Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

77. பிரியதர்ஷினி S - உனதன்பில் சரணாகிறேன்

உனதன்பில் சரணாகிறேன் 10

அத்தியாயம் 10

“எனக்குள் நீ!”



Advertisement

ம்ருதவ் வார்த்தைகளில் மட்டுமே நேசத்தை சொல்லிட தாமதப்படுத்தியிருந்தான்.

ஆனால் தன்னுடைய சிறு செயலில், மித்யுகாவிடம் தன்னுடைய காதலை சேர்ப்பித்திருந்தான்.

காலை கல்லூரி வர வண்டியில் அமர்ந்தவனின் பேன்ட் கால் வைக்குமிடத்தில் மாட்டிக்கொள்ள வண்டியிலமர்ந்த நிலையிலிருந்தே குனிந்து எடுத்தவனின் சட்டைப் பையிலிருந்த ஜிமிக்கி கீழே விழுந்திட, தரை தொடும் முன்பு கையில் தாங்கியிருந்தான்.

Advertisement

“என் ஜிமிக்கிப்பொண்ணை, என் கைக்குள்ளவே வச்சிக்கணும் தோணுதே…” என்று அந்த ஜிமிக்கியிடத்தில் மொழிந்தவன், “நீ திரும்ப விழாம இருக்கணுமே! என்ன பண்ணலாம்” என யோசித்தான்.

Advertisement

“உன்னை நானும் போட்டுக்க முடியாது. இப்படி பாக்கெட்டில் வச்சிட்டே சுத்தவும் முடியாது. என்ன பண்ணலாம்” என வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது இரு கைகளாலும் தாளம் தட்டியவாறு சிந்தித்தவனின் கண்ணில் பட்டது வண்டி சாவி.

சட்டென்று தோன்றிய எண்ணமாக, ஜிமிக்கியை சாவியுடன் கோர்த்திருந்தான்.

“நல்லாயிருக்கே! நானும், அவளும்!” என சொல்லிக்கொண்டவனின் மனதில் மந்தகாசம்.

Advertisement

“எனக்கு என் பைக் ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு ஜிமிக்கி. பெர்பெக்ட் மேட்ச்” என்றவன், “இப்போ நீங்க ஒன்னு சேர்ந்த மாதிரி, நானும் அவளும் சேரனும்” என்றவாறு வண்டியை உயிர்ப்பித்து கல்லூரி வந்திருந்தான்.

அவன் நினைத்த சேருதல் அத்தனை விரைவில், தான் சேர்த்திட்ட இணைகளால் உண்டாகுமென்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.

“வேண்டிய ரைட்ஸ் கொடுத்தீங்களா இல்லையான்னு உங்க பைக் கீ சொல்லும்” என்று அவள் சொல்லியதும்,

வேகமாக கண்ணாடியிலிருந்து விலகிய அவனது விழிகள், வண்டியில் பொருத்தப்பட்டிருந்த சாவியில் நிலைத்தது.

இதற்கு மேல் மறைத்து பலனில்லை, எவ்வித தெரிதலும், புரிதலும் இல்லாமல் தாங்கள் இணைந்து அறிதல் தான் காலத்தின் கட்டாயமோ என நினைத்து, “கவனிச்சிருக்கமாட்ட நினைச்சேன்” என்றான் ம்ருதவ்.

“இனி கவனிக்கணுமே! உங்களை… எல்லாம்” என்ற மித்யுகா, “பார்க்கிங்கில் உங்ககிட்ட வர வரைக்கும் சின்னதா ஒரு பதட்டம் இருந்துச்சு. நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு. ஆனா நீங்க வண்டியை நிறுத்திட்டு, சாவியில் கை வச்சு ஜிமிக்கியை வருடினாங்களா… உங்களுக்குள்ள நான் வந்துட்டேன்னு புரிஞ்சுது” என்றாள்.

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்…” தன்னை, தன்னுடைய சிறு செயலுக்கான பொருளும் அவளுக்கு புரிகிறது என மகிழ்ந்த ம்ருதவ், சிறு ஓசையில் ஆமோதித்தான்.

“ஜிமிக்கி இல்லைன்னு சொன்னீங்க?” அவனின் மகிழ்வை வண்டியின் கண்ணாடியில் தெரிந்த அவனது கண்களிலிருந்து உள்வாங்கியவளாக வினவினாள்.

“என்னோட… கூடவே வச்சிக்கணும் தோணுச்சு.”

“என்னையவா?”

கண்ணாடியை தாழ்த்தி நன்றாக அவள் முகம் தெரிய பார்த்த ம்ருதவ்,

“ரெண்டையும் தான்” என்றான்.

“அப்போ, இப்போ அங்க போலாமா?” என்றாள்.

சரியென தலையை மட்டும் அசைத்தவன், வண்டியை முடுக்கியிருந்தான். சீரான வேகம்.

“ஃபாஸ்டா போலாம் ம்ருது…”

“சேஃப் இல்லை.”

“நேத்து அவ்ளோ ஸ்பீட் போனீங்க?”

“அப்போ வண்டியில் என் பின்னாடி நீயில்லை. நேத்து வரை எனக்குன்னு யாருமில்லை. இப்போ…” என நிறுத்திக்கொண்டான். அவன் சொல்லாமல் விட்ட இடைவெளியின் அர்த்தம் அவளை சேர்ந்திருந்தது.

“அவ்ளோ லவ்வா…”

ம்ருதவ் மித்யுகாவிடம் காதலை வாய் திறந்து சொல்லவில்லை… அவ்வளவே!

தெரிய வேண்டியவளுக்கு தெரிந்திருக்க, வார்த்தைகளற்று உணர்வுகளால் ஜீவித்து வெளிக்காட்டிடத் துவங்கியிருந்தான்.

“உனக்கு புரியுதுல…” என்ற ம்ருதவ், “இப்போவாச்சம் சொல்லு. என்ன சொல்லணும் வெயிட் பண்ண?” எனக் கேட்டான்.

மித்யுகா பதில் சொல்லாது,

“அடிக்கடி அங்க போவீங்களோ?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்… சித்தப்பா இருக்கும்போது வாரம் ஒருமுறையாவது போவோம். அவரோட விருப்பமான கடவுள். எனக்கும் பழகிடுச்சு. சந்தோஷம், கவலை எல்லாமே ரெண்டு பேரும் அங்க வச்சுதான் ஷேர் பண்ணிப்போம்” என்றான்.

இதற்குமேல் தன்னைப்பற்றி அனைத்தும் அவள் தெரிந்துக்கொள்ள வேண்டுமே ஆதலால் தடையின்றி சொல்லியிருந்தான்.

வர வேண்டிய இடம் வந்திருந்தது.

“ஸ்டெப்ஸ் ஏறிடுவியா?” வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு அவளிடம் வினவினான்.

வண்டியிலிருந்து சாவியை எடுத்து பையில் போடும் முன்பு, ஜிமிக்கியை ரசனையாய் தீண்டிய வருடலில் அவளுக்கான அவனது காதல் கொட்டிக் கிடந்தது.

“ஏற முடியலனா தூக்கிப்பீங்களா?”

“அப்ஜெக்ஷன் இல்லை. ஆனா இப்போ முடியாது” என்று, ம்ருதவ் ஒற்றை புருவம் உயர்த்தி சொல்லிய விதத்தில் மித்யுகாவின் முகம் குப்பென்று சிவந்தது.

“நானே தூக்க சொன்னா?”

“ரொம்ப இல்லன்னாலும் நானும் கொஞ்சம் கெட்டப்பையன் தான்” என்று ம்ருதவ்வின் தோற்றத்தில் அவள் தான் உள்ளுக்குள் அலற வேண்டியிருந்தது.

‘வார்த்தையாலே, பாக்குற பார்வையாலே உருக வச்சிடுவாங்கப்போல’ என உள்ளுக்குள் முனகியவள், “மேல ஏறுறதுக்கு முன்ன வேற வேலையிருக்கு” என்று மலைக்கு கீழே இருக்கும் கடைத்தெருவிற்கு அழைத்து வந்தவள், பெண்களுக்கான பிரத்யேகக் கடைக்குள் அழைத்துச் சென்றாள்.

“இங்க எதுக்கு? இந்த மாதிரி ஷாப்புக்கெல்லாம் நான் வந்தது இல்லை” என்று, அக்கடைகளில் பெண்கள் கூட்டமாக இருக்க, உள்ளே செல்லவே தயங்கி நின்றான் ம்ருதவ்.

“இதுக்கே தயங்குனா எப்படி ம்ருதவ்” என்றவள், “இனி இதுக்கும் நீங்க பழகணும்… எனக்காக” என்றாள்.

அவளுக்காக என்று சொல்லிய பின்பு அவனிடத்தில் தயக்கமேது?

உள்ளே சென்றுவிட்டான்.

ம்ருதவ் வார்த்தைகளால் சொல்லியிருந்தால் கூட அந்நேரம் மட்டுமே அம்மகிழ்வு நெஞ்சம் படர்ந்து மறைந்திருக்கும். ஆனால் காதல் வார்த்தைகளற்று அவளுக்காக என்பதில் சிறு சிறு செயல்களிலும் அவன் காட்டுவதில் அவளது காதலும் அவனுடைய அன்பில் கலந்து நிறைவு கொள்கிறது.

உள்ளே வந்துவிட்ட ம்ருதவ், மித்யுகா எங்கே என்று திரும்ப, அவளோ அவனைப் பார்த்தவாறு பின் தங்கியிருந்தாள்.

“வாங்கனும் சொல்லிட்டு அங்கவே நின்னுட்ட” என்று ம்ருதவ் அழைக்க, அருகில் வந்தவள், “லவ் யூ ம்ருது” என்றிருந்தாள்.

அருகிலிருந்த பெண் மித்யுகா சொல்லியதில் இவர்களைத் திரும்பிப் பார்த்திட, ம்ருதவ் ஒற்றை கையால் முகம் மூடி வெட்கம் மறைத்தான்.

“அச்சோ… க்யூட் ம்ருதவ் நீங்க” என்ற மித்யுகா, “லவ் யூ” என மீண்டும் சொல்லியிருந்தாள்.

“இப்படிலாம் வெட்கப்பட வைக்காத யுகா” என்று கடினப்பட்டு தனது இதழ் சிந்தும் வெட்கத்தை கட்டுக்குள் வைத்தவன், “என்ன வேணும் பாரு” என அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தான்.

“யுகா… ம்ம், நல்லாயிருக்கு” என்றவள் அவனின் கரத்தோடு கரம் கோர்த்து,

“நீங்கதான் பார்க்கணும். ஜிமிக்கி” என்றாள்.

“எனக்கு இதெல்லாம் செலக்ட் பண்ணத் தெரியாது” என்றான்.

“இதுவரை பண்ணத் தெரியாதுன்னா…” என்றவளை இடை நிறுத்திய ம்ருதவ், “இனி பழகிக்கிறேன். உனக்காக மட்டுமில்ல, நமக்காக” என்றான்.

“அப்படியே உங்க தோள்ல சாஞ்சிக்கவா?”

ஒரு நாளில், சில மணி நேரங்களில் தன்னைப்போலவே அவனுள்ளும் எப்படி இந்தளவிற்கான காதலென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் காட்டும் காதலில் நொடிக்கு நொடி அவனில் காதலில் விழுந்தாள் பெண்ணவள்.

அவளுக்கு பார்த்த கணம் காதல் ஆழம்கொள்ள காரணமில்லாமல் இருக்கலாம். ஆனால் அவனுக்கு, உலகின் மொத்தமும் ஒன்றாக, ஓர் உறவாக தனது கை சேர இருப்பவளின் மீது நேசம் பெருங்காதல் கொள்ள ஒரே காரணம், அவன் வாழ்வு அவள் என்பது மட்டுமே! அவன் உறவு அவள்! அவன் அனைத்தும் அவள்.

மித்யுகா என்பவள் மற்றவருக்கு சாதாரணப் பெண்… அவ்வளவே!

ம்ருதவ் என்பவனுக்கு சகலமும் மித்யுகா!

காதல் விருட்சம் கொண்டிட நீ என் உறவு என்பதைத்தாண்டி வேறு பல காரணங்கள் வேண்டுமா என்ன?

“யுகா!”

அவள் இருக்குமிடமெல்லாம் தனக்கொரு பொருட்டில்லை என்பதாக அவனது தோளில் சாய்ந்துக்கொள்ளவா என்று கேட்டிட, ஒற்றை விளிப்பில் தன்னுடைய மறுப்பைக் காட்டியிருந்தான்.

“ரொம்பத்தான்” என்று உதடு சுளித்தவள், “வந்த வேலையைப் பாருங்க” என்றாள்.

அவளின் சின்ன கோபம் சுமந்த முகம் கூட அவனது மனதிற்கு பெரும் இதத்தை, ரசனையை கொடுத்தது.

“கிட்ட வா” என்று ஜிமிக்கிகள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றவன், சில நிமிடங்கள் அனைத்தையும் பார்த்தவாறு நின்றுவிட்டான்.

“இதென்ன இவ்ளோ இருக்கு.” மலைத்துக் கூறினான்.

“இதுல ஒன்னு எடுக்கணும். அதுதான் டாஸ்க்” என்றவள், அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்துவிட்டாள்.

“இது ஆவறதுக்கில்லை” என்று கால்களை சற்று அகட்டி வைத்து, இரு கைகளையும் இடைக்குற்றி கீழ் உதட்டை அழுந்தக் கடித்தவனின் விழிகள் இங்கும் அங்குமாக அனைத்து பக்கங்களிலும் உருண்டது.

“இப்படி கஷ்டப்பட்டு செலக்ட் பண்ணி பத்திரமா வச்சிருந்த ஜிமிக்கியை தான் இப்போ நீங்க வச்சிருக்கீங்க” என்றாள்.

“அதுக்காகலாம், அதை உனக்கு கொடுக்க முடியாது.” சட்டென்று வேகமாக பதில் சொல்லியிருந்தான்.

“நானும் கேட்கல. புதுசு வரும்போது அது எதுக்கு எனக்கு” என்றிருந்தாலும், மூன்று நாட்களாக இருந்திருந்தாலும் எப்போதும் அவனின் கரத்தோடு தழுவியிருக்கும் அந்த ஜிமிக்கியின் மீது அவளுக்கு அதீத பொறாமை எழுந்தது உண்மை.

ஒவ்வொன்றாக எடுத்து அவளின் மீது தனது கை உரசிடாது, வைத்துப் பார்த்தவன்,

“இது ஓகே” என்று சிறு வளையத்தில் குட்டியாகத் தொங்கும் ஜிமிக்கியை தேர்வு செய்து, பணம் செலுத்தி வங்கி அவளின் கையில் கொடுத்திருந்தான்.

அப்போதே அதனை அணிவித்து,

“நல்லாயிருக்கா?” என்று ஒளிர்ந்த முகமாக, விழிகளை பக்கவாட்டில் மேலேற்றி, ஜிமிக்கி அசைந்தாட அவள் கேட்ட விதத்தில், அவனது இதயமும் அசைந்ததாடியது அவளின் அசைவுகளுக்கு ஏற்ப.

நல்லாயிருக்கு எனும் விதமாக அசைந்ததோ என்று எண்ணும் வகையில் அவன் அவளிடம் லயித்து தொலையும் மனதை இழுத்துப் பிடித்து தலையை அசைத்திருக்க,

“இப்போ மலையேறலாம்” என அவனின் கை பிடித்து இழுத்துச் சென்றாள்.

“எவ்ளோ நேரத்தில் ஏறுவீங்க?”

இருபது படிகள் ஏறியிருக்க வினவினாள்.

“நேத்து ஏறும்போது நோட் பண்ணலையா?”

“எங்க? அவ்ளோ வேகமா ஏறிட்டீங்க!” என்ற மித்யுகா, “என்னை மாதிரியே உங்களுக்கும் உடனே சொல்லத் தோணும்… உங்களுக்கு என் க்ளாஸ் தெரியுமோ தெரியாதோ நினைச்சு லஞ்ச் டைம் சாப்பிடக்கூடப் போகாம உங்க க்ளாஸ் வந்தா, அவ்ளோ ஃபாஸ்ட்டா பைக்ல போறீங்க. நல்ல வேளை அந்த டைம் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு கிளம்பினாள். அவளை உங்களை ஃபாலோ பண்ண சொல்லி வந்தா என்னை மலையேற விட்டுட்டீங்க! மேல வந்து நீங்க எங்கன்னு தேடி கண்டுபிடிச்சா, ஜிமிக்கியை வச்சு லவ் பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே உங்களைப் பார்த்துட்டே உட்கார்ந்துட்டேன். சூரியன் மறைய ஆரம்பிச்சதும்தான் வார்டன் தொலைச்சிக் கட்டிடுவாங்கன்னு, உங்களுக்கும் லவ் வந்தாச்சு… எப்படியும் நைட் கால் பண்ணுவீங்கன்னு நம்பிக்கையா ஹாஸ்டல் போனேன். ஆனால் நீங்க பண்ணவே இல்லை. ஜிமிக்கி மட்டும் போதும் நினைச்சிட்டீங்களோ?” என்று முகம் சுருக்கினாள்.

“நீ வேணாம் நினைக்கல. உனக்கு என்னை முழுசா தெரிஞ்சு உனக்கு இது வேணாம்னு தோணுச்சுன்னா… சோ, உனக்கு டைம் கொடுக்க நினைச்சேன்” என்றான்.

“என்னைவிட நீங்கதான் அதிகம் லவ் பண்றீங்க” என்ற மித்யுகா, “உங்களை பார்த்ததும் என்ன தோணுச்சோ அதுதான் வாழுற வாழ்க்கை முழுக்க…” என்றாள்.

“அதிகமா லவ் பண்றனா தெரியல. ஆனா நீ எனக்குள்ள அதிகத்துக்கும் நுழைஞ்சிட்டன்னு தெரியுது” என்ற ம்ருதவ், “எனக்கே எனக்குன்னு என் லைஃப்ல வந்திருக்க முதல் உறவு நீ. என்னோட முடிவா நீதான் இருக்கணும் இங்க சொல்லுது” என்று தன்னுடைய இதயத்தில் வலது உள்ளங்கையை வைத்து மென்மையாக நீவினான்.

கடையில் வைத்து பிடித்த கையை இன்னமும் விடாது இறுகப் பிடித்திருந்த மித்யுகாவின் பிடியின் இறுக்கம் மேலும் கூடியது.

“உங்க தோள்ல சாய்ஞ்சிக்க எப்போ பெர்மிஷன் கொடுப்பீங்க?” என்றவள் அவன் கண்கள் வழங்கிய சம்மதத்தில் மெல்ல அவனில் தலை சாய்த்திருந்தாள்.

இருந்தபோதிலும் இருவருக்குமிடையான கணிசமான இடைவெளியில் ம்ருதவ் கவனமாக இருந்தான்.

“அநியாயம் பண்றீங்க!”

“நம்மளோட செயல்களில் தான் நம்ம காதலோட மரியாதை இருக்கு” என்று மொத்தமாக அவளை அவனில் வீழ்த்தியிருந்தான்.

இருவரும் வார்த்தைகளால், செயல்களால் தங்களின் காதலை பகிர்ந்தபடி, ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ள முயன்றபடி மலையேறி வந்திருந்தனர்.

ம்ருதவ் நேராக தானமரும் திண்டிற்குச் செல்ல,

“சாமி கும்பிட்டு வரலாம்” என சன்னதிக்கு அழைத்துச் சென்றாள்.

மித்யுகா கண்கள் மூடி வணங்கியிருக்க, இறைவன் முன்பு அவளுடன் நின்றவனுக்கு வணங்க வேண்டுமென்றுத் தோன்றவில்லை. தனக்கு அருகில் தன்னுடைய தோள் உரசி நிற்பவளின் முகத்தில் பார்வையைப் பதித்து,

‘இப்போ இருக்க நிறைவு, இந்த நிம்மதி எப்பவும் எனக்கு வேணும். காரணம் என்னோட யுகா! அவளை சந்தோஷமா பார்த்துக்கோங்க.’ மனதில் நினைத்தவன், நெற்றியில் அவள் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில் தான் நிகழ் மீண்டான்.

“சாமி கும்பிடலயா? ஃப்ரீஸ் ஆகிட்டீங்க!” என்றவளுடன் பிரகாரத்தில் இணைந்து நடந்தான்.

“ரெண்டு நாளுக்கு முன்ன இருந்த சிவாவே வேற, இப்போ இருக்க சிவா வேற… காரணம் நீதான். அதான் உன்னை என்கிட்ட சீக்கிரம் சேர்த்திட சொல்லி கடவுளுக்கு ஆர்டர் போட்டதில் சாமி கும்பிட மறந்துட்டேன்” என்று அவன் சொல்லிய பதிலில், அவளுக்கு மூச்சு முட்டியது.

ஒருவர் காட்டும் காதலை உணர ஆண்டாண்டு காலங்கள் அவருடன் வாழ்ந்துப்பார்த்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு செயல் போதும்.

திண்டில் வந்தமர்ந்த பின்னர், மித்யுகா தன்னுடைய ஊர், குடும்பமென அனைத்தும் அவனிடம் பகிர்ந்துக்கொண்டாள்.

அவனோ, “இதுநாள் வரை எல்லாமே சித்தப்பா தான். இனி நீ. நமக்கு கமலேஷ், ரதி. அவ்ளோதான்” என்றிருந்தான்.

“சரி இப்போ சொல்லு என்னவோ சொல்லணும் சொன்னியே?” எனக் கேட்டான்.

“நீங்க கால் பண்ணுவீங்க நினைச்சு அப்போ சொல்லலாம் இருந்தேன்” என்றாள்.

“அதான் நான் பக்கத்திலே இருக்கனே” என்று சொல்லியவன், அவளின் வார்த்தைகள் புரிந்தவனாக, தன்னுடைய அலைபேசியை எடுத்து அவளது எண்ணிற்கு முதல் அழைப்பை விடுத்திருந்தான்.

“ப்பா…” என்று தனது அலைபேசி ஒலியில் கண்களை விரித்த மித்யுகா, “பைனலி கால் பண்ணியாச்சு” என ஏற்று காதில் வைத்தாள்.

அவளின் விரிந்த விழிகளில் தொலைந்து தத்தளித்தவனாக,

“இப்போ சொல்லலாமா?” எனக் கேட்டான்.

ம்ருதவ் அலைபேசியை எடுத்ததுமே தனக்கு அழைக்கத்தான் என்று தன்னுடைய எண்ணை எவ்வாறு பதிந்து வைத்திருக்கிறான் என்று திரையை கவனித்திருந்தவள், “இன்னைக்கு உங்க ஜிமிக்கிப்பொண்ணுக்கு பர்த்டே. நைட்டு கால் பண்ணா, இதை சொல்லி உங்களோட இங்க வரணும் சொல்லலாம் இருந்தேன். ஆனால் இங்க வந்தப்புறம் தான் சொல்ல நேரம் வந்திருக்கு” என்றாள்.

“ஹேய்” என்று மலர்ந்த ம்ருதவ், “ஹேப்பி பர்த்டே யுகா” என்று காதலாய் அவளின் நெற்றியில் இதழ் ஒற்ற நெருங்கி, நொடியில் சுதாரித்து, ஆதுரமாக நெற்றியோடு நெற்றி முட்டி விலகியிருந்தான்.

“ஒரு செக்கென்ட் ரொம்ப சந்தோஷப்பட்டுட்டேன்” என்று உதடு சுளித்த மித்யுகா, “வாழ்த்துக்கு நன்றி” என்றாள்.

“உன் பக்கத்துல எனக்கு கண்ட்ரோல் மிஸ் ஆகுது. இந்த லவ் ரொம்பவே டேஞ்சர்” என்று சிரித்தவனாக, “கிளம்பலாமா?” என்றான்.

“அதுக்குள்ளவா?”

“ஆமா… இப்போவே ஹாஃப் டே காலேஜ் முடிஞ்சுது. எனக்கு இதுக்கு அப்புறம் க்ளாஸ் இருக்காது. ஆனா உனக்கிருக்குமே! காதல் முக்கியம் தான். அதைவிட படிப்பு ரொம்ப முக்கியம். ரெண்டு பேரும் ஒண்ணா தான இருக்கப்போறோம். பொறுமையா நிறைய லவ் பண்ணுவோம்” என்றான்.

காதலில் அவனின் அணுகுமுறை, புரிதல், வழிநடத்தலே வேறுவிதமாக இருந்தது.

அதெல்லாம் காதலின் ஆர்வத்தில் தனக்கு எந்தவொரு தவறான சூழலும் ஏற்பட்டுவிடக் கூடாதென்ற அவனது அக்கறையென புரிந்திடவே, அவன் காட்டும் இடைவெளி காதலும் அவளுக்கு பிடிக்கவே செய்தது.

“இப்போ உங்களை கட்டிக்கிட்டு இந்த மலை உச்சியே அதிர லவ் யூ சொல்லணும் போலிருக்கு” என்று மித்யுகா தன்னுடைய இரு கரம் விரித்துக் கூற, அவளின் ஒற்றை கரம் பிடித்தவனாக,

“உன்னோட இந்த ஸ்பீட் லவ் நான் தாங்கமாட்டேன்… கொஞ்சம் அமைதியா இருடி” என்று அங்கிருந்த ஒரு சிலர் அவளின் செயலில் தங்களைப் பார்க்கவே அவளை அழைத்துக்கொண்டு படிகள் இறங்க ஆரம்பித்திருந்தான்.

‘டி’ எனும் உரிமையான அழைப்பு தன்னைப்போல் அவனுக்கு வந்திருக்க, அவன் காட்டிய உரிமையில் அவன் பின்னே சென்றாள்.

இனியெல்லாம் அவன் வழியில் எனும் எண்ணம் அவளது கண்களில் மின்னியது.

இக்கணமும் அவளின் விழிகள் பிரதிபலித்த மொழியை தனக்குள் மீட்டிப்பார்த்தவனாக நின்றிருந்த ம்ருதவ், கமலேஷின் தொடுகையில் நிகழ் திரும்பினான்.

“என்னடா சிலை மாதிரி நின்னுட்டிருக்க?” இருக்கையில் அமர்ந்த ரதி கேட்க,

கமலேஷின் அலைபேசியை டீபாய் மீது வைத்த ம்ருதவ், “கால் பண்ணா(ள்)டா! வாய்ஸ் கேட்கணும் தோணுச்சு. அட்டென்ட் பண்ணிட்டேன். ஹலோ சொன்னதும் கட் பண்ணிட்டாள். திரும்ப கால் வராது. நீ பண்றதுன்னா பண்ணி என்னன்னு கேளு” என்றவனாக அறைக்குள் சென்றுவிட்டான்.

கமலேஷும் ரதியும் ம்ருதவ் வைத்துவிட்டுச் சென்ற அலைபேசியை பார்த்திருந்தனர்.

‘சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
சின்னச் சின்ன செயல்களாகி
உன்னிடம் சென்று சேர்ந்திட,
என் மௌனமே
காதலாக மாறியது.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!