Skip to content
Post Views: 1,567
விக்ரம் பார்த்தசாரதி 04
இன்று இரவு விமானத்தில் அமெரிக்கா கிளம்புகிறாள் ஆராதனா.
“விக்ரம், ஆரா இன்னைக்கு யூ.எஸ் கிளம்பறா. அவளை செண்ட் ஆஃப் பண்ண ஏர்போர்ட் போயிட்டு வருவோமா?” துவங்கினார் அம்மா.
எங்கள் இருவருக்கும் இடையில் நடந்த எதையும் வீட்டில் யாரிடமும் நான் சொல்லவில்லை.
Advertisement
“நான் இன்னைக்கு மலேஷியா கிளம்பறேன் மா. டூ டேஸ் ட்ரிப். நைட்தான் எனக்கும் ஃப்ளைட். நான் அப்படியே அவளை செண்ட் ஆஃப் பண்ணிட்டு கிளம்பறேன். நீங்க வீட்டிலே ரெஸ்ட் எடுங்க. நீங்க ரெண்டு நாளிலே பெரியம்மா பொண்ணு கல்யாணத்துக்கு சிங்கப்பூர் கிளம்பணும் இல்லையா. பேக்கிங் வேறே பண்ணணும்”
விக்ரமாகிய நான் இத்தனை நீளமாக பேசியதாக வரலாறே இல்லை.
“இப்போ என்னடா அவ கிளம்பும் போது நீ அவ கூட தனியா பேசணும் அவ்ளோதானே. போயிட்டு வா”
Advertisement
‘ஆம் அதற்குதானே அவளது விமான நேரத்தை ஒட்டியே உனது விமான நேரத்தையும் திட்டமிட்டுக் கொண்டாய்’ உள்ளிருந்து ஏதோ ஒன்று சொன்னது.
Advertisement
இத்தனைக்கு பிறகும் இந்த விக்ரமால் அது முடிந்து விடுமா? அவளோடு பேசி விடுவேனா? எனக்கே தெரியவில்லை.
அடுத்த சில மணி நேரங்களில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வி.ஐ.பி லவுஞ்சுக்குள் சென்று அமர்ந்தேன்.
அவளது விமான நேரம் தெரியும் எனக்கு. விமான நிலைய செயல் முறைகளை முடிந்துக் கொண்டு எப்படியும் இங்கேதான் வந்து அமர்வாள் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.
Advertisement
எனது மடிக்கணிணியை பிரித்து வைத்துக் கொண்டு அமர்ந்தேன் நான். வெளியே விமான நிலையத்தின் பரபரப்பைத் தாண்டி, லவுஞ்சுக்குள் காலடி எடுத்து வைத்த நொடியே, பூமி சற்றே மெதுவாக சுழல ஆரம்பித்ததைப் போன்றதொரு ஒரு உணர்வு.
மென்மையான விளக்குகள் பொன்னிற ஒளியை பரப்பிக் கொண்டிருக்க, மெரூன் வண்ணத்தை தத்து எடுத்து இருந்த அழகான உள் அலங்காரம் கண்களை வருட, மென் இருக்கையில் சரிந்து உடலை சற்றே தளர்த்திக் கொண்டேன்.
அங்கே இருந்த ஒரு சிலர் அமைதியை நாடி கண்களை மூடிக் கொண்டு சாய்ந்திருக்க, ஒரு சிலர் தங்களது மடிக்கணினியினுள் மூழ்கி இருந்தார்கள்.
‘இதோ அவள் வந்து விடுவாள்’ என்று உள்ளுக்குள் சொன்னது ஏதோ ஒன்று. மடிக்கணிணியினுள் புதைய இப்போது ஏனோ மனமில்லை.
அடுத்த சில நிமிடங்களில் நான் கேட்ட காபி என்னை நோக்கி வந்தது. சூடான காபி கையில் இருக்க, ஜன்னலுக்கு வெளியே விமானங்கள் அசைந்து நகரும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
அதில் ஒரு விமானம், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்கு சொந்தமான விமானம். அது ஏதேதோ நினைவலைகளை எனக்குள்ளே எழுப்பியது.
சில மாதங்களுக்கு முன்னால் வந்த லண்டன் நகரத்தின் அந்த இரவு என்னால் மறக்க முடியாத ஒரு இரவு.
அவள் எனது சட்ட ஆலோசகர் என்று ஆன பிறகு, நானும் ஆராதனாவும் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கு கொள்ள சென்றிருந்தோம். கருத்தரங்கம் முடிந்த அந்த இரவில் பெரிய விருந்து ஒன்று நடந்து கொண்டிருந்தது.
மின்னும் அலங்கார விளக்குகளின் கீழே, உலகத்தின் பல நாடுகளிலிருந்து வந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், என அனைவரும் தங்களது வெற்றியின் மிதப்பில் களித்துக் கொண்டிருந்தனர்.
நானும் ஆராதனாவும் எங்களது தொழில் முறை நண்பர்கள் சிலருடன் பேசிவிட்டு நகர்ந்த அந்த நொடியில், பார் கவுண்டரின் அருகில் நின்றிருந்த சிலரது கிசுகிசுப்பும், சிரிப்பும் எங்களது செவிகளில் விழுந்தன
“ஓ தட் லிம்பிங் கை ஃபரம் இந்தியா…” (இந்தியாவில் இருந்து வந்திருக்கும் நொண்டிப் பயல்)
எப்போதும் போல கொதித்துதான் போனேன் நான். அங்கே பேசியவர்கள் லண்டன் நகரத்தின் சில வியாபார ஜாம்பவான்கள்.
அவர்களை நோக்கி எனது அடுத்த எதிர்வினையை எப்படி செலுத்துவது என்பதை நான் யோசிக்கும் முன்பாகவே அவர்களை நோக்கி நடந்து இருந்தாள் ஆராதனா.
‘என்ன செய்யப் போகிறாள் இவள்?’ ஆராதனாவை வியப்பு மேலோங்கப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை எனக்கு.
“ஜென்டில்மென்…” என்று தொடங்கிய அவளது குரல், மிகக் கம்பீரமாக ஒலித்தது. “கொரோனா காலத்தை நான் உங்களுக்கு நினைவுப் படுத்தலாமா?” என்றாள் தெளிவான ஆங்கிலத்தில்.
அவர்கள் சற்று முன் பேசியதில் எனக்கு எழுந்த கோபம் இப்போது மெல்ல மெல்ல குறைய, ஒரு சின்ன சுவாரஸ்யத்துடன் அவளையே பார்த்திருந்தேன்.
அங்கே என்னை கேலி பேசிய ஜாம்பவான்களின் சாம்ராஜ்ஜியங்கள் கொரோனா காலத்தில் சரிந்த கதையை அனைவருமே நன்றாக அறிவார்கள்.
அதே கொரோனா நேரத்தில் நான் மருத்துவம் சம்மந்தப் பட்ட இரண்டு துணை நிறுவனங்களை ஆரம்பித்து அதை இன்று வரை வெற்றிகரமாக் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
அதைத்தான் அவள் குறிப்பிடுகிறாள் என்பதும் அவர்களுக்கும் புரியத்தான் செய்தது. அவர்களின் முகத்தில் இருந்த சிரிப்பு மெல்ல மெல்ல தேய்ந்தது.
“கொரோனா நேரத்தில் விக்ரம் இரண்டு துணை நிறுவனங்களை துவங்கி வெற்றிகரமாக நடந்தினார் என்பது உங்களுக்கு எல்லாம் நினைவில் இருக்கிறதா?” அவளது ஆங்கிலம் மிக அழகாக விளையாடியது அங்கே. “இட்ஸ் இண்டரெஸ்டிங் இஸின்டிட்?”
அங்கே என்னை கேலிப் பேசியவர்கள் பார்வை இப்போது என்னை மரியாதையுடன் தொட்டுத் திரும்பியது. இப்போது அவர்களை நேருக்கு நேராக பார்த்தாள் பெண்.
“ஸம் பீபிள் லிம்ப் அண்ட் ஸம் கொலாப்ஸ்” என்றாள் நிதானமாக. (சிலர் நடக்கும்போது சற்று தடுமாறலாம். ஆனால் சிலர் நிமிர்ந்து நின்றபடியே சரிந்து விழுந்து விடுகிறார்கள்.)
அவளது குரலில் கோபம் இல்லை, அவளது வார்த்தைகளில் அவமரியாதை இல்லை. அதே நேரத்தில் அவளது வார்த்தைகளில் இருந்த உண்மை அவர்களை பேச்சிழக்க செய்திருந்தது.
அடுத்த நிமிடம் ஒவ்வொருவராக தங்களது கைப்பேசியுடன் கலைந்து நகர்ந்தார்கள். இதழ்களில் புன்னகை தேங்க அவர்கள் போகும் திசையை பார்த்தபடியே நின்றிருந்தாள் ஆராதனா.
அவர்கள் எல்லாரும் கலைந்து போன பிறகு அவளது அருகில் சென்று நின்றேன் நான்.
“உனக்கு எதுக்கு இந்த வேலை? ஐ நோ டு டிஃபெண்ட் மை செல்ஃப் ஆராதனா” என்றேன் நான்.
எனக்காக யாரும் வழக்காட வேண்டும் என்று நான் எப்போதுமே நினைத்தது இல்லை. நான் விரும்பிய வைஷாலி கூட எனக்காக நிற்கவில்லை என்பதை நான் நன்றாக உணர்ந்த காலகட்டம் அது.
“அச்சோ விக்ரம் நான் உங்களுக்காக பேசலை. அவங்களுக்கு சில விஷயங்கள் மறந்து போச்சு அதை ஞாபகப் படுத்திட்டு வந்தேன்” என்று வெகு சாதாரணமாக சொல்லி விட்டு நடந்தாள் அவள்.
சிலையாகித்தான் போனேன் நான். அந்த நிமிடத்தில் எனக்குள் ஆழமாக பதிந்து போனாள் ஆராதனா. அதன் பிறகு அவள் மீதான எனது நம்பிக்கை நான்கு மடங்காகிப் போனது.
அதனாலேதான் அவள் இப்போதே எனதாகி விட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறதோ எனது மனது?
நிச்சியத்தில் நடந்ததை எல்லாம் அவளிடம் அப்போதே சொல்லி இருந்தால் ஒரு வேளை அவள் புரிந்து கொண்டிருப்பாளோ?
இந்த யோசனைகளிலேயே நிமிடங்கள் கடக்க இங்கே விமான நிலையத்தில் அவளது வருகையை எனக்கு உணர்த்தியது எனது உள்ளுணர்வு.
சட்டென பழைய நினைவுகளில் இருந்து தரை இறங்கியவன், அடுத்த நொடி மடிக்கணிணியை நாடி இருந்தேன்.
அவளது பெற்றோர் அவளை வழியனுப்ப வந்திருந்தால் கூட, அவர்களுக்கு இங்கே உள்ளே அனுமதி இல்லை என்பது தெரியும் எனக்கு.
அடுத்த மூன்றாம் நொடியில் மெல்ல மெல்ல விழிகளை மட்டும் சற்றே நிமிர்த்தினேன்.
நான் நினைத்தபடியே வந்து கொண்டிருந்தாள் அவள். ஆனால் நினைக்காத வண்ணம் அவளுடன் அவளது சுபி ஆன்ட்டியும் வந்து கொண்டிருந்தார். எடவ்ர்டை மாப்பிள்ளை என்று சொன்ன அதே ஆன்ட்டிதான் .
அவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்பதை அறிவேன் நான். இன்று அவரும் ஊருக்கு கிளம்புவாராக இருக்கும்.
அவரது திடீர் வருகை எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. நடந்து வந்தவளும் என்னை கவனித்ததாகத் தெரியவில்லை. அவளுடன் வந்த ஆன்ட்டியும் என்னை கவனிக்கவில்லை.
எனது ட்ராலி எனது இருக்கையின் அருகே இருக்க, அதனருகேயே அவர்களது உடைமைகளை வைத்து விட்டு, நான் அமர்ந்து இருந்த இருக்கைக்கு இடப்பக்கம் சற்றே தள்ளி, காலியாக இருந்த இரண்டு இருக்கைகளை தங்களதாக்கி கொண்டார்கள் இருவரும்.
அப்படி ஒரு சுவாரஸ்யமான பேச்சு இருவருக்கும். அவர்கள் பேசும் வார்த்தைகள் அவ்வப்போது எனது செவிகளை தொட்டும் சென்றன.
அவர்கள் பேசுவது முழுவதுமாக புரியா விட்டாலும் அவர்கள் பேச்சில் நான் இல்லை என்பது மட்டும் எனக்கு சரியாக புரிந்தது.
அவள் வந்து ஒரு கால் மணி நேரம் கடந்து இருந்த நிலையில், சுபி ஆன்ட்டி கிளம்பும் நேரம் வந்து விட அவரது உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை வழியனுப்ப நடந்தாள் ஆராதனா.
இப்போது அங்கே தனித்து அருகருகே நின்றிருந்தன எங்கள் இருவரின் ட்ராலிகளும். சில நாட்களுக்கு முன்னால் நாங்கள் இருவரும் ஒரே நிறத்திலான உடையுடன் எங்களது நிச்சயத்தில் நின்றோமே அதை நினைவுப் படுத்தின அவை இரண்டும்.
நிமிடங்கள் கடக்க சுபி ஆன்ட்டியை வழியனுப்பி வைத்து விட்டு விறுவிறுவென உள்ளே வந்தவள் என்னை சட்டென கவனித்து இருந்தாள்.
இப்போது மடிக்கணிணியை விட்டு பார்வையை அகற்றி நன்றாக சாய்ந்து அமர்ந்தேன். மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவளை நேருக்கு நேராகப் பார்த்தேன் நான்.
என்னை அவள் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை போலும். திகைத்துப் போனவள் தன்னையும் அறியாமல் சட்டென எனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தே விட்டிருந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒற்றை வார்த்தை கூட எழவில்லை. அவ்வளவு ஏன் ஒற்றை புன்னகை கூட சிந்தவில்லை அங்கே.
அங்கிருந்த மௌனத்தை இளக்கி விட பல வழிகளை யோசித்து, கடைசியில் அங்கிருந்த ஒரு சிப்பந்தியை அழைத்து இரண்டு காபிகளை கொண்டு வர சொன்னேன் நான்.
அப்போது திடீரென எங்களது அருகில் வந்து நின்றாள் அவள். லாயர் ஸ்ரீரஞ்சனி.
“ஹாய் விக்ரம்” மலர்ந்து என்னுடன் கைக் குலுக்கினாள் அவள். தொழில் முறையில் நாங்கள் அவ்வப்போது சந்தித்து கொள்வது உண்டு
“ஹவ் ஆர் யூ? லாங் டைம்?”
“எஸ் ரஞ்சனி லாங் டைம். ஐ ஆம் கிரேட். ஹவ் அபவுட் யூ” என நலம் விசாரிப்புகள் தொடர, இப்போது அவளது பார்வை சென்று ஆராதனாவின் மீது நின்றது.
“இவங்க? ஓ? உங்களுக்கு ரீசென்டா எங்கேஜ்மென்ட் ஆச்சு இல்லையா? இவங்கதான் உங்க ஃபியான்ஸியா?”
அவளது கேள்வியில் ஆராதனாவின் முகத்தில் பல விதமான உணர்வுகள்.
“வெல்” என்றேன் ஆராதனாவின் முகம் பார்த்துக் கொண்டே. உண்மையில் அவள் அமோதித்து ஏதாவது பதில் சொல்வாள் என சில நொடிகள் அவளது முகம் பார்த்து காத்திருந்தேன்.
ஆனால் அங்கே இருந்து எந்த எதிர்வினையும் இல்லாமல் போக
“ஆக்சுவலி ஷீ இஸ் மை லீகல் அட்வைசர் ஆராதனா வாசுதேவன்” நிறுத்தி நிதானமாக சொன்னேன் நான். இப்போதும் எனது பார்வை ஆராதனாவை விட்டு அகலவில்லை.
அவளிடம் இப்போதும் எந்த எதிர்வினையும் இல்லை.
“ஓ.. ஐ ஆம் ஸாரி. இவங்களை பார்த்ததும் தப்பா நினைச்சுட்டேன். வெரி க்ளாட் டு மீட் யூ மேடம்” என அவளை நோக்கி கை நீட்டினாள் ரஞ்சனி.
ஆராதனா எழுந்து அவளுடன் கைகுலுக்க அப்போது எங்களை நோக்கி வந்தன நான் கொண்டு வரச் சொல்லி இருந்த இரண்டு கோப்பை காபிகள்.
“வுட் யூ லைக் டு ஹேவ் அ கப்?” என அந்த காபியில் ஒன்றை எடுத்து ரஞ்சனியை நோக்கி நீட்டினாள் ஆராதனா.
“வொய் நாட்?” வாங்கிக் கொண்டு எங்களின் அருகே அமர்ந்தாள் ரஞ்சனி.
“அண்ட் திஸ் இஸ் ஃபார் யூ அராதனா” சொல்லியும் விட்டான் இந்த விக்ரம். அது என்னவோ அவளுக்கென நான் வாங்கிய காபியை அவள் குடிக்க வேண்டும் என்று ஒரு சின்ன தவிப்பு எனக்குள்ளே,
“இல்ல எனக்கு வேண்டாம் விக்ரம்” இது ஆராதனாவின் அழுத்தமான பதில்.
“வொய்? நீங்க காபி குடிக்க மாட்டீங்களா” கையில் இருந்த காபியை குடித்துக் கொண்டே கேட்டாள் ரஞ்சனி.
“எஸ் ரஞ்சனி. நான் காபி குடிக்கறது இல்லை”
அவளது வார்த்தைகள் என்னை கூர் அமபாய் தாக்கின. ‘ஏன் நான் அவளுக்கென வாங்கிய காபியை குடிக்க மாட்டாளாமா?’
எத்தனை பெரிய பொய் இது? காபி அவளது முதல் காதல் என்பதை மிகத் துல்லியமாக அறிந்தவன்.
இந்த விக்ரம் விக்ரமாகவே இருந்திருந்தால் அங்கே என்ன நடந்திருக்கும் என்பது எனக்கே தெரியவில்லை.
இரண்டு நொடிகள் கண்களை மூடி சுவாசித்துக் கொண்டேன். என்னை நிலைப்படுத்திக் கொள்ள இப்போது அந்த காபி தேவையாகவே இருக்க, அதை கையில் எடுத்து துளித் துளியாக பருகலானேன் நான்.
எங்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்து விட்டு ரஞ்சனி கிளம்பி விட, இப்போது எனது அருகில் இருந்தவளின் கண்களை நான் ஆழமாக பார்த்த வேளையில் ஒலித்தது அவளது கைப்பேசி.
அது ஒரு வீடியோ அழைப்பு என்று புரிய, நான் சற்று விலகி எனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள அழைப்பை ஏற்று
”ஹாய் எட்வர்ட்” என்றாள் முகம் மலர்ந்து. இமைக்காமல் அவளது முகத்தையே பார்த்திருந்தேன் நான்.
“ஹேய் பெல்லா. என்ன கிளம்பிட்டியா?” அமெரிக்காவில் அவன் உற்சாகமாக கூவியது எனது செவிகள் வரை வந்து சேர்ந்தது.
“எஸ் எட்வர்ட். ஏர்போர்ட்லே இருக்கேன்”
“ஏன் உன் முகம் டல்லா இருக்கு” அடுத்தக் கேள்வி பறந்து வந்தது அமெரிக்க நாட்டில் இருந்து.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை எட்வர்ட். விக்ரம் இஸ் ஹியர்” மெதுவாக எழுந்தது எனது சட்ட ஆலோசகரின் குரல்.
“வாட்? அவர் என்ன பண்றார் அங்கே? என்ன பேட்ச் அப் ஆ?” அந்தக் கேள்வியில் திகைப்பு மலை மீது ஏறி நின்றேன் நான்.
‘அவனுக்கு நடந்தவைகள் எல்லாம் தெரிந்து இருக்கிறது அப்படிதானே?’
“அதெல்லாம் இல்லை எட்வர்ட். போர்டிங் டைம் ஆச்சு. அப்புறம் கூப்பிடறேன்” அழைப்பை முடித்து விட்டு எழுந்து விட்டாள் அவள்.
அங்கே இருந்த ட்ராலியில் ஒன்றை தனது பக்கம் இழுத்துக் கொண்டு “ஸீ யூ விக்ரம்” என்பதை அருகிருந்த இருக்கைக்கு சொல்லி விட்டு நகர்ந்தாள் ஆராதனா.
அவள் எடுத்து சென்ற ட்ராலி என்னுடையது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எப்படியும் திரும்பி வருவாள் என்பதும் தெரியும். எந்த சலனமும் இல்லாமல் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன் நான்.
‘எப்படி உனக்குள்ளே இத்தனை அமைதி விக்ரம்? இந்த மாற்றத்துக்கு யார் காரணம்? ஆராதனாவா?’ நான் கண்களை மூடி எனக்குள்ளே கேட்டுக் கொண்டிருந்த வேளையில் அங்கே மறுபடியும் வந்து நின்றாள் ஆராதனா.
அவளது காலடி ஓசையில் கண்களை திறந்தவன் மெல்ல ஊன்று கோலை பற்றியபடியே எழுந்து நின்றேன்.
எனது ட்ராலியை அங்கே வைத்து விட்டு தன்னுடையதை எடுத்துக் கொண்டாள். பின்னர் மெல்ல நிமிர்ந்து எனது முகம் பார்த்தாள்.
“அவசரப் பட்டு தெரியாம மாற்றி எடுத்திட்டேன்” அவள் சொல்ல எனது பார்வை அவளது விழிகளை குடைந்தது.
“அப்படியா?” என்றேன் நிதானமாக.
எனது அப்படியா அவளுக்கு என்னென்ன அர்த்தங்களை சொல்லியது என்பது எனக்குத் தெரியவில்லை.
“நா.. நான் ட்ராலியை சொன்னேன்” படபடத்தாள் அவள்.
“புரிஞ்சது” என்ற எனது இதழ்களில் சிறிதாக ஒரு புன்னகை. இப்போது அவளுக்கு முன்னால் எனது வலது கையை நீட்டினேன் நான்.
அன்று நிச்சியத்தில் ‘மோதிரத்துக்கு கையை கொடு’ என்பதாக அவள் எப்படி என் முன்னால் கை நீட்டினாளோ அப்படியே நீட்டினேன் .
“ஆல் தி வெரி பெஸ்ட் ஆரா” என்றேன் அவளது முகம் பார்த்து.
எனது மனதில் இப்போது நிச்சியதார்த்த தினத்தின் இனிய தருணங்களின் நினைவு அலைகள். அவளது மனமும் அங்கேதான் சென்று நின்றிருக்க வேண்டும்.
இப்போது எனது கரத்தின் மீது அவள் கை வைத்து விடுவாள் என்று தான் நினைத்தேன் நான். செய்யவில்லை அவள்.
கைகுலுக்கும் விதமாகவே எனது முன்னே நீண்டது அவளது கரம். இப்போதும் எனது கரம்தான் மேலே எழும்ப வேண்டி இருந்தது. இருந்தாலும் புன்னகையுடன் கைக் குலுக்கினேன் நான்.
“எப்பவும் நீ சொன்ன இடத்தில எல்லாம் நான் சைன் பண்ணிடுவேன் ஆராதனா. ஆனா எனக்காக நான் உன்னை ஒரே ஒரு இடத்திலேதான் சைன் பண்ண சொன்னேன். அது கூட உன்னாலே செய்ய முடியலை இல்லையா ஆராதனா? வெரி குட்”
இத்தனை நிதானமாக நான் பேசியதே இல்லை எனும் படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு விட்டு சொன்னேன் நான். மெலிதான அதிர்ச்சி மேகங்கள் அவளது முகத்தில்.
பதில் எதுவும் சொல்ல முடியாமல் நின்ற அவளுக்கு இன்னொரு ‘ஆல் தி பெஸ்ட்டை” பரிசளித்தேன்.
தலை அசைத்து விட்டு தனது ட்ராலியை நகர்த்திக் கொண்டு நகர்ந்தாள் ஆராதனா.
error: Content is protected !!