Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 06 (01)

விக்ரம் பார்த்தசாரதி 05 (01)

மூன்று  வருடங்களுக்கு முன்னால், அன்றொரு நாள் மும்பையில் சுற்றிக் கொண்டிருந்தேன். எனது வாழ்கையில் ஆராதனா என்று ஒரு பெண் வரப் போகிறாள், அவளுடைய தோழியின் காதலனான ஷ்யாமை அன்று நான் சந்திக்கப் போகிறேன் என்பதெல்லாம் அப்போது தெரியவில்லை எனக்கு.

நான் அப்போது  எனது காரின் பின் சீட்டில் சாய்ந்து கண் மூடி அமர்ந்து இருந்தேன்.  எனது அருகில் அமர்ந்து இருந்தார் பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர்.

“ஹர் சால் நவராத்திரி மே ஹோ ரஹா ஹை ஹமாரா மீட்டிங். ஆப் தோ  இண்டியா மே ரஹ்தே ஹி  நஹி” (ஒவ்வொரு வருடமும் நவராத்திரியில்தான் சந்திக்கிறோம் நாம். நீங்கள்தான்  இந்தியாவில் இருப்பதே இல்லையே) சொல்லிக் கொண்டிருந்தார் அந்த நடிகர்.



Advertisement

எனது தொழில் முறையில் நான் ஓரிடத்தில் நிற்பது இல்லை. அதே போல எனது உயிர் நண்பர்கள் என்று தனிப்பட்ட முறையிலும் எனக்கு யாரும் இல்லை.

எல்லா நாட்டிலும், இந்தியாவின் பல ஊர்களிலும் எனக்கு தொழில் முறை நண்பர்கள் உண்டு.  அந்த வகையில்தான் இந்த முன்னணி நடிகருடனும் பழக்கம்.

அது ஏனோ ஒரு சிலரை முதல் பார்வையிலேயே நமக்கு பிடித்துப் போகிறது. அதற்கு உதாரணம் எனது தொழில் முறை நண்பன் கெளதம் சித்தார்த்.

Advertisement

ஆனால் ஒரு சிலரை முதல் பார்வையிலேயே பிடிப்பதில்லை நமக்கு. அப்படித்தான் ஒரு சின்ன உரசல் நிகழந்தது அந்த ஷ்யாமின் தந்தை விஷ்ணுப் பிரசாத்துடன்.

Advertisement

ஒரு உரசல் என்று வந்து விட்டால் சும்மாவா இருப்பான் இந்த விக்ரம்.

அது என்ன உரசல்? சொல்கிறேன் கேளுங்கள்.

அன்று கார் சென்று நின்றது அந்தப் பிரம்மாண்ட பங்களாவின் வாயிலில். அது இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஆதி கேசவனின் பங்களா. அவரும் தமிழர்தான். அவர்கள் வீட்டு நவராத்திரி கொலு மும்பையில் ரொம்பவே பிரபலம்.

Advertisement

அந்த ஒன்பது நாட்களும் ஆடலும், பாடலும் பெரிய பெரிய முக்கியஸ்தர்களின் வருகையும் என அந்த பங்களா களை கட்டும்.

மிக அழகான சிகப்பு கம்பளத்தை தாண்டி நாங்கள் நடந்த போதே எங்களை வரவேற்றது அந்த பாடகரின் குரல்

அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்

என அவரின் குரலில் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது.

“வெல்கம் வெல்கம் விக்ரம் சர். நீங்க வந்ததும்தான் இங்கே ஒரு கம்பீரம் வருது” ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டு வரவேற்றான் ஆதி கேசவனின் மகன்.

நாங்கள், அந்த பங்களாவில் நவராத்திரி கொலுவுக்கென்றே ஒதுக்கப் பட்ட அந்தத் தளத்தை அடைந்த போது, எங்களை மிகக் கம்பீரமாக வரவேற்றாள் மிகப் பெரிய சிலையாக காட்சி தந்து கொண்டிருந்த துர்காதேவி.

கிருஷ்ண லீலா, சீதாதேவி திருக்கல்யாணம், விதம் விதமான விநாயகர்கள் என பல வித அலங்கார ஆளுயர பொம்மைகளும் அங்கே ஜொலித்துக் கொண்டு இருக்க, அந்தப் பகுதியில்,  நுழைந்த சில நொடிகளிலேயே

“வாவ். விக்ரம் சர். கரெக்ட் டைம்.  ஆப் சே டைம் மேனேஜ்மென்ட் சீக்னா ஹை முஜே. (எனக்கு உங்க கிட்டே இருந்து டைம் மேனேஜ் மென்ட் கத்துக்கணும்)”

“விக்ரம் சர். உங்க  டிரஸ் சென்ஸ் அடிச்சுக்க ஆளே இல்லை” என என்னை சூழ்ந்தன பல வித குரல்கள்.

எல்லாமே இனிப்பு நிறைந்த வார்த்தைகள். அருகில் இருந்த அந்த நடிகர் கூட ஷெர்வானியில் இருந்த  என்னை மெச்சுதலாகப் பார்த்தார்.

“இந்த உடை உங்களுக்கு அத்தனை அழகா பொருந்துது” என்று என்னிடம் சொன்னவர்  “நானும் இங்கேதான் மேன் இருக்கேன். என்னையும் கண்டுக்கோங்க” என்றார் மற்றவர்களிடம் .

இன்று எனது உதவியாளன் பாலா எனது அருகில் இல்லை. இருந்தால் அவன் தனது பங்கிற்கு இவர்களுடன் சேர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பான்.

இவை எல்லாம் திகட்டிப் போக, அங்கிருந்து மெதுவாக இடம் பெயர்ந்து, சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றலானேன்.  நவராத்திரி கொண்டாட்டத்தின் மொத்த அழகையும் தத்தெடுத்து வைத்து இருந்தது அந்த இடம்.

சிறிது நேரத்தில் அந்த நடிகரும் என்னோடு சேர்ந்து கொள்ள, சற்றே முன் நோக்கி நகர்ந்த  எங்களை வரவேற்றன, அந்த பகுதிக்கே அழகு சேர்த்துக் கொண்டிருந்த பல அடுக்குகள் கொண்ட ஆளுயர குத்து விளக்குகள்.

எங்களது அருகில் வந்த ஆதி கேசவனின் மகன் எங்கள் இருவரையும் அங்கிருந்த விளக்கை ஏற்றி வைக்க சொன்னான்.

பல முகங்கள் கொண்ட அந்த குத்து விளக்குகளில் வரும் விருந்தினர்கள் ஒவ்வொருவரும் ஒரு முகத்தை ஏற்றி வைத்து விட்டு துர்கையை வழி பட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நடிகர் விளக்கை ஏற்றி முடித்தவுடன் அதன் இன்னொரு முகத்தை நான் ஏற்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் எங்களது அருகில் வந்து நின்றார் அந்த மனிதர்.

“வெல்கம் சர்” என்று அவரை மரியாதையாக வரவேற்றான் ஆதி கேசவனின் மகன்.

அவர் அணிந்திருந்த அந்த தங்க முலாம் கண்ணாடி வழியே தெரிந்த அவரது விழிகளில் நான் யார் என்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.

அவருடனே நின்றிருந்தான் ஒரு இளைஞன். அவன் அவருடைய மகனாக இருக்க வேண்டுமெனத் தோன்றியது. நான் விளக்கேற்றி விட்டு, அங்கிருந்த  மலர்களை எடுத்து நான் துர்கையின் பாதத்தில் தூவிக் கொண்டிருந்த போது

“ஹலோ விஷ்ணு பிரசாத் சர்” என்று அவருடன் பேசலானார் என்னுடன் வந்திருந்த அந்த நடிகர். நான் துர்கையை வணங்கி விட்டு அந்த நடிகரின் அருகில் சென்ற நேரத்தில் அங்கிருந்து விலகி விளக்கேற்ற சென்றார் விஷ்ணு பிரசாத்.

“மீட் ஷ்யாம். ஹாண்ட்சம் யங் மேன். பட் சரியான ஸ்போர்ட்ஸ் பைத்தியம் இவன். இவங்க குடும்பம் பெரிய பிசினஸ் குடும்பம். அவங்க அப்பா இதோ இந்த விஷ்ணு பிரசாத் சர், அப்புறம் அவங்க தாத்தா எல்லாருமே பெரிய பெரிய பிசினஸ், பத்திரிக்கை துறை  சக்கரவர்த்திகள்”

ஆதி கேசவனின்  மகன் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருந்தாலும், உடனே  எதிர் வினையாற்றி விடவில்லை நான். ஒரு சின்ன புன்னகையுடன் ஷ்யாமை ஏறிட்டேன். அவனுக்கு அர்ஜுன் வயது இருக்குமோ என்று ஒரு கணக்கு எனக்குள்ளே.

“அண்ட் திஸ் இஸ் தி கிரௌசிங் டைகர். நீ கேள்வி பட்டு இருப்பியே? தி ஒன் அண்ட் ஒன்லி விக்ரம்” என்னை அறிமுகப் படுத்தி வைத்தான் ஆதி கேசவனின் மகன்.

“ஓ ரியலி. பெயர் கேள்விப் பட்ட மாதிரி இருக்கு” என்றான் ஷ்யாம் “மே பி எங்க அப்பாவுக்கு அவங்க அப்பாவை தெரிந்து இருக்கும்”

“நோ.. நோ.. அவங்க  அப்பா  ஒரு பேங்க் ஆஃபீஸர்” என்றான் அதி கேசவனின் மகன் “ஆம் ஐ ரைட் விக்ரம்?”

நான் ஆம் எனத் தலை அசைக்க,

“உங்க அப்பாவுக்கு அவரை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை ஷ்யாம் ” என முடித்தான் அவன்.

“ஓ” என்றான் ஷ்யாம் “எனி ஹவ் இட்ஸ் கிரேட் மீட்டிங் யூ மிஸ்டர் விக்ரம்” என என்னை நோக்கி கை நீட்டினான் அவன்.

‘அது என்ன எனி ஹவ்?’ எனக்கு ஏனோ சுறுசுறுவென்றது அந்த வார்த்தை. உனது தந்தை மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தவரா? எப்படி இருந்தாலும் உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறானா?’

அதற்கு மேலாக அந்த “மிஸ்டர் விக்ரம்!”அத்தனை பேரும் “விக்ரம் சர்” என்று அழைக்கும் போது இந்த சிறுவனுக்கு மட்டும் என்ன மிஸ்டர் விக்ரம்.

காரணமே இல்லாமல் ஒரு சிறு கோபம் எழுந்தது எனக்கு. இருந்தாலும் சபை மரியாதை கருதி அவனை நோக்கி கை நீட்டினேன் நான். அந்த கைகுலுக்கல் எனது உள்ளுணர்வில் ஏதேதோ விதைகளை தூவின.

அதற்குள்ளாக அங்கே வந்து நின்றார் அந்த விஷ்ணு பிரசாத். சற்று முன்னால் அங்கே நடந்த எனது அறிமுகம்  அவரது செவிகளில் விழுந்து இருக்க வேண்டும்.

“சர்.. திஸ் இஸ் விக்ரம்” என என்னைப் பற்றிய அறிமுகத்தை அந்த நடிகர் சொல்ல நான் அவரை நோக்கி கை நீட்ட, சற்று முன் விளக்கேற்றியதால் கையில் இருந்த பிசுபிசுப்பை துடைத்துக் கொள்ளும் சாக்கில், என்னுடன் கை குலுக்காமல், எனது செயலுக்கு தலை அசைத்தாரா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ளவே முடியாத ஒரு எதிர் வினையுடன் நகர்ந்தார் அந்த விஷ்ணுப் பிரசாத்.

எனக்குள்ளே கோப சுனாமிகள் உருவெடுத்தன. என்னைப் பற்றிய அவருடைய கணிப்புகள் என்னவென யோசிக்கக் கூட விரும்பவில்லை நான்.

பொங்கிய உணர்வுகளை மறைந்துக் கொண்டாலும் எனக்குள்ளே ஓடிக் கொண்டிருந்த பல வித யோசனைகளுடன் தெரிந்தவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

சில நிமிடங்கள் கடக்க, அந்தப் பெரிய தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த விருந்தில் கலந்து கொள்ள நடந்தோம் நானும் அந்த நடிகரும்.

அங்கே இருந்த மேடையில் பாடிக் கொண்டிருந்த பாடகர்களின் இனிமையான குரல்கள் எங்களை வசீகரித்துக் கொண்டிருக்க, தட்டில் எங்களுக்கான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் அங்கிருந்த மேஜையை அடைந்த போது எனது பார்வையில் விழுந்தார்கள் ஷ்யாமும் கிராண்ட்  மாஸ்டர் கௌதம் சித்தார்த்தும்.

கெளதம் சித்தார்த்! அவன்  சதுரங்க வீரன் என்பதை விட ஒரு பெரிய மருத்துவமனை, மருத்துவ கல்லூரியின் அதிபர்  எனும் முறையிலும்  ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை இயக்கி வரும் அரசன் எனும் முறையிலும்  எனக்கு பழக்கம். இருவரும் ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு நட்பு இருக்கிறது எங்கள் இருவருக்குள்ளும்.

ஷ்யாமுடன்  பேசிக் கொண்டிருந்தாலும் அவன் என்னை கவனித்து விட்டதை சொன்னது கௌதமின்  முக பாவம். எப்படியும் என்னைத் தேடி வருவான் என்பது புரிந்துதான் இருந்தது எனக்கு.

அதை விட நான் ஷ்யாமின் முக  பாவங்களைத்தான் அதிகமாக கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு கௌதமின் மீது மிகப் பெரிய அபிமானம் இருப்பதைப் போன்றே தோன்றியது எனக்கு.

அதனோடு ஷ்யாம் எதையோ திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருப்பதைப் போலவும் கெளதம் ஆழ்ந்து யோசிப்பதைப் போலவும் தோன்றிக் கொண்டு இருந்தது எனக்கு.

சில நிமிடங்கள் கழித்து ஷ்யாமிடம் விடைப் பெற்றுக் கொண்டு என்னை நோக்கி வந்தான் கெளதம்.

“வி.. க்.. ர..ம்.! லாங் டைம்” என்றபடியே எனது அருகில் வந்து அமர்ந்தான் அவன். என்னைப் பார்த்ததில் அவனுக்கு நிறையவே சந்தோஷம் என்பதை சொல்லிக் கொண்டே இருந்தது அவனது மலர்ந்த முகமும் விரிந்த புன்னகையும். அதன் பிரதிபலிப்பு என்னிடமும் இருந்தது உண்மை.

எனது அருகில் இருந்த அந்த நடிகரை நான் கௌதமுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். மூவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

சொல்லப் போனால் கௌதம்தான் எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருந்தான். நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்,

ஒரு கட்டத்தில், வேறு யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்த அந்த நடிகர்,  எங்களை விட்டு சற்றே விலகிக் செல்ல, அப்போது மெல்ல துவங்கினேன் நான்.

“அது யாரு கெளதம் அந்த ஷ்யாம்? அவங்க அப்பா தாத்தா எல்லாம் பெரிய மீடியா பீபிள் போலிருக்கு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!