டோம். ஆனா எங்களுக்குள்ளேயும் அப்படி எதுவும் பாத்துக்கறது இல்ல.” 

“ம்ம்.‌ ஆச்சர்யமா இருக்கு.‌ ஆமா.. மாதவி எங்க ஆளையே காணோம்..?” 

“அவ தான் வேலூர்ல படிக்கறாளே. காலையிலேயே கிளம்பிருப்பா..” 

“ம்ம்.. ஆமா.. நீங்க என்ன ப்ரொஜெக்ட்க்காக லோன் அப்ளை பண்ணியிருக்கீங்க.?” 

“பார்ரா.. மேடம் இப்பவாச்சும் என்னை பத்தி கேட்டீங்களே..” 

“ம்ம்.‌ சொல்லுங்க. கேட்டேன் இல்ல..” 

“நான் ஆக்சுவலி ப்ளண்டட் ஆயில்ஸ் ரிபைனரி யூனிட் ஒன்னு தொடங்கலாம்னு தான் லோன் கேட்டிருக்கேன்.” 

“ஓ.. ஏன் ஆயில் ரிபைனரி பக்கம் திரும்பிட்டீங்க. நீங்க கெமிக்கல் என்ஜினியரிங் தானே படிச்சீங்க.” 

“நான் இன்டர்ன் பண்ணது சென்னைல ஒரு ரிபைனரில தான். அப்போ  நான் ப்ளெண்டட் ஆயில்ஸ் பத்தி தான் ரிசர்ச் பண்ணி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். செக்கு ஆயில் பொதுவா நல்லதுன்னு நாம் நினைக்கறோம். ஆனா அதுலயும் பெஸ்ட் ப்ளெண்டட் தான்‌. அதான் இதுல ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கலாம்னு” 

“ம்ம்.. கரெக்ட் தான் நமக்கு தெரிஞசதுல தான் நாம எக்ஸ்பர்ட் ஆக முடியும்.” 

“ஆமா.ஆமா.. அதான் நானும் உன்னை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்..” 

“என்னை பத்தி தெரிஞ்சு என்ன கம்பெனியா தொடங்க போறீங்க..” 

“ஹலோ வாழ்க்கையை ஆரம்பிக்க போறேன் மா. என் பார்ட்னரை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா..?” 

 

“எதே… பார்ட்னரா” 

“ஆமா.. நம்ம வாழ்க்கைல நீயும் நானும் பார்ட்னர் தானே.. சரி பங்கு எல்லாத்துலேயும்.. ஆமா உனக்கு என்னலாம் பிடிக்கும், அப்புறம் உன் கனவுகள் என்ன அதெல்லாம் சொல்லு..” 

மாலை மஞ்சள் வெயில் அவளின் ஒற்றை மூக்குத்தியில் பட்டு ரதியின் முகம் மஞ்சள் நிலவு போல ஜொலித்தது. 

“ஒரு செக்ண்ட ஒரு செக்ண்ட்.. அப்படியே இரு. துளிக்கூட நகரக் கூடாது..” 

ரதி அவனின் வார்த்தைகளில் குழம்பினாள். ஆனாலும் அவன் சொன்னபடி அப்படியே இருந்தாள். 

தன் அலைபேசியில் அவளை விதவிதமாக புகைப்படம் எடுத்தான். 

அவற்றை அவனே ரசித்து பின் ரதியிடம் காண்பித்தான். 

அழகாக அவளின் பல்வேறு பரிமாணங்கள். கதிரவனின் கதிர்களில் அவள் வானவில்லினால் ஆன மங்கையை போல் ஜொலித்தாள். 

அவளுக்குமே அந்த புகைப்படங்கள் பிடித்தன. 

“ம்ம்.‌‌ கையில ஒரு எக்ஸட்ரா தொழில் வச்சிருக்கீங்க போல..” 

“எது உன்னோட ப்ளிர்ட் பண்றதா..” என்றான். 

அருகிலிருந்த சிறிய தென்னங்கீற்றை எடுத்துக் கொண்டு அவனை அடிக்க ரதி  கை ஓங்க, அவன் எழுந்து ஓட, அவள் அவனை துரத்த.. அங்கே ஒரு கண்ணாமூச்சு ஆட்டத்தை காதல் துவங்கியிருந்தது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!