Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 21

“ஹ.. ஹலோ.. வாத்சா..! நா.. நான்.. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர்றீங்களா..?”

அவள் குரலில் வித்தியாசம் தெரிய கண்கள் சுருக்கினான் வாத்சா..

“என்னடா.. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்குது..! ஒண்ணும் பிரச்சினை இல்லையே..! நீ வீட்லதானே இருக்க? ரொம்ப முடியலையாடா?”

அவள் வயிற்றுவலியோடு அவஸ்தை படுவது தெரியுமென்பதால் உள்ளுக்குள பதைபதைத்து இப்படி கேட்க..



Advertisement

“சீக்கிரம் வர்றீங்களா.. வாங்க!” குரலை அழுத்திக் கொண்டு லஷ்மி சொன்னதையே.. திரும்பி திருப்பி சொன்னதில் ஏதோ தவறாய் தோன்ற.. வேலைகளை போட்டது போட்டதுபடியே உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு விட்டான் அவன்.

லஷ்மியின் உயிரிப்பில்லாத குரலே அவனை கலங்கடித்துக் கொண்டிருக்க.. காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தவன்‌ ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்து காரை நிறுத்துவதற்குள் பல யுகங்கள் கடந்துவிட்டதை போலுணர்ந்தான்..

இறங்கி வீட்டை நோக்கி வேகமாய் நடந்த தன்னை வழிமறித்து வந்து நின்ற வேணுவை கண்டு எரிச்சலுற்று.
“என்ன‌ சார்?” என்றவனின் குரலே அவசரத்தில் நிற்கிறான்‌ என்பதை உணர்த்த நிலமையை புரிந்து கொண்டு வேகமாய் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான் வேணு.

Advertisement

வாத்சல்யன் கார் நிற்பதை பார்த்துவிட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த மீனாட்சி‌ இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

லஷ்மியை இறக்கி விட்ட வேகத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்த மீனாட்சியிடம் விஷயத்தை சொல்லி.. “அந்த பொண்ணு பார்க்கவே என்னவோ போலிருக்கு..! நீ கொஞ்சம் என்னன்னு போய் பாரேன்.. அவங்க வீட்டுக்காரர் வர்ற வரைக்கும் பக்கத்திலேயே இரு!” என வேணு அனுப்பி வைக்க.. இதுவரை அந்த வீட்டுப் படியேறியிராத மீனாட்சி.. திறந்து போட்டிருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்து அலைபாய்ந்து.. ‘மாடியிலதான் எங்க ரூம்’ என்றொரு நாள் லஷமி சொன்னது நினைவில் வந்து போக.. வேகமாக படியேறி வெறுமென சாத்தி வைத்திருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள்.. கட்டிலில் பொம்மை போல் அமர்ந்திருந்தவளின் கோலம் கண்டு நெஞ்சம் பிழிய ஒரு கணம் சிலையாக நின்றாள்.

“அக்கா!” என மிருதுவாய் கைதொட்டு அழைக்க.. “நீ கொஞ்சம் போயேன் மீனாட்சி அப்புறம் வா..! என்னை தனியா விடு!” தொண்டைக் குழியிலிருந்து சன்னமாய் வெளிப்பட்ட குரலில் இவளுக்குள் ஏதோ ஒன்று கனமாய் உருண்டது.

“நான் கொஞ்ச நேரம் உங்க கூடவே இருக்கேனே..!”

Advertisement

“ப்ளீஸ் மீனாட்சி!” இரு பக்கமும் இழுத்து பிடித்தார் போல் கரை உடைக்க காத்திருந்த அந்த கண்களையும் கலவரமான முகத்தையும் கண்டு பயந்து போனாள் மீனாட்சி.

“கொஞ்சம் தனியா விடு ப்ளீஸ்!” என திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில், என்ன செய்வதென தெரியாமல்.. வேறு வழியின்றி அவளை தனியே விட்டு வர வேண்டியதாய் போயிற்று.

வீட்டுக்கு வந்து கையை உதறிக் கொண்டே இடிந்து போனவளாய் லஷ்மி அமர்ந்திருந்த கோலத்தை குறித்து கணவனிடம் சொல்ல.. “அவங்க வீட்டுக்காரரோட நம்பரையாவது வாங்கிட்டு வந்துருக்கலாமில்ல..!” என இவன் கடிந்து கொள்ள இருவருமே என்ன செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் இதோ வாத்சா வந்து விட்டான்.

அரைகுறையாய் தனக்கு தெரிந்ததோடு மருத்துவமனையில் நடந்த உரையாடலையும் சேர்த்து சொல்லி.. ” தங்கச்சிய கொஞ்சம் பாத்துக்கோங்க!” என முடிப்பதற்கு முன்பே தனது வீட்டுக்குள் ஓட தொடங்கியிருந்தான் வாத்சா..

சடாரென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போதும்.. அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் லஷ்மி..

“சந்தா..! அம்மு! என்னடாம்மா?” கரகரத்த குரலோடு தொண்டைகுழி நடுங்கி பக்கத்தில் அமர.. இப்போதுதான் அந்த பொம்மைக்கு உயிர் வருகிறது.!

மெல்ல நிமிர்கிறாள்! வறண்ட பாலையில் மெல்ல ஊற்றெடுக்கும் நீரோடை போல்.. விழிகள் ததும்பி நிறைந்து கண்ணீரை உகுக்க தொடங்குகின்றன..

“வா..‌வாத்சா! வாத்சா!” என நெஞ்சுக் கூடு ஏறி இறங்க.. விம்மி பெருகும் அழுகையோடு உதட்டை பிதுக்கி.. வார்த்தைகள் வராமல் தடுமாறுபவளை கண்டு இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்து போகிறது.

“என்னடாம்மா! அதெல்லாம் ஒன்னுமில்லை.. விடு பாத்துக்கலாம்..” விஷயம் அரைகுறையாய் தெரிந்தாலும் அதை மென்மேலும் கிளறி அவள் மனதை ரணமாக்காமல் அத்தோடு தோண்டி புதைத்து விட நினைத்து.. அவன் இப்படிச் சொல்ல..!

“நா.. நான் ஒண்ணுமே பண்ணல வாத்சா! கீழ விழுந்தவளை கை கொடுத்து காப்பாத்தினேன். நான் மட்டும் அவளை பிடிக்கலைன்னா வயிறு போய் தரையில் இடிச்சு..”

“சரிடா..! சரி! எனக்கு தெரியாதா உன்னை பத்தி.. விடும்மா..!’ மெத்தையில் முழங்காலிட்டு அமர்ந்தவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.

“அவங்க யாருமே என்னை புரிஞ்சுக்கலையே வாத்சா! இப்படி ஒரு குரூரமான காரியத்தை நான் போய் செய்வேனா..? இ.. இவ்வளவுதான் இந்த வீட்ல எனக்கு கிடைச்ச மரியாதையா?”

“யாரை நம்பல புரிஞ்சுக்க வேண்டாம்.! அவங்க அப்படித்தான்னு நினைச்சு விட்டுடு..”

“அவங்கள நான்தான் வேணும்னே கீழ தள்ளிவிட எண்ணெயை கொட்டி வச்சதா..!”

வாத்சல்யனின் முகம் இறுகிப்போயிற்று. இப்படி ஒரு அபாண்ட பழியை தன் மனைவி மீது சுமத்துமளவிற்கு அவள் மீது எத்தனை வன்மம் வைத்திருக்கிறார்கள் இவர்கள். அதற்கு தன் பெற்றோரும் துணை போவதுதான் பெருத்த வேதனையை தந்து அவன் மனதை புண்ணாக்குகிறது. இப்பேர்பட்டவர்களை பொறுத்துக் கொண்டு குடும்ப ஒற்றுமையை காப்பாற்றுகிறேன் பேர்வழியென பெற்றவர்களின் வேண்டுகோளுக்காக நான் ஏன் அனைத்தையும் அனுசரித்துக் கொண்டு இங்கே இருக்க வேண்டுமென உண்மை கசப்பாய் நெஞ்சில் பரவிய கணம்.. தன்னோடு சாய்ந்து வாய்க்கு வந்ததை புலம்பி கொண்டிருக்கும் மனைவியை இறுக அணைத்துக்கொள்ள..

“ஆஆஆஆ..!” என ‌முனகினாள் அவள்.

சட்டென திகைத்தவனாய் “என்னம்மா ஆச்சு..?” என்று விலகி.. அவள் உடம்பு முழுக்க ஆராய்ந்த நேரத்தில்..‌ “கை.. கை வலிக்குது..!” என்றாள் முனுக்கென கண்ணீர் வழிய..

“வெகு நேரமாய்..” அவள் வலது கை பயனில்லாத பொருளைப் போல வித்தியாசமான பொசிஷனில் அசையாமலிருப்பதைக் கண்டு.. “கையில என்னம்மா!” உள்ளம் பதறி அவன் தொட முயல.. லஷ்மியின் உடம்பு மொத்தமும் அதிர்ந்து பின்வாங்கியது.

“தெரியல..! அந்த கீர்த்தனாவை வயிறு கீழ படாம தாங்கி பிடிக்கும்போது.. கையில ஏதோ உடைஞ்ச மாதிரி இருந்துச்சு..! என்னன்னு சரியா தெரியல!”

திக்கென நெஞ்சம் அதிர்ந்து போனான்..

கை வலியும் மன வலியும் ஒன்று சேர.. சித்தம் கலங்கியவளை போல் உணர்வுகளை சரிவர வெளிப்படுத்த தெரியாமல் அமர்ந்திருந்தவளை கலக்கமும் கவலையுமாக பார்த்தான் வாத்சல்யன்.

கட்டிலில் நீட்டி வைத்திருந்த அவள் கரத்தை பார்க்கவே பயமாக இருந்தது அவனுக்கு..!

எலும்பு ஏதேனும் முறிந்திருக்குமோ.. அது கூட தெரியாமல் மிகுந்த மன உளைச்சலில் என்னென்னமோ பிதற்றிக் கொண்டிருக்கிறாளே..! இப்படிப்பட்ட உன்னை போய் கொடூரமானவளா சித்தரிச்சு என்னென்னமோ பேசறாங்களே! மனுஷங்கதானா அவங்க..! உள்ளம் குமுறிட.. மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்ல முயன்றான்.

“வேண்டாம்.. வேண்டாம் வாத்சா! சின்ன அடிதான் அதுவே தானா சரியா போயிடும்.. நீ.. நீங்க என் கூடவே இருங்க என்னை விட்டு எங்கேயும் போயிடாதீங்க..!” மீண்டும் அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு விம்மினாள்..

“உன்னை விட்டு எங்கேயும் போகலடா..! கையில அடிபட்டுருக்கு பாரு.. ட்ரீட்மென்ட் பண்ணனும் வா போகலாம்.. நான் உன் கூடவே தான் இருப்பேன்.!” என்று அவளை எழுப்பி நிற்கவைக்க.. வலது கையை தொங்க போட முடியாமல் வலியில் உதடு கடித்தாள் லஷ்மி.

“வலிக்குது வாத்சா!

எனக்கு தூக்கம் வருது.!”

வாத்சல்யனுக்கு நெஞ்சடைத்தது.. கண்கள் கலங்கி.. பார்வையை மறைத்து திரையிட்ட கண்ணீரை.. விழிகளை மூடி திறந்து சமன் செய்தான்.

“தூங்கலாம்..! முதல்ல ஹாஸ்பிடல் போகனும்.. வா..!” மெல்ல அவளை படியிறக்கி அழைத்துப் போய் காரில் அமர வைத்து வண்டியை கிளப்பினான்.

எதிர் வீட்டிலிருந்து வேணுவும் மீனாட்சியும் என்னவோ ஏதோவென ஓடி வருவதற்குள் கார் சீறி பறந்திருந்தது.

சிகிச்சை முடிந்து “சின்ன பிராக்சர் தான்.. ஒரு வாரம் பத்து நாளைக்குள்ள நார்மல் ஆகிடலாம்..” என மருத்துவர் சொன்ன பிறகுதான் வாத்சல்யனால் அரைகுறை சுவாசத்தில் நுரையீரலை அடைத்து தொண்டை குழிக்குள் திணறிக் கொண்டிருந்த காற்றை நிம்மதியாக வெளியேற்ற முடிந்தது. ‌

“மெடிசன்ஸ் கரெக்டா எடுத்துக்கோங்க.. ஒரு வாரம் கழிச்சு.. குணமாக ஆரம்பித்த பிறகு பிசியோதெரபி ஸ்டார்ட் பண்ணிக்கலாம்.‌” போன்ற அறிவுரைகளோடு இரண்டு மணி நேரத்தில் லஷ்மியை டிஸ்டார்ஜ் செய்துவிட.. அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த வாத்சல்யன் சோபாவில் அமர்ந்திருந்த தாய் தந்தையை கண்டுகொள்ளாதவன் போல் மனைவியோடு மாடிப்படி ஏறினான்..

கையில் கட்டோடு லக்ஷ்மி.. அவளை கைத்தாங்கலாக அழைத்து வரும் வாத்சல்யன்.. என இந்த காட்சியை கண்டு பெற்றவர்கள் இருவரும் அதிர்ச்சியோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னப்பா ஆச்சு..?” என எழுந்து வந்த மங்கையை.. ‘அங்கேயே நில்லுங்க..’ என்று கை காட்டி நிறுத்தியவன் அவர்களை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.

ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என உணர்ந்து விதித்து போய் நின்றார் மங்கை.

“போய் என்னன்னு பாரு மங்கை!” கணவன் வலியுறுத்தியும் கூட அதற்கான தைரியமில்லாது போகவே.. கையை பிசைந்தபடி நின்ற இடத்திலேயே நிலை கொள்ளாமல் தவித்தார் அவர்.

மருந்துகளின் வீரியத்தில் மயக்கத்தில் இருந்தவளை.. தலையை வருடி கொடுத்து உறங்க வைத்துவிட்டு கீழே இறங்கி வந்தான் வாத்சல்யன்.

“டேய் வாசி.. என்னடா ஆச்சு..!” பதைபதைத்து கேட்ட பெற்றவளை.. “உட்காருங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றபடியே அவன் முன்னோக்கி நடக்க.. கற்பாறையாக இறுகிப் போயிருந்த அவன் முகத்தை பார்க்கவே.. பெற்றவர்கள் இருவருக்கும் இதயத்துக்குள் குளிர் பரவியது.

தனி இருக்கையில் அமர்ந்தவன் சில கணங்கள் தலை குனிந்து அமர்ந்திருந்தான்..

“நானும் என் மனைவியும்.. இந்த குடும்பத்துக்கும் இந்த வீட்டுக்கும் இனியும் பாரமா இருக்க விரும்பல..! நாங்க ரெண்டு பேரும் தனியா போகலாம்னு இருக்கோம்..”

பக்கென அதிர்ந்த இதயத்தோடு பெற்றவர்கள் விதிர்த்து போயினர்.

“எ.. என்னடா பேசற! யார் உன்னை பாரமா நினைச்சது.!”

“ஒரு குழந்தை இல்லாததுனால நானும் என் மனைவியும் இந்த குடும்பத்துக்கு வேண்டாதவங்க ஆகிட்டோம்! தாய் தகப்பனே பிள்ளைங்ககிட்ட எப்படி பாரபட்சம் காட்டுவாங்கன்னு இப்பதான் புரிஞ்சிக்கறேன்.”

“என்னடா வாசி! என்னென்னவோ பேசறியே!” மங்கையின் குரல் உடைந்தது.

அதை சட்டை செய்யாதவனாய் வாத்சல்யன் தொடர்ந்தான்.

“பெத்தவங்கள அம்போன்னு கை விட்டுட்டு போகல.. இந்த குடும்பம் சாதாரண நிலையிலிருந்து இந்த அளவுக்கு முன்னேறி வர்ற வரைக்கும் நான் உங்க கூட இருந்திருக்கேன்.. உழைச்சிருக்கேன். முரளி படிச்சு முடிச்சு பிசினஸ் ஸ்டார்ட் பண்ற வரைக்கும்.. இந்த குடும்பத்துக்காக அப்பாவோட சேர்ந்து பக்கத்துணையா நின்னுருக்கேன்.”

“என்னப்பா இந்த குடும்பம் இந்த குடும்பம்னு பேசற.. இது உன் குடும்பம் இல்லையா..?”

“நேத்து வரைக்கும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் மத்தவங்களை பேசவிட்டு.. அமைதியா வேடிக்கை பார்த்ததை கேள்விப்பட்டபோது.. நானும் சந்தாவும் இந்த வீட்டு ஆளுங்க இல்லைன்னு பட்டவர்த்தனமா நெத்திப் பொட்டுல அடிச்சு புரியவச்ச மாதிரி இருந்தது.. இந்த வீட்டுக்கு முரளியும் அவன் குடும்பமும்தான் முக்கியமா இருக்குது.. பரவாயில்லை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். நாங்க ஒதுங்கிக்கறோம்.”

“அப்படியெல்லாம் பேசாத வாசி! ஒரு நாளும் நாங்க உன்னை அப்படி நினைச்சதே இல்ல.! அவங்க ஏதோ கோவத்துல பேசும்போது நாங்க எப்படி குறுக்கிட்டு ஏதாவது சொல்லப் போய் அது பெரிய பிரச்சனையாகிடக் கூடாதேன்னு..” மங்கை அழத் தொடங்க..

“அதேதான்.. பிரச்சனை வந்து உன் சம்மந்தி வீட்டுக்காரங்க மனசு கஷ்டப்பட்டுட கூடாதுன்னு இந்த அளவு யோசிச்ச நீங்க.. உருக்குலைஞ்சு போய்..‌ குற்றம் சுமத்தப்பட்டு ஒரு அகதி மாதிரி நின்னுட்டு இருந்த என் மனைவியை பத்தி ஒரு செகண்ட் கூட யோசிக்கல. ஏன்னா எங்களுக்கு குழந்தை இல்லை அதுதானே காரணம்.”

வாத்சல்யா! செல்வவிநாயகம் ஏதோ சொல்ல வர..

உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.. அவ அப்படி செஞ்சிருப்பான்னு நீங்க கூட நினைக்கறீங்களா.. அவங்கள காப்பாத்த போய் கைய ஒடச்சிட்டு வந்து நிக்கறா.. பாவம் அது கூட அந்த பைத்தியக்காரிக்கு தெரியல.. மனசு முழுக்க இருந்த வக்கிரத்தை எல்லாரும் சேர்ந்து ஒரே நாள்ல கொட்டி தீர்த்துட்டீங்க..”

“டேய்.. டேய்! வார்த்தைகளை விடாதடா..” செல்வவிநாயகம் குரல் உயர்த்தி சொல்ல.. மங்கை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார்.

“சொல்லிக் காட்டணும்னு நினைக்கல.. இந்த வீட்டுக்காக முரளி ஒரு பைசா கூட தந்ததில்லை.. அவன் குடும்பத்தை அவன் பார்த்துக்கறான். வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்கி போடறதிலிருந்து.. உங்க மருத்துவ செலவை பார்த்துக்கற வரைக்கும்.. அத்தனையும் எடுத்து செய்யறது நானு! முரளிக்கு பிசினஸ்ல பணம் தேவைப்பட்ட போது கூட எத்தனையோ முறை உதவி பண்ணிருக்கேன். எதுக்காக பணம் கொடுக்கறீங்க.. ஏன் அவங்களுக்காக செலவு பண்றீங்கன்னு ஒரு நாள் கூட என் பொண்டாட்டி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவளைத்தான் நீங்க அத்தனை பேரும் சேர்ந்து அசிங்கப்படுத்தி இருக்கீங்க. அவளை அவமானப்படுத்தினா என்னை அவமானப்படுத்தின மாதிரி. நாயும் பூனையும்.. தான் போடற குட்டியில முதல் குட்டியை பத்தியத்துக்காக விழுங்கற மாதிரி.. உங்க சுயநலத்துக்காக என்னை விட்டுக் கொடுத்துட்டீங்கன்னு தோணுது.”

வார்த்தைகள் முகத்திலறைய நிலைகுலைந்து போனார் மங்கை.

“டேய்..‌டேய்! இப்படியெல்லாம் பேசாதடா..! ஒரு நாளும் நான் அப்படியெல்லாம் யோசிச்சதே இல்லை. பேசினதெல்லாம் அவங்கதான். நான் தப்பா ஒரு வார்த்தை கூட சொல்லல.!”

“நீங்க அமைதியா நின்னு வேடிக்கை பார்த்ததே உங்க மனசுல எங்க ரெண்டு பேரையும் எந்த இடத்துல வச்சிருக்கீங்கன்னு புரிய வச்சிட்டது. இதைவிட மோசமா நீங்க என்னை அசிங்கப்படுத்தவே முடியாதும்மா! ஒரு குழந்தை இல்லாததுனால நான் உங்க மகனா இருக்க தகுதி இல்லாதவனாகி போயிட்டேன் போலிருக்கு! கூடிய சீக்கிரம் நாங்க இந்த வீட்டை விட்டு கிளம்பிடுவோம். இனி உங்க நிம்மதிக்கு தொந்தரவா இருக்க மாட்டோம்.!” வாத்சல்யன் பொறுமை இழுத்துப் பிடித்துக் கொண்டு இத்தனை நிதானமாக அவர்கள் மனம் புண்படாதபடிக்கு பேசியதே பெரிய விஷயம் தான்.

அவன் எழுந்து போய் விட்டான். உண்மை சாட்டை அடியாய்.. நெஞ்சைத் துளைத்து வலியை கொடுக்க.. முகத்தை மூடிக்கொண்டு அழும் மனைவியை தேற்ற வழியின்றி மௌனமாய் அமர்ந்திருந்தார் செல்வவிநாயகம்.

தொடரும்.

5 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 21

  • Krishnaveni

    எம்மா மங்கை அங்க அத்தனை பேரும் லச்சு வை அந்த பேச்சு பேசும் போது வாயை மூடிட்டு அமைதியா வேடிக்கை பாரத்துட்டு இங்க வந்து புள்ள கிட்ட வருத்தப்பட்டு அழுது என்ன பிரயோஜனம் 😏😏😏
    பாவம் தன்னோட கை வலி கூட தெரியாமல் ஒருத்தி நிலைகுலைந்து உட்கார்ந்து இருக்கா ன்னா அவ மனசுல எவ்வளவு வேதனையும் ரணமும் இருந்திருக்கும் 🥺🥺🥺

    Reply
  • Revathy Dhanda

    புவனாவோட அக்கா வை காப்பாத்த போய் கைய உடைச்சிக்கிட்டு கூட தெரியாம ஒருத்தி இருக்கற அளவுக்கு அவ மனச காயபடுத்திட்டிங்களே டா

    வாச்சா கேட்டது எந்த தப்பும் இல்ல, இவங்க எல்லா பெத்தவங்க, ஒரு குழந்தை இல்லாதது அவ்ளோ குத்தமா அந்த பொண்ண இன்னும் எவ்ளோ டா நோகடிப்பீங்க 😭😭

    வாத்சா மரியாதை அன்பு இல்லாத வீட்ல நீயும் லக்ஷ்மி யும் இருக்காதீங்க இப்பயாவது நல்ல முடிவு எடுத்தியே டா

    Reply
  • Divyalakshmi Sugumar

    Perfect bathiladi

    Kathala katharala
    Aana solla vendiyadha solliyachu

    Mariyadhai illadha idhathulla irundhu oru projanamum illa

    Vatsa 🙏🙏🙏🙏🙏🙏🙏

    Reply
  • Shilaja sankaran

    அப்பாடா இப்ப தான் கொஞ்சம் மனசு ஆறுச்சு, வாத்சா நாசுக்காக அதே சமயம் சாட்டை அடியாக இந்த பெத்தவங்களை கேட்டுருக்கான்
    அங்க மகனையும், மருமகளையும் மத்தவங்க முன்னாடி விட்டு குடுத்துட்டு இப்ப அழுகுது இந்த அம்மா
    பிள்ளை இல்லாதவன் பேச்சு சபை ஏறாது போல

    Reply
  • Hello miss Lakshmi mamiyar lakshmiya athana perum peasunapo aduthavangalukaga avala vittu koduthutu ninnigala ippavum apadiyae azhuthutu nillunga . Super vatchalyan semma reply 👌👌👌

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!