Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் 22

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 22

அதிகாலை நான்கு மணி பாப்பம்மாள் தனது மகன் சிவராமன் மடியிலேயே தன் இன்னுயிரை விட்டார். அதுவரை சண்டையில் இருந்த அவரின் தங்கை குடும்பம் அம்மாவின் இறப்பில் சேர்ந்து விட்டது.

கங்காவிற்கு அருளின் அக்கா பேசியது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.அவன் மீது எந்த உணர்வும் இல்லை. இருந்தாலும் வீட்டில் வந்து கேட்பது தானே முறை.அது என்ன வீட்டை விட்டு ஓடி வர சொல்வது?அது ஒரு பெரிய கொலை குற்றம் போல தோன்றியது கங்காவிற்கு.

இந்த முறை பாட்டியின் இறப்பை விட, இந்த வார்த்தைகள் அவளுக்கு பயத்தை தந்தது.



Advertisement

கங்காவிற்கு பாட்டியின் இழப்பு கஷ்டமே. இருந்தும் அவருக்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தாள். தற்போது டீச்சர் ஆகிவிட்டதால், பாட்டியை போலவே வாய் பேசாத காது கேட்காத பிள்ளைகளுக்கு ஒரு பள்ளியை வருங்காலத்தில் ஆரம்பிக்க வேண்டும். இதுவே அவருக்கு செலுத்தும் அஞ்சலி என நினைத்துக் கொண்டாள் .

ஒரு புறம் சொந்த பந்தங்கள் துக்க வீட்டிற்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். முக்கிய சொந்தம் வர கொஞ்சம் தாமதம் ஆனதால் மாலை எடுக்க திட்டமிட்டனர்.

அதிகாலையிலேயே அவர் இறந்து விட்டதால் யாரும் சாப்பிட வில்லை. எடுக்கவும் மாலை ஆகும் என்பதால் பிள்ளைகளும், லட்சுமி, பானுமதியும் பின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர்.

Advertisement

திடீரென பானுமதி சிரித்தார். ஏங்க அக்கா சிரிக்கறீங்க? என்றார் லட்சுமி.

Advertisement

மாமியார் செத்துட்டாங்க நாம ரெண்டு பேரும் கறி சோறு சாப்பிட்டு இருக்கறோம்.இங்க பாரு சிக்கன் குழம்பு கட்டி கொடுத்து இருக்காங்க. வெளிலே தெரிஞ்சா மானமே போய்ரும். அங்கிருந்த தன் மகன் விக்கியிடம், “எங்காது சித்தப்பா கிட்டே சொல்லிறாதே! என்றார்.

அவருக்கு சிவராமனிடம் மரியாதை கலந்த பயம். அண்ணன் தம்பிகளுக்கு சண்டை வந்தால், அவங்க இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க. நாம ரெண்டு பேரும் ஒன்னாவே இருக்கனு லட்சுமி. நீங்களும் எப்பவும் ஒன்னாவே இருக்கனும் என பிள்ளைகளிடமும் சொல்லி வளர்ப்பார்.

மாலை ஆறு மணிக்கு அந்த புண்ணியவதியின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டது.

Advertisement

தன் அம்மாவின் இறப்பிற்கு அழுகாது அவரின் இறுதி சடங்கை முன்னிற்று நடத்திய சிவராமன். கங்காவின் கண்களுக்கு அழுத்தமானவராகவே தெரிந்தார். அவளுக்கு தெரியும் அம்மாமீது அப்பா எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்று. ஆனால் இன்று பெரியப்பா,அத்தை கூட அழ அப்பா அழாது திடமாக நின்று அனைத்தையும் கவனிப்பதை உள்வாங்கி கொண்டாள்.

பதினாறு நாள் காரியத்திற்கு மண்டபம் பிடித்து கறிவிருந்து வைத்தார் சிவராமன். யாரவது இறப்பிற்கு கறி விருந்து வைப்பாங்களா? என சொந்த பந்தம் குறைபட்டுக் கொண்டது.

எங்கம்மா நல்ல படியா வாழ்ந்து முக்தி அடைஞ்சிட்டாங்க. அதை நான் இப்படி சந்தோசமா வழியனுப்பி வைக்கறே. வந்தோமா சாப்பிட்டோமானு கிளம்பனுனு பதிலடி தந்தார்.

சரி சாவுக்கே கறி விருந்துன்னா உன் மக கல்யாணத்துக்கு கறி விருந்து போடுவ போலவே என்று வெற்றிலை கறை படிந்த சிவப்பு பல்லை காட்டி சிரித்தார் ஒரு பெரிசு.

எம் மக கல்யாணத்துக்கு உங்கள கூப்புடுவே வந்து பாருங்க. நடக்கறதுல மனுச பறக்கறதுல ப்ளைட் மிதக்கறதுலே கப்பல் இதை தவிர எல்லா தலவாழை இலைலே இருக்கும் என்றார்.

சொந்தபந்தங்கள் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். அன்றிரவு சிவராமன் வீடு வர வெகுநேரமாகியது லட்சுமியும் கெளசியும் களைப்பில் அயர்ந்து தூங்கி விட்டனர்.

கங்காவிற்கு அப்பாவின் குறட்டை சத்தம் கேட்காமல் தூக்கம் வரவில்லை. பன்னிரண்டு மணி தந்தையின் வண்டி சத்தம் கேட்க கதவை திறந்தாள். தந்தை வந்த தோரணையிலேயே அவர் ட்ரிங்ஸ் சாப்பிட்டு உள்ளார் என தெரிந்து கொண்டாள்.

அப்பாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக தூங்க செல்ல,கங்கா இந்தா ஆனியன் ரோஸ்ட் என்றார்.

அப்பா ட்ரிங்ஸ் பண்ணியதால் கோபம், எனக்கு வேண்டாம்ப்பா நீயே சாப்பிடு பசிக்கல, என உறங்க சென்றாள்.

இவர்களது உரையாடலில் லட்சுமி விழித்து கணவனிடம் சண்டை ஏதுக்கு குடிச்சுட்டு வந்திருக்க? என,

எங்க அம்மா என்னை விட்டுபோய்ருச்சு என கண்களில் நீர் வர கூறினார்.

ஆமா பதினாறு நாள் அழுகை வரலே தண்ணியடிச்சதும் வந்துருச்சா? ஒழுங்கா வந்து தூங்கு என்றார்.

உனக்கு விவரம் புரியாது.நானும் அழுதுட்டு நின்னா. எங்க அம்மாவை யாரு வழியனுப்புவா? அதா துக்கத்தை எனக்குள்ளே அடக்கிட்டே என்றார்.

சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு உறங்க சென்றனர்.

பள்ளியில் குழந்தைகளோடு சேர்ந்து மீண்டும் கங்கா ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டாள்.

அந்த குழந்தைக்களின் உலகம் வேறு. அவர்களது உலகத்தில் அம்மா, அப்பா, தங்கை,தம்பி தவிர அவர்களது ஆசிரியையான கங்காவையும் இணைத்துக் கொண்டனர்.

முதலில் அவர்களோடு ஒன்றுவது கங்காவிற்கு சிரமமாக இருந்தாலும், போக போக அம்மாவிற்கு க்ளிப் வாங்கினால்கூட அடம் பிடித்து எங்க மேமுக்கும் இன்னொன்னு வாங்கு என கங்காவிற்கு ஆசையாக வாங்கி பரிசளிக்கும் அளவிற்கு பிள்ளைகளோடு இணக்கமானாள் கங்கா.

பாடத்திட்டம் போக எதார்த்த உலகத்தையும் தன் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.

நாட்கள் இனிமையாக நகர்ந்தது கங்காவிற்கு. வாரத்தில் ஆறுநாட்கள் வேலை.ஞாயிறு மட்டும் விடுமுறை. அந்த நாளை ஆவலாக எதிர்பார்ப்பாள்.அந்தநாள் அவளுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக தோன்றும்.

ஏழு மணி அக்கா, தங்கை இருவரும் போர்வையை இழுத்து போட்டு தூங்கி கொண்டிருக்க,சிவராமன் ஃபேனை ஆப் செய்தார்.

ஏய் ‘சிரா’எதுக்கு ஃபேனை ஆப் பண்ணுனே?-கெளசி

சிவராமனுக்கு ‘சிரா’ என்ற செல்லப் பெயரும்.லட்சுமிக்கு ‘லட்சு’ என்ற செல்லப் பெயரும் கெளசியால் சூட்டப்பட்டது.

மணி ஏழு ஆகுது இன்ன என்ன தூக்கம்? எழுந்தரிங்க ரெண்டு பேரும் என்றார்.

கங்கா எழுந்து கொண்டாள்.கெளசி மீண்டும் ஃபேனை ஆன் செய்து தூக்கத்தை தொடர்ந்தாள்.

பிஸ்கட்டை காப்பியில் நனைத்து சாப்பிட்ட வாறே, சிவராமனுக்கு அன்றைய நாளிதழை படித்து காட்டினாள் கங்கா.

காலை உணவாக ஹோட்டல் மெனு போல சுடச்சுட பூரி, உருளை கிழங்கு மசாலா,வெண் பொங்கல்,சாம்பார் உடன் தேங்காய் சட்னியும்,உளுந்து வடையும் செய்து கொடுத்தார் லட்சுமி.

சாப்பிட்டு விட்டு மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டனர் மகள்கள் இருவரும்.

ஞாயிறு மதியம் மட்டும் சிவராமன் சமையல். அவர் சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.அந்த அளவ டேஸ்டாக சமைத்து தருவார்.

கெளசி எனக்கு பேல்பூரி செஞ்சு கொடுடி என கங்கா கெஞ்ச.. மாலையில் கெளசியின் கைவண்ணம் என ஞாயிறு அழகாக முடிந்தது.

சிவராமன் கங்காவிற்கு மாப்பிள்ளை அலசி ஆராய்ந்து.தன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளையை பிடித்து விட்டார்.

சும்மாவெல்லாம் மாப்பிள்ளை பிடிக்கவில்லை.அந்த மாப்பிள்ளையின் ஊருக்கு சென்று அவரை பற்றிய ‘ஏ டூ இசட்’ விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகுதான் தேர்வு செய்தார்.

மாப்பிள்ளை போட்டோவை கங்காவிடம் கொடுத்து,” கங்கா உனக்கு புடிச்சிருக்கா பாரு என்றார் சிவராமன்.

அவள் கையில் வாங்கி பார்ப்பதற்குள், கெளசி பிடிங்கி விட்டாள்.

ஐயே என்ன இப்படி ஒல்லியா இருக்காங்க?நான் எல்லா இவங்கள மாமானே கூப்பிட மாட்டே என்றாள்.

அப்பா நான் உன்கிட்ட என்ன சொன்னே நல்லா எழும்பு கடிக்கறே ராஜ்கிரண் மாதிரிதானே கங்காக்கு மாப்பிள்ளை பாக்க சொன்னே?

அவள் கூறியதும் கங்காவிற்கு ஒருவேளை நல்லா இல்லையோ என்ற எண்ணம்.அப்பா நீ யார பாத்தாலும் நான் கட்டிக்குவேன்.இந்த ஃபோட்டோ எல்லா வேண்டா.நான் நேரிலேயே மாப்பிள்ளை பாத்துக்கறே என்று கூறிவிட்டாள்.

அன்று மாலையே நகை எடுக்க கிளம்பியது குடும்பம்.புது மாடல் நெக்லஸ் எடுக்க சிவராமன் அது வேண்டா கங்கா,நைட் தூங்கும் போது மடங்கி ஒடஞ்சிரும் என்றார்.

தூங்கும்போது யாராச்சும் நகை போட்டுட்டே தூங்குவாங்கலா என்றார் லட்சுமி. உனக்கு ஒன்னும் தெரியாது ஓரமா உட்காரு என அனுப்பி விட்டார்.

“கங்கா, அப்பா எடுக்கறது எல்லாமே பழைய மாடல்டீ நீ எதும் சொல்லாம மண்டைய ஆட்டிட்டு இருக்கே” என காதை கடித்தாள் கெளசி.

அப்பா என்ன வாங்கி தருதோ அது எனக்கு போதும் என்றாள். அவள் பதிலில் கோபத்தோடு அம்மாவிடம் சென்று அமர்ந்து கொண்டாள் கெளசி.

நாலுபவுன் தாலிக்கொடி வாங்கி, அதை கங்கா கழுத்தில் அணிவித்து பார்த்தார். அவர் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியை இதுவரை கங்கா பார்த்து இல்லை.

காலை கங்காவை பெண் பார்க்க கோவிலுக்கு மாப்பிள்ளை வருகிறார்கள்.தனது புகுந்த வீட்டினருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார் சிவராமன். அப்படியே கங்காவிற்கு எடுத்த நகைகளையும் காட்டினார்.

தாலிக்கொடி மாப்பிள்ளை வீட்டார் தானே எடுக்க வேண்டும் என்றார் அவிநாசியப்பன்.

என் கல்யாணத்துல கொடி வாங்க காசு இல்லாம நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்.அந்த கஷ்டத்தை என் மருமகன் படக் கூடாது. அதான் தாலிக் கொடி வாங்கிட்டே. மாங்கல்யம் மட்டும் அவங்க வாங்கட்டும். அதுக்கும் காசு இல்லனா அதையும் நானே வாங்கி தருவேன் என்றார் சிவராமன்.

அடுத்தநாள் காலை ஆகாய வண்ணநிற புடவை,காதுகளுக்கு ஜிமிக்கி கம்மல், கழுத்திற்கு இரண்டு பவுன் ஜெயின் தலைநிறைய மல்லிகை பூவுடன் கோவிலுக்கு அழைத்து செல்லபட்டாள் கங்கா.

இவளை பார்த்தும் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடித்து விட்டது. மாப்பிள்ளை தனியே பேச கேட்க, சிவராமன் வந்து கங்கா,அவருகிட்ட உனக்கு எதாவது கேட்கனுனு இருந்தா கேட்டுக்கோ என்றார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சரிப்பா என்றாள்.

உறவுகளைவிட்டு சற்று தள்ளி நின்று பேச ஆரம்பித்தார் மாப்பிள்ளை.

என் பேரு கார்த்தி.நான் பிரபல கம்பெனில மேனேஜரா இருக்கே என தன்னை பற்றிய நிறைய விஷயங்களை இவள் மீது திணித்தார்.

நீங்க டீச்சருனு உங்க அப்பா சொன்னாரு என இவளை பற்றிய விஷயங்களையும் அவரே கூறி முடித்தார்.

இவர்களை போலவே நிறைய ஜோடிகள் பெண் பார்க்கும் படலத்தில் அன்று இருந்தனர்.அதில் ஒரு ஜோடி மட்டும் ஆசையாக தங்கள் இருவரின் விருப்பு வெறுப்புகளை சரிசமமாக பறிமாறிக் கொண்டதை கங்கா பார்த்தாள்.

அந்த பெண்ணின் கண்களில்தான் எவ்வளவு பூரிப்பு?எவ்வளவு சந்தோசம்?
நம்மால் ஏன் அது முடியவில்லை?என யோசிக்க ஆரம்பித்தாள்.

ஏதோ ஒரு உள்ளுணர்வு இது உன்னுடையது இல்ல கங்கா என சொல்வது போல தோன்றியது.

கங்காவின் கவனம் சிதறுவதை கண்ட மாப்பிள்ளை சரி வாங்க போலாம் என அழைத்து வந்து விட்டார்.

கங்கா பிடிச்சிருக்கா? என எல்லோரும் கேட்க, என்ன சொல்வது என தெரியாமல் நின்றாள்.

அதற்குள் மாப்பிள்ளையின் உறவுப்பெண் ஒருவர் திடீரென கங்காவின் கழுத்தில் இருந்த ஜெயினை இழுத்து எத்தனை பவுன் ?என்றார்.கங்காவிற்கு சற்று அதிர்ச்சியே.

இரண்டு என்றாள்.

ஜிமிக்கியை தட்டிவிட்டு இது எவ்வளவு? என்றார்.

சிவராமன் கண்ணில் இந்த காட்சி பட்டுவிட்டது.தன் கண்முன்னே மகளை இப்படி நடத்துபவர்கள். நாளை திருமணம் முடிந்தவுடன் என்ன செய்வார்கள்? என மகளின் எதிர்காலத்தை நினைத்து பயம் வந்தது.

சற்றும் யோசிக்காமல் இந்த சம்பந்தம் எனக்கு ஒத்து வரலே.நீங்க வேற இடம் பாத்துங்கோங்க என கங்காவை அழைத்து வந்துவிட்டார்.

சிவராமா முதல்முதல்லே பாத்தே மாப்பிள்ளை வேண்டானு சொன்னா, இப்படியே தட்டிட்டே போகும்.

மாப்பிள்ளையும்,அவங்க அம்மா அப்பாவும் நல்லவங்களா இருக்காங்க இது போதாதா என்றனர் உறவுகள்.

எனக்கு இது சரிவரலே. எம்புள்ள வாழ்க்கைலே ரிஸ்க் எடுக்க விரும்பலே என்றார்.

இப்படி வந்த மாப்பிள்ளையே வேண்டானு சொன்னா கங்காவே கல்யாணம் பண்ண யாரு வருவா?ஊரு உலகம் என்ன பேசும்.

ஊரு உலகத்துக்காக எம்புள்ளையே கிணத்துல தள்ள முடியாது.நான் எம்புள்ளைக்கு வேற மாப்பிள்ளை பாக்கறே. உங்களுக்கு பிடிச்சா வாங்க. இல்லைனா வராதீங்க என முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

கங்காவிற்கு நிம்மதியே.அவளது நிம்மதியை குழைக்க அன்றிரவு அருள் ஃபோன் செய்து விட்டான்.

உனக்கு கல்யாணமாமே..

உங்களுக்கு எப்படி தெரியும்?

உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும்.நீ எங்க போறே,வரே.. அவ்வளவு ஏன் நீ விடறே மூச்சு கூட எனக்கு கேட்கும் என்றான்.

இந்த வார்த்தைகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது.

இன்று நடந்த எதையும் கூறாமல்,ஆமா அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் என்றாள்.

–தலைவன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!