Skip to content
Post Views: 887
வானம் பார்த்து தன் உலகில் நின்றவளை யாரோ வரும் சத்தம் கலைக்க மாடிப் படியின் பக்கம் திரும்பினாள். பூவினியின் அம்மா மல்லிகா கையில் ஒரு பெரிய குவளையுடன் மூச்சிரைக்க மேலேறி வந்து கொண்டிருந்தார்.
“என்ன பூவினி செய்யிற? பனியில நிக்காதன்னு தெனமும் சொல்லனுமா? ஒனக்கு சளி பிடுச்சா தம்பிக்கும் பிடிக்கும். இந்தா, மொதல்ல இந்த பாலக் குடி.”
Advertisement
“சும்மாதாம்மா வந்தேன். செத்த காலாற நடக்கலான்னு. வீட்டுக்குள்ளேயே சும்மா இருக்கது என்னமோ செய்யிது.”
“என்னத்த செய்ய, வெளிய தெருவ போம்மான்னு சொல்லுற நெலமைலயா நம்ம இருக்கோம். மாசம் ரெண்டாகல அதுக்குள்ளே இந்தா மினிக்கிகிட்டு சுத்துறான்னு எவளும் சொல்லுவா.”
Advertisement
Advertisement
“ம்மா, போதும். இதுக்குத்தே நா வாயே தொறக்குறதில்ல. அவங்க சொல்றாங்களோ இல்லையோ, யாரும் என்னவும் சொல்லுவாங்கன்னு பயந்தே நீங்க ரொம்ப சொல்றீங்க. அதான் எனக்கு இன்னமும் கடுப்பாகுது” சொன்னவள் சத்தம் கொஞ்சம் உயரவும், “ஒசக்க இருந்துக்கிட்டு என்னத்துக்கு இப்ப இம்புட்டு இரையிற. பைய்ய பேசு, இல்ல கீழ போ.” என்றார்.
“ம்மா..” என்றவளுக்கு சொல்வதற்கு ஓராயிரம் வார்த்தைகள் இருந்தாலும் ஒன்றுகூட குரல்வலையைத் தாண்டி வார்த்தைகளாக வடிவம் பெறவில்லை. “பாலக் குடுங்க.” என வாங்கி மெல்ல பருகத் தொடங்கினாள். அம்மா தந்த பசும்பாலில் இதமான சூடு இவளின் உள்ளச்சூட்டை சற்றே தனித்தது.
Advertisement
“ம்மா, இங்க நெட்டுலிங்க மரம் நெறய இருந்துச்சுல்ல, வெட்டீட்டாங்களா? இருக்க ஒன்னும் பட்டுப் போனப்புல்ல இருக்கு.”
“அதுவா, அய்யா போகவும் ஆச்சி மட்டும் இப்ப தனியாத்தே இருக்காகல்ல. அவுகளுக்கும் முன்ன மாதிரி வேல பாக்க முடியுதில்ல. வேலைக்கு வருவாளே வேணி, அவளும் மகன் வீட்டுக்குப் போயிட்டா. அதேன் ஆச்சி மரமெல்லாம் வெட்டி சீரு பண்ணிட்டாக. அவுக மக அமெரிக்கால இருக்கால்ல அந்த புள்ளதே என்னத்துக்கு எல்லாத்தையும் வெட்டுறியன்னு சத்தம் போட்டாலாம். அவளுக்காக ஒத்த மரத்த மட்டும் விட்டுட்டமுன்னு சொன்னாக ஆச்சி.”
“பட்டமரத்த விட்டு?”
“எது பட்டமரம்? இருட்டுல ஒனக்கு அப்புடித் தெரியுது. அப்பியல்ல (ஐப்பசி) எல உதுரவும் அப்புடித் தெரியுது. தை பொறக்கவும் பாரு. எல்லாம் பாக்குற நம்ம கண்ணுலதே இருக்கு. கால நேரம் கூடி வந்தா அதுவும் தலைச்சு நல்லா வளந்து வரும்.”
அம்மா சொன்னது மரத்தை மட்டுமல்ல தனக்கும்தான் என்று தெரியாத அளவுக்கு பூவினி ஒன்றும் முட்டாள் இல்லை. ஆனாலும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் மனது வள்ளியம்மாள் அன்றொரு நாள் சுதாவிடம் சண்டையிட்டதை நினைத்துப் பார்த்தது.
பூவினி மகிழனைத் தூங்க வைத்துவிட்டு முற்றத்திலிருந்து வெளியே வருவதற்கும் வள்ளியம்மாள் சுதாவிடம் “சும்மாவா குமரனுக்கு பேசி முடுச்சீக. உங்க ஐயா சொத்துக்கு கணக்கு கேப்பாகன்னு நைசா பூவினிய புள்ளையோட குமரனுக்குத் தாட்டி விட்டுட்டீக. நாங்களும் எப்படியு சம்மதிச்சுருவோமுன்னு உங்களுக்குத் தெரியும். குமரனும் இளிச்சவாப் பய, வேணாங்கமாட்டான்னு தெரியுமுள்ள.” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் பேசிய சொற்கள் அனைத்தும் தெளிவாய் பூவினியின் காதுகளில் விழவும் கால்கள் இரண்டும் தன் போல வேலை நிறுத்தம் செய்திருந்தது. ஆக, இந்தக் கல்யாணம் அன்பினாலோ இல்லை இவள் மேலான பிரியத்திலோ இல்லை. மாறாக, சொத்துக் கணக்கு போல எதோ ஒன்றில் தானும் பகடை ஆகி இருக்க, தன் வாழ்க்கையை தன்னால் பார்க்க முடியும் என்ற பூவினிக்கு புது வைராக்கியமே வந்தது.
அன்று இரவே பூவினி முதல் முறையாக மல்லிகாவிடம் இந்தத் திருமணம் தனக்கு வேண்டாம் என்று முடிவாக மறுத்திருந்தாள். அவள் வேண்டாம் என்று சொன்னதிலிருந்து கண்ணுக்குத் தெரியாத பனிப் போரொன்று அவளோடு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் மல்லிகா. ஆனாலும் பூவினி சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.
“அம்மா, நா என்ன பேசுனா நீங்க என்ன பேசுறிய? மரம் பட்டுப் போனாப்புல இருக்குன்னு கேட்டேன். அதுக்கும் என் கல்யாணத்துக்கும் முடுச்சுப் போறீங்க. ஏம்மா?”
“பொம்பளப்பிள்ளைய பெத்து கட்டிக்குடுத்து அது இப்புடி வாழ்க்கைய தொலைச்சுட்டு வந்து நிக்கும் போது அம்மாவுக்கு பாக்க குளுகுளுன்னு இருக்குமோ? நிமிசத்துக்கு நிமிஷம் அடிவயித்துல பயம் கவ்வுது. நீ இளங்கன்னு. ஒனக்கு பயந்தெரியாது. படிச்சுருக்க. தனியா இருப்பமுன்னு சொல்லுவ. ஆனா நா? பத்தாவது தாண்டல. எனக்கு பயந்து கெடக்குமுத்தா”
“ம்மா, நா என்ன கேக்குறேன்? இப்ப எனக்கு கல்யாணம் வேணாம். ஒரு வேலைக்கு போய்ட்டு சுயமா எனக்குன்னு ஒரு வருமானம் வரட்டும் அதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதானேம்மா கேக்குறேன். ஏம்மா புரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க?”
“பொம்பளப்புள்ள படிக்க வேணா, தன் கால்ல நிக்க வேணான்னு சொல்ற அம்மா நா இல்ல. ஆனா கையில கெடச்சத விட்டுட்டு நானா கஷ்ட்டப்படணும்ன்னு சொல்ற முட்டாளா இருக்காதன்னுதே சொல்லுது. புரியுதா?“
“ம்மா, அவுக…” பூவினி மீண்டும் தொடரும் முன்னே, “பால் சுத்தமா ஆறிப்போச்சு. குடுச்சுட்டு வந்து படு. நாம்போயி ரஞ்சித்த பாக்கணும். எல்லா நா வாங்கி வந்த வரம், ரெண்டு புள்ளையும் இப்படி கெடந்து சீரழிக்கிதுக.” என்று புலம்பியபடி மல்லிகா கீழிறங்கிச் சென்றார்.
பூவினிக்கு அம்மாவின் சொற்கள் புரிந்தாலும் ஏற்கும் மனநிலை இருக்க வேண்டுமே. புரிதலுக்கும் ஏற்றுக்கொள்ளுதலுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. புரிதலில் எனக்கு எந்த சிரமங்களும் இல்லை. ஆனால் புரிந்த ஒன்றை ஏற்பது என்பது என்னுள் இயல்பாக நிகழ வேண்டிய ஒரு மாற்றம். அப்படியான ஒரு மாற்றம் நிகழ நாம் நம்மை தயார்படுத்த வேண்டுமே. இங்கே நான் இந்த மாற்றத்தையே விரும்பாத போது எங்கனம் அதை ஏற்க முடியும்?
பூவினிக்கு வினாவுக்கான விடை கிடைத்ததோ இல்லையோ நினைக்க நினைக்க தலைவலி மட்டுமே கிடைத்தது. இனி அம்மாவிடம் பேசுவது வீண் என தெளிவாக புரிந்த பின்னும் அடுத்து என்ன செய்ய எனும் முடிவுக்கு வர முடியவில்லை. ‘அப்பாவின் இளவரசி’ என்று ஆயிரம் முறை சொன்னாலும் சில நேரங்களில் அம்மாவிடம் மட்டுமே மனத்தைப் பகிர்தல் எளிதாகிறது. ஆனாலும் அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என எண்ணிக் கொண்டாள்.
நினைவுகளால் கெடும் தூக்கத்தைவிட நிதர்சனத்தை ஏற்க மறுக்கும் போது தூக்கம் மொத்தமாக கெடுவதோடு தூரமே நின்றுவிடுகிறது. அப்படியான ஒரு இரவு அன்று பூவினிக்கு. அவள் மனம் போலவே குழப்பத்தில் இருந்தது விடிந்த மறுநாளும். மழையும் வெயிலுமாக வானம் ஒரு தெளிவில்லாது இருந்தது.
காலையில் ஆறு மணிக்கே மகிழன் முழித்திருந்தான். அவனுக்குப் பாலூட்டி உடை மாற்றி அவனுக்கு தரையில் பாய் விரித்து அதற்கு மேல் பொம்மைகள் தொங்கும் அவனது விளையாட்டு மெத்தையை விரித்து அவனைக் கீழே கிடத்தினாள். மகிழனது வேலைகள் எல்லாம் முடிந்துதான் அவளுக்கு பல் துலக்கக்கூட நேரம் கிடைத்தது. அடுத்த பத்து நிமிடத்தில் தன்னை சுத்தம் செய்து வந்தவள் அவளின் அலமாரியின் முன்பிருந்த நிலைக்கண்ணாடியில் தன்னை ஒருமுறை மீண்டும் முடி முதல் அடிவரை பார்த்துக் கொண்டாள்.
கணவனுக்குப் பிடிக்கும் என்பதற்காகவே தன் நீண்ட கூந்தலை ரிப்பன் வைத்துப் பின்னிப் போட்டிருப்பாள். இன்று அதிலெல்லாம் அவளுக்கு நினைவிலேயே இல்லை.
அருகிருந்த எண்ணெயை எடுத்து கையில் ஊற்றவும் அந்த மகிழம்பூ வாசம் கூட மூச்சைக் கவ்விக் பிடித்தது.
அவள் மீதான எல்லா வாசமும் அவனது நேசத்தோடு மண்ணில் புதைந்து விட்டது போலொரு உணர்வு பூவினிக்கு.
ஆனால் கையில் ஊற்றிய எண்ணையை அவள் என்ன செய்ய என யோசிக்கும் நேரம் யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்க அவளின் அறையிலிருந்து வெளியில் வந்தாள் பூவினி.
மகிழம்பூவின் மனம் எங்கும் நிறைய அவளை நோக்கி நடந்து வந்தான் குமரன்.
எந்த முயற்சியும் இல்லாமல் சுவாசம் நிறைக்கும் இந்த பூ வாசம் போலவே இவர்களின் வாசமும் நிறையட்டும்.
error: Content is protected !!