Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 2

அத்தியாயம் 2

கண்ணன் இறக்கும்பொழுது கார்த்திகேயன் முதல் வருடம் பொறியியல் படித்து கொண்டிருந்தான். விக்னேஷ் பத்தாம் வகுப்பில் இருந்தான். நாகரத்னா கணவர் முகம் மட்டும் பார்த்தே வாழ்ந்து வந்தவர். அவருக்கு வீட்டின் பொருளாதார நிலவரம் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை.



Advertisement

உறவினர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. துக்கத்துக்கு வந்தவர்கள் அப்படியே சென்றுவிட்டார்கள். வளர்ந்த பிள்ளைகள் தான் என்றாலும் விவரம் போதவில்லை மகன்களுக்கும்.

உயிரும் சதையுமாக தங்களுடன் இருந்த கணவர் இல்லை என்று அழுது கரைந்து தெளிந்து எழுந்து பார்த்தால், எல்லாமே மிரட்சியாக இருந்தது ரத்னாவிற்கு. பிள்ளைகளின் முகத்தை பார்த்தார். அவர்கள் முகம் பசியில் வாடி இருந்தது. அவ்வப்பொழுது பால் மட்டும் வாங்கி வந்து கார்த்தி தான் தேநீர் வைத்து கொடுத்தான். பிரட், பன் தேநீர் என்று தான் கழிந்தது நாட்கள். அது தாயாய் அவரை எழுந்து நடமாட வைத்தது. முதலில் சென்று குளித்துவிட்டு வந்து அடுப்பை பற்ற வைத்தார். விரைவாக சாதமும் ரசமும் சமைத்து மகன்களுக்கு கொடுத்துவிட்டு அவரும் உண்டார்.

Advertisement

Advertisement

அடுத்து என்ன என்று பார்க்க வேண்டும் என்றார் மகன்களிடம்.

வீட்டின் அலமாரியில் கண்ணன் வைத்திருக்கும் பத்திரங்கள் பணம் என்று அனைத்தையும் எடுத்து பார்த்தனர்.

Advertisement

பேங்க் பாஸ்புக் இருந்தது. அதில் பிள்ளைகள் இருவர் பேரிலும் ஒரு லட்சம் பணம் இருப்பதாக போட்டிருந்தது.

கண்ணன் இருந்திருந்தால், அது பெரிய தொகையாக தோன்றி இருக்குமோ என்னவோ, இப்பொழுது இந்த பணம் போதுமா? என்ற பயம் தான் வந்தது ரத்னாவிற்கு.

பின் வீட்டு பத்திரம் இருந்தது. அது ரத்னாவின் பெயரில் தான் இருந்தது. அதற்காக லோன் எதுவும் இருக்கவில்லை.

அடுத்து நகை என்ன இருக்கு என்று பார்த்தனர். தாலிக்கொடியையும் சேர்த்து இருபது பவுன் இருந்தது.

“என்னமா யோசிக்கிறீங்க? இது எல்லாம் நமக்கு போதுமா?” என்று கவலையாக கேட்டான் கார்த்திகேயன்.

தான் கொஞ்சம் பயந்தாலும் பிள்ளைகளின் மனதில் பயம் பதிந்துவிடும் என்று தோன்றியது அவருக்கு. அதனால், “சமாளிச்சிடலாம் கார்த்தி, ஒன்னுமே இல்லாம இல்ல. வீடு இருக்கு, கொஞ்சம் பணம் நகை எல்லாம் இருக்கே?”

“ஏன் ம்மா, அப்பா இல்லாம எப்படி ம்மா இருக்க போறோம்” என்று தாயின் மடியில் படுத்துக்கொண்டு கேட்டான் விக்னேஷ்.

“இனி இருந்துக்க தானே வேணும் விக்கி.. கடவுளுக்கும் நம்ம அப்பாவை ரொம்ப பிடிச்சிடுச்சு போல. அதான் கூப்பிட்டுக்கிட்டார்”

திடமாக பேச நினைத்தாலும் நிற்காமல் கன்னங்களில் நீர் இறங்கியது.

“யாராவது விவரம் தெரிஞ்சவங்க கிட்ட எப்படி இந்த நகை எல்லாம் காசாக்கி, உங்க படிப்புக்கு வர்றது போல பேங்க்ல போடனும்னு கேட்கணும்..” என்றார் யோசனையாக.

யாரிடம் கேட்கலாம் என்று தாயும் பிள்ளைகளும் யோசித்ததில், அவர்கள் நினைவிற்கு வந்தது அவர் அப்பாவின் பழைய முதலாளி சுந்தரேசன் தான்.

பிணமாய் வீடு வந்த கண்ணனை காடு சேர்க்க துணையாய் நின்றது அவர் தான்.

“நாளைக்கு அவருக்கு போன் பண்ணி பேசலாம். இப்ப தூங்குவோம் வாங்க” என்றார் நாகரத்னா.

கண்ணை மூடினால் தூக்கம் வரவில்லை, கண்ணன் முகம் தான் வந்தது. இருந்தாலும் வலுக்கட்டாயமாக கண்களை மூடி கொண்டு அடுத்து என்ன என்று சிந்திக்க தொடங்கினார் ரத்னா.

மறுநாள் காலை மகன்களை வைத்து கொண்டே சுந்தரேசனுக்கு அழைத்து பேசினார்.

“அண்ணே, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் தயங்கிக்கொண்டே.

“சொல்லும்மா.. என்ன விஷயம்?”

“நேர்ல பேசுனா நல்லா இருக்கும். இந்த நிலைமையில இப்ப நான் அங்கே வரமுடியுமா தெரியல.. நீங்க கொஞ்சம் வந்துட்டு போக முடியுமா?”

“சரிம்மா, நான் என் சம்சாரத்தையும் கூட்டிகிட்டு மத்யானமா வரேன்”

சொன்னது போலவே மதியம் மனைவியையும் அழைத்து கொண்டு வந்தார்.

“எங்கே கடன் கேட்டு விடுவார்களோ? அப்படி கேட்டால் இந்த மனிதனும் அள்ளி கொடுத்திடுவாரே? இவங்க கிட்ட எல்லாம் திருப்பி வாங்க முடியுமா?” என்று பொருமலுடன் தான் வந்தார் அவரது மனைவி காமாட்சி.

இவர்கள் வந்ததும், சுருக்கமாக எவ்வளவு இருக்கிறது, அதை எப்படி பத்திரப்படுத்தலாம், என்று யோசனையை கேட்கவும், காமாட்சி அம்மாவிற்கு மனது லேசாகிவிட்டது.

“அதை நான் சொல்லி தரேன் நாகு.. இவருக்கு அவ்வளவு விவரம் பத்தாது..” என்றார் பட்டென்று.

அவர் கூறியதை கேட்டு சில நாட்களுக்கு பிறகு லேசாக சிரித்தார் ரத்னா.

“அது என்னமோ சரிதான் தங்கச்சி. எங்க வீட்டு கணக்கு, தொழில் கணக்கு எல்லாம் மேலிடம் தான் பார்க்கிறாப்படி.” என்றார் சுந்தரேசன்.

“டீ சாப்பிடுறீங்களா மாமா, நீங்க அத்தை?” என்று இடையில் கேட்டான் கார்த்திகேயன்.

“கொடுப்பா.. கணக்கு எல்லாம் பார்க்கணும் இல்ல..” என்றார் காமாட்சி.

விக்னேஷ் அண்ணனின் பார்வையில் கடைக்கு சென்று பால் வாங்கி வந்தான்.

அதற்குள் ரத்னா பேங்க் பாஸ் புக், நகை என்று அனைத்தையும் கொண்டு வந்து காண்பித்தார்.

“உன் யோசனை என்னன்னு முதல்ல சொல்லு, நாகு” என்றார் காமாட்சி.

“கண்ணத்தானுக்கு பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை. பெரியவனை இன்ஜினியரிங் சேர்த்து விட்டாரு. முதல் வருஷம் பீஸ் கட்டி இருக்கு. இன்னும் மூணு வருஷம் பீஸ் கட்டணும். அதுபோக அவன் படிப்புக்கான சில்லறை செலுவுகள் எல்லாம் இருக்கு. அடுத்து சின்னவன் இப்பதான் பத்தாவது படிக்கிறான். தனியார் பள்ளி, அவன் பீஸ் எல்லாம் இருக்கு. அப்புறம் எங்க சாப்பாடு செலவு எல்லாம்.. இந்த நகையும் பணமும் போதுங்களா?” என்றார் காமாட்சியிடம். அதில் போதும் என்று கூறுங்களேன் என்ற இறைஞ்சல் இருந்தது.

பெண்கள் பேசிக்கொண்டிருக்கையில், சுந்தரேசன் பின்பக்கம் போய் கண்ணனின் ஒர்க் ஷாப்பை பார்வை இட்டார். இறந்து போகப்போறோம் என்று அவருக்கு தெரியாது இல்லையா? வேலை செய்ய தயார் நிலையில் தான் இருந்தது அந்த கூடம்.

அவருக்கும் கண்ணனுக்குமான உறவு நீண்ட கால தொடர்புடையது. கண்ணன் அவரது பதின் வயதிலேயே இவரிடம் வேலைக்கு சேர்ந்துவிட்டார். கண்ணனை தன் சொந்த மகனாகத்தான் அவர் நினைத்து இருந்தார். அதனாலே அவர் தனியே தொழில் தொடங்கின பொழுது மனதார வாழ்த்தினார்.

அங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் கண்ணனை உணர்ந்தார். கண்கள் கலங்கியது அவருக்கு.

“இந்தாங்க மாமா தேநீர்” என்ற கார்த்திகேயனின் குரலில் தன்னை சமாளித்துக்கொண்டார்.

பின் இருவரும் ஹாலிற்கு வந்தார்கள்.

“என்ன காமாட்சி, என்ன யோசிச்சு வச்சிருக்க?” என்றார் மனைவியிடம்.

இப்ப இந்த நகையில ஒரு பத்து பவுனை மட்டும் வித்திடலாம். மிச்சத்தை பத்திரப்படுத்தி வைக்க சொல்லி இருக்கேன்.

அந்த பணத்தை பேங்க்ல போட்டு, பசங்க பீஸ்க்கு எடுக்கிற மாதிரி செஞ்சிடலாம்.

“எனக்கு எதுக்கு ம்மா நகை எல்லாம். எல்லாத்தையும் வித்துடலாமே.. வர வட்டி காசை வச்சு நாங்க காலத்தை ஓட்டிகலாமே?” என்றார் ரத்னா.

எல்லாத்தையும் இப்பவே வித்துட்டீங்கனா நாளைக்கு ஒரு ஆத்திர அவசரத்துக்கு என்ன செய்வீங்க? நான் சொல்றபடி கேளு”

“சரிம்மா”

“நீ எதாவது வேலைக்கு போக பிரிய படுறீயா?” என்றார் அடுத்த கேள்வியாக.

“அம்மாவுக்கு வெளியில எல்லாம் அதிகம் பழக்கம் இல்லையே அத்தை” என்றான் கார்த்திகேயன் முந்திக்கொண்டு.

“அப்பா அம்மாவை வீட்ல கூட நிறைய வேலை பார்க்க விட மாட்டாங்க” என்றான் விக்னேஷ் அண்ணனை பின் தொடர்ந்து.

உண்மை அதான்.. மனைவியை தங்கமாய் தாங்கியவர் கண்ணன். நிர்கதியாக விட்டு செல்வோம் என்று தெரிந்து தான் செய்தாரோ என்னவோ?

“மாமா நான் வேணும்னா காலேஜ் முடிச்சிட்டு சாயந்தரம் ஏதாவது வேலைக்கு போகவா? எனக்கு கிடைக்குமா?” என்றான் கார்த்திகேயன் சுந்தரேசனிடம்.

“இல்ல கார்த்தி, நீ பெரிய இன்ஜினியரா வரணும்.. பெரிய பெரிய வீடுகள் எல்லாம் கட்டணும்னு உங்க அப்பாவுக்கு ஆசை. படிச்சுகிட்டே வேலைக்கு போனா, படிப்பில கவனம் செலுத்து முடியாது..” என்றார் ரத்னா.

மூவரும் காமாட்சியை பார்த்தனர்.

“வேலையை பத்தி கொஞ்ச நாள் கழிச்சு யோசிக்கலாம். இப்ப, இந்த நகையை விக்குறது, பேங்க்ல காசு போடறது எல்லாம் பார்ப்போம்.

அப்புறம் அப்பாவோட இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் எல்லாம் வாங்கணும்.. நீ அந்த வேலை எல்லாம் பாருப்பா கார்த்தி. தெரியலைன்னா உங்க மாமா கிட்ட கேட்டுக்கோ”

“சரிங்க அத்தை..”

“இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமான்னு விசாரிக்கணும். அந்த பணம் வந்தாலும் உதவியா இருக்கும் இல்ல? நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா விசாரிங்க” என்றார் கணவரை பார்த்து.

எப்பொழுதுமே பெரிதாக யாருக்கும் உதவி செய்ய எல்லாம் போகமாட்டார் காமாட்சி அம்மா.

ஆனால் ஏனோ, இந்த மூவரையும் பார்த்தால் அவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று தோன்றியது.

ரத்னாவிற்கு முப்பத்தி ஆறு வயது தான். பார்ப்பதற்கு அதைவிட சின்ன பெண் போல இருப்பார்.

காமாட்சி அம்மாவின் வழிக்காட்டுதலில், அனைத்தையும் செய்தனர். அவர் இவர்களை சோகமாக சோர்ந்து அமர விடவே இல்லை. அடுத்து அடுத்து என்று வேலைகள் கூறி கொண்டு அனைத்தயும் சீர் படுத்திக்கொடுத்தார்.

அவர் கூறியதின் படி நாய்குட்டி ஒன்றையும் வளர்க்க தொடங்கினார்கள்.

பாதுகாப்பிற்காக அதை வளர்க்க கூறினார். மகன்கள் இல்லாத சமயத்தில் அதன் துணை ரத்னாவிற்கு மனதிற்கும் இதமாகத்தான் இருந்தது.

பழைய படி மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும், சீராக செல்ல தொடங்கியது நாட்கள்.

கண்ணன் இறந்து இரண்டு மாதம் முடிந்த நிலையில், ஒரு நாள் மதியம் போல, ரத்னாவை பார்க்க வந்தார்.

“வாங்க வாங்க ம்மா” என்று உற்சாகமாகவே வரவேற்றார்.

“உன் பசங்க வர்றதுக்கு முன்ன ஒரு விஷயம் பேச தான் வந்தேன்”

“சொல்லுங்கம்மா “

“என்னடா நான் இப்படி சொல்றேன்னு நினைக்க கூடாது”

“நீங்க என்ன சொன்னாலும் நான் தப்பா நினைக்கவே மாட்டேன்.. எனக்கு அப்பா அம்மா இல்லை.. கூட பிறந்தவங்க எட்டிக்கூட பார்க்கலை.. நீங்க கொடுத்த நம்பிக்கையால தான் நான் நடமாடிகிட்டே இருக்கேன்”

“உன் புருஷன் கெட்டிக்காரன் தான். உன்னை பணத்துக்காக ரொம்ப அலையற நிலையில் விடலை. இருந்தாலும் குந்தி தின்றால் குன்றும் கரைந்து போகும்னு சொல்லுவாங்க.. அதான், சின்னதோ பெரிசோ, நீ ஒரு வேலைக்கு போகணும் நாகு. கொஞ்ச வருஷத்துல உன் பிள்ளைங்க தலை எடுத்திடுவாங்க தான். ஆனா உனக்கு இன்னும் சின்ன வயசு தான். காலம் இன்னும் நீண்டு இருக்கு. உனக்குன்னு ஒரு வருமானம் இருக்கனும். உன் மேல உள்ள அக்கரையில தான் சொல்றேன்” என்றார் பாசமாக.

“நானும் யோசிச்சேன் ம்மா.. ஆனா எனக்கு என்ன வேலை கிடைக்கும்.. படிப்பும் பெருசா இல்லை.. எனக்கு தையல் வேலை, கை வேலை இப்படி எதுவும் தெரியாது.. அதுவுமில்லாமல், வீட்டு வேலை எல்லாம் கூட என்னால் அதிகமா செய்ய முடியாது.. சீக்கிரமாவே சோர்வாகிடும் உடல் வாகு எனக்கு..”

“சரி.. இவ்வளவு யோசிச்சிருக்க.. நல்லது.. இன்னும் கொஞ்சம் யோசி.. ஏதாவது வழி கிடைக்கும்..” என்று அன்று புறப்பட்டார் காமாட்சி.

மறுநாள் மீண்டும் அதே நேரத்திற்கு வந்தார்.

“நான் ஒன்னு யோசிச்சேன் ம்மா.. ஆனா கஷ்டமா இருக்குமா? சாத்தியமா தெரியல?” என்றார் ரத்னா.

“என்ன சொல்லு பார்ப்போம்?”

“நான் பணியாரம் நல்லா செய்வேன்.. கண்ணத்தானுக்கு நான் செய்யுற இனிப்பு பணியாரம், கார பணியாரம் கடலை சட்னின்னா உயிர்.. அதை செஞ்சு விக்கலாமா? வியாபாரம் ஆகுமா?”

“நல்ல யோசனையாத்தான் இருக்கு.. அதுக்கு நீ வெளியேவும் போகத்தேவை இல்லை. இங்கேயே வீட்டுக்கு முன்னவே செஞ்சுக்கலாம்.. முதல்ல சாயங்காலம் மட்டும் ஆரம்பிக்கலாம். பசங்களும் வீட்ல இருப்பாங்க..போக போக பார்த்துக்கலாம்.

முதல்ல என்ன எல்லாம் வேணும், எவ்வளவு செலவு ஆகும் இப்படி எல்லாத்தையும் கணக்கு போட்டு பாரு.. அப்புறம் மேற்கொண்டு பேசலாம்”

“சரிம்மா.. “

அதன் பிறகு வீட்டின் வாசலில் அழகாக ஆரம்பமானது ‘கண்ணன் பணியாரம் ஸ்டால்.’

மகன்கள் இருவருக்குமே முதலில் அவ்வளவு விருப்பம் இல்லை. காமாட்சி அம்மா தான், “எந்த தொழிலும் குறைந்தது இல்ல, உங்க அம்மாவும் எப்ப தான் கூட்டுக்குள்ள இருந்து வெளிய வர்றது.. பேசாம படிக்கிற வேலையை பாருங்க” என்று அதட்டலிட்டு அவர்கள் வாயை அடைத்திருந்தார்.

மாலை ஆறு மணியில் இருந்து எட்டு மணி வரையிலும் மட்டும் தான் கடை. ஞாயிறு விடுமுறை.

முதல் மூன்று மாதங்களில் வருமானம் என்று பெரிதாக இல்லை. ஆனால் அதன் பிறகு வியாபாரத்தின் நெளிவு சுளிவு பிடிபட்டுவிட்டது ரத்னாவிற்கு.. கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் வரத்தொடங்கியது.

சின்ன வருமானம்னாலும் குடும்பத்துக்கு வருமானம் அவசியம் நாகு என்று காமாட்சி அம்மா சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்று புரிந்தது ரத்னாவிற்கு.

சிக்கனமாக செலவு செய்வதால் வீட்டு செலவிற்கு போதுமானதாகவே இருந்தது வருமானம்.

கார்த்திகேயன் அடிக்கடி கூறுவான்,

“அம்மா கொஞ்ச காலம் தான் அம்மா. அப்புறம் நான் வேலைக்கு போனதும் நீங்க அப்பா இருக்கும் பொழுது இருந்த மாதிரியே ராணியா இருக்கனும். நான் உங்களை பார்த்துப்பேன்” என்று.

விக்னேஷும், “நான் வேலைக்கு போனதும் அண்ணா உனக்கு துணையா இருப்பேன், சரியா.. அப்ப அம்மா மகாராணி மாதிரி இருப்பாங்க” என்பான் அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டு.

மகன்களின் அன்பில் தாயுள்ளம் உருகிதான் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!