Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

வேணு கானமிது 2.1

அத்தியாயம்: 2
ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!


Advertisement

தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி!

Advertisement

என்ற பாடல் வரிகள் கோயிலில் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்தாலும் எழ மனமில்லாமல், விழிகளை மூடி சயனத்தில் இருந்தாள் சுருதிகா.

Advertisement

பாடலின் வரிகளை உள்வாங்கி, மனக்கண்ணில் சிவனைக் கொண்டு வந்து வணங்கியவள், நேற்று எதிர் வீட்டில் நடந்தேறிய நிகழ்வுகளை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

கதவைத் தட்டித் தட்டிப் பார்த்த விக்ரமை, ரிதன்யாவின் அக்காள் மைதிலியின் கணவனும் அந்த ஏரியாவின் சப் இன்ஸ்பெக்டருமான மாரிச் செல்வம் வந்து இழுத்துச் சென்றான்.
“மாரி, மாப்ள மேல கேஸ் எதுவும் போட்டிடாத. நான் சொல்லித்தான் வந்தாரு.” என்ற உரிமையான அழைப்பு மாரிச் செல்வம் அவரின் உடன்பிறப்பின் மகன் என்பதால் வந்தது.
“மகளையும் மனைவியையும் பாக்கணும்னு சொல்லி மில்லுப் பக்கம் வந்தாப்ல. தப்பு பண்ணிட்டேன் மாமா. இனி செய்ய மாட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டாப்ல. ரெண்டு பேரையும் பேச விட்டா பிரிஞ்சிருக்குற குடும்பம் சேந்திடும்னு நினைச்சு வரச் சொன்னேன். ஆனா நான் பெத்த கழுதை இப்படி அசிங்கப்படுத்தி மானத்த வாங்கும்னு நான் நினைக்கவே இல்லை.” என்றவர் மகன் தனபாலனுக்கு அழைத்து உடனே வரும்படி பணித்தார்.
குடும்பமே இன்று ரிதன்யாவை உண்டு இல்லை என்று செய்து விடும் உத்வேகத்தில் இருக்க, மாரிச் செல்வம், விக்ரமின் காதில் எதுவோ கூறினான். ஒரு நொடி அவனின் முகம் அதிர்ந்து பின் இயல்புக்கு வந்தது.
இது எதையும் கவனியாது, “மன்னிச்சிடுங்க மாப்ள. இன்னும் அவளுக்கு கோபம் குறையல போல. அதுக்காக எம்பொண்ண கை விட்டுடாதீங்க மாப்ள.” என்று அண்ணாமலை விக்ரமைக் கெஞ்சினார்.
“இருக்கட்டும் மாமா. அவளோட கோபம் என்னைக்கு குறையுதோ அன்னைக்கு எங்கிட்ட வரட்டும். அவளுக்காக நான் எவ்ளோ நாள்னாலும் காத்திருப்பேன். வருவான்னு நம்பிக்கை இருக்கு. நீங்க எல்லாரும் தான் இருக்கீங்கள்ல. அனுப்பி வைப்பிங்க.
என்ன இருந்தாலும் உங்க மக வாழணுங்கிற எண்ணம் உங்களுக்கும் இருக்கும் தான. புருஷன் கூட இருக்குறது தான் கௌரவம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். வரட்டும்… அதுவரை நான் எம்பொண்ண பாக்குறதுக்கு மட்டும் அனுமதி வேணும் மாமா. இந்த ரெண்டு மாசத்துல என் தங்கத்த பாக்காம எப்படித்தான் உயிரோட இருந்தேனோ!” என்றவன், கௌரவம் என்று வார்த்தைகளில் மறைமுக மிரட்டலை வைத்து, வடிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அகன்று விட, தனபாலன் வந்து சேர்ந்தான்.
“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? அதான் கட்டுனவன் வந்து கூப்பிடுறான்ல! போய்த் தொலைய வேண்டியதுதான். இப்படியே காலம் முழுக்க இருந்திடலாம்னு நினைக்கிறியா? ஆம்பள, பொண்டாட்டி இல்லன்னா கிடைக்கிறத தின்னுட்டு, யாரும் வேணாம்னு ரோட்டுல கூட படுத்துப்பான். உன்னால முடியுமா! அதுவும் வயசுப் பொண்ண வச்சிட்டு…
நாட்டுல நடக்காததையா செஞ்சிட்டான். அப்படியே பண்ணிருந்தாலும் அவன் கூட இருந்து நீ சரிக்கட்டிருக்கணும். இப்படி விவாகரத்து, கோர்ட்டு, கேஸ்ன்னு உன் வாழ்க்கைய கெடுத்தது மட்டுமில்லாம! நம்ம குடும்பத்து கௌரவத்தையும் கூண்டுல ஏத்திருக்க கூடாது.
நடந்த அத்தனையையும் மறந்திட்டு, ஒழுங்கா புருஷங்கூட சேந்து வாழுற வழியப்பாரு. உனக்கும் உம்பிள்ளைக்கும் தண்டச் சோறு போடுற அளவுக்கு இங்க யாருக்கும் வசதி கிடையாது! பொட்டப் பிள்ளைய பெத்து வச்சிருக்க. அதுவும் இன்னைக்கி குத்தவைக்கா நாளைக்கி குத்தவைக்கவாங்கிற மாதிரி இருக்கு. அதுக்குப் படிப்பு, கல்யாணம் சீரு, சடங்குன்னு எவ்ளோ செய்ய வேண்டி இருக்கு. பெத்த அப்பன் இல்லாம எதுவும் உன்னால முடியாது. தெரிஞ்சுக்க.”
“நீ செய்… உங்கூடப் பிறந்தவ தான நான்! செஞ்சா தப்பில்ல.” என்ற ரிதன்யாவை ஆத்திரத்துடன் தனபாலன் முறைக்க,
“அவன மாப்பிள்ளையா பாத்து எனக்குக் கட்டி வச்சது நீயும் அப்பாவும் தான். அதுக்காகவே நீங்க ரெண்டு பேருமே எனக்கும் எம்பிள்ளைக்கு செஞ்சி தான் ஆகணும். ஒழுங்கா மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கத் துப்பில்லன்னா காலம் முழுக்க பாத்து தான் ஆகணும்.
நான் கேட்டேனா! எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்காடான்னு. அதுவும் டிகிரி படிப்பக் கூட முழுசா முடிக்காத என்னை, கண்ட காரணம் சொல்லி மணமேடைல உக்கார வச்சது நீங்க தான். அதுக்கான பழி பாவமும் உங்கத்தான வந்து சேரணும்.
நான் ஒன்னும் எவனையோ காதலிச்சி ஓடிப் போய் கல்யாணம் பண்ணல. ஒட்டு மொத்தமா தலைமுழுக. நீங்க கூட்டிட்டு வந்த தறுதலைக்கு கழுத்த நீட்டுனேன். அந்தப் பாவத்துக்கு என்னால முடிஞ்ச அளவு போராடிட்டேன். இனியும் என்னால முடியாது. இதுல என்ன தப்ப கண்டுட்ட நீ?” என்றாள் அழுத்தமான குரலில்.
“இப்படித்தான் பல்லக் கடிச்சிட்டே மாப்ள கிட்டயும் பேசுவா போல. முசுடு.” என்று முணுமுணுத்த தேன்மொழி,
“அதெல்லாம் எம்புருஷனும் மாமாவும் நல்லாத்தாம்மா விசாரிச்சு கட்டி வச்சிருக்காங்க. என்னைவிட சிறப்பாத்தான் கிடைச்சது உனக்கு. என்னைய மாதிரி ஒன்னுக்கு ரெண்டு நாத்தனார் கிடையாது. மாமியார் கொடுமையும் கிடையாது. இதுல தனிக் குடித்தனம் வேற.
நான் பாத்த வரைக்கும் உங்கண்ணன மாதிரி பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கிற பழக்கமும் அந்தண்ணனுக்கு கிடையாது. நீ என்ன சொன்னாலும் சரி சரின்னுட்டு போற தங்கமான ஆளு.
 இப்படிப்பட்ட நல்ல மாப்ள கிடைக்கிறது இந்தக்காலத்துல எவ்ளோ கஷ்டம்னு தெரியாமா! உனக்கு அப்படி ஒருத்தன தேடிப் பிடிச்சுக் கொண்டு வந்தா! வாழ வக்கில்லாம விவாகரத்து வாங்க, கோர்டுக்கு போய் தாலிய கலட்டிக் குடுத்திட்டு வந்த உன்னைய ஆரத்தி எடுத்து கஞ்சி ஊத்தணுமாக்கும். உனக்கு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகத் தெரியல. சுருக்கமா சொல்லணும்னா புருஷங்கூட வாழத் தெரியாத பொம்பள.” என்று சத்தமாக நொடிக்க,
“ஓ… எங்கண்ணன கல்யாண பண்ணி குடும்பம் நடத்துக்கு முன்னாடி, கெட்டிக்காரத்தனமா வாழ்றது எப்படின்னு யார்கூடயாவது வாழ்ந்து பயிற்சி எடுத்து, எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வந்திருப்பீங்க போலயே! அட்ரஸ் இருந்தா குடுங்க. நானும் போய் கத்துக்கிட்டு வர்றேன்.” என்க, தேன்மொழி மலுக்கென கண்ணில் நீரை வைத்துக் கொண்டு கணவனிடம், “பாருங்கங்க எப்படி பேசுறான்னு!” என்று முறையிட,
“இந்த வீட்டுல வாழ வந்த பொண்ணு நீங்க. உங்க அதிகாரத்தையும் ஆணவத்தையும் காட்ட வேண்டியது எங்கண்ணே கிட்ட மட்டும் தான். எது ஓதுறதா இருந்தாலும் அவன் காதுல ஓதுங்க. அந்த மூளை இல்லாத முட்டா முண்டம் உங்க வாயா எங்கிட்ட பேசட்டும். நான் அவன்ட்ட பேசிக்கிறேன். இப்படி நேரடியாக எங்கிட்ட பேசுனா வேற மாதிரி தான் பதில் குடுப்பேன்.” என்றவள்,‌
“இந்த வீட்டுல எனக்கும் பங்கு இருக்கு. நானும் இந்த வீட்டு வாரிசு தான். என்னைப் பெத்ததும் நீங்க தான். கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா, நான் உங்களுக்கு பிறந்தவ இல்லன்னு ஆகிடுமா!. எனக்கு இந்த வீட்டுல இருக்க முழு உரிமையும் உண்டு.” என்றவள் தன் அண்ணனின் முன் சென்று,
“நான் கை நிறைய சம்பாதிக்கிறேன். நீங்க ஊத்துற கஞ்சிக்கு வழியில்லாம நான் இங்க இல்லை. எம்பொண்ணையும் என்னையும் பாத்துக்க என்னால முடியும். அவன் துணை இல்லாமலேயே எங்களால வாழ முடியும்.” என்று பதிலுக்குப் பதில் பேச, தனபாலனும் பேசினான்‌.
அதன் பின் பலத்த சண்டை ஆரம்பமானது. கணவனுடன் சேர்ந்து வாழ் என்று அப்பா, அண்ணன், அக்கா என்று மூவரும் அறிவுரை கூற, அதை ஏற்க மறுத்தவளிடம் ஆட்டமாக ஆடித் தீர்த்து விட்டனர்.
வழமைபோல் தெருவே வாசலில் அமர்ந்து அந்தக் கேளிக் கூத்தைப் பார்த்து ரசித்தது. சுருதிகாவும் கேட்டாள் தான். ஆனால் ரசிக்கத் தான் முடியவில்லை.
மனம் கனத்தது. ‘அன்று நீ செய்த செயலால் தான் இன்று ரிதன்யாவின் வாழ்க்கை வாடிக் கொண்டிருக்கிறது’ என்று மனசாட்சி குத்த, குற்ற உணர்வு அவளைக் கொன்று தின்றது.
அவளின் வாழ்க்கை நட்டாற்றில் நிற்க தானும் காரணமானோமே என்று மருகினாள்.
எதையும் மாற்ற முடியாத கடந்து சென்ற காலம் என்பது காற்றில் கரைந்த கற்பூரம் போன்றது. திரும்ப கிடைக்காது. ஆதலால் அதை நினைத்து வருந்தாது திருத்த முடிந்த எதிர்காலத்தைத் திட்டமிடு என்று புத்தி சொல்ல, என்ன செய்து அவளின் வாழ்க்கையைத் திருத்துவது? என்ற யோசனையோடு வெகு நேரம் கிடந்தாள்.
மணி ஏழை நெருங்கும் நேரம், சேம்பல் முறுத்துக் கொண்டு கூடத்திற்குச் செல்ல, “எழுந்திட்டியா! நானே எழுப்பி விடணும்னு நினைச்சேன். இவ்வளோ நேரமாவா பொம்பளப்பிள்ள தூக்குறது! வெள்ளன எழுந்து பழக வேண்டாமா… நாளைக்கி போற வீட்டுல என்னென்ன பேச்சு வாங்கப் போறியோ!”
சரியாக வளர்க்கவில்லை என்ற பழிச் சொல், எங்கே தன்மீது விழுந்து விடுமோ! என்ற கவலை அவளின் தாய் மனோகரிக்கு.
அவளின் மனமோ, ‘முதல்ல ஒரு கல்யாணத்தப் பண்ணி வைங்க. அப்றம் இந்தப் பேச்சு வாங்குறேனா அந்தப் பேச்சு வாங்குறேனா எந்த பேச்சு வாங்குறேன்னு பாருங்க.’ எனக் கவுண்டர் கொடுக்க, தன் பேச்சைக் கேட்டு அசையாது நின்ற மகளிடம்,
“என்ன மசமசன்னு நிக்கிற! போய் வெளக்கமாத்த எடுத்து வாசலடியக் கூட்டி, தொளிச்சு விடு.” என்று கட்டளையிட்டார்.
“லீவ் நாள்ல கூட நிம்மதியா இருக்க விடாது இந்தம்மா. என்னத்தையாது செஞ்சிட்டே இருக்கணும் இதுக்கு.” என்று வேலை வாங்கும் தாயை வாய்க்குள் முணுமுணுத்தபடி, கூட்டிப் பெருக்கி, சின்னதாய் புள்ளிக் கோலம் போட்டு முடிக்க,
“அப்படியே கடைக்கும் மொற வாசல் பண்ணிட்டு, திறந்து வச்சி செத்த நேரம் கவனிச்சுக்க. நான் சமையல முடிச்சிட்டு வாரேன். மாப்ள காலைல சாப்பாட்டுக்கு வர்றாறாம். இப்ப சொல்றா மஞ்சு. என்ன பண்றது!” என்று காபி டம்ளரை வாசலில் வைத்தவர், மருமகனுக்கு விருந்தாக்கும் மும்மரத்தில் பரபரத்தார்.
ஹாலில் படுத்திருந்த மகனை உசுப்பி, “கேசவா!! டேய் கேசவா! கறி வாங்கிட்டு வா டா. சால்னாக்கு எலும்பும் சதையுமா கால் கிலோ வாங்கிக்க. இட்லிக்கு கொத்துக் கறி அரைக்கிலோ. அப்றம் பிரியாணிக்குப் போடுற மாதிரி கொழுப்போட ஒரு கிலோ. தொடைக் கறியா பாத்து வாங்கு. இல்லன்னா சக்க கறிய போட்டு ஏமாத்திடப் போறான். கோழியவும் ஒரு கிலோ பிடிச்சிட்டு வா டா. பொரிச்சு வைக்கணும்.” என்று வாங்க வேண்டியதைச் சிட்டைப் போட்டுக் கொடுத்தணுப்ப,
“அக்கா… காசு…” என்று அவளின் முன் வந்து நின்றான் கேசவன்.
“விருந்து எவனுக்கோ வைக்க, காச நான் அழகணுமா?” என அவளின் மனம் இடித்தாலும், தம்பியிடம் சில ஐநூறு ரூபாய் தாள்களைத் தந்தாள். அவன், லட்சங்கள் மதிப்புடைய தன் பைக்கை முறுக்கிக் கொண்டு பறந்தான் காற்றில்.
கல்லூரி கூட முடிக்கவில்லை. ஆனால் ஸ்போர்ட்ஸ் பைக்… அதுவும் லகரத்தைத் தாண்டிய விலையில்.
சென்ற வருடம் நண்பர்களுடன் பந்தாவாக ஊர் சுற்ற வேண்டி, அவன் அடம்பிடித்துக் கேட்க, மனோகரியின் சிபாரிசில், தங்கை மஞ்சுளாவின் தேர்வில், சுருதியின் காசில் வாங்கப்பட்டது அந்த பைக்.
குனிந்து தன் உடையைப் பார்த்தாள். தீபாவளிக்கு, நூறு ரூபாய் என்று வாங்கிய பாலிஷ்டர் நைட்டி. அடிக்கும் வெயிலுக்கு, வடியும் வியர்வையை உறியாது, தோலைப் புண்ணாக்கி வைத்திருந்தது. காட்டன் நைட்டி வாங்க இயலாத அளவிற்கு வறுமையா என்று கேட்டால், ஆம்… வறுமை தான்… பணம் பற்றாக்குறையால் இல்லை. மனப் பற்றாக்குறையால் வந்த வறுமை.
அந்த வீட்டில், அவள் தான் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரே ஜீவன்.
உடன்பிறந்தவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுத் தரும் பொறுப்புள்ள மூத்த பெண். ஆதலால், தனக்கு என்று சிறு குண்டூசியை வாங்கக் கூட மனம் இல்லாது போய்விட்டது.
“நீ இந்தக் குடும்பத்துக்கு ஓடா உழைக்கிறப் பாப்பா. உனக்குன்னு என்ன வேணும்?” என்று அக்கறைகாட்டி வாங்கி கொடுத்த, காலம் சென்ற தந்தைக்காக மனம் ஏங்கியது.
ஏழு ஆண்டுகளாகிறது, அவள் வேலை பார்க்கத் தொடங்கி. வேலைக்கு என்று செல்லத் தொடங்கிய நாளில் இருந்து, வாங்கும் சம்பளம் மொத்தத்தையும் வீட்டுச் சூழ்நிலை காரணமாக தந்து கடமையில் பங்கேற்றவள், குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகித் தான் இருந்தாள்.
தந்தை இருந்த வரை எல்லாம் அவர் பார்த்துக் கொண்டார். புது உடைகள் உட்பட அவளுக்குத் தேவையான பலவும் வந்து சேர்ந்தது. அவர் இறப்பிற்குப் பின் வருமானத்தைக் கொடுத்து விட்டு கேட்பாரற்றுக் கிடக்கிறாள்.
இதுவரை தோன்றாத வெறுமை,‌ நேற்று கேட்ட ரிதன்யாவின் ஆவேசக் குரலால் தோன்றியது.
‘காலம் முழுக்க உங்க கௌரவத்தக் காப்பாத்த என்னோட கடமைய மட்டும் செஞ்சிட்டே இருக்கணுமா? என்னோட ஆசைகள ஏக்கங்கள அடக்கி வைச்சி வைச்சி… என்ன சாதிச்சிட்டேன் நான். இத்தனை நாள் வரை உங்க எல்லாருக்காகவும்னு பாத்து பாத்து தான் நான் வாழ்ந்தேன்! ஆனா எனக்காக யோசிக்க இங்க யாருமே இல்லையே. என்னோட உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் மதிக்க உங்க யாருக்கும் தோனவே இல்லையே. என்னையே சுரண்டி, என்னோட சுயத்த அழிச்சிட்டு அவனுக்குப் பொண்டாட்டியா வாழ எனக்கு விருப்பமில்ல.’ என்ற கணீர் குரல் சுருதிகாவின் சிந்தனையைத் தூண்டி விட்டது.
‘எனக்காக நான் எப்பொழுது வாழ்வது? என் உணர்வுகள் எப்போது மதிக்கப்படும்?’ என்ற வார்த்தையில் வெகுவாக யோசித்தாள். நான் எனக்காகவா வாழ்கிறேன் என்ற சுய அலசலில் ஈடுபட்டது மனம்.
அந்தக் குடும்பம், கௌரவத்திற்காக ரிதன்யாவை பலி கொடுத்து விட்டது. தன் குடும்பம் அவர்களின் சுயநலத்திற்காக பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தன் குடும்பத்தின் தேவை தானும், தன் சந்தோஷமும் அல்ல, தன் சம்பாத்தியம் மட்டும் தான் என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டியது.
கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!