Skip to content
Post Views: 1,682
விக்ரம் பார்த்தசாரதி 05 (02)
“எஸ் விக்ரம். ஸ்போர்ட்ஸ், ஃபேஷன், பிசினஸ் அப்படின்னு பல வகையான பத்திரிக்கைகள் அவங்க மீடியா ஹவுஸ்லேர்ந்து வெளி வருதே?. ஸ்போர்ட்ஸ் கேலக்ஸி நீ கேள்விப் பட்டது இல்லையா?” வியப்புடன் கேட்டான் கெளதம்.
“ஓ.. ஸ்போர்ட்ஸ் கேலக்ஸி யா?” என்று நெற்றி தேய்த்து விட்டுக் கொண்டேன்.
“இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் கேலக்ஸி பாரு விக்ரம் என்னோட சுவாதியோட கவர் ஸ்டோரி” முன்தினம் கைப்பேசியில் அர்ஜுன் குதூகலித்தது நினைவுக்கு வந்தது. கூடவே கேட்டது ஸ்வாதியின் உற்சாகக் கூவலும்.
Advertisement
“தட்ஸ் குட் அர்ஜுன்”
“என்ன விக்ரம் சிம்பிள் ஆ சொல்லிட்டே குட்னு? அது ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் மேகசின். இது எனக்கு ரொம்ப பெரிய பெருமை. ரொம்ப பெரிய சந்தோஷம்”
அவர்கள் இருவரும் சர்வதேச டென்னிஸ் விளையாட்டுக்களை விளையாடத் துவங்கி இருக்கும் நேரம். அந்த எண்ணத்தில் தன்னாலேயே சில பல வியூகங்கள் அமையத் தொடங்கி இருந்தன எனக்குள்ளே.
Advertisement
“ஸ்போர்ட்ஸ் கேலக்ஸி” மெல்ல சொல்லிக் கொண்டேன் நான்.
Advertisement
‘அந்த கேலக்ஸி எனப்படும் பால்வெளி வீதி உனதே உனது என்று ஆகி விட்டால் நீ என்ன செய்வாய் அர்ஜுன்?’ கேட்டுக் கொண்டேன் மனதிற்குள்ளே.
“என்ன யோசனை விக்ரம்?” கேட்டான் கெளதம் தனது தட்டில் இருந்த இனிப்பை எடுத்துக் கடித்துக் கொண்டே.
“ஒண்ணுமில்லை..” நான் வார்த்தைகளைத் தேட
Advertisement
“ஸோ உனக்கு ஷ்யாம் பத்தி தெரிஞ்சுக்கணும் இல்லையா?” நறுக்குத் தெரித்தார் போல கேட்டான் கெளதம். மனதில் உள்ளதை அப்படியே படித்து வைப்பதுதானே அந்த சதுரங்க வீரனின் பாணி.
அவனுடைய கேள்வியில் நான் கொஞ்சம் புன்னகைத்தேன் “அப்படியும் வெச்சுக்கலாம். சொல்லு கெளதம். ஷ்யாம் உனக்கு பெரிய ஃபேன் போலிருக்கே. அவன் உன்கிட்டே பேசற விதத்தை வெச்சு எனக்குத் தெரிஞ்சது”
“ஆங் ஒரு பெரிய ஃபேன்னு சொல்லலாம். அதை விட அவனோட கனவு நிறைவேற நான் ஹெல்ப் பண்ணுவேனா அப்படின்னு யோசிக்கிறான்” தட்டில் இருந்த உணவை ருசித்துக் கொண்டே சொன்னான் கெளதம்.
“கனவா?” என்றேன் நான் சாப்பிட்டபடியே “அப்படி என்ன கனவு. அப்படியே கனவுன்னு இருந்தாலும், அவ்வளவு பெரிய பிசினஸ் ஃபேமலிலே அவனோட கனவுக்கு ஹெல்ப் பண்ண ஆள் இல்லையா என்ன ?”
பதிலுக்கு அழகாக சிரித்தான் கெளதம்.
அப்போது அடுத்த சுற்று உணவகளை எடுத்துக் கொண்டு எங்களது மேஜைக்கு வந்திருந்தனர் சிப்பந்திகள்.
அவர்கள் உணவை பரிமாறி விட்டு நகர்ந்த அந்த நேரத்தில் என்னைக் கலைத்தது நாங்கள் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து சற்றே தொலைவில் கேட்ட அந்த சிரிப்பு சத்தம். அது வேறே யாரும் அல்ல, ஷ்யாமின் தந்தை விஷ்ணு பிரசாத் தான்.
கௌதமுமே அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அங்கே சிரிச்சிட்டு இருக்கார் பார்த்தியா அவர்தான் ஷ்யாமோட அப்பா. ஏன்ன்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலை விக்ரம், ஆனா எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அவரோட ஆட்டிடியுட் கொஞ்சம் அலர்ஜிதான்” அவரை விட்டு விழி அகற்றாமல் வார்த்தைகளை மெல்ல உதிர்த்தான் கெளதம்.
“உனக்குமா?” சட்டென கேட்டு விட்டேன் நான்.
“அஃப் கோர்ஸ் எஸ். ஏன் உனக்குமா?” எனது முகத்தை மெல்ல படித்தான் கெளதம். கொஞ்சம் மௌனமானேன் நான். அடுத்து அவனுக்கு என்ன புரிந்ததோ ஒரு சின்ன சிரிப்புடன் தொடர்ந்தான் கெளதம்.
“நான் ஷ்யாமுக்கு ஒரு கனவுன்னு சொன்னேனே, அது என்ன தெரியுமா?” கெளதம் சொல்லிக் கொண்டிருக்க,
அந்த இடத்தை விட்டு அகன்று சென்று கொண்டிருக்கும் ஷ்யாமையும் அவனது தந்தையையும் பார்த்துக் கொண்டே இருந்தேன் நான்.
“ஷ்யாம்க்கு ஒரு ஸ்போர்ட்ஸ் சேனல் ஸ்டார்ட் பண்ணனும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு அவங்க அப்பா சப்போர்ட் பண்ண மாட்டேங்குறார்” அவன் முடிக்கவில்லை சரேலென அவனை நோக்கி திரும்பினேன் நான்.
“இஸ் இட் ஸோ?” எனது கண்கள் மின்னின. இந்த ஒரு அறிகுறி போதாதா அந்த சதுரங்க வீரன் எனது மனதை படிக்க
“எஸ் எஸ்” என்றான் எனது முகத்தை சுவாரஸ்யமாக படித்தபடியே “ஸோ, அந்த ஸ்போர்ட்ஸ் சேனல் மேலே விக்ரமுக்கும் ஆசை வருது போலிருக்கே”
“ம்?” என்று இருக்கையின் பின்னால் நன்றாக சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டேன் நான்.
“நீ ஏதேதோ பெருசா யோசிக்கறே போலிருக்கே விக்ரம்” மெல்ல சிரித்தான் கெளதம். நான் பதில் சொல்லவில்லை.
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.”
“நினைப்பதெல்லாம் உயர்ந்த எண்ணமாகவே இருக்க வேண்டும். அது கை கூடாவிட்டாலும் அதற்காக அந்த எண்ணத்தை விடக்கூடாது. கரெக்டா விக்ரம்?” கெளதம் கேட்க சட்டென கண் திறந்தேன் நான்.
“அப்படி கைகூடாம போயிடுமா என்ன? அதையும் பார்த்திடாலாம்” நான் கண் சிமிட்ட, என்னுடன் சிரிப்பில் இணைந்து கொண்டான் கெளதம் சித்தார்த்.
அடுத்த சில நாட்களில் ஷ்யாமை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் அத்தனை விவரங்களையும் திரட்டி இருந்தேன் நான். அதற்கு கெளதம் சித்தார்த்தும் பெரிய அளவில் உதவி இருந்தான்.
இன்னும் சில நாட்கள் கடந்து இருக்க, நான் அப்போது லண்டனை வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கௌதமுமே என்னுடன் தங்கி இருந்தான்.
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா விக்ரம்? நேத்து ஷ்யாம் கால் பண்ணி இருந்தான். அவனும் இங்கே வந்திருக்கான் போலிருக்கு. அந்த ஸ்போர்ட்ஸ் சேனல் பற்றி யோசிச்சீங்களா சர்ன்னு கேட்டுட்டு இருந்தான் அவன்.” இருவரும் எனது வீட்டின் பால்கனியில் அமர்ந்து காபியை ருசித்துக் கொண்டிருந்தோம்.
இரண்டு நிமிடங்கள் எதுவுமே பேசாமல் காபியை மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்த நான் சட்டென கௌதமின் பக்கம் திரும்பினேன்.
“நாளைக்கு ஈவினிங் ஷ்யாமை இங்கே வர சொல்லுவோமா? இதே பால்கனியில் வெச்சு நான் டீல் முடிக்கறேன்”
“ஆர் யூ ஷூர் விக்ரம் நல்லா யோசிச்சு பார்த்துட்டியா?”
“யோசிக்கறது என்ன? முடிவே பண்ணிட்டேன்” என எனது யோசனைகளை கௌதமிடம் விளக்கலானேன்.
மறுநாள் மாலை. சொன்னால் சொன்ன நேரத்தில் மிகச் சரியாக வந்து நின்றான் ஷ்யாம். அவனைப் பொறுத்தவரை அவன் கௌதமை சந்திக்கும் நோக்குடனே வந்திருந்தான் என்று சொல்ல வேண்டும்.
இந்த விளையாட்டினுள் நான் நுழைந்ததையே இன்னும் அறிந்திருக்கவில்லை ஷ்யாம்.
“விக்ரம் மீட் ஷ்யாம்” என்னிடம் அவனை புதியவன் போலவே அறிமிகப் படுத்தினான் கெளதம்.
“ஓ ஷ்யாம்” எனது முன்னால் நின்றவனை இடுப்பில் கரங்களை வைத்துக் கொண்டு ஏற இறங்கப் பார்த்தேன் நான். “நீ கெஸ்ட்ன்னு சொன்னதும் நான் கொஞ்சம் பெரிய அளவிலே எதிர்ப்பார்த்தேன். கெளதம்”
ஷ்யாமின் முகத்தில் லேசான திகைப்பு.
“எனி ஹவ்” என்று சொல்லி நிறுத்தினேன் நான். இப்போது அவனை நோக்கி கை நீட்டினேன். “வெல்கம் மிஸ்டர் ஷ்யாம்”
சிறிது நேரத்தில் நாங்கள் மூவரும் எனது வீட்டின் பால்கனியில் அமர்ந்து இருந்தோம். காபியும், அதற்கு ஏற்ற சில தின்பண்டங்களும் அங்கே இருக்க எங்களுக்கு முன்னால் இருந்த சதுரங்க அட்டையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
அவனுக்கு அருகில் இருந்த கௌதமின் இதழோரம் ஒரு சின்ன சிரிப்பு தேங்கியிருக்க, ஷ்யாமின் முகத்தையே சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ஷ்யாமின் முகத்தில் படபடப்பும் பரபரப்பும்.
கொஞ்ச நேரம் முன்பாக கெளதம்தான் ஆரம்பித்தான் இந்த விளையாட்டை.
“ஷ்யாம்.. ஒரு கேம் செஸ் விளையாடுவோமா? விக்ரம் எப்படி விளையாடுவார் தெரியுமா?”
“உங்களை விடவா கெளதம் சர்?” ஷ்யாமின் குரலில் கெளதமின் திறமையை சிலாகிக்கும் பாவம் இருந்தது.
எனக்கும் கூட சதுரங்கம் விளையாடி பழக்கம் உண்டுதான். அதன் உபயம் கெளதம் என்றால் மிகையுமில்லை.
“கமான் ஷ்யாம். என்ன இப்படி கேட்டுட்டீங்க? நாம ரெண்டு பேரும் ஒரு சைட். விக்ரம் ஒரு சைட் விளையாடிப் பார்ப்போமா? அப்போ உங்களுக்கு புரியும் விக்ரம் யாருன்னு”
துவங்கியது விளையாட்டு. எப்போதும் போல தனது குதிரைகளுடன் துவங்கினான் கெளதம் சித்தார்த். அடுத்து எனது கண் அசைவே வைத்தே நான் சொல்வதைப் போல அவன் விளையாடிக் கொண்டிருந்த, அதே நேரத்தில் மெது மெதுவாக என்னைப் பற்றிய விவரங்களை, எனது தொழில் பற்றிய தகவல்களை என பலவற்றை ஷ்யாமின் செவிகளில் ஏற்றிக் கொண்டிருந்தான் கெளதம்.
“என்னை விட பெட்டர் இன்வெஸ்டர் விக்ரம்தான் ஷ்யாம்” என ஓரிடத்தில் புள்ளி வைத்து கெளதம் நிறுத்த, அந்த நேரத்தில் ஷ்யாமின் முகத்தில் அளவில்லா பரவசம். என்னைப் பற்றிய முழு விவரங்கள் அவனை திக்கு முக்காட செய்து இருக்க வேண்டும்.
“நீ.. நீங்க ஸ்போர்ட்ஸ் சேனல்லே இண்டரெஸ்டெட்டா விக்ரம் சர்?” அவனது மிஸ்டர் இப்போது “சர்” ஆக மாறியிருக்க அவனறியாமல் கௌதமை பார்த்து கண் சிமிட்டினேன் நான். உதடுகளுக்குள் சிரித்தான் அவன்.
“வொய் நாட் மிஸ்டர் ஷ்யாம்?” என்று எனது உள்ளங்கைகளை தேய்த்து விட்டுக் கொண்டேன்.
“கிரேட் விக்ரம் சர். என்ன டெர்ம்ஸ் சொல்லுங்க” படபடத்தான் அவன்.
“என்ன பெரிய டெர்ம்ஸ். நான் ஜெயிக்கணும் அவ்வளவுதான்” என்றேன் சாதாரணமாக.
“புரியலை” அவன் சொல்ல
“நான் இந்த கேம் ஜெயிச்சிட்டா உங்க சேனல்லே நான் இன்வெஸ்ட் பண்றேன். என்ன டீலா?”
ஷ்யாம் திக்கு முக்காடிப் போயிருக்க வேண்டும். பரபரப்பும், மகிழ்ச்சியும், தவிப்பும் என பல வித உணர்வுகள் ஒன்று சேர கௌதமிடம் கண்களால் கெஞ்சி கெஞ்சியே என்னை ஜெயிக்க வைத்தான் ஷ்யாம்.
அடுத்த சில நிமிடங்களில் எனது திட்ட வரைவுகள் அவனது கை சேர்ந்து இருக்க எங்களிடம் இருந்து விடைப் பெற்றான் ஷ்யாம்.
error: Content is protected !!