Skip to content
Post Views: 2,947
*15*
காலை குளித்து முடித்து என்ன செய்வது என்று தெரியாது அமர்ந்திருந்தார் மாரியம்மாள். வீட்டினில் எப்பொழுதும் ஏதாவது வேலை இருக்கும் இங்கு வெறுமனே அமர்ந்திருந்தார்.
“எப்படி பொழுது போக்குறதுனு தெரியாம நெட்டி தள்ளிட்டு இருக்குறதுக்கு கவிதாவுக்கு செத்த ஒத்தாசை பண்ணலாம்ல.” கந்தசாமி முணுமுணுக்க, அவரை முறைத்துப் பார்த்தார் மாரியம்மாள். பெண் பாத்துக்கொடுத்ததோடு அனைத்தையும் முன்நின்று பேசி செய்து கொடுத்து திருமணம் நல்லபடியாய் நடக்க கவிதா முக்கிய காரணம் என்ற எண்ணம் கந்தசாமிக்கு. அதன்பொருட்டு வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேட்காது அவர் வீட்டிற்கு கூட்டிவந்துவிட்டாரே என்ற ஆதங்கம் மாரிக்கு.
“உடம்பு முடியாததோட தனியா பண்ணுதுல.” என்று அவர் மனைவியை உசுப்ப, மாரியம்மாளுக்கே பொழுது போகாமல் கவிதாவை தேடிக்கொண்டு சென்றார்.
Advertisement
சமையலறையில் பரபரப்பாக சிற்றுண்டி தயாரிப்பில் இருந்தார் கவிதா.
“எதுவும் வேணுமா அண்ணி? ஒரு அரைமணி நேரம் எல்லாம் ரெடி ஆகிடும்.” அடுப்பில் சாம்பாரை ஏற்றிவிட்டு தேங்காய் உடைத்தபடி கவிதா கேட்க, தான் செய்கிறேன் என்று அதை வாங்கிக்கொண்டு அமர்ந்தார் மாரியம்மாள்.
“இப்போதான் உடம்பு தேறியிருக்குனு உன் அண்ணன் சொன்னாரு. எதுக்கு இப்படி எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யணும்?” என்று தன் வேலையை ஆரம்பித்தார் மாரியம்மாள்.
Advertisement
“பெருசா எதுவுமில்லை அண்ணி. இட்லி மாவு இருக்கு சட்னி, சாம்பார் செஞ்சா வேலை முடிஞ்சிது.”
Advertisement
“என்னவோ சொல்ற. வீட்டுக்கு விருந்தாளி வந்தா கூடமாட இருந்து கவனிக்க வீட்டு மருமவ இருக்க வேணாமா? நீயும் உடம்பு முடியாதவ எப்படி தனியா சமாளிப்ப?”
“நேத்திதான் அவ அக்கா ரிசெப்ஷன் முடிஞ்சிருக்கு. நைட் எல்லாம் முடிஞ்சி மண்டபம் காலி பண்ணவே நடுராத்திரி ஆகிட்டாம். உடனே இங்க வரணும்னு எதிர்பாக்க முடியாதுல அண்ணி.” என்று எதார்த்தமாக பதில் கொடுத்தார் கவிதா.
“நீ சொல்றதும் சரிதான். ஆனா இப்படி உடம்பு முடியாம நீ என்ன செய்வேன்னு யோசிக்கணும்ல. நம்ம வீடுனு எண்ணம் இருந்தா எந்நேரமா இருந்தாலும் கட்டையை சாய்க்க கால் தன்னால இங்க வந்திருக்கும். நாங்க வேற தங்கிட்டோம் உனக்கு சிரமமா இருக்கும்னு ரிஷி நைட் வரும்போதே அவன் சம்சாரத்தை இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம்ல.”
Advertisement
“இந்த உடம்பே அவ தேத்திவிட்டது தான் அண்ணி. வேலைக்கும் போய்ட்டு கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லேயே மசக்கை போட்டு படுத்தியெடுத்தது. எல்லாத்தையும் சமாளிச்சு என்னையும் பாத்துகிட்டு குடும்பத்தையும் பாத்துக்கிட்டா. குழந்தை பொறந்த அப்புறம் கூட ரொம்ப நாள் எல்லாம் அவ பொறந்த வீட்ல தங்கல, எழுந்து நடமாட ஆரம்பிச்சதும் என்னையும் பாக்கணும்னு வந்துட்டா. ஏதோ இந்தளவுக்கு திரும்ப என்னால வேலை செய்ய முடியுதுன்னா அவ வீட்டுக்கு கூட போகாம இங்கேயே இருந்து என்னை கவனிச்சுக்கிட்டதுதான் காரணம். இப்போவாச்சும் அங்க போகட்டுமேனு நாந்தான் ரிஷியை அழைச்சிட்டு வரவேணாம் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டேன்.” என்று மருமகளை விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப் பேசிய கவிதா இதனை மருமகளிடம் சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே.
“அதோட குழலி பொண்ணும் சும்மா கிடையாது, தங்கமா தாங்கும் குடும்பத்தை. ஒரு குறை சொல்ல முடியாது எல்லாம் முறையா செஞ்சுது. சின்னது வந்தனா கொஞ்சம் வாய்த் துடுக்கு ஆனா பாசமா இருக்கும். அதுக்கு தான் இன்னும் நல்ல நேரம் வரமாட்டேங்குது. ஒரு வருஷம் ஹாஸ்பிடல்னு அலைஞ்சாங்க இப்போதான் ஏதோ யோகா, டயட்டுனு பாத்துட்டு இருக்கு. சீக்கிரம் நல்லது நடக்கட்டும். எல்லாம் நல்லா பொண்ணுங்க.” என்று கவிதா பேசியது முழுதாய் மாரி கருத்தில் ஏறாமல் பகுதி பகுதியாய் ஏறித் துளைத்துவிட்டது.
காலை உணவு முடித்து அவர்கள் இரயில் நிலையம் செல்ல ரிஷி கார் ஏற்பாடு செய்திருந்தான்.
“முகிலு இரயில் ஏத்திவிட வரேன்னு சொன்னானே.” என்று மாரி கணவரைப் பார்க்க,
“வரவேணாம்னு சொல்லிட்டேன். கார்ல ஏறுனா நேரா ரயிலடியில இறக்கிவிடப் போறாங்க. அதுக்கு எதுக்கு அவன்? வீணான அலைச்சல்.”
“ம்ம்க்கும் அப்பா அம்மாவை ஏத்திவிட வர்றது அலைச்சல் ஆனா பொண்டாட்டி குடும்பத்தை மட்டும் வரவேத்து எல்லாம் பண்ணலாம். நல்லாயிருக்கு உங்க நியாயம்.” திருமணப்பட்டு எடுத்தபோது நிகழ்ந்ததை இப்போது சொல்லிக்காட்டி முரண்டினார் மாரியம்மாள். ரிஷியிடம் பேசிக்கொண்டிருந்தவர் இதனை கண்டுகொள்ளவில்லை. வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்த கவிதாவையும் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு அழைப்பு விடுத்துச் சென்றனர்.
குழலி வீட்டில் அனைவருக்கும் தாமதமாக விடிந்தது. பிரபா ஓராளாய் இழுத்துப் போட்டு எல்லாம் செய்துகொண்டிருந்தார்.
“எதுக்கு அம்மா இவ்ளோ செய்யுற?” சமயலறை மேடையில் வைத்திருந்த பதார்த்தங்களைப் பார்த்து விழி விரித்திருந்தாள் குழலி.
“மாப்பிள்ளை இருக்காரு இதுகூட செய்யலேன்னா எப்படி?”
“அதுக்காக எல்லாத்தையும் தனியா இழுத்து போட்டு செய்வியா? அவளுங்க எங்க? என்னை எழுப்பி இருக்கலாம்ல.”
“நேத்தி புல்லா அவங்களுக்கும் தான் வேலை. எல்லாம் அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டு இருக்காங்க. நீயும் கொஞ்ச நேரம் தூங்கலாம்ல.”
“இப்போவே ஒன்பது ஆகப்போகுது. இன்னுமா?” என்று கேட்டவள் உதவி செய்கிறேன் என்று வேலையில் இறங்க,
“கம்முனு இருடி நான் பாத்துக்குறேன். மாப்பிள்ளை எழுந்துட்டா அவருக்கு என்ன வேணும்னு போய் பாரு.” மகளை விரட்டினார் பிரபா.
“அவர் இன்னும் எந்திருக்கல.”
“சரி போய் ஹால்ல உக்காரு.”
“ம்மா.” மகள் கண்டனமாக பார்க்க,
“இனி நீயே வேலைலேந்து ரெஸ்ட் வேணும்னு கேட்டாலும் கிடைக்காது. கிடைக்கும் போதே எடுத்துக்கோ. எல்லாம் டேஸ்ட் பாத்துட்டு வேற என்ன செய்யணும்னு சொல்லு. அப்படியே மாப்பிள்ளைக்கு புடிச்சது என்னனு சொல்லு செய்திடலாம்.” என்று மகளிடம் கேட்டு முகிலனுக்கு பிடித்தமான உணவையும் செய்துவைத்துவிட்டார்.
நேரம் சென்று ஒவ்வொருவராய் எழுந்து வர, கலகலப்புடன் சென்றது உணவு வேளை. சிறிது நேரத்தில் ரிஷியும் அமுதனும் வந்துவிட, படத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து சென்று வந்தனர். பிரபா வரவில்லை என்று மறுக்க, முகிலனை கொண்டு சரிகட்டி அழைத்துச் சென்றனர். மதிய உணவு வெளியே பார்த்துக்கொள்ள இரவு உணவு கூத்தும் கும்மாளமுமாக தயாராகிக்கொண்டிருந்தது. மறுநாள் காலை அனைவரும் முகிலன் ஊருக்கு பயணப்படுகிறார்கள்.
இருள் கவிழத் துவங்க பெற்றோர் வீட்டிற்கு சென்று சேர்ந்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள அழைத்தான் முகிலன். கந்தசாமி தகவல் சொல்லி அழைப்பை துண்டிக்கப்பார்க்க பிடுங்கிக்கொண்டார் மாரியம்மாள். மகனை பிரிந்து மாதங்கள் ஆனது போல் அத்தனை விசாரிப்பு.
“நாளைக்கு வந்துடுவேன்மா.”
“இன்னைக்கே வந்திருக்கலாம்.” சுணக்கம் பெற்றவரிடம்.
“நேத்தி நின்னதே செம்ம டயர்ட் அதோட இன்னைக்கு காலையில வந்திருந்தா கஷ்டமா இருந்திருக்கும்.”
“சரி சரி இன்னைக்கு நல்லா ஓய்வெடுத்திட்டீல்ல?” அவரென்னவோ அக்கறையில் கேட்க, இவன் நல்லவன் போல் ஓய்வெடுத்து குடும்பமாக படத்திற்கு சென்றது, வெளியே சாப்பிட்டது என்று சுவாரசியத்தில் சொல்லிவிட்டான்.
“புது மாப்பிள்ளைக்கு வீட்ல விருந்து வைக்காம வெளில சாப்பிட வச்சாங்களா? நீங்கதான் சின்னங்சிறுசுக ஏதோ போயிருக்கீங்க அவ அம்மா தங்கச்சி எல்லாம் எதுக்கு வந்தாங்களாம்? குடும்பமா உன்னை சாய்க்க பாக்குறாங்களா?” அதிர்ந்து கேட்க, இந்த பக்கம் கண்களை இறுக மூடி நாக்கை கடித்தான் முகிலன்.
“முகிலு இதெல்லாம் நல்லாவா இருக்கு. பாத்துக்க நீ.” விட்டால் என்ன சொல்லியிருப்பாரோ கந்தசாமி அலைபேசியை பிடுங்கி விட்டார்.
“சும்மான்னு இருக்க மாட்டியா நீ? இங்க நடக்குறத அங்க சொல்றது அங்க நடக்குறத இங்க சொல்றதுனு உன் அம்மா கையில நீயே வேப்பிலை கொடுக்குற. எவ்ளோ சமாளிக்கிறது… எப்போ தான் பொழைக்கப் போறியோ நீ.” என்று ஒருபாடு அவனை கடிய முடியாமல் எரிச்சலை காட்டி விடைபெற்றார்.
நெற்றியை அழுந்த தேய்த்துக்கொண்டு அண்ணார்ந்து பார்த்து பெருமூச்சு விட, உள்ளுணர்வில் திரும்பிப் பார்த்தான். நெறித்த புருவங்களுடன் இவனை பார்த்துக்கொண்டு நின்றாள் குழலி. சட்டென்று இலகுவானவன் என்னவென்று மனைவியை பார்க்க,
“அத்தைக்கு என்னை புடிக்கலையா?”
பதறிவிட்டான் கணவன், “ஹே என்ன மலர்? அப்படியெல்லாம் இல்லை.”
அவனை கூர்ந்து பார்த்தவள் தொண்டை கவ்வும் தயக்கத்தை முயன்று உதறி, “இல்லை அவங்களுக்கு என் மேல ஏதோ வருத்தம். சாதாரணமா பேசுனாலே கொஞ்சம் ஹார்ஷா ரெஸ்பாண்ட் பண்ற மாதிரி இருக்கு.” என்று சொல்லிவிட்டவள் அவன் முகம் மாறவும் பதட்டமானாள்.
“அத்தையை தப்பா சொல்லல. ஏதாவது தப்பான புரிதல் இருந்தா சரி பண்ணலாம்னு கேட்டேன்.”
தாய் கடுமையாக பேசுகிறார் என்று மனைவி சொல்வது வலித்தாலும் இருவரையுமே விட்டுக்கொடுக்க மனமில்லை. அதன் பொருட்டு இரு பக்கமும் சமாதானம் போல் பேசுவதாய் முடிவெடுத்துக்கொண்டவன்,
“அவங்க பெரியவங்க கொஞ்சம் அப்படிதான் இருப்பாங்க. மனசுல எதையும் வச்சிக்காம பேசிடுவாங்க. நீ பெருசு பண்ணாத மலர். போக போக சரியாகிடும்.”
அரைமனதாய் தலையாட்டி வைத்தாள் குழலி.
“மண்டை ஆடுற தினுசே சரியில்லையே.” மனைவியை நெருங்கி அவளை தன்னை நோக்கி இழுக்க, சுணக்கத்துடன் அவனிடமிருந்து பிரிய முயன்றாள் குழலி.
விலக விலக இன்னும் அவளை தன்னுள் இழுத்துக்கொண்டே, “ஹோய் என்ன?”
“ப்ச். விடுங்க, எல்லாரும் தேடுவாங்க.”
“கொஞ்சம் சிரிச்சி, சிணுங்கி, வெட்கத்துல கோவப்பழமா சிவக்குற கன்னத்தோட எங்க நான் கிஸ் பண்ணிடுவேனோனு எதிர்பார்ப்புல நடுங்கிகிட்டே சொல்லுவியே அப்படி சொல்லு விடுறேன்.” நொடியில் அவன் மாறிவிட, அவள் தவித்தாள். மண்டைக்குள் மாரியம்மாள் அமர்ந்து குடைய, அவர் மகனின் குழைவு எல்லாம் அவளுக்கு கூச்சமூட்டுவதற்கு பதில் எரிச்சல் கொடுப்பதாய் மாறியது.
“விடுங்க. எனக்கு பசிக்குது.”
“எனக்கும்தான்.” என்றவன் இதழ்கள் அதன் இணையைத் தேடி பயணிக்க, தலையை பின்னிழுத்தாள் குழலி. இவனும் தேடுதலுடன் அவளை நோக்கி குனிய, முகம் திருப்பினாள். இதழ் சேர வேண்டியது இடம் மாறி விழ, அவள் கன்னம் வாங்கிய ஈரமுத்தம் இனிக்கவில்லை. துவளாது அவன் கன்னத்தில் சிறு சிறு புள்ளிகளிட்டு சிக்கு கோலமிட, சில நொடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் அவன்பால் சரிந்துவிட்டது பெண்மை. சன்னச்சிரிப்புடன் மனைவியை சிவக்க வைத்து விலகினான்.
“பிராடு. நான் ஒன்னு கேட்டா அப்படியே என்னை மாத்திடுறது.” செல்லமாய் சலித்துக்கொண்டே வெளியேறிவிட்டாள் அவள்.
அன்றைய பொழுதை மகிழ்வாக கொண்டாடிவிட்டு மறுநாள் காலை அனைவரும் இரயில் ஏறினர் குழலியின் தாலி பெருக்கும் விழாவுக்கு. மாலை போல ஊரில் வந்து இறங்க, குடும்பத்தினருக்கு தங்கும் விடுதியில் அறை ஏற்பாடு செய்திருந்தனர். முகிலனும் குழலியும் அவர்களை அங்கு விட்டுவிட்டு தங்கள் வீடு நோக்கி பயணப்பட்டனர். தன் குடும்பத்தை அறையில் விட்டுவிட்டு தான் மட்டும் தனியாய் வீடு செல்வதில் வருத்தம் கொண்டவளாய் சோர்ந்துவிட்டாள் குழலி. ஆட்டோவில் வைத்து ஒன்றும் கேட்கமுடியாமல் மனைவியின் கையை பிடித்துக்கொண்டான் முகிலன். பையுடன் இறங்கிய மகனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தது போல் திண்ணையிலிருந்து எழுந்து வேகமாக வந்தார் மாரியம்மாள். ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பியவன்,
“என்னம்மா நாளை பங்ஷனுக்கு எல்லாம் ரெடியா?” என்று வீட்டை பார்த்துக்கொண்டே கேட்டான். இன்னும் பந்தல் பிரிக்கப்படாமல் நாற்காலிகளும் மேசையும் விழாவிற்கு என்று இருந்தது.
“வயசான காலத்துல எங்களால என்ன பண்ண முடியுமோ அந்தளவு பண்ணியிருக்கோம்.” ஓரப்பார்வை மருமகளிடம் சென்று வந்ததால் பதில் குதர்க்கமாய் வந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லாத குழலி வீட்டினுள் சென்றுவிட்டாள்.
“விளக்கு வைக்குற நேரம் இப்படி உர்ருனு போறா?” என்று குறை படிக்கவும் அவனுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
“இன்னும் வீட்டுக்குள்ள கூட போகலை அதுக்குள்ளவா? அவ அம்மா, தங்கச்சி எல்லாம் விட்டுட்டு வந்த வருத்தம் இருக்கும்ல ம்மா. நீ எல்லாத்துக்கும் குறை கண்டுப்பிடிக்க பாக்காத.” மனைவியைப் போல் தாயை எளிதாக சமாளிக்கமுடியாது என்று அவரை அடக்கப்பார்த்தான். அதுவே வெறுப்பை அதிகப்படுத்தியது.
“என்ன சொல்லிட்டேன் இப்போ? புதுசா கல்யாணமான பொண்ணு நிறைஞ்ச மனசோட சந்தோஷமா வீட்ல விளக்கேத்தி பூசை பண்ணி குடும்பத்தை பாக்கணும்னு சொன்னா, அது தப்பா?” என்று அவர் நிற்க, மகன் நிற்கவில்லை உள்ளே சென்றுவிட்டான்.
அறைக்குள் உடை மாற்றிக் கொண்டிருந்தவள் இவன் வருகையை கூட பெரிதாக எடுக்கவில்லை. அவள் மனநிலை மாற்றவெண்ணி காபி கேட்டான். அமைதியாக போட்டு வந்து கொடுத்தாள்.
“மணியாகுது மலர். மறக்காம விளக்கு ஏத்திடு. இங்க அதெல்லாம் கொஞ்சம் பாப்பாங்க.” என்று சொல்ல, அதற்கும் அவளிடம் அமைதியே.
சாமி முன்னும் வாசலிலும் விளக்கு ஏற்றினாள். ஒருவித திருப்தியுடனும் கர்வத்துடனும் பார்த்தார் மாரியம்மாள்.
“ராத்திரிக்கு சப்பாத்தி போட்டு குருமா பண்ணிடு.” என்று அதே அதிகாரத் தொனியில் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இருக்கும் மனநிலையில் சப்பாத்தி தேய்க்க வேண்டுமா என்று எரிச்சல் வந்துவிட்டது குழலிக்கு. நேரே கணவனிடம் சென்றவள்,
“நாலு பேருக்கு சப்பாத்தி போட்டு குருமா வைக்க ஒருமணி நேரம் ஆகும். என்னால இப்போ முடியாது.”
சட்டென்று அவள் வந்து சொல்லவும் அவனுக்கு புரியவில்லை. அப்போதுதான் கொல்லைப்புறத்தில் முகம் கழுவி உள்ளே வந்தான்.
“சப்பாத்தி முடியாதுனா சிம்பிளா ஏதாவது பண்ணிக்கலாமே அதுக்கு ஏன் இவ்ளோ கோவம்?”
“உங்க அம்மா செய்ய சொல்லிட்டு எங்கேயோ போயிருக்காங்க.” என்றாள் உர்ரென்று.
‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று அவனுக்கும் எரிச்சல்தான்.
“முடியாதுன்னா அவங்க செய்ய சொன்னப்போவே முடியாதுனு சொல்ல வேண்டியதுதானே?” என்றான் இவனும் கொஞ்சம் முகம் தூக்கி. அம்மா என்னவென்றால் வீட்டிற்குள் நுழையும் முன் பஞ்சாயத்து வைக்கிறார், மனைவி முகம் கழுவி வந்து அமரக்கூட இல்லை அவள் ஒருபக்கம் குறை படிக்கிறாள் என்று கடுப்பு.
“சொன்னா கேட்டுருவாங்களா?”
“ஏன் கேக்கலைனா இன்னொரு முறை பொறுமையா சொல்ல மாட்டியா? கிராமத்துல இருக்குறவங்க இங்க எல்லாரும் எப்படி இருப்பாங்களோ அதை பாத்து அப்படியே எதிர்பாக்குறாங்க. நீ கொஞ்சம் பொறுமையா இருந்தா என்ன?” வார்த்தைகள் தடித்ததோ சுதாரித்துவிட்டது பெண்.
முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டே அமர்ந்தவள், “எல்லாரையும் அங்க விட்டுட்டு நாம மட்டும் இங்க இருக்குறது ஒரு மாதிரி இருக்குங்க. டிஸ்டர்ப்டா பீல் பண்றேன். நாம வேறு வீடு மாறலாமா? எல்லாரும் வந்தா இருக்குற மாதிரி? அத்தை மாமாவுக்கு கூட தனியா ஒரு ரூம்?” மண்டையை குடைந்த விஷயத்தை போட்டுடைத்து எதிர்பார்ப்புடன் அவள் முகிலனைப் பார்க்க, அவனுக்கு மாரியம்மாள் சொன்னது நினைவு வந்தது.
“சென்னைக்கு மாத்திட்டு வரணும்னு சொல்லிட்டு இங்க வேற வீடு பாக்கணும்னா எப்படி சரிவரும்?”
“ஆமால்ல.” இன்னும் சோர்ந்துவிட்டது பெண். வருகிறேன் என்று சொல்பவன் எப்போது என்று இன்னும் சொல்லவில்லை. அதற்கான முயற்சி எடுத்தானா தெரியவில்லை. அந்த பேச்சினை எடுத்தால் விவரம் சொல்வானா என்று அவனுக்கே வெளிச்சம். வழி தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டது போல் களைப்பாக உணர்ந்தது பெண் மனது.
“என்ன டல்லாகிட்ட? வா சப்பாத்தி போடுவோம்.”
“போடுவோமா? உங்களுக்கு தெரியுமா?” சட்டென்று ஆர்வம் வந்தமர்ந்தது குழலி விழிகளில்.
“நீயே வந்து பாரு.” என்று கண்சிமிட்டியவன் சமையலறை செல்ல, பின்னோடு சென்றாள் குழலி.
தேவையான அளவு கோதுமை மாவு எடுத்து தண்ணீர் ஊற்றி அவன் பிசைந்ததிலேயே அவனுக்கு சமையல் புதிதல்ல என்று புரிந்துபோனது பெண்ணுக்கு. சட்டென்று ஒரு குளுமை. சமைக்கத் தெரிந்த கணவன் அமைவதெல்லாம் வரம் அல்லவா.
“என்னையே வேடிக்கை பாக்காம குருமா வைடி. தெரியுமா இல்லை?” அவன் கிண்டலாய் பார்க்க, வளையலை பின்நகர்த்தியவள், “இப்போ பாருங்க.” சவால் போல மடமடவென்று காய்கறிகள் அறிந்து குருமாவுக்கு தேவையானவற்றை மேடையில் எடுத்து வைத்தாள். கையை கட்டிக்கொண்டு அவன் வேடிக்கை பார்க்க, சிறிது நேரத்தில் குருமா தயாரானது. பின் இவன் சப்பாத்தி தேய்க்க, அவள் தோசை கல்லை போட்டாள். செல்ல சீண்டலும் இயல்பான பேச்சுகளும் என இருவரும் உணவு தயார் செய்து வைத்தனர். பொறுமையாக வந்த மாரியம்மாள் மருமகள் அனைத்து வேலையும் முடித்துவிட்டாள் என்று மகிழ்ந்துவிட்டார்.
மறுநாள் நிகழ்வுகளை பற்றிய பேச்சினூடே இரவு உணவு முடித்து அறைக்குள் வந்தவர்கள் படுக்கும் முன் தங்கையிடமிருந்து அழைப்பு வர, பேசிவிட்டு வைத்தவள் மனதினில் மீண்டும் சொல்லனா வேதனை. ஒரே ஊரில் இருந்துகொண்டு தன் வீட்டிற்கு வர முடியாமல் அவர்கள் தள்ளி இருப்பது மனதை அறுத்தது. பார்த்து பார்த்து பொத்திவைத்த குடும்பம் தன்னை விட்டு தூரம் சென்ற உணர்வு.
மனைவியின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டவன், “ரிஷப்ஷன் அப்போ அம்மா அப்பா தங்குறதுக்கு உங்க வீடு பத்தாதுனு ரூம் போட்டு பக்கத்துல தங்க வச்சோமே… இதெல்லாம் நம்மள மாதிரி மிடில் க்ளாஸ்ல நார்மல் மலர். நீ இவ்ளோ பீல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை.” என்று அவளை தன்னில் சாய்த்துக்கொண்டான்.
“வேற வீடு பாக்குறதை விட சொந்தமா வீடு கட்டணும் மலர். என்னோட பல வருஷ ஆசை. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து வச்சிருக்கேன். இடம் வாங்க போதும்னு நினைக்குறேன் மீதிக்கு லோன் போடணும்.” என்று அவன் பகிரவும் அவனிலிருந்து நிமிர்ந்தவள், “சீக்கிரம் நாம இடம் வாங்கி வீடு கட்டலாம்ங்க.” நம்பிக்கையாய் அவன் கையை அழுத்தினாள்.
தன் கனவு இல்லத்திற்கு மனைவி துணை நிற்பாள் என்ற நிதர்சனம் யானை பலம் கொடுத்தது அவனுக்கு. உச்சி குளிர்ந்து களிப்புற்றவன் ஆசையாய் மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தான். பின் கன்னத்தை விட்டுவைக்க மனமில்லாமல் அங்கும் வைத்தான். மூக்கு நானிருக்கிறேன் என்று புடைத்து நிற்க அதை ஏன் விடுவானேன் என்று அதனை ஈரம் செய்து கடித்து வைக்க, செல்லமாய் அவனை அடித்தவள்,
“இழுத்து போத்தி தூங்கப்போறதுக்கு இவ்ளோ சீன்.”
“ம்ம் இழுத்து…” என்று அவளை தன் மீது இழுத்தவன், “போத்தி…” தனக்கு போர்வையாய் மேலே போட்டுக்கொண்டு அவளுக்கு போர்வையாகிப் போனவன் உறங்க நேரம் பிடித்தது.
சிணுங்கல்களுக்கு இடையே விலகிய தடைகள் தவிப்பை வெளிக்கொணர்ந்து தகிப்பை துரிதப்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து வியர்வைத் துளிகளை பரிசளித்தது. முப்பதை கடந்ததால் எதிலும் நாட்டமிருக்காது, உணர்வுகள் மரத்துப்போயிருக்கும் என்று எண்ணியதற்கு மாறாக கணவன் தன்னுள் உயிர்ப்பித்த உணர்வுக் கொந்தளிப்பை இனிய அதிர்வுடன் எதிர்கொண்டாள் குழலி. பலமடங்கு ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் இடையே ஏற்பட்ட தடங்கலை அழகாய் கையாண்டு அவளை இலகுவாக்கி ஆற்றுப்படுத்தி முன்னேறினான் முகிலன்.
இலைமறைக் காயாய் காட்டப்பட்ட பின்னனியில் அந்தரங்கமாய் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா, இத்தனை வருடம் தெரியாமல் போனதே என்று இருவரும் எண்ணுமளவுக்கு துணையின் நெருக்கம் மகிழ்ச்சி சுரப்பிகளை சுரந்து பறக்க வைத்தது.
“பட்டர்ப்ளை பறக்குறது, சிலிர்த்துப் போறது, நம்மளை மறக்குற அளவுக்கான பீலிங்ஸ் எல்லாம் சுத்த ஹம்பக்னு நினைச்சேன்.” கண்களை மூடி கணவன் மார்பை மஞ்சமாக்கி தன்னை மறைக்க பாடுபட்டவளின் வார்த்தைகள் அவளையும் அறியாது கிளர்வில் வெளி வந்திருந்திருந்தது.
“நமக்கான துணைக்கிட்ட நம்மளை மறக்க வைக்குறதுக்கான சக்தி இருக்கும். அந்த போதை வேற எதுலயும் வராது.” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டவனும் நிம்மதியாக கண்களை மூடினான்.
ஏமாற்றம், தடுமாற்றம், தயக்கம், சந்தேகம் என்ற அனைத்தும் அவனது அணைப்புக்குள் அழிக்கப்பட்டு நிம்மதியாக துயில் கொண்டாள் மைம்மலர்க்குழலி.
விடிந்த பின் அடித்த அலாரத்தை அணைத்து விடியல் விரைவாய் வந்துவிட்ட எண்ணத்தை புறந்தள்ளி சோம்பலுடன் எழுந்தாள் குழலி. அணைத்துக்கொண்டு உறங்கிய கணவன் காந்தமென இழுக்க, குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பட்டென அவளை வாரிச் சுருட்டி கீழே தள்ளினான் முகிலன்.
“ராத்திரி எத்தனை தடவை கேட்டேன் அப்போல்லாம் விட்டுட்டு இப்போ தூங்கும் போது கொடுக்குற…”
“எப்போ முழிச்சீங்க?”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அப்புறம் நீ கேட்டதுக்கு சொல்றேன்.”
“நீங்க எதுவும் கேக்கவே இல்லையே.”
“அதுதான் ராத்திரி கேட்டேனே…” என்று அவன் குழைய,
“இப்போ கொடுத்தேனே.” என்று நெகிழ்ந்தாள் அவளும்.
“கேட்ட உடனேயே கொடுக்கணும் அதுதான் நல்ல பழக்கம்.”
விஷமமாய் சிரித்தவள், “இப்போ கேளுங்க.” என்றவள் கன்னத்தை வலிக்க கிள்ளி கொஞ்சியவன் அவளை விட்டு தலைக்கு கைகொடுத்து மல்லாக்க படுத்தான்.
“நான் போகவா? சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகணும்.”
“நான் உன்னை புடிச்சி வைக்கலையே.”
“பிராடு…” சிரித்துக்கொண்டே வெளியே ஓடினாள் குழலி.
நேரம் யாருக்கும் நிற்காமல் ஓட, அவள் வீட்டினர் வரவும் அவளை கையில் பிடிக்க முடியவில்லை. கணவனுடன் சேர்ந்துவிட்ட திருப்தியோடு குடும்பத்தினரின் வருகை சேர்ந்துகொள்ள, மலர்ந்து பொலிந்து கிடந்தது அவள் முகம். மாறாக விருந்தினர்கள் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அவன் முகம் வாடிப்போனது. எதையோ உள்ளுக்குள் வைத்து தவிப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தவனை பிடித்து வைத்து கேட்க நேரமில்லாமல் போனது குழலிக்கு. முகிலனின் நெருக்கம் அவன் வீட்டோடு ஒரு ஒட்டுதல் கொடுத்திருக்க, எதிலும் ஒதுங்காமல் தானே கேட்டு முன்னின்று வந்திருந்தவர்களை கவனித்தாள். தாலி பெருக்கிப் போட்ட கையோடு இங்குமங்கும் ஓடி அனைத்தையும் மேற்பார்வை பார்த்தாள்.
“பரவாயில்லை பொண்ணு மரியாதை தெரிஞ்சதா விவரமா இருக்கு. இதுக்குத்தான் படிச்ச பொண்ணா பாக்கணுங்குறது.” முன்பு மாரியம்மாளிடம் வேறு மாதிரி பேசிய நாக்கு இன்று வேறு மாதிரி பேசிச் சென்றது.
அப்படியா இருக்கா என்று மாரியம்மாள் கூட பூதக்கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு அவளை ஊன்றி கவனித்தார். சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்த போதிலும் இன்முகமாக அனைத்தையும் சமாளித்தாள்.
“பாக்கவே இது எவ்ளோ அழகா இருக்கு. இப்படியே இருக்கலாம்னா எங்க கேக்குறாங்க. சென்னைக்கு போணுமாம். நீங்க சொல்ல மாட்டிங்களா உங்க பொண்ணுக்கு?” என்று தன் குணம் தலைதூக்க பிரபாவிடம் பேசிவைத்தார்.
“அவங்க முடிவு பண்றதுதானே அண்ணி. பொண்ணு பாக்குறப்போவே மாப்பிள்ளை அங்க வர்றதா சொன்னாங்க. இப்போ இல்லையா?” என்று பிரபா புரியாது கேட்டார். என்னவோ தன் மகள் அவர் மகனை பிரித்து செல்வது போல் அவ்வப்போது பேசுகிறாரே இவர்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி அவரிடம்.
“அவன் போனும்னு தான் சொல்றான்.” என்று மழுப்பலுடன் நகர்ந்து விட்டார் மாரியம்மாள்.
அவர் பதிலில் குழம்பியவர் கிளம்பும் முன் மகளை தனியே பிடித்தார்.
“மாப்பிள்ளை என்ன யோசனையில இருக்காருன்னு தெளிவா கேட்டுக்க குழலி.”
“என்னம்மா சொல்ற புரியல?”
“நீ இங்கேயே இருக்க வேண்டியது தானேங்குற மாதிரி ரெண்டு மூணு தடவை சொல்லிட்டாங்க உன் மாமியார். அவங்கதான பொண்ணு பாக்குறப்போ மாப்பிள்ளை சென்னையில இருக்கப் போறதா சொன்னாங்க? இப்போ என்னவோ உனக்காக அவர் வர்ற மாதிரி பேசுறாங்க. நீ என்ன ஏதுன்னு பேசி தெளிவா இருந்துக்கோ அப்போதான் தேவையில்லாத பிரச்சனை வராது.” அவர் சொல்லிச் சென்ற அறிவுரை அவர்களின் பூசலுக்கும் பிரிவுக்கும் வழிவகுத்தது.
error: Content is protected !!