Skip to content
Post Views: 843
உன்னாலே உனதாகிறேன்! 8
நிலவில் கால் வைப்பதொன்றும் அதிசயம் இல்லை. உன் மனத்தில் அடி எடுத்து வைப்பதே பேரதிசயம். என் அன்பு அத்தகைய பேரதிசயத்தை அமைதியாய் நிகழ்த்திவிடும் என மீண்டும் ஒரு முறை குமரன் தன் மனத்தில் சொல்லிக் கொண்டான்.
Advertisement
அந்த பேரதிசய நிகழ்வின் தொடக்கமாகவே இந்தத் திருமணத்தை நினைத்தான். மற்றவர்கள் திணித்த திருமணம்தான் என்றாலும் இனி ‘அவள் மனைவி, இவன் கணவன்’ என மனத்தில் பதியவைத்தான்.
அவன் அருகே நிற்கும் அவளும், மகிழ்வே உருவாய் அவன் கையில் வந்த அந்த சிசுவும் அவன் உறவு. ஐயா அப்பத்தா மட்டுமே அவன் குடும்பம் என வளர்ந்தவனுக்கு சிறகை அடித்து முதன் முறை பறக்கத் துடிக்கும் சிறு குருவியின் மனநிலை. இன்று முதல் அவனது உலகம் அவர்களால் அகண்டு விரிவடையும்.
Advertisement
Advertisement
பெரும் பரபரப்புகள் இன்றி அமைதியாய் நெருங்கிய சொந்தங்கள் சூழ கோவிலில் எளிமையாய் திருமணம் நடந்து முடிந்திருந்தது. குமரனும் பூவினியும் மகிழனுடன் அவர்கள் வீட்டு வாசலுக்கு வர அங்கிருந்த அனைவரின் கண்களும் அவர்களின் மேல்தான்.
அங்கு ஒவ்வொருவர் எண்ணமும் ஒன்றாக இருந்தது, ஆனால் ஒன்றுபோல் இல்லை.
Advertisement
பூவினியின் பெற்றோர்கள் மற்றும் குமரனை வளர்த்தவர்களோ அவர்களின் நலனில் மகிழ்ந்திருக்க, கருணாகரன் பெற்றோருக்கோ இந்த மகிழ்வைத் தாண்டி என் மகன் இன்று உயிருடன் இல்லை எனும் துக்கம் மட்டுமே மிகுந்திருந்தது.
அந்த இடமே உணர்வுகளின் ரங்கோலியில் கலந்து கட்டி இருந்தது.
“பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு, ஆயா அந்த ஆரத்திய கொண்டாங்க.” உறவுமுறை பெண் ஒருத்தி சத்தமிட்டு அழைக்க அனைவரின் கவனமும் அவர்களின் மேல் குவிந்தது.
“ஆத்தா, வாத்தா நீ வந்து முதல்ல ஆரத்தி எடு. கடைசியா மஞ்ச தண்ணி ஆரத்தி அவ மாமியா வந்து எடுப்பா.” என்று வசந்தியைப் பார்த்துக் கொண்டே அவரின் மகள் கனகாவிடம் கூறினார் வள்ளியம்மாள்.
“எம்மா, நீ என்னத்துக்கு ஆரத்தி எடுக்கப் போற?” என தன் அம்மாவின் காதோரம் சுதா முணுமுணுக்க, “ஹ்ம்ம், ஓம்புத்திய ஒங்க மாமியாருக்கு மட்டும் சொல்லிக் குடு. புள்ளயப் பாரு.” என திரும்பி தன் மகளைக் கடிந்த கனகா ஆரத்தி எடுக்கக் கிளம்பினார்.
பூவினியின் அருகே நிற்கும் குமரன் தன் கையில் மகிழனை ஏந்தி இருக்க அந்த அழகானதொரு காட்சியை தன் விரிந்த புன்னகையில் இன்னும் சில நிமிடங்களுக்கு நீட்ட நினைத்து மனதார வாழ்த்தி ஆரத்தி எடுத்தார் கனகா.
அடுத்தடுத்து உறவினர் பெண்கள் குமரனின் சகோதரி முறையில் உள்ளவர்கள் ஆரத்தி எடுக்க வரவும் அங்கே நின்றிருந்த வசந்தி குமரனின் அருகில் வந்தார்.
“குமரா, ஒங்களுக்கு ஆரத்தி எடுத்தாப் போதும். மகிழன எங்கிட்ட குடு. ஒனக்கு என்னத்துக்கு இப்ப இவன்? இவன வேற நீ சொமந்துக்கிட்டு.”
அன்பு சொட்டும் குரல் போலவே இருந்தாலும் அதன் அர்த்தங்கள், அனர்த்தமாகவே குமரனின் காதுகளை எட்டியது.
பூவினியோ நடப்பவை எதையும் உணரும் நிலையில் இல்லை. ஏதோ ‘கீ கொடுத்த பொம்மை’ போல மற்றவர்கள் சொன்னதை செய்து கொண்டிருந்தாள்.
குமரன் பூவினியை திரும்பிப் பார்க்க அவளின் பார்வையோ தாழ்ந்து போயிருந்தது. அப்படி ஓரிடத்தில் எல்லோரும் கூடி இருக்க வேறு எந்தப் பேச்சுக்கும் இடமளிக்க வேண்டாம் எனும் எண்ணம் தோன்ற மகிழனை அவரிடம் கொடுத்திருந்தான்.
அடுத்தடுத்து மற்றவர்கள் ஆரத்தி எடுக்கவும் கடைசியாக மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த ஆரத்தி தட்டில் வெற்றிலை போட்டு எடுத்துக்கொண்டு வசந்தியிடம் வந்தார் வள்ளியம்மாள்.
“இந்தா இங்குன சாலா நிக்கிறா பக்கத்துல. அவள எடுக்க சொல்லுங்க. நா எம் பேரனை வச்சுருக்கேன்.”
“ஆமத்தா ஆமா, நீ சொல்லும்போல, பாவம் நீயும் செய்ய முடியாத வேலதே நாஞ் சொன்னது. நீ புள்ளையப் பாரு. எம் பேரனுக்கு நானே செய்யிறேன்.” என சொன்னவர் குமாரனையும் பூவினியையும் ஆலம் சுற்றி அந்த வீட்டுக்குள் அழைத்து வந்தார்.
திருமண வீடு எனும் ஆர்ப்பாட்டம் எதுவும் பெரிதாக இல்லாமல் மிக எளிமையாய் ஆனால், அழகாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அந்த வீடு.
வீட்டுக்குள் வந்தவர்கள் விளக்கேற்றி கடவுளை வணங்கி முடித்து வெளியே வர மகிழனின் அழுகை சத்தம் இருவரின் காதுகளையும் நிறைத்தது.
நொடி தாமதமின்றி அவனின் அழுகையில் பூவினியின் உடல்மொழி மாற குமரனுக்கு ஏதோ விளங்கியது. தாய்மையின் ஆயிரம் அதிசயங்களில் ஒன்று பிள்ளையின் பசியறியும் தாயின் தனங்கள்.
மகிழன் பசிக்கு அழ, வசந்தியோ அவனை வெளிவாசலில் இருந்து உள்ளே கூடத்திற்கு அழைத்து வந்தாரில்லை. பூவினியோ எதுவும் சொல்ல முடியாதவளாய் நிர்கதியாய் ஏதேதோ அவளுள் உடைந்து கரைய நின்றிருந்தாள். குமரனுக்கோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை.
“அப்பத்தா, தம்பி எங்க? அவென் அழுக சத்தம் போல இருக்கு?” என கேட்டபடியே கூடத்திலிருந்து வெளியே வந்தவன் தோளில் போட்டு மகிழனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த வசந்தியிடம் வந்தான்.
“பெரியம்மா அவனக் குடுங்க, பசிக்குது போல.” எனக் கேட்டு கைகளை நீட்டி நின்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவனுக்கு தூக்கந்தே வருது. நா வெள்ளனத்துல இவனுக்குன்னு இம்புட்டு பருப்பு சோறு வச்சுட்டேன். ஊட்டிவிடுறேன். நீம் போயி ஓம் பொண்டாட்டியப் பாரு” என விஷத்தைக் கக்கினார்.
குமரனுக்கு வந்த கோபத்தை மரியாதை எனும் இயலாமை மறைக்க அமைதியாய் “பெரியம்மா, அவனுக்கு அம்மா அப்பா எல்லாம் இருக்கு. ஒங்களுக்கு செரமம் வேணாம்.” என்றவன் பிள்ளையை அவரிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டான்.
வசந்தியின் கோபம் வார்த்தையாய் வெளிவரும் முன்னரே மகிழனுடன் கூடத்திற்கு விரைந்தான்.
மனம் கனத்துக் கிடக்கும் உணர்வுகளைக் கையாண்டவளுக்கு தன் தனங்களின் கனம் தாழவே முடியவில்லை. இதில் இந்த மணப்பெண் கோலம் வேறு.
‘இதெல்லாம் என்ன விதமான வாழ்க்கை?’ எனும் நினைவே பூவினியைத் துளைத்தது.
கையில் மகனை வாங்கிக் கொண்டவளுக்கு முட்டி வந்த கண்ணீரை மற்றவர் முன் கொட்டிவிடும் அபாயம் தெரிந்தது. அப்படி எதுவும் நடக்கும் முன் முயன்று தன்னை நிலைப்படுத்தி கண்களை அங்குமிங்கும் சுழற்றி இமைகளை மூடித் திறக்க, தெளிவற்ற பிம்பமாய் தெரிந்த குமரனின் பார்வை மொத்தமும் இவள் மீது தான்.
“பூவினி, இங்க வா.” என்று அழைத்தவன் அவளை தன் அறைக்குள் அழைத்துச் சென்றான். அங்கே மெத்தையைக் காட்டி அமர சொன்னவன் அவனின் தூவாலையை அவளின் கைகளில் எடுத்துக் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
மகனுக்குப் பாலூட்ட அமர்ந்தவளுக்கு மற்றவை எல்லாம் கருத்தில் இருந்து மறைந்துவிட அவளுக்கும் மகனுக்குமான அமைதியான நேரத்தில் ஆழ்ந்து போனாள்.
அடுத்த அரைமணி நேரமும் மகனோடு மெல்ல உரையாடி முகம் பார்க்கத் தொடங்கியவனின் கவனம் சிதறாமல் பாலூட்டியவள் மெல்ல அவனைக் கைகளில் ஏந்தி தோளில் கிடத்தித் தட்டிக் கொடுத்தாள்.
மகிழன் தூங்கும் நேரம் இது. புது இடம் என்பதால் அவளுக்கும் மகனை எங்கு கிடத்துவது என்பது தெரியாமல் கண்களை அறை முழுவதும் சுழலவிட்டாள்.
கட்டிலுக்கு சற்று தள்ளி இவளின் பின்புறம் ஏற்கனவே குழந்தைக்கான தொட்டில் கட்டப்பட்டிருந்தது. பூவினி தூங்கிய மகனை கைகளால் அணைத்துப் பிடித்தபடி எழுந்து சென்று தொட்டிலில் இட்டு ஆட்டிவிட்டாள்.
அவளுக்காக வாசலிலேயே காத்திருந்தவனுக்கு அவள் நடமாடும் சத்தத்தோடு அவள் எதோ ஒரு பாடலை முணுமுணுக்கும் சத்தமும் கேட்க அறைக்கதவை மெல்லத் தட்டியபடி திறந்தான்.
இவன் உள்ளே வரவும் பாட்டை நிறுத்தியவளின் பார்வை அவன் முகத்திற்கு மாறியது. ஏனோ இத்தனை நாட்களில் அவன் மீது ஒரு பயமோ வெறுப்போ வந்தது இல்லை.
வீட்டில் உள்ளவர்கள் பேசும் போது கேட்டது அவன் நல்ல படிப்பாளி என்பது மட்டுமே. இப்போது அவனும் அவளையே பார்க்க கேள்வியாய் அவள் கண்கள் சுருங்கி பின் மீண்டும் மெல்ல விரிந்தது.
குமரன் நினைத்தது போல அவள் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தாள். பூவினியின் முகத்தில் வந்து போன பாவங்கள் எல்லாம் இவனுக்கும் முற்றிலும் புதிது.
அவனது அறை என்பது அவன் மட்டுமே படிக்கவும் தூங்கவும் வந்து செல்வது. ஆனால் இன்றோ உள்ளே நுழைந்தவனுக்கு அந்த அறையே ஏதோ வாசமும் வண்ணமுமாக நிறைந்து, அவனுக்கே அது புதிதாக இருந்தது.
“தம்பி தூங்கிட்டானா? தூங்கிட்டான்னா உங்கள அத்த கூப்புட்றாக.”
“ம்ம்” எனும் வார்த்தையோடு நிறுத்தியவள் பின் மெல்லிய குரலில் “என்ன? என்னத்துக்கு கூப்புட்றாங்க.” எனக் கேட்டவளை கூர்ந்து நோக்க அவளின் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஒண்ணுமில்லத்தா நீ பதறாத. வயநாச்சியம்மனையும் சோலையாண்டவரையும் கும்புட்டுட்டு வரவா இருக்கும்.” சொன்னவன் அவளின் தயக்கமான பார்வையில், “என்னன்னு சொன்னியன்னாத்தே எனக்கு வெளங்கும். என்னவும் கொண்டு வரணுமா? இல்ல அத்த அப்பத்தா ஆரையுங் கூப்புடவா?”
“இல்லல்ல, எனக்கு எதுவும் வேணா. மகிழனுக்கு பாட்டு வைக்கணும் தூங்குறப்ப. அதுக்குத்தே ஏ போனு யாருட்ட இருக்குன்னு.”
“அத்தான், போன குடுங்கன்னு கேட்டா குடுக்கப்போறேன். அதுக்கு என்னத்துக்கு இந்த இழு இழுக்கிற.”
“ம்ம்” என முடித்துக் கொண்டாள்.
அவளின் அந்த ‘ம்’ போலவே அந்த நாளும் தயங்கித் தயங்கி என்றாலும் உருண்டு இருண்டு அன்றைய இரவை எட்டி இருந்தது.
“பெரியத்தா இனி நீங்கதே பூவினியப் பாத்துக்கணும். பிள்ள ரெம்பவே பட்டுட்டா.” என பூவினியின் அம்மா மல்லிகா வள்ளியம்மாளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“என்னத்துக்குத்தா நீ இம்புட்டு வெளக்கஞ் சொல்லிக்கிட்டு. நாம் பாத்துக்கிடுதே, நீம் போ, போயி உம் பொழப்பப் பாரு.”
“சரித்தா, அப்ப நாங்களும் இப்படியே கெளம்புறோம். கனகாக்கா இங்குனதேனே இருக்காக, வசந்தி அத்தாச்சி எல்லாம் வருவாக. ராத்திரிக்கு பாத்துக்கிடுங்க.”
“ஹுக்கும், ஒங்க அத்தாச்சி ஏற்கனவே கிழிச்சு கேப்பைய நட்ட வரைக்கும் போதும். அவுக வாழ்க்கைய அவுக பாக்கட்டும். நம்ம ஊடால போகாம இருந்தாலே போதும். எம் பேரனும் பேத்தியும் நல்லா இருப்பாக.”
“அதுவுஞ் சரித்தே பெரியம்மா. அப்ப நாங்களும் போயிட்டு வாரோம்.” என அனைவரும் விடைபெற வீட்டில் பெரிதாய் வேறு ஆட்கள் இல்லை.
error: Content is protected !!