Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

77. பிரியதர்ஷினி S - உனதன்பில் சரணாகிறேன்

உனதன்பில் சரணாகிறேன் 16

உனதன்பில் சரணாகிறேன் 16

“அடிப்பாவி!” ம்ருதவ் நெஞ்சிலே கை வைத்துவிட்டான்.



Advertisement

“அந்த நேரம் அதுதாண்டா தோணுச்சு!” ரதி அப்பாவியாக முகத்தை வைத்துகொண்டு சொல்ல…

“எது நான் அவளை மொத்தமா மறந்துட்டன்னா” என்ற ம்ருதவ், “அவள் வீட்டுக்கு வர சம்மதம் சொல்லணுங்கிறதுக்காகத்தான் அல்ரெடி மேரேஜ் ஆகிருச்சுன்னு ஆண்டியை சொல்ல சொன்னது. வரது வேற யாரோங்கிற வரை ஓகே! வந்த பிறகு அது நான்னு தெரிஞ்சப்புறம், எனக்கு செக்கென்ட் மேரேஜ் இதுங்கிறது அவளுக்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும். நான் அவளை மறந்துட்டேன், அவளோட நினைவே எனக்கில்லைங்கிறது அவளுக்கு எவ்வளவு வலி. இப்போ நீ சொல்லியிருக்க பொய்யையும் சமாளிக்கணும்” என்றான்.

“என்ன பண்ண சொல்ற நீ?” என்ற ரதி, “வீட்ல என்ன சொன்ன… இப்பவும் அவள் என்னை வேண்டாம் சொன்னா, இன்னொரு மறுப்பை ஏத்துக்கிற திடம் எனக்கில்லைன்னு சொன்னியா? இல்லையா?” எனக் கேட்டாள்.

Advertisement

ம்ருதவ் பதில் சொல்லாது திரும்பிப்பார்க்க…

Advertisement

“சொல்லுடா… உனக்கு அந்த பயம் இருந்ததுதான?” என மீண்டும் அழுத்திக் கேட்டாள்.

“ஆமா… இருந்தது.”

“எனக்கு புரியவேயில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்றியா?” மண்டைக் குழம்பியதில் கமலேஷ் கத்தியேவிட்டான்.

Advertisement

“இவன் நினைச்சு பயந்த மாதிரிதான மித்யு நோ சொல்ல வந்தாள். அதான் அவளை ரூமுக்குள்ள கூட்டிட்டுப்போய்” என அங்கு நடந்ததை விவரித்தாள்.

“ரதி அக்கா விடுங்க… கை வலிக்குது.”

ரதி மித்யுகாவின் கையை பிடித்து ரூமுக்குள் அழைத்துச் சென்றதும், அவள் பிடித்திருந்த கை வலிக்கவே மித்யுகா அவ்வாறு கூறினாள்.

கையை விட்ட ரதி, கதவை தாளிட்டவளாக…

“பாருடா… உனக்கு என் பெயர் கூட நினைவிருக்கா?” என நக்கலாகத்தான் கேட்டாள்.

மித்யுகா அவளின் நக்கலில் வலி கொண்டபோதும் பதில் சொல்லாது மௌனமாக நின்றாள்.

“ஆனால் சிவாவுக்கு எதுவுமே நினைவில்லை” என்றாள் ரதி.

“என்ன சொல்றீங்க நீங்க?” நெற்றிச் சுருங்க ரதியை ஏறிட்டாள் மித்யுகா.

“ஆமா, அவனுக்கு இப்போ நீ யாருங்கிறதே தெரியாது. உன்னை பார்த்தது, லவ் பண்ணது, அவனைவிட்டு நீ போனது எதுவும் அவனுக்கு நினைவில்லை” என்ற ரதி, “நீ எதுக்காக அவனை வேண்டாம் சொல்லிட்டுப்போனியோ… ஆனா நீயில்லாம ஒரு நொடி கூட அவனால வாழ முடியாதுன்னு அந்த கடவுள் நினைச்சார்ப்போல… உன்னைப் பார்த்திட்டு வந்து எங்ககிட்ட கதறினவன் தான். வீட்டுக்குப்போறேன்னு, வழியிலே அவனுக்கு ஆக்சிடென்ட். அந்த விபத்தில் அவன் சுத்தமா ரெண்டு மூணு வருஷ வாழ்க்கையையே மறந்துட்டான். சித்தப்பா இறந்த நாளோட அவன் மெமரி ஸ்டாப் ஆகிடுச்சு. ரீகெய்ன் பண்ண முடியாதுன்னு மெடிக்கல் ரிப்போர்ட்டில் சொல்லிட்டாங்க. அவனுக்கு ஏன் இப்படின்னு தெரியல. உன்னைத்தேடினா நீ எங்ககிட்ட பேசவே அப்போ தயாராயில்லை. எங்களை என்ன பண்ண சொல்ற?” என்று நிறுத்திய ரதி, தானா மூச்சே விடாது இவ்வளவு பெரிய பொய்யை சொல்லியிருக்கிறோம் என்பதை நம்பாது, தான் சொல்லியதை மித்யுகா நம்பினாலா இல்லையா என்ற படபடப்பில் தன்னை நிலையாகக் காட்டிக்கொள்ள, “தண்ணி” என்றாள்.

அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை மித்யுகா எடுத்துக்கொடுக்க… அவளின் முகத்திலிருந்து எதையும் அனுமானிக்க முடியாது, நீரைப் பருகிவிட்டு மேலும் தொடர்ந்தாள்.

“ரொம்பநாள் பெட்லே தான் இருந்தான். அதுக்கு அப்புறம் அவன் முழுசா குணமாக எட்டு ஒன்பது மாசமாச்சு. அவனுக்கு உன் நினைவே இல்லைன்னாலும் எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கவனை பார்க்க முடியாது, நானும் கமலும் வற்புறுத்திதான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சு செய்து வைத்தோம். அவனுக்கு நீதான்னு இருக்குப்போல… அதான் அந்த வாழ்க்கை நிலைக்கல. மூணு மாசத்திலே அந்தப்பொண்ணு செத்துப்போச்சு. ஹார்ட் ப்ராப்ளம் இருந்திருக்கும்போல அவங்க வீட்ல சொல்லாம எங்களை ஏமாத்திட்டாங்க. கடைசி வரைக்கும் யாருமே இல்லாம தனியா இருக்கணுங்கிறதுதான் விதி போலன்னு வீம்பு பிடிச்சவனை இந்த மேரேஜுக்கு சம்மதிக்க வைக்கவே எங்களுக்கு நாலு வருஷமாகிடுச்சு” என்று பெருமூச்சினை வெளியேற்றினாள்.

“அவன் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான். செக்கென்ட் மேரேஜ் பண்ணிக்கிற பொண்ணுன்னா ஓகேன்னு. வரன் பாக்கிரவங்ககிட்ட சொல்லி வச்சதில்தான் உன் வரன் வந்தது. இதை நானும், கமலும் எதிர்பார்க்கவே இல்லை. நீ அப்போ எதுக்காக அவனை விட்டுப் போயிருந்தாலும், உன் வாழ்க்கையும் நல்லாயில்லங்கிறது வருத்தமா இருந்தது. அதான், உன் அம்மாகிட்ட பேசி ஏற்பாடு பண்ணோம்” என்ற ரதி, “அவன்தான் உனக்குன்னு இருக்கு. அதான் நீயே வேணாம்னு வந்தாலும், காலமே அவனை உன் கைக்கு கொண்டுவந்து சேர்க்குது” என்றாள்.

அனைத்தையும் கேட்ட மித்யுகாவுக்கு, ரதி சொல்வது உண்மையா பொய்யா என்றெல்லாம் ஆராயத் தோன்றவில்லை. மாறாக, அவள் சொல்லியதில், “அவனுக்கு நீதான்னு, உனக்கு அவன்தான்னு இருக்கு. காலமே சேர்க்க நினைக்குது” என்றவை மட்டும் மனதில் அழுத்தமாக மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

எவ்வித தடையும், வலியும், போராட்டமுமின்றி எளிதாக சேர்ந்துவிட்டால், அதென்ன காதல்.

காதலென்றாலே… வாழ்வென்பது கடினம் தானே! அந்த கடினத்தை அவர்களும் அனுபவித்து மீள்வதுதானே நியதி!

‘இத்தனை வலிகளுக்குப் பிறகுதான் தாங்கள் சேர வேண்டுமென்று உள்ளதோ… தங்களின் காதலின் ஆழத்தை சோதிக்கவே இவையெல்லாம் நடந்துள்ளதோ’ என நினைத்த மித்யுகாவுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்திட அவனை விட்டுவிட மனமில்லை.

தாங்கள் கொண்ட நேசம் அவனுக்கு நினைவில்லையென்றால் என்ன, அணுஅணுவாய் வாழ்ந்த காதல் நொடிகள் கொஞ்சமும் மிட்சமின்றி அவளிடத்தில் புதைந்துக் கிடக்கிறதே! உயிர்கொடுக்க முடிவு செய்துவிட்டாள்.

மித்யுகா எதுவும் பேசாது யோசனையில் உழன்று கொண்டிருக்க…

‘ரொம்ப யோசிச்சு பொய்யுன்னு கண்டுபிடிச்சிடுவாளோ?’ என்று நினைத்த ரதி…

“இப்போ நீ வேண்டாம்னு சொல்லிட்டா… அவனுக்கு வாழ்க்கையே இல்லை. காலத்துக்கும் இப்படியே இருந்திடுவான். கஷ்டப்பட்டுதான் சம்மதிக்க வச்சிருக்கோம். இது செட் ஆகலன்னா வேற எப்பவும் மேரேஜ் டாக் கூடவே கூடாதுன்னு சொல்லிட்டான். அப்போ நீதான் அவனுக்கு வாழ்க்கையா இருந்த… இப்பவும் நீ சொல்ற பதில்ல தான் அவன் வாழ்க்கை அடங்கியிருக்கு. ஒருவேளை இதுவரை அவனுக்கு வராத நினைவுகள் நீ அவனோட சேருறதில் வரலாம்” என்றாள்.

மித்யுகா ரதியின் விழிகளை பட்டென்று சந்திக்க…

“அப்படி நினைவு வந்தா சந்தோஷம் தான” என்று பற்களைக் காட்டி சமாளித்தாள் ரதி.

“ஆனால் அவங்க பார்வை…” என்று மித்யுகா ஏதோ சொல்லவர,

“கட்டிக்கப்போற பொண்ணை பார்க்க வந்தா… எல்லாரும் பார்க்குற பார்வைதான அது” எனக்கூறி மற்றைய பக்கம் திரும்பி, “என்னைய சோதிக்காதீங்க கடவுளே! அவளை சரி சொல்ல வைங்க” என்று புலம்பினாள்.

“உங்களுக்கு என்மேல கோபமில்லையா?”

வேகமாக அவள் பக்கம் திரும்பிய ரதி, “இல்லாம என்ன… நிறையவே இருக்கு. அதுக்காக இப்போ கோபத்தைக்காட்டி, உன்னை ஃபீல் பண்ண வைக்க சொல்றியா? நடந்தது நடந்துப்போச்சு. இனி நடக்கிறதை பார்ப்போமே!” என்றதோடு, “அவன் வாழ்க்கை உன்கிட்ட தான் இருக்கு. உன் பதிலென்ன?” எனக் கேட்டாள்.

“அவங்களை பாக்குற வரைக்கும், இங்க வரது வேற யாரோன்னு நினைச்சு வேணாம் சொல்லத்தான் இருந்தேன். அங்க அம்மாகிட்ட கூட ஒத்து வராதுன்னு சொல்லத்தான் தோணுச்சு” என்று நிறுத்திய மித்யுகா, “இப்போ வேணாம் சொல்ல முடியும் தோணல” என்றாள்.

“ஹப்பாடா…” நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமாக தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் சரிந்த ரதி, “இதை ரூமுக்குள்ள வந்ததுமே சொல்லியிருந்தா நான் இவ்வளவுக்கு பேசியிருக்க வேண்டாமே!” என்றாள்.

“நிஜமாவே அவங்களுக்கு பர்ஸ்ட் மேரேஜ் ஆகிடுச்சா?”

“ஹேய்… அவனுக்கு நீ அப்போ நினைவே இல்லை. நீயும் ஆள் எங்கன்னு தெரியல. அவனை அப்படியே விட முடியாதே! அதான் செய்து வச்சோம். ஆனால் நிலைக்கல. நீ அதையெல்லாம் நினைச்சு வருத்தப்படாத” என்றாள்.

“அவங்களுக்கு கொஞ்சம் கூட என்னோட மெமரி இல்லையா?” மித்யுகாவின் குரல் உடைந்துவிட்டிருந்தது.

அவனுக்கு முதல் திருமணமாகிவிட்டது என்றதைவிட, அவனின் நினைவில் தான் சுத்தமாக இல்லையென்பது அவளுக்கு பன்மடங்கு வேதனையை அளித்தது.

‘விட்டால் ஏதும் கேட்டு தன்னையே உண்மையை உளற வச்சிடுவாள்’ என எண்ணிய ரதி,

“எல்லாரும் அங்க உன் பதிலுக்காகத்தான் வெயிட்டிங். போலாமா?” என்று கதவை திறக்க,

ம்ருதவ் குழந்தைகளின் நெற்றியில் முத்தம் வைத்துக் கொண்டிருந்தான். அத்தோடு, முத்தம் கொடுப்பதற்கு முன்பு, அவன் குழந்தைகளிடம் அனுமதியாய் உதிர்த்த வார்த்தைகள், அவளோடு இணைந்து தங்கள் திருமணம் இங்குதான் நடக்க வேண்டுமென மொழிந்தது, அவளை தங்களின் மொத்தக் காதலையும் வலம் வரச் செய்திருந்தது.

அதன் தாக்கத்தாலே ம்ருதவ்வை விழிகளால் களவாடியவளாக பார்வையை அகற்றாது அவனில் உறைந்திருந்தாள்.

ரதி சொல்லி முடித்திட…

“எம்மாபெரிய உருட்டு…” என்று வாயில் கை வைத்த கமலேஷ், “இது உனக்கே சரின்னுப்படுதா ரதி?” எனக் கேட்டான்.

“என்னவோ அந்த நேரம் அவளை சரின்னு சொல்ல வைக்க இதுதான் தோணுச்சு. அவள் நோ சொல்லி, திரும்ப இவன் சோக கீதம் வாசிக்கிறதெல்லாம் என்னால பார்க்க முடியாது. இனி இது அவன் அவள் பாடு. அவளை அவனே சமாளிச்சிக்கட்டும்” என்று இருக்கையில் இன்னும் வசதியாக சாய்ந்தமர்ந்தவள், “நல்ல ஜூஸ் கடையாப் பார்த்து காரை நிறுத்துடா” என்றவளை ம்ருதவ் கொலைவெறியோடு நோக்கினான்.

“என்னடா அப்படி பாக்குற? உனக்கு நான் எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கேன்…”

“வயித்துல பேபி இருக்குன்னு பாக்குறேன்” என்ற ம்ருதவ், “அவள் என்னைப் பார்த்து மேரேஜ்ஜுக்கு சரின்னு சொன்னப்போ கண்ணுல அவ்வளவு கோபம். நான்கூட அவளை அவ்ளோ ஈசியா மறந்துட்டு மேரேஜ் பண்ணிட்டேங்கிற கோபம் நினைச்சேன். ஆனா இப்போதான் உண்மையான காரணம் தெரியுது. அவளை நான் மறந்துட்டேன்னு கோபமா இருந்திருக்கா… அவளுக்கு இது இன்னுமே வலி ரதி” என்றவனின் முகம் பெரும்பவலியை பிரதிபலிபலித்தது.

“அதெல்லாம் நீ அவளை ஈசியா ஹேண்டில் பண்ணிடுவடா” என்ற ரதி, “தாலி கட்டுற வரை கொஞ்சம் பொறுமையா இருடா! உண்மையை சொல்றேன்னு எதுவும் உளறி வச்சிடாத. எனக்குமே இதுதான் உனக்கு முதல் கல்யாணன்னு தான் சொல்ல தோணுச்சு… நான் அதை சொல்லி இதுதான் சாக்குன்னு அவள் வேணாம் சொல்லிட்டா நீ என்னை உண்டில்லைன்னு பண்ணிடுவியே! அதான் ரெண்டையும் கலந்து ஒரு கதையை சொல்லிட்டேன்” என்றாள்.

“ஆக மொத்தம் கல்யாணம் நடந்தும் அவன் சந்தோஷமா இருக்கப்போறதில்லை” என்றான் கமலேஷ்.

“எதுக்குடா சாபம் போடுற! அதெல்லாம் அவன் நல்லாயிருப்பான்.”

“ஏதே நான் சாபம் போடுறனா! அவள் கையால அவன் அடிவாங்க பக்காவா பிளான் போட்டுட்டு… இப்போ ஏதோ நான் சொல்றதாலதான் எல்லாம் நடக்கப்போகுதுங்கிற மாதிரி சொல்ற” என்ற கமலேஷ், “அவள் சொல்றதை கேட்காத சிவா! உனக்கு என்னத் தோணுதோ செய். மித்யு செக்கென்ட் மேரேஜ் இதுன்னு கண்டிஷன் போட்டதாலதான் உனக்கும் செக்கென்ட் மேரேஜ்ன்னு சொல்ல வேண்டியதாச்சு. ஆனால் இப்போ சொல்லியிருக்க பொய்… நீ சொன்ன மாதிரி, அவளுக்கு அது வலி. ஏற்கனவே வலியோட வாழ்ந்துட்டு இருக்கிறவளுக்கு உன்னோடான கல்யாணத்தை சந்தோஷமா ஏத்துக்க வை” என்று வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியிருந்தான்.

யோசனையோடு காரிலிருந்து ம்ருதவ் இறங்கிட,

“தப்பு பண்ணியிருந்தா சாரி சிவா” என்றாள் ரதி.

“ஹேய் ரதி” என்ற ம்ருதவ், “நீ என் ஃப்ரெண்டா நடந்திட்டிருக்க… யுகாக்கு அப்புறம் நீயும் இவனும் இருக்கிறதுதான் நான் வாழவே காரணம். எனக்காகன்னு நீ செய்தது எப்படி தப்பாகும்? நீ சொன்னியே நான் தான் மேனேஜ் பண்ணன்னுன்னு… பண்றேன்” என்று முறுவலித்தான்.

ம்ருதவ்வின் முகத்தில் புன்னகையை பார்த்ததும் தான் ரதிக்கு மூச்சு சீரானது.

“அவளை விட்டுட்டு உடனே ஓடி வராத! நான் ஓகேதான்” என கமலேஷிடம் கூறியவன் வீட்டிற்குள் சென்றான்.

நேராக சித்தப்பாவின் படத்திற்கு முன் சென்று நின்றவன்,

“இன்னும் ரெண்டு நாள்… அவள் இங்க வந்திடுவாப்பா! உங்க மருமகள் உன் மகனோட வாழவராள். சந்தோஷமா வாழ்வோம் நம்புறேன்” எனக்கூறி சில கணங்கள் அமைதியாக நின்றிருந்தான்.

படுக்கையறைக்குள் சென்று சிட்டவுட் இருக்கை வந்தமர்ந்தவன், பறவைகளுக்கு தீனியை இறைத்தவனாக தன்னவளின் நினைவில் ஆழ்ந்தான்.

தன்னைக் கண்டதும் அவளின் கண்கள் காட்டிய காதலே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

தான் வேண்டாமென சென்றிருந்தாலும், தானின்றி அவளின் வாழ்வில் ஒரு நாளும் கடந்ததில்லை என்பது பிள்ளைகளின் பெயரிலே கண்டுகொண்டான்.

அவளின் இன்னும் இன்னுமான அழக் காதலில் தான் அவனது கோபங்கள் அதிகரிக்கச் செய்தன.

“ஹேட் யூ யுகா… ஹார்ட்லி ஹேட் யூ” என்று முணுமுணுத்தவன், அலைபேசியை எடுத்து செண்பகத்திற்கு அழைத்தான்.

அக்கணம் மித்யுகா செண்பகத்திடம் பேசிக்கொண்டிருந்ததால் அவரால் அவனின் அழைப்பை ஏற்க முடியாது போனது.

இவர்கள் அங்கிருந்து கிளம்பியது முதல் மித்யுகா செண்பகத்திடம் பேசிட முயற்சி செய்தாள்… தயங்கித் தயங்கி அவரிடம் செல்வதும் பின்பு பேச முடியாது விலகுவதுமாய் இருந்தவள், ஒருகட்டத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

அவளை கவனித்திருந்த செண்பகம், சரியென்ற பின்னர் ஏதேனும் நினைத்து குழப்பிக்கொள்கிறாளோ என நினைத்து அவளிடம் தானாகக் கேட்காது தவிர்த்தவர், அவள் வெகுநேரமாக உம்மென்று ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவும், பிள்ளைகளை தோட்டத்தில் விளையாடுமாறு அனுப்பிவிட்டு, அவளின் அருகில் வந்தமர்ந்தார்.

அடுத்த கணம் அவரின் மடியில் தலை சாய்த்துக்கொண்டாள்.

“உன்னை வருத்திக்கிற எதுவாயிருந்தாலும் தூரப்போட்டுடு மித்யு… இதுக்கு அப்புறம் உன் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்று அவளின் நெற்றி கேசம் வருடினார்.

“நான் அவங்ககிட்ட போயிட்டாலே சந்தோஷமாகிடுவேம்மா” என்ற மித்யுகா, “அவங்கதான் ம்ருது… என் ம்ருதவ்” என்றாள்.

வருடலை நிறுத்தாது, “தெரியும்” என்ற செண்பகம், மித்யுகா விழி உயர்த்திப் பார்த்ததில்…

“நீ சரின்னு சொல்ல ஏதோ காரணமிருக்கும் நினைச்சேன்” என சமாளித்தார்.

மித்யுகா கண்கள் இடுங்கப் பார்த்ததிலே அவள் நம்பவில்லை என்பதை உணர்ந்த செண்பகம்,

“எதுவும் யோசிக்காதடா… நடக்கிறதாவது நல்லதா நடக்கணும் நினைப்போம்” என்றார்.

“நான் சரி சொன்னது தப்பில்லைதானம்மா?” எனக்கேட்டவள், “அவங்களைப் பார்த்ததும் எனக்கும் வாழணும் ஆசை வருதும்மா” என்றாள். கண்ணின் ஓரம் நீர் இறங்கியது.

மெல்லத் துடைத்துவிட்டவர், “இங்க வாழ ஆசைப்படாத மனுஷனே கிடையாது மித்யு… எப்பேர்ப்பட்டவனுக்கும் வாழ்க்கையை அவன் விருப்பத்துக்கு வாழ வாழ்க்கையே ஒரு வாய்ப்புக்கொடுக்கும். இப்போ உனக்கு கொடுத்திருக்கு. நல்லா கெட்டியாப் பிடிச்சுக்கோ” என்றார்.

“குழந்தைங்க…?”

“நீயே விட்டாலும் சிவா விடமாட்டாங்க. நான் எல்லாம் பேசிதான் சரின்னா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேன். அன்னைக்கே சொன்னனே, இந்த கல்யாணத்தால ஒரு குடும்பமே அமையுதுன்னா எனக்கு சந்தோஷம் தான் அப்படின்னு சிவா சொன்னாங்களே” என்றார்.

“என்னைதான் எல்லாமாவும் நினைச்சாங்க…”

“திரும்பவும் நினைக்க வை.”

“அவங்ககிட்ட பேசனும்போல இருக்கும்மா!”

“பேசேன்…” செண்பகம் சாதாரணமாக சொல்லிவிட்டார், அவளுக்குத்தான் மனதிற்குள் பெருத்த இடியோசை.

காதலை சொல்லும்போது கூட தோன்றாத தயக்கமும், தவிப்பும் இப்போது அவனிடம் பேசிட எழுந்தது. அத்தோடு என்ன பேசுவதென்ற பெரும் சிந்தனை. அவனிடம் அனைத்தும் சொல்ல வேண்டும் அவளுக்கு. இதுவரை தான் சுமந்த ரணங்களுக்கு ஆறுதலாய் அன்னையையும் நாடியிராதவளுக்கு அனைத்தையும் தன்னவனிடம் இறக்கி வைத்து மனபாரம் குறைக்க வேண்டும் போலிருந்தது.

“ம்ருது” என உச்சரித்தவள் அவனின் இன்றையத் தோற்றத்தை விழிகளுக்குள் நிறுத்தியவளாக கண்ணயர்ந்தாள்.

அவளின் உறக்கத்தை கலைக்காது மெல்ல தலையை நகர்த்தி வைத்தவர், அலைபேசியுடன் தோட்டத்திற்கு வந்து விளையாடும் பிள்ளைகளின் மீது கண் வைத்தவராக ம்ருதவ்வுக்கு அழைத்திருந்தார்.

“மாப்பிள்ளை” என்று அவர் அழைக்க,

“எப்படி இருக்காள்?” என தன்னவளின் நிலையறிய வினவினான் ம்ருதவ்.

“நீங்கதான் அவள் விரும்பினதுன்னு சொன்னாள். ஓரளவுக்கு உங்களுக்கு துரோகம் பண்ணிட்டோமுங்கிற குற்றவுணர்வை தூக்குப்போட்டுட்டு வாழணும் ஆசை வந்திருக்கு” என்று அடைத்த குரலில் கூறியவர், புடவை தலைப்பால் கண்களை துடைத்துக்கொண்டார்.

ரொம்பவே உணர்ச்சிவசலில் இருக்கிறார் என்பதை அவரின் தளும்பல் குரலில் கண்டுகொண்டான் ம்ருதவ்.

அவனுக்கு என்ன தேற்றுதல் கூற வேண்டுமெனத் தெரியவில்லை.

“நான் இருக்கேன் அத்தை. பார்த்துப்பேன்” எனக் கூறினான். அவன் உறவை சொல்லியதில் மேலும் நெகிழ்ந்த செண்பகம்,

“உங்களைத்தான் நம்பியிருக்கேன். இதை ஒரு வருஷத்துக்கு முன்னவே, நீங்க பேசினப்போவே நான் செய்திருக்கணும். அவள் மனசை நினைச்சே தள்ளிப்போட்டு தப்பு பண்ணிட்டேன்” என்று வருந்தினார்.

“எல்லாத்துக்கும் நேரம்ன்னு ஒண்ணு வரணுமே அத்தை” என்ற ம்ருதவ், “என்ன பண்ணிட்டு இருக்காள். பேசணும் போலிருக்கு” என்றான்.

“தூங்கிட்டு இருந்தாள்” என்று திரும்பிய செண்பகம், தனக்குப் பின்னால் மித்யுகா நின்றிருக்கவே,

“அவகிட்ட கொடுக்கிறேன் பேசுங்க” என ம்ருதவ்விடம் கூறியவராக அலைபேசியை மித்யுகாவின் கையில் கொடுத்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் சென்றுவிட்டார்.

‘அவளது சிறு இதயத்தில்
பெருங்காதலாய் அவன் ஜீவித்திருக்க…

அவனன்பில் அவளென்று சரணாகதியே!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!