Skip to content
Post Views: 2,001
அத்தியாயம் – 1
அதிகாலை இரண்டு மணி… அந்த பிரம்மாண்டமான மாளிகை நிலவொளியில் ஒரு வெள்ளை அரண்மனை போல ஜொலித்துக் கொண்டிருக்க, அதனை சுற்றிலும் அடர்ந்த மரங்களும், ஆங்காங்கே நவீன கண்காணிப்பு கேமராக்களும் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
அந்த கணம் அந்த மாளிகையின் பிரமாண்ட படிக்கட்டுகளிலிருந்து கம்பீரமாக இறங்கி வந்தான் ரன்வீர், சுமார் ஆறடி இரண்டு அங்குல உயரத்தில், இரும்புத் தூண்களைப் போன்ற அவனது கைகள், எந்நேரமும் எதற்கும் தயாராக இருக்கும் ஒரு வேட்டை மிருகத்தின் விழிப்புணர்வை அவனது உடல்மொழியில் காட்டியது…
Advertisement
கச்சிதமாகச் செதுக்கப்பட்ட தாடை, அடர்த்தியான கறுப்பு மீசை மற்றும் தாடி, அவனது முகத்திற்கு ஒரு முரட்டுத்தனமான அழகைத் தந்தன. அவனது கண்கள் அவை வெறும் கண்கள் அல்ல, எதிராளியின் அடுத்த அசைவைக் கணிக்கும் ரேடார்கள், அவன் அணிந்திருந்த கறுப்பு நிற சில்க் ஷர்ட், அவனது அகன்ற மார்பின் தசைக்கட்டுகளை எடுப்பாகக் காட்டியது….
அவன் வசிக்கும் அந்த மாளிகை, நகரத்தின் ஒதுக்குப்புறமாக ஒரு கோட்டை போல வீற்றிருந்தது, வெளியுலகிற்கு அது ‘ரன்வீர் எஸ்டேட்ஸ்’ ஆனால் உள்ளே நுழைந்தால் அது ஒரு நவீன காலத்து அரண்மனை.
விண்ணைத் தொடும் உயரமான கூரைகள், இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலைமதிப்பற்ற பளிங்குத் தரைகள், சுவர்களில் தொங்கும் பழங்காலத்து வாள்கள் மற்றும் நவீன ஓவியங்கள் என அந்த வீடே அவனது அதிகாரத்தைப் பறைசாற்றியது.
Advertisement
மாளிகையின் பிரம்மாண்டமான வரவேற்பறையில், ஒரு விலையுயர்ந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, ஒரு கோப்புடன் காத்திருந்தான் நிதின். அவன் எதிரே தான் ரன்வீரும் வந்து அமர்ந்தான்….
Advertisement
நிதின், ரன்வீரின் நிழல். அவனது பிஏ என்று உலகம் நினைத்தாலும், ரன்வீரின் ரகசியத் தொழிலின் மூளை இவன்தான், ரன்வீர் ஒரு செயலை செய்ய நினைத்தால், அதை சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவி முடித்துக் கொடுப்பது நிதினின் வேலை…
”ரன்வீர், இன்னைக்கு நைட்டு வர வேண்டிய அந்த கன்டெயினர்ல ஒரு சின்ன செக்யூரிட்டி இஸ்யூ, கஸ்டம்ஸ்ல ஒரு புது ஆபீஸர் வந்திருக்காராம், கொஞ்சம் நேர்மையானவர் போல தெரியுது,” என்றான் நிதின் கவலையுடன்.
ரன்வீர் மெதுவாக எழுந்து நின்றான், அவனது ஒவ்வொரு அடியும் அந்தப் பளிங்குத் தரையில் கணீரென்று ஒலிக்க, மெதுவாகத் தனது மேஜையின் ரகசிய டிராயரைத் திறந்தான், உள்ளே ஒரு கறுப்பு நிறத் துப்பாக்கி மின்னிட, அதை எடுத்து லாவகமாகச் சுழற்றித் தனது இடுப்பில் செருகிக்கொண்டவன்,..”நேர்மையானவங்களா? எனக்குப் பிடிச்சதே அவங்களத் தான் நிதின், ஏன்னா, அவங்களப் பணிய வைக்கிறதுல தான் ஒரு த்ரில் இருக்கு, அந்த ஆபீஸரோட ஃபைலை எடு… இன்னைக்கு நைட்டு அந்த கன்டெயினர் நம்ம குடோனுக்கு வந்தாகணும்,” என்றான் ரன்வீர். அவனது குரலில் இருந்த அந்த அதிகாரம் நிதினை ஒரு நிமிடம் பிரமிக்க வைத்தது…
Advertisement
வெளியுலகிற்கு ரன்வீர் ஒரு மிகப்பெரிய இம்போர்ட்-எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அதிபர், ஆனால் அந்தப் பெட்டிகளுக்குள் வரும் துப்பாக்கிகளும், தடை செய்யப்பட்ட மருந்துகளும் ரன்வீரின் இருண்ட உலகத்தின் சக்கரங்கள்…
”கார் ரெடி பண்ணு நிதின், அந்த ஆபீஸர்க்கு நேர்ல போய் ஒரு ‘ஹலோ’ சொல்லிட்டு வருவோம்,” என்று கூறிவிட்டு, தனது அரண்மனை போன்ற வீட்டிலிருந்து தனது நீண்ட கால்களை எடுத்து வைத்து கம்பீரமாக நடந்தான், அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த வாசனை திரவியத்தின் மணம் அந்த ஹால் முழுவதும் பரவியது…
அவன் வாசலை அடைய இருந்த கணம், மாளிகையின் கனமான தேக்கு மரக் கதவுகள் தானாகத் திறக்க, ரன்வீர் வெளியே வந்தான், நிலவொளி அவனது கூர்மையான முகத்தில் பட்டுத் தெறித்தது,
அந்த அரண்மனை போன்ற வீட்டின் இரும்புக் கதவுகள் மின்சார வேகத்தில் திறக்க, ரன்வீரின் கார் மின்னல் வேகத்தில் இருளுக்குள் மறைந்தது….
**************
துறைமுகத்தின் அந்தப் பகுதி இரவின் இருளில் மூழ்கியிருந்தது, அலைகளின் சத்தமும், தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த இயந்திரங்களின் இரைச்சலும் அந்த இடத்திற்கு ஒருவிதமான பயத்தை அளித்தன,
அப்போது சரியாக இரவு 2:30 மணி..
’ரன்வீர் எக்ஸ்போர்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான கன்டெய்னருக்கு முன்னால், ஒரு டார்ச் லைட்டின் வெளிச்சம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது, அந்த வெளிச்சத்திற்குச் சொந்தக்காரர் இளந்துடிப்பான கஸ்டம்ஸ் அதிகாரி அர்ஜுன்…
”சார், இது ரன்வீரோட சரக்கு, நாம இத செக் பண்ணா மேல இருந்து பிரஷர் வரும்,” என்று அர்ஜுனின் உதவியாளர் தயக்கத்துடன் கூறிட,..
”சட்டம் எல்லாருக்கும் பொதுவானது, இந்த கன்டெய்னர்ல ஏதோ தப்பா இருக்குன்னு என் மனசு சொல்லுது, இதத் திறங்க!” என்று அர்ஜுன் கட்டளையிட்டான்.
அவன் கன்டெய்னரின் பூட்டை உடைக்க முயன்ற அந்த நொடி, தூரத்தில் இரண்டு பிரகாசமான கார் ஹெட்லைட்கள் அந்த இடத்தையே வெளிச்சமாக்கி, ஒரு கறுப்பு நிற மெர்சிடிஸ் கார் டயர்கள் அலற அங்கே வந்து நின்றது…
கார் நின்ற வேகத்திலேயே கதவு திறக்க, முதலில் வெளியே வந்தது ரன்வீரின் அந்த விலையுயர்ந்த லெதர் ஷூக்கள் தான், அதைத் தொடர்ந்து, ஆறடி உயரத்து ஆளுமையுடன், இருளைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான் ரன்வீர், அவனுக்குப் பின்னால் நிழல் போல இறங்கினான் நிதின்…
ரன்வீர் மெதுவாக அர்ஜுனை நோக்கி வந்தான், அவனது ஒவ்வொரு அடியும் அர்ஜுனின் இதயத் துடிப்பை அதிகரித்தது, அர்ஜுனுக்கு மிக அருகில் வந்து ரன்வீர் நிற்க, இருவருக்கும் இடையில் சில அங்குல தூரம் தான், அர்ஜுன் நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது ரன்வீரின் அந்த ஆறடி உயரத்திற்கு ஈடு கொடுக்க…
”ரொம்ப நேரமா கஷ்டப்படுறீங்க போல…” ரன்வீரின் குரல் அந்த நள்ளிரவில் கணீரென்று ஒலித்தது. அவன் தனது வலது கையால் அர்ஜுனின் தோளில் இருந்த அதிகாரப்பூர்வமான முத்திரையை மெதுவாகத் தொட்டான்…
அதே சமயம், அவனது இடது கை சட்டையின் மறைவில் இருந்த அந்தத் துப்பாக்கியைத் தொட்டுச் சென்றது…
”மிஸ்டர் ரன்வீர், இது கவர்மெண்ட் டியூட்டி, இதத் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை,” அர்ஜுன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூற,.
ரன்வீர் ஒரு மெல்லிய புன்னகையை சிந்தினான், ஆனால் அந்தக் கண்களில் புன்னகை இல்லை, பயத்தை காட்டும் கூர்மை மட்டுமே இருந்தது….
“உரிமையைப் பத்திப் பேசாதீங்க ஆபீஸர், இந்த இடத்துல காத்து கூட நான் சொன்னா தான் வீசும், இந்த கன்டெய்னர் இங்கிருந்து இப்போ கிளம்பும், நீங்க உங்க வீட்டுக்குக் கிளம்புவீங்க, இது தான் இன்னைக்கு நடக்கப் போற டியூட்டி,” என்று கூறிவிட்டு அர்ஜுனின் காதருகே குனிந்து “உங்க உயிருக்கு நீங்க கொடுக்கிற விலை இவ்வளவு கம்மியா இருக்கக்கூடாது ஆபீஸர்!” என்று ரகசியமாக கூறினான்….
ரன்வீரின் அந்தப் வார்த்தைகள் அர்ஜுனின் முதுகுத்தண்டில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது, ரன்வீர் மெதுவாகத் தன் இடுப்பில் இருந்த அந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான், ஆனால் அதை அர்ஜுனை நோக்கி நீட்டவில்லை. மாறாக, அதன் முனையை அர்ஜுனின் சீருடையில் இருந்த அந்த அரசு முத்திரையின் மீது மெதுவாகத் தேய்த்து… ”இந்த சின்ன இரும்பு வில்லை தான் உங்களுக்கு இவ்வளவு தைரியத்தைத் தருதா அர்ஜுன்? இது வெறும் அடையாளம் தான் ஆனா என் கையில் இருக்கிறது அதிகாரம்!” ரன்வீரின் குரல் அந்த நள்ளிரவு அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது,…
”நீங்க… நீங்க என்ன மிரட்டுறீங்களா?” அர்ஜுன் குரல் தடுமாறி வர,.. ”மிரட்டல… எச்சரிக்கை!” என்ற ரன்வீர், சட்டென அர்ஜுனின் சட்டைக் காலரைப் பற்றித் தன் பக்கம் இழுத்தான், ஆறடி உயர ரன்வீரின் முன்னால் அர்ஜுன் ஒரு காகிதம் போலத் தெரிந்தான்…
”இப்போ நான் நினைச்சா இந்த இடத்துலயே உங்களை ஒன்றுமில்லாம ஆக்கிட முடியும், ஆனா எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, அந்த நேர்மை இருக்கு பாருங்க… அது ரொம்ப அபூர்வம். ஆனா அந்த நேர்மையால உங்க குடும்பத்துக்கு என்ன லாபம்? உங்க வீட்ல காத்துக்கிட்டு இருக்கிற உங்க அம்மா, தங்கை… அவங்க நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சிருக்கீங்களா?”
ரன்வீர் சொன்ன அந்தத் தகவல் அர்ஜுனை உறைய வைத்தது…
தனது குடும்பத்தைப் பற்றி ரன்வீருக்கு எப்படித் தெரியும்? அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நிதின் ஒரு டேப்லெட்டை எடுத்து அர்ஜுனிடம் காட்டினான், அதில் அர்ஜுனின் வீடு நேரலையில் தெரிந்தது, வீட்டின் வாசலில் ரன்வீரின் ஆட்கள் கறுப்பு உடையில் நின்றுகொண்டிருந்தனர்…
”இப்போ சொல்லுங்க ஆபீஸர்… இந்த ஒரு கன்டெய்னர் முக்கியமா? இல்ல உங்க குடும்பத்தோட நிம்மதி முக்கியமா?” ரன்வீர் மிக மென்மையாகக் கேட்டான், ஆனால் அந்தக் குரலில் இருந்த அழுத்தம் அர்ஜுனை நிலைகுலையச் செய்தது…
அர்ஜுனின் கையில் இருந்த டார்ச் லைட் மெல்லக் கீழே இறங்கியது, அவனது கண்கள் கலங்கின, அதிகாரத்திற்கும், அராஜகத்திற்கும் இடையிலான போராட்டத்தில் ரன்வீரின் அதிகாரமே வென்றது…
”வெரி குட்…” அவன் காலரை விட்டுவிட்டு, அவன் சீருடையைத் தட்டிவிட்டவ ரன்வீர்,
அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து, மிகவும் நிதானமான, ஆனால் அழுத்தமான குரலில்…
”நீங்க ஒரு உண்மையான நேர்மையான அதிகாரின்னு எனக்குத் தெரியும் அர்ஜுன், அதனாலதான் உங்களைக் காயப்படுத்தாம இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன், ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோங்க… இந்தச் சரக்கு இப்போ இங்கிருந்து வெளியில போறதுனால யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை, சொல்லப்போனா, இது போக வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்தா தான்… சில அப்பாவிங்களோட உயிர் தப்பும், சட்டத்தோட கண்ணுக்கு இது ‘இல்லீகல்’ ஆனா என்னோட கண்ணுக்கு இது ‘நீதி’!” அவன் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுன் திகைத்து நின்றான்…
ரன்வீர் ஒரு குற்றவாளியா அல்லது சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ரட்சகனா? என்ற கேள்வி அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது..
“நிதின், ஆபீஸருக்கு ஒரு காபி வாங்கித் தந்துட்டு, பத்திரமா அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடு, இனிமே அவர் நம்ம வழியில வரமாட்டார்.” என்று கூறிவிட்டு ரன்வீர் திரும்பித் தன் காருக்கு நடந்தான், அவனது ஒவ்வொரு அடியும் ஒரு பேரரசனைப் போல இருந்தது…
கார் ஸ்டார்ட் ஆகி அந்த இடத்தை விட்டு மெல்ல நகரத் தொடங்கியது, அதன் சிவப்பு நிற பின்விளக்குகள் இருட்டில் மறையும் வரை அர்ஜுன் சிலையென நின்றிருந்தான்…
அக்கணம் ஒரு குற்றவாளியை சந்தித்த உணர்வு அவனுக்கு ஏற்படவில்லை மாறாக, சட்டப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு பிரம்மாண்டமான ரகசியத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு வந்த மலைப்பு மட்டுமே மிஞ்சியது, ரன்வீர் பேசிய அந்த ‘நீதி’ என்ற வார்த்தை அர்ஜுனின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது…
error: Content is protected !!