Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-18

அத்தியாயம் – 18

“காற்றை மசித்து இசையாக்குகிறது குழல். ரணங்கள் மீட்டி கவிதைகள் தருகிறது காதல்!”

நிசப்தமான அந்த இரவு, குஷி பீச்சின் அலைகளின் ஓசையோடு கரைந்து போயிருந்தது. நேற்று இரவு அலைபேசியில் வந்த அந்த மர்மமான குறுஞ்செய்திதான் மித்ரனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையைத் தேக்கி வைத்திருந்தது. அந்த ரகசியம் அவனது நெஞ்சுக்குள் ஒரு பட்டாம்பூச்சியாய் சிறகடித்துக் கொண்டிருந்தது.



Advertisement

அதிகாலைச் சூரியன் ஜன்னல் திரைகளைத் தாண்டி ஆதிரையின் முகத்தில் விழுந்தபோது, அவள் மெல்லக் கண் விழித்தாள். நேற்று இரவு ஏனோ மித்ரனின் மார்பில் சாய்ந்து தூங்கியது போன்ற ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்தது. அது அவளது காலைப் பொழுதை இன்னும் அழகாக்கியது.

மித்ரன் ஏற்கனவே குளித்து முடித்து, ஒரு கையில் தேநீருடன் மெல்ல அவளை நெருங்கினான். அவனது கண்கள் நேற்றைய தவிப்பைத் தொலைத்துவிட்டு, ஒருவிதமான துள்ளலோடு மின்னின.

“ஆதி… மணி எட்டரை ஆகப்போகுது. இன்னைக்கு நீ லேப்க்கு போகலையா?” மித்ரன் குரலில் ஒரு குறும்பான அக்கறை இருந்தது.

Advertisement

ஆதிரை சட்டென்று விழித்துக்கொண்டாள். “ஐயோ லேட் ஆயிடுச்சா!” எனப் பதறியபடி எழ முயன்றவளை, மித்ரன் மென்மையாகத் தடுத்தான்.

Advertisement

“ரிலாக்ஸ் ஆதி. இன்னைக்கு நான் உன்னை லேப்ல கொண்டு போய் விடுறேன். நீ நிதானமாவே ரெடியாகு,” என்றான்.

ஆதிரை அவனை வியப்புடன் பார்த்தாள். எப்பொழுதும் சீரியஸாக இருக்கும் மித்ரன், இன்று இவ்வளவு நிதானமாக இருப்பது அவளுக்குப் புதுமையாக இருந்தது.

“இட்லி ஊத்திருக்கேன்… தொட்டுக்க பொடி இருக்கு… வா வா ஒன்னும் டென்ஷன் இல்ல,” என்று அவன் சொல்லும் போது, அதில் ஒரு ‘பெர்ஃபெக்ட்’ கணவனின் சாயல் தெரிந்தது. அவள் கண்கள் விரிய பார்க்க, மித்ரன் சிரித்துக்கொண்டே அவள் கையில் தேநீரைத் திணித்தான்.

Advertisement

ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மிக வேகமாகத் தயாரானாள். ஒரு எளிய சுடிதாரும், லேசான ஒப்பனையும் அவளது முகத்தில் ஒரு தீட்சண்யத்தைக் கொடுத்தன.

ஆதிரை வேகவேகமாகத் தயாராகி வெளியே வந்தபோது,

“பசங்க எழுந்துட்டாங்க… கண்மணிக்கு லீவ் சொல்லிருக்கேன்… ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு இருக்கட்டும், வந்திரலாம்,” என்று மித்ரன் மிகச் சாதாரணமாகச் சொல்ல, ஆதிரைக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“அய்யோ! இன்றும் கண்மணி லீவா??” என ஆதிரை பதறினாள். இன்றும் லீவ் என்றால் அவளது படிப்பு என்னாவது என்ற கவலை ஒரு தாயாக அவளை வாட்டியது.

ஆனால் மித்ரன் எதற்கும் அசருவதாக இல்லை. “அட ஒன்னும் இல்லம்மா… எட்டாவதுலயே நீட் (NEET) எழுதப் போறாளா? விடு விடு!” எனச் சிரித்துக்கொண்டே அவளைத் துரத்தினான்

காரில் செல்லும்போது மித்ரன் எதுவும் பேசவில்லை, ஆனால் அவனது விரல்கள் ஸ்டீயரிங்கில் ஒரு தாளத்தைப் போட்டுக்கொண்டிருந்தன.. சி.இ.சி.ஆர்.ஐ (CECRI) வளாகத்தின் உள்ளே கார் நுழைந்தபோது, ஆதிரையின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத படபடப்பு தொற்றிக்கொண்டது.

ஆதிரை காரிலிருந்து இறங்கும்போதும், மித்ரன் மெல்ல அவளைப் பார்த்து, “ஆல் தி பெஸ்ட் ஆதி… இன்னைக்கு நாள் உனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்,” என்று அர்த்தத்தோடு சொன்னான். அவள் புரியாமல் அவனைப் பார்த்துவிட்டு உள்ளே நடந்தாள்.

லேப் வாசலை அடைந்தபோதே அவளுக்கு ஒரு மாற்றம் தெரிந்தது. எப்போதும் அமைதியாக, இருக்கும் அந்த வளாகம் இன்று தேனீக்களைப் போல சுறுசுறுப்பாகவும், சத்தமாகவும் இருந்தது. அவளது சக ஆராய்ச்சியாளர்கள் (Lab mates) அனைவரும் அங்கே குழுமியிருந்தனர்.

“ஹேய் ஆதிரை! வந்துட்டியா? சீக்கிரம் ஹெட் ரூம்க்கு போ… எல்லாரும் அங்கதான் இருக்காங்க!” என மீரா உற்சாகமாகக் கத்தினாள். “என்ன ஆச்சு மீரா?” என ஆதிரை கேட்க, “ஹே போடி… சார் உனக்காகத்தான் காத்திருக்காரு!” என்று மீரா அவளைத் தள்ளினாள்.

ஆதிரைக்குக் குழப்பமாக இருந்தது. நேற்று வரை இருந்த அந்த இறுக்கமான சூழல் இன்று ஏன் இவ்வளவு குதூகலமாக இருக்கிறது? அவள் மெல்ல டாக்டர் பொற்சோழனின் அறைக்குள் நுழைந்தாள். அங்கே சக விஞ்ஞானிகளும், சீனியர் ஆராய்ச்சியாளர்களும் நிரம்பி வழிந்தனர். அவள் உள்ளே நுழைந்ததும் டாக்டர் பொற்சோழன் இருக்கையிலிருந்து எழுந்தார். அவரது முகத்தில் ஒரு தந்தைக்குரிய பெருமிதம் தெரிந்தது.

“வாம்மா ஆதிரை! கன்கிராஜுலேஷன்ஸ்!” என அவர் உரக்கச் சொன்னதும், அந்த அறையே கைதட்டலால் அதிர்ந்தது.

ஆதிரை திகைத்து நின்றாள். “சார்… என்ன விஷயம்?”

“ஆதிரை, உன்னுடைய ஸ்மார்ட் சென்சார் (Smart Sensor) குறித்த அந்த ரிசர்ச் பேப்பர்… அத naanga  சர்வதேச மாநாட்டிற்கு அனுப்பியிருந்தோம். அது தேர்வாகியிருக்கு! வெறும் தேர்வாகிறது மட்டுமில்ல, உன்னை அங்கே வந்து உன்னுடைய ஆய்வைப் பற்றிப் பேச (Invited Talk) அழைச்சிருக்காங்க. அதைவிட மிக முக்கியமான விஷயம், உன்னுடைய இந்தப் பயணச் செலவுகள் அனைத்தையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள் – அதாவது முழுமையாக அவர்களே ஸ்பான்சர் செய்றாங்க, fully funded ma!”

ஆதிரைக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றது போல இருந்தது. அவளது கண்கள் விரிந்தன. “இன்டர்நேஷனல் கான்பரன்ஸா? அதுவும் இன்வைட்டட் டாக்?” அவளால் நம்பவே முடியவில்லை.

ஒரு ஆராய்ச்சியாளருக்கு சர்வதேச மாநாடு என்பது உலக அளவில் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்கள் கூட பங்கேற்கும் ஒரு களம் இது.

இங்கே ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்படுவதே பெரிய விஷயம். ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் இருந்து மிகச் சிலவற்றை மட்டுமே அங்கீகரிப்பார்கள். இதில் ஒரு ‘இன்வைட்டட் டாக்’ கொடுப்பது என்பது, அந்தத் துறையில் நீங்கள் ஒரு நிபுணராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கான சாட்சி. இது ஒரு ஆராய்ச்சியாளரின் வாழ்நாள் கனவு.

ஆதிரை சாரின் கைகளில் இருந்த அந்த அழைப்புக் கடிதத்தின் அச்சுப் பிரதியை வாங்கினாள். இந்த கான்பரன்ஸ் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்துவார்கள். இந்த முறை எங்கே என்று பார்த்தாள்.

IEEE ஸ்மார்ட் சென்சார் சர்வதேச மாநாடு (IEEE Smart Sensor International Conference) இடம்: மேக்ஸ் பிளாங்க் இன்டெலிஜென்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் (Max Planck Institute for Intelligent Systems), ஸ்டட்கார்ட், ஜெர்மனி. இந்த பெயரைப் பார்த்ததும் அவளுக்குத் தலைசுற்றுவது போல இருந்தது.

அவளுக்கு நன்கு தெரியும், மேக்ஸ் பிளாங்க் சொசைட்டி (Max Planck Society) என்பது ஜெர்மனியின் மிக உயரிய ஆராய்ச்சி அமைப்பாகும். இது சுமார் 80-க்கும் மேற்பட்ட தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒரு பிரம்மாண்டமான கூட்டமைப்பு. ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட துறையில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

அதில் இந்த ஸ்டட்கார்ட் இன்ஸ்டிடியூஷன், நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தில் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்வது.

“மேக்ஸ் பிளாங்க், ஸ்டட்கார்ட்…” என மெல்ல முணுமுணுத்தாள் ஆதிரை. மின்னல் ஒன்று தோன்றி மறைந்தது. ஆம், மித்ரன் தனது ஆராய்ச்சிக்காக  சில காலத்திற்கு முன்பு சென்று வந்த இன்ஸ்டிடியூஷன்  தான் இது! அவளது வாழ்வின் அத்தனை குழப்பங்களுக்கும், போராட்டங்களுக்கும் காரணமான அதே இன்ஸ்டிடியூஷன்!

அனைவரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு நகர, ஆதிரையும் சாரும் மட்டும் அந்த அறையில் தனித்து நின்றார்கள். அவளது நினைவுகள் மெல்ல நேற்று மாலைக்குச் சென்றன.

அலுவலகத்தை விட்டு நேற்று அவள் கிளம்பும்போது, மித்ரன் டாக்டர் பொற்சோழனிடம் மிகத் தீவிரமாக ஏதோ ஒரு உரையாடலில் இருந்தான். அதன்பிறகு மாலை வீட்டிற்குள் வந்து மீண்டும் மீண்டும் அவன் சொன்ன “கன்கிராஜுலேஷன்ஸ் ஆதி” என்ற வார்த்தை இப்போது அவளது காதுகளில் எதிரொலித்தது.

“அப்போ… இது அவனுக்கு நேற்றே தெரியுமா?” ஒருவேளை இது மித்ரனின் செல்வாக்கினால் (Influence) கிடைத்திருக்குமோ?” என்ற கேள்வி அவளுக்குள் விழுந்தது. ஆதிரை வியந்தாள். நேற்று இரவு அவன் எதற்காக அவ்வளவு தீவிரமாகத் தன் அலைபேசியில்  மூழ்கிக் கிடந்தான் என்பதற்கான விடை இப்போது அவளுக்குக் கிடைத்தது.

அவள் மெல்லத் தலை நிமிர்ந்து டாக்டர் பொற்சோழனைப் பார்த்தாள். அவளது பார்வையில் இருந்த அந்தக் கேள்வியைப் புரிந்துகொண்டவர் போல அவர் புன்னகைத்தார். அவர் மேஜையின் மேல் இருந்த அந்தக் கடிதத்தைச் சுட்டிக்காட்டி நிதானமாகப் பேசத் தொடங்கினார்.

“டாக்டர் மித்ரன் உன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசினார் ஆதிரை. உன் முழு வேலைகளையும் (Research work) அவர் முழுமையாக அறிந்திருந்தார். அவர் தான் ‘இதை ஏன் இன்னும் பெரிய தளத்திற்குக் கொண்டு செல்லக்கூடாது? உடனே இந்த கான்பரன்ஸிற்கு விண்ணப்பம் செய்யுங்கள்’ என்று சொன்னார். இதுதான் உண்மை ஆதிரை.”

ஆனால், நீ ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். மேக்ஸ் பிளாங்க் போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த நிறுவனம் வெறும் பரிந்துரையால் (Recommendation) மட்டும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை. உன் ஆய்வின் தரம் தான்! உன் உழைப்புதான் அவர்களை உன்னை அழைக்க வைத்திருக்கிறது,” என்று அவர் உறுதிபடக் கூறினார்.

அவரது வார்த்தைகள் ஆதிரையின் மன பாரத்தைச் சற்று குறைத்தன.

மித்ரன் தன் திறமையை அங்கீகரித்து, அதைச் சரியான இடத்திற்குக் கொண்டு செல்லத் துணையாக இருந்திருக்கிறான் என்பதை நினைக்கும்போது, அவன் மேல்  ஒரு மெல்லிய நெகிழ்ச்சி உருவானது. சட்டென கான்பரன்ஸ் தேதியை பார்த்தாள்.

அந்த அழைப்புக் கடிதத்தில் இருந்த தேதியைப் பார்த்த ஆதிரைக்கு, ஒரு நிமிடம் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. மாநாடு தொடங்குவதற்கு இன்னும் ஐந்து தினங்களே இருந்தன!

அவளுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. ஜெர்மனி செல்வதற்கான ஆயத்தங்கள், விசா நடைமுறைகள், தனது ஆய்வை அங்கு முன்வைப்பதற்கான இறுதித் தயாரிப்புகள் என அடுக்கடுக்கான வேலைகள் அவள் கண்முன் வந்து நின்றன.

ஆதிரையின் மனதுக்குள் ஒரு பெரிய போரே நடந்து கொண்டிருந்தது. அவள் தன் கையில் இருந்த அந்த அழைப்புக் கடிதத்தை வெறித்துப் பார்த்தாள்.

ஜெர்மனியா? அதுவும் இன்னும் ஐந்து நாட்களில் எப்படிச் சாத்தியம்?” என்ற கேள்வி அவளைத் துளைத்தது. ஒரு சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியக் குடிமகளுக்கு, ஒரு ஐரோப்பிய நாட்டிற்கான விசா பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும்போது, இந்த ஐந்து நாட்களுக்குள் எப்படி அனைத்தும் நடக்கும்?

ஆதிரையின் மூளை ஒரு அதிநவீன கணினி போலச் செயல்படத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் ஒவ்வொன்றும் ‘கட கடவென’ ஒரு பட்டியலாக (Checklist) அவள் கண்முன் வந்து விழுந்தன. விசா, விமான டிக்கெட், ஜெர்மனியின் குளிர் காலத்திற்குத் தேவையான உடைகள், அங்கேயான தங்குமிடம்,… எல்லாவற்றையும் விட முக்கியமாக, அந்தப் பெரிய மேடையில் தான் பேச வேண்டிய ஆய்வுத் தரவுகள். எப்படித் தயார் செய்வது, எல்லாவற்றையும்? “சார், இவ்வளவு குறைவான நேரத்தில் எப்படி முடியும்?” என்று கேட்டவளிடம், “கவலைப்படாதேம்மா, எல்லாம் மித்ரன் பார்த்துக்கொள்வார் என்றார். உனக்கு நான் ஓ.டி (OD) கொடுக்கிறேன், நீ கிளம்பி ஆக வேண்டிய வேலையைப் பார்… சீக்கிரம் உற்சாகமாகப் போ!” என்றார் சார்.

இவள் வெளியில் வர ஓடி வந்து மீரா கட்டிப் பிடித்தாள். லேப் மேட்ஸ் அனைவரும் வாழ்த்து சொல்ல, இவள் அனைவரிடமும் கூறிவிட்டு மெல்ல வெளியில் வந்தாள்.

அவள் காரை நோக்கி வருவதைப் பார்த்த மித்ரன், எதையும் பேசாமல் காரின் கதவைத் திறந்து வைத்தான். அவள் உள்ளே அமர்ந்ததும், அவளது கைகள் நடுங்குவதைக் கவனித்தான்.

“ஆதி… என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு பதற்றமா இருக்க?” என மென்மையாகக் கேட்டான். ஆதி அப்படியே அவனைப் பார்க்க, “ஹே கூல் கூல்… நேத்து சார்ட்ட அப்ளை பண்ண சொல்லிட்டு வீட்டுக்கு வரும்போதே அக்சப்டன்ஸ் கிடைச்சிரும்னு தெரியும் மா. அப்படியும் அஃபிசியலா அக்சப்டன்ஸும் அர்ஜென்ட் இன்விடேஷனும் நைட்டு வந்தப்போ தான் நீங்க தூங்கியிருந்தீங்களே,” என்று சிரித்தான்.  “இப்போவாச்சும் கையைக் குடுடி என் பொண்டாட்டி,” என அவன் கரம் பிடித்து, “கன்கிராட்ஸ் கண்ணம்மா,” என்றான்.

“மித்ரன்… இது எப்படி முடியும்? இன்னும் நாலு நாள்தான் இருக்கு. நான் எப்போ சென்னை போய், எப்போ விசா எடுத்து… அதுக்குள்ள கான்பரன்ஸே முடிஞ்சிடும். இது நடக்காத காரியம் மித்ரன்!” எனத் தடுமாறும் குரலில் சொன்னாள். மித்ரன் மெல்லச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளது பயத்தை இன்னும் அதிகமாக்கியது. ”

மித்ரன் காரை மெல்ல ஸ்டார்ட் செய்தபடி, “ஆதி… நேத்து மதியம் டாக்டர் பொற்சோழன் அப்ளை பண்ணி அக்னாலெட்ஜ்மென்ட் வந்த உடனேயே எனக்குத் தகவல் சொல்லிட்டார். உன்னோட பாஸ்போர்ட்  ஏற்கனவே என்கிட்ட இருந்தது ஞாபகம் இருக்கா?…” ஆதிரை நிமிர்ந்து பார்த்தாள். “ஆமா… அதுக்கு என்ன இப்போ?”

“நேத்து மாலையே உனக்கான ‘Expedited Priority Visa’ அப்பாயிண்ட்மென்ட்டை நான் புக் பண்ணிட்டேன்.  மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்-ல எனக்குத் தெரிஞ்ச பேராசிரியர் மூலமா உனக்கு ஒரு ‘Urgent Invitation Letter’ வாங்கியாச்சு. இன்னைக்கு மதியம் நாம மதுரை போறோம், அங்கிருந்து சென்னைக்கு பிளைட். நாளைக்கு காலைல விசா இண்டர்வியூ முடிஞ்சு, சாயந்திரம் விசா உன் கைக்கு வந்துடும்!”

நீ ஸ்டட்கார்ட் ஏர்போர்ட்ல இறங்கின உடனே உன்னை வரவேற்க அங்கே என் நண்பர்கள் வருவாங்க.

அவளது ஆழ்மனதில் இருந்த அந்த ‘மனக்குரங்கு’ உடனே குதித்து எழுந்து அடையாளத்தைக் காட்டியது. “ஓ… அதுதான் எனக்குத் தெரியுமே.. அது அந்த சந்தியா அண்ட் கோ  தானே? ” என மனதுக்குள் கூறினாள் .

மித்ரன் தொடர்ந்தான்: ‘என் ரொம்ப நல்ல நண்பர்கள் ஹெர்மன் அன்ட் சோஃபி’ அவங்ககிட்ட ஏற்கனவே உன்னைப் பத்திப் பேசிட்டேன்.”

ஆதிரைக்குப் பேச்சு வரவில்லை. இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைத் தனக்குத் தெரியாமலேயே அவன் செய்து முடித்திருப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

இப்போ சொல்லு… ஜெர்மனி போறது சாத்தியம் தானே, நீ இனிமே உன்னோட பிரசென்டேஷன்ல மட்டும் கவனம் செலுத்து, ஓகே?” என்றான்.

அவனது அணைப்பும் அரவணைப்பும் இப்போது ஒரு பெரும் நிழலாய் அவளைப் பாதுகாப்பதை உணர்ந்தாள்.

ஆதிரையின் தண் நிழலாய் மிளிர்ந்தான் மித்ரன்!

மித்ரன் சொல்லாமலும், அவள் கேட்காமலும் விட்ட அந்தச் சந்தியாவின் கதை, இப்போது அவளைத் தானாகத் தேடி வருவதாக விதி கதை சொல்லியது. மித்ரன் மீண்டும் காரைத் தட்டி, “என்ன ஆதி… கிளம்பலாமா? “ என்றான்.

ஆதிரை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனது கண்கள் அவ்வளவு நிர்மலமாக இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!