Skip to content
Post Views: 869
சூரியன் விட்டுச் செல்லும் இருள் உச்சம் பெரும் நேரம்தானே மனித உணர்வுகளும் உச்சம்தேடி அடைகிறது. அது காதலோ காமமோ வலியோ பயமோ எல்லாமே இருளில் மட்டுமே விழித்துக் கொள்கிறது.
இரவு நெருங்கவும் பூவினிக்கு என்ன முயன்றும் பயமும் கவலையும் அவளை சூழ மனம் நடுங்க தன்னைக் குறுக்கிக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தாள்.
Advertisement
அவளின் நலிந்த தோற்றம் பார்த்த வள்ளியம்மாள், “ஆத்தா பூவினி என்னத்துக்கு இப்புடி தனிய இருக்க. மக்க மனுசளோட சேந்து இருத்தா.” என்றார்.
“ம்ம், சரி ஆயா.”
Advertisement
Advertisement
“எல்லாஞ் சாப்புட புது வீட்டுக்கு போயிட்டாக. நமக்கு இங்க கொண்டார சொல்லிட்டேன். குமரே கொண்டாரவும் சாப்பாட்ட போடுத்தா.”
“ம்ம்” என்றவள் எழுந்து வர “ஆத்தா இனி நல்லா நேர நீ நிமிந்து மட்டுமே இருந்தாத்தே இந்த குடும்பத்துல நமக்கு மதிப்பு. இப்புடிக் கூனிக் குறுக நீ என்ன தப்புப் பண்ணுன?” எனக் கேட்கவும் தானே இயல்பாக நிமிர்ந்து வள்ளியம்மாளைப் பார்த்தாள் பூவினி.
Advertisement
“உம் மாமியா நல்ல நாள்லே நல்லா ஆடுவா, இப்ப சலங்கைய கட்டவுஞ் சொல்லவா வேணும். ஆனா, நம்ம ‘நீயெல்லா எனக்கு ஒரு ஆளா’ன்னு நிமிந்து நின்னமுன்னா ஒருத்தியுங் கிட்ட நெருங்க மாட்டா, தெரிஞ்சுக்க.”
சரியெனத் தலையை ஆட்டியவளின் கண்ணீர் கன்னம் தொட துடைத்துவிட்டவர் மேலும் பேசியே அவளை சகஜ நிலைக்குக் கொண்டுவந்திருந்தார்.
பூவினியிடம் பேசியது போலவே அவர்களின் இயல்பான வாழ்வின் தொடக்கத்திற்காக தன் மகள் கனகாவைக் கூட இன்று இந்த பழைய வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை வள்ளியம்மாள்.
இரவு உணவு நேரம் முடிந்து அனைவரும் உறங்க வர குமரன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தான். அவன் மனத்திலும் சிறு கீற்றாய் தயக்கமிருக்க தன் அறைக்கு எழுந்து செல்லாமலே இருந்தான்.
“குமரா ஒறங்கப் போகல? ஒம் பொண்டாட்டி படுக்கப்போயி எம்புட்டு நேரமாச்சு. அய்யாவும் தூங்கிட்டாக, நீயும் போய்யா.” என்றவர் நின்ற வாக்கில் குமரனின் சிகையைக் கோத அவன் திரும்பி அவரைப் பார்த்தான்.
“என்ன பேராண்டி பயமா இருக்கா? எப்பவும் இந்நேரத்துக்கு படுக்கப் போயிடுவ?” என வள்ளியம்மாள் பேரனை சீண்டினார்.
“என்ன அப்பத்தா நக்கலா? எனக்கு என்ன பயம். அதேல்லாம் ஒண்ணுமில்ல. நீங்களா என்னமுஞ் சொல்லாதிய.”
“அப்பறோ என்னத்துக்கு இங்கயே குத்தவச்சுருக்க. போயி கட்டைய சாய்க்க வேண்டியதுதானே.”
“ஹ்ம்ம், நீயெல்லாம் ஒரு அப்பத்தாவா? என்னய பொழுதோட நக்கல் பண்ணிகிட்டே இருக்க?” என்றவன் “பஸ்ட் நைட் பயத்துல நாயிருக்கேன்னு எப்புடி அப்பத்தாவுக்கு வெளங்குச்சோ கரெக்டா கேட்டுப்புடுச்சே.” என முனகியபடியே தனதறைக்கு வந்தான்.
அங்கே மகிழன் தொட்டியில் உறங்கி இருக்க பூவினி அவனது கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
இவன் அறையின் உள்ளே நுழையவுமே பூவினி அதிர்ந்து எழுந்து நின்றாள். இருவருக்குமே தயக்கங்களும் எதிர் காலம் பற்றிய பயமுமே நிறைந்திருக்க எப்படி ஒருவரை ஒருவர் எதிர்கொள்வது என்று தெரியாமல் சில நொடிகள் விழித்தபடி நின்றனர்.
அறையின் கதவும் திறந்தே இருக்க அடுத்து என்ன செய்வது என்பதை இருவருமே உணரவில்லை. இருவரின் மூச்சுக் காற்றின் ஒலியும் கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும் மட்டுமே அறையை நிறைத்தது.
இப்படியே சில கணங்கள் கரைய அதை ஒரு பெருமூச்சால் கலைத்தான் குமரன். அதன் சத்தத்தில் நிமிர்ந்தவளின் அலைப்புறும் கண்களை நோக்கியவன் அவளின் நிலை உணர்ந்து,
“நீ கட்டில்ல தூங்கு. நான் இந்த மர பெஞ்சுல தூங்கிக்குவேன்.” என்றான்.
“ம்” என்றவள் தொட்டிலின் அருகில் செல்ல “மகிழன் இன்னும் தூங்கலையா?” எனக் குமரனும் தொட்டிலின் அருகில் சென்று பார்த்தான்.
“தூங்கிட்டான் அத்தான்.”
“அப்ப நீ என்னத்துக்கு அவனத் தூக்குற?”
“மகிழன் பக்கத்துல இருந்தா, ராத்திரிக்கு அழுதாக் கூட தூக்க ஈஸியா இருக்கும்.”
“ஓஹ், ராத்திரியில எழுந்துக்குவானா?”
“ம்ம்”
“ம்ம்” என இவனும் அவளோடு சேர்ந்து ‘ம்ம்’ கொட்டினான்.
தொட்டியிலிருந்து மகனைத் தூக்க அவன் சினுங்கத் தொடங்கினான். மெல்ல தட்டிக் கொடுத்தபடி பூவினி கட்டிலில் ஏறி அமர்ந்து அவனை அருகினில் கிடத்தி தட்டிக் கொடுக்கத் தொடங்கினாள்.
மகிழனின் சிணுங்கல் மெல்ல அழுகையாய் மாற, பூவினிக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது சத்தமாகப் பாடியபடி அவனைத் தட்டிக் கொடுக்க. குமாரனோ அங்கேயே நின்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு முழிச்சுட்டானா?”
“ம்”
“இப்ப என்ன செய்வ? வேற எதுவும் வேணுமா? யாரையும் கூப்பிடணுமா?”
“இல்லல்ல. இப்ப தட்டுனா தூங்கிடுவான். ஆனா… நீங்க…”
“சீக்கிரம் சொல்லும்மா, இழுக்காம…”
“லைட் ஆப் பண்ணுவீங்களா?”
“ஐயோ வெளிச்சத்துக்கு அழுகுறானா?” எனக் கேட்டவன் விறைந்து சென்று அறை விளக்கை அணைக்க கூடத்து வெளிச்சம் இன்னும் அறையை நிறைத்தது.
குமரன் விரைந்து அறையின் கதவை மூடி விடிவிளக்கைப் போட்டு விட்டவன் அதன் மெல்லிய வெளிச்சத்தில் இவர்களைத் திரும்பிப் பார்க்க, பூவினி மகிழனை மடியில் இட்டு தட்டிக் கொடுக்கத் தொடங்கினாள்.
கூடவே ஏதோ பாடலையும் மென்மையாக முணுமுணுத்தாள்.
குமரனுக்கு முதலில் அந்தப் பாடல் வரிகள் கேட்கவே இல்லை. காதுகளைத் தீட்டி கவனம் செலுத்திக் கேட்க “பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ” என பாடிக் கொண்டிருந்தாள் பூவினி.
‘ஓஹ், கன்னத்தில் முத்தமிட்டாள் பாட்டா?’ என தனக்குள் சொல்லிக் கொண்டவன், ஒரு பெருமூச்சோடு ‘ஹ்ம்ம், கல்யாணம் ஆனா கன்னத்துல முத்தமிட்டு பொண்டாட்டி பாடுவான்னு கனவு கண்டியே குமரா, உன் வாழ்க்கைல … இப்படி கன்னத்தில் முத்தமிட்டாள் பாடி தூங்குற நிலமை வந்துருச்சே’ என நினைத்தவனுக்கு சிரிப்பு பொங்கி வர அதை சிதறி விடாமலிருக்க குமரன் பெரும்பாடுபட்டுப் போனான்.
முதல் முறையாக அவனது அறை அவனை மட்டுமில்லாமல் அவர்களையும் சேர்த்தே அரவணைத்துக் கொண்டது.
பதறாதே எனப் பதறுவதும் மறக்காதே என சொல்லிக் கொண்டே மறந்து போவதும் இயல்பு போல இங்கு நேசிப்பும் அவர்கள் உணராமலே இயல்பாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது.
error: Content is protected !!