Skip to content
Post Views: 910
அத்தியாயம்: 5
மத்தியப் பொழுது என்பதால் சமையல் வேலை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது ரிதன்யாவின் தாய் வீட்டில்.
Advertisement
“வேலை நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க? என்னாச்சி?” என்ற கேள்வியுடன் எதிர் கொண்டார் முத்து லெட்சுமி.
“போய்டுச்சிம்மா.” என்றாள் உணர்ச்சியற்றக் குரலில்.
Advertisement
Advertisement
“போய்டுச்சா? வேலையா!! எப்படி?” என்று அதிர்ந்து அவர் கேட்க, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழிக்குக் குளுகுளுவென இருந்தது.
‘வேலைக்குப் போறோம். சம்பாதிக்கிறோங்கிற திமிர்ல தான புருஷன விவாகரத்து பண்ணா! கூடப் பிறந்தவங்கிற மரியாதை இல்லாம நேத்து பேசுனா! அதான் ஆப்பு வச்சி அந்தக் கடவுள் உன் திமிர அடக்கிட்டான்.’ என்று குதுகளித்தபடி, மாமியாரும் நாத்தனாரும் பேசுவதை ஒட்டுக் கேட்டு கணவனிடம் உடனுக்குடனே செய்தி அனுப்பி வைத்தாள்.
Advertisement
“இனி வரக் கூடாதுன்னு வேலைய விட்டு தூக்கிட்டாங்க.”
“ஏன்? ஆறு வர்ஷமா எந்தப் பிரச்சனையும் இல்லாம, நல்லாத்தான வேலை பாத்திட்டு இருந்த. அவங்க எப்படி உடனே வேலைய விட்டு எடுக்க முடியும்?” என்று கேட்ட அன்னையைக் கசந்த பார்வை பார்த்தாள். அவளின் விழிகள் கலங்கியதை உணர்ந்தவர்,
“என்னாச்சு ம்மா?” என்று ஆதூரமாக தலை கோதிக் கேட்க, அவரின் மார்பிலேயே சாய்ந்து அழுது கொண்டே காலையில் கடையில் நடந்ததைக் கூறினாள்.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிய மாட வீதியில் தங்க நகைகளுக்கென்று தனி வீதி உண்டு. அந்த நகைக்கடை வீதியில் பெயர் சொல்லும் ஒரு பெரிய கடையில் வேலை பார்க்கிறாள் ரிதன்யா.
காலை ஒன்பதரை மணியில் இருந்து மாலை எட்டு மணி வரை அவளின் பணி நேரம். வீட்டில் இருந்து ஒன்பது மணிக்குப் புறப்பட்டு, மகளைப் பள்ளியில் விட்டு விட்டு போக்கு வரத்து நெரிசலுக்குள் புகுந்து கடையை அடையும் நேரம், வாசலில் விக்ரம் நின்று கொண்டிருந்தான்.
அவளுக்கு திக் கென்று இருந்தது. நேற்று வீட்டிற்கு வந்தபோது கூட அவள் பயம் கொள்ளவில்லை. இன்று வேலை பார்க்கும் இடத்திற்கு வந்திருக்கிறான்.
‘என்ன செய்யப் போகிறான்!’ என்று அனுமானித்த அவளின் உள்ளம், தேக்கி வைத்திருந்த தைரியம் மொத்தத்தையும் வற்றிப் போக வைத்தது.
நிச்சயம் தன்னை அவமானப்படுத்தவே வந்திருக்கிறான் என்பது அவளுக்குள் சிறு நடுக்கத்தைத் தந்தது.
நேரம் சென்றதே தவிர அவன் இடத்தைக் காலி செய்வது போல் தெரியவில்லை. வேகமாக மேலாளருக்கு அழைத்து விடுப்பு கேட்டாள். அவரோ கிஞ்சிற்றும் இரக்கம் இன்றி,
“உங்க இஷ்டத்துக்கு லீவ் எடுத்தா எப்படி? அட்சய திதி வரப் போது. இன்னைக்கி காலை பத்து டூ பன்னெண்டு முகூர்த்த நேரம். கூட்டம் அதிகமாக இருக்கும். வந்து சேருங்க. இல்லன்னா அப்படியே போய்டுங்க. வேலைக்கி சேந்த நாள்ல இருந்து கண்ட காரணத்தச் சொல்லி லீவ் போட்டுறதே புழப்பாப் போச்சி.” என்று கத்தினான்.
அவனின் பேச்சைக் கேட்டு அப்படியே வீட்டிற்கு சென்றிருக்கலாம். ஆனால் அவளால் முடியாது. அந்த வேலை அவளுக்கு முக்கியம். அது தான் அவளுக்குத் தன்னம்பிக்கையைத் தந்தது. தன் மகளின் ஆசை மற்றும் பிடித்த அனைத்தையும் வாங்கித் தரும் அளவிற்கு வருமானம் தந்தது.
அத்தோடு இவனைக் கண்டு பயந்து பயந்து ஓடினால் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இன்று இல்லை என்றால் நாளையும் வந்து நிற்கப் போகிறான். என்றைக்காக இருந்தாலும் நீ அவனைச் சந்தித்து தான் ஆகவேண்டும் என்ற நிதர்சனம் புரிய, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் செல்லும் முன், விக்ரம் வந்து நின்றான்.
பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு எதுவோ சொல்ல முயன்றவனிடம்,
“எதுக்கு இங்க வந்தீங்க? வேலை பாக்குற இடத்துக்கு வரக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.” என்று புருவங்களைச் சுழித்தபடி அடிக்குரலில் உறுமிவிட்டு,
“வழிய விடுங்க.” என்று விலகிச் செல்லத்தான் பார்த்தாள். ஆனால் அவனோ,
“விடுறேன் ரிது. அதுக்கு முன்ன நீ நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லு.” என்க, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,
“நம்ம வீடா! அது உங்க வீடு. என்னைக்குமே நம்ம வீடா அது மாறாது. வெளி இடத்துல வச்சி அசிங்கப்படுத்தாம இடத்தைக் காலி பண்ணுங்க.” என்று விட்டு நடக்க, அவளின் கரம் பற்றித் தடுத்தவன்,
“ரிது அப்படிச் சொல்லாத. நீ, நான் பாப்பான்னு நாம எவ்ளோ சந்தோஷமா நம்ம வீட்டுல இருந்தோம்ங்கிறத நினைச்சு பாரு ரிது. எனக்கு அந்த நாள்கள் வேணும். நீ வேணும். நம்ம குடும்பம் வேணும்.” என்று இறைஞ்சல் கோலமெடுத்து அவன் நிற்க,
‘சந்தோஷமாவா!’ என்று நினைக்கும் போது மனம் கொதித்தது.
இவன் உண்மையான சந்தோஷம், என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சிக்காத வெற்று ஜீவன் என்று நினைத்துக் கொண்டிருக்க,
“நான் பண்ண தப்புக்கெல்லாம் உங்கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க தயார இருக்கேன் ரிது. வீட்டுக்கு வா. நம்ம குடும்பத்த கலைச்சிடாத.” என்று கெஞ்சியபடி காலில் விழப் போக, அவனிடம் இருந்த தன் கரத்தை உதறி உருகிக் கொண்டாள்.
“குடும்பத்தை நான் கலைக்கிறேனா! செய்யுறதெல்லாம் செஞ்சி நம்ம குடும்பத்த சிதைச்சது நீங்க. உங்களுக்கு மன்னிப்புத் தர்ற நிலைய நான் எப்பவோ கடந்திட்டேன். பண்றதையும் பண்ணிட்டு மன்னிச்சிடுன்னு கால்ல விழுந்தா எல்லாம் சரியாகிடுமா? உங்களால நான் அனுபவிச்ச வேதனைய நீங்க கேக்குற மன்னிப்பு சரி பண்ணிடுமா?. நானும் எம்பொண்ணும் இழந்த வாழ்க்கையும் திரும்பக் கிடைக்குமா? எதுவும் இல்ல. அதுனால இனி மன்னிக்க முடியாது. தண்டன தான் தரணும். அதையும் எங்கையால நான் தர தயாரா இல்ல. அந்தக் கடவுள் கொடுப்பான்.” என்க,
“கடவுள் எதுக்கு குடுக்கணும். நீ குடு ரிது…. உங்கையால நீ குடு. நீ என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துப்பேன். அடிக்கப் போறியா அடி… அடி… அடி…” என்றவன் அவளின் உள்ளங்கையை எடுத்து தன் கன்னத்தில் அறைந்து கொண்டான். இம்முறை அவனிடமிருந்து தன் கரத்தை உருக முடியாது திணறிப் போனாள் பெண்.
அது மக்கள் புழங்கும் இடம். அதுவும் காலை நேரம் என்பதால் பல கடைகள் அப்பொழுது தான் திறக்கப்பட்டிருந்தன. முகூர்த்த நேரம் என்பதால் கோயிலுக்கு
வருபவர்களின் கூட்டமும் அலைமோதியது. உள்ளூராள்கள் மட்டுமல்லாது வெளியூர், வெளி நாட்டு மனிதர்களும் சேர்ந்து கொள்ள, அனைவரும் இவர்கள் இருவரின் சண்டையை வேடிக்கைப் பார்த்தனர்.
“விடுங்க விக்ரம். கைய விடுங்க… விக்ரம் கைய விடுங்க…” என்று மெல்லிய குரலில் தொடங்கி, கத்தவே செய்து விட்டாள்.
ஆனால் அவன் விடவில்லை.
“நம்ம குடும்பம், குடும்பமா இருக்க! நீ என்ன தண்டனைக் குடுத்தாலும் சந்தோஷமா ஏத்துப்பேன்.” என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே அடிக்க, கடையின் காவலாளி வந்து தடுத்தார்.
“ஏய் என்னப்பா நீ! நடு ரோட்டுல நின்னு பொம்பளப்பிள்ளைட்ட சலம்பல் பண்ணிட்டு இருக்கு. விடுப்பா.” என்க,
“என்னண்ணே தெரியாத மாதிரி கேக்குற! அவ என் பொண்டாட்டி. இது குடும்ப பிரச்சினை.” என்று விலக்கி நிறுத்தப் பார்க்க, அவளோ காவலாளியைப் பார்த்து ஆயாசமாகத் தலையசைத்தாள்.
பல ஆண்டுகளாக அவளையும், இவனையும் பார்த்தவர் அவர். குடும்ப விவகாரம் தெரியாவிட்டாலும் விக்ரமின் குணம் தெளிவாகத் தெரியும். ஆதலால்,
“பொண்டாட்டியாவே இருந்தாலும் வீட்டுல போய் வச்சுக்க. ரோட்டுல நின்னு சண்டை போட்டுட்டு இருக்க.” என்று அவளின் கரத்தை விடுவிக்க, அவனோ ‘இது தான் எனக்கான தண்டனை.’ என்று கூறிக் கொண்டே தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
“நான் பண்ண தப்புக்கு இந்தத் தண்டனை போதுமா! இந்தத் தண்டனை போதுமா!” என்று அடித்துக் கொள்ள, ரிதன்யாவிற்கு மனம் விட்டுப் போனது. சுற்றி இருந்தவர்கள், ‘ஒரு ஆண் இத்தனை தூரம் அவர்களின் வாழ்க்கைக்காக கெஞ்சி இறைஞ்சி செப்பால் அடித்துக் கொள்கிறான். இவள் கல் போல் நிற்கிறாளே! என்ன பெண் இவள்?’ என்ற ரீதியில் அவளைப் பார்த்தப் பார்வையில் கூசிப் போனாள்.
அவளை அடித்திருந்தால் கூட கொடுமைக்கார கணவன் என்று பெயர் வந்திருக்கும். ஆனால் அவனை அவனே அல்லவா அடித்துக் கொள்கிறான். இதை என்னவென்று ஊர் சொல்லும். இவனின் நடிப்பை முழுமையாக நம்பிவிடாதா?
இவ்வாறு செய்வதன் மூலம் அவனுக்குக் கிடைக்கப் போவது என்ன? இந்த ஊரும், உலகமும் இவளைக் குற்றம் சொல்ல வேண்டும். இரக்கமற்ற பாதகத்தி என்று தூற்ற வேண்டும். அதைத் தானே இத்தனை ஆண்டுகளாகச் செய்து வருகிறான்.
அவளைக் கட்டம் கட்டி தன் பக்கம் இழுக்க வைக்க அவன் கையாலும் விதவிதமான யுக்திகளில் இதுவும் ஒன்று.
அவனை விட்டு அவள் சென்று விடக் கூடாது என்பதற்காக, மிரட்டுவது பயங்காட்டுவது என அவன் செய்வது ஏராளம்.
அவளுக்குள், உன்னால் தான் நம் குடும்பம் பாதிக்கப்படுகிறது என்ற பலியைத் தூக்கிப் போட்டு, குற்ற உணர்வை உண்டாக்கி அவனிடமே அவளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
ஏன் அவளின் தந்தை அண்ணாமலையே அப்படித்தான்.
‘மாப்ள கூட ஏன் சண்டை போட்டுட்டு வந்தம்மா?’ என்று கோபமாகக் கேட்டிருந்தால் எதாவது பதில் சொல்லியிருப்பாள். ஆனால் அவரோ கணவனுடன் சண்டையிட்டு தாய் வரும் மகளிடம்,
‘ஏம்மா இப்படி நடந்துக்கிற. என்ன பிரச்சினை வந்தாலும் கல்யாணமான பொண்ணுங்க புருஷன் வீட்டுல இருக்குறது தாம்மா உன்னைப் பெத்த எங்களுக்கு கௌரவம். உன்னை வீட்டுல வச்சிட்டு நானும் உங்கம்மாவும் எப்படி நிம்மதியா வாழ்வோம். கேக்குறவங்ளுக்கு என்ன பதில் சொல்ல? சொல்லு.
நீ வந்திட்ட அப்படின்னா சோறு கூட இறங்க மாட்டேங்கிது எனக்கு. இந்தத் தடவை என்ன பிரச்சனையோட வந்திருக்கியோன்னு நினைச்சு நினைச்சு தூக்கம் வர மாட்டேங்கிது. வயசான காலத்துல நிம்மதி பறிபோகி, ப்ரச்சர் கூடி, சுகர் கூடி, எல்லாம் எதுக்கும்மா.’ என்றெல்லாம் அடுக்கடுக்காகச் சொல்லும் போது,
‘ஐயோ தன்னால் தான் தன் தாயும் தந்தையும் கஷ்டப்படுகிறார்கள்.’ என்று
தோன்றும். மறுநாளை கணவன் வீட்டிற்கு நடையைக் கட்டி விடுவாள்.
மகளின் வாழ்க்கைக்காகப் பேசுகிறேன் என்று அவர் கூறு அறிவுரைகளைக் கேட்பதால் அவளின் தன்னம்பிக்கை மொத்ததத்தையும் அழிந்து, இது தான் தன் தலைவிதி என்று, அனைத்தையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் அந்தச் சிறைக்கே சென்று அமர வைத்து விடுவார்.
இனியும் முடியாது என்று அவள் திடமாய் இருக்க, அதை அசைத்துப் பார்க்கவே விக்ரம் வந்துள்ளான்.
‘இப்படியெல்லாம் அவமானப்படுத்தக் கூடாது என்றால் என்னுடன் வந்தே ஆகவேண்டும்.’ என்று மிரட்டி பார்த்தால் பணிவாள் என்பது அவனின் திட்டம்.
அது புரிந்து போனதால், கணவனுக்காக இறங்கிச் செல்ல முடியவில்லை. எத்தனை முறை தான் இறங்கிச் செல்வது? என்ற விரக்தி வந்து விட்டது.
“நீ கூட இருக்கும் போது தெரியாத அருமை… நீ என்னை விட்டு போனதுக்கு அப்றம் தான் புரியுது. பிள்ளையக் கூட்டீட்டு வந்திடு ரிது.” என்று கண்ணீர் விட, அந்த நீலிக் கண்ணீரை நம்பாது வேகவேகமாக கடைக்குள் சென்று கொண்டாள்.
கடைக்குள் செல்ல காவலாளி அனுமதிக்காத காரணத்தால், அவளை வெளியே வரச் சொல்லியும் மன்னிப்பை வேண்டியும் கத்தினான். கலாட்டா செய்தான். சாலையில் அமர்ந்து கொண்டு, அலுச்சாட்டியம் செய்தான். போக்குவரத்திற்கு இடையூராக உள்ளான் என்று காவலாளிகள் குண்டு கட்டாக அவனைத் தூக்கிச் சென்றனர்.
அதைக் கண்ணாடி கதவைகள் வழியே பார்த்தபடி இருந்தவளுக்குள், இன்னும் என்னென்ன வரப் போகிறதோ என்ற பய மேகம், இருளாக மனத்தைக் கவ்விக் கொண்டது.
ஸ்டேசனில், விக்ரம் காவலர்களிடமும் கதறியிருக்க வேண்டும். ரிதன்யாவை அழைத்து வரச் சொல்லி இரண்டு காண்ஸ்டெபில்களைக் கடைக்கு அனுப்பி வைத்தார் உயர் அதிகாரி.
“எனக்கும் அவருக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சி. இனி அவனோட எந்த ஒரு செயலுக்கும் அவன் பொண்டாட்டியா நான் பொறுப்பேத்திட்டு கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வர முடியாது.” என்று திட்டவட்டமாகக் கூறி அனுப்பி வைத்தாள்.
மன்னிப்பு… இவன் செய்யும் எத்தனை தவறுகளுக்கு தான் அதைத் தருவது. செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டு, மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, யாசகம் கேட்பது போல் மிரட்டினால், அதைக் கொடுத்துக் கொண்டே இருக்க, அவள் ஒன்றும் கடவுள் இல்லையே. அவனின் நடிப்பை உடன் இருந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் பார்த்தவளுக்கு அவனின் பால் இரக்கம் சுரக்காது போனது.
அவனிடமிருந்து விடுபடவே விவாகரத்து வாங்கினாள். அப்படியும் அவன் தன்னை விட்டபாடில்லையே என்று மனம் வேதனைக் கொண்டது. அதை மேலும் வதைப்பது போல் வந்து விழுந்தது சக ஊழியர்களின் பேச்சுக்கள்.
“புருஷனே வந்து, ‘மன்னிச்சுக்க. வா சேந்து வாழலாம்’ன்னு இவ்வளோ தூரம் கெஞ்சுறான். கல்லு மாதிரி நிக்கிறா பாருங்களே?”
ஏதோ கடவுளே இறங்கி வந்து கெஞ்சியது போல் ஒருத்தி சொல்ல,
“ஆமாங்கக்கா, அந்தத் தம்பி செருப்ப எடுத்து, அது தலைலயே அடிச்சிக்கவும் நெஞ்சே படபடன்னு அடிச்சுக்கிச்சி. ஆனா பாருங்க, ராக்சஸி! நெடுமரம் கணக்கால நின்னா!. இவால்லாம் பொம்பளையே கிடையாது.”
“இந்த மாதிரி பொண்ணுங்க இருக்குறதுனாலத் தான் ஆம்பளைங்க வாழ்க்கையே சூனியமாப் போகுது.” என்றான் ஒருவன்.
“சரியாச் சொன்னிங்க. இதே இது எம்பொண்டாட்டியா இருந்தா! செவில்லயே நாலு போடு போட்டு, ‘வா டி… வந்து ஒழுங்கா பொம்பளையா லட்சனமா குடும்ப நடந்து டி…’ ன்னு தரதரன்னு இழுத்திட்டு போயிருப்பேன். இந்த மாதிரி கெஞ்சிட்டு இருக்க மாட்டேன். வரமாட்டேன்னு முரண்டு பிடிச்சா, கையக் கால இனிக்கி விட்டிருப்பேன். கொஞ்ச நாளாவது முடமா பிள்ளைய வச்சிட்டு கஷ்டப்படட்டும்னு விட்டிருப்பேன். அப்பத்தான் புருஷனோட அரும தெரியும் இவள்கள மாதிரி *** பொட்டக் கழுதைங்களுக்குத் தெரியும்.” என்று விக்ரமைப் பெரிய தியாக போல் பேச, கொதித்தது ரிதன்யாவிற்கு.
இவர்களுக்கெல்லாம் விக்ரமைப் பற்றி என்ன தெரியும்? அவனைச் சிறந்தவனாக சித்தரித்து என் வாழ்க்கை விமர்சிக்க இவர்கள் யார்? என்ற ஆவேசம் வந்தது. ஆனால் அதைக் காட்ட முடியாது.
வெளியில் நடந்த கலவரத்தைக் கவனித்த கடையின் உரிமையாளர், “என்னம்மா இது? கடை வாசல்ல வந்து உம்புருஷன் கத்தீட்டு இருக்கான்?”
“சாரி சார்… அவரு என்னோட ஹஸ்பெண்ட் இல்ல.” என்று சொல்லி தலை குனிந்து நின்றாள் பெண். உடல் மட்டுமல்ல மனமும் கூனித் தான் போனது, மற்றவர்களின் பேச்சால்.
“பொத்துனாப்புல வந்து பொத்துனாப்ல போறதா இருந்தா மட்டும் வேலைக்கி வாங்க. இந்த மாதிரி பஞ்சாயத்தெல்லாம் துணைக்கி கூட்டீட்டு வர்றதா இருந்தா! வராதீங்க.” என்று எச்சரித்து அனுப்பவும், அவளைக் காவலர்கள் விசாரணைக்கு அழைக்க வரவும் சரியாக இருந்தது.
பார்த்தார்கள். இது சரிப்பட்டு வராது என்று அவளின் சம்பள பாக்கியைத் தந்து அனுப்பி வைத்துவிட்டனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து இனியும் வீட்டில் தன் தந்தை தன்னை இருக்க விடப் போவதும் இல்லை என்ற உண்மை புரிந்தது. இன்றைய நிகழ்விற்குப் பின், விக்ரம், இனி தனக்குக் கிடைக்கும் வேலைகளை நிலைக்க விடப் போவது இல்லை என்ற உண்மை அவளைச் சுட்டது.
நாளை பள்ளியில் வைத்து இதே போல் விக்ரம் நடந்து கொண்டால்!! சரிகாவின் பெற்றோர்கள் விவாகரத்தான விடயம் அனைவருக்கும் தெரிந்து போகும். பிஞ்சு குழந்தையின் நெஞ்சைக் காயப்படுத்த, பலர் கூர் நகங்களுடன் காத்திருப்பர். சரிகாவின் மனம் அதைத் தாங்காது.
ஆதலால் தான் சுருதியின் உதவியை நாடினாள் ரிதன்யா.
புதிய இடம், புதிய மனிதன் என்று எல்லாம் புதிதாக இருந்தாலாவது மறக்க வேண்டியதை மறந்து புதிய வாழ்க்கை வாழலாம் என்று தோன்றியது.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!