“சரி அப்பத்தா. நா பெரியப்பா வீடு வர போயிட்டு வாரேன்.”
Advertisement
“அடேய், என்னத்துக்கு இந்நேரத்துல போற?”
“வேற என்னத்துக்கு உம்ம மவரோட கபடி ஆடத்தே.“
“அடேய், உனக்கெல்லாம் வாயிருக்கே தவிர வழக்கமில்ல. அங்க போயி அவங்கிட்ட என்னத்த டா பேசப் போற.”
“வேற என்ன பேசப் போறாக அப்பத்தா? எல்லாம் உம்ம பேத்தி வீட்டுக்கு பேச சொல்லத்தே. கிணத்துல போட்ட கல்லாட்டமா கெடக்காக. நாம் போனா சொத்து கேப்பனா மாட்டேனான்னு அவரு செத்த கொழம்பட்டும்.”
“ஹுக்கும், அவனுக்கு ரெம்ப அக்கறதே உம்மேல. அதெல்லாம் உங்க ஐயன் பேசுவாக. நீ என்னத்துக்கு போற?”
“சபையிலே வச்சு கல்யாணம் பேசிட்டு நம்ம ஒன்னுஞ் சொல்லாம இருந்தா மூணு மாசத்துக்கு அவுகளும் அப்படியே இருப்பாகளா? பூவினி அப்பா நேத்து பேசுனாக. பெரியவுகள பேச சொன்னாக அப்பத்தா. அதேன் ஒரு எட்டு போயி தாக்கச் சொல்லுவமுன்னு போறேன்.”
சனிக்கிழமை காலை நேரம் என்பதால் பிள்ளைகளின் சத்தமும் தொலைக்காட்சியின் சத்தமும் தோட்டம் வரையிலும் கேட்டது.
“அனு, அரவிந்தா” என பிள்ளைகளை அழைத்தபடியே குமரன் புது வீட்டினுள் நுழைந்தான்.
“வாடா குமரா, என்ன காத்து இந்தப்பக்கம் அடிக்குது?” எனக் கேட்டபடியே தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்தான் சரவணன்.
“பேங்க் ஆபீசரே இன்னைக்கு வீட்டுல இருக்கும் போது வாத்தியாருக்கு லீவு கெடைக்காதா அண்ணே? பிள்ளையளையும் அங்குட்டு…” காணோம் என அவன் சொல்லி முடிக்கும் முன்னே “சித்தப்பா” என கத்தியபடியே அவனிடம் ஓடி வந்தனர் பிள்ளைகள் இருவரும்.
“ஹ்ம்ம்,…” என்றவர் அதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து ஏதேதோ பேச குமரனுக்கு கோபத்தின் அளவு கொதிநிலைக்கு வந்தது.
என்ன மனிதர்கள் இவர்கள், தங்களின் சுயநலத்திற்காக இன்னொருவர் கஷ்டப்படுவதைப் பற்றி கொஞ்சமும் நினைக்காத மக்கள். இவர்கள் இப்படித்தானே எப்போதுமே என்று தோன்றவும் மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
“அப்பத்தா, நீ ஊத்துற தோசைக்கு அந்த இட்டிலியே தேவலாம். எனக்கு முறுகலா ரெண்டு நெய் ரோஸ்ட் வேணும்.” என்றவன் நொடியில் அங்கிருந்து வண்டியில் பறந்திருந்தான்.
நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி இல்லாமல் ஊரே சற்று வெப்பமாக இருப்பது போல உணர்ந்தான் குமரன். பூமி மட்டுமே நனைந்து நாறிக் கொண்டிருந்தது. வானம் என்றும் போல தெளிந்திருந்தது.
ஆதவன் ஒன்பது மணிக்கெல்லாம் உக்கிரத்துடன் மேலேறிக் கொண்டிருந்தான். அதன் வெப்பம் கூட ‘வேண்டும்’ போலவே இருக்க அந்த பத்து நிமிட பயணத்தையும் ரசிக்கவே செய்தான் குமரன்.
கோட்டையூரின் முக்கிய வீதியில் இருந்தது வள்ளி நகை அடகுக்கடை மற்றும் வெள்ளி வியாபாரம். முருகய்யா, குமரனின் சிறு வயதில் அவனுக்காக ஆரம்பித்தது. இன்றும் அவரேதான் பார்க்கிறார் என்றாலும் குமரனும் அவ்வப்போது வருவதுண்டு.
வந்தவன் வண்டியை கடையின் அருகே இருந்த புங்கை மர நிழலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழையவும் சந்தன ஊதுபத்தியின் நறுமணத்தைத் தாண்டி நெய்மிதக்கும் வெண்பொங்கலின் மணம் நாசியை நிறைத்தது. முருகைய்யாவும் கடையில் வேலை பார்க்கும் சோலை அக்காவும் நின்றிருந்தார்கள்.
“அய்யா, என்ன நா வாரதுக்குள்ள அப்பத்தா பேசிட்டாக போல.”
“ஹ்ம்ம், உம் பெரியப்பே வீட்டுக்கு போயிட்டு வந்து சாப்புடலன்னு போன போட்டு வள்ளி சொன்னா. அதே உனக்கு பிடிக்கும்ன்னு நம்ம சோலைய ராசு கடையில பொங்கல் வாங்கியார சொன்னேன்.” என்றவர் பொங்கல் இருந்த பையைக் கொடுத்து அங்கிருந்த சிறு அறைக்குள் சாப்பிட அனுப்பினார்.
“தம்பி, நெய் ரோஸ்ட் சொல்லவா?” என்று மீண்டும் வந்து கேட்க, “இதே போதும் ய்யா” என்று முடித்துக்கொண்டான்.
குமரன் சாப்பிட்டு வரும் வரை அமைதியாக இருந்த முருகைய்யா அவன் வரவுமே, “தம்பி இந்த கணக்கெல்லாம் கொஞ்சம் பாரு. செதம்பரம் எழுதுனதுதே, நீ சரி பாத்தா போதும். சோலை கடைய பாத்துக்குரும், நா செத்த வெளிய போய்ட்டு வாரேன்.” என்றவர் அவனிடம் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.
அடுத்த ஒருமணி நேரமும் அவன் நகைக்கடைக் கணக்கில் மூழ்கியிருக்க முருகய்யா திரும்பி வந்தார். வந்தவர் முகத்தில் இருந்த சந்தோஷ உணர்வு குமரனுக்கு குழப்பத்தைக் கொடுத்தது.
“என்ன அய்யா வெளிய போயிட்டு ஒரே சந்தோஷமா வாரிய?”
“வேற என்ன எல்லா எம் பேராண்டி கல்யாணந்தே. என்னதே நீ படிச்சு பட்டம் வாங்கி வேலைக்கு போனாலும் அப்ப வராத சந்தோசம் அய்யாவுக்கு இன்னைக்கு வருதுய்யா.”
“அடேய் கூறுகெட்ட பயலே, கலியாணம் பண்ணவே எல்லாம் நீ பண்ணாதன்னுதே பேசுவான். ஆனா அவங்க பொண்டாட்டி நாலு நாளைக்கு வெளிய போனா காஞ்சு போயிருவாங்க.”
“ஆக, நானும் உம்மப்போல இருக்கத்தே நீர் எனக்கு கல்யாணம் பண்ணுறீரு?”
“நீ என்ன வேணாச் சொல்லு. நீயும் என்னப் போலவே எம் பேத்தியக்கட்டி நல்லா இருக்கனும்ய்யா. அதேன் உன் அய்யனோட ஆசை.” என்று சொன்னவரின் குரலில் வந்துபோன கலக்கம் எல்லாம் அவன் மீதான அன்பு மட்டுமே என்பதை முழுவதுமாக உணர்ந்தான் குமரன்.