Skip to content
Post Views: 2,661
*10*
அலைபேசியில் வந்திருந்த வாழ்த்துக்களுக்கு பதிலளித்து இவளும் வாழ்த்து அனுப்பிக்கொண்டிருந்தாள். விடிந்தாள் புது வருடம். தெளிந்த நீரோடையாய் பெரிதான மாற்றங்கள் இன்றி சென்றுகொண்டிருக்கும் அவள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்போகின்ற வருடம் இவ்வருடம் என்ற எண்ணமே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. அவனுக்கும் வாழ்த்து அனுப்புவோமா என்று அவன் பக்கத்தை திறந்து வைத்து யோசித்துக்கொண்டிருந்தாள்.
‘இப்போவே அனுப்புனா எல்லாருக்கும் அனுப்புற பார்வேர்ட் மெசேஜ் மாதிரி இருக்கும். நைட் கூப்பிட்டு பேசலாம், இல்லை வேண்டாம் ஷோரூம்லேந்து லேட்டா வந்து தூங்கி இருப்பாங்க. காலையில பேசலாம்.’ என்று தனக்குள் முடிவெடுத்தவளாய் அலைபேசியை வைத்துவிட்டு உறக்கத்திற்கு சென்றாள்.
“போன் அடிக்குது பாருடி. அலாரம் வச்சிருக்கியா? நிறுத்து முதல்ல.” என்று தூக்க கலக்கத்தில் பிரபா அவள் முதுகை தட்டவும் தூக்கத்தில் புரண்டு படுத்தவள் தொடர் சத்தத்தில் உச்சுகொட்டியபடி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். முகிலன் அழைத்துக் கொண்டிருந்தான். உறக்கம் எல்லாம் தூர சென்று நொடியில் பரபரப்பு ஒட்டிக்கொண்டது. படக்கென்று எழுந்து அமர்ந்தவள் உடனே அழைப்பை ஏற்றாள்.
Advertisement
“மலர்.”
“தூங்கலையாங்க?” மென்குரலில் கேட்டுக்கொண்டே சத்தம் காட்டாமல் அறையை விட்டு வெளியே வந்து கூடத்தில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தாள். அதிகாலை நாலரை என்று காட்ட அதிர்ந்துவிட்டாள்.
“இந்த நேரத்துல தூங்காம என்ன பண்றீங்க?”
Advertisement
“வெளில வா.”
Advertisement
“என்ன? இங்க வந்திருக்கீங்களா?” அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி என்று நிலைகொள்ளாமல் கண்கள் விரிந்துவிட்டது.
“மலர்.” அழைப்புக்கு கட்டுண்டு வேக வேகமாக கதவை திறந்துகொண்டு செல்ல, வெளிவாயிலில் முதுகுப்பையுடன் நின்றிருந்தான் முகிலன். இவள் தென்படவும் அழகான சிரிப்பொன்றை உதிர்த்து கையாட்ட, ஓட்டமும் நடையுமாய் வந்து கதவை திறந்துவிட்டாள்.
“மை மலருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.” என்று பையிலிருந்த பரிசை எடுத்து நீட்டினான் முகிலன்.
Advertisement
உறைந்துவிட்டாள் குழலி. இனிய அதிர்வில் கண்கள் கூட கலங்குவது போல் இருந்தது.
கையை அசைத்து என்னவோ சொன்னாள் அவனுக்குப் புரியவில்லை. வார்த்தைகள் கொண்டு அவளுணர்வை வெளிப்படுத்த முயன்றாள் தொண்டைக்குழி அடைத்துக்கொண்டது போல் ஒரு தடுப்பு. என்ன உணர்வு இது ஆனந்தமாகவும் அதே நேரம் மூச்சுமுட்டுவது போலவும் என்று திக்குமுக்காடிப் போய்விட்டாள். அவள் காட்டும் உணர்வுகளை உள்வாங்கியவனும் அவளைப் போலவே உணர்ச்சிவயப்பட்டான்.
துவக்கம் முதல் தங்கள் உறவில் அவளே முன்னெடுப்பு எடுத்து பேசவும் நீ என்ன செய்தாய் என்று ஒரு நாள் அவள் விளையாட்டாய் கேட்டதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் சமயம் புத்தாண்டு வரவும் நேரில் சந்தித்து வாழ்த்தி அவளுக்கு பரிசளிக்கலாம் என்று சாதாரணமாகத்தான் வந்திருந்தான். அப்படி வந்தவனுக்குத்தான் அவளுணர்வுகள் பரிசாகிப் போனது. நான் வந்ததில் இத்தனை மகிழ்வா இவளுக்கு என்று உரிமையுணர்வு சட்டென்று கூடிப்போனது ஆடவனிடம்.
தயங்காது இரண்டடி எடுத்து அவளை நெருங்கியவன் அவள் தோள் தொட்டு, “ரிலாக்ஸ் ஆகு மலர்.” என்கவும்தான் அவளுணர்வுகள் கட்டுக்கள் வந்தது.
கண்களை பரபரவென துடைத்தவள், “இல்லை… நான்… நான் வந்து உங்களை எதிர்ப்பாக்கல…” திக்கித்திணறியவள் அவன் கையிலிருந்த பரிசை பார்த்தாள்.
அவள் பார்வை உணர்ந்து அவளிடம் நீட்டினான். ஆர்வமாய் வாங்கிப் பிரித்தாள். உள்ளே ஸ்மார்ட் வாட்ச் ஒன்று இருந்தது. அதை அவள் கையிலெடுத்து பார்க்கும் முன் தன்வசப்படுத்தியவன் அவள் கைபிடித்து அணுவித்துவிட்டான். மார்கழிப் பனி சில்லுப்பா இல்லை அவன் தொடுதலில் உண்டான சிலிர்ப்பா என்று பிரித்தறிய முடியா வண்ணம் அவள் உடலில் சட்டென ஒரு குளிர்வு. லேசாக நடுக்கம் கூட வெளிப்படுத்தியது உடல்.
பிடித்தக் கையை விடாது நிமிர்ந்து அவள் விழி நோக்கியவன், “பிடிச்சிருக்கா?” என்று லேசாக அவள் கையுறுத்தி வாட்சை கேட்க,
மேலுதட்டை பற்களால் அழுந்தப்பற்றி விடுவித்தவள் வேகமாக மேலும் கீழும் மண்டையை ஆட்டினாள், “எல்லாரும் சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ் கொடுக்குறத பத்தி சொல்லும் போது அசட்டையா நினைச்சிருக்கேன். இன்னைக்கு எனக்கே நடக்கும் போது… ஐ அம்… ஜஸ்ட் லாஸ் பார் ஒர்டஸ்…” என்றவளின் உணர்ச்சிப் பெருக்கு அவளை இன்னும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்கு கொடுத்தது.
“சந்தியா, வந்தனா எல்லாம் என் பர்த்டேக்கு சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. ஆனா இது… இது வேற. நான் எதிர்பாக்கவே இல்லை… அதுவும் இந்த நேரம்… உங்ககிட்ட இருந்து.” என்றவள் அந்த நிமிட உணர்வை உள்ளார்ந்து அனுபவித்தாள். நிபந்தனைகளை முன்வைத்து இணைய முனைந்த திருமண பந்தத்தினுள் பிடிமானத்தை கொடுத்தது அவனின் வரவு.
“நேத்திக்கு தான் ஷோரூமுக்கு வந்துச்சு இந்த வாட்ச். பாத்ததும் உனக்கு நல்லாயிருக்குனு தோனவும் வாங்கிட்டு வந்தேன்.” என்று அவன் சொன்னதிலேயே இது கடைசி நிமிட பயணம் என்று புரிந்தது அவளுக்கு.
“வேலை முடிச்சிட்டு அப்படியே கிளம்பி வந்தீங்களா?” அவன் தன் வீட்டின் முன் வந்து நிற்கும் நேரத்தை வைத்து அவள் கேட்க,
“ம்ம். நாளைக்கு… ஸ்ஸ்… இன்னைக்கு ஹாப் டே தான் ஷோரூம் லீவு. மதியம் போகணும் அதுக்குள்ள வந்துட்டு போயிடலாம்னு அப்படியே பஸ் ஏறிட்டேன்.”
“ஏன் இப்படி அலையுறீங்க?” என்று அக்கறையாய் அவள் கேட்டாலும் தனக்காக இப்படி அவன் மெனெக்கெட்டு வந்திருப்பது கர்வத்தை கொடுத்தது.
“மார்கழி குளூருல ஸ்ட்ரீட் லைட் வெளிச்சத்துல பச்சபசேல்னு செழிச்சி இருக்குற செடிகளுக்கு நடுப்புற சிவந்திருக்கிற இந்த மூக்கு நுனி, என்னை பாத்ததும் பூரிச்சி உப்பியிருக்கிற இந்த கன்னம், வானவில் காட்டுன இந்த கண்ணு, வார்த்தை மறந்து தந்தியடிக்குற இந்த லிப்ஸ்… இப்படி என் மலரை பார்க்க எத்தனை தடவை வேணும்னாலும் இங்கேயும் அங்கேயும் ட்ரிப் அடிப்பேன்.”
வர்ணிப்புக்கு ஏற்ப அவன் விரல்கள் பட்டும்படாமல் அவள் முகத்திற்கு எதிரே அந்தந்த பாகத்தை சுட்டிக்காட்டி கோலமிட, மின்சாரம் பாய்ந்தது போல் ஓரடி பின்னகர்ந்தாள் குழலி. நாணத்தில் அவன் முகம் பார்க்கவும் கூசி நிற்க, தான் தானா இது என்று தன்னைக் குறித்த ஆச்சர்யத்தில் இதழ்கள் துடித்தது. தன்னால் விளைந்த வெட்கத்தில் தலை குனிந்து நிற்பவளை ஆவலாய் ரசித்துப் பார்த்தான் முகிலன்.
“இங்க வரும்போது கூட இது இப்படி ஆகும்னு நினைக்கல. கிஃப்ட் கொடுத்துட்டு போயிடலாம்னு சாதாரணமா வந்தேன். ஆனா நீ காட்டுற ரியாக்ஷனுக்கு… அப்பா… என்னமோ பண்ற என்னை..” என்று அவனும் கைகுவித்து வாயில் வைத்து ஊதிக்கொண்டே தலையசைத்து தன்னை ஆக்கிரமிக்க முயலும் இனிய உணர்வுகளை அனுபவித்தான்.
அப்பழுக்கற்ற அன்பின் பலனாய் நிகழ்ந்த பார்வை பரிமாற்றத்திற்கே ஹார்மோன்கள் எக்குத்தப்பாய் எகிறி மகிழ்ச்சி சுரப்பிக்களை சுரக்க வைக்குமா? வைக்குமே என்ற வாதத்திற்கு சாட்சியாய் இருவரும் சிலிர்த்து நின்றார்கள்.
அந்த ஏகாந்தம் ஏகத்திற்கும் அவர்களுள் குளுமை பரப்பி தன்னுள் இழுத்துக்கொள்ள பார்த்தது. இருவருக்குமே தாங்களா இந்த பந்தத்தை ஏற்றுக்கொள்ள அத்தனை தயங்கி யோசித்து மண்டையை பிய்த்துக் கொண்டது என்றே தோன்றிவிட்டது. இந்த சிறிய செயல் அத்தனை நெருக்கத்தையும் உரிமையையும் உணர வைத்தது. இவன் என்னவன், இவள் எனக்கானவள் என்ற பிடிப்பு கப்பென்று வந்து ஒட்டிக்கொண்டது. அருகில் குறைத்த நாயின் சத்தத்தில் கூட கலையவில்லை இருவரும்.
எத்தனை நேரமானதோ, “இந்த நேரத்துல எதுக்கு வெளில நிக்குற?” என்ற பிரபாவின் குரலில் நடப்பிற்கு வந்தார்கள் இருவரும்.
வெளி மின்விளக்கு போடப்பட்டிருக்க மகளை தேடிக்கொண்டு வந்தவர் முகிலன் முதுகில் பையுடனும் மகள் கையில் ஏதோ அட்டைப்பெட்டியுடன் நிற்பது கண்டு அதிர்ந்து பின் வேகமாக அவர்களை நெருங்கினார்.
“மாப்பிள்ளை இந்த நேரம் நீங்க இங்க?”
பிரபா கேட்கவும் தான் இந்த நேரத்தில் வந்திருக்க கூடாது என்றே மண்டையில் உதித்தது, “நியூ இயர்… மலருக்கு கிஃப்ட் கொடுக்கலாம்னு வந்தேன். நான் கிளம்புறேன்.” என்று கிளம்பப்பார்த்தான்.
“இவ்ளோ தூரம் வந்துட்டு உள்ள வராம போறீங்க.”
“இல்லை. இன்னைக்கு வேலை இருக்கு. நேரமே வந்துட்டு கிளம்பினா மதியத்துக்குள்ள ஊருக்கு போயிடுவேன் அதான் டைம் பாக்காம வீட்டுக்கு வந்துட்டேன்.” பிரபா தப்பாய் நினைத்துவிடுவாரோ என்று நினைத்து அவன் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
“அதெல்லாம் பரவாயில்லை உள்ள வாங்க.” என்று பிரபா வருந்திக் கூப்பிட்டு மகளை கண்டிப்பாய் பார்க்க அவளும் அழைத்தாள்.
“இல்லை இருக்கட்டும்.” இரு பெண்கள் தனியாய் இருக்கையில் இப்படி வந்திருக்கவே கூடாது என்று புத்திக்கு தாமதமாக உரைக்க, உள்ளே செல்ல மறுத்து நின்றான் முகிலன்.
குழலிக்கு புரிந்துவிட்டது போல, “இருங்க வந்துடுறேன்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் அம்மாவை அழைத்தாள். அவனை தனியாய் விட்டு செல்ல யோசித்து பிரபா நிற்க, அவன் உள்ளே செல்லும்படி அனுப்பிவைத்தான்.
“அங்க அவர் தனியா நிக்குறாரு. நீ விட்டுட்டு வந்தது மட்டுமில்லாம என்னையும் எதுக்கு கூப்பிடுற?”
“அவரை பஸ் ஏத்திவிட்டு வர்றேனேமா. நைட் கடையிலேந்து அப்படியே வந்துட்டேனு சொன்னாரு. வாசலோட அப்படியே எப்படி அனுப்புறது?” அம்மாவின் அனுமதி வேண்டி அவள் பார்க்க, மணியை பார்த்த பிரபா,
“நீ ரிட்டர்ன் ஆகும் போது விடிஞ்சிடும் இருந்தாலும் கவனமா போய்ட்டு வா.” சந்தோஷமாகவே அனுமதி கொடுத்தார் பிரபா.
குழலியின் முகம் அப்படியே மலர்ந்து போனது, “நீ எதுவும் சொல்லுவேன்னு நினைச்சேன்.” என்றபடியே நன்றி சொல்லி வண்டி சாவியை எடுத்துக்கொண்டாள்.
“மலர்னு மாப்பிள்ளை கூப்பிடுற மாதிரி மலர்ந்து கிடக்கு உன் முகம். எப்போவும் இப்படியே இருக்கனும்.” என்று மகளுக்கு திருஷ்டி கழித்தவர் துரித வேண்டுதலை தன் இஷ்ட தெய்வத்திற்க்கு வைத்தார்.
வெளியே செல்வது போல் உடை மாற்றி வந்தவள் வண்டியை ஸ்ட்ராட் செய்து கேட்டிற்கு வெளியே அவன் நிற்குமிடம் வந்து நிறுத்த, பின்னோடு வந்த பிரபா அவனிடம் விடைபெற்று அவர்களுக்கு தனிமை கொடுத்துச் சென்றார்.
இரவு உடை மாற்றி வண்டி எடுத்து வந்து நிற்பவளை ஆச்சர்யமாய் பார்த்தவன், “ஹே எங்க கிளம்பிட்ட இந்த நேரத்துல?”
“உங்களை பஸ் ஏத்திவிடுறேன் வாங்க.”
“எது? என்னை ஏத்தி விட வரியா? விளையாடுறியா நீ. உள்ள போ மலர். நான் போயிப்பேன்.” அவள் ஆவல் புரியாது மறுத்தான் முகிலன்.
“ஏன் நான் வந்தா என்ன?”
“எதுக்கு வரணும் அதுவும் இந்த நேரத்துல? நாந்தான் யோசிக்காம வந்து உன்னை எழுப்பிட்டேன். நீயும் யோசிக்காம பண்ணாத.” சற்று முன்னிருந்த இலகுத்தன்மை மெல்ல பின்வாங்கியது அவனிடம்.
“எனக்காக இவ்ளோ தூரம் சிரமப்பட்டு சரியா தூங்காம கூட வந்திருக்கீங்க. இதோ ஒரு இருபது கிலோமீட்டர் இருக்குமா பஸ்ஸ்டான்ட். அதுக்கு வரமாட்டேனா நானு. பேசாம வண்டில ஏறுங்க. எத்தனை மணிக்கு பஸ்?” இவள் புறம் அதிகாரம் தூள் பறந்தது.
“என்னை விட்டுட்டு திரும்ப தனியா வரணும் நீ. அதெல்லாம் சேஃப் இல்லை.” கறார் பிடித்தான் முகிலன்.
“எவ்ளோ பேச வைக்குறீங்க என்னை. இது மெயின் ஏரியா, நானும் மெயின் ரோட்ல தான் திரும்பி வருவேன். என் பாதுகாப்புக்கு ஒரு குறைச்சலும் இல்லை. இப்போ வர்றீங்களா?”
வேறு வழியின்றி, “ரொம்ப பிடிவாதம் பிடிப்பியோ?” என்று கேட்டுக்கொண்டே அவளருகில் வந்தான்.
“ரொம்பபப…” என்று இவளும் இழுத்தாள் கேலியாய்.
“இப்போதான் பாத்தேன் எட்டு மணிக்கு ஒரு ட்ரையின் இருக்கு. அதை புடிச்சா மதியம் அங்க போயிடுவேன். ஒரு ஒன் அவர் பர்மிஷன் எடுத்துட்டா குளிச்சிட்டு பிரெஷ் ஆகி போக சரியா இருக்கும்.” அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே வண்டியை தன்வசப்படுத்தும் விதமாய் பிடித்து அவளிறங்க இடம் கொடுத்து நின்றான்.
“எட்டுக்கு தான் ட்ரெயினா?” என்று ஏதோ யோசனையில் வண்டியிலிருந்து இறங்காமல் இழுத்தாள் குழலி.
“ம்ம், அன்ரிசர்வ்ட் டிக்கெட்தான் ஆனா அதுலேயே போய்க்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். நீ இறங்கு.”
“நீங்க ஏறுங்க. ஷார்ப் எட்டுக்கு எந்த ஸ்டேஷன்ல விடணுமோ அங்க விடவேண்டியது என் பொறுப்பு.” என்று வண்டியை ஸ்டார்ட் செய்து அவனை பின்னால் ஏற சொல்லி செய்கை செய்தாள்.
“பின்னாடியா?” அஷ்டகோணலாகி இயல்புக்கு திரும்பியது அவன் முகம், “நான் ஓட்டுறேன் நீ பின்னால உக்காரு.”
“ம்ஹூம்…” மறுத்தாள் குழலி.
“வராதேன்னு சொன்னேன் கேக்கல, பின்னாடி உக்காருனு சொல்றேன் அதையும் கேக்க மாட்டேங்குற. இதுல்லாம் நல்லா இருக்கா சொல்லு.” தன் பேச்சிற்கு செவி சாய்க்கவில்லை என்ற அதிருப்தி எழுந்ததோ எனும் விதமாய் இருந்தது அவன் குரல்.
“எல்லாம் நல்லா இருக்கும். ஏன் நீங்கி மட்டும்தான் எல்லாம் பண்ணனுமா? நாங்க பண்ணக்கூடாதா? இப்படி பேசிட்டா இருந்தா நேரமாகிடும் அப்புறம் ட்ரெயின் மிஸ் பண்ணிட்டா என்னை சொல்லக்கூடாது.” என்று அவள் பிடிவாதமாய் மிரட்டவும் பின்னால் ஏறிக்கொண்டான்.
வாகன நெரிசல் இல்லாத காரணத்தால் வண்டி சீரான வேகத்தில் செல்ல, அந்நேர குளிர் காற்று உடலை துளைத்தது. இதமாய் கைகளை கட்டிக்கொண்டு குழலியைப் பார்த்தான். கனமான முழுநீள ஹூடி டீஷர்ட் அணிந்து தலைக்கு ஹெல்மெட் போட்டிருந்தாள். அதான் அவளுக்கு குளூருல போல என்று நினைத்துக்கொண்டவன் வண்டி செல்லும் திசையை யோசனையுடன் கவனித்தான்.
“எங்க போறோம்?”
“சர்ப்ரைஸ்.” என்றாள் அவள்.
“சர்ப்ரைஸ் கொடுக்க வந்தவனுக்கே சர்ப்ரைஸா?”
“அப்படித்தான்னு வச்சிக்கோங்க.”
“சரிங்க மேடம். உங்க சர்ப்ரைஸுக்கு வெய்ட்டிங்.”
நெரிசல் இல்லாததால் நேரமே சேர வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டனர். குழலி வண்டியை நிறுத்த, எதிரே காற்றின் வேகத்திற்கு ஏற்ப கோஷத்துடன் கரை தொட்டு திரும்பிய அலைகள் விருந்தாய் விரிந்தது. அலைகளின் அந்த ஆக்ரோஷம் கூட இதம் கூட்டுவதாய் செவி அடைய, புன்முறுவலுடன் அவளை பார்த்தான் முகிலன்.
“சன்ரைஸ் பாக்கலாம்.” கண்சிமிட்டினாள் குழலி.
“புது வருஷத்தை புது உதயத்தோட ஆரம்பிக்கலாங்குற.” அவனும் கண்சிமிட்டி இயல்பாய் அவள் கைப்பிடிக்க, தயக்கமின்றி அவனுடன் நடந்தாள்.
இன்னும் விடியாத அந்த பொழுதினில் கால்கள் கடல் மணலில் புதைந்து, எழுந்து, பாதை அமைத்து, கரை நோக்கி கூட்டிச் செல்ல, கோர்த்திருந்த கரங்கள் அவர்களை இன்னும் நெருக்கமாகியது. சங்கடமின்றி தோள் உரச அவனுடன் நடந்தவள் அவனை பற்றி பொதுவான விஷயங்களை கேட்டு அறிந்துகொண்டாள். அவன் வேலை நேரம், அவனது இடைவெளி நேரங்கள், பயணப்படும் தூரம் என்று பொதுவான பேச்சுக்கள் நீண்டது. வேலை குறித்த எதிர்கால திட்டங்களை கவனமாக இருவரும் தவிர்த்தனர்.
“இன்னும் முழுசா விடியாம மேகத்துக்கு இடையில தெரியுற நிலாவோட வெளிச்சமும் சூரியன் உதிக்கப்போறதுக்கான அறிகுறியோட லைட்டா செவந்திருக்குற வானமும் பாக்கா அழகா இருக்கு மலர்.”
“இந்த டைம் லேட்டா தான் சன் ரைஸ் ஆகும். சில நேரம் க்ளவுட்ஸ் மறைச்சிடும். இன்னைக்கு எப்படினு தெரியல.” என்று அவள் பேசிக்கொண்டிருக்க, கால் தொட முயன்ற அலைகளிலிருந்து தற்காத்து அவளை பின்னிழுத்து சென்றான் முகிலன்.
குறும்புச் சிரிப்புடன் அவள் வேண்டுமென்றே முன்னே ஓட, இவன் அவளை ஓடவிடாது பிடித்திழுக்க என்று சீண்டலான செல்ல விளையாட்டில் கரைந்தது சில நிமிடங்கள். சிரித்து சிரித்து தொண்டை உலர லேசாக இருமிக்கொண்டே குனிந்து நின்று மூச்சு வாங்கினாள் குழலி. தன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து அவளை குடிக்க வைத்தவன் தானும் மீதமிருந்ததை பருகிவிட்டு அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட்டான்.
“இந்த மாதிரி ஒரு நிவ் இயர் நான் இதுவரை செலிப்ரேட் பண்ணது இல்லை.”
“நான் என்னமோ உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு வந்தேன். ஆனா உண்மையாலும் எனக்குமே இது நிவ் இயர்மா. இனி வருஷா வருஷம் இப்படியே பண்ணலாம்.” என்று அழகாக கண்சிமிட்டி அவளை வசீகரித்தான் முகிலன்.
“உக்காரலாம் வா…” அவள் கைபிடித்து அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர்ந்தவன் அவள் அம்மா எப்படி எதுவும் சொல்லாமல் அனுப்பி வைத்தார் என்று வியப்பாய் கேட்டான்.
“அவங்களுக்கு நான் சந்தோஷமா இருந்தா போதும். நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க. ப்ச் இன்னைக்கு வேண்டாம் இன்னொரு நாள் சொல்றேன்.” தங்களின் கரிய பக்கங்களை நன்னாளில் திறக்க மனமில்லாமல் பின்தள்ளியவள் பொதுவாக பேசினாள்.
“நானா கூப்பிடலைனா நீங்க பேசக்கூட மாட்டீங்க. எப்படி இந்த ஐடியா எல்லாம்?” தனது வாட்சை காண்பித்துக் கேட்க,
“உண்மையை சொன்னா கோச்சிக்க கூடாது.” என்ற பீடிகையுடன் துவங்கியவன் அவன் நண்பன் மகேஷ் யோசனை கொடுத்துதான் திடுமென கிளம்பி வந்ததாக சொன்னான்.
“யோசனை யார் வேணும்னாலும் கொடுக்கலாம். அதை செயல்படுத்த நீங்க போடுற எஃபோர்ட் தான் என்னை ப்லெஸ்டா ஃபீல் பண்ண வைக்குது.” என்று அவள் மனம் திறக்க, காதல் மொட்டு பூக்கத் துவங்கியது.
கூடாரம் விட்டு வெளிவரும் பறவைகளின் ரீங்காரத்திற்கு செவி மடுத்து, ஒரு சேர அது பறந்து செல்லும் பாங்கினை கவனித்து, தூரத்தில் மீன் பிடிக்க செல்லும் படகின் பிரதிபலிப்பு சூரிய ஒளிக்கு ஏற்ப ரசனைக்குரியதாக மாறி என இயற்கையின் வழக்கங்கள் கண்களுக்கு விருந்தாகியது. ஓவியத்தில் இருப்பது போல் தன் செங்கதிர்களை வீசி கதிரோன் எழுந்து வரும் சமயம் மனதிற்குள்ளும் புது விடியல். தங்கள் துணையின் கைகளை தானாக கோர்த்துக்கொண்டனர். இடைவெளி விட்டு அமர்ந்திருந்தாலும் மனங்கள் அந்நேரம் ஒன்றாகி, மார்கழிப் பனியின் குளுமைக்கு தேவையான இதம் பரப்பியது. இதை விட அழகானதொரு துவக்கம் இந்த வருடத்திற்கு அமையாது என்றே தோன்றியது இருவருக்கும்.
நன்றாக விடிந்ததும் இருவரும் எழுந்துகொண்டு ஒருவர் முகம் பார்த்து ஒருவர் சிரிக்க, பேச்சிற்கு அவசியமின்றி போனது அங்கு. மனங்களின் இனிமை இருவரையும் இசைந்து செல்ல வைத்தது. அவன் கேட்காமலேயே வண்டியை அவள் கொடுக்க, அவனாக அவனது பையை அவளிடம் கொடுத்து வண்டியை உயிர்பித்தான். இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்தவள் அவனிடம் பேசும் பொருட்டு சற்று முன்னகர்ந்து,
“போற வழியில ஒரு இயற்கை அங்காடி இருக்கு. அங்க ஏதாவது குடிச்சிட்டு போகலாம்.” என்று குழலி வழி சொல்ல, அவன் அழைத்துச் சென்றான்.
காலை நேரத்திற்கு ஏதுவான பானம் வாங்கி பருகிவிட்டு இரயில் நிலையம் வந்தனர். அவன் ஏற வேண்டிய பெட்டி வரை வந்தவள் மறக்காது தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கிக்கொடுத்து உணவும் வாங்குகிறேன் என்று நிற்க, அங்கேயே அவளை கட்டிக்கொள்ள வேண்டும் போல தோன்றியது முகிலனுக்கு. உணவை மறுத்தவன் தண்ணீர் மட்டும் வாங்கிக்கொண்டான்.
“பாத்து வீட்டுக்கு போகணும்.” அவன் சொல்ல அழகாக தலையாட்டிக் கொண்டவள்,
“நாந்தான் உங்களுக்கு எதுவும் கிஃப்ட் வாங்காம போயிட்டேன்.” என்று வருந்திக் கூறினாள்.
“இந்த வருஷத்துக்கான அழகான ஸ்டார்ட் கொடுத்திருக்க. இதைவிட வேற என்ன வேணும் எனக்கு?”
“இல்லை… அது…”
“ப்ச்… இப்போ ஸ்பென்ட் பண்ண இந்த சில மணி நேரம் நமக்கான அழகான நியாபகங்கள். இதை விட பொருளுக்கு வேல்யூ கம்மிதான்.” என்று அவன் சொல்லவும் அவள் முகம் கொஞ்சம் தெளிந்தது.
“இன்னும் கொஞ்சம் சிரிக்கலாம் மலர்.” அவனது பிரத்யேக அழைப்பு வந்ததும் அவள் முகம் மலர்ந்து போனது.
“ஓகே பை.” இரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு வர, மனமே இன்றி கையசைத்து அவனை பார்த்துக்கொண்டே நகர்ந்தாள்.
அவனும் மறையும் வரை நின்று கையசைத்து உள்ளே வர, அலைபேசியில் அவள் செய்தி.
“டூடே, இட்ஸ் நாட் தி சன் தட் ஷைன்ஸ் – இட்ஸ் யூ அகன். (இன்று பிரகாசிப்பது சூரியன் அல்ல – அது நீ தான் அகன்)” என்று அனுப்பியிருந்தாள்.
படித்தவனுக்கு இரயிலில் இருப்பு கொள்ளவில்லை. இரசிக்கப்படுவது அவனுக்கு முதல் முறை அல்ல என்றாலும் மலரால் இரசிக்கப்பட்டு அதை அவள் வெளிப்படுத்தும் தருணம் அவள் அருகில் இல்லாமல் போனோமே என்று ஏங்கிவிட்டான். பதிலுக்கு என்ன அனுப்புவது என்றுகூட யோசிக்க முடியாது இதய வடிவங்களை அனுப்பியவன்,
“என்னுடையதை கொடுக்கிறேன். பத்திரமாக வைத்துக்கொள்.” என்ற குறுஞ்செய்தியும் தட்டச்சு செய்து அனுப்பினான்.
வாகன நிறுத்துமிடத்தில் நின்று அதனை பார்த்தவள் நெஞ்சோடு அலைபேசியை அணைத்துக்கொள்ள, அந்த நொடி நீளாதா என்ற ஏக்கம் மிஞ்சி நின்றது.
error: Content is protected !!