Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவேவிழாக் காணுமே வானம்

விக்ரம் பார்த்தசாரதி 03 (01)

விக்ரம் பார்த்தசாரதி 03 – 01

“ஹேய் எட்வர்ட்” என்றவளின் குரலில் அவ்வளவு சந்தோஷம். அவளது முகமெல்லாம் அவனைக் கண்ட பூரிப்பு.

அவன் வாழும் நாட்டில் இப்படி அணைத்துக் கொள்வது எல்லாம் சாதாரணம். ஆனால் இங்கே? பலரது முகங்களில் நிறைய மாற்றங்கள் வந்து போயின.

ஆனால் ஆராதனாவின் பெற்றோரும், சோனா ஷ்யாமும் கூட மிகவும் மகிழ்ச்சியாக எட்வர்டை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.



Advertisement

அங்கே ஆராதனாவுக்கும் எட்வர்டுக்கும் இடையில் நலம் விசாரிப்புகள் தொடர்ந்தன. அவன் வார்த்தைக்கு வார்த்தை அவளை “பெல்லா… பெல்லா…” என்று அழைத்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் திடீரென முன்னே வந்தாள் ஸ்வாதி.

எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை அவள் இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை என்பதும் உண்மைதான்.

“ஹேய்… நீங்க தான் அண்ணி சொன்ன எட்வர்டா?  அர்ஜூன் இங்கே பாரேன்.  இவங்க எட்வர்ட் அண்ட் பெல்லா. நம்ம டிவைலைட் சீரீஸ் பெல்லா எட்வர்ட் மாதிரியே. அவங்க எத்தனை அழகான ஜோடி தெரியுமா? பெல்லா எட்வர்ட்ன்னா எனக்கும் அர்ஜூனுக்கும் ரொம்ப பிடிக்கும்” என்று அர்ஜூனையும் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

ஸ்வாதி சொன்னது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த எட்வர்ட்க்கு ஆராதனா மொழி பெயர்த்துக்  கொண்டிருந்தாள்.

Advertisement

“நோ பெல்லா இன் ஸ்பேனிஷ் மீன்ஸ் பியூட்டிஃபுல் கேர்ள்” (ஸ்பேனிஷ் மொழியில் பெல்லா என்றால் அழகான பெண் என்று அர்த்தமாம்)

எட்வர்ட்  சொல்ல அப்பட்டமாக மாற்றம் கொண்டது எனது  முகம். எப்போதும் எனது முகத்தையே படித்துக் கொண்டிருப்பானா எனது தம்பி? தெரியவில்லை எனக்கு.

எனது தோளில் இதமாக கரம் பதித்து அழுத்திக் கொடுத்தான் அவன்

Advertisement

ஸ்வாதியைப் பார்த்து “நான் உங்க பெரிய ஃபேன் தெரியுமா? போன வருஷம் நீங்க ஏன் யூ.எஸ் ஓபன் விளையாடலை?” என்று விழிகள் விரிய, ஆங்கிலத்தில் கதையளந்து  கொண்டிருந்தான் எட்வர்ட்.

எட்வர்ட் அப்படி கேட்ட மாத்திரத்தில் ஸ்வாதியின் முகமெல்லாம் மகிழ்ச்சி.

“இந்த வருஷம்  வருவோம். நானும் அர்ஜூனும்” என்று சொல்லிக் கொண்டே அர்ஜூனை அருகே வரச் சொல்லி சைகை செய்தாள் அவள்.

அர்ஜூன் ஒரு நொடி தயங்கி நிற்க, புன்னகை சுமந்த இதழ்களுடன் “போ”வென தலையசைத்தேன் நான். அதன் பின்னர் மரியாதை நிமித்தம் எட்வர்ட்டிடம் சென்று பேசினான் அவன்.

“சரி சரி… ரெண்டு பேரும் மேடைக்கு வாங்கப்பா. நேரமாச்சு” என்று அம்மா உள்ளே புகுந்து காப்பாற்றினார்.

“விக்ரம் திஸ் இஸ் எட்வர்ட்” ஆராதனா எட்வர்டை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

 “யூ ஸ்டோல் மை பெல்லா மிஸ்டர் விக்ரம். கங்கிராட்ஸ்”(எனது அழகுப் பெண்ணை நீங்கள் திருடிக் கொண்டு விட்டீர்கள்) என்று அவன் எனது கைப்பற்றிக் குலுக்க, இதழ்களில் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை ஏற்றிக் கொண்டு கை குலுக்கினேன் நான்.

அடுத்து நாங்கள்  மேடையை நோக்கி நடந்தோம். நாங்கள் நடந்த அந்த இடத்திற்கு அருகே, ஆராதனாவின் அம்மா சுமித்ராவும், அவருடன் இருந்த சில பெண்களும் நின்றிருந்தார்கள்.

“என்ன? மாப்பிளையோட  கால் சாய்ஞ்சுருச்சு,” என்று மெதுவான குரலில் ஒரு பெண்மணி சொன்னதை எனது  காதுகள் தவற விடவில்லை.

“அப்படித்தான் இருக்கு. கோணலா இருக்கு. என்ன பண்றது? நான் கூட சுமித்ராவை கேட்டேன்” இது இன்னொரு பெண்மணி.

“நீங்க ஏன் நம்ம ஆராவுக்கு இதுபோல… அவளுக்கு அந்தப் பக்கம் நடந்து வர பையன் யாரு? அவ ஃபிரெண்டா? அவனே ஸ்மார்ட்டா இருக்கானே…”

இது எல்லாவற்றையும் மௌனமான ஆமோதிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் அவளது அன்னை. சுர்ரென்று ஏறிப் போனது எனது  கொதிநிலை. அதைவிட கொதித்தான் அர்ஜுன்.

அவர்களை நோக்கி கிட்டத்தட்ட பாய்ந்து விடப் போன அவனை,  கரம் பிடித்து நிறுத்தியது நான்தான்.

இப்படி பேசியது அமைச்சர் தர்மேந்திரன் போல ஒருவர்  என்றால், அவரை தோற்கடிப்பது எனக்கு மிக எளிதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது பேசுவது ஆராதனாவின் உறவினர்களாயிற்றே!

இந்த நிச்சயதார்த்தத்தில் எந்த களேபரமும் வரக்கூடாது என்பதில் எனக்கு நிறையவே உறுதி இருந்தது.

அதே நேரத்தில், எனது  இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டிருந்த ஆராதனா, இவை எதையும் கவனிக்காமல், எட்வர்டுடன் பேசிக் கொண்டே வந்தாள்.

மேடையை அடைந்து நின்றோம். கடல் அன்னை குளிர் காற்றை வாரிக் கொடுக்க, நான் அர்ஜுனும் சற்றே தணிந்தோம்.

“டுடே இஸ் யுவர் டே, விக்ரம். இவங்க பேசறதெல்லாம் தலையில போட்டுக்காதே,” என்று என் கரத்தைப் பிடித்துக் கிசுகிசுத்தான் அர்ஜுன்.

அமோதித்து தலை அசைத்தேன் நான். எனது  முகத்தில் புன்னகை மீண்டது. அதே நேரத்தில், என்னைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்தாள் ஆராதனா.

அதற்குள்ளாக எனது  முகத்தையும் அர்ஜுனின் முகத்தையும் பார்த்து எதை உணர்ந்து கொண்டாள் ஸ்வாதி என்பது எனக்கு புரியவில்லை.

“ஃப்ர்ஸ்ட் மோதிரம் மாத்திடலாமா?” என்று துவங்கினாள் அவள்.

“இல்லமா அது தட்டு மாத்தின பிறகுதான்” இது பெரியவர்களின் குரல்.

“இல்ல இல்ல இந்த காஸ்டியும் மோதிரம் மாற்றத்தான். தட்டு மாற்ற வேறே காஸ்டியும்” இதுவும் ஸ்வாதிதான். சட்ட திட்டங்களை உடைக்கவெனவே பிறந்த மகாராணி அவள்.

“சரி மோதிரங்களை எடுடா” என்றேன் நான் புன்னகையுடன்.

எனது பேச்சுக்கு அங்கே மறுப்பு இல்லை. அடுத்த இரண்டாம் நொடி எங்களது கரம் சேர்ந்தன மோதிரங்கள்.

 “முதலில் நீங்க விக்ரமிற்கு போட்டு விடுங்க அண்ணி” அர்ஜூன் சொல்ல ஆராதனா என்னைப் பார்த்து புன்னகையுடன் மோதிரம் அணிவிக்க வர, ஸ்வாதி எனது  கரத்தை உயர்த்தி பிடித்து கொண்டாள்.

அவளுக்கு இதிலும் விளையாட்டு. அவளது இந்த விளையாட்டை அங்கிருந்த எல்லோரும் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“இப்போ எங்க அண்ணா கையை எட்டிப் பிடிச்சு மோதிரம் போடுங்க பார்ப்போம்” ஆராதனாவிற்கு சவால் விட்டது இந்தப் பெண்.

ஒரு சந்தோஷப் பூரிப்புடன் என்னை நோக்கி நிமிர்ந்தாள் ஆராதனா. வான் நிலவை தோற்கடித்துக் கொண்டிருந்தது அவளது  முகம்.

அவளது  இடது கரத்தை என் முன் நீட்டி லேசாக புருவங்களை உயர்த்தினாள்.

எனது சட்ட ஆலோசகராக ‘இதோ இங்கே கையெழுத்துப் போடு’ என்று அவள் இதே போல புருவங்களை உயர்த்தும் போதெல்லாம்,  அவள்  நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து இட்டு இருக்கிறேன் நான்.

“படிச்சு பார்க்க  வேண்டாமா விக்ரம்?” அவள் கேட்கும் போது எல்லாம்   ‘நீ பார்த்தா போதும்’ என்பதாக தோள்களை  குலுக்கியிருக்கிறேன்,

அவளது இப்போதைய  செய்கையில் எனது மனம் மொத்தமாக குளிர்ந்து போனது.  சுற்றி இருந்த யாரும் எனது  கவனத்தில் பதியவில்லை.

முகம் மலர்ந்த புன்னகையுடன்  எனக்கு எதிரில் நின்றவளின்  கரத்தின் மீது எனது இடது கரத்தைப் பதித்தேன்.

‘இதோ கொடுத்து விட்டேன் பெண்ணே! என் கரத்தை மட்டுமல்ல இதயத்தையும்’ என்று சொல்லிவிடத் தான் நினைத்தேன்.

எனது  விரலில் அவள் மோதிரத்தை அணிவிக்க அடுத்த இரண்டாம் நொடியில்  அவளது  விரல் பற்றி மோதிரத்தை அணிவித்தேன் நான்.

இத்தனை நேர காத்திருப்புக்குப் பிறகு, எனது  கையில் வந்து சேர்ந்த அவளது கரத்தை ஒரு பொக்கிஷம் போலப் பற்றிக் கொண்டிருந்தேன். விட்டுவிட மனமில்லை எனக்கு.

இந்த நொடியிலும்! வாழும் காலம் முழுவதிலும்!

இப்போது எனது  மனம் ஒரு நிலைக்கு வந்து நின்றிருந்தது. அங்கே வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்தன.

அவளது தோழி சோனாவும், சோனாவின்  காதலன் ஷ்யாமும் முதலில் வந்து வாழ்த்தினர். ஷ்யாமின் உடல் மொழியில் அத்தனை மரியாதை.

‘ஆம்… மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும்’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

அடுத்து மேடை ஏறினான் எனது  தொழில் முறை நண்பன் கௌதம். “பெஸ்ட் விஷஸ் விக்ரம் ” என்று சொல்லி என்னை  தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.

இப்படியே வாழ்த்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் எனது கண்களில் படாமல் போனாள் ஆராதனா.

அவளை அவசரமாகத் தேடிய எனது  விழிகள், அப்போது தான் அவர்கள் இருவரையும் பார்த்தன.

ஒரு ஓரத்தில், அவளது அருகில் நின்று, தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தான் எட்வர்ட். அவனது  கரம் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் இவள்.

‘சரி பேசி விட்டு வரட்டும்’ என்பதாக நான் மேடையில் இருந்து இறங்கி அர்ஜூனைத் தேடலானேன். அப்போதுதான் எனது செவிகளில் விழுந்தன அந்த வார்த்தைகள்.

“என்ன சுமி. மாப்பிள்ளை ஃபாரீனர்ன்னு  நீ சொல்லவே இல்லை. ஜோடிப் பொருத்தம் அம்சமா இருக்கு. பட்டுவும் எவ்வளவு அழகா இருக்கா. என் கண்ணே பட்டுடும் போல” நான் நின்று கொண்டிருந்தது தெரியாமல் ஆராதனாவின் அம்மாவிடம் புதிதாக வந்த பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தார்.

“இல்ல சுபா, அது அவ ஃபிரண்ட். இவர் தான் மாப்பிள்ளை” என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார் ஆராதனாவின் அன்னை.

என்னை ஏற இறங்க ஒரு முறை பார்த்த அந்த பெண்மணி தர்மசங்கடமாக லேசாக புன்னகைக்கவும் ஆராதனாவின் அன்னை அவரை அவசரமாக அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

‘என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது இங்கே?’ பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. ‘எல்லாம் அறிந்தே செய்கிறார்களா? அறியாமல் செய்கிறார்களா?’

அதற்குள் எனது அருகில் வந்து நின்றான் அர்ஜுன். எப்போது வந்தான், எங்கிருந்து நடந்ததை கவனித்தான் என்பது எனக்குத் தெரியவில்லை.

‘கூல் கூல் விக்ரம்’ என்றான் எனது கரத்தை அழுத்தி ‘இதெல்லாம் பாஸிங் க்லௌட்ஸ். ஜஸ்ட் இக்னோர் இட்’

 அமோதித்து தலை அசைத்தேன். எனது  முகத்தில் புன்னகை மீண்டது. அதே நேரத்தில், என்னைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்த படியே என்னை நோக்கி நடந்து வந்தாள்  ஆராதனா.

“அண்ணா, அண்ணி உள்ளே நிச்சய தாம்பூலம் மாற்ற உங்களை கூப்பிடுறாங்க” ஸ்வாதி கூவி அழைத்தாள்.

ஆராதனா சற்று முன்னால் நடக்க எனது  தம்பியுடன நடந்து வந்தேன் நான்.

விக்னேஸ்வர பூஜை முடிந்து எங்கள் இருவரின் பெற்றோரும் தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ள, அடுத்து  உடை மாற்றிக் கொண்டு வரச் சொன்னார்கள்.

சோனா ஆராதனாவை உள்ளே அழைத்துச் செல்ல, அர்ஜூன் என்னுடன் வர, ஷெர்வானியில் இருந்து வேஷ்டி சட்டைக்கு மாறினேன்.

“இப்போ தான் விக்ரம் மாப்பிளையா ஜோரா இருக்கே” சந்தோஷமாகச்  சொன்னான் அர்ஜூன்.

ஆராதனா இன்னும் உடை மாற்றிக் கொண்டு வந்திருக்கவில்லை.

“இன்னும் பத்து நாட்களிலேயே நல்ல முகூர்த்தம் இருக்கு. என்ன சொல்ற வாசு?” எனது தந்தை  ஆராதனாவின் அப்பாவிடம் கேட்க அவரும் சந்தோஷமாக  தலையசைத்தார்.

ஆராதானாவின் அப்பா என்னைப் பார்க்க நானும் சந்தோஷமாக தலையசைத்தேன்.

‘பத்து நாட்கள் ஏன் காத்திருக்க வேண்டும். நாளைக்கே முகூர்த்தம் இல்லையா. கூவியது எனது  மனது’

எனது  மனதின் குரலை கேட்டவள் போல அழகு தேவதையாக அரக்கு நிறப் பட்டில் என் முன் வந்து நின்றாள் எனது ஆராதனைக்கு உரியவள்.

“மாலை  மாத்திகோங்க” யாரோ சொல்ல எங்களது கரம் வந்து சேர்ந்தன மணக்கும் சம்பங்கி மலர் மாலைகள்..

“கல்யாணத்தின் போது தானே மாலை மாத்தணும்” எங்கிருந்தோ வந்தது ஒரு குரல்.

‘எனக்கெனவே வந்து நிற்பார்களா இவர்களெல்லாம்?’ கொஞ்சம் அலுப்பாக இருந்தது எனக்கு.

ஸ்வாதி ஆராதனாவிற்கும் அர்ஜூன் எனக்கும் மாலை அணிவித்து விட, அதில்  அவர்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம்.

சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக இரவு உணவு முடிந்த நேரத்தில்தான், எனது  அருகில் வந்தார் அம்மா.

“விக்ரம்… கல்யாணத்தை சித்திரை மாசம் வெச்சுக்கலாம்னு ஆராதனா வீட்ல கேட்கிறாங்கபா”

 “ஏன் மா?” சற்றே அதிர்ந்துதான் போனேன் நான்.

“ஆராதனா ஏதோ அவசரமா யூ.எஸ். போகணுமாம் பா. எட்வர்ட் எதுக்கோ வர சொல்றானாம். ரொம்ப முக்கியமான வேலையாம்.” அவரது குரலில் ஒரு வருத்தம் கலந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!