Post Views: 1,308
“ஹலோ..!” உற்சாகமான அதே நேரத்தில் சீண்டி வம்பிழுக்கும் வாத்சல்யனின் குரல்
“சொல்லுங்க..” சலனமற்று பேசினாள் சந்தானலஷ்மி.
“ஈவினிங் எப்ப ஆபீஸ் முடியும்.. நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்..!”
காலையில் கோபித்துக் கொண்டு வந்ததற்காக தன்னை சமாதானப்படுத்த அழைத்திருக்கிறான் என அவளுக்கு புரியாமல் இல்லை. சொந்தங்களும் இந்த சமுதாயமும் தன்னை வேர் வரை வெட்டி காயப்படுத்திட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் கணவனின் அன்பும் அவன் செல்ல கொஞ்சல்களும் மட்டுந்தான் அவளை உயிர்ப்போடு வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
Advertisement
ஆனாலும் தன் வழிக்கு வராமல் நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறானே என்ற கோபம்.
“லேட்டாகும்னு நினைக்கிறேன்.. நான் ஆட்டோல வந்துக்கறேன் நீங்க வீட்டுக்கு போங்க..”
“பரவாயில்லை எவ்வளவு நேரமானாலும் நான் வெயிட் பண்றேன்..! வெளியில எங்கேயாவது டின்னர் முடிச்சிட்டு வீட்டுக்கு போகலாம்..”
Advertisement
“என்ன திடீர் கரிசனம்..?”
Advertisement
“நான் எப்பவுமே ஒரே மாதிரிதானடி இருக்கேன்.. நீதான் அடிக்கடி முறுக்கிக்கற..!”
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு..!”
“நீதான் வேணும்..! என் செல்லக் குட்டி..”
Advertisement
லஷ்மியின் இதழில் சின்னதாய் சிரிப்பு உதயமானதை அவன் அறிந்திருக்க நியாயமில்லை..
ஆயிரம் வேலைகளை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து மனைவியோடு பேசிக் கொண்டிருந்தான் வாத்சல்யன்.
அந்த குழந்தையின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அவன் மனைவியின் சந்தோஷம். காலையில் அவள் அழுது பேசிய கோலம் கண்களோரம் அப்படியே உறைந்து தேங்கி நிற்க.. வேலை ஓடவில்லை.. வெகு நாட்களுக்கு பிறகு உற்சாகம் வழிய ஓடிவந்து காருக்குள் அமர்ந்தவளை அந்த சந்தோஷத்தை சில நிமிடங்கள் கூட நீட்டிக்க விடாமல் இறங்கும்போது அழ வைத்துவிட்டோமென்ற குற்ற உணர்ச்சியே அவன் இதயத்தில் அதிகபட்ச வலியை தந்து கொண்டிருக்கிறது.
இங்கே அலுவலகம் வந்த பொழுதிலிருந்து நான்கைந்து முறை அழைத்து விட்டான். இணைப்பில் வராமல் போக்கு காட்டியவள்.. விடாமல் ஃபோன் அடிக்கவே வேறு வழியில்லாமல் எடுத்து பேசிக் கொண்டிருக்கிறாள்.
“ஆபீஸ் நேரம்..! உங்கள மாதிரி வெட்டி கதை பேச எனக்கு நேரமில்லை.. நிறைய வேலை இருக்கு..!”
“அப்போ.. நான் சும்மா வெட்டியா உட்கார்ந்துட்டு இருக்கேன்னு சொல்ல வர்றியா..?”
“அப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்க..! வேலை இருந்தா போய் பார்க்க வேண்டியதுதானே..? எதுக்காக தேவையில்லாம அனாவசிய பேச்சு..”
“என் பொண்டாட்டியை சமாதானப்படுத்தறதை விட எனக்கு அப்படி ஒன்னும் முக்கியமான வேலை எதுவுமில்லை..!”
“நல்லா ஐஸ் வைக்கறீங்க.. தலையை தடவி கொடுத்து கழுத்தை வெட்டற மாதிரி..”
“ஏன்டி இப்படி கொதிச்சு போய் வார்த்தைகளை கொட்டற சந்தா..! நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் நேரம் செலவழிச்சு சந்தோஷமா பேசி சிரிச்சு எவ்வளவு நாளாகுது.?”
“சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்..! நான் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன்..!” லஷ்மி உள்குத்து வைத்து பேசியதில்.. அவன் சில கணங்கள் அமைதி காத்தான்.
“நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோ சந்தா..! ஒரு கேள்விக்கெல்லாம் பதிலா என்னால ஒன்னுதான் சொல்ல முடியும்.. ஐ லவ் யூ.. லவ் யூ ஃபார் இவர்..! இப்பவும் நான் சொல்றேன் நீ என்ன செஞ்சாலும் நான் உன் கூட இருப்பேன்.. என் காதல் என்னிக்கும் மாறாது.. வேலை முடிச்சிட்டு ரிலாக்ஸா இருக்கும்போது மறக்காம எனக்கு கால் பண்ணு..!” மடமடவென பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டித்து விட சந்தான லஷ்மிக்கு என்னவோ போலானது.
அலைபேசியை மேஜை மீது வீசியெறிந்து விட்டு.. கண்கள் மூடி இருக்கையோடு சாய்ந்தான் வாத்சல்யன்..
‘சாரி கண்ணம்மா..! மனசை எவ்வளவு இரும்பாக்கி இதை செய்ய நினைச்சாலும்.. என்னால முடியலடி..! என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல..! பிளீஸ் எனக்கு நிம்மதியை கொடுடி சந்தா..! நீ இல்லாம நான் இல்ல.. அதுக்காக இப்படி ஒரு மாபாதகத்தை செய்யற அளவுக்கு எனக்கு துணிச்சலும் இல்லை..!’ முன் பக்கமாய் நகர்ந்து முழங்கையையும் மேஜை மீது ஊன்றி முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருக்க.. முக்கிய வேலையாக அவனிடம் கலந்தாலோசிக்க வந்த காரியதரிசி.. வாத்சல்யன் அமர்ந்திருந்த கோலத்தில்.. “சார் நான் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடட்டுமா..!” என அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனது அலைபேசி மீண்டும் இசை பாடியது..
அவன் மனைவி சந்தான லஷ்மிதான் இணைப்பில் வந்திருந்தாள்.. அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என அவனுக்குள் போராட்டம்..!
பழைய சங்கதியை பற்றி பேசி ஓவென கதறி அழுதால்.. அவனால் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க இயலாது.. காலையில் அவள் கண்ணீரோடு அழுதுவிட்டு போனதே இந்த நொடி வரை மனம் பாரமாகி ரணப்பட்டுக் கொண்டிருக்கிறது.. மீண்டும் எதையேனும் பேசி தான் அவளுக்கு மிகப்பெரிய அநியாயம் செய்வதாக குற்றம் சாட்டி அழ ஆரம்பித்து விட்டால் அவனுக்குள் எஞ்சியிருக்கும் மிச்ச திடமும் உடைந்து போகும்.
முழுதாய் ஒரு முறை அடித்து ஓய்ந்து மீண்டும் ராகம் இசைக்க ஆரம்பிக்கிறது அலைபேசி..
எதையும் யோசிக்காமல் சட்டென அழைப்பை ஏற்று “ஹலோ” என்றான்.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு.. மீண்டும் அவன் ஹலோ என்று குரல் உயர்த்தி கத்தவும்..
“இன்னைக்கு வேலை இருக்கா.. இல்ல ஃப்ரீயா இருக்கீங்களா..?” தயக்கத்துடன் நின்று ஒலித்த அவள் குரலில் வாத்சனின் புருவங்கள் உயர்ந்தன. அவள் குரலில் லேசான இலகுத் தன்மை தெரிய மெல்ல மெல்ல அவனிடம் நிம்மதி சிறகடிக்க தொடங்கியது.
“எக்கச்சக்க வேலை..! மூச்சு விட கூட நேரமில்லை..”
“அப்படி சொன்னவர்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி.. வெட்டி கதை பேசிட்டு இருந்தாரா..?”
“என்னடி வேணும் உனக்கு..?”
“நீங்க தான் வேணும்.. என் செல்லக் குட்டி..!”
“எனக்கு நிறைய வேலை இருக்கு.. நான் ஒன்னும் உன்னை மாதிரி வெட்டியா இல்ல.. ஃபோனை வைடி..”
“ரொம்ப முறுக்கிக்காத வாத்து..! பொண்டாட்டி கொஞ்சம் இறங்கி வந்துட்டா போதும்.. மறுபடி போய் உச்சாணி கொம்புல ஏறி உட்கார்ந்துக்க வேண்டியது..”
“இப்ப என்ன..! உன் கால்ல விழ சொல்றியா..?”
“ஏன் விழ மாட்டீங்களா..!” அவள் கேட்டதில் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டிருந்தவன்.. யாரோ ஊழியர் ஒருவர் கண்ணாடி கதவுக்கு வெளியிலிருந்து உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்க.. “ஐந்து நிமிஷம்..!” கண்களால் சொல்லிவிட்டு தன் உதட்டை விரல்களால் நீவியபடி தலை தாழ்ந்தான்..
“சொல்லுங்க மச்சான்..! கால்ல விழுவீங்களா மாட்டீங்களா..?”
“மச்சானா..?” அவன் குரலிலேயே சிறு குதுகலம் தெரிந்தது.
“ஆமா மாமோய்..! யோவ்.. கேட்டதுக்கு பதில் சொல்லுய்யா..!”
“விழமாட்டேன் போடி..!”
“ராத்திரி வருவீங்க இல்ல அப்ப கவனிச்சுக்கிறேன்..!”
“என்னடி செய்ய முடியும் உன்னால!”
“வந்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!” அழைப்பை துண்டித்து விட்டாள்.
ஐந்து நிமிடத்திற்கு முன்பு எப்படி சோகத்தில் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தானோ அதே தோரணையில்.. இப்போது வாய் கொள்ளா சிரிப்போடு.. தன்னை யாரும் பார்த்து விடக்கூடாதென முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறான்..
அவள் சந்தோஷம் இவன் நிம்மதி..!
இருவரும் இப்படி விளையாட்டாக சிரித்து பேசி எத்தனை நாட்களாகிறது..
“சந்தா.. சந்தா..!” என அவள் பெயரையே உச்சரித்தவனுக்கு மனைவியை பார்க்க வேண்டும் போலிருந்தது..
“சார்..!” இனி ஒரு நிமிஷம் கூட காத்திருக்க இயலாதென வேலை விஷயமாக பேசும் பொருட்டு வெளியில் நின்று தவித்துக் கொண்டிருந்தார் வாத்சல்யனின் காரியதரிசி..
“வாங்க சார் வாங்க உள்ள வாங்க..!”
அவன் அழைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவர்.. முன்பிருந்த சோக நிலையிலிருந்து முற்றிலுமாக நிறம் மாறி.. உற்சாகமாக சிரித்துக் கொண்டிருப்பவனை கண்டு ஆச்சரியப்பட்டு பிறகு பேச ஆரம்பித்தார்.
சந்தான லஷ்மிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் பொருட்டு இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக புறப்பட்டு அவளை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியே போய் வரலாமென நினைத்தான். ஆனால் அதிகமான வேலைப்பளு வாத்சல்யனை எதையும் யோசிக்கவிடாமல் இழுத்துக் கொண்டது..
அத்தனை வேலைகளும் முடிந்து அலுவலகத்திலிருந்து அவன் புறப்படும்போது மணி ஒன்பதை தாண்டியிருக்க.. இன்று தான் நினைத்ததை நடத்த முடியாத சோகத்தை எண்ணி பெருமூச்சு விட்டபடி காரில் ஏறினான்.
‘என்ன..? என் ராட்சசி.. இவ்வளவு நேரமா கால் பண்ணாம இருக்கா..? மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சோ!’ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அவளுக்கு அழைப்பெடுத்தான்..
“என்ன மச்சான்..!”
“என்னடி பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. காலையில பேசின பிறகு, நீ கால் பண்ணவே இல்லையே..?”
“நீங்க கூடதான் திரும்ப கூப்பிடல..!”
“நான் கொஞ்சம் பிஸியாகிட்டேன் கண்ணம்மா.”
“நானும் பிஸியாகிட்டேன் மாமோய்..!”
“என்னடி கல்யாணமாகி பத்து வருஷங்கழிச்சு மாமோய் மச்சான்னு செல்லப் பேரேல்லாம் களைகட்டுது..!”
“நூறு வருஷமான பிறகும் கூட எனக்கு பிடிச்ச மாதிரி செல்ல பேர் வச்சு விதவிதமா கூப்பிடுவேன்..! என்ன பிரச்சனைடா உனக்கு..?”
“இது நல்லா இருக்கு..!” அவன் சிரித்தான்..
“வளவளன்னு பேசாம ஜாக்கிரதையா ட்ரைவ் பண்ணி வீட்டுக்கு வந்து சேருங்க..”
“உத்தரவு மகாராணி..! இதோ வந்தேன்..!”
வறண்டு போயிருக்கும் நெஞ்சுக்குள் குளிர குளிர பனிக்கட்டியை கொட்டியது போல் இதமாக இருந்தது மனைவியின் கலகலப்பான பேச்சு..
சிரித்துக் கொண்டே காரோட்டினான் வாத்சல்யன்.
வீட்டுக்கு வந்து அறைக்குள் நுழைந்தவனை.. அடுத்த கணம் கூடையிலிருந்து கொட்டி தீர்த்த பூக்குவியலாக இறுக அணைத்து கொண்டாள் சந்தான லஷ்மி.
முகமெங்கும் முத்தமழை பொழிந்து அவனை திக்கு முக்காட செய்து விட்டாள்..
“என்னடி திடீர்னு..?” மனைவியின் சந்தோஷ பரிமாணத்தில் கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்தான் வாத்சல்யன்.
“ம்ம்.. புருஷனுக்கு முத்தம் கொடுக்கவும் கட்டி பிடிக்கவும் காரணம் வேணுமா என்ன..? திடீர்.. திடீர்னுதான் ஆசை தோணும்..! பிடிக்கலைன்னா சொல்லுங்க தள்ளி போய்டறேன்.”
“யாருக்கு பிடிக்கல..! திடீர் திடீர்னு இப்படி அதிர்ச்சி கொடுத்தா மனசு ஒரு மாதிரி ஜெர்காகுதுல்ல..!” என்றபடியே மனைவியை அணைத்தான்.
“இந்த இறுக்கம் போதலையே வாத்து..!”
“வாத்தா?” என தன் வலிமையைக் கூட்டி. அவளை முழுதாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மேலும் இறுக்கமாக கட்டி அணைத்தவன் இதோடு இதழ் சேர்த்து வன்மையாக முத்தமிட்டான்.
அன்ன ஆகாரம் மறந்து இருவரின் நீண்ட நாள் பிரிவுக்கு ஒரு முழுத் தீர்வாக அமைந்தது அந்த அழகான கூடல். நாணம் துறந்து கணவனின் தேவைகளை நிறைவேற்றி.. அவனை மோக வெள்ளத்தில் மூழ்கடித்து.. மூச்சு முட்ட முட்ட இன்ப சாகரத்தில் நனைய விட்டு கண்கள் சொக்க வைத்து கிறங்கடித்தாள் சந்தான லஷ்மி..
“தேங்க்யூ கண்ணம்மா..! ரொம்ப நாள் கழிச்சு சந்தோஷமா இருக்கேன்.. லவ் யூ சோ மச்..! பொண்டாட்டி..!” அவள் முகமெங்கும் முத்தமிட்டு தனது நன்றி பெருக்கை உணர்த்தினான் வாத்சல்யன்.
வழிந்தோடும் வேர்வையும்.. நெஞ்சுக்கூடு ஏறி இறங்கும் வேக மூச்சுக்களுமாக ஒரே போர்வைக்குள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி முகம் பார்த்திருந்தனர்.
“நான்தான் உன்னை ரொம்ப நோகடிச்சுக்கிட்டே இருக்கேன்..!”
“வேண்டாம்..! அதைப் பத்தி இனிமே பேச வேண்டாம்.. நமக்கு இந்த சந்தோஷம் போதும்.. குழந்தை கடவுளா பார்த்து கொடுக்கற வரம்.. நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ அது நடக்கட்டும்..! எனக்கு நீங்க மட்டும் போதும் வாத்சா..! உங்களுக்கு நான் குழந்தை.. எனக்கு நீங்க குழந்தை..! உங்க நிம்மதியை விட எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை..!”
முகத்தை நிமிர்த்தி தன் கண்களை பார்க்கச் செய்தான் வாத்சா!
“நிஜமாத்தான் சொல்றியா சந்தா..?”
“மனசார சொல்றேன். நமக்கு அந்த குழந்தை வேண்டாம்.! இதனால எனக்கு பெருசா வருத்தமில்லை.. சொல்லப்போனா இப்பதான் நிம்மதியா இருக்கு. எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மனசு லேசா இருக்கு.!” சிரித்துக் கொண்டே அவன் மார்புக்குள் ஆழமாய் புதைந்து கொள்ள..
வாத்சா தீவிர யோசனைக்குள் சென்றிருந்தான். இந்த பத்து வருட காலத்தில் மனைவியின் தலை முடி முதல் கால் நகம் வரை அறிந்திருந்தவனுக்கு.. இதை அவள் முழு மனதோடு சந்தோஷமாக சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இல்லை.
தொடரும்.
eanda ivalo nalavangala irukinga……….ivunga love bonding pakum pothu romba alaga iruku 🥹🥹🥹🥹😍😍😍😍😍🥹🥹🥹🥹😍😍😍😍😍
என்ன ஒரு அழகான புரிதல் ரெண்டு பேருக்கும் இடையே இந்த மாதிரி துணை அமைவதெல்லாம் வரம் தான் 🥹🥹🥹
ஆனா இந்த மாதிரி நல்ல உள்ளங்களை தான் கடவுள் ரொம்ப சோதிக்குறாங்க 🤧🤧🤧
நல்ல அற்புதமான கணவன், மனைவி இவங்க, அப்புறம் ஏன்தான் இந்த கடவுள் இவ்வளவு சோதனைகள் தர்றாரோ
போதும் இப்படியே சந்தோஷமாக இருங்க, குழந்தை இல்லனா என்ன வாழ்க்கை இல்லையா?
Avaloda santhosam
Ivanoda nimadhi 😍😍😍😍😍