Skip to content
Post Views: 976
அத்தியாயம் 5
“கார்த்தி.. இன்னைக்கு நீ ஃபிரீயா நானும் நீயும் பேங்க்ல போய் ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டு வந்துரலாம்” என்றார் நாகரத்னா பெரிய மகனிடம்.
இப்பொழுது கார்த்திகேயன் கல்லூரி மூன்றாம் ஆண்டிலும் விக்னேஷ் பன்னிரெண்டாம் வகுப்பிலும் படித்து கொண்டிருக்கிறார்கள்.
Advertisement
“ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கு இல்லம்மா? இப்ப திருப்பி எதுக்கு இன்னொரு அக்கவுண்ட்?” என்றான் கார்த்திகேயன்.
Advertisement
“அண்ணா, இப்ப நம்ம அம்மா தொழிலதிபர், ஒரு அக்கவுண்ட் எல்லாம் எப்படி போதும்” என்றான் அங்கே படித்துக்கொண்டிருந்த விக்னேஷ்.
Advertisement
“அது இல்லடா, அதுல அப்பா இன்சூரன்ஸ் காசு, நகை வித்த காசு எல்லாம் போட்டு வச்சிருக்கோம். அது தனியா இருக்கட்டும், இப்போ நம்ம கடையிலிருந்து வர காசை தனியா இதுல போடலாம்னு பார்க்கிறேன்” என்றார் தன் யோசனையை.
Advertisement
“எனக்கு ஒரு யோசனை, சரியா வருமான்னு சொல்லுங்க” என்றான் கார்த்தி.
விக்கியும் ரத்னாவும் என்ன என்று அவனை பார்க்கவும்,
“கடையில ஓரளவுக்கு நல்ல வருமானம் வருது ம்மா. என் கிட்டயும் கொஞ்சம் காசு இருக்கு. உங்க நகையில பத்து பவுன் வித்திட்டோம் இல்ல. முதல்ல அதை கொஞ்சம் கொஞ்சமா வாங்குவோமா? அதுக்கு அப்புறம் வர பணத்தை அக்கவுண்ட் ஓபன் பண்ணி போடலாம்”
கார்த்தியும் விடுமுறை நாட்களில், சுந்தரேசனிடம் வேலைக்கு செல்கிறான். அவர் செய்யும் மர சாமான்கள், வீட்டிற்கு செய்யும் இன்டீரியர் போன்றவற்றுக்கு டிசைன் செய்து கொடுக்கிறான். அதற்கான கூலியை அவர் சரியாக கொடுத்து விடுவார். அந்த பணத்தையும் சேர்த்து வைத்திருந்தான்.
“உங்க அப்பாவே இல்ல.. எனக்கு எதுக்கு கார்த்தி நகை எல்லாம்” என்றார் விரக்தியாக.
“அப்பா இல்லாததுக்கு நீ ஏன் ம்மா நகை போடாம இருக்கணும். நான் நல்ல வேலைக்கு போனதும் உனக்கு நிறைய நகை வாங்கி தரேன். இப்ப இருக்கிற பணத்தை வச்சு சின்னதா ஏதாவது வாங்கிட்டு வரலாம் வா” என்று பெரிய மகன் கூற,
“அண்ணா சொல்றது சரிம்மா, அப்பா கடவுள் கிட்ட போயிட்டதால, நாம வாழாம இருக்க முடியாதுல. நம்ம நகை வாங்கிக்கலாம்” என்றான் இளைய மகன்.
“சரி, ஆனா நமக்கு தனியா நகை வாங்கி பழக்கம் இல்லையே, நீ அத்தைக்கு போன் போட்டு அவங்க கூட வர்றாங்களான்னு கேளு” என்றார் ரத்னா மகன்களுக்காக.
காமாட்சி அம்மாவும் இவர்களுடன் வருவதாக ஒத்துக்கொள்ளவும், அன்று மாலையே இவர்கள் மூவரும் காமாட்சி அம்மாவுடன் நகை கடைக்கு சென்றார்கள்.
“நாங்க வழக்கமா இந்த கடையில தான் வாங்குவோம் நாகு, ரொம்ப ராசியான கடை. இனி பாரு அடிக்கடி நீங்களும் வாங்குவீங்க”, பேசிக்கொண்டே கடையினுள் நுழைந்தார்கள்.
அங்கே தான் ரேவதி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு காமாட்சி அம்மா நல்ல பரிட்சயம். ஒரு வகையில் தூரத்து சொந்தமும் கூட. இவர்களை பார்த்தும்,
“வாங்க காமாட்சி அம்மா, ரொம்ப நாளா ஆளே காணும்” என்று சிரித்துக்கொண்டே வரவேற்றார் ரேவதி.
“அடிக்கடி வந்து போறமாரியா தங்கம் விக்குது, சொல்லு?”
“அதுவும் சரிதான். என்ன பார்க்கறீங்க சொல்லுங்க, நானே வந்து காட்டுறேன்” என்று இவர்களுடன் இணைந்து கொண்டார்.
“இது நாகரத்னா. என் பொண்ணு மாதிரி. இது ரெண்டும் இவ பசங்க. அவங்க தான் அம்மாவுக்கு நகை வாங்கணும்னு சொன்னாங்க. நான் நேரா இங்க கூட்டிட்டு வந்துட்டேன்”
அம்மாவும் மகன்களும் மிரட்சியுடன் கடையை சுற்றி பார்த்தனர். அவர்களை பார்த்ததுமே ரேவதிக்கு புரிந்துவிட்டது, முதன்முதலாக பெரிய நகை கடைக்கு வருகிறார்கள் என்று.
“சூப்பர் பசங்களா.. அம்மாவுக்கு நகை வாங்கனும்னு தோன்றதே பெரிய விஷயம் தான். சொல்லுங்க என்ன பார்க்குறீங்க” என்று அவர்களுடன் இலகுவாகவே பேசினார்.
“எங்க கிட்ட ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கு. அதுக்கு என்ன வாங்கலாம்” என்றான் கார்த்தி அவரிடமே.
“தோடு, மோதிரம், டாலர் இப்படி வாங்கலாம்..”
அவன் ரத்னாவை பார்க்கவும், “தோடு இருக்கு கார்த்தி, மோதிரம் பார்க்கலாம். டாலர் எல்லாம் வேணாம்” என்றார் மெதுவாக.
“டாலர் மோதிரம் ரெண்டுமே காட்டு ரேவதி” என்றார் காமாட்சி. அதற்கு பிறகு அவர் முன்னே நின்றுகொண்டார்.
பார்க்க பளிச்சுன்னு வேணாம் என்று ரத்னா யோசிக்க, “நல்ல பளிச்சுன்னு இருக்கிற டிசைன் காட்டு” என்றார் காமாட்சி.
அவர் மகனை பார்க்க, “அத்தை சொல்றது கரெக்டா இருக்கும் ம்மா” என்று முடித்துக்கொண்டான் கார்த்தி.
பின் மகன்கள் இருவருமே அம்மாவிற்காக ஆசையாக சிவப்பு கல் வைத்த டாலர் ஒன்றை தேர்ந்தேடுத்தனர். பின் அதற்கு ஜோடியாக ஒரு மோதிரத்தையும் தேர்வு செய்தனர். இவர்கள் பட்ஜெட்டில் இரண்டும் வந்துவிட்டது.
அம்மாவிற்கு எது பொருந்தும் என்று ஆசையாக பார்த்து தேர்ந்தெடுத்த பிள்ளைகளை மிகவும் பிடித்திருந்தது ரேவதிக்கு.
இவர்களுக்கும் மிகவும் திருப்தி. நகையை வாங்கிக்கொண்டு காமாட்சி அம்மாவை அவர் வீட்டில் இறக்கி விட்டு இவர்கள் வீடு திரும்பினார்கள்.
மூவரும் சாமிக்கு முன்பாக விளக்கேற்றி, நகையை வைத்து இறைவனை வணங்கினார்கள். மனதிற்கு ஒருவித சுகமாக இருந்தது மூவருக்கும்.
——–
கார்த்தியின் கல்லூரியில் நந்திதா என்று புதிதாக ஒரு ப்ரோபஸ்ஸர் சேர்ந்திருந்தார். அவருடைய வகுப்பு என்றால் மாணவர்களுக்கு மிகவும் விருப்பம். கார்த்தி வகுப்பிற்கும் அவர் இரண்டு பாடங்களை எடுக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் வகுப்பிற்கு அவரை தான் பொறுப்பாக நியமித்திருந்தார்கள்.
அவர் மாணவர்கள் விரும்பினால், மேற்கொண்டு என்ன படிக்கலாம், இல்லை என்றால் அடுத்து வேலைக்கு எப்படி சேரலாம், என்ன படிக்க வேண்டும் என்று வழிகாட்டினார்.
தேவையான உதவிகளை அலட்டிக்கொள்ளாமல் செய்யும் அவரை
அனைவருக்குமே பிடித்தது. உண்மையிலே அடுத்து என்ன என்று பல மாணவர்கள் குழம்பி தவிக்கும் காலகட்டம் இது அல்லவா?
கார்த்தியும் ஒருமுறை அவரிடம் சென்று பேசினான்.
“சொல்லுப்பா கார்த்திகேயன், அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?”
“எனக்கு வேலைக்கு தான் சேரனும் மேம்”
“உன் டிசைன்ஸ் எல்லாம் நான் பார்த்தேன். ரொம்பவே தனித்துவமாய் இருக்கு. உன் மார்க்ஸும் நல்லாவே இருக்கு.. நீ மேலே படிப்பேன்னு நான் நினைச்சனே?”
ஒரு மாணவன் அவரிடம் வருவதற்கு முன்பாகவே அந்த மாணவனை பற்றி அவரிடம் டீடெயில்ஸ் இருந்தது. ஒவ்வொரு மாணவரும் எதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பெடுத்து வைத்திருந்தார்.
“எனக்கு படிக்கணும்னு ஆசை இருக்கு மேம். ஆனா, முதல்ல கொஞ்ச வருஷம் வேலைக்கு போகணும். அம்மாவுக்கு உதவணும்” என்றான்.
“அதுவும் நல்லது தான், வேலைக்கு போயிட்டு அந்த எக்ஸ்பிரீயன்ஸ் கூட படிக்கிறதும் சிவில் துறைல நல்லது தான்.”
வேலைக்கு சேர்வதற்கான இன்டெர்வியூவிற்கு எந்த எந்த புக்ஸ் எல்லாம் படிக்க வேண்டும் , ப்ரொஜெக்ட் எந்த துறையில் செய்யலாம் என்று பொதுவாக சில குறிப்புகள் கொடுத்தார். பின் வாரத்திற்கு ஒரு முறை வந்து அவரை பார்த்தால், படிப்படியாக எல்லாம் கூறுவதாக கூறி அனுப்பினார்.
அவரிடம் பேசியது அவனுக்கு புது தெம்பை கொடுப்பதாக இருந்தது. அதன் பின் அடிக்கடி அவருடன் பேசினான். நிறைய விஷயங்களை டிஸ்கஸ் செய்தான். அதில் இவர்களது குடும்பத்தை பற்றியும் கூறி இருந்தான். அவன் சனி ஞாயிறுகளில் சுந்தரேசன் மாமாவிற்கு கார்பெண்டர் வேலைக்கான டிசைனிங் செய்து கொடுப்பதையும், அவன் டிசைன்களையும் அவரிடம் காட்டினார்.
மிகவும் சிறப்பாக இருந்தது அது அனைத்துமே. மிகவுமே பாராட்டினார் கார்த்திகேயனை.
“உனக்கு இதுலயே நல்ல வருமானம் வரும் கார்த்தி. நீ ஏன் இதை செஞ்சுட்டே, மேலே படிக்க கூடாது. நீ அம்மாகிட்ட பேசி பாரேன்” என்றார்.
“அம்மாக்கு இது எல்லாம் தெரியாது மேம்..” என்றான் சிரித்துக்கொண்டே.
“நீ பேசிப்பாரு கார்த்திகேயன். விஷயம் அவங்களுக்கு தெரியுதா இல்லையான்னு அப்புறமா சொல்லு” என்றார் அவரும் சிரித்து கொண்டே.
கார்த்தியும் அன்று மாலை ரத்னாவிடம், “அம்மா நான் சொன்னேன் இல்ல நந்திதா மேம்.. அவங்க கிட்ட இன்னிக்கு நம்ம மாமாக்கு பண்ணிகொடுத்த டிசைன் எல்லாம் காட்டினேன். அவங்க சொல்றாங்க, இதுலயே நிறைய காசு வரும். நீ மேலே படிச்சிகிட்டே இதை செய்யலாம்ன்னு.. நீ என்ன ம்மா சொல்ற?”
ரத்னா சில நிமிடங்கள் யோசனைக்கு சென்றார். கை அதன் பாட்டிற்கு வெங்காயத்தை உரித்துக்கொண்டிருந்தது.
“நீ மேலே படிக்க எவ்வளவு செலவாகும். எத்தனை வருஷம் படிக்கணும்? நீ வேலைக்கு போகவே வேண்டாம் கார்த்தி, நம்மால சமாளிக்க முடியும்”
“எனக்கு மேலே படிக்க ஆசை இல்லம்மா.. இப்ப வேலைக்கு சேர்ந்துட்டு ரெண்டு மூனு வருஷம் கழிச்சு படிக்கலாம்ன்னு தான் யோசிச்சேன். விக்கியையும் காலேஜ் சேர்க்கணும் இல்ல?”
“இப்ப என்ன அவசியம், உடனே நீ வேலைக்கு போக. அப்பா நம்ம கூட இல்லைதான். ஆனாலும் அம்மா இருக்கேன் இல்ல கார்த்தி, நீ மேலே படிக்க ஆக வேண்டியதை பாரு. அப்பா இன்சூரன்ஸ் காசு கூட அப்படியே தான் இருக்கு. பார்த்துக்கலாம்” என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
கார்த்திக்கு கண்கள் கலங்கிவிட்டது. அம்மாவிடம் இவ்வளவு தெளிவை அவன் எதிர் பார்க்கவே இல்லை.
மறுநாள் நந்திதா மேமிடம் அம்மா கூறியதை கூறினான்.
“கார்த்திகேயன், நம்ம நாட்டுல இட்லி சுட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிற தாய்மார்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.. இங்க நம்மூர்ல இட்லின்னா வடமாநிலத்துல ரொட்டி, வெளிநாடுகளில பிஸ்சாவோ நூடுல்ஸ்சோ, பர்க்கர்ரோ.. ஒரு பெண்ணுக்கு ஒன்னும் தெரியாம இருக்க வாய்ப்பிருக்கு, ஆனா ஒரு அம்மாவிற்கு ஒன்னும் தெரியாம இருக்க வாய்ப்பே இல்ல..”
“ஆனா நான் வேலைக்கு போகாமல், படிக்கிறது தப்பில்லையா? எங்க குடும்பத்துல மூத்த பையனா எனக்கு பொறுப்பு இருக்கணும் இல்லையா மேம்?”
“நீ சொன்னதை வச்சு பார்கிறப்ப, உங்க குடும்பத்துல அதிக கடன் சுமையோ வறுமையோ இல்லை. நீ வேலைக்கு போய் தான் அடுப்பெரியணும்னு இல்லை.. நல்ல வாய்ப்பு கிடைச்சா படி.. படிச்சுக்கிட்டே நீ இப்ப பார்க்கிற வேலையை கொஞ்சம் விரிவாவும் பாரு.. பாலன்ஸ் பண்றது உன் கையில தான் இருக்கு”
நந்திதா மேம் வழிகாட்டுதலில், இப்பொழுது மேற்படிப்பிற்கான என்ட்ரன்ஸ் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கிறான்.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நெருங்க நெருங்க விக்னேஷ் மிகவும் சோர்ந்து தெரிந்தான்.
ஒரு நாள், “எனக்கு படிப்பு வரலேயே அம்மா, நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்” என்று ரத்னாவின் மடியில் படுத்து கொண்டு மிகவும் வருத்தமாக கூறினான்.
“எல்லாரும் டாக்டர் என்ஜினீயர் ஆக முடியாது விக்கி. ஆனா படிக்காமலும் ஒன்னும் செய்ய முடியாது. உனக்கு என்ன விருப்பம்னு யோசி.. அம்மா உன் கூட இருக்கேன்.. எதுனாலும் பாத்துக்கலாம். பாஸ் மார்க் வாங்கு போதும்” என்றார் ரத்னா அவன் தலையை கோதிக்கொண்டே.
“ஏம்மா நல்லா படின்னு சொல்லாம இப்படி சொல்றீங்க?பாஸ் மார்க் மட்டும் வச்சு என்ன செய்ய முடியும்?” என்றான் கார்த்தி அன்னையிடம் தனியாக.
“அவன் உண்மையா முயற்சி செய்றத நான் பார்க்கிறேன். வரலைன்னா அவன் என்ன செய்ய முடியும்? படிப்பு ரொம்ப முக்கியம் தான். அதை விட முக்கியம் தன்னம்பிகை. அவன் மனசு விட்டுட கூடாது இல்ல கார்த்தி.அதையும் பார்க்கணும் இல்ல.” என்றார்.
எத்தனை சத்தியமான வார்த்தை.
மறுநாள் நந்திதா மேமிடம் சில சந்தேகங்களை கேட்க சென்றான். அப்பொழுது அங்கே வேறு யாரும் இருக்கவில்லை. நேற்று வீட்டில் நடந்த சம்பாஷனைகளை அவரிடம் பகிர்ந்து கொண்டான்.
“கார்த்தி, உங்க அம்மாவை பத்தி நீ சொல்ல சொல்ல எனக்கே அவங்களை பார்க்கணும் போல ஆசையா இருக்கு” என்றார்.
“எங்க அம்மா ரொம்ப ஸ்வீட்.. பார்க்க க்யூட்டா இருப்பாங்க” என்று அவன் கைபேசியில் இருந்த புகைபடங்களை காட்டினான்.
“ரொம்ப சின்ன பொண்ணா தெரியுறாங்களே..”
“ஆமா மேம், முப்பத்தி ஒன்பது வயசுதான் இப்ப. அப்பா சாகும்போது முப்பத்தி ஆறு வயசு, அப்ப இன்னுமே அழகா இருப்பாங்க..”
நந்திதா அமைதியாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்ன மேம் ஒன்னும் பேசாம இருக்கீங்க?”
“நான் ஒன்னு சொல்வேன். அதை நீ சரியாய் யோசிக்கணும்.”
“சொல்லுங்க மேம்.”
“உங்க அம்மாவுக்கு ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க கூடாது. அவங்களுக்கு ஒரு துணை தேவை இல்லையா?”
அவர் கூறிய விஷயத்தை உள்வாங்கவே அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தது.
அவனுக்கு அதை ஜீரணிக்கவே முடியவில்லை.
கோவத்தில் உடம்பெல்லாம் வேர்க்க தொடங்கியது. மேம் என்பதால் எதுவும் கூறவும் முடியவில்லை.
“கடைசி வரைக்கும் நானும் என் தம்பியும் எங்க அம்மாவுக்கு துணையா இருப்போம் மேம்” என்று கூறிவிட்டு அங்கே இருந்து உடனே புறப்பட்டுவிட்டான்.
கண்மண் தெரியாத கோபம். அது எப்படி இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது இந்த மேம்க்கு இப்படி தோணுது என்று மனது குமுறிக்கொண்டே இருந்தது. வீட்டிற்கு போக பிடிக்காமல் , நேரே சுந்தரேசன் ஒர்க் ஷாப்பிற்கு சென்றான்.
வேலை செய்தால் மனது மாறும் என்று டிசைன்களை வரைய உட்கார்ந்தான்.
அவனால் அதிலும் ஈடுபட முடியவில்லை.
மேம் கூறியது மண்டைக்குள் எதிரொலித்து கொண்டே இருந்தது.
“ச்சே..இது தெரிஞ்சா அம்மா மனசு எவ்வளவு சங்கடப் படும். யார்கிட்டயும் இதை பத்தி சொல்லவே கூடாது” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு பின் அங்கேயிருந்து வீட்டிற்கு கிளம்பினான்.
error: Content is protected !!