Skip to content
Post Views: 760
தன் பிள்ளைகள் தனக்கு தான் கீழ்படிவார்கள் என்று நினைத்து இருந்த ராமச்சந்திரனுக்கு அவர்களுக்கென்று ஒரு குடும்பம், அவர்களுக்கென்று ஒரு மனம் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இரவு மருதனும் மாதவனும் பேசிய பேச்சை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
Advertisement
“அப்பா இதுக்கு மேல இந்த பிரச்சினையை இழுத்துட்டு இருக்க வேணாம். நாளைக்கு கணக்கு பார்த்து அசல் மட்டும் வாங்கிக்கலாம். யார்ட்டையும் வட்டி வாங்க வேணாம். அதே மாதிரி எழுதி வாங்கின தறியெல்லாம் அசல் வந்திடுச்சுன்னா திருப்பி கொடுத்திடலாம்.”
“ஏண்டா பணம் கொடுக்கலன்னு தானே எழுதி வாங்கினோம். அதை திருப்பி கொடுக்கனும்னா எப்படி சரியா வரும்.”
Advertisement
Advertisement
“நம்ம தறிக்கே ஆளைப்போட்டு பாக்க முடியல நமக்கு. நஷ்டம் தான் வருது. இதுல அத்தனை தறியை எதுக்கு நஷ்டத்துக்கு நடத்தனும்?. அதுக்கு பதிலா அசலை திருப்பி தந்தவங்களுக்கு அவங்க தறியை திருப்பி தரது தான் நல்லது” மருதன் பேசும்போதே ராமச்சந்திரனுக்கு பி.பி. ஏறியது.
“ஏன் உன்னால ஏறி இறங்கி வட்டி வசூல் பண்ண முடியலையா… விட்டிரு. நான் ஆளைப் போட்டு பாத்துக்கறேன். நாளைக்கே எலக்ஷன்ல நின்னு எம்.எல்.ஏ ஆயிட்டா இதெல்லாம் கௌரவ குறைச்சல்னு நினைக்கிறியா.. இல்ல அப்பன் வீட்டு சொத்தை வழிப் பிள்ளையாருக்கு உடைச்சு ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறியா..”
Advertisement
“அப்பா.. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கல. நான் சொன்னது நாளைக்கே எல்லோரும் உங்களுக்கு எதிராக திரும்பினா நம்ம குடும்பமே கஷ்டப்படனும்.”
“டேய் அதான் உன் மாமனார் உனக்கு பெரிய வாழ்க்கையை தரேன்னு சொல்றாரே அப்புறம் நீ ஏன்டா பயப்படனும்...”
“பெரிய வாழ்க்கை கிடைச்சா பணம் வேணா வரும்பா. ஆனா நீங்க பண்ண பாவத்துக்கு எல்லாம் நான் கூட நின்னுருக்கேன். அந்த பாவம் என் பிள்ளைகளை சுடாதுன்னு என்ன நிச்சயம்?” மருதன் கேட்டதும் அதிர்ந்து விட்டார் ராமச்சந்திரன்.
“என் பேரப் பசங்களுக்கு அப்போ நான் பாவத்தை தான் தேடி வச்சிருக்கேன்னு நினைக்கற இல்ல.. ஆமாம் பா உன் மாமனார் சேத்து வச்சிருக்க சொத்துல கால் பங்கு கூட நான் உனக்கு சேர்க்கல இல்ல.. அதான் பாவத்தை சேத்து வச்சிருக்கேன்னு சொல்ற..” அவர் கேட்டதும்,
“நான் ஒன்னு சொன்னா நீங்க ஒன்னு பேசுங்க பா.. என்னால் இனிமே வட்டி வசூல்னு அலைய முடியாது. என் கடையே ஆள் வராம டல்லடிக்குது. அதை டெவலப் பண்ண தான் நான் யோசிக்கனும்..”
“ஓ…. இதெல்லாம் உடம்பு சரியில்லாம நான் படுத்தேன்னு தானே இவ்ளோ தைரியமா எல்லாரும் பேசறீங்க.. ஆனா இன்னிக்கு சொல்றேன் கேட்டுக்கோங்க.. இந்த அப்பன் தான் வேணும்னு நீங்களாம் வந்து நிக்கற நாள் தொலைவில இல்ல.. உங்க கண்ணை மறைக்கற பொண்டாட்டி வீட்டு சொத்து என்னிக்கும் நிலைக்காது டா.. இன்னிக்கு நான் சேத்து வச்ச சொத்து தான் என் கௌரவத்தை காப்பாத்துது. அதை நீங்களும் ஒரு நாள் புரிஞ்சிப்பீங்க.”
“அப்பா.. எனக்கு யார் வீட்டு சொத்தும் வேண்டாம். நல்லதை தான் நான் சொன்னேன். நாளைக்கு எந்த பிரச்சினைனாலும் நான் வந்து நிக்க மாட்டேன், அதை மட்டும் புரிஞ்சுக்கோங்க”
மருதன் வேகமாக மாடி ஏறிச் சென்றான்.
“நீ ஏண்டா பாத்துட்டு நிக்கற.. நீ எப்போ கிளம்ப போற. உன் மாமனார் தான் கோடியில உனக்கு பிஸ்னஸ் வச்சு தரப்போறாராமே.. போக வேண்டியது தானே..”
“அப்பா.. நான் எங்கப்பா அப்படி சொன்னேன். நான் இங்க தான் இருக்க போறேன். நீங்க நிலத்தை என் பேருக்கு மாத்தி தாங்க. நான் லோன் வாங்கனும். வர வருமானத்துல அந்த நிலத்துக்கு உண்டான காசை உங்களுக்கு நான் திருப்பி தந்திடறேன்..”
“சொத்தை அப்போ பிரிக்க சொல்றியா..அது பரம்பரை நிலம் டா.. ஏன் பிரிச்சு வாங்கிட்டு வந்திடுன்னு உங்க மாமனார் சொன்னாரா…?”
“அப்பா.. உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா.. இது தாத்தா வீட்டு சொத்து. நியாயப்படி எங்களுக்கு தான். அண்ணனும் தம்பியும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதான் என் பேருக்கு எழுதி தர கேட்டேன்..”
“ஓ அப்போ பேசி வச்சிட்டு ஒரு முடிவோடு தான் எல்லாரும் வந்து இருக்கீங்க.. இந்த கிழவன் எப்போ சாவான்.. எப்போ பிரிச்சிட்டு ஓடலாம்னு இருக்கீங்க.. நடக்கட்டும் டா.. ஒரு பொட்டு சொத்தை கூட உங்களுக்கு தர மாட்டேன்.. என் பொண்ணு வாழ்க்கையை நீங்க பாத்துப்பீங்கன்னு நினைச்சேன்.ஆனா உங்க சுயநலத்துல அவளை அம்போன்னு விட்டுருவீங்க டா..”
“ஒழுங்கா கேட்டு பாத்தேன்.. நீங்க முடியாதுன்னு சொன்னா கேஸ் போடுவேன் தெரிஞ்சுக்கோங்க. அப்போ என் பக்கம் தான் தீர்ப்பாவும்.. யோசிச்சிக்கோங்க.”
நெஞ்சில் சுரீர் என்று அடித்த மாதிரி இருந்தது ராமச்சந்திரனுக்கு. தன் பலமே தன் பிள்ளைகள் என்று நினைத்தவருக்கு நடப்பது எல்லாமே அவர் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக தோன்ற நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார்.
காஞ்னாவும், கற்பகமும் ஓடி வந்து அவரை தாங்க,
“ஒன்னுமில்ல ஒன்னுமில்ல.. விடுங்க. பாத்தீங்களா.. அவனுங்க பேசறதை.. எனக்கு ஒன்னும் ஆகாது. என் பொண்ணுக்கும் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வழி பண்ணாம நான் போயிட மாட்டேன்..” அவர் கத்தியதும்,
“ஏங்க.. வேர்த்து கொட்டுது பாருங்க.. அமைதியா இருங்க.பிபி ஏறுது போல” என்று அவரின் நெஞ்சை தடவி அமர வைத்தார் காஞ்சனா..
கற்பகம் தண்ணீர் தர,
“அவனுங்களை பேச விட்டு வேடிக்கை தான் பாத்துட்டு இருந்தீங்க இல்ல..”
“என்னிக்கு நாங்க பேசிருக்கோம்.. நீங்க அப்படியே பேச விட்டிருக்கீங்க..”
“ஓ அப்ப அவனுங்க என்னை கொலையே பண்ணாலும் கேட்க மாட்டீங்க தானே..”
“அப்படி ஏன் நினைக்கிறீங்க.? நம்ம பசங்க அவங்க சொந்த காலுல நிக்கனும்னு நினைக்கிறாங்க. உங்களுக்கும் உடம்பு முடியல.. அதான் இதுவரைக்கும் பண்ணது போதும்.. இனிமே வேணாம்னு மருதன் சொல்றான். மாதவனுக்கு அவன் கேட்கிற லோன் கிடைக்கலன்னா எப்டி அவன் அவனை நிரூபிப்பான். நீங்க ஏன் இதெல்லாம் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க”
“முப்பத்திரெண்டு வருஷம் ஓடி ஓடி சம்பாதிச்சு இருக்கேன்.. அது பெருசுல்லன்னு இவ்வளோ பேசறானுங்க. இவனுங்களை நான் புரிஞ்சக்கனுமா.. நான் என் பொண்ணுக்கு மட்டும் தான் இனி நல்லதை செய்ய போறேன்.. அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டு இருக்கற சொத்தெல்லாம் அவ பேருல எழுதறேன் பாரு..”
“அப்படி பண்ணீங்கன்னா அவனுங்களுக்கு அவங்க மாமானாருங்க செய்ய போறாங்க.. நீங்களே அதுக்கு வழியை பண்ணிருவீங்க போல..”
“போவட்டும் டி.. மாமனார் வீட்டு சோத்தை மானம் கெட்டு சாப்பிட்டா யாருக்கு அது அவமானம்.. அனுபவிக்கட்டும் போ.. மாதவி கல்யாணத்தை இவனுங்க துணை இல்லாம நடத்தறேன் பாரு..”
“இப்பவே ஏன் அவசரம்.. அவ படிப்பு முடிக்கட்டுமே..”
“அதெல்லாம் என் கணக்கு எப்ப எப்படி முடியும்னு தெரியாது.. அதுக்குள்ள என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்..” துண்டை உதறிக் கொண்டு எழுந்து போனார்..
அவர் போன பாதையை பார்த்தவர்களுக்கு யார் பக்கம் பேசுவது என்று புரியவில்லை.
மாடிக்கு வந்த மாதவன் கையில் சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க சென்றான். ஆனால் ரம்பா அங்கே நிற்பதை பார்த்து கோபத்தோடு அதை ஜன்னலில் தூக்கி எறிந்தான்.
“ச்ச.. எல்லாம் என் தலையெழுத்து. எங்கப்பா என்னடான்னா அவர் சொத்தை தர மாட்டேன்னு சொல்றார். உங்கப்பன் என்னடான்னா உன்னை நம்பி சொத்தை தர முடியாது, வேணும்னா வேலைக்காரனா வந்து இருன்னு சொல்றாரு. நான் என்ன இவங்க இழுக்கற இழுப்புக்கு போற பொம்மையா? இவங்களாம் பழைய மாதவனை பார்த்தாங்க அவ்ளோதான்.. கடைசியில அதான் நடக்கப் போகுது” என்று சுவற்றில் ஓங்கி கையை குத்தினான்.
“பழைய மாதவனை தான் வேணாம்னு சொல்றேன்.. ஆனா நீங்க அதே மாதிரி தான் ஆகப்போறேன்னு சொல்றீங்க. எப்போ தான் நல்லவனா மாறுவீங்க?”
“மாறிட்டேன்னு என்னை நிரூபிச்சிட்டே இருக்கனும்னு அவசியம் இல்ல.. நீ நம்பினா நம்பு.. இல்லன்னா எனக்கு ஒன்னும் கவலை இல்ல..”
“இந்த திமிரை வச்சு என்ன பண்ண போறீங்க..”
“அதுதான் எதுக்கும் லாயக்கில்லன்னு முத்திரை குத்திட்டாங்களே எல்லாம்.. இனி நான் திமிரோடு என்ன பண்ண போறேன்.. அப்படியே போற போக்குல போக வேண்டியது தான்.. வாழ்க்கைல பாசமும் இல்ல.. பந்தமும் இல்ல.. ஒரு மனுஷன் எதுக்காக வாழனும்.” அவனை பார்க்க ரம்பாக்கு பாவமாக இருந்தது. அவனின் முகத்தை பார்த்தாள். இதே முகம் தானே ஒரு காலத்தில் அவள் ஆசை ஆசையாய் பார்த்தது என்று நினைவில் வந்தது.
“உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. ஜவ்வாது மலைக்கு நாம போனப்ப, என் இடுப்பை சுத்தி ரெண்டு கையாலயும் கோத்துக்கிட்டு, என்னை பின்னாடி இருந்து கட்டிக்கிட்டு, கழுத்தில் உங்க உதட்டை பதிச்சிட்டு, இந்த உலகத்துல எதுவுமே வேணாம் ரம்பா.. இந்த பணம், சொத்து எதுவுமே தேவையில்லை.. நீ தான் என் எல்லாம். உன்னை நான் உங்கப்பாவை விட நல்லா பாத்துப்பேன்னு சொன்னீங்க. அப்போ நாம ரெண்டு பேரும் இந்த உலகத்தை மறந்தோம்.. என்னை நான் முழுசா உங்ககிட்ட கொடுத்தேன். ஆனா அந்த நம்பிக்கையை கொச்சை படுத்தி நீங்க என்கிட்ட இருந்து விலகி நின்னப்ப எந்த மாதவனை நான் முழுசா காதலிச்சேனோ அந்த மாதவனை நான் முழுசா வெறுத்தேன். ஆனா நேத்து நீங்க ரதி வீட்டுல நின்னப்ப என் சொந்த கால்ல நிப்பேன்னு சொன்னீங்க, ரதியை திரும்பி கூட பாக்கல.. அப்ப பழைய காதல் எனக்கு கொஞ்சம் எட்டிப்பாத்துச்சு.. ஆனா உங்களை எப்படி நம்ப முடியும்..? அதுதான் இப்ப நான் உங்ககிட்ட இருந்து நான் விலகி நிக்க காரணம்..”
அதிர்ந்து அவளை பார்த்தான்.
“அதான் எல்லாரும் வாய்க்கு வந்ததை பேசிட்டாங்களே.. நீ எதுக்கு என்னை நம்பனும்.. விடு என் தலையெழுத்து இப்பிடித்தான்னா இப்படியே இருக்கட்டும்.. விவசாயமும் வேணாம் ஒன்னும் வேணாம்..”
“மனசை உடைய விடாதீங்க. ஒரு உறுதியான முடிவை எடுத்துட்டீங்க.. அது உங்களை கடைசி வரைக்கும் காப்பாத்தும்.. அப்பா சொத்து தரலன்னா என்ன..? நீங்க அங்க போய் உழைங்க.. ஒரு மண்புழு எப்படி ஓயாம உழைக்குமோ, அது மாதிரி.. அதுக்கான பலனை நீங்க அடையறப்ப யாருமே உங்களை குறை சொல்ல முடியாது.. “ அவளின் கண்களை பார்த்தான். அது உண்மையாகவே அவன் மேல் சிறிது காதலை சிந்தியது.
“மாதவன்..இந்த பூமியும், அந்த நிலா மாதிரியும் நாம தள்ளி நிக்கறோம்.. அதுக்கான காரணத்தை ஒரு நிமிஷம் யோசிங்க.. அப்ப உங்களுக்கு ஒரு வழி தெரியும்..” என்று அவனின் முகத்தின் அருகில் வந்து அவள் சொல்ல, அந்த சூடான மூச்சு காற்று அவனை ஒரு நொடி இந்த உலகத்தை மறக்க வைத்தது.
“அன்னிக்கு நீங்க கொடுத்த அந்த முத்தம் எனக்கு அதே மாதிரி என் உயிரை உருக்கற மாதிரி.. ஆழமா வேணும் மாதவன். ஆனா நீங்க அதுக்கு உங்களை நிரூபிக்கனும்.. இனி உங்களுக்கு வேற வழியில்ல.. எந்த நாளும் உங்களை விட்டு நான் போக மாட்டேன். கடைசி வரைக்கும் நான் தான் உங்க பொண்டாட்டி. அதனால் சீக்கிரம் அந்த முத்தத்தை தர ரெடியாகுங்க.” என்று அவள் சொல்லி விட்டு திரும்பியதும், அவளின் கைகளை பிடித்தான்.
அவளின் அந்த மினுக்கும் கண்களில் தான் அவன் அவனை தொலைத்து இருந்தான். அது நினைவில் வந்தது. அவளின் இரு கன்னங்களை தாங்கினான். இருவரின் உதடுகளும் அருகருகே இருந்தன.
“என் மேல கோவம் இல்லையா இப்போ..”
“கோபமும் இல்ல.. காதலும் இல்ல.. அப்ப இது இன்னும் மோசமாத்தான் இருக்கு இல்லையா..”
“ஆனா எனக்கு உன்னை பார்க்க கோபம் கோபமா தான் வந்துச்சு இத்தனை நாளும்.. ஆனா உன் வயிறு லேசா மேடாகறதை பாத்ததும் என்னமோ என் தப்பெல்லாம் ஒரு உருவமா வந்து எனக்கு முன்னாடி விரலை நீட்டி கேட்கற மாதிரி இருக்கு. அதுக்காகவாவது நான் என் உழைப்பில் நின்னாகனும்னு தோணுது.. நீ கேட்ட அந்த முத்தத்தை தருவேன். ஆனா அதுக்கு முன்னாடி உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் நான் யாருன்னு காமிப்பேன்.”
கண்களால் அவனை தழுவிக் கொண்டாள்.
“அப்போ இந்த குழந்தை என்னோடது இல்லன்னு சொன்னீங்க.. இது வேணாம்னு சொன்னீங்க..”
“போதும் ரம்பா.. மனுஷனா வாழ்றது எப்படின்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன்.. திரும்ப திரும்ப அதையே சொல்லி என் பின்னுக்கு இழுக்காத..”
“நான் பின்னுக்கு இழுக்கல.. நம்ம பிள்ளை வெளியே வரப்ப நான் காதலிச்ச அந்த மாதவன் உண்மையா திருந்தி நின்னா போதும் எனக்கு.”
“அவன் நிச்சயமா என்னை அப்படித்தான் பாப்பான்..”
அவள் ஒரு நிமிடம் அவனின் பழைய காதலி ஆனாள்.
அவன் இதழ் நோக்கி அவளின் இதழ்கள் சென்றன. அவனின் இருகைகளை பிடித்து தன் இடுப்பை சுற்றி இறுக்கிக் கொண்டாள். இதயமும் இதயமும் ஒட்டிக் கொண்டன.
அவள் அவனை இன்னும் நெருங்க, ஒற்றை விரலால் அவளின் இதழை நிறுத்தினான்.
“ரம்பா.. இப்போ என்னை மன்னிச்சிடாத.. இந்த விலகல் தான் என்னை ஒரு நம்பிக்கையை நோக்கி ஓட வைக்குது. இந்த அழுத்தமான முத்தத்தை தேடி நான் வருவேன்.. அப்ப குடு..” என்று அவளின் இடுப்பை சுற்றி இருந்த தன் கைகளை எடுத்து அவள் வயிற்றின் மீது தடவிப் பார்த்தான்.
அவனின் எதிர்காலம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. உண்மையான காதலின் அர்த்தம் அவனுக்கு அருகில் வந்து நின்றது…
error: Content is protected !!