Skip to content
Post Views: 5,203
ஹரிஹரன் ஆத்திரமும் ஆற்றாமையுமாக தன் வீட்டில் இருந்தான்.
“என்ன பண்ணி வச்சிருக்கீங்க நீங்க. அப்போ அவ பேசினது சரி அதை நாங்க செய்றோம் னு காட்டறீங்களா… நான் கோவப்பட்டதுக்கு அர்த்தமே இல்லாமல் பண்ணிட்டீங்களேம்மா”என்று ஆதங்கமாய் பேசியவன் “என் மாமியார் வீட்டில் இனி நான் தலை நிமிர்ந்து போய் வர முடியுமா”என்றான் எரிச்சலாக.
Advertisement
“அதை செய்ய வச்சது அவ தானே. அதனால தானே என் மகளுக்கு எந்த வரனும் அமைய மாட்டேங்குது”என்று ஹரியின் அக்கா அழ
Advertisement
Advertisement
“உனக்கு அறிவு எதுவும் இருக்கா இல்லையா… பத்தொன்பது வயசு பொண்ணுக்கு எதுக்கு கல்யாணம். அவ இன்னும் யூஜியே முடிக்கலை. அதுக்குள்ள அவளை குழப்பி படிப்பை கெடுத்த வேலையை சிறப்பா செஞ்சு இருக்கீங்க ரெண்டு பேரும். “என்றவன் “நீ சரியா இருந்திருந்தா இப்போ இது தேவையா நிலா. உன் வாய் சரி கிடையாது அதுக்கு தான் இப்போ அனுபவிக்கிற…”என்றான் கோபத்துடன்.
Advertisement
“சாரி”என்று அவள் தலைகுனிய ஆழியன் தான் ஹரிஹரனிடம் பேசினான்.
“பார்த்துக்கோங்க ஹரி. தப்பு செய்யாதவங்க யாரும் கிடையாது. மன்னிச்சு விடுங்க. இனிமே ஒழுங்கா இருப்பான்னு நம்புவோம். நீங்க எதுவா இருந்தாலும் எனக்கு பேசுங்க”என்று அவன் கையைப் பிடித்துக் கொள்ள
“தப்பு என் மேலயும் தான் மச்சான். நானும் கோவப்பட்டு விட்டு இருக்க கூடாது. அவ பேசினது சரியில்லை னு சொல்லி புரிய வச்சிருக்கணும்”என்றவன் “நிலாவையும் என் கூட சிங்கப்பூர் அழைச்சுட்டு போறேன் மச்சான்”என்றான்.
“என்ன திடீர்னு இந்த பிரச்சினைக்காகவா?”என்றதும்
“இல்லை இதுக்காகனு இல்லை. நவ்தீப்புக்கு அங்கே ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் எல்லாம் செட் ஆகிடுச்சு. அங்கே எனக்கும் வேலை செட் ஆகிடுச்சு. பையன் தனியா இருக்க முடியாது ல்ல”என்று சொல்ல
“சரி பத்திரம் அடிக்கடி பேசுங்க. லீவ் கிடைக்கும் போது வந்துட்டு போங்க”என்ற ஆழியன் ஹரிஹரன் அம்மாவிடம் “உங்க பொண்ணா இருந்தா கண்டிக்க மாட்டீங்களா அத்தை. அது போல கண்டிச்சு இருக்கலாமே இந்த விபரீதமான பேச்சு எல்லாம் உங்க பேத்தியையும் தானே த்த பாதிக்கும்”என்றான் தன்மையாக.
“எய்யா… நான் சொல்லி இருக்க மாட்டேன்னு நினைக்கிறியா ஒரு மாமியாரா என்ன சொல்லணுமோ அதை சொல்லத் தான் செஞ்சேன். உன் தங்கச்சி கேட்கலையே”என்றவர் “செரிப்பா நீ சொல்ற நான் கேட்டுக்கிறேன். இனி இந்த பேச்சோ பிரச்சினையோ வராம பாத்துக்கிறேன் எங்க பக்கம் இனி பிரச்சினை வராது”என்றார் அவனிடம்.
“அவங்க வெளிநாடு போறதில்”என்று ஆழியன் நிறுத்த
“என் மகன் குடும்பமா இருக்கிறது எனக்கும் நிம்மதி தானேப்பா.எனக்கு இங்கே என் மக இருக்கா பாத்துக்குவா. அவங்க புத்தியா பொழைச்சா போதும் ப்பா”என்று நிறுத்திக் கொண்டார். அநாவசியமாக எதுவும் பேசவில்லை.
“ரொம்ப சந்தோஷம் ம்மா”என்று தேசிகனும் கையெடுத்துக் கும்பிட “ஏன் ண்ணே விடுங்க”என்றார் ஹரிஹரனின் அம்மா.
ஆழியன், தேசிகன் இருவர் மட்டுமே நிலாவை ஹரிஹரன் வீட்டில் விட வந்திருந்தனர். வளர்மதி தானும் வருகிறேன் என்றதற்கு தந்தை மகன் இருவருமே மறுத்து விட்டனர்.
“சரிங்க த்தை கிளம்பறோம் பார்த்துக்கோங்க”என்றவன் தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹரிஹரனிடம் சொல்லி விட்டுக் கிளம்ப நிலா ஓடி வந்து அவனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“நிம்மதியா இரு”என்றவன் வேறெதுவும் பேசவில்லை.
மன்னிப்பு கேட்க வேண்டும் அது இது என்று எதுவும் பேசவில்லை ஆழியன். அதனை நீரதியே மறுத்து விட்டிருந்தாள்.
“அவ மன்னிப்பு கேட்டு தான் எனக்கு எதுவும் நிறையணும்னு இல்லை. உங்க கூடப் பிறந்தவ ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும் அதை ஒதுக்கி வச்சுட்டு போய் விட்டுட்டு வாங்க. அவ்வளவு தான்.அவளா உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டாலும் சரி இல்லை எதுவும் நடக்காத மாதிரி இருந்தாலும் சரி நான் என் எல்லையில் நிற்கிறேன் எனக்கு தேவை அவங்க மன்னிப்பு இல்லை.”என்று நிறுத்த ஆழியன் கண்டு கொண்டான் அவள் மனதை.
“நீ ஏன் டி இப்படி இருக்க”என்று கேட்டு வைக்க
“வேறெப்படி இருப்பாங்க… எந்த பிரச்சினை வந்தாலும் அண்ணனா போய் நிற்க வேண்டாம் னு சொல்லணுமா நான். போங்க சார்… இதெல்லாம் சகஜம்”என்று சொல்லி விட்டாள்.
“ரதி”என்றவனை “போங்க போங்க ரதி ரதினே மயக்கிடறது”என்று அனுப்பி வைத்தாள் நிலாவோடு
வளர்மதி தானும் வருவேன் என்றதற்கு “அம்மா வந்தா நான் வரலை நீங்களே பேசி மகளை விட்டுட்டு வாங்க”என்றான் பிடிவாதமாக.
“வளரு நீ அமைதியா இரு. அதான் எல்லாம் சரி ஆகிடுச்சே”என்றவர் “நிலா கிளம்பு”என்று அழைத்துச் சென்றார்.
நிலா அமைதியாக கிளம்பி விட்டாள். தன் கணவனோடு சேர்ந்து இருந்தால் போதும் என்று இருந்தது அவளுக்கு. நீரதியிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாள். நீரதி தலையசைத்ததோடு சரி. மன்னித்து விட்டேன் என்றோ இனி சகஜமாக இருப்போம் என்றோ அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
பேசிவிட்ட வார்த்தைகளின் வீரியம் மனதில் பதிந்த வடுவாய் நிற்க அங்கே மன்னிப்பும் மதிப்பிழந்து தான் நின்றது.
அவரவர் எல்லையில் நிற்பதே ஆகச் சிறந்த முடிவு.
***********
காலத்தின் கால்களில் கட்டி இருக்கும் சக்கரம் தன்னிச்சையாக உருண்டோடி நாட்களை நகர்த்தி இருக்க வயோதிகமோ இல்லை மகளின் வாழ்வு வெளிநாட்டில் செட்டில் ஆன நிறைவோ வளர்மதியை பெரிதாக பேசவிடாமல் தடுத்திருந்தது.
தரங்கினி வழக்கம் போல சலுகை எடுக்க முயன்றாலும் அவள் குணம் அறிந்து சாதுர்யமாக நடக்கிறார். தேசிகனும் மகன்கள் தொழிலை கவனித்துக் கொள்வதால் ஆன்மிகச் சுற்றுலாவில் கவனம் வைத்து மனைவியையும் உடன் அழைத்துச் சென்று விடுகிறார்.
பெரிதான சண்டை சச்சரவு இல்லாமல் எப்போதாவது நடக்கும் சச்சரவு உரசல் எல்லாமும் தேசிகன் குடும்பத்திலும் இருக்கத் தான் செய்தது. என்ன ஒன்று முன்பு போல எல்லா சுமையும் நீரதி பக்கம் சாயாமல் அவரவர் அவர்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்கின்றனர். ஏதாவது விசேஷம் நடந்தாலும் தலைமையாய் நின்று நிர்வகிப்பது நீரதி என்றாலும் வேலைகள் அனைவருக்கும் சமமாகவே இருக்கும்.
“இந்த அட்மினிஸ்ட்ரேஷன் முன்னாடியே இருந்திருந்தால் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டல்ல ரதி”என்றவனிடம்
“நிர்வாக திறமை எல்லாம் எனக்குள்ள அப்பவும் இருக்க தான் செஞ்சது. அப்போ ஹஸ்னு ஒருத்தர்”எனும் போதே அவள் வாயை அடைத்தவன்”தெரியாம பேசிட்டேன் ஓனரம்மா மன்னிச்சிடுங்க”என்றதில் இருந்து எப்போதெல்லாம் விசேஷம் நடக்கிறதோ அப்போதெல்லாம் இதைச் சொல்லியே ஒரு வழியாக்கினாள் அவனின் ரதி.
“என்னடி ரதி”பாவமாய் பரிதாபமாக நின்றால் மட்டும் தான் பிழைத்துப் போ என்று விடுகிறாள்.
ஒவ்வொரு தீபாவளி பொங்கலும் குடும்பமாக சேர்ந்து தான் கொண்டாடுகின்றனர். நிலாவின் வருகை இரு வருடத்திற்கு ஒரு முறை என்று தான் இருக்கிறது. வெளிநாட்டு வாழ்வியலோ அல்லது கணவனோடு இயைந்த வாழ்வோ நிலாவிற்கு அண்ணன்கள் பற்றி யோசிக்கவே இப்போதெல்லாம் நேரம் இல்லாமல் போனது.
“நீரா இந்த மோர்க்குழம்பு எப்படி வைக்கிறது”என்றபடி வந்தாள் தரங்கினி.
சோம்பேறித்தனமும் அவளும் பிரிக்க முடியாத ஒரு விஷயம். இன்றைய மெனு மோர்க்குழம்பு என்று தெரிந்து தான் அங்கே அவள் வந்ததே.
“பெரிம்மா நான் சொல்லவா”என்று ஸ்வர்ணிகா வர
“உங்கம்மா வைக்கிற டேஸ்ட் வரவே இல்லடி வரு”என்றதும் நீரதிக்கு சிரிப்பு தான் வந்தது.
“இன்னைக்கு அந்த குழம்பு தான் எடுத்துட்டு போ தரு. மாமாக்கு பிடிக்கும் ல”என்று பாத்திரத்தில் ஊற்றி கொடுக்க
“எங்கேயோ வாசனை வந்தது நீரா. அதான் இன்னைக்கு வைக்க நினைச்சு உன் கிட்ட கேட்க வந்தேன். பாரு நீ தான் வச்சிருக்க”என்று அசடு வழிய வாங்கிக் கொண்டவள் “வரு அங்கே வர்றியா இன்னிக்கு உங்க பெரியப்பா உனக்கு பிடிச்ச காடை ரோஸ்ட் வாங்கிட்டு வர்றேன்னாரு”என்று அவளையும் அழைத்துச் சென்றாள். பிள்ளைகளை சமமாய் பார்ப்பதில் எல்லாம் தரங்கினியை குறை சொல்ல முடியாது. ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று இருந்தாலும் அமுதனின் அதிரடி நடவடிக்கையில் பிள்ளைகளை பிரித்து பார்ப்பதில்லை.
உறவுக்குள் பிரிவென்பது வந்து விட்டால் அது குடும்பத்திற்கு அழகாகாதே… அவரவர் கூட்டினுள் இருந்தாலும் அன்பை விதைத்து அரவணைத்துக் கொண்டனர்.
மறுநாள் தீபாவளி வர முதல் நாளே பலகாரம் செய்ய அமர்ந்திருந்தனர் மூன்று மருமகள்களும்.
“இதென்ன முறுக்கு முறுக்கிட்டு நிக்குது அண்ணி நீங்க சுட்டதா”தீபன் நொட்டை சொல்லிக் கொண்டே எடுக்கப் போனான்.
“சாமி கும்பிடாம எடுத்த பிச்சுப்புடுவேன் தீபு”என்று வளர்மதி மிரட்ட
“ம்மா சின்ன பிள்ளையில் எடுத்தா தான் மிரட்டின… இப்பவும் அதையே செய்ற”என்று அலுத்துக் கொண்டே பிள்ளைகளை பார்க்க, அவர்கள் கர்ம சிரத்தையுடன் பவ்யாவோடு இணைந்து மிக்சருக்கு கறிவேப்பிலை உருவிக் கொடுத்தனர்.
வருணேஷ் வாய் மேல் விரலை வைத்தபடி அமர்ந்திருக்க
“அவ்வளவு நல்லவனாடா நீ. ஃபிங்கர் ஆன் தி லிப்ஸ் னு இவ்வளவு அமைதியா இருக்க”என்றபடி வந்தமர்ந்தான் ஆழியன்.
“மாமா அவன் இப்போ தான் நீரு அக்கா கிட்ட டோஸ் வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கான்”என்றாள் பவ்யா.
“ஏன் ரதி பிள்ளைய திட்டின?”என்றதில் வருணேஷ் ஹ்ஹேங் என்று அழுகையை ஆரம்பிக்க நீரதி போட்ட அதட்டலில் மீண்டும் கப்சிப் அவன்.
“பேசாம இருக்க மாட்டீங்க”என்றவள் “நெருப்பு கிட்டவே வந்து குதிக்கிறான் தைய்ய தக்கானு அதான் ரெண்டு போட்டேன்”என்றதும் கையைத் திருப்பி வருணேஷ் காட்டி “அங்க அடி சித்தப்பா”என்றான் மெல்லிய குரலில்
“அவ என்னை தூக்கி அடிச்சுடுவாடா அங்க பாரு எப்படி முறைக்கிறானு”என்று முணுமுணுக்க
“நீ ரொம்ப பயந்தவன் தான் டா “என்றபடி அவனருகில் அமர்ந்தான் அமுதன்.
“அதைச் சொல்லுங்க மாமா. என்னவோ நான் கொடுமைப்படுத்தி வைக்கிற மாதிரியே பில்டப் தருவாரு”என்று நீரதியும் சொல்ல
“எப்படி இருந்த எங்கண்ணி.!!”என்று தீபன் சிரிக்க, குடும்பம் மொத்தமும் சிரித்தது.
ஆழியனின் நொடிக்கும் குறைவான காதல் பார்வையை சமீபமாக கண்டு கொண்டது போல இன்றும் கண்டு கொண்டாள் நீரதி. அது அவளுக்கான அவள் மட்டும் உணரும் பிரத்யேக பார்வை.
எத்தனை இடர்கள் வந்தாலும் கடலையும் அலையையும் பிரிக்க முடியாது என்பது போல ஆழியன் நீரதியின் காதல் வாழ்வு அமைதியாக அமரிக்கையாக சென்று கொண்டு தான் இருந்தது.
காதல் எனும் பேராழியில் வேண்டி விரும்பி நீந்துகையில் சுழலும் இருக்கும் சுகமும் இருக்கும். சுழல்தனில் சுழன்றாலும் சுகமாய் இதமாய் ஒரு பயணம்.
ஆழியன் நீரதி கானலெனும் காதலில் பயணித்து வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.
………..நீராழி நிறைந்தது……..
error: Content is protected !!