Skip to content
Post Views: 2,375
அத்தியாயம் 5
காற்று முகத்தை வருட, ம்ருதவ்வின் மனம் கொஞ்சம் லேசானது.
அந்த உயரத்தில்…
ம்ருதவ் தன்னுடைய கவலைகள் யாவற்றையும் கீழே விட்டுவிட்டதாய் உணர்ந்தான்.
Advertisement
சூழலின் பெரும் அமைதி அவனின் மனதை மெல்ல மெல்ல அமைதியாக்கிக் கொண்டிருந்தது.
இயற்கை தரும் இதத்தை தன்னுள் நிறைத்துக் கொண்டவனாக இமைகள் மூடி நெஞ்சத்தில் உள்ளங்கை வைத்து அழுத்திக் கொடுக்க, தட்டுப்பட்ட பொருளின் தடத்தில் விழிகள் திறந்து என்னவெனப் பார்த்தான்.
ஜிமிக்கி.
Advertisement
பொத்தானோடு சேர்ந்து சட்டை துளையில் அத்தனை இறுக்கமாக மாட்டியிருந்தது.
Advertisement
‘இதெப்படி இங்க!’ அதிகம் ஆராயவேண்டிய தேவையின்றி அவனின் அகத்திற்குள் மித்யுகாவின் முகம் மின்னி மறைந்தது.
சட்டென்று அம்முகம் தனது நெஞ்சத்தை குளிர்விக்கும் மாயத்தை வெளிப்படையாய் உள்வாங்கினான்.
ஏனோ அவளின் முகம் அவனது வலிக்கு மயிலிறகாய் மென் வருடலைத் தரும் தோற்றம் அவனுள்.
Advertisement
காயம்பட்டிருக்கும் இதயத்திற்கு நொடி நேரம் பார்த்து கண்கள் மட்டுமில்லாது மனதோடும் நிறைந்துவிட்ட அவளின் முகம் மருந்தாகிப்போன விந்தை.
ஏனென்று தெரியாது அவனை திரும்பிப் பார்க்கச் செய்திட்ட முதல் பெண்ணவள் மித்யுகா.
சட்டையிலிருந்து ஜிமிக்கியை எடுத்தவன், இரு விரலால் தூக்கிப் பிடித்துப் பார்க்க, மொத்த நகரமும் அந்த ஜிமிக்கிக்கு பின்னால் ஒளிந்தது. அவனது உலகமும்.
சிறிது நேரம் கண் முன் தெரியும் ஜிமிக்கியோடும், அக விழி நனைக்கும் அவளின் முகத்தோடும் ஒன்றிப்போனவனுக்கு வருத்தத்தின் நினைவே இல்லாமல் போனது.
ஜிமிக்கியைப் பார்க்க பார்க்க, அதன் சொந்தக்காரியை மீண்டும் பார்க்க வேண்டுமென்றுத் தோன்றிட பட்டென்று சுதாரித்திருந்தான்.
‘யாருன்னே தெரியாத பொண்ணு. மனசுல நினைக்கிறது தப்பு சிவா’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவனாக ஜிமிக்கியை உள்ளங்கையில் வைத்து விரல்களை இறுக மூடினான்.
“தேவையில்லாத எண்ணமெல்லாம் வருது” என தூக்கியெறிய முயன்று கையை பின்னால் இழுத்து, அதிக விசையுடன் முன் கொண்டு வந்தவனால், நினைத்ததை செய்ய முடியவில்லை.
‘திரும்பப் பார்த்தா கொடுத்திடுவோம்’ என நினைத்தவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதனை செய்யப்போவதில்லையென அறிந்திருக்கவில்லை.
சட்டைப்பையில் போட்டுக்கொண்டு எழுந்து நின்று, மீண்டும் பரந்த பரப்பில் தனது நிம்மதியை தேடாது, அனைத்தும் கடந்து இதில் தனக்கும் ஓர் வாழ்வு உண்டென நேர்மறையாக எண்ணியவனாக வீட்டிற்குப் புறப்பட்டான்.
ம்ருதவ் வீடு வந்து சேர்ந்தபோது ரதியும், கமலேஷும் வீட்டு வாயில் படியின் மீது அமர்ந்திருந்தனர்.
“என்ன இங்க இப்படி உட்கார்ந்திருக்கீங்க?” எனக் கேட்டுக்கொண்டே இருவருக்கும் நடுவில் படியேறி பூட்டினை திறந்து உள் சென்றான்.
நண்பனின் முகத்தில் சிறு தெளிவு வந்திருப்பதைபோல் உணர, வேகமாக வீட்டிற்குள் அவனின் முன் சென்று நின்று முகத்தை உற்று கவனித்தனர்.
“என்னங்கடா?”
“எங்கப்போயிட்டு வர?”
“தனியா இருக்கணும் தோணுச்சு” என்று ம்ருதவ் முடிக்கும் முன்பு, “வீட்லயும் நீ தனியாதான இருக்க” என்றான் கமலேஷ்.
நொடியில் ம்ருதவின் முகம் கசங்கிவிட்டிருந்தது.
ரதி வேகமாக கமலேஷின் காலை மிதித்திருந்தாள்.
தனது நெற்றியில் தட்டிக்கொண்ட கமலேஷ், “சாரிடா… நான் எதுவும் மீன் பண்ணனும் நினைச்சு சொல்லல” என குரலிலே தன்னுடைய வருத்தத்தை பிரதிபலித்தான்.
“இட்ஸ் ஓகே டா! நீ வேணும்னு சொல்லலன்னாலும், சொன்னது சரிதான. உண்மையும் கூட” என நொடியில் வாடிவிட்ட தன்னுடைய முகத்தை அவர்களுக்கு காட்ட விரும்பாதவனாய் சமையலறை நுழைந்து நீர் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்தான்.
“நீ மீனும் பண்ண வேணாம், கருவாடும் காய வேணாம். இப்படி நினைவில்லாம பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும். யாருமேயில்லன்னனு நினைச்சிட்டு இருக்கவனை திரும்ப திரும்ப நினைவுப்படுத்துற மாதிரி இருக்கும்” என கமலேஷின் தலையில் கொட்டியதோடு
ம்ருதவ்வின் மனதை மாற்ற நினைத்து வேறெதுவும் பேசுவோம் என எண்ணிய ரதி,
“இன்னைக்கு உன்மேல இடிச்சாளே ஒரு பொண்ணு எங்களை வச்சு செஞ்சிட்டா” என்று நடந்ததைக் கூறினாள்.
“டோட்டல் டேமேஜ் மச்சான். எங்களை வேலை வாங்கினத யார்கிட்டலாம் சொல்லி சிரிச்சிட்டு இருக்காளோ?” என்று கமலேஷ் சொல்ல,
“நீ சொல்றதுக்கு வாய்பில்லை. ஆனா அவளோட ஜிமிக்கி மிஸ் ஆனதை நெனச்சி புலம்ப வாய்ப்பிருக்கு” என்றாள்.
“அந்த ஐம்பது ரூபா ஜிமிக்கிக்காக யாராவது புலம்புவாங்களா?” என கமலேஷ் கேலி செய்து சிரித்திட,
“அது அவளுக்கு ஸ்பெஷல் போல” என்ற ரதி, “உன் ஷர்ட்டில் மாட்டியிருக்க சான்ஸ் இருக்குடா. நீ பார்த்தியா?” என அவர்களின் பேச்சின் வழி மித்யுகாவின் நினைவில் ஆழ்ந்திருந்த ம்ருதவ்விடம் கேட்டிருந்தாள்.
சட்டென்று தன்னுடைய சட்டைப் பையின் மீது கை வைத்துக்கொண்ட ம்ருதவ்,
“ஜிமிக்கியா? நான் எதுவும் பார்க்கல” என தடுமாறியவனாக எழுந்து, வேகமாக அறைக்குள் சென்று மறைந்தான்.
“இவனை எப்படித்தாண்டா நார்மலாக்குறது?” ரதி ஆயசமாக வினவினாள்.
“எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பிச்சிட்டா சரியாகிடுவான்” என்ற கமலேஷ், “டீ போடேன்” என்றான்.
“ஹ்ம்ம்” என ரதி சமையலறைக்குள் செல்ல, கமலேஷ் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அதில் மூழ்கினான்.
அறைக்குள் வந்து கண்ணாடி முன் நின்ற ம்ருதவ், தனது கன்னத்திலே மெல்ல அடித்துக்கொண்டான்.
“இப்போ எதுக்கு நீ ரதிக்கிட்ட பொய் சொன்ன?” தனது பிம்பத்திடம் குற்றம்சாட்டும் விதமாக கேட்டிருந்தான்.
“என்கிட்டதான் இருக்குன்னு சொல்லி கொடுத்திருக்க வேண்டியதுதான. எதுக்கு மறைச்ச? நீயே அந்தப்பொண்ணை பார்த்தால் கொடுத்திடனும் தானே நினைச்ச” என மீண்டும் மீண்டும் தன்னகம் எழும்பும் கேள்விகளுக்குப் பதில் தெரியாது இருக்கையில் அமர்ந்து கண்ணாடி மேசையின் மீது தலை வைத்து கவிழ்ந்தான்.
ஜிமிக்கியை எடுத்து தன்னுடைய முகத்திற்கு அருகே மேசையில் வைத்தவன்,
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கோ?” என்றான். உண்மை அதுதானென தெரியாது.
“பிடிச்சிருக்குன்னா… காரணம் என்னவா இருக்கும்?” என்றவன், “நீ கைக்கு வந்தப்புறம் உன்னை சுத்தியே நினைக்கிறேன். நான் இருந்த நிலைமை என்ன? நொடியில் எல்லாம் மாறின மாதிரி ஏதோ மேஜிக் பண்ணிட்ட” என்றவன், கமலேஷ் அழைக்கும் சத்தத்தில் ஜிமிக்கியை மேசை இழுவையில் பத்திரப்படுத்தி விட்டு எழ,
நிகழ்வில் விரலில் சுழன்று கொண்டிருந்த ஜிமிக்கியை கைக்குள் வைத்து மூடினான்.
கமலேஷ் அலுவலகம் முடிந்து நேராக ம்ருதவ்வின் இல்லம் வந்திருந்தான்.
வீட்டு கதவு திறந்தே இருக்க, நண்பனை கூப்பிட்டுக்கொண்டே வீட்டை அலசியபடி, அவன் அமர்ந்திருந்த தோட்டத்து சிட்டவுட்டிற்கு வந்திருந்தான்.
“இங்கதான் இருக்கியா?” எனக் கேட்டவாறு ம்ருதவ்வின் முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு, டீபாயின் மீதிருந்த குவளையின் மிச்சமிருந்த தேநீரின் நிலை அவன் அங்கு வந்து அமர்ந்திருக்கும் நேரத்தை கணக்கிட்டு காண்பித்தது.
“மதியம் வீட்டுக்கு வந்ததுலேர்ந்து இங்கதான் இருக்கியா?” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம்…” பழைய நினைவில் கொஞ்சத்தை மீட்டிப்பார்த்த தாக்கத்தால் தோட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருந்த குருவியின் மீது நிலைத்திருந்தான் ம்ருதவ்.
“ஆறு மணி நேரமா ஒரே இடத்துல… ஓ காட்” என்ற கமலேஷ், “உன்னை வச்சிக்கிட்டு என்ன தான்டா பண்றது? வேணாம்னு விட்டுட்டுப்போயேன். எதுக்கு இப்படி உருகிக் கிடந்து சாகுற” என்றான்.
“காத்திருக்கேன் சொல்லலாம்.”
ம்ருதவ் அத்தனை காதலாய் சொல்லிட,
“அறைஞ்சிடப் போறேன்… போடா!” என்று மொத்தமாய் தளர்ந்தான் கமலேஷ்.
“போன் வந்துச்சா?”
“மேடம் ஓகே சொல்லிட்டாங்க… வித் கண்டிஷன்ஸ்.”
“என்னவாம்?”
“அவளுக்கு இது செக்கென்ட் மேரேஜாம்?”
“ரைட்டு… அப்புறம்?”
“வேறென்ன” என்ற ம்ருதவ், “அவளுக்கு நான் செக்கெண்டா டா” என்றான். முகத்தில் இன்னதென விவரிக்க முடியா உணர்வின் வெளிப்பாடு… மனம் சுருங்குதலின் நிழலாய்.
“என்னவா இருந்தா என்னடா? மேரேஜ் நடக்கணும் பர்ஸ்ட்” என்றான் கமலேஷ்.
“இப்போக்கூட அவளுக்கு என்னைத்தேடி வரணும் தோணல பாரேன்” என்ற ம்ருதவ்வின் காத்திருப்பு எல்லாம் மெல்ல மெல்ல கருகிக் கொண்டிருந்தது.
அவளுக்கான காரணங்கள் புரிந்தபோதும் காதல் கொள்ளும் சில எதிர்பார்ப்புகளை ஏனோ அவனால் புறக்கணிக்க முடியவில்லை.
“உனக்கு மேரேஜ் ஆகி, நீ மூவ் ஆன் ஆகியிருக்கலாம்… தன்னால உன் லைஃப்க்கு எந்த பாதிப்பும் வேணாம் நினைச்சிருக்கலாம்” என ம்ருதவ்வின் மனம் அறிந்த பதிலையே கமலேஷும் அவனைத் தேற்றிடக் கூறினான்.
ம்ருதவ்விடம் வழமையான ஜீவனின்றி ஓர் புன்னகை.
“இப்படி சிரிக்க, நீ சிரிக்காமலே இருக்கலாம்டா” என்றிருந்தான் கமலேஷ்.
அதற்கும் அவனிடத்தில் அதே முறுவல்.
“சத்தியமா காண்டாயிடுவேன்” என்ற கமலேஷ், “ரதிக்கிட்ட பேசுனியா?” எனக் கேட்டான்.
“எதுக்கு உன் மச்சான்ஸ் என் காதை பஞ்சர் ஆக்கவா?” என்ற ம்ருதவ், “அவளை மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு முன்னவே நீ கொஞ்சம் யோசித்திருக்கணும்” எனக்கூறினான். குறும்பாய்.
“லவ் பண்ணிட்டனே” என்ற கமலேஷ், “என்னைபத்தி அவளுக்கு எல்லாம் தெரியுமா… சோ, சின்ன பொய் சொல்லக்கூட முடியல. மாட்டிக்கிறேன். உடனே பஞ்சாயத்துப் பண்ண அவளோட அண்ணனுங்க ஊர்ல இருந்து கிளம்பி வந்துடுறானுங்க” என்றான்.
ம்ருதவ் பதில் பேசாது உன்னை நானறிவேன் எனும் விதமாகப் பார்த்திட…
“இதுவும் நல்லா தான்டா இருக்கு” என்றான்.
“பின்ன உன்மேல அம்புட்டு பாசம் வச்சிருக்க மச்சான்ஸ் யாருக்கு கிடைக்கும்” என ம்ருதவ் சொல்லிய விதத்தில் கமலேஷ் அசடு வழிந்தான்.
“கல்யாண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் டா” என்ற கமலேஷ்,
“உனக்கும் மேரேஜ் ஆகப்போகுதே! எல்லாம் தெரிஞ்சிப்ப” என்று அவனின் தோள் தட்டினான்.
“நல்லவேளை எனக்கு மச்சான் யாருமில்லை.”
அந்நேரம் தான் செண்பகம் அழைத்து, மித்யுகா அடுத்த கண்டிஷனாக தானும் உடனிருக்க வேண்டுமென சொல்லியதைக் கூறினார்.
அதில் ம்ருதவ்வுக்குமே சந்தோஷம் தான்.
குடும்பமென்றில்லாதவனுக்கு குடும்பமாய் உறவுகள் உடனிருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதென்றால் கசக்கவா செய்திடும்.
ஆனாலும் மித்யுகா சொல்லும் விதிகளுக்குப் பின்னால் இந்த திருமணம் நடந்துவிடவேக் கூடாதென நினைக்கும் அவளின் எதிர்ப்பார்ப்பு அவனால் கிரகிக்க முடிந்தது.
இப்பொழுதும் தன்னைத்தேடி தன்னிடம் வர அவளுக்குத் தோன்றவில்லையே, அவளின் காதல் தன்னை தேடவில்லையேயென வருந்துபவனுக்கு பெரும் ஆறுதலாக இருப்பது, அவளின் திருமண மறுப்பும், அதற்காக அவளிடும் விதிகளுமே!
இரு குழந்தைகளுக்கு தாயான பின்பும் அவளின் மனதில் அவனுக்கான காதல் அவளுள் ஜீவித்திருக்கிறது என்பதை இம்மறுப்புகளில் உணர்கிறானே! அவனது காதலுக்கும், காத்திருப்புக்கும் இது ஒன்று போதாதா?
இன்றும் என்னுள் நீ நிறைந்திருக்கிறாய் என வாய் மொழிந்திட்டால் தான் நம்ப முடியுமா என்ன?
சில உணர்வுகள், சில அன்புகள், சில காதல்கள்… தன்னைப்போல் தனது சுவாசத்தை, அவை நிறைந்திருக்கும் மனத்தில் உயிர்த்திருக்க வைத்திடும்.
ம்ருதவ்வின் நேசம் மித்யுகாவின் நேசத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்று.
மித்யுகாவின் இதயம் ம்ருதவ்வின் துடிப்புகளில் இயங்கிக் கொண்டிருப்பதைப் போன்று.
காதல் எப்போதும் தனது இணையை விலக்கி வைப்பதுமில்லை… விலக அனுமதிப்பதுமில்லை. இங்கு காதலை கொண்ட மனங்களுக்கு மட்டுமே விலகல் என்பது. அதிலும் மனங்களை சுமக்கும் உடல்களுக்கு மட்டும்.
செண்பகம் பேசி முடித்து வைத்திட…
“எப்போ வர சொல்றாங்க?” எனக் கேட்டான் கமலேஷ்.
“சண்டே!”
“ஹ்ம்ம்… அப்போ நாளைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு டிராவல் பண்ணலாமா டாக்டர்கிட்ட கேட்டுட்டு வந்திடுறோம்” என்றான்.
“எதுக்கு அவளுக்கு அலைச்சல். நீ, நான் மட்டும் போயிட்டு வந்திடுவோம்” என்றான் ம்ருதவ்.
“ரதி வந்தா உண்மையை மித்யுகிட்ட சொல்லிடுவான்னு நினைக்கிறியா?” என்ற கமலேஷ், “கூட்டிட்டுப்போகாம போயிட்டோம்… அவ்ளோதான்” என்றான்.
“ஹேய்… அப்படியில்ல! டாக்டர் த்ரீ மனத்ஸ் அலைச்சல் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே” என்ற ம்ருதவ்வுக்கு கமலேஷ் சொல்லியது தான் முக்கிய காரணம்.
என்னதான் திருமணத்தை தவிர்ப்பதற்காக இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் நபர் தான் வேண்டுமென மித்யுகா சொல்லியிருக்க, ம்ருதவ் அவளின் மறுப்புக்கான காரணமாக இது இருந்திடக் கூடாதென தனக்கும் இரண்டாம் திருமணம்தானென்று செண்பகத்தை சொல்ல வைத்திருக்க, உண்மை தெரிந்த ரதி ஆடித் தீர்த்துவிட்டாள்.
“எப்படியும் கல்யாணமாகி இங்க வந்தா தெரிஞ்சிடுமே! அப்போ என்ன பண்ணுவ?” எனக் கேட்டுமிருந்தாள்.
“இப்போ ஓகே சொல்லி வர சொன்னாலும் நான்தான் பையன் தெரிஞ்சா கண்டிப்பா நோ தான் அவளோட பதில். அதோட அவள் அப்படி பேசிட்டு என்னைவிட்டுப் போனதுக்கு பிறகும், நான் அவளோட நினைவோடே வாழ்ந்திருக்கேன் தெரிஞ்சா ரொம்பவே கில்ட்டா ஃபீல் பண்ணுவா. சோ, எனக்கும் இது ரெண்டாவது கல்யாணம் தான். இங்க வந்து தெரிஞ்சா அவள் புருஷனா அவளை எப்படி சமாளிக்கணும் எனக்குத் தெரியும்” என ம்ருதவ் விளக்கம் கொடுத்தும் ரதி சமாதானமாகாது அவனிடம் சில நாட்களாக பேசாதிருக்கிறாள்.
“இப்போ ஃபோர் மன்த் முடியப்போகுதுடா. டிராவல் போலாம் தான் நினைக்கிறேன். அதோட இங்கிருக்க திட்டக்குடி போக அவ்ளோ நேரமாகப் போறதில்லை” என்றான்.
“ஹ்ம்ம்” என்ற ம்ருதவ், “எதுக்கும் அவகிட்ட சொல்லி வைக்கணும்” என்றான்.
“சொல்லணும் அவசியமில்லை. உன்கிட்ட சண்டைப்போட்டாலும் நீ சரின்னு நினைக்கிறதுக்கு எதிரா எதுவும் செய்யமாட்டோம்” என்ற கமலேஷ், “நைட்டு இங்க தான்டா. பசிக்குது எதுவும் செய்துதா” என்றான்.
“இங்க எதுக்கு நீ?” என்ற ம்ருதவ், “வீட்டுக்கு ஓடு. உன் மச்சான்ஸ் உனக்காக வெயிட்டிங்” என்று கண்கள் சிமிட்டினான்.
“ரதிகிட்ட சொல்லிட்டேண்டா” என்ற கமலேஷின் இருப்பு ஏனென்று ம்ருதவ்வுக்கா தெரியாது… நாளை அவனின் சித்தப்பா இறந்த தினம்.
காலங்கள் பல கடந்தும் ம்ருதவ்வுக்கு வதை கொடுக்கும் நாட்களில் இதுவும் ஒன்று.
“நான் மேனேஜ் பண்ணிப்பேன்டா. நீ வீட்டுக்குப்போ. அதுவும் ரதி ப்ரெக்னன்ட்டா இருக்க நேரம் நீ இங்க நைட் ஸ்டே பண்றதெல்லாம் அவாய்ட் பண்ணிக்கோ” என்றான்.
“உனக்கென்ன பிரச்சினை” என்ற கமலேஷ், “ரதிகிட்ட சொல்றேன். அப்போ நானும் அங்க வந்து தங்குறேன்னு உடனே கிளம்பி வந்திடுவாள். பிரச்சினை முடிஞ்சுது” என அலைபேசியை எடுக்க,
“உன் மச்சான்ஸ் இருக்காங்களே! வேணாண்டா” என தடுத்த ம்ருதவ்.
“அப்போ அவங்களையும் வர சொல்லிடுவோம்!”
ம்ருதவ் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டான்.
“அது” என எடுத்த அலைபேசியை டிபாயின் மீது வைக்க முனைய, புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
யாரென யோசித்து நெற்றிச் சுருக்கினான்.
நண்பர்கள் காதலர்களாகி கணவன் மனைவியாகியதாலோ என்னவோ சிறுபிள்ளைப்போல் அனைத்திற்கும் சண்டையிட்டு புரிதலோடு சமாதானமாகிடுவர் கமலேஷ் ரதி தம்பதி.
இருப்பினும் சண்டையிட்ட நேரம் ரதி,
“நான் கூடவே இருந்து உன்னையே சுத்தி வரதாலதான் உனக்கு என் அருமைத் தெரியல. நான் எங்க வீட்டுக்குப் போறேன்” என முறுக்கிக்கொண்டு வேண்டுமென்றே அவளது அண்ணன்களுக்கு அழைத்து புகார் வாசித்திடுவாள்.
ரதிக்கு மூன்று அண்ணன்கள். உடனே ஆள் மாற்றி ஆள் கமலேஷுக்கு அழைத்து அறிவுரை வழங்குகின்றோமென படுத்தி எடுத்திடுவார்கள். அதுபோன்ற சமயங்களில் முடிந்தளவு அவர்களின் அழைப்புகளை ஏற்காது இருந்திடுவான். அந்நேரங்களில் புதிய எண்ணிலிருந்து அழைத்து அவனை திணற வைப்பர்.
அதுபோன்றுதான் இப்பவும் இருக்குமோயென நினைத்து அழைப்பினை ஏற்காது…
“இவனுங்க தொல்லை தாங்களடா. ஆரம்பிச்சிட்டானுங்க” என அலைபேசியின் திரையை ம்ருதவ்விடம் காண்பித்தான்.
பார்த்ததும் மித்யுகாவின் எண் என்று தெரிந்திட…
“உன் தங்கச்சி தான்” என்றான்.
“ஏதே… இந்த வயசில் திடீர்னு எனக்கொரு தங்கச்சியா!” என்று வேண்டுமென்றே கமலேஷ் அதிர்ந்திட…
ம்ருதவ் பார்த்தப் பார்வையில்,
“இத்தனை வருஷமா இல்லாம இப்போ மட்டும் என்னவாம்?. இதுல நாம எப்பவும் கூப்பிட்டிடவேக் கூடாதுன்னு நெம்பரெல்லாம் மாத்தியிருக்காள்” என்றான். கடுப்பாக.
“இனி அவள் வாழ்க்கையில் எனக்கு இடமே இல்லன்னு போனவள் நெம்பர் மாத்தினதுல என்ன குறை?” என்றான் ம்ருதவ்.
“நீயும் தான் அவள் மேல கோபமா, வருத்தமா இருந்த… ஆறு வருஷமாகியும் நீ மாத்தலையே!”
“எப்போ அவளுக்கு நான் வேணும்னு அவள் நினைச்சாலும் ஈசியா அவள் என்னை தொடர்புகொள்ற நிலையில் நானிருக்கணும். ஆரம்பத்தில் அவள் மேல கோபமிருந்தாலும்… அவளை எனக்கு புரியுமே!” என்ற ம்ருதவ், “அவளுக்காகத்தான் மாத்தலன்னு வச்சுக்கோயேன்” என்றான்.
“நாங்களும் தான்டா லவ் பண்ணோம்… பண்றோம்… ஆனா இப்படிலாம் அப்செசன் மாதிரியில்லை” என்றான்.
“என்னை அப்புறம் பேசிக்கலாம்… இப்போ நீ கால் அட்டென்ட் பண்ணு” என்றான் ம்ருதவ்.
“எனக்கு பேச விருப்பமில்ல.”
“அவள் என்னைத் தேடுறாடா… ப்ளீஸ்…”
ம்ருதவ்வின் அம்முகம் கமலேஷை உருக வைத்திட்டது.
ஒவ்வொரு நொடியும் அவளுக்காக துடிப்பது என்ன மாதிரியான காதலிது என யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
அழைப்பு முடியும் தருவாயில் ஏற்று, ஸ்பீக்கர் ஆன் செய்து,
“ஹலோ” என்றான்.
எதிர்முனையில் ஆழ்ந்த அமைதி.
அவளின் அமைதி ம்ருதவ்வின் தவிப்புகளைக் கூட்டியது.
“ஹலோ… கேன் யூ ஹியர் மீ?” கமலேஷ் கேட்க,
“சாரி… ராங் நெம்பர்” என பட்டென்று அழைப்பை வைத்திருந்தாள் மித்யுகா.
இங்கு கமலேஷின் முகம் கடுப்பினை பிரதிபலிக்க, ம்ருதவ்வின் முகம் புன்னகை பூசியது.
‘காதலிக்க நீ கற்றுக்கொடுத்துவிட்டாய்,
காத்திருக்க உன் காதல் கற்றுக்கொடுக்கிறது.’
error: Content is protected !!