Skip to content
Post Views: 876
கணக்குகளை மூடி வைத்தவன் அவரின் அருகினில் வந்து உட்கார, வெளியிலிருந்து யாரோ வரும் அரவம் கேட்டது. அவன் உடனே எழுந்து மீண்டும் கணினிக்கு அருகில் கணக்கு நோட்டுடன் அமர்ந்தான்.
“வாத்தா, உள்ள வா. உக்காரு. சோலை, ஆச்சிக்கு குடிக்க கொண்டாத்தா.” என்று கடைக்கு உள்ளே வந்த பெண்மணியை வாஞ்சையாய் வரவேற்றார்.
Advertisement
“அய்யா, நல்லா இருக்கியளா? என்ன இன்னைக்கு பேரனும் இருக்காரு போல கடையில.” என்றார் கடைக்கு வந்த பெண்மணி.
“ஆமத்தா, சனி ஞாயிறுன்னா தம்பி வாரதுதானே. என்னத்தா? என்ன விசயமா இந்தப்பக்கம் வந்தது? என்னமும் நல்லசேதியா?“
Advertisement
Advertisement
“ஆமய்யா, எல்லா நல்ல சேதிதே. உங்க பேத்திக்கு கல்யாணம் பேசியிருக்கு தை மாசம். அதேன் அடகுல வச்ச பழய நகைய திருப்பிகிட்டு, வெள்ளி சாமான்களும் சாரிச்சுட்டு போவமுன்னு வந்தேன்.”
“சந்தோஷம்த்தா, நல்லா செஞ்சுறலாம்.” என்றவர் பேரனைத் திரும்பிப் பார்த்தபடி “எம் பேரனுக்கும் தையிலதே கல்யாணம் பேசி இருக்கு.” என்றார்.
Advertisement
அவரோடு மேலும் பேசியபடியே முருகய்யா வியாபாரத்தைப் பார்க்க குமரன் கடை வேலைகளைத் தொடர்ந்தான். எல்லாம் முடிய அடுத்த அரை மணி நேரம் கடந்திருந்தது.
அந்தப் பெண்மணி கிளம்பும் நேரம், “அய்யா, நீங்க சொன்னாப்புல நல்ல நாள் பாத்து வந்து வெள்ளி சாமான வாங்கிக்கிறேன். ஆமா, தம்பிக்கு தையில என்னைக்கி கல்யாணம்? சொல்லவே இல்ல.” எனக் கேட்டு குமரனைப் பார்த்தார்.
அவன் புரியாததொரு பார்வையை முருகய்யாவை நோக்கி வீச அவரோ வெகு நிதானமாக “உம் மக கல்யாணத்தோடதே. தை பதினாலு புதங்கெழம. அன்னைக்கி நல்ல வளர்பிற முகூர்த்தம்த்தா.” என்றார்.
அங்கே அருகே கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ அதிர்ச்சி என்று சாதாரணமாக சொல்லிக் கடந்துவிட முடியாதபடி திகைத்து நின்றான்.
அதன் பிறகும் அந்தப் பெண்மணி ஏதேதோ பேசி இவரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெற்ற பிறகும் குமரனுக்கு திகைப்பு குறையவே இல்லை.
“என்ன குமரா, ஒன்னுஞ் சொல்லாம அப்புடியே நிக்கிற?”
“என்ன? என்னய்யா? என்ன சொல்லணும் நா? நீங்கதே எல்லாமே முடிவு பண்ணிட்டு எனக்கு சொல்லுறீக.” எனப் பொருள் விளங்கா குழந்தை போல பேசும் பேரனின் அருகினில் சென்றார் முருகய்யா.
அமர்ந்திருந்த பேரனின் அடர்ந்த சிகையில் கைவைத்து மெல்லத் தடவியவாறு “காலையில நீ உங்க பெரியப்பன என்னத்துக்கு பாக்கப்போன?” எனக் கேட்டார்.
“அது பூவினி அப்பா, கதிரேசன் மாமா பேச சொன்னாகன்னு சொல்லத்தே.”
“ஹ்ம்ம், அவுக கல்யாணத்துக்கு பேசத்தானே கேட்டாக. உனக்கு என்னத்துக்குய்யா அவென் பேசணும். உனக்கு எல்லாமும் நாந்தே செய்யணும்ய்யா.” என கண்கள் கலங்கப் பேசினார்.
“அதில்ல ய்யா, தேதி குறிச்சாச்சுன்னு எனக்கு சொல்லவே இல்ல. கல்யாணமாச்சும் எங்கன்னு எனக்கு சொல்லுவியளா?” என அப்பாவியாக, பாவம் போல கேட்டவனை ஆதூரமாகப் பார்த்தவர்,
“தொரைக்கு அதுக்குத்தே கோவமா? ஒனக்கு சொல்லாமயா செய்யுவாக. நீ இன்னைக்கு பெரியவங்கிட்ட பேசப் போனன்னு தெரியவுமே எனக்கு பெருத்த சந்தோசம். எங்க நீ மனசுக்கு ஒப்பாம பேத்திய கட்டுவியோன்னு நெனச்சேன். அதேன் நீ வந்ததும் இன்னைக்கு நாள் நல்லாருக்கேன்னு தேதி குறிக்க கேக்கப் போனேன். அவரு சொன்ன தேதிதே இது. இன்னும் சம்மந்தி வீட்டுல கூட கலந்துக்கல. இனித்தே பேசணும். வெளக்கம் போதுமா?” என விளக்கமாகக் கேட்டார்.
“ஹ்ம்ம், இன்னமும் கல்யாணம் எங்க வைப்பியன்னு சொல்லலையே.”
“வேற எங்க வைக்கப் போறாக, நம்ம சிவன் கோவில்லதே. எங் கல்யாணமும் அங்கதே நடந்துச்சு. உனக்கும் அங்கதே.”
“ஆக உமக்கு நடந்ததெல்லாம் எனக்கும் நடக்கட்டுங்குறீரு?” என நக்கலாய் குமரன் கேட்கவுமே,
“வேணாம்ய்யா, மயன் மக்களோட நீ நூறாண்டுக்கு நல்லா இருக்கணும்ய்யா.” என சொன்னரின் மனதிலும் கேட்டவனுக்கும் செந்தில் குமரனே நினைவில் இருந்தார்.
“உங்கப்பனப் போல புள்ளைய விட்டுட்டு நா படுற பாடு என்னோட போகட்டும். என்னப்போல வாழ்க்க உனக்கு வேணாய்யா.”
“நாங்க நிச்சயமா சந்தோஷமா இருப்போம்.” என நம்பிக்கையாய் சொல்லி வீட்டிற்கு கிளம்பி வந்தவனின் மனம் முழுவதும் அவளைக் கடைசியாகக் கண்ட அன்று வீசிய அதே மகிழம்பூ வாசம்.
பூ வாசம் வீசிய நினைவுகளோடு வீட்டினுள் நுழைய அங்கும் அதே மகிழம்பூ வாசம். அவ்வாசம் அவனின் நாசியில் நுழைந்து மனத்தில் பரவி மங்கையின் நினைவாய் நீண்டது.
அன்று அவளைக் கண்டபோது அவர்களை சூழ்ந்து நிறைந்தது மெல்லிய பூவாசம்.
கையில் ஊற்றிய எண்ணையோடு வெளியே வந்தவள் அந்நேரம் குமரனைக் கண்டதும் ஏனோ பதட்டம் வர “அத்தான், அம்மா அப்பா ரெண்டு பேரும் ரஞ்சித்த கூட்டிகிட்டு ஹாஸ்பிடல் போயிருக்காக.” என்றாள் வேகமாக.
“அதுக்கு என்னய வெளிய போன்னு சொல்றியா?” என இடக்காய் கேட்டான் குமரன்.
“ஐயோ, இல்லத்தான். சொன்னேன்.”
“நா உன்கிட்ட பேசத்தான் வந்தேன். அவுக இல்லாததும் நல்லதுதான்.”
“உக்காருங்கத்தான் இதோ தண்ணி கொண்டு வரேன்.” என்றவள் அவளின் அறைக்குள் வந்தாள். அவசர அவசரமாக எண்ணையை அவளின் நீண்ட கூந்தலில் தேய்த்துப் பின்னி முடித்தாள்.
அதோடு கைகளைக் கழுவி சுத்தம் செய்து முடித்து தண்ணீருடன் வெளியில் வந்தாள்.
“பூவினி, நீ எதுக்காக மாமாகிட்ட பேசுன?”
அவனது நேரடிக் கேள்வியில் சற்றே தடுமாறியவள் “இல்ல, அப்பா கொஞ்சம் புரிஞ்சுக்குவாகன்னு.” என மென்று முழுங்கினாள்.
“இங்க கல்யாணம் பிடித்தத்துலயோ இல்ல கட்டாயத்துலயோ நடக்கல. உங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் என்ன ஆகுமோன்னு பயத்துலதே உங்க அப்பா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாக. அவுககிட்ட போயி கல்யாணம் வேணான்னு சொல்லி முட்டாளாட்டம் பேசி மேக்கொண்டு அவுகள சங்கடப் படுத்தாத.”
“அப்ப ஈன்னு பல்லக் காட்டிகிட்டு எனக்கு கல்யாணம்ன்னு குத்திக்கணுமாத்தான்.” எனக் கேட்டவள் முகம், சிவக்கக் காரணம் கோவமா இயலாமையா என பிரித்தறியும் அளவிற்கு அவனுக்கு அவளைத் தெரியவில்லை.
“குதுச்சு? ப்ரயோசனம் இல்ல. உனக்குத் தேவையானதென்ன இன்னுங் கொஞ்ச நாள் டைம்தானே. அத இப்போ என்னால மட்டுந்தே தர முடியும்.”
“நீங்க நிறுத்தப்போறியளா அத்தான்?” என ஆர்வமாய் கேட்டாள் பூவினி.
“நிறுத்துறதுலே இருக்காத. அதுக்கினி வாய்ப்பில்ல. கொஞ்சம் யோசி. கல்யாணம் நின்னா அது எல்லாருக்கும் தேவையில்லாத சங்கடத்தத்தே குடுக்கும். பெரியப்பா என்னத்துக்கு கல்யாணம் பேசுனாரோ அதே காரணத்துக்காக இது நடக்கட்டும். உனக்கான எல்லா நேரத்தையும் நானே கொடுக்குறேன்.” என உறுதியாய் வாக்களித்தவன் அவளின் சம்மதம் பெற்றே திரும்பினான்.
இதெல்லாம் நினைத்தபடியே மகிழ மரத்தடியில் வண்டியுடன் நிற்க “அடேய் அங்க என்ன நிலாவா காயிது. உச்சி வெயில்ல வந்தவன் வாசல்லே நிக்கிற. உள்ள வாடா.” என சத்தமிட்ட வள்ளியம்மாளின் குரலில் சுயம் பெற்று வீட்டினுள் நுழைந்தான்.
தனது அறைக்குள் நுழைந்தவன் எதிரில் இருந்த நாள்காட்டியைப் பார்க்க இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள் தான் மிச்சமிருந்தது திருமணத்திற்கு. பார்த்தவன் தன் மனத்தையும் அறையையும் தயார் செய்யத் துவங்கினான்.
வாரங்களும் நிமிடமாய் ஓடி மறைய சோம சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மன் சன்னதியில் பெரியவர்கள் ஆசியோடு குமரவேல் பூவினியின் திருமணம் மகிழனின் மகிழ்ச்சிப் புன்னகையோடு எளிமையாக முடிந்தது.
திருமணம் என்பது எளிது. ஆனால் மறுமணம்? கின்ட்சுகி (Kintsugi) போல. தயாராவது அத்தனை எளிதல்ல. அவள் வாழ்வின் அத்தனை வடுக்களையும் மனதார ஏற்றுக்கொண்டு, இவர்களின் வாழ்வை ஒரு கலைப்பூவாக மாற்ற இன்னும் சில காலம் தேவைப்படும்.
அந்தக் காலத்தை தன் வாழ்வின் ஒரு பகுதியிலிருந்து தர சம்மதித்து தன்னோடு அவளின் வாழ்வை இணைத்துக் கொண்டவனுக்கு, அவளைத் தன்னோடு இணைப்பது என்பது அத்தனை எளிதில்லையே.
கின்ட்சுகியின் அடிப்படையே செலவிடப்படும் நேரம்தானே?
அந்த நேரம் இவர்களுக்கும் கிடைக்கும் எனும் நம்பிக்கைதானே வாழ்க்கை.
error: Content is protected !!