Skip to content
Post Views: 2,343
உனதன்பில் சரணாகிறேன் 7
கேன்டீன் வருவதற்கு விருப்பமே இல்லாதவனை வம்படியாக அழைத்து வந்திருந்தனர் ம்ருதவ்வின் நண்பர்கள்.
“எனக்கு இப்போ எதுவும் சாப்பிடுற மூட் இல்லைடா” என்ற ம்ருதவ்வுக்கு மனம் சோகத்திலிருந்து மீண்டுவிட்டதாகத் தோன்றினாலும், தனக்கென யாருமில்லை எனும் எண்ணம் அவனை உள்ளுக்குள் சுழன்றடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாட்கள் செல்ல, காலங்கள் கடக்க நடந்தவைகள், பிரிந்தவைகள், இழந்தவைகள் எல்லாம் மாறும், மறக்கும் எனும் கூற்று நிதர்சனமாகினும், மனம் எனும் கிடங்கில் புதையுண்டு வதை கொடுப்பதும் நிதர்சனம் தானே!
Advertisement
அந்த நிதர்சனத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு பெரும் ஆறுதல் அவளின் நெஞ்சத்தில் முழுதாக குடியேறிட தடம் பதித்திருக்கும் மித்யுகாவின் முகம் மட்டுமே!
ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்குள்ளெல்லாம் அவன் செல்ல முற்படவில்லை.
அவனது மனதிற்கு அவளின் முகம் பிடித்திருக்கிறது. அவளின் இருப்பை தன்னிடம் உணர்த்தும் அந்த ஜிமிக்கியில் கிடைக்கப்பெறும் இதம் அவனுக்கு பெரும் ஆறுதலாய்.
Advertisement
துன்பத்தில் துவண்டு சரியும் வேளையில் எதிர்பாராமல் முன் நீட்டப்படும் கரத்தின் வெகுமதி தான் ம்ருதவ்விடத்தில் சேர்ந்திட்ட ஜிமிக்கியின் மதிப்பு.
Advertisement
சிரிக்க மறந்த தருணத்தில் நம்மை கடந்துப்போகும் மழலையின் முகம் கொடுக்கும் புன்சிரிப்பில், நமது இதழ் தானாக மலரும் மாயம் தான், அவனும் ஜிமிக்கியும் அவளுமாய்.
தானாக மனம் சித்தப்பாவின் இன்மையில் சோர்ந்துப்போகும் கணங்களில் முன்பெல்லாம் மீட்டெடுக்கும் வழியின்றி தனக்குள்ளே போராடுவான். ஆனால் இரண்டு நாட்களாக அவனது துயர் போக்கும் தடமாய் அவளிருக்க, காரணம் விளங்கவில்லை என்றாலும், விரும்பியே ஏற்க துணிந்தான்.
கண்கள் மூடினால் தன் விரலில் ஆடும் ஜிமிக்கியும், கண்களை சுருக்கி இமைகள் மூடி செவி பற்றியபடி நின்றிருந்த மித்யுகாவின் கலங்கானத் தோற்றமும் முன் வந்து நிற்க, கிடைக்கப்பெறும் ஆறுதல் மனம் வேண்டுமாய், வேண்டுதலாய் இருந்திட, தானாக கரம் சேர வாய்ப்பிருந்தால் சேரட்டுமென நினைத்தான்.
Advertisement
சோகத்தில் வெளிவரத் துடிக்கும் நேரத்தில், ஆதரவாய் கிடைக்கும் ஒன்றை பற்றிக்கொள்ள நினைப்போமே, அதே பற்றுதல் தான் ம்ருதவ்விடத்தில் மித்யுகாவின் மீது.
காலை அவளை வகுப்பில் பார்க்கும் வரையில் கூட அவனுக்கு மனதில் சிறு தடுமாற்றமும் இல்லை. ஒருவித தெளிவில் தீர்மானமாக இருந்தான். ஆனால் அவளை மீண்டும் பார்த்திட, அவள் தன்னைத்தேடி, தனக்கு பெரும் ஆறுதலாய் இருக்கும் ஜிமிக்கியை தேடி வந்திருக்கிறாள் என்பதில், தனக்கு கிடைத்த பற்றுதல் கைவிட்டுப் போய்விடுமோ என வகுப்பின் பாட நேரத்தில், பாடத்தை கவனிக்காது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தான்.
அந்த அலைக்கழிப்பு மித்யுகா தன்னுடன் தனக்கு துணையாக தனது நெருங்கிய வட்டத்தில் இருக்க வேண்டுமென்ற வரை அவனை இட்டுச்சென்றிருந்தது.
காரணமின்றி ஒன்று அதீதமாய் பிடிக்கும். அதனை உடன் வைத்துக்கொள்ள தானாக மனம் நினைக்கும். அக்கணம் ம்ருதவ்வுக்கு மித்யுகா அப்படித்தான் ஆகிப்போனால்.
அவளோடு மனதில் பயணித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவ்வெண்ணம் கலைவதைப்போன்று நண்பர்கள் கேன்டீன் அழைத்திட, வெறுப்போடு வந்தவன், கேன்டீன் முன்னிருக்கும் மரத்திற்கு கீழான மேடையில் அமர்ந்துவிட்டான்.
“நீங்க போங்க… எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்” என்றவன், ரதி, கமலேஷிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
“சரி வா நாம போவோம். எனக்கு சமோசா வாங்கித்தா” என்று கமலேஷ், ரதியின் கரம் பிடித்து இழுக்க, அவனது இழுவைக்கு சில அடிகள் உடன்பட்ட ரதி, ம்ருதவ்வின் கவனம் தங்கள் மீது இல்லையென்றதும், கமலேஷின் காலில் வலிக்க மிதித்திருந்தாள்.
“இப்போ நீ சமோசா சாப்பிடுறதுதான் முக்கியமா?” என்ற ரதி, “மித்யு வரா(ள்)ப்பாரு” என தூரத்தில் காட்டினாள்.
“இந்தப்பொண்ணு நிஜத்துக்கும் ரொம்பவே தீவிரமா இருக்காப்போல” என்ற கமலேஷ், “சிவாவுக்கும் எல்லாமா ஒரு உறவு கிடைச்சா சந்தோஷம் தான” என்றான்.
“அதுக்கு அவன் அவளை ஏத்துக்கணுமே” என்ற ரதி, “என்ன இவள், அவ்ளோ வீரமா பேசிட்டு இப்போ நடையில தவழ்ந்து வந்திட்டு இருக்காள்” என்றாள்.
ம்ருதவ்வை கண்டுவிட்டு மித்யுகாவின் நடையில் தெரிந்த தடுமாற்றத்தில் ரதி ஜெர்க்காகினாள்.
“சொல்லுவாளா? மாட்டாளா?” கமலேஷ் கேட்க,
“வா மரத்துக்கு பின்னாடி நின்னு என்ன பேசுறாங்க கேட்போம்” என ம்ருதவ்வின் பார்வையில் படாது சுற்றிக்கொண்டு மரத்தின் பின்பக்கம் சென்று நின்றனர்.
ம்ருதவ் சில நாட்கள் பழகிய வழக்கம்போல் தனியாக அமர்ந்து, தனிமையை தனது துணையாக நினைத்து ஏற்க முயற்சித்திருந்தான்.
கிடைத்த ஆறுதலும் எத்தனை நாளுக்கோ எனும் பெரும் கேள்வியும், கிடைத்துகொண்டிருக்கும் சிறு இதத்திற்கு இடையில் அவனுள் உதிக்கத்தான் செய்கிறது.
விரும்பும் ஒன்று கிடைக்க நேர்ந்தால் அவனது தனிமை தூரம் செல்லும். இல்லையென்றால் தனிமையே அவனுக்கு துணையாகிவிடும்.
நிமிடத்திற்கு நிமிடம் பல்வேறு வழியில் தாவி தன்னை ஆழ்த்தும் பெரும் குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ம்ருதவ், பேண்ட் பாக்கெட்டிற்கு மேலாக கை வைத்து, உள்ளே இருக்கும் ஜிமிக்கியை உணர முயன்றான்.
இரவில் உறக்கமின்று உருண்டவன், ஏதோ எண்ணத்தில் ஜிமிக்கியை எடுத்து உள்ளங்கைக்குள் அமிழ்த்திக்கொள்ளவே உறக்கம் அவனை தழுவியிருந்தது. அதிலொரு இதமிருக்க உடன் வைத்துக்கொள்ள எண்ணியே கையோடு வைத்திருக்கிறான்.
தனிமையின் விடையாய் ஜிமிக்கி இருந்திட, அவனுக்கு பெரும் துணையாய் முன்னால் ஒரு நிழல் அவனைத் தேடி வந்தது.
“இவன் என்ன ரதி ஒரு நேரம் பிரகாசமா தெரியுறான் இன்னொரு நேரம் சோகமா மாறிடுறான்.” காலையிலிருந்து அருகிலிருந்து பார்க்கும் கமலேஷுக்கு நண்பனின் நிலை புரியவில்லை.
“அவன் சித்தப்பாவை இழந்த சோகத்தில் அப்பப்போ சசோகமாகுறான். ஆனால் அதிலிருந்து வெளிவர அப்பப்போ ட்ரை பண்றான் நினைக்கிறேன்” என்ற ரதி, “சிவா மொத்தமா இதிலிருந்து வெளிவர கண்டிப்பா அவன் மனசுக்கு டைவர்ஷன் வேணும்டா” என்றாள்.
“ஹ்ம்ம்” என்ற கமலேஷ், “பெல் அடிக்கிறதுக்குள்ள சொல்லிடுவாளா?” என்றாள்.
“சொல்லுவாள் நினைக்கிறேன்” என்ற ரதி, “ரொம்பவே நெர்வெஸ்சா இருக்காள்” என்றாள்.
ரதி சொல்லியதைப்போன்று தான் மித்யுகா மிகுந்த பதற்றத்துடன் ம்ருதவ்வை நெருங்கியிருந்தாள்.
முகம் அத்தனை வியர்த்திருந்தது. கால்கள் நடுங்கிட, ம்ருதவ்விற்கு அருகில் இடைவெளி விட்டு மேடையில் மறு முனையில், அவன் பார்த்திருக்கும் திசைக்கு எதிர் திசையைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டாள்.
தான் அமர்ந்திருக்கும் மேடையில் யாரோ வந்து அமர்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்த ம்ருதவ், ஓரவிழியால் யாரெனப் பார்க்க, பக்கவாட்டில் ஒரு பகுதியும், முதுகும் மட்டுமே தெரிந்தது. அதுவே பெண்ணென்று காட்டிக்கொடுக்க, எழ முனைந்தான்.
அவன் சென்றுவிடுவானோ எனும் பதற்றத்தில்,
“தண்ணி… தண்ணி இருக்கா?” என,
மித்யுகா மென் திணறலோடு கேட்க, தன்னிடமா என்பதைப்போன்று நன்றாகத் திரும்பிப் பார்த்த ம்ருதவ், நிச்சயம் தன்னுடைய அருகில், நெருக்கத்தில் மித்யுகாவை எதிர்பார்க்கவில்லை.
ரதியின் பேச்சை வைத்து மித்யுகா இரண்டாம் ஆண்டு என்று மட்டுமே தெரிந்து வைத்திருந்தவனுக்கு அவளைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற முனைதல் இருந்தாலும், தானாக விசாரித்தால், நண்பர்களின் பார்வை மாறுமென்பதால் அவளைப்பற்றி மேற்கொண்டு எவ்வாறு அறிந்திடுதலெனத் தெரியாதிருக்க, தற்சமயம் அவளே வந்து பேசிட, அவனுக்கு எப்படி பதில்வினை செயலாற்ற வேண்டுமென்றுத் தெரியவில்லை.
அவளின் முகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து கரை ஒதுங்கிவிட்டான்.
இதயத்தின் பெருவெளியில் ஒற்றைத்துளி ஜீவனை உயிர்ப்பூக்க வைத்திடும் அன்பின் நிழலாய் அவள் முகம் தனக்குள் நிகழ்த்தும் மாற்றம் உணர்ந்தவனுக்கு அவளது கரத்தினை பற்றிக்கொள்ள வேண்டுமென்ற தவிப்பு.
தனது தவிப்பில் அவள் முகம் காட்டும் தடுமாற்றத்தையும், வியர்வைத்துளிகளையும் கண்டவன்,
“என்ன… என்ன வேணும்?” எனக் கேட்டான்.
அவனிடம் காதலை சொல்ல வந்தவளுக்கு, எப்படி சொல்வதென்ற தயக்கம். தயக்கத்தை துறந்து பேச நினைத்தவளுக்கு நாவின் வறட்சி தொண்டை அடைக்க, அவனிடம் நீர் கேட்டிருந்தாள்.
இம்முறை வாய்திறந்து அத்தண்ணீரையும் கேட்க முடியாது, ம்ருதவ் தன்னிடம் பேசியதில் உறைந்தவள், அவனது ஆழ் விழிகளுக்குள் புதைந்தவளாக, தண்ணீர் என கையால் சைகை செய்தாள்.
“வெயிட்” என்று கேன்டீன் உள்ளே சென்ற வேகத்திற்கு திரும்பி வந்த ம்ருத்தவின் கையில் நீர் பாட்டிலிருக்க, மூடியைத் திறந்து அவளிடம் நீட்டினான்.
வாங்கி பருகியவளின் பார்வை, கருவிழி தாழ்ந்த வழியாக தனக்கு முன் நின்றிருந்தவனின் உருவம் ரசித்தது.
குடித்து முடித்து பாட்டிலினை அவனிடம் கொடுத்தாள்.
“போதுமா?” என்ற ம்ருதவ்வால் அவளின் பதற்றத்தை அறிய முடிந்தது.
மித்யுகாவின் பார்வை அவனில் அசையாது உயிர்த்திருக்க, போதுமென்று தலையை மட்டும் அசைத்தாள்.
“ஆர் யூ ஓகே?” என்ற ம்ருதவ், “உடம்பு சரியில்லையா?” எனக் கேட்டான்.
மனதில் பெருங்கடலாய் காதல் ஆர்ப்பரித்திருக்க, அதனை அவனிடத்தில் சேர்ப்பிக்க முடியாத தவிப்பின் சோர்வு அவளின் வெளிப்புறத்தில். உடல் மொழியில் அவஸ்தையின் உச்சம். ஆதலால் அவள் திணறிக்கொண்டிருக்க, அவனுக்கோ அவளின் உடல் நலன் குறித்த அக்கறை.
தற்போதும் அவனது கேள்விக்கு இடவலமாக இல்லையென மென் அசைப்பு மட்டுமே அவளின் பதில்.
“அப்போ என்ன பண்ணுது?” என்றான்.
“இங்க ரொம்ப பெயினா இருக்கு” என்று மித்யுகா இதயத்தில் கை வைத்திட…
“வாட்” என அதிர்ந்த ம்ருதவ், “வாங்க காலேஜ் ஹெல்ப் சென்டர் போகலாம். அங்க பெயின் சொல்லிட்டு சாதாரணமா இங்க உட்கார்ந்திருக்கீங்க” என நொடியில் அதீத பதற்றத்திற்கு ஆளாகியிருந்தான்.
அவனின் பதற்றம், பரிதவிப்பு தனக்காக எப்படியென்று நினைத்தாலும், தனக்காக என்பதில் மகிழ்வுகொள்ளவேச் செய்தாள்.
மரத்திற்கு பின்னிருந்த கமலேஷ், “லவ் சொல்லுவான்னு பார்த்தா இவள் என்ன ரதி நெஞ்சு வலிக்குது சொல்றாள். எதுவும் பிரச்சினை ஆகிடப்போகுது. வா போய் என்னன்னு பார்ப்போம்” என்றான்.
“நீ கொஞ்சம் சும்மா இருடா” என்ற ரதி, “என்ன நடந்தாலும் சிவா பார்த்துப்பான்” என்றதோடு, “அவனோட பதட்டத்தைப் பார்த்தியா?” என்றாள். கவனித்தவளாக, அர்த்தமாய்.
“ஆமா… இவென்ன யாருன்னு தெரியாத பொண்ணுக்காக இவ்ளோ பதறுறான். அன்னைக்கு எனக்கு கிரவுண்ட்ல அடிபட்டப்போ, விளையாட்டு அப்படின்னா அடிபடத்தான் செய்யும். ஹாஸ்பிடல் போனால் சரியாகிடும்னு அவ்ளோ கூலா சொன்னவன் தான” என்றான்.
“புலம்பாம என்ன நடக்குது பாருடா” என்ற ரதி, கமலேஷின் காலை மிதித்த கணம், அவனின் வாயை கை வைத்து மூடியிருந்தாள்.
“ரொம்ப வலிக்குதா? உங்களால ஹெல்ப் சென்டர் வரை நடக்க முடியுமா?” என்ற ம்ருதவ், அவளின் விழிகளில் வழிந்த ரசனையை கவனிக்க மறந்தான்.
“எனக்கு… எனக்கும் என்ன பண்ணனும் தெரியல” என்று அலைபேசியை எடுத்தவன், ரதிக்கு அழைப்பு விடுக்க…
“யாருக்கு கால் பண்றீங்க?” என வேகமாக அலைபேசியை பறித்து, திரை பார்த்து,
“ரதி அக்காக்கா?” என்றவளாகத் துண்டித்திருந்தாள்.
அவள் ரதியைப்பற்றிக் கேட்டதில் அவனுக்கு ஆச்சரியமெல்லாம் இல்லை. அவன் தான் ஏற்கனவே அறிவானே, தன் மூலமாக ரதியையும், ரதி வாயிலாக தானும் நண்பர்களென அவள் அறிவாளென!
“எஸ்… ரதி வந்தா உனக்கு ஃபீல் ப்ரீயா இருக்கும். நான் ஹெல்ப் சென்டர் போயிட்டு ஆள் கூட்டிட்டு வர்றேன்” என்றான்.
“இந்த பெயின் யார் வந்தாலும் சரிசெய்ய முடியாது” என்று மித்யுகா கூற, ம்ருதவ்வின் புருவம் சுருங்கியது.
“உங்ககிட்ட பேசணும். உட்கார்றீங்களா?”
மித்யுகாவின் பேச்சு புரியாவிட்டாலும், அவள் காண்பித்த இடத்தில் அமைதியாக அமர்ந்தான்.
“நிஜமாவே வலியிருக்கா?”
இதயத்தில் வலியென்பவள் அத்தனை இலகுவாக அமர்ந்திருக்கவே வினவினான்.
“எஸ்… ஆனால் இந்த வலி பிடிச்சிருக்கு” என்றாள்.
ம்ருதவ் விழித்தவனாகப் பார்த்திருந்தான்.
“என்னை உங்களுக்கு நினைவிருக்கா?” மித்யுகா அவ்வாறு கேட்டதும், அவள் அடுத்து ஜிமிக்கியத்தான் கேட்டுவிடுவாளோ என நினைத்த ம்ருதவ்,
“நிஜமா உங்க ஜிமிக்கி என்கிட்ட இல்லை” என வேகமாகக் கூறினான்.
மெலிதாகப் புன்னகைத்த மித்யுகா,
“உங்ககிட்ட இருந்தாலும் இப்போ எனக்கு அது வேணாம்” என்றாள்.
ம்ருதவ்விடம் ஏனென்று தெரியாத ஆசுவாசம். அதில் அவனது மூச்சு பலமாக வெளியேற, அவளின் முகம் சேர்ந்தது… அவனது தகிப்பின் சில்லிப்பாய். கண்கள் மூடியவள், அவனின் மூச்சுக்காற்று வருடலில் இதயத்தின் மீது வைத்திருந்த கையை நீவிக் கொடுக்க…
“ரொம்ப பெயின் ஆகுதா?” என்று பதறினான் ம்ருதவ்.
“இந்த பெயின் போகனும்னா, இந்த மித்யுகா, இந்த ம்ருதவ்வோட வாழ்க்கையாகணும்” என பனி உறையும் ஈரமாய் மொழிந்திருந்தாள்.
மித்யுகா சொல்லிய வார்த்தைகளின் பொருள் புரிய ம்ருதவ்வுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.
புரிந்ததும் அவனிடத்தில் பலவகையான உணர்வுகள்.
‘என்ன சொல்றா இவள்? ஷீ லவ்ஸ் மீ? ஆமாவா?’ தனக்குள்ளே பல்வேறு வகையான கேள்விகளில் உழன்றான்.
“இங்க ஆழமா இறங்கிட்டீங்க. ரொம்ப அவஸ்தையா இருக்கு. சரிபண்ணனும் அப்படின்னா ம்ருதவ் மித்யுகா வாழ்க்கையாகனும், வாழனும்” என இம்முறை ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி கொடுத்து அழுத்தமாகக் கூறினாள்.
ம்ருதவ்வுக்கு சந்தோஷம் தான். ஆனால் எப்படியெனும் வினா அவனிடத்தில்.
“என்னவோ பார்த்ததும் உள்ள வந்துட்டீங்க. போகச்சொல்லி வெளியனுப்ப என்னால முடியாது. நீங்களும் உங்களுக்குள்ள நான் வர அனுமதிச்சா போதும்” என்றாள்.
ம்ருதவ் விரும்பியதுதான். அவள் தன்னுடன் இருந்தால் தனது சோகம் மறையுமென நினைத்ததுதான். ஆனால் காதலாக என்று அந்த வழியில் அவன் யோசிக்கவே இல்லையே.
“உங்களுக்கு எல்லா உறவாவும் நானிருப்பேன் சொல்லல… எனக்கு எல்லா உறவாவும் நீங்க வேணும் ஆசைப்படுறேன். எல்லா உறவுக்குமான உங்களோட முதல் அன்பு எனக்கே எனக்கு வேணும் பேராசைப்படுறேன்” என்ற மித்யுகா,
“யாருமில்லன்னு நினைச்சு ஃபீல் பண்ற உங்க மனசுக்கு, நான் இருக்கேங்கிற நிம்மதியை கொடுக்கணும் தோணுது. பார்த்ததும் வந்த லவ் தான் பரிதாபத்தில் இல்லை. எனக்கு ஓகே சொல்லுவீங்களா? உங்க வாழ்க்கைக்குள்ள இந்த மித்யுகா வர, ம்ருதவ் அனுமதி கொடுப்பாங்களா?” என பிரபஞ்சத்தின் மொத்தமும் எனக்கு நீயாக வேண்டுமென்ற பொருளில் காதலை உரைத்திருக்க, அவனிடத்தில் உறைநிலை.
“எனக்குள்ள கண்ட்ரோல் பண்ணி வச்சிக்க முடியாத அளவுக்கு உங்க மேல காதல். அதான் டக்குன்னு சொல்லிட்டேன். நீங்க உடனே பதில் சொல்லணும் அவசியமில்லை.
மித்யுகாவுக்கு ம்ருதவ் வேணும். ம்ருதவ்வுக்கும் மித்யுகா வேணுமான்னு ம்ருதவ் தான் சொல்லணும். நான் வெயிட் பண்றேன்” என்றாள்.
“என்னைப்பற்றி…”
“நீங்க வேணும். அவ்ளோதான்.”
ம்ருதவ் மறுப்பிற்கு எதுவும் காரணமாக அமைந்திடக் கூடாதென அவனை பேசவிடாது வேகமாக பதில் வழங்கியிருந்தாள்.
“எனக்குன்னு யாருமில்லை. குடும்பமில்லை. ரெண்டு ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்.”
“அதான் சொன்னனே… உங்களுக்கு எல்லாமாவும் நான் வரல. எனக்கு எல்லாமாவும் நீங்க வேணும். இதுவரை யாருக்கும் முழுசா கிடைக்காத உங்க அன்பு எனக்கே எனக்குன்னு வேணும்” என்ற மித்யுகா, “எனக்கு நீங்க செட்டாவீங்களான்னு யோசிக்காம, உங்களுக்கு நான் மட்டும்தான் செட்டாவேன்னு யோசிங்க” என்றாள்.
“எனக்கு என்ன சொல்லணும் தெரியல.”
“நான் இப்போவே சொல்லணும் சொல்லலையே!”
அந்நேரம் இடைவேளை முடிந்ததற்கான மணி ஒலிக்க…
“இனி இங்க” என அவனின் இதயத்ததை நோக்கி சுட்டுவிரல் நீட்டியவள், “யாருமில்லன்னு ஒரு செக்கென்ட் கூட தோணக்கூடாது” என்றதோடு, “இங்க” என தனது இதயத்தை நோக்கி விரலை திருப்பி, “நீங்க அதிகத்துக்கும் நிறைஞ்சிருக்கீங்க அப்படிங்கிற எண்ணம் வரணும்” என்றாள்.
“ரதி, கமலேஷ் என்ன சொல்லியிருக்காங்க தெரியல. ஆனால் என்னைப்பற்றி முழுசா உனக்கு எதுவும் தெரியாது…”
கை காட்டி ம்ருதவ்வின் பேச்சை தடை செய்த மித்யுகா,
“எனக்கு தெரிஞ்சது கொஞ்சமாவே இருக்கட்டும். முழுசா தெரிஞ்சிக்கிறேன், உங்க பக்கத்துல வந்து” என்றாள்.
மித்யுகாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் ம்ருதவ்வின் இதயம் அவள் பக்கம் சாயத் துவங்கியது.
வார்த்தைகளில் மட்டுமல்ல, விழி மொழியிலும், உள மொழியிலும் காதலை கொட்டிக்கொடுத்து ம்ருதவ்வின் இதயத்தில் ஆழம் இறங்கியிருந்தாள்.
“ரொம்ப லேட் ஆச்சு?”
மித்யுகா எதை குறிப்பிட்டாளோ, ம்ருதவ்வுக்கு… அவள் தன்னிடம் எதிர்ப்பார்க்கும் பதிலுக்காகத்தானோ அவ்வாறு கூறுகிறாள் என்றே தோன்றியது.
அவனது அகம் அவள் உணர,
“நான் க்ளாஸ்க்கு லேட் ஆச்சுன்னு தான் சொன்னேன்” என்றவள்,
“உங்க மொபைல் நெம்பர் வேணும்” என்றாள்.
“என்னைப்பற்றி எல்லாம் சொன்ன ரதி, என் நெம்பர் கொடுக்கமாட்டேன் சொல்லிட்டாளா என்ன?” ம்ருதவ் ஒற்றை புருவம் உயர்த்தி வினவ, அவள் கண்களில் ரசனை கூடியது.
“என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியுறீங்க” என்றாள் மித்யுகா.
“உன் கண்ணுக்கு மட்டும்தான” என்ற ம்ருதவ், “நல்லது” என்றான்.
அவளுக்கு அவன் பேச்சு சுத்தமாக விளங்கவில்லை.
“நெம்பர்?”
“எனக்கு ஓகேன்னு தோண வேண்டாமா?” என்ற ம்ருதவ், நொடியில் சுருங்கியவளின் வதனம் சுண்டி இழுக்க… தனது அலைபேசியை எடுத்து கடவுச்சொல் திறந்து அவளிடம் நீட்டினான்.
நிலவாய் முகம் ஒளிர, இமைகள் விரித்து…
“எனக்கானதெல்லாம் உங்ககிட்டேர்ந்து நேரா வரணும். அதான் ரதி அக்காகிட்ட உங்க நெம்பர் கேட்கல” எனக்கூறி அவனது அலைபேசியில் தன்னுடைய எண்ணை பதிந்தாள்.
“நானும், என் காதலும் உங்க இதயத்துக்கு வந்துட்டா கால் பண்ணுங்க” என்று அலைபேசியை கொடுத்துவிட்டு ஓடியிருந்தாள்.
மித்யுகா அவளது பெயரில் பதிந்த எண்ணை திறந்து, அவள் பெயரை அழித்துவிட்டு ‘ஜிமிக்கிப்பொண்ணு’ என மாற்றிப் பதிந்து, சட்டைப்பையில் அலைபேசியை வைத்து நான்கு விரல்களால் தட்டிக் கொடுத்தபடி, நின்ற இடத்திலிருந்து சுற்றி சுழன்று நிலைக்கொண்டு பின் கேசம் வருடினான்.
‘யாருமில்லா வெற்றிடத்தில்
எல்லாமுமாய் நீ நிறைய…
உனதன்பில் சரணாகிறேன்.’
error: Content is protected !!