Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 25

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 25

கங்கா இரவு முழுவதும் தூங்க வில்லை. தற்போதும் அவளை ஊரில் உள்ளவர்கள் ஏதோ காணாததை காண்பது போல் வந்து பார்த்துச் செல்ல, சங்கடமாக இருந்தது. கண்களும் தூக்கத்திற்காக ஏங்கியது.

நேற்று காலை குளித்து கட்டிய புடவை, அதன்பின் பள்ளி வேலை, பிரயாண அலைச்சல் என எல்லாம் அவளை சோர்வாக காட்டியது.அருள் வீட்டில் தண்ணீர் குடிக்க கூட பிடிக்க வில்லை. அவள் கொண்டு வந்த வாட்டர் பாட்டலில் இருந்த தண்ணீரும் முடிந்து விட்டது. நல்ல வேளையாக அவன் வீட்டருகே இருந்த பொது பைப்பில் தண்ணீர் வந்தது,அதைப் பிடித்து குடித்துக் கொண்டு,மீண்டும் அதை நப்பி வைத்தாள்.

மாலை குளித்து விட்டு கட்டிய புடவையையே மீண்டும் கட்டினாள். பின் அமைதியாக சுவரில் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.பசி வேறு வயிற்றை கிள்ளியது.



Advertisement

எப்படியோ அருள் வீட்டை தேடிக் கண்டுபிடித்து ,ராதா வந்துவிட்டாள்.
‘சித்தி!’ என கட்டிக் கொண்டு ஒரே அழுகை.கலாவிற்கும் சரி ராதாவிற்கும் சரி முதல் குழந்தை கங்காதான்.ஒரு பெண் தாய் ஆவதற்கு முன்பே தன் அக்கா பிள்ளையை தன் பிள்ளை போல் வளர்த்து அன்னை ஆகி விடுவாள் அல்லவா.

கங்காவை பார்த்து ராதா கண்களிலும் நீர் நிற்கவில்லை.அருள் வீட்டில் தண்ணீர் தர வாங்கி குடித்தார். சாப்பிட சொல்ல வேண்டாம் என மறுத்து விட்டார்.

எவ்வளவு தேறும் என்ற உரையாடலை தொடங்க ஆர்வமாக இருந்தனர் அருள் வீட்டினர்.ஆனால் ராதாவோ சொத்து சுகத்தை பற்றியோ,கங்காவை பற்றியோ, லட்சுமியை பற்றியோ, ஏன் தன் பெற்றோரை பற்றியோ எதுவும் பேச வில்லை.

Advertisement

அவர் பேசியது முழுவதும் சிவராமனை பற்றியும்,அவரது குணநலன் பற்றி மட்டுமே.

Advertisement

எங்க மாமா ரொம்ப தைரியமான ஆள். எதுக்குமே பயப்பட மாட்டாரு.அவருக்கு ஒரு சில விஷயம் பிடிக்கலனா கடைசி வர அதுல உறுதியா இருப்பாரு.யாரு என்ன சொன்னாலும் அதை ஏத்துக்க மாட்டாரு.

நானும் லவ் மேரேஜ் தான்.எனக்கு கல்யாணம் ஆகி பத்தொன்பது வருஷம் ஆச்சு.இருந்தாலும் எங்க மாமாவுக்கு என்னோட திருமணத்து மேலே இருந்த கோபம் இன்னமும் குறையல. எங்க வீட்டுக்காரர் கிட்ட, குழந்தைங்க கிட்ட எல்லாம் கூட நல்லா பேசுவாரு ஆனா திருமணம் நடந்த விதம் அவராலே ஏத்துக்க முடியலே.

அவரு எனக்கு புடிக்கல வேண்டானா எங்க அக்காவும், எங்க அம்மா அப்பாவை கூட விட்டுருவா.எங்க வீட்டுலையும் எங்க மாமா கோபம் கொறையறே வரே காத்துட்டுதான் இருப்பமோ தவிர,அவரே எதிர்த்து எதுவும் பேச மாட்டோம்.அந்த அளவுக்கு எங்க மாமா போக்குலையே எல்லாரும் விட்டுக்கொடுத்து போய்க்குவோம்.

Advertisement

யாராவது நானும் அப்படிதான் என தன் வீட்டு ஆட்கள் சொல்ல மாட்டார்களா என அருளின் அப்பா எதிர்பார்த்தார். பின் ஏமாற்றமாக தன்னை தானே பொறுமை படுத்திக் கொண்டார்.

அதுமட்டுமல்ல எங்க மாமா எல்லாத்துக்கும் துணிஞ்ச ஆள். எதைபத்தியும் கவலபட மாட்டாரு. நாங்க கங்கா இப்படி பண்ணுனதுக்கு அவரு கோபத்துல ஏதாவது செஞ்சுருவாருனு பயந்தோம்.ஆனா அவரு கங்காக்கு புடிச்சு இருந்தா கல்யாணம் பண்ணிக்கட்டும்.நான் குறுக்கே நிக்கலனு சம்மதம் சொல்லிட்டாரு.

கங்காவிற்கு அப்பாவின் முடிவை கேட்டு அதிர்ச்சிதான்.எப்படி அவர் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? என்னை பற்றி அவர் இவ்வளவுதான் புரிந்து உள்ளாரா? என உள்ளூர கலங்கினாள்.

எங்களுக்கு அவரோட முடிவு கேட்டு ஆச்சரியமா தான் இருந்துச்சு -ராதா

இதுலே ஆச்சரியப்பட என்ன இருக்கு, முதல்ல எல்லா அப்பாவும் எதிர்ப்பாங்கதான் அப்பறோம் பேரன், பேத்தி வந்தா ஏத்துக்குவாங்க என்றார் அருளின் அப்பா.

எங்க மாமாவை அப்படி எல்லாம் எடை போட்டாறாதீங்க.எங்க மாமாவுக்கு தப்பா எதாவது தோணுச்சுனா அருவாளை எடுத்து வெட்டி ஏறியக்கூட தயங்க மாட்டாரு என அவரின் உண்மை குணத்தை கூறி அவர்களை ராதா பதற வைத்தார்.

சிவராமனின் குணத்தை அறிந்தவுடன் அருளின் அப்பாவிற்கு உள்ளூர நடுக்கம்.

பின் அவர்கள் கிளம்ப போக,கங்கா அவர்களை வழியனுப்ப வந்தாள்.
சிவராமனை பற்றி ராதா கூறியது அருளின் அப்பாவிற்கு பயத்தை தர, கங்காவை அவர்களோடு தனித்து விட விருப்பமில்லை.அருளை அவர்களோடு செல்ல கண்ஜாடை காட்டினார்.

சிவராமன் அழுதது ராதாவிற்கு மனம் கேட்க வில்லை.எங்க மாமாவை கம்பீரமா பாத்துதான்டீ எனக்கு பழக்கம் அவரே இப்படி எல்லார் முன்னாடியும் அழுக வெச்சுட்டியே என கண்ணீரோடு கூற,கங்கா தேம்பிக் கொண்டே அவரை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

ராதாவின் மகன் கோகுல் அக்கா இங்க எனக்கு எதுமே புடிக்கல இந்த ஊரு மனுஷங்க எல்லாரையும் பாக்க ஏதோ மாறி இருக்கு வா போய்ரலாம் என்றான். கங்கா என்ன பதில் கூறுவாள் என ராதாவும் ஏக்கத்தோடு பார்க்க,அருள் அவர்களை நெருங்கி வந்துவிட்டான்.

கங்கா வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கு இந்த குடை.கங்காக்கு எங்க ஊர் வெயில் ஒத்துக்கவே மாட்டிங்குது என்றான்.பின் குடையை விரித்து கங்காவிற்கு மட்டும் பிடித்துக் கொண்டு அவன் வெயிலில் நின்று கொண்டான்.

ராதாவிற்கு அவன் கங்காவை தாங்கி பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் தோன்ற மேற்கொண்டு தங்களுடன் வர வற்புறுத்தாமல்,வேண்டா கங்கா நீ ரெண்டுநாளா வீட்டுக்கு வராத விஷயம் எல்லாருக்கும் போய்ருச்சு.

ஒருமாதிரி பேசிட்டுதான் இருக்காங்க. நீ கல்யாணம் பண்ணீட்டு வா.அப்போ எதும் தெரிஞ்சுக்காது.அதுவே நீ இப்படி எங்க கூட வந்தா,ரெண்டுநாள் ஒரு பையன் வீட்டுல போய் இருந்துட்டு வந்துருக்காங்கற பேச்சு வரும் அது நல்லா இருக்காது.நாங்க போய்ட்டு வரோம்.எதுனாலும் எனக்கு கூப்பிடு, நான் உனக்காக வருவேன் என சொல்லி கிளம்பி விட்டார்.

ராதா தலைமறையும் வரை கங்கா பார்த்து நின்றிருந்தாள்.கலா அன்பால் அரவணைத்தால்,ராதா கண்டிப்பால் அரவணைப்பாள்.கங்கா ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் இருக்க சாக்லெட் கவர்களை வைத்து பூ கட்ட சொல்லிக் கொடுத்த வாறே, இங்க பாரு கங்கா ஒரு பொண்ணுக்கு எல்லா விஷயமும் தெரியனும். எப்படி சமைக்க கத்துகறது முக்கியமோ அதே மாதிரி வண்டி ஓட்டவும் கத்துக்கணும் என சொல்ல வந்தவரை இடைமறித்து,

அது எல்லா எங்க அப்பாவே சொல்லிதரும் சித்தி என எல்லாத்தையும் அப்பாவின் தோளில் சுமத்தினாள்.இன்று ஒரு சின்ன விஷயத்திற்கு முடிவு எடுக்க திணறி எல்லாரையும் அவமான குழியில் தள்ளி விட்டாள்.

இதற்குமேல் பசி தாங்க அவளால் முடியவில்லை.அருள் பக்கத்தில் இருப்பது வேறு எரிச்சலை கிளப்பியது. ராதா அவளுக்கு பை நிறைய தின்பண்டம் வாங்கி வந்தது நினைவில் வர வேகமாக எட்டு வைத்து நடந்து வந்தாள்.

அதற்குள் அந்த வீட்டு ஆட்கள் வட்டமாக அமர்ந்து மேலையும் கீழேயும் கொட்டி மொத்தத்தையும் தின்று முடித்திருந்தனர்.

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.மீண்டும் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.வாசல் வரை வாய்ப்பு வந்தும் அதை உபயோகிக்க தெரியவில்லை.சித்தி சொல்வது போல திருமணம் செய்யாமல் போனால்,ஒரு பையன் வீட்டுல ரெண்டு நாள் இருந்துட்டு வந்துருக்கா என்ற பெயர் வருமே என முட்டாள்தனமாக குழப்பிக் கொண்டாள்.

அருளின் அப்பா இருவரையும் அழைத்து,இவங்க அப்பா பத்தி விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் ஒரு மாதிரிதான் பேசிக்கறாங்க.இனிமே நம்ம தாமதிக்க வேண்டா வர வெள்ளிக்கிழமை ஈரோடு சங்கமேஸ்வரர் கோவில்லே கல்யாணம் வெச்சுக்கலாம் என தன் முடிவை கூறினார்.

கங்கா எதுவும் பேச வில்லை.அருளின் வீட்டு பக்கத்தில் இருக்கும் ரேவதி என்ற பெண் ஆசையாக இவளுக்கு தோசை ஊற்றி கொண்டு வந்து கொடுத்தார். அமைதியாக இரண்டு தோசையை உண்டாள்.

நிர்கதியாக நின்ற கங்காவிற்கு ரேவதி மட்டுமே துணை.எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல என அவர் கூற தன் பள்ளித் தோழியை நினைத்துக் கொண்டாள்.

எங்க பாட்டி இந்த ஊருக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. எனக்கு ஆறு வயசுல ஒரு பொண்ணு, பதினோரு மாசத்துல ஒரு பையன்.எங்க வீட்டுகாரரு வெளியூர்ல வண்டி ஓட்ட போய்ருவாரு.நான் என் ரெண்டு பசங்களோட என் மாமனார் மாமியார் கூட இருந்துப்பேன் என்றார்.

மாலை நேரம் அருள் எங்கோ போய் தொலைந்துவிட்டான்.ரேவதியின் மகள் கங்காவிடம் ஹோம்வொர்க் எழுதிக் கொண்டு இருந்தாள்.அருளின் அப்பா உள்ளே வந்தவன் அந்த குழந்தையை தூக்கி கொஞ்சியவாறே அதன் வாயில் கடித்து வைக்க,கங்காவிற்கு அதை பார்த்து அருவருப்பும்,அதிர்ச்சியும் என்ன இப்படியொரு பழக்கம் என… ஆனால் அருகிலிருந்த அருளின் அம்மாவும், அக்காவும் அதை சாதாரணமாக கடந்து விட்டனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராத கங்காவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளியே காத்திருந்தது.ரேவதி சமையல் வேலை செய்து கொண்டிருக்க,மகன் பசியில் அழுதுள்ளான்.ரேவதி மாமானார் பையனை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்து விட்டு அங்கேயே நின்றிருக்க எப்படி பால் கொடுப்பார்?தர்ம சங்கடமான நிலையில் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க என்று சொல்லி உள்ளார்.உடனே அதை ஒரு பெரிய பஞ்சாயத்து ஆக்கி ஊரை கூட்டி விட்டார் அவரின் மாமியார்.

அருளின் அம்மாவும் அப்பாவும் கூட எப்படி ஒரு பெரிய மனுசனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லலாம் என ரேவதி மீதே பாய்ந்தனர்.பாவம் ரேவதி ஏதோ குற்ற உணர்வுடன் அழுது கொண்டே மகனை கையில் பிடித்தபடி பரிதாபமாக நின்றிருந்தார்.

கங்காவிற்கு கோபம்தான் குழந்தை பசியில் அழுகிறது.அம்மா பால் கொடுக்க போகிறார்.எப்படி மாமனார் முன்னிலையில் கொடுக்க முடியும்?அவரை வெளியே போக சொன்னதில் தவறு இல்லையே.இப்படி ஊரை கூட்டிய அந்த கேடுகெட்ட வளர்ந்த ஜென்மத்திற்கு இது கூட புரிய வேண்டாமா?ஒரு பெண்ணிற்கு பிடிக்க வில்லை என்றால்,அது கணவனாக இருந்தாலுமே வெளியேறி ஆக வேண்டும் என்பதே கங்கா மனதின் தீர்ப்பாக இருந்தது.

சிவராமன் ஆசையாக வளர்ந்த ஜாதிமல்லி மரம் திடீரென கருகி விட்டது.அந்த ஜாதிமல்லி வெறும் தண்ணீர், உரம் மட்டும் கொடுத்து வளர்க்கப்பட வில்லை.மாறாக கங்காவும் கெளசியும் “நாங்க உனக்கு நிறைய தண்ணீ தரோம் நீ எங்களுக்கு நிறைய பூ கொடு” என தினமும் காலை பல் துலக்கி கொண்டே அதோடு பேச்சு வார்த்தை நடத்தி உணர்வோடும் அன்போடும் வளர்த்த மரம். அதனால்தான் என்னவோ கொடியாக செடியாக மட்டுமே வளரும் அந்த ஜாதிமல்லி சிவராமன் வீட்டில் மட்டும் மரமாக வளர்ந்திருந்தது.

நமக்கு எதாவது கெட்ட நேரம் வருவதற்கான அறிகுறி நம் வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுக்கும் செடிகளுக்கு முதலில் தெரிந்து விடும் என்பது வாய்வழி செய்தியாக லட்சுமி கேட்டுள்ளார்.ஆனால் இன்று கங்கா சென்றவுடன் ஜாதிமல்லி கருகியது ஏதோ பெருங்கஷ்டத்தை தந்தது.

கங்காவிற்கும் அருளிற்கும் வெள்ளிக்கிழமை திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை லட்சுமிக்கு அவனே தெரியப்படுத்தினான்.

அவள் மாற்றுதுணி எடுக்காமல் சென்றதால்,அவளது துணியை தன்னுடன் வேலை செய்த கதிர் என்பவனிடம் கொடுத்து விடும்படி அருள் லட்சுமிக்கு ஃபோன் மூலம் சொல்ல..சிவராமனுக்கு தெரியாமல் லட்சுமியும் கெளசியும் கங்காவின் துணியை பேக் செய்து கதிரிடம் கொடுத்து விட்டனர்.

இரண்டு பெரிய பைகளில் கங்காவின் துணி,சீப்பு,பவுடர் டப்பா, இவற்றையெல்லாம் கொடுத்து விட்டிருந்தார் லட்சுமி.

கதிரை பஸ்ஸ்டாண்டில் காத்திருந்து அருள் அழைத்து வந்தான்.வந்தவன் பையை கங்காவிடம் தர போக,அருளின் அப்பா தடுத்து இரண்டு பையையும் தலைகீழாக கொட்டி என்னென்ன கொடுத்துள்ளார் என தேட ஆரம்பித்தார்.

ஒரு பெண் கட்டிய துணியோடு வந்திருக்கிறாள்.என்னவெல்லாம் அதில் இருக்கும் என்ற இங்கிதம் இல்லாமல் ஒவ்வொரு துணிவையும் உதறி எடுத்தார்.அவருக்கும் ஒரு பெண் பிள்ளை உள்ளதுதானே…மூன்று ஆண்கள் நிற்க கங்காவிற்கு கேவலமாக இருந்தது தன் நிலைமை.

துணியை தவிர எதுவுமில்லை என்றவுடன் முகம் மாறியது.இரண்டு வெள்ளி கொலுசு மட்டுமே அதில் இருக்க அதை எடுத்து தன் சட்டை பையில் வைத்துக் கொண்டார் அருளின் அப்பா.

பின் இரண்டு நாட்களில் திருமணத்திற்கு புடவை,தாலி எல்லாம் வாங்கப்பட்டது.கங்கா வீட்டு வழக்கப்படி மெட்டி தாய் மாமன்கள்தான் போட வேண்டும்.மூன்று தாய் மாமன்கள் இருக்க கடை ஊழியர் கங்காவின் காலில் மெட்டி போட, அழுகை நிற்க வில்லை அவளுக்கு.

வெள்ளிக்கிழமை காலை திருமணத்திற்கான ஏற்பாடு படு வேகமாக நடந்தது.கங்காவிற்கு உதவ கெளசியின் தோழி மீரா வந்திருந்தாள். அவள் கங்காவை திருமணத்திற்கு தயார் படுத்தினாள்.

அக்கா உங்களுக்கு அம்மா அப்பா இல்லாம கல்யாணம் பண்ண சம்மதமா?என்றாள் கங்காவை பார்த்து..

–தலைவன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!