Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 2

அத்தியாயம் – 2

 

​அதே நள்ளிரவு… ரன்வீரின் கார் துறைமுகத்தை விட்டு வெளியேறிய அதே நேரத்தில், நகரத்தின் மற்றொரு பகுதியில் ஒரு அமைதியான மாளிகை நிலவொளியில் நனைந்து கொண்டிருந்தது…

​அந்த வீட்டின் அகன்ற பால்கனியில், நிலவைப் பார்த்தபடி நின்றிருந்தாள் மிருதுளா…



Advertisement

கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு வயதை கொண்ட பெண்ணவள் அணிந்திருந்த பட்டுப் போன்ற மென்மையான இரவு உடை, அவளது மேனி அழகிற்கு இன்னும் மெருகூட்டியது. செதுக்கி வைக்கப்பட்ட சிலையைப் போன்ற முகம், வில்லென வளைந்த புருவங்கள், அடர்த்தியான கூந்தல் என இயற்கையே அவளை ரசித்துச் செதுக்கியிருந்தது. ஆனால், அந்த அழகிய முகத்தில் வசந்தகாலத்தின் புன்னகை இல்லை, மாறாக ஒரு நீண்ட காலத்து இலையுதிர் காலத்தின் வாட்டம் படிந்திருந்தது.

​அந்தப் பெரிய மாளிகையில் அவளுக்கு எதற்கும் குறையில்லை, அவள் கேட்கும் முன்பே அனைத்தும் அவள் கைக்கு வரும், ஆனால், அந்த ஆடம்பரமும் வசதியும் அவளது தனிமையை இன்னும் அதிகமாக்கவே செய்தது,.

​அவளது கண்கள் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவளது மனம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்த விபத்தில் உறைந்து போயிருந்தது, அந்த விபத்தில் தான் அவளது ஆணிவேர்களான தாய் மற்றும் தந்தையை இழந்தாள், அன்று அவர்களோடு சேர்ந்து அவளது சிரிப்பும், சந்தோஷமும் மண்ணோடு மண்ணாகிப் போனது…

Advertisement

​பெற்றோரின் நினைவுகள் அலையலையாக வந்து மோத, அவளது கண்களில் ஒரு துளி கண்ணீர் நிலவொளியில் மின்னியது. ‘எல்லாமே இருந்தும், எதுவுமே இல்லாதது போல ஒரு வாழ்க்கை…’ என்று அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

Advertisement

சுற்றியிருந்த வேலையாட்களும்,  உறவும் அவளை ஒரு கண்ணாடி பொம்மையைப் போலப் பாதுகாத்தனர்,  ஆனால், அவளது மனதின் காயங்களுக்கு மருந்திட யாராலும் முடியவில்லை, அந்த நிசப்தமான இரவில், அந்த நிலவிடம் தான் தனது மௌனமான வேதனையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்…

நேரங்கள் கடந்தது, விடிந்து விட்டதை கூட அவள் உணரவில்லை, அவள் உணர்ந்தபோது  மனதில் ஒரு சலிப்பான பெருமூச்சு மட்டுமே எஞ்சியிருந்தது, இரவு முழுக்க நிலவோடும், நினைவுகளோடும் பேசியதில் உடல் சோர்ந்திருந்தது, ஆனால் உள்ளம் உறங்க மறுத்தது.

அறைக்குள் நுழைந்தவளின் உடல்​அந்த விசாலமான, மென்மையான படுக்கையில் புதைந்தாலும், தூக்கம் அவளைத் தழுவவில்லை, தன் தாய் தந்தையோடு கழித்த அந்தப் பொற்கால நாட்களின் காட்சிகள் தான் அவள் கண்களுக்குள் நிழலாடின, தந்தை அவளது தலைகோதிச் சிரித்ததும், தாய் அன்போடு ஊட்டிவிட்டதும் இப்போது வெறும் கனவாகிப் போனது, அந்த விபத்து அவளது உலகத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது….

Advertisement

​மணி காலை ஏழைக் காட்டியது, இயந்திரத்தனமாக எழுந்தவள், குளித்துவிட்டுத் தன் அறையை விட்டு வெளியே வந்தாள், முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கும் ஒவ்வொரு அடியும் அவளுக்கு ஒரு பாரமாகவே இருந்தது…

​இது அவளது தாத்தா வீரமாணிக்கத்தின் வீடு, வசதிக்குக் குறைவே இல்லாத இந்த வீட்டில் மிருதுளா ஒரு செல்லப் பேத்தியாகத்தான் வளர்க்கப்படுகிறாள், தாய் தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவளது தாத்தா அவளைத் தன்னோடு அழைத்து வந்துவிட்டார்…

வீரமாணிக்கத்திற்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே, மகள் அதாவது மிருதுளாவின் தாய் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன் சுந்தரம் (மிருதுளாவின் தாய் மாமா) தனது குடும்பத்தோடு வேறொரு வீட்டில் வசித்து வருகிறார், அவ்வபோது இங்கு வந்து சென்றாலும், இந்த மாளிகையில் மிருதுளாவும் அவளது தாத்தாவும் மட்டுமே மௌனத்தை பகிர்ந்து வந்தவனர்.

ஆனால் அதுவும் பெரிதாக இல்லை, ​வீரமாணிக்கம் எப்போதும் தனது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார், எப்போதாவது ஒருமுறை தான் அவர் அறையை விட்டே வெளியே வருவார்…

மிருதுளா தான் அவ்வப்போது அவர் அறைக்குச் சென்று, அவர் மருந்து சாப்பிட்டாரா? உணவு உட்கொண்டாரா? என்று பார்த்துவிட்டு வருவாள், அந்த சாக்கில் அவரோடு கொஞ்ச நேரம் பேசுவாள், ஆனால், அவள் தாத்தாவோ மறைந்த அவளது தாய் தந்தையை பற்றி பேசவே மறுத்துவிடுவார், அவர்களை பற்றி பேசினால் மிருதுளாவிற்கு மேலும் வலியே மிஞ்சும் என்ற நல்ல எண்ணத்தில் தான் மறுப்பார், ஆனால் மிருதுளாவிற்கு அவரின் இந்த மறுப்பும், தாய் தந்தையை பற்றி பேசினால் அவர் காட்டும் மௌனமும் மேலும் பாரத்தை கொடுத்தது, யாரிடமாவது மனம்விட்டுப் பேச வேண்டும், தன் அழுகையை ஒரு தோளில் சாய்த்துக் கொட்ட வேண்டும் என்ற அவளது ஏக்கம் அந்த மாளிகையின் சுவர்களிலேயே மோதித் திரும்பியது…

​அவளது மாமா சுந்தரம் அவ்வப்போது வந்து செல்வார், ஆனால், அவரது வருகைகள் எப்போதும் ஏதோ ஒரு பணத் தேவைக்காகவோ அல்லது சொத்து சம்பந்தமான பேச்சுகளுக்காகவோ தான் இருக்குமே தவிர, மிருதுளாவின் மனக்காயங்களுக்கு அங்கே இடமே இல்லை….

​மாடிப்படிகளில் இறங்கி வரும்போது அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் மௌனத்தை அங்கு வேலை செய்யும் பணியாட்களின் காலடிச் சத்தங்கள் மட்டுமே கலைத்துக் கொண்டிருந்தன, மிருதுளாவைக் கண்டதும் அங்கிருந்த ஒரு பணிப்பெண் பவ்யமாக அருகில் வந்து,… ​”காபி தரட்டா மேடம்?” என்றாள்,…

மிருதுளாவிற்க்கு அந்த நள்ளிரவு விழிப்பு கொடுத்த தலைவலிக்கு ஒரு காபி தேவையாகத்தான் இருந்தது. “ம்ம்…” என்று ஒரு மெல்லிய முனங்கலுடன் கூறிவிட்டு, வரவேற்பறையில் இருந்த அந்தப் பெரிய ராஜகாலத்து சோபாவில் வந்து அமர்ந்தாள், அந்த விசாலமான ஹாலில் அவள் ஒருத்தி மட்டுமே அமர்ந்திருப்பது அவளது தனிமையை இன்னும் பெரிதாகக் காட்டிக் கொடுத்தது.

​காபியைக் கொண்டு வந்து நீட்டிய பணிப்பெண்ணிடம், மெதுவான குரலில் “தாத்தா…” என்று இழுத்தாள், அவர் எழுந்துவிட்டாரா என்பதைத் தான் அவள் கேட்கிறாள் என்பது அந்தப் பெண்ணுக்கும் புரிய… ​”ஐயா எழுந்துட்டாரும்மா… காபி குடிச்சிட்டு இப்பதான் பேப்பர் பார்த்துட்டு இருக்கார்,” என்று பதில் வர, மிருதுளா மெல்லத் தலையசைத்துக் காபியைப் பருகத் தொடங்கினாள். சூடான காபி தொண்டைக்குள் இறங்கியபோது ஒரு சிறிய இதம் கிடைத்தாலும், மனதிற்குள் இருந்த அந்த சலிப்பு மட்டும் நீங்கவில்லை…

​அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல், மேஜை மேல் இருந்த அன்றைய நாளிதழை இயந்திரத்தனமாகத் கையில் எடுத்தாள், எதார்த்தமாகப் பக்கங்களைப் புரட்டியவளின் கண்கள், ஒரு செய்தியில் சட்டென நிலைத்து நின்றன…

​”நள்ளிரவில் முடங்கிய துறைமுகம் : கஸ்டம்ஸ் அதிகாரியை மிரட்டிப் பணிய வைத்த மர்மக் கும்பல்? மாயமான கன்டெய்னர்கள்!” அந்த நாளிதழைப் புரட்டும் போது, அவளது கண்கள் இந்தச் செய்தியில் தான் நிலைத்து நின்றன, அந்தப் பெரிய எழுத்துக்கள் அவளது அமைதியான காலைப் பொழுதைச் கொஞ்சமும் கலைக்கவில்லை, வெறும் ஒரு செய்தியாக மட்டுமே அதனை வாசித்துக் கொண்டிருந்தாள்,…

அந்த கணம்… ​”என்னம்மா… பேப்பர்ல அப்படி என்ன சுவாரஸ்யம்?” செய்தியை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தவளின் பின்னால் இருந்து ஒரு குரல்,..

அது அவளது தாத்தா வீரமாணிக்கத்தின் குரலே, ஆச்சரியத்துடன் திரும்பினாள் மிருதுளா, அவள் கணக்கின் படி அவர் அறையை விட்டு வெளியே வந்து எப்படியும் ஐந்து நாட்கள் இருக்கும், அப்படியென்றால் இந்த ஆச்சரியம் வர தானே வேண்டும்..

​​”என்ன தாத்தா… இன்னைக்கு ரூமை விட்டுலாம் வெளிய வந்திருக்கீங்க? மழை வருவது நிச்சயம்” என்று ஒரு ஆச்சரியமான கேலியுடன் வினவினாள் மிருதுளா…

​அவளது அந்தக் கேலிக்கு வீரமாணிக்கம் சத்தமாக நகைத்தார், அந்தப் பெரிய ஹாலில் அவரது சிரிப்பொலி சில நாட்களுக்குப் பிறகு எதிரொலித்தது,..

மெதுவாக நடந்து வந்து அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவர் “இன்னைக்கு வரணும்னு தோணுச்சு… அதான் வந்தேன்,” என்று நிதானமாக உரைத்து விட்டு அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவர்,.. “உன்னோட ஏக்கமும் வலியும் எனக்கு புரியுதுடா மிருதுளா… ஆனா என்னால மட்டும் உன்னுடைய அந்தப் ஏக்கத்தைப் போக்க முடியாது,” என்றார், அவர் தன் மகளையும் மருமகனையும் இழந்த அந்தப் பெரும் துயரத்தைப் பற்றித்தான் பேசுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது…

​மிருதுளா உதட்டில் ஒரு கசப்பான புன்னகை அரும்பியது. “எனக்குத் தெரியும் தாத்தா… ஆனா நீங்க கொஞ்சம் என்கூட வெளிய வந்து பேசலாமே? எப்போதும் நான் தான் உங்க ரூமுக்கு வந்து உங்களைப் பார்க்கிறேன், நேத்து முழுக்க நான் உங்க ரூம் பக்கமே வரல… என்னாச்சுன்னு கூடக் கேட்டு நீங்க வெளிய வரலையே?” என்று தன் மனக்குமுறலைச் சிறுபிள்ளைத்தனமான கோபத்துடன் வெளிப்படுத்தினாள்.

அவளது ஆதங்கத்தைக் கேட்ட வீரமாணிக்கத்தின் முகத்தில் ஒரு மெல்லிய வருத்தம் மின்னிட.. “அதனாலதான்… நீ வரலைன்னு தெரிஞ்சதாலதான், இப்போ நானே வந்தேன்,” என்று வாஞ்சையுடன் சொல்ல, தன் மீது வெளிப்பட்ட அந்த பாசம் மிருதுளாவின் மனதிலிருந்த பாரத்தை ஒரு நிமிடம் குறைத்தது…

“கண்ணெல்லாம் சிவந்திருக்கு நைடெல்லாம் தூக்குனியா? இல்லையா? மிருதுளா” அவர் வினவ,.. “தூக்கம் வரல தாத்தா” என்றாள் வெறுமையுடன்,…

​”அந்த ஆக்சிடன்ட் நடந்து ஆறு வருஷமாச்சு, இன்னும் அதுல இருந்து நீ வெளிவரலையா மிருதுளா? இது நல்லதுக்கில்ல, இதை நான் எத்தனையாவது முறை சொல்றேன்னு எனக்கே தெரியல, ஏமா இவ்வளவு அடம் பிடிக்கிற” அவர் கவலையுடன் வினவ…
​”நானும் மறக்கணும்னு தான் முயற்சி பண்ணுறேன், ஆனா என்னால முடியல தாத்தா,” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட, வீரமாணிக்கத்திற்கு நெஞ்சம் பிசைந்தது…

​”கல்யாணம் பண்ணிக்கிறியா மிருதுமா?” அவர் மெல்ல வினவ, “எனக்கு அதிலைலாம் இண்ட்ரஸ்ட் இல்ல,” என்றாள் அவள் சட்டென்று…

​”இப்படியே சொன்னா எப்படிம்மா? உனக்காக தான் நான் உன் கல்யாணத்தைப் பத்திப் பேசாம இருக்கேன், கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்குன்னு ஒரு துணை வரும், குழந்தைங்க பிறப்பாங்க, உன் வாழ்க்கை அழகா மாறும்,” என்று அவர் மென்மையாகக் கூற, “தெரியாதவன் கூட சட்டுனு என்னால ஒன்றி வாழ முடியாது,” என்றாள் உறுதியாக…

​”சரி… அப்போ யாரையாச்சும் லவ் பண்ணு, நானே முன்னாடி நின்னு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!” என்றார் அவர்.

எந்தத் தாத்தாவும் இதை இவ்வளவு வெளிப்படையாகச் சொல்ல மாட்டார் என்பது மிருதுளாவிற்கும் தெரியும், தன் வாழ்க்கை மீண்டும் மலர வேண்டும், அந்த மௌனமான மாளிகையில் மீண்டும் ஒரு சிரிப்பொலி கேட்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தான் அவர் இவ்வாறெல்லாம் கூறுகிறார் என்பதை அவள் உணர்ந்தாள், ஆனால், அவளது மனதோ ஒரு இறுக்கமான கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தது…

​”தாத்தா… லவ் பண்றதுக்கும், ஒருத்தரை விரும்புறதுக்கும் மனசுல ஒரு நிம்மதி வேணும், எனக்கு இப்போதைக்குத் மேரேஜ்ல கொஞ்சமும் நாட்டம் இல்ல, ப்ளீஸ்… இதைப் பத்தி இப்போ பேச வேண்டாம்,” என்று மென்மையாகச் சொல்ல,.. ​”இப்படியே சொன்னா எப்படி மிருதுமா? உனக்கு ஒரு துணை வேண்டாமா? காலம் முழுக்க இந்தத் தனிமை உன்னை அரிச்சுடும்டா,” என்று அவர் கவலையோடு அவளது கையைப் பற்றினார்…

​”தனியா இருக்கிறது எனக்குப் பழகிடுச்சு தாத்தா, இந்தத் தனிமை தான் இப்போ எனக்குத் துணையே,” என்று அவள் வெறுமையுடன் சொல்ல, அந்தப் பெரிய ஹாலில் மீண்டும் ஒரு நிசப்தம் நிலவியது.

“உனக்குத் தெரியாதவன் கூட வாழப் பிடிக்கலன்னு சொல்ற… தெரிஞ்சவங்களையே உனக்கு வரனா பார்த்தா என்ன? உன் மாமா பையன் இருக்கான்ல…”
​அவர் சொல்லி முடிக்கும் முன்பே மிருதுளாவின் முகம் சுருங்கியது.
அவளது மாமா சுந்தரத்தின் மகன் மீது அவளுக்குப் நற்பெயர் ஏதுமில்லை, அவனை நினைத்தாலே தலைவலி மேலும் கூடியது..

அதே நேரம், வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, அது அவளது மாமா சுந்தரத்தின் கார் தான் என்பது ஹாரன் சத்தம் கேட்ட மாத்திரத்திலேயே புரிந்தது அவர்களுக்கு, அன்று காலையிலேயே அங்கு வந்திருந்தார் சுந்தரம்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!