Skip to content
Post Views: 2,047

உனதன்பில் சரணாகிறேன் 13
அன்றைய தினம் ரதிக்கும் கமலேஷுக்கும் பொழுது விடிந்ததே ம்ருதவ்வின் வீட்டில் தான்.
Advertisement
வீட்டின் அழைப்பு மணி ஒலியில் தான் உறக்கம் கலைந்து எழுந்து வந்தான் ம்ருதவ்.
“என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்க நீ?”
கண்களை தேய்த்தபடி கதவினை திறந்த ம்ருதவ்விடம் கேட்டிருந்தாள் ரதி.
Advertisement
“ஆமா நீங்க என்ன இவ்வளவு காலையில?” என்ற ம்ருதவ் இருவரும் உள்ளே வர வழிவிட்டு நகர்ந்து நின்றான்.
Advertisement
“ஆமா நீ என்ன கிளம்பாம இருக்க” என்று நீள்விருக்கையில் அமர்ந்த கமலேஷ், “உனக்கிருக்க ஆர்வத்துக்கு இந்நேரம் கிளம்பி ரெடியா இருப்பன்னு வந்தா சாவகாசமா எழுந்து வர நீ?” என்றான்.
பதில் சொல்லாது சிட்டவுட் பக்கம் சென்ற ம்ருதவ், பறவைகளுக்கு காலை நேர உணவாக தானியங்களை தூவி வந்தான்.
“என்னாச்சு சிவா?”
Advertisement
இருக்கையில் தளர்ந்து தொப்பென்று சரிந்தவனிடத்தில் ரதி கேட்டாள்.
“எப்படியும் அவள் பதில் நோ தான். திரும்ப அவள் என்னை வேணாம்னு சொல்ற வலி” என்று கண்களை மூடிய ம்ருதவ், “அவளை திரும்பப் பார்க்கப்போறேங்கிற இந்த ஃபீல் ரொம்ப பிடிச்சிருக்கு ரதி” என்றான்.
“இல்ல… புரியல. என்ன சொல்ற நீ?” என்றான் கமலேஷ்.
“நோ சொல்லுவான்னு தெரிஞ்சுதான மூவ் பண்ணோம். இப்போ என்ன?” என்ற ரதி, “எப்படியும் ஒத்துக்க வச்சிடலாம்” என்றாள்.
“அவள் அம்மாகிட்ட என் நினைப்புலே வாழ்ந்திடுறேன், வரயிருக்கவங்களை வரவேணாம் சொலுங்கண்ணு பேசியிருக்காள்” என்ற ம்ருதவ், “எனக்காக, யாருன்னு தெரியாத ஒருத்தனுக்கு நோ சொல்றவள், அது நான்தான்னு தெரிஞ்சா இன்னும் ஸ்ட்ராங்கா நோ சொல்வாள்” என்றான்.
“அதெல்லாம் தெரியாம இல்ல. அவள் உன்னைப்பத்தி, உன் லைஃப் பத்தி யோசிக்கிறா… அதனால வேணாண்ணுதான் சொல்வாள். அதுக்காக இனியும் அப்படியே விட முடியுமா? உங்க ரெண்டு பேர் லைஃப் இதுல இருக்க. ரெண்டு பேருமே நடந்ததை மறந்து வேற வேற வாழ்க்கைக்குள்ள போயிருந்தா இப்போ இதெல்லாம் அவசியமே இல்ல. ஆனா இவ்ளோ நடந்தும், அவள் உன் நினைவுல வாழுறதுக்கும், நீ அவள் நினைவுல உருகி கரையறதுக்கும், எப்படியாவது அவளை சம்மதிக்க வச்சு மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது. அவள் இல்லாம முடியவே முடியாதுன்னு திரிஞ்ச உன்னை காலம் இவ்வளவு தூரம் மாத்தி கூட்டிட்டு வந்திருக்கே! அந்த காலம் நீங்க சேர்ந்தா உங்களை அடுத்தக்கட்டத்துக்கு தானா வழி நடத்தவும் செய்யும். இப்போ நீ ரொம்ப யோசிக்காத” என்றாள் ரதி.
ரதியின் வார்த்தைகள் நிதர்சனம். அவனுக்கும் புரியத்தான் செய்தது.
ம்ருதவ் மித்யுகாவுடனான இந்த திருமணம் வேண்டாமென்று நினைக்கவில்லை… இப்போதும் அவளுக்காக யோசிக்கின்றான். தன்னை அவளால் எதிர்கொள்ள முடியுமா? நேரில் சந்தித்தால் உள்ளுக்குள் எத்தனை வேதனை கொள்வாளோ என அவளின் மனதின் நலன் குறித்து யோசிக்கின்றான்.
அத்தோடு அவனுக்குள் அவளுக்காக எப்போதுமிருக்கும் நேச உணர்வுகள், பல வருடங்களுக்குப் பின்னர் இன்று தான் ஆர்ப்பரிப்பாய் தனது இருப்பை இதயத்தில் தடம் பதிக்கின்றன.
முன்பு அவளுடன் காதலில் வாழ்ந்த நாட்களில் இதுபோன்று உணர்ந்திட்டது, இன்று மீண்டும் அவளை சந்திக்க இருக்கின்றோம், விழிகளில் சிறைப்பிடித்து இதயத்தில் பூட்டி வைக்க இருக்கிறோம் எனும் எண்ணமே அவனுள் புதிதாய் காதலை பூக்கச் செய்த நிலையில் அவனை ஆட்படுத்தியது.
“ரொம்ப யோசிக்கல ரதி” என்ற ம்ருதவ், “இத்தனை வருஷத்துக்கு அப்புறம்… இங்க வேற மாதிரி ஃபீல் ரதி” என்று நெஞ்சத்தில் கை வைத்தவன், “அவளை பார்த்துட்டா இந்த ஃபீல் போயிடும்ல… அவளை பாக்குறதுக்காக இங்க துடிக்கிற துடிப்பு அடங்கிடும்ல. எனக்கு இதை இன்னும் கொஞ்சநேரம் அனுபவிக்கணும் தோணுது” என்றான்.
“நல்லா தோணும்டா எப்பா உனக்கு” என்ற கமலேஷ், “அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கடா. இப்போ கிளம்பினாதான் சொன்ன நேரத்துக்கு போக முடியும்” என்றான்.
“என்னைப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவாள்?”
“அதை தெரிஞ்சிக்க நாம மொதல்ல அங்க போகணும்” என்றான் கமலேஷ்.
“டேய் சும்மா இருடா” என்று கணவனை அடக்கிய ரதி, ம்ருதவ்வின் அருகில் சென்றமர்ந்தாள்.
“என்னடா பிரச்சினை உனக்கு?”
“திரும்ப அவள் என்னை வேணாம் சொல்லமாட்டாதான ரதி?” கேட்கும்போதே அவனது குரல் முற்றிலும் உடைந்திருந்தது.
“திரும்ப தாங்கிக்கிற திடம் இருக்கா தெரியல” என்றான்.
“அப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு? எடுத்த முயற்சியெல்லாம் வீணாப்போகட்டுன்னு இதை இப்படியே ட்ராப் பண்ணிடுவோமா?” என்றாள் ரதி.
“ஹேய் ரதி… அமைதியா பேசு. அவனே ஏதோ குழப்பத்தில் இருக்கான்” என்ற கமலேஷ், ரதியின் பார்வையில் வாயினை மூடிக் கொண்டான்.
“அவளோட குற்றவுணர்வுக்கு நீ காரணமில்லை. ஆனா அவளுக்கு அந்த உணர்வை உன்னால போக வைக்க முடியும்” என்ற ரதி, “உன்னை பாக்குறதால அவளுக்கு வலி உண்டாகும்ன்னா, இத்தனை வருஷம் நீ அனுபவிச்ச வலிக்கு யார் மருந்து போடுறது. உன் வலி அவகிட்டதான் நீர்த்துப்போகும்” என்றாள்.
“ஆமா சிவா, இப்போ இந்த நேரம் அவளுக்கு கஷ்டத்தைக் கொடுக்கணுமா நினைச்சு காலத்துக்கும் வலி கொடுத்துக்காதீங்க” என்றான் கமலேஷ்.
“நீங்க நினைக்கிற மாதிரி… இப்படியே இருந்திடலான்னு நான் நினைக்கல. அவள் இல்லாம முடியலங்கிறதுதான் உண்மை. அவளை இங்க எனக்குள்ள, என் கைக்குள்ள கொண்டு வந்திடனும். ஆனா” என்று நிறுத்தியவன், “இப்போ என்னைப் பாக்குறவ கண்ணுல எனக்கான அந்த பழைய தேடல் இல்லாமப் போயிட்டால்? என்னைப்பார்த்து நீயான்னு அவளுக்குள்ள சின்ன அதிர்வு வந்துட்டாலும் என்னால தாங்கிக்க முடியாது” என்றான்.
“உன் அளவுக்கு அவளுக்கும் லவ் இருக்கு சிவா!”
“ஹேய் ரதி” என்று புன்னகைத்த ம்ருதவ், “எனக்கு காதலிக்க சொல்லிக்கொடுத்தவளே அவள் தான். அவள் என்னை காதலிக்கிறதைப் பார்த்து தான் என் காதலை அவகிட்ட எப்படி கொடுக்கணும் கத்துக்கிட்டேன். அவளோட காதலை நான் குறைச்சிப் பார்க்கவேயில்லை. எந்த காரணத்துக்காக என்னைவிட்டுப்போனாளோ இப்பவும் அந்த காரணத்துக்காகத்தான என்னையோ இல்ல இன்னொரு வாழ்க்கையையோ தேடிக்காம இருக்காள். இப்பவும் அவள் என்னைப்பத்தி தெரிஞ்சிக்க நினைச்சும் முடியாம அவஸ்தைப்படுறது அந்த காரணத்துக்காகத்தான. இப்போ நான் அவள் முன்னாடி போய் நின்னா, அதே காரணம் எங்களுக்கு நடுவில் நிக்குமே! அப்போ அவள் என்னை பார்க்கும்போது அவளோட மனசு எனக்கு அவள் வேணாம்னு தான சொல்லும். அவள் வார்த்தையா சொல்லணும் அவசியமில்லை, அந்த கண்ணு போதும்” என்று இரு கைகளாலும் முன்னிருந்து பின்னால் தலையை வருடி பிடரியில் கோர்த்து முகம் உயர்த்தியிருந்தான்.
“நீ ரொம்ப யோசிக்கிற சிவா” என்ற ரதி, “எதையுமே கடக்க நினைச்சு முன்னாடி அடி எடுத்து வைக்கிறதுதான் கஷ்டம். அடி எடுத்து வச்சிட்டா, ஈசியா கடந்திடலாம். அவளைபத்தியோ உன்னையோ, உங்க காதலையோ மனசுல வச்சி எதையும் யோசிக்காத. இப்போ உனக்கு மேரேஜ் பண்ண பொண்ணு பார்க்கப்போறோம். அவ்ளோதான்” என்றாள்.
“ஹ்ம்ம்…” குரல் அடங்கி ஒலித்தது.
“சிரிடா” என்று அவனின் கன்னத்தைப் பிடித்து இழுத்த ரதி, “ரெடியாகி வா! இன்னைக்கு எல்லாத்தையும் சரி பண்றோம்” என்றாள்.
“ஆமா பண்றோம்” என்ற கமலேஷ், “மித்யுவ பார்க்க நீ ரெண்டு நாளா காட்டிய ஆர்வத்தில், அவளை நீ சமாளிச்சிடுவன்னு நினைச்சேன். ஆனா இப்போ எங்களை உன்னை சமாளிக்க வச்சிட்டியேடா” என்றான்.
“பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் அப்படின்னா எல்லாம்… என்னையும் சமாளிச்சுதான் ஆகணும்” என்று அறைக்குள் சென்ற வேகத்தில் வெளிவந்த ம்ருதவ், தாடையை தேய்த்தவாறு, “ஷேவ் பண்ணனுமாடா?” எனக் கேட்டான்.
“எதுக்கு? இப்போவே பளபளன்னு தான இருக்கு முகம்” என்ற கமலேஷ், “கொஞ்சமாவது வளர விடுடா. இன்னமும் ஸ்கூல் கிட் மாதிரி முகத்தை வச்சிருக்க” என்றான்.
“ஆமா சிவா… உன்னோட எங்களை சேர்த்துப்பார்த்தா உன் முகம் யங்கா தெரியுது. அதுக்கு காரணம் இதுதானோ?” என்ற ரதி, “அங்க என்னயிருக்குன்னு ஷேவ் பண்ணனுமா கேட்கிற நீ. டைம் ஆகுதுடா, நல்ல நேரத்தில் அங்க போய் சேரவேண்டாமா?” என்றாள்.
“பியர்ட் இருந்தா அவளுக்கு பிடிக்காது” என்ற ம்ருதவ், ரதியின் புருவம் உயர்ந்ததில், சன்னமான முறுவலுடன் அறைக்குள் நுழைந்திருந்தான்.
“அதனால்தான் எப்பவும் க்ளீன் ஷேவ்வா” என்ற கமலேஷின் குரலில் உள்ளிருந்த ம்ருதவ்வின் இதழ் நீண்டு விரிந்தது.
“தாடி வச்சா ரவுடி மாதிரி இருக்கும். எனக்கு பிடிக்கல. உங்களுக்கு சார்ம் லுக் ம்ருது. சைனீஸ் ஆக்டர் ‘சென் செயுவான்’ மாதிரி. நல்லாயிருக்கும். எனக்கும் பிடிக்கும்” என என்றோ அவனின் கன்னத்தை கொத்தாக உள்ளங்கையில் அடக்கி மித்யுகா சொல்லியது இன்றும் அவனது நெஞ்சத்தைக் குளிர்வித்தது.
“இவன் என்னடா இப்படி இருக்கான்” ரதி கமலேஷிடம் வினவ, “அவன் அவளோட காதலுக்கு அவளுக்கு அடிக்ட் ஆகியிருக்கான்” என்றான்.
உண்மையில் கமலேஷ் சொல்லியது போன்று ம்ருதவ், மித்யுகாவின் மீது சரணாகதி எனும் வரையறையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
அவள் விட்டுச்சென்ற பின்னர் கூட, அவளின் பிரிவை ஏற்காது இந்த நொடி வரை அவ்வீட்டில் அவளுடன் எப்படியெல்லாம் வாழ்ந்திட ஆசைகள் கொண்டானோ அப்படியெல்லாம் அவளின் நினைவலைகளுடன் வாழ்ந்துக்கொண்டுதானிருக்கிறான்.
அவளின்றி வாழ அவன் பழகவில்லை என்பதே உண்மை. ம்ருதவ்வின் உலகம் மித்யுகா அவனுடன் வாழ்ந்த நாட்களோடு, அவள் விட்டுச்சென்ற நிமிடங்களுக்கு முன்பாகவே அவனுள் உறைந்து அவனிடத்தில் நின்றுவிட்டது.
‘ஒருவருடன் வாழத்தானே திருமணம் வேண்டும். ஒருவரினுள் வாழ காதலே போதுமானது.’
இங்கு ம்ருதவ், மித்யுகா வாழ அவர்களின் காதலே போதுமானது. காதலோடு நின்றுவிட்ட ம்ருதவ்வின் உலகம் மீண்டும் இயக்கம் கொள்ளவே இன்றைய நிகழ்வு, முயற்சி, அவளுடனான திருமணம்.
“என்னென்னலாம் எடுத்துப்போகணும் தெரியுமா?” கமலேஷ் ரதியிடம் கேட்க, “நேத்தே அண்ணாகிட்ட சொன்னேன். அவரே தட்டில் வைக்க என்னென்ன இருக்கனுமோ எல்லாம் வாங்கிவந்துட்டார். கார்ல வச்சிருக்கேன்” என்றாள் ரதி.
“குட்… இதிலெல்லாம் என் மச்சான்ஸ் பாசக்காரங்கதான்” என்ற கமலேஷ், ரதி தொடையில் அடித்ததில் துள்ளி குதித்தான்.
“அவனுக்கு ட்ரெஸ் வாங்கினது கார்லே பேக் சீட்ல இருக்கு. போய் எடுத்திட்டு வா” என கமலேஷ்ஷை அனுப்பியவள், பூஜையறை சென்று சித்தப்பாவின் முன்னிருந்த விளக்கில் தீபம் ஏற்றி வைத்தாள்.
“இனியாவது அவன் சந்தோஷமா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறி வெளியில் வந்தாள்.
“அவன் வாங்கிக்கமாட்டான் ரதி.” புது சட்டையை எடுத்து வந்த கமலேஷ் கூறினான்.
“நீ கவரோட கொடுக்காம, ட்ரெஸ் வெளியிலெடுத்துக் கொடு. வாங்கிப்பான்” என்ற ரதி, ம்ருதவ்வின் அறைக்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே, “குளிச்சிட்டு வந்துட்டான் போல. நீ போ!” என உள்ளே தள்ளினாள்.
கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த கமலேஷ், கண்ணாடி முன்பு ஈர கேசத்தை கோதி கொடுத்தவாறு நின்றிருந்த ம்ருதவ்வின் அருகில் சென்று, ரதி சொல்லியவாறு பைக்குள்ளிருந்து ஆடையை எடுத்து அவன் முன் நீட்டியவனாக,
“இதை போட்டுக்கோ சிவா” என்றான்.
கண்ணாடியில் கவனமாக இருந்த ம்ருதவ், “பல தடவை சொல்லிட்டேன். எனக்கு வேணும்னா நான் வாங்கிக்கமாட்டனாடா” என்றான்.
“இதுதான் நடக்கும்… நீ இப்படித்தான் சொல்லுவன்னு எனக்குத் தெரியுமே! ஆனா ரதிதான் நீ கண்டிப்பா வாங்கிப்பன்னு கொடுக்க சொன்னா” என்று புலம்பியபடி கமலேஷ் திரும்பி நடக்க, அவன் கையிலிருந்த ஆடையை கண்டுவிட்ட ம்ருதவ்,
“வச்சிட்டுப் போடா” என்றிருந்தான். அவனை பாராமலே!
“எதை?”
“உன் கையிலிருக்கிறதைதான்” என்று இம்முறை ஆடையில் கண் பதித்தவனாகக் கூறினான்.
“என்ன அதிசயம்” என்ற கமலேஷ், “சீக்கிரம் வா” என ஆடையை மெத்தையின் மீது வைத்துவிட்டு வெளியேறினான்.
வெளிர் ஊதா (லாவண்டர்) நிற சட்டையை கையிலெடுத்தவன், அதனை மெல்ல விரல்களால் வருடிக் கொடுத்தான். தானாக அவனின் இமைகள் இணைந்திட, விழிகளில் அவனவள்.
கல்லூரி படிப்பை முடித்ததும் ம்ருதவ் பணியில் அமர்ந்துவிட்டான். தினமும் அலுவலகம் செல்வதற்கு முன்பு காலை மித்யுகாவை விடுதி பகுதியின் வாயிலருகே பார்த்துச் செல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தான்.
அன்று போட்டி ஒன்றிற்காக மற்றொரு கல்லூரிக்கு முன்னதாகவே செல்ல வேண்டிய சூழலால் இருவரின் காலைநேர சந்திப்பு தடைப்பட்டிருக்க, போட்டி முடிந்ததும் ம்ருதவ் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கே வந்திருந்தாள்.
முக்கிய கூட்டத்திலிருந்த ம்ருதவ், மித்யுகாவிடமிருந்து அழைப்பு வரவும், யாரையும் பொருட்படுத்தாது அழைப்பை ஏற்றவனாக அவ்வறை விட்டு வெளியில் வந்திருந்தான்.
“ஹாஸ்டல் வந்துட்டியா யுகா?”
“இல்லை” என்றவள், “உங்க ஆபீஸ் பார்க்கிங்கில் இருக்கேன்” என்று மித்யுகா சொல்லிய அடுத்த கணம் தன்னுடைய வேக எட்டுக்களுடன் அவ்விடம் விரைந்தான்.
தூரத்தில் வரும்போதே அவள் நின்றிருப்பதைக் கண்டுவிட்ட ம்ருதவ், இன்னும் நடையை எட்டி வைத்தான்.
அவனின் உயரத்திற்கு நீண்ட எட்டுக்கள் வைத்து, சூரிய ஒளி முகம் மோத, அவனின் சிவந்த நிறத்திற்கு கூடுதல் தேஜஸ் பெற்றவனாக தன்னை நோக்கி வருபவனில் மொத்தமாக லயித்து, தன்னைத் தொலைத்து நின்றிருந்தாள்.
“உன்னை இந்த வெயிலில் யார் இவ்வளவு தூரம் வர சொன்னது? நான்தான் ஈவ்வினிங் வர்றேன் சொன்னனே” என்று மரத்தடியில் நின்றிருந்தாலும் வெயில் தீண்டும் இடத்தில் நின்றிருந்தவளை நிழலுக்கு கீழ் தள்ளி நிறுத்தினான்.
எப்போதும்போல் அவளுக்கான அவனின் காதல் கடிதலில் கரைந்தாலும், அவனின் வார்த்தைகளை பொருட்படுத்தாதவளாக…
“வாவ் ம்ருது” என்று அவனின் கரம் பற்றி கால்கள் துள்ளிட மெல்லக்குதித்தாள்.
“என்ன பண்ற யுகா” என்று அங்கு வேறு யாரேனும் இருக்கின்றனரா என்று சுற்றிப் பார்த்தவன் பக்கவாட்டில் திரும்பிய நொடி, அவன் முற்றும் எதிர்பாராத வகையில் பாத விரல்கள் ஊன்ற எட்கி, அவன் உடல் உரச அவனில் சாய்ந்து, கன்னத்தில் பட்டென்று இதழ் தீண்டி விலகியிருந்தாள்.
மலர் ஒன்று ஸ்பரிசித்து விலகிய உணர்வு அவனிடத்தில்.
என்ன நடந்ததென்று அவன் கிரகிக்கும் முன்னர்,
“சாரியெல்லாம் சொல்லமாட்டேன். கொடுக்கணும் தோணுச்சு கொடுத்தேன். வேணும்னா திட்டிக்கோங்க. வேணான்னா திருப்பிக் கொடுத்திடுங்க” என்று அவனுக்கு வாகாக தன் கன்னத்தைக் காண்பித்தாள்.
உண்மையில் ம்ருதவ்வுக்கு முறையாக தங்கள் வாழ்வு இணைவதற்கு முன்பு இதுபோன்ற நெருக்கங்களில் உடன்பாடில்லை. மற்ற காதலர்கள் போன்று இதழ் தீண்டிக்கொள்வதிலும், உடல்கள் உரசிக்கொள்வதிலும் கிடைக்கும் இன்பம், அவள் முகம் பார்ப்பதில் கிடைக்கும் நிறைவுக்கும், விழியோடு விழிகள் உறவாட மனங்கள் பேசிக்கொள்ளும் உணர்வுக்கும் ஈடாகுமா? என்ற எண்ணமே அவனிடத்தில்.
இரண்டு வருட காதலில் இதுவே முதல் முறை. அதுவும் எப்போதும் அவளிடமிருந்து கிடைக்கப்பெறும் நெருக்கம் போன்று, முத்தமும் அவளிடமிருந்தே முதலாக.
முதலில் அதிர்வில் என்ன நடந்ததென்ற சிந்தனை தான் அவனிடத்தில், அவள் அடுத்துப் பேசியதில், எப்போதும்போன்று இது சரியானதில்லையென்று அவன் வழங்கும் அறிவுரைக்கு மாறாக புன்னகை சிந்தியிருந்தான்.
“கோபப்படமாட்டீங்க தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா அழுத்தமா கொடுத்திருப்பேன்” என்று உதடு சுளித்தவள், அவனின் அமரிக்கையான சிரிப்பில்…
“தொலைய வைக்கிறீங்க ம்ருது” என்றாள்.
“அப்போ மேடம் இன்னும் தொலையலயா?” என்றவன், அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் ஒற்றை கால் தரை பதிய சாய்ந்தமர்ந்தான்.
“முழுசா தொலைஞ்சிடலாமா ம்ருது” என்று அவனை நெருங்கி, ஹஸ்கி குரலில் ஒற்றைக் கண்ணடித்து அவள் கேட்க,
“நீ கிளம்பு” என்றிருந்தான்.
“ட்ராப் பண்ணுங்க.” சட்டென்று முகத்தை உர்ரென மாற்றியிருந்தாள்.
இந்த முகத்தோடு அவளை அனுப்பி வைத்தால், அடுத்து தன்னால் எதுவும் செய்ய முடியாதென நினைத்தவன்,
“என்ன இன்னைக்கு ஸ்பெஷல்?” எனக் கேட்டிருந்தான். வரும்போது அவளிடத்தில் கண்ட மகிழ்வின் காரணத்தை அறியும் பொருட்டு.
“அப்போ டி.எல் சாருக்கு இன்னும் நான் முழுசா தெரியலப்போல?” என்றாள். அதே முகத்துடன்.
“என்ன தெரியணும்?” எனக் கேட்டவனுக்கு, அவள் உணர்த்திட நினைப்பது தெரிந்தே இருந்தது.
பேன்ட் பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுத்தவன், அவளின் விரல் பற்றி தனக்கருகே இழுத்து, அவளின் கழுத்தைச் சுற்றிய தன்னுடைய கை அவளின் தோள் வழி முன்பக்கம் அவளது கையோடு சேர, அவளின் பின்தலை தனது நெஞ்சில் பதிந்திருக்குமாறு நிற்க வைத்து சுயமி எடுத்திருந்தான்.
“ரெண்டு பேரும் ஒரே கலர் டிரெஸ்… வாவ் லுக் யுகா” என்றான் எடுத்த புகைப்படத்தைப் பார்த்தவாறு.
“நோட் பண்ணீங்களா?”
“அங்க வரும்போதே… உன்னைப் பார்த்ததும்” என்று அவளின் நெற்றி முட்டினான்.
“அன்எக்ஸ்பெக்டட்… ரொம்ப எக்ஸைட் ஆகிடுச்சு” என்ற மித்யுகா, “இந்த லாவண்டர் சர்ட் அண்ட் ஹாஃப் ஒயிட் பேண்ட் உங்களுக்கு செமயா இருக்கு ம்ருது. ஜஸ்ட் வாவ்” என்றதோடு, “ஆபீஸ் கேர்ள்ஸ் யாரும் சைட் அடிக்கலையா?” எனக் கேட்டாள்.
ஆங்காங்கே வெள்ளை நிற பூக்கள் நிறைந்திருக்க, வெளிர் ஊதா வர்ண முழுக்கை அனார்காலி சுடிதாரில், விழிகளாலே தன்னை விழுங்கிவிடுவதைப் போன்று பார்த்திருப்பவளின் காதுகருகே குனிந்து,
“நீ மட்டும் பார்த்தா போதும்டி” என்று தனது குரலாலே அவளை உருக வைத்திருந்தான்.
அவனது வார்த்தைகள் செய்த மாயத்தில், அவள் முகம் பிரதிபலித்த உணர்வை இன்றும் அவனின் அக விழிகள் ரசித்து குளிர்ந்தது.
“எவ்வளவு நேரம்டா” என்ற கமலேஷின் குரலில், அன்று எடுத்த சுயமியில் மித்யுகாவில் தன்னைக் களவாடும் விழிகளில் தொலைந்திருந்தவன் மீண்டவனாக, வெளியில் வந்தான்.
“லுக்கிங் குட் டா” என்று ரதி சொல்ல,
“வான்டட்டலி வாங்கி வந்திருக்க” என்ற ம்ருதவ், “தேங்க்ஸ்” என்றான்.
“போதும்… போதும்…” என்றவள், “இனி சிரிச்ச முகமா வருவதான?” என்றாள்.
ம்ருதவ் புன்சிரிப்போடு சித்தப்பாவின் புகைப்படம் முன்பு சில நொடிகள் நின்றிருந்துவிட்டு வெளியேறினான்.
“அப்படியென்ன இந்த கலர் டிரெஸில் ரகசியம்… எனக்குத் தெரியாம?” என கமலேஷ் ரதியிடம் வினவ,
“எனக்கும் தெரியாது. பட் அவங்களுக்குள்ள சம்திங் ஸ்பெஷல் மொமெண்ட் நினைக்கிறேன். இத்தனை வருஷத்துல ஒருமுறை கூட அவன் வால்பேப்பர்ல இருக்க பிக் மாத்தினதில்லை. நோட் பண்ணியிருக்கியா? அதுல ரெண்டு பேரும் இந்த கலர் டிரெஸ் தான். சோ அவன் மறுக்கமாட்டான் கெஸ் பண்ணேன்” என்றவளாக கமலேஷுடன் வீட்டைப்பூட்டி வெளியில் நிறுத்தியிருந்த காருக்கு வந்திருந்தனர்.
ம்ருதவ் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்க…
“கமல் டிரைவ் பண்ணுவான் சிவா” என்றாள் ரதி.
“இருக்கட்டும்… நானே பண்றேன். நீ பின்னாடி ஃப்ரீயா உட்காரு” என்ற ம்ருதவ், “உனக்கு சேஃப் தான?” என்றான்.
“உன் தொல்லையால நேத்தே டாக்டர்கிட்ட போய் கேட்டுட்டு வந்தாச்சுடா. ஒன்றரை மணிநேர டிராவல் தான். நீ கொஞ்சம் ஸ்லோவா போனா போதும்” என்ற கமலேஷ், ரதி பின்னால் அமர்ந்திட உதவி செய்து, முன்னிருக்கையில் அமர்ந்தான்.
இதயத்தில் பெரும் படபடப்பு குடிகொண்டிருந்த போதும், வெளியில் தன்னை அத்தனை நிதானமாகக் காட்டிக்கொண்டு பயணத்தில் கவனமாக இருந்தபோதும், ம்ருதவ்வின் வசம் யாவும் மித்யுகாவின் நடவடிக்கைகள், பேச்சுக்கள் எவ்வாறு இருக்குமென்பதிலே சுழன்றது.
மித்யுகா வேண்டாமென்று மட்டும் சொல்லிடக் கூடாதென ம்ருதவ் வேண்டுதல் வைத்துக்கொண்டு வர, வேண்டாமென சொல்ல முடியாத நிலையில் மித்யுகாவை நிறுத்தியிருந்தாள் ரதி.
‘நினைவுகளின் நிழலில்
வாழ்ந்துகொண்டே,
நிஜத்தில் நீ வந்தால்
இதயம் தாங்குமோ எனத் துடிக்கிறது.’
error: Content is protected !!