Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 7

அத்தியாயம் 7

அம்மாவுடன் பேசிய பிறகு மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் விலகியது போல இருந்தது கார்த்திகேயனுக்கு.



Advertisement

விக்கி அவன் நண்பர்களை பார்த்துவிட்டு வந்ததும், இவனே சென்று தம்பியிடம் பேசினான்.

“உனக்கு நல்லதுன்னு தான் யோசிச்சேன். அண்ணா மேலே கோவமா?”

Advertisement

Advertisement

“கொஞ்சம் கோவம்தான்.. ஆனா பரவாயில்ல ண்ணா.. எனக்கு இன்ஜினியரிங் வேணாம் ப்ளீஸ்..”

“சரி வேற என்ன யோசிச்சு வச்சிருக்க சொல்லு”

Advertisement

“பிபிஏ படிக்கவா? அது முடிச்சு எம்பிஏ படிக்கலாம்ன்னு எங்க மிஸ் சொன்னாங்க”

தம்பி விளையாட்டு பிள்ளையாக இல்லை, அவனும் விசாரித்து தான் முடிவு செய்திருக்கிறான் என்று அவன் பதிலிலே தெரிந்தது.

“நல்ல ஆப்ஷனா தான் தெரியுது, நானும் யோசிச்சு சொல்றேன். நீ எந்த எந்த காலேஜ்ல இருக்குன்னு பாரு. அப்ளிகேஷன் பார்ம் வாங்கணும்.”

“சரிண்ணா” என்றான் உற்சாகமாகவே.

மகன்களின் பேச்சை உள்ளிருந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தார் ரத்னா. மெல்லிய புன்னகை அவர் உதடுகளில் தவழ்ந்தது.

இப்பொழுது ‘கண்ணன் பணியாரம் ஸ்டால்’லில்  இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார் ரத்னா. காலையில் வருபவர் மாவை அரைப்பது, கருப்பட்டி தூள் செய்வது. பாகு காய்ச்சுவது, வெங்காயம் தக்காளி எல்லாம் நறுக்கி வைத்து என தயார் செய்துவிட்டு செல்வார். மாலையில் வருபரை கொண்டு, மீதம்  உள்ள வேலைகளை கவனித்து என்று ரத்னா வேலைகளை அழகாக திட்டமிட்டுக் கொண்டார்.

அவரது நாட்கள் சுறுசுறுப்பாக செல்கிறது.

மறுநாள் கல்லுரிக்கு செல்வதற்கு முன், பல தடவை அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டான் கார்த்தி.

“விடு கார்த்தி, இனி மனசுல ஒன்னை வச்சுக்கிட்டு கோவத்தை வேற எதுலயும் காட்ட கூடாது சரியா.. உங்க மேம் கிட்ட போய் பேசு. அவங்க ஒரு விஷயம் சொன்னாங்கனு அவங்க கிட்ட முகத்தை காட்டலாமா? அவங்க உனக்கு நிறைய விஷயத்துல வழிகாட்டி உதவி பண்றாங்க தானே? பக்குவமா, எங்க அம்மாக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லைன்னு எடுத்து சொல்லு. வேணும்னா அவங்க கூட இருக்கிறப்ப போன் போடு, நான் பேசுறேன்”

“சரிம்மா..” என்று புறப்பட்டு சென்றான்.

அம்மா கூறிய பிறகே அவனுக்கு அவன் தவறு புரிந்தது. மேம் அவருக்கு தோன்றியதை கூறியதற்காக அவர் மீது கோவம் கொண்டது நியாமற்றதாக தோன்றியது. யோசித்துக்கொண்டே பஸ் ஸ்டாப் நோக்கி சென்றான்.

அன்று வகுப்பு முடிந்ததும் சென்று நந்திதா மேம்மை சந்தித்தான்.

“என்ன சார் கோவம் குறைஞ்சிடுச்சு போலவே” என்றார் அவர் இவனை பார்த்ததும் சிரித்துக்கொண்டே.

“சாரி மேம். நீங்க சொன்ன விஷயம் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அதான் அப்படி ரியாக்ட் பண்ணிட்டேன்” என்றான் மெல்லிய குரலில்.

“இட்ஸ் ஓகே கார்த்திகேயன், எனக்கு புரியது”

அதன்பிறகு மேம் பாடம் சம்பந்தமாக பேச்சை மாற்றி விட்டார்.

கடைசியில் மீண்டும் கார்த்தியே அந்த பேச்சை தொடங்கினான்.

“மேம் நீங்க சொன்னதை பத்தி எங்க அம்மா கிட்ட சொன்னேன்”

“ஓ..நிஜமா சொன்னியா? பரவாயில்லயே, நீ சொல்லி இருக்க மாட்டேன்னு நினைச்சேன் “

“அது வந்து தம்பிய எந்த காலேஜ்ல சேர்க்கலாம்னு வீட்ல பேச்சு வந்துச்சு.. அப்ப அம்மா உங்க கிட்ட கருத்து கேட்க சொன்னாங்க.. அப்ப தான் நீங்க சொன்னதையும் நான் கோபமா இருக்கிறதையும் சொன்னேன்” என்றான் எதையும் மறைக்காமல்.

“சரி.. என்ன சொன்னாங்க உங்க அம்மா”

“உங்க கிட்ட கோபப்பட்டது தப்புன்னு சொன்னாங்க. அம்மாக்கு நல்லதுன்னு நினைச்சு தான் நீங்க சொல்லி இருக்கீங்க. ஆனா யார் என்ன சொன்னாலும் அவங்களை பத்தி எனக்கு தெரியாதான்னு வருத்தப்பட்டாங்க. அவங்களுக்கு இன்னொரு கல்யாணத்துல எல்லாம் இஷ்டமே இல்லை மேம். நான் அன்னிக்கே இதை சொல்லாம, உங்க கிட்ட கோபமா நடந்துக்கிட்டது ரொம்பவே தப்பு. அதுக்காக சாரி மேம்”

“சரி கார்த்திகேயன். ஒரு வேலை உங்க அம்மாக்கு விருப்பம்ன்னா உன் கருத்து என்ன? இந்த காலத்து பசங்க மனநிலையையும் நான் தெரிஞ்சுக்கிறேன். சொல்லு”

“அது வந்து.. அது வந்து.. இதே வேற ஒருதருக்கோ, இல்லை வேற வீட்லயோ நடந்தா எனக்கு அது சரின்னு தோண்றி இருக்கலாம். ஆனா எங்க வீட்ல எங்க அம்மாக்குன்னு வரும்போது என்னால அதை ஏத்துக்க முடியும்னு தோணலை.”

“பெண்கள் மறுமணம் செஞ்சுக்கிறது தப்புன்னு சொல்றியா?”

“அப்படி இல்ல.. அது ஒவ்வொருத்தரை பொறுத்தது. எங்களுக்கு அது சரி வராது.

நாங்க வளர்ந்த பசங்க இரண்டுபேர் இருக்கோம். நாங்க அம்மாவை நல்லா பார்த்துப்போம். அது மட்டுமில்லாமல் எங்க அப்பா அம்மா காதலை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அப்படி ஒரு ஆத்மார்த்தமான ஜோடி அவங்க. கண்டிப்பா எங்க அப்பா இடத்துல இன்னொருத்தரை எங்க அம்மாவாலையும் ஏத்துக்க முடியாது, என்னாலயும் ஒத்துக்க முடியாது”

 

“இப்பவும் என் கருத்து, உங்க அம்மாக்கு வயசும் வாழ்க்கையும் இன்னும் இருக்கு. ஒரு கம்பானியன்ஷிப் தப்பு இல்லைன்றது தான். உனக்கும் ஒரு நாள் இது தோணலாம். அப்ப காலம் கடந்து போயிருக்கும். நீ இவ்வளவு பொறுமையா யோசிக்கிறதே ஒரு நல்ல விஷயம் தான். உடனே வேணும் வேண்டாம்னு முடிவு செய்யாத, யோசி.. அப்படி உனக்கு சரின்னு பட்டுச்சுச்சுன்னா, உங்க அம்மாவையும் யோசிக்க வை.. 

எனக்கு அம்பத்தியாறு வயசு ஆகுது. உங்க அம்மாக்கு கிட்டத்தட்ட என் பொண்ணு வயசுதான். ஒரு அக்கரையில் மட்டும் தான் சொன்னேன்.

இனிமேல் நான் இதை பத்தி பேச மாட்டேன் “

“சரி மேம். அப்புறம் என் தம்பி” என்று விக்கியை பற்றி பேசினான்.

“நான் எப்பவுமே சொல்றது தான். உங்க அம்மா சரியாத்தான் யோசிச்சிருக்காங்க. மேத்ஸ் வராம இன்ஜினியரிங் கஷ்டம் தானே? உனக்கே தெரியும்ல?

பிபிஏ நல்ல ஆப்ஷன். நல்ல காலேஜ்ல படிச்சா நிறைய ஸ்கோப் இருக்கும்.”

“சரி மேம்” என்று மேலும் சிறிது நேரம் பேசிவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.

அந்த வாரமே அவர்கள் ஊரில் உள்ள சிறந்த கலை கல்லூரியில் விக்னேஷை பிபிஏ சேர்த்தனர்.  

விக்கியின் அட்மிஷன் நல்லபடியாக முடிந்தால் அவர்கள் வீட்டின் அருகில் உள்ள  முருகனுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வதாக வேண்டி இருந்தார் ரத்னா.

ஞாயிற்று கிழமை, அம்மாவும் மகன்களும் காலை ஆறுமணிக்கு எல்லாம் இவர்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

“இன்னிக்கு இன்னொரு அபிஷேகம் இருக்கும்மா. ரெண்டையும் ஒன்னாவே செஞ்சிடலாம். ஒரு அஞ்சு நிமிஷம் உட்காருங்க அவங்களும் வந்துடட்டும்” என்றார் பூசாரி.

அன்று எழிலரசியின் குடும்பம் தான் அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தார்கள். 

அன்று அனுராதாவின் பிறந்தநாள்.

அனுராதாவிற்கு மிகவும் பிடித்தமான முருகன் கோவிலுக்கு அனைவரும் செல்வோம் என்று கூறியது எழிலரசி தான்.

சிறு வயதில் இருந்தே எழிலரசி அடிக்கடி அனுராதாவுடன் இங்கே வந்து செல்வாள். அத்தையின் மறைவுக்கு பிறகு இன்று தான் வருகிறாள். எவ்வளவு முயற்சித்தாலும் கண்கள் கலங்குவதை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“பிறப்பும் இறப்பும் நம்ம கையில் இல்ல தங்கம். அத்தை இனி நம்மகூட நினைவாகவும் உணர்வாகவும் தான் கலந்து இருப்பாங்க. இனி அவங்களை நினைத்து கலங்காமல் இருக்கணும் டா. நீயே அந்த முருகன் கிட்ட, அவங்க ஆத்மா சாந்தி அடையணும்னு வேண்டிக்கோ சரியா” என்றார் ரேவதி மகளிடம்.

இவர்களும் பேசிக்கொண்டே சன்னதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

அமைதியாக அனைவரும் கண்குளிர அந்த ஆறுமுகனின் அபிஷேகத்தை கண்டு களித்தனர்.

பின் அலங்காரம் செய்வதற்காக திரை இடப்பட்டது. அப்பொழுது ரத்னாவை பார்த்த ரேவதி,

“வணக்கம்ங்க.. எப்படி இருக்கீங்க? நீங்களும் அபிஷேகத்துக்கு கொடுத்திருந்தீங்களா?” என்றார் உற்சாகமாக.

“ஆமாங்க.. சின்னவனை காலேஜ் சேர்த்தாச்சு. அதான் அபிஷேகத்துக்கு வேண்டிக்கிட்டு இருந்தேன். உங்க வீடும் இங்க பக்கத்துல தானா?”

“இல்ல இல்ல, எங்க வீடு கொஞ்சம் தூரம். ராஜாஜி நகர். இவங்க ரெண்டு பேரும் என் ஓர்படிகள். இது பெரிய அக்கா சாந்தி, இவங்க சின்ன அக்கா மீனா” என்று பக்கத்தில் இருந்த இருவரையும் ரத்னாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள் குடும்பத்தை பார்த்து ஏற்கனவே ரத்னாவும் பசங்களும் கொஞ்சம் மிரண்டு தான் போயிருந்தார்கள்.

“என்னம்மா இத்தனை பேரும் ஒரே குடும்பமா?” என்று சற்று முன்பு தான் விக்கி ரத்னாவின் காதிற்குள் கிசுகிசுப்பாக கேட்டிருந்தான்.

“அக்கா, நான் அன்னிக்கு சொன்னேன் இல்ல, இவங்க தான் காமாட்சி அம்மா கூட நகை வாங்க வந்தவங்க. இது அவங்க பசங்க” என்று இவர்களையும் அறிமுக படுத்தி வைத்தார்.

ஆண்கள் எல்லாம் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தார்.

“அதோ அந்த பச்சை சட்டை தான் என் வீட்டு காரர். மஞ்சள் சட்டை அவரோட பெரிய அண்ணா, ப்ளூ சட்டை ரெண்டாவது அண்ணா, அப்புறம் அந்த கோடு போட்ட சட்டை எங்க நாத்தனார் வீட்டுக்காரர்” என்று இங்கே இருந்தே காட்டினார் ரேவதி.

“எப்பவும் இதே கலர் சட்டை தான் போடுவாங்களா ஆண்ட்டி?” என்றான் விக்னேஷ் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு.

கொல்லென்று சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் எழில், தமிழ், குகன், பாலமுருகன் நால்வரும் இருந்தனர்.

“எங்க சித்தி ஸ்டைல் அப்படி ப்ரோ, இதே ஒரே மாதிரி கலர்ல சட்டை போட்டிட்டுருந்தாங்கன்னா எப்படி அறிமுகப் படுத்துவங்க தெரியுமா?” என்றான் பாலமுருகன். 

“எப்படி?” என்றனர் ரத்னா கார்த்தி விக்கி மூவரும் கோரஸாக.

“அதோ, முன் தலை சொட்டை பெரியவரு, நடு மண்டை சொட்டை இரண்டாவது, சைடு சொட்டை சின்னவருன்னு..”

அனைவரும் சிரித்துவிட்டனர்.

“அப்புறம் அந்த மூனு பேருக்கும் நடுவுல, எந்த பக்கமும் போக முடியாம பாவமா நிற்கிறது எங்க மாமா” என்றாள் தமிழரசி.

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு தான் இருந்தனர் ஆண்களும். அனைவர் முகத்திலும் மென்னகையே.

ரேவதி உர்ரென்று பிள்ளைகளை பார்த்து நின்றார்.

சாந்தி  பிள்ளைகளை, “இது என் பையன் பாலமுருகன், பொண்ணுக்கு இப்ப தான் கல்யாணம் ஆச்சு, இது மீனா பையன் குகன், அப்புறம் இவங்க ரெண்டு பேரும் எழிலரசி, தமிழரசி ரேவதி பொண்ணுங்க” என்று அறிமுகப் படுத்தினார்.

“உங்க எல்லாரையும் பார்த்ததுல ரொம்ப சந்தோசம். இப்படி எல்லாரும் சேர்ந்து இருக்கிறதை பார்க்கவே ஆசையா இருக்கு” என்றார் ரத்னா உள்ளார்ந்து.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தீபராதனை தயாராகவே அனைவரும்  மீண்டும் முருகனிடம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.

பூஜை நல்லபடியாக முடியவும் அனைவரும் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டு அங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். 

“எங்க வீடு இங்க பக்கத்துல தான். எல்லாரும் வாங்களேன்” என்றார் ரத்னா.

உடனே ரேவதி “வர்றோமே” என்றார் வேகமாக.

கார்த்தியும் விக்கியும் ‘ஆங்’  என்று விழித்தனர். ரத்னாவுமே ஒரு வினாடி விழித்து பின் சுதாரித்து “வாங்க வாங்க” என்றார்.

“ஏன் சித்தி அந்த ஆண்ட்டி ஒரு பேச்சுக்கு வாங்கன்னு சொன்னா, உடனே சரின்னு சொல்லிட்டீங்க.. நம்ம குடும்ப பாப்புலேஷன் பார்த்து அவங்களே மிரண்டு போய் நிற்குறாங்க..” என்றான் குகன்.

“அப்படி எல்லாம் இல்ல தம்பி. எல்லாருமே வாங்க.. எங்க வீட்டுக்கு இவ்வளவு சொந்தகாரங்க எல்லாம் வந்ததே இல்லை.. எனக்கு எங்க வீட்டுக்கு விருந்தாளிங்க நிறைய பேர் வரணும்னு ரொம்ப  ஆசை. அது  தான் டக்குன்னு இவங்க வர்றேன்னு சொல்லவும் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை.” என்றார் கொஞ்சம் உணர்ச்சிவசமாக.

“அண்ணா நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்றார் சண்முகத்தை பார்த்து.

அந்த அண்ணா என்ற சொல் ஏற்கனவே அனுராதாவின் நினைவில் இருந்தவர்களை இளக்கியது.

“தீடீர்னு வந்தா உங்களுக்கு சிரமமா இருக்கும் நாகரத்னா. இன்னொரு தடவை முன்னவே சொல்லிட்டு வர்றோம்” என்றார் சாந்தி வீட்டிற்கு பெரியவராக.

“அது எல்லாம் ஒன்னும் சிரமம் இல்லை. வந்து ஒரு கப் காஃபி சாப்பிட்டு போங்களேன் ப்ளீஸ்” என்றார் ரத்னா விடாமல்.

இப்பொழுது போகாமலும் இருக்க முடியாது. என்ன செய்வது என்பதை போல பெண்கள் ஆண்களை பார்த்தனர்.

அவர்களும் சரி என்று தலையை ஆட்டினர்.

 

“அம்மா நீங்களும் விக்கியும் முன்னாடி போங்க. நான் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்” என்றான் கார்த்தி.

ரத்னா, அனைவரயும் மீண்டும் ஒரு முறை தனி தனியே அழைத்துவிட்டு முன்னே சென்றார். செல்லும்பொழுதே விக்கியை பால் வாங்கி வருமாறு அனுப்பிவிட்டு வேகமாக வீட்டுக்கு விரைந்தார். சரியாக அந்நேரம் வேலை செய்யும் அம்மாவும் வந்துவிடவே, உற்சாகமாகவே களத்தில் இறங்கினார் ரத்தனா.

இவர்கள் இரண்டு கார்களில் வந்திருந்தார்கள். “கார்லயே போய்டாலாமாப்பா”  என்றார் சரவணன் கார்த்தியிடம்.

“இல்ல சார், அங்க பார்க்கிங் கொஞ்சம் கஷ்டம். நடந்தே போய்டலாம்.. கொஞ்ச தூரம் தான் வாங்க”, என்று அனைவரையம் மெதுவாக அழைத்து சென்றான்.

“சரியான பொறுப்பு பெரியசாமியா இருப்பான் போலவே?” என்றாள் எழிலரசி தன்னுடன் வந்த சகோதரர்களிடம்.

“ஆமாம் எழிலு எனக்கும் அப்படி தான் தோணுது.. வீட்டுக்கு போய் இந்த பையனை பார்த்து பொறுப்பு என்னன்னு கத்துக்கங்கன்னு நம்ம வீட்டு ஆளுங்க கருத்து கந்தசாமியா மாறிடுவாங்களே?” என்றான் குகன்.

முதலில் ஆண்களுடன் கார்த்தி நடந்து செல்ல அதற்கு பின்னே பிள்ளைகள் செல்ல அதற்கு பின்னே பெண்கள் மூவரும் நடந்து சென்றனர்.

“ஏன் ரேவதி நீ இப்படி எல்லாம் யார் வீட்டுக்கும் உடனே வரேன்னு சொல்ல மாட்டியே?” என்றார் சாந்தி.

“தெரியலை அக்கா, ரத்னா வாங்கன்னு சொன்னதும் உடனே சரின்னு சொல்ல  தோணிடுச்சு. எனக்கு அவங்களை முதன்முதலா நகை கடையில பார்த்தப்பவே  ரொம்பவே பிடிச்சு போச்சு. மனசுக்கு எதோ நெருக்கமா தோணுது.

நம்ம வீட்லயும் எல்லாருமே அனுவை நினைச்சு  ஒரு மாதிரி இருந்தாங்களா.. முக்கியமா எழிலு. அதான் கொஞ்சம் மனசு மாறும்னு யோசிச்சேன்… தப்பா அக்கா” என்றார் கொஞ்சம் இறங்கிய குரலில். 

“தப்பு சரின்னு எல்லாம் ஒன்னும் இல்லை.. இப்ப என்ன ஒரு எட்டு பார்த்துட்டு உடனே கிளம்பிட போறோம்..” என்றார் சமாதானமாக.

இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழையும் பொழுதே காஃபியின் மணம் ஆளை தூக்கியது.

“காலங்காத்தால எழுந்தது.. நல்ல காபி கிடைக்கும் போல” என்று உற்சாகமாகவே அனைவரும் நுழைந்தனர்.

என்றும் இல்லாத திருநாளாய் இவர்கள் வீட்டில் என்ன கூட்டம் என்று அக்கம் பக்கத்தவர்கள் எட்டி எட்டி பார்த்து சென்றார்கள்.

ஒரே சமயத்தில் அவசரமாக நிறைய பேர்களுக்கு டிகாஷன் இறக்குவதற்கு , ரத்னா ஒரு செய்முறை வைத்திருந்தார்.

ஒரு அகலமான பாத்திரத்தில் காஃபி தூளை பரவலாக போட்டு, அதன் மீது கொதிக்கும் நீரை ஊற்றி, ஒரு மூடி போட்டு வைத்துவிடவேண்டும். நீராவியாக டிகாஷன் சேகரித்துவிடும்.

அதன் பிறகு,  வேஷ்டி துணியில், மேலாக சேகரித்த டிகாஷனை வடிகட்டி எடுத்தால் அருமையான டிகாஷன் தயாராக இருக்கும்.

 

அனைவரும் அமரவும் முதலில் சுட சுட கருப்பட்டி பணியாரத்தை அனைவருக்கும் பரிமாறினான் விக்னேஷ்.

சிறிய வாழை இலை துண்டுகளில், சூடாக இருந்த பணியாரத்தின்  சுவை அற்புதமாக இருந்தது. மிகவும் பாராட்டி அனைவரும் உண்டனர்.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், அடுத்து கார பணியாரத்தை கொண்டு வந்து வைத்தான் கார்த்தி. தொட்டு கொள்ள வேர்க்கடலை பொடி  வைத்தான் விக்னேஷ்.

“சட்னி அரைக்க நேரமில்லை. ஆனா இந்த பொடி ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிட்டு பாருங்க” என்றான் கார்த்தி.

உண்மையிலுமே வேர்க்கடலை, பூண்டு, மிளகாய் , கருவேப்பில்லை, புளி, கொஞ்சம் வெல்லம் சேர்த்து அரைத்திருந்த பொடியும் சுட சுட இருந்த பணியாரமும் அத்தனை ருசியாக இருந்தது.

“எப்படி ரத்னா இவ்வளவு ஸ்பீடா இவ்வளவு பேருக்கும் செஞ்சுட்டீங்க” என்றார் மீனா ஆச்சர்யமாக.

“நாங்க பணியாரம் ஸ்டால் வச்சிருக்கோம். வேலை செய்யுற அம்மாவும் வந்துட்டாங்க. மாவும் தயாரா இருந்துச்சு. அதான் இன்னும் ரெண்டு வச்சுக்கோங்க” என்று முகம் மலர பணியாரத்தை பரிமாறினார் ரத்னா.

காஃபி கலக்க உள்ளே சென்ற அன்னையுடன் இனைந்து கொண்டான் கார்த்தி.

ஒரு பாத்திரத்தில் சக்கரை சேர்த்து, அதில் இரண்டு டம்பளர் டிகாஷனை ஊற்றி, பத்து டம்ளர் பாலை சேர்த்தனர். சூடு ஆறாமல் விரைவாக கலந்து  டம்பளர்களில் இருவரும் சேர்ந்து ஊற்றினார்கள்.

பின் மேலாக இரண்டு சொட்டு  கெட்டி டிகாஷனை ஒவ்வொரு டம்பளர்களிலும் சேர்த்தனர்.

கார்த்தியும் விக்கியும் அனைவர்க்கும் காஃபியை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

“டீ அக்கா.. “ என்றாள் தமிழரசி எழிலிடம்.

“என்ன டீ?”

“உனக்கு இது எல்லாம் பார்த்தா என்ன தோணுது?”

“எனக்கு தோண்றதை சொன்னா, அம்மா தோலை உரிச்சிடுவாங்க..”

“அப்ப உனக்கும் அப்படி தான் தோணுதா?” என்றாள் ஆர்வமாக.

இவர்கள் குசுகுசுவென பேசிக் கொண்டிருக்கையில்,

பின்னால் இருந்த குகன், “எனக்கு என்னமோ இந்த சிட்டிவேஷனை பார்த்தா  பொண்ணு பார்க்க வந்த மாதிரி இருக்கு. என்ன ஆண்ட்டி வீட்ல ரெண்டும் பசங்களா இருக்காங்க. அப்ப மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கோமா?”என்று கொஞ்சம் சத்தமாக கூறிவிடவே, நங்கென்று அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தார் மீனா.

அதற்கு பிறகு சில நிமிடங்கள் ஒரே அமைதி.

அனைவரும் காஃபியின் சுவையில் தங்களை மறந்து அதனுள் மூழ்கி விட்டார்கள்.

“இப்படி ஒரு காஃபியை நான் குடிச்சதே இல்ல தங்கச்சி. ரொம்ப அருமையா இருந்துச்சும்மா” என்றார் சிங்காரம் ரத்னாவிடம்.

அனைவரும் மீண்டும் மீண்டும் பாராட்டினார்கள்.

கார்த்தியும் விக்கியும் ஒரு சின்ன புன்னகையுடன் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறி கொண்டிருந்தனர்.

“காமாட்சி அம்மா உங்களுக்கு எப்படி பழக்கம்?” என்றார் சண்முகம்.

“சுந்தரேசன் அண்ணாகிட்ட தான் கண்ணத்தான் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அப்புறம் கொஞ்சம் வருஷம் கழிச்சு தனியா தொழில் செஞ்சாங்க.

கண்ணத்தான் போனதுக்கு அப்புறம் எங்களுக்கு துணையா இருக்கிறது அவங்க ரெண்டு பேரும் தான்”

“நாங்க பழசை நியாபகப்படுத்தி உங்களை கஷ்டப் படுத்திட்டோமா?” என்றார் ரேவதி மெல்ல.

“அப்படி இல்லங்க, அவர் இல்லைன்னு இப்ப நாங்க வருத்தப்படறது இல்லை. அவர் நினைவுகளோடு வாழ பழகிட்டோம்.”

ரேவதி மகளிடம் பாரு என்று செய்கை காட்டினார்.

“அது எப்படி ஆண்ட்டி, நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க மறைவை அவ்வளவு சீக்கிரம் பழகிக்க முடியும்? அந்த வலி எப்படி போகும்?” என்றாள் எழில் பட்டென்று.

“எழிலு” என்று சரவணன் அதட்டலிடவுமே அவளுக்கு தன் கேள்வி புரிந்தது.

“எதுக்கு அண்ணே பிள்ளையை அதட்டுறீங்க? நானும் ரெண்டு நாள் சோறு தண்ணீ இல்லாம அழுது கரைஞ்சேன் தான்.. ஆனா ஒருத்தரோட மறைவு நம்ம வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.. கஷ்டமானாலும் துக்கத்தை ஜீரணிச்சிக்கிட்டு அடுத்து என்னன்னு பார்க்க தானே வேணும். புத்தர் ஒருத்தர்கிட்ட இறப்பு இல்லாத வீட்ல இருந்து ஒரு பிடி சாம்பல் வாங்கிட்டு வான்னு சொன்னதா ஒரு கதை கூட இருக்குமே?

அவரோட முடிவு நாங்க எதிர்பார்க்காதது. ஏன் அவரே எதிர்பார்க்காதது. இப்ப அவரோட நினைவுகள் அவர் எங்ககூட வாழ்ந்த நாட்களோட நினைவுகள் எல்லாமே பொக்கிஷமாய் என்கிட்டே இருக்கு. அதை பிடிச்சுக்கிட்டே நான் நகர்ந்துட்டு இருக்கேன்.”

“சாரி ஆண்ட்டி, ஏதோ டக்குன்னு கேட்டுட்டேன், உங்களை காயப்படுத்தறது என்னோட நோக்கம் இல்லை”

“மனசுல நினைக்கிறதை வெளிப்படையா கேட்க ஒரு தைரியம் வேணும்.. யாரோட மறைவோ உன்னை பாதிக்குது. அது தான் உன் கேள்விக்கான காரணம். உன் கேள்வியால எனக்கு வருத்தம் எல்லாம் இல்ல சரியா?” என்றார் வாஞ்சையாக.

அதன் பிறகு பொதுவாக சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு 

“நீங்களும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க. நாங்க புறப்படறோம்” என்றார் சாந்தி.

நிறைவான மனதுடன் அனைவரும் விடைபெற்று சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!