Skip to content
Post Views: 2,462
உனதன்பில் சரணாகிறேன் 18
பிள்ளைகள் முன்பு ம்ருதவ் மித்யுகாவின் செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ம்ருதவ் செண்பகத்தை ஏறிட, அவர் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வெளியேறியிருந்தார்.
காதலில், அவனிடத்தில் எப்போதும் அவள் அதிரடி தான். ஆனால் இந்த அணைப்பில் அவன் உணர்வதெல்லாம், அவளின் தத்தளிப்பை தான். தன்னிடத்தில் திடம் வேண்டுகிறாள் என்பதைத்தான்.
Advertisement
“யுகா” என்றவன், தன்னுடைய ஒற்றை கரத்தை மட்டும் அவளின் கழுத்துக்கு கீழ் முதுகில் ஆறுதலாய் பதித்தவன்,
“இனி எந்த கஷ்டமிருந்தாலும், நீ தனியா அனுபவிக்கனுமில்லை” என்றான்.
‘நானிருக்கேன்’ என சொல்லாத வார்த்தையின் பொருளை, அவனின் மென் தட்டல் வலியுறுத்தியது.
Advertisement
“உங்களுக்கு என்னை புரியுதா ம்ருது?”
Advertisement
அவன் மீது சாய்ந்திருந்தவாறு முகத்தை மட்டும் உயர்த்தி மித்யுகா வினவ, அவளின் நெற்றியில் தன் நாடி பதித்து விலகி புன்னகைத்தவன்,
“ரொம்ப” என்றான்.
“ம்ருது…”
Advertisement
“அப்போ நீ விட்டுபோனதும் எனக்காகத்தான்… இப்போ என்கிட்ட நீ வரதும் எனக்காகத்தான்… உன்னை நீ சொல்லித்தான் எனக்கு புரியணுமா?” என்ற ம்ருதவ், “கல்யாணம் பண்ணிக்கலாமா யுகா? ரொம்பவே வெயிட் பண்ணிட்டேன்” என்றான்.
“ம்ருது” என்று அவனது மார்பில் கன்னம் அழுத்தியவளின் அழுத்தம் அவனை அணைத்திருந்த கைகளிலும் பிரதிபலித்தது.
“இதெல்லாம் எனக்கு போதாது யுகா…”
மித்யுகா அவன் சொல்லிய பொருள் புரியாது விலகி என்னவென்று பார்க்க…
“மொத்தமா வேணும்” என சுட்டு விரலை அவளை நோக்கி காண்பித்திருந்தான்.
சில வார்த்தைகளில், அவளை தன்னைச்சுற்றியே எண்ண வைத்திருந்தான்.
சற்று நேரத்திற்கு முன்னிருந்த கலக்கங்கள் யாவுமின்றி, அவனுடன் இணையவிருக்கும் நொடிக்காக அவனுடன் பயணிக்கத் துவங்கியிருந்தாள்.
திருச்சியின் காலையொளி இன்னும் முழுதாய் பரவாத நேரம்.
மலைக்கோட்டை,
உச்சிப்பிள்ளையார் கோவில்.
தெய்வீகமான சூழலில், ம்ருதவின் தோள்கள் உரச அவனருகில் நெருங்கி நின்றிருந்த கணம், மித்யுகாவின் கரங்கள் இயல்பாக நடுங்கின.
அதை உணர்ந்த ம்ருதவ், யாருக்கும் தெரியாமல் அவளின் விரல்களை மெதுவாகப் பற்றிக்கொண்டான்.
மென் பற்றல்…
அவளுக்கு வாழ்க்கை முழுவதும் கிடைத்த பாதுகாப்பைப் போலிருந்தது.
“மாலையை போட்டுக்கோங்க” என்று இறைவன் முன் வைத்த மாலைகளை ஐயர் கொடுத்திட,
“ஷெல் ஐ” என்று எப்போதும்போல் அவளின் விருப்பத்தை முன்வைத்து அனுமதி கோரினான் ம்ருதவ்.
கருவிழி உள்வாங்கும் அவனது முகத்தில் பார்வையை ஆழ பதித்தவள், மென்மையாய் தலையசைக்க, மாலையை அணிவித்தான். அவனை அவளும் பின்பற்றிட, சிரம் தாழ்ந்து அவள் அணிவித்த மாலையை ஏற்றுக்கொண்டான்.
அவனது காதல் மட்டுமல்ல, அவன் என்று அவளுக்கு அடிமை தான். அவளில் அவன் முழு சரணாகதி என்பதை சிறு செயலில் உணர்த்தியிருந்தான்.
சிவேஷும் சிவன்யாவும் அருகில் நின்றுகொண்டு எல்லாவற்றையும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“பாட்டி… அம்மாவுக்கு இப்போ கல்யாணமா?” என்று சிவன்யா மெதுவாகக் கேட்டாள்.
“ஆமா…” என்றார் செண்பகம் சிரித்தபடி.
“அப்போ சிவா இனி நம்மளோடவே இருப்பாங்களா?” சிவேஷ் துள்ளலோடு வினவினான்.
“எஸ்… இனி எல்லாரும் ஒண்ணா இருப்போம்” என்ற ம்ருதவ், “ஒரே ஃபேமிலியா” என்றான்.
குழந்தைகள் இருவரும் கைத்தட்டி மகிழ, ஐயர் ம்ருதவ்வின் கரங்களில் தாலியை கொடுத்தார்.
“மேளம், நாதஸ்வரம் இல்லையேன்னு நினைச்சேன். இருந்திருந்தாலும் இந்த கைத்தட்டலை விட சிறப்பானதா இருந்திருக்காது” என்றான் கமலேஷ்.
தாலியை வாங்கிய ம்ருதவ், தன்னவளின் கண்களோடு உறவாட,
மித்யுகாவுக்கு உலகமே அப்போதுதான் இயங்குவது போலிருந்தது.
என்றோ நின்றுவிட்ட அவளது வாழ்க்கை புதிய பாதையில் ஆரம்பித்திருந்தது.
ம்ருதவ் அவளை பார்த்தான்.
அவளின் கண்களில் கண்ணீர்.
பயமில்லை.
கலக்கமில்லை.
தவிப்பில்லை.
தயக்கமில்லை.
தடுமாற்றமில்லை.
வலியில்லை.
நிம்மதி மட்டுமே.
மனதில் சஞ்சலங்கள் துறந்த அமைதி மட்டுமே.
அவனில் அவள் சரணடைந்திட சித்தம் கொண்டவளாய், இதயத்தில் அவனது காதலை மட்டுமே நிறுத்தி, பனிக்கும் விழி இமைகளை மூடி திறந்தாள்.
“கட்டுங்க மாப்பிள்ளை…” என்ற செண்பகத்தின் நெகிழ்வான குரலுடன், ம்ருதவ் தாலியோடு சுற்றிய கை அணைப்பில் தன்னவளை நிறுத்தி, அத்தனை நிதானமாக ஒவ்வொரு முடிச்சினையும் இட்டு அவளின் உச்சியில் அழுத்தமாக முத்தம் பதித்தான். முத்தத்தின் குளுமையோடு, அவனது சூடான கண்ணீரும் அவளோடு சேர்ந்தது.
“ஹெவன்லி ஹேட் யூ யுகா!” அன்றைய அவனின் கதறலுக்கு கொஞ்சமும் குறைவின்றி அழுத்தமாய் ஒலித்தது.
மூன்று முடிச்சுகள். அவர்களின் வாழ்வை பிணைத்தது என்றால், அவனின் முத்தம் காதலுக்கானதாய், கண்ணீர் அவனின் வலிக்கான நிம்மதிக்கானதாய்.
மித்யுகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ஒற்றைத்துளி அவனின் பாதத்தில் விழுந்து தெறித்தது. இனி அவனின் வழித்தடத்தில் அவளல்லவா? பெரும் மகிழ்வை உள்ளடக்கி முறுவல் கொண்டிருந்தாள்.
“எமோஷனல் ஆகுது கமல். இந்த சிவா கொஞ்சம் கம்மியா லவ் பண்ணலாம்” என்ற ரதி, கமலேஷ் புஜத்தில் முகம் மறைத்தவளாக துளிர்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
“இதுக்காக எத்தனை ஏக்கம், அழுகை, வலி… அவனோட ரியாக்ஷன் இதுவே கம்மிதான் ரதி” என்ற கமலேஷ், “ஆனா நம்மையும் அழ வைக்கிறான் பாரேன்” என்று புன்னகைத்தான். வெண்படலம் படர்ந்த நீரினை உள்ளடக்கியவனாக.
செண்பகம் கைகளைகக் கூப்பியபடி கண்களை மூடிக்கொண்டார்.
“என் பொண்ணை நல்லா பாத்துக்கோங்க…” என்ற தாயின் மனப்பிரார்த்தனை அமைதியாக அந்த கோவிலில் கரைந்தது.
ம்ருதவ் மெதுவாக மித்யுகாவின் நெற்றியில் குங்குமம் வைத்தான்.
அந்த சிவப்புத் துளியோடு, அவளின் வாழ்க்கையும் புதிதாய் ஆரம்பித்தது.
கோவிலுக்கு வெளியே வந்தபோது, மலைமேல் வீசியக் காற்று மெதுவாக அவர்களை வருடியது.
மித்யுகா வானத்தைப் பார்த்தாள்.
பல வருடங்களாக மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் மொத்தமாய் விலகியிருந்தது.
அவள் அருகே வந்த ம்ருதவ், “என்ன யோசனை?”
“எனக்கு இந்த அமைதி இனி எப்பவுமே கிடைக்கும் நினைக்கல…”
“இது ஆரம்பம் மட்டும் தான் யுகா… நமக்கான ஆரம்பம்… இன்னும் நீண்டு இருக்கே!”
அவள் அவனைப் பார்த்தாள்.
அவன் நீட்டிய கரத்தை, தயக்கமின்றி பிடித்துக்கொண்டாள். உரிமையாய்.
“அங்க உட்காரலாமா?”
எப்போதும் அங்கு வந்தால் உட்காரும் திண்டினை சுட்டிக்காட்டி மித்யுகா கேட்க,
கோர்த்த கையினை விடாது அவ்விடம் அழைத்துச்சென்று அவளுடன் அமர்ந்தான்.
“என்னடா இங்க உட்கார்ந்துட்டீங்க? நல்ல நேரத்தில் வீட்டுக்குப் போகணும்” என்று கமலேஷ் வர,
“கொஞ்ச நேரம் கமல் அண்ணா” என்றாள் மித்யுகா.
கமலேஷ் ம்ருதவ்வை ஏறிட,
“நீங்க போங்க… நாங்க வர்றோம்” என்றான்.
“அதெப்படி நீங்க இல்லாம நாங்க மட்டும் போறது?” என்று ரதி கேட்க,
“ஆமா மாப்ள… வீட்ல போய் விளக்கேத்தி, சின்ன சின்ன சடங்காவது செய்யணுமே” என்றார் செண்பகம்.
“நான் அவங்ககிட்ட பேசணும்மா… பிளீஸ்!” என்றாள் மித்யுகா.
எதைப்பற்றி என்று அவர் மட்டுமல்ல மற்ற மூவரும் கூட அறிந்திருந்தனர்.
“பேசிட்டு வரட்டும் ஆண்ட்டி. நாம வீட்டுக்குப் போவோம். அவங்க வர நேரம் ஆரத்தி எடுக்கணும்ல. நாம முன்ன போறது சரியா இருக்கும்” என்றாள் ரதி.
“எப்படிடி… எதுவாயிருந்தாலும் சமாளிக்கிற வித்தை உன்னால மட்டும் முடியுது” என்று கமலேஷ் கேட்க,
“அதான் சமாளிச்சாங்காளே அண்ணா… இவங்களுக்கு மெமரி லாஸ் அப்படின்னு” என்று சரியான நேரத்தில் சொல்லிக் காண்பித்தாள் மித்யுகா.
“அப்போ அதை நீ நம்பலயா?” ரதி கேட்க, மித்யுகா இல்லையென தலையசைத்தாள்.
“நிஜமா?”
“ஆமா!”
“சிவா சொன்னானா?”
“இல்லை. அன்னைக்கு நீங்க சொல்லும்போதே தெரியும்.”
“அடிப்பாவி… அப்போவே சொல்லியிருக்கலாம்ல…”
“புதுசா ஏதோ ட்ரை பண்றீங்க… அதை ஸ்பாயில் பண்ண வேணாம் நினைச்சேன்.”
“எது நான் பொய் சொல்றதா?” என ரதி கேட்ட விதத்தில் அனைவரிடத்திலும் சிரிப்பு பரவியது.
“குட்… இந்த சிரிப்போடே எல்லாம் பேசி முடிச்சு, சீக்கிரம் வந்து சேருங்க” என்ற ரதி, “வாங்க நாமப்போவோம்” என மற்றவரை அழைத்தாள்.
ரதி மற்றும் கமலேஷ் பிள்ளைகள் இருவரையும் ஆளுக்கொருவராய் பிடித்துக்கொண்டு படிகள் இறங்கிட,
“என் பொண்ணு ரொம்ப அழுதுட்டா மாப்ள… இனியாவது அவள் சந்தோஷமா இருக்கணும்…” என்றார்.
“வாழ்ந்துக்காட்டுறோம் அத்தை!”
ம்ருதவ் கூறிய வார்த்தைகளைக் காட்டிலும், அவனது முகத்தில் தவழ்ந்த பேரொளி அவருக்கான நம்பிக்கையாய்.
“சந்தோஷம் மாப்ள” என்ற செண்பகம், “சீக்கிரம் வந்துடுங்க” எனக்கூறி நகர்ந்தார்.
காலை நேரமென்பதால் முன் அதிகாலை பூஜை முடிந்து கோவில் பரபரப்படங்கி, சூழல் அத்தனை அமைதியாக இருந்தது.
பொழுது மெல்ல புலர்ந்திருக்க… மெல்லிய மஞ்சள் ஆரஞ்சு வர்ணத்தில் வானம் நாணம் கொண்டிருக்க, மலை உச்சியிலிருந்து மின்மினியாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்த காட்சி அத்தனை ரம்மியமாய்.
அதைவிட தனக்கு அருகில் தான் கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈர வாசத்தோடு அமர்ந்திருப்பவளின் முகம் காண காண அவனுள் மீண்டும் மீண்டும் அவளிடத்தில் புதிதாய் காதல் மலரும் மாயம்.
ஒப்பனைகள் ஏதுமின்றி வயதுக்கேற்ற பக்குவ அழகில் மனதை அத்தனை கொள்ளைக்கொண்டாள்.
இறுதியாய் ம்ருதவின் கண்கள் நிலைத்தது என்னவோ அவர்களின் காதலுக்கு வேராய் அமைந்திட்ட, கன்னம் உரச அசைந்தாடும் அவள் அணிந்திருந்த ஜிமிக்கியில் தான்.
‘ப்ரீத்டேக்கிங் சிவா…’ என்று தனக்குத்தானே உள்ளுக்குள் வலியுறுத்தியவன், அவள் பேச வேண்டுமென்பதையே மறந்தவனாக அவளில் லயித்திருந்தான்.
ஏங்கிய சொர்க்கமவள்.
அவனின் காத்திருப்பு அவள்.
தன்னகம் வந்து சேர்ந்துவிட்ட உணர்வை ஆழ்ந்து அனுபவித்தான்.
அவனுக்கு மாறாக அவ்வளவு நேரமுமிருந்த இதம் தொலைய படபடப்போடு, இளங்காலை குளிர் காற்றிலும் வியர்வைகள் துளிர்க்க, மடியில் இரு கைகளையும் கோர்த்து விரல்களை பிசைந்துகொண்டு மேலெழும்பும் சூரியனை வெறித்திருந்தாள் மித்யுகா.
அவளின் படபடப்புக்கான காரணத்தை அவதானித்தவன், அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.
“இப்போவே சொல்லணும் அவசரமில்லை யுகா! நீ சொல்லணும் கூட தேவையில்லை. நாம நடந்ததையெல்லாம் அந்த இடத்திலே விட்டுட்டு, நமக்கான அடியை எடுத்து வைப்போம்” என்றான்.
உதடுகள் துடிக்க, கரை உடைக்க முட்டி நின்ற கண்ணீரோடு, இட வலமாக தலையசைத்தவள்,
“சொல்லணும்… மொத்த பாரத்தையும் உங்ககிட்ட இறக்கி வச்சிட்டு, தெளிஞ்ச மனசோட, உங்க கை பிடிச்சுக்கிட்டு நம்ம வீட்டுக்கு வரணும். உங்க யுகாவா மட்டும் வரணும்… ம்ருதுவ்வோட யுகாவா மட்டும் வரணும்” என்றாள்.
“அழாம சொல்ல முடியுமா உன்னால?” என்ற ம்ருதவ், “ராங் க்வெஸ்டின்ல?” என்றான் கண்கள் சுருக்கி.
ஆமென்று அவள் மேலும் கீழும் தலையாட்டா, அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்தவன்,
“எனக்குத் தெரியாத விஷயத்தை நீ சொல்லப்போறதில்லை. அதனால அழுத்தமில்லாம, உன்னை அழுத்திக்காம சொல்லு” என்றான்.
“இங்க சாஞ்சிக்கவா?” என்று மித்யுகா அவனின் தோளில் சுட்டுவிரல் வைக்க, அவள் பக்க கையை விரித்தவன், மற்றைய கையால், “இங்க சாஞ்சிக்கோ” என்று இதயத்தைக் காண்பித்தான்.
“நிஜமாவா?”
அவன் இப்படியில்லையே! பொது இடங்களில் இருவருக்குமான இடைவெளியில் அத்தனை கவனமாக இருப்பானே! தற்போது அவனே நெருக்கம் கொள்ள வழிவகுக்க, நம்ப முடியாது கேட்டிருந்தாள்.
“ஹேய் யுகா” என்று அவளின் கன்னங்களை ஏந்தியவன், “இப்போ நீ என் பொண்டாட்டிடி!” என்று நெற்றி முட்டி விலகினான்.
ம்ருதவ் சொல்லிய பொண்டாட்டி எனும் வார்த்தை உயிரில் சில்லென்று இதம் சேர்க்க, இமை தாழ்ந்தவள், கீழுதட்டை அழுந்தக் கடித்தாள்.
“ரோஸ் பட் டூயூ ட்ராப் ஆன மாதிரி தெரியுற” என்ற ம்ருதவ், அவள் சற்றும் எதிர்பாராத வகையில் எழுந்து நின்று கைகளை சிறகாய் விரித்து நகரமே எதிரொலிக்க,
“யுகா ம்ருது பொண்டாட்டி ஆகிட்டாள்” என்று கத்தியிருந்தான்.
“அச்சோ ம்ருது என்ன பண்றீங்க” என்று தங்களைச் சுற்றிப் பார்த்தவளாக, அவனின் சட்டையை பிடித்து இழுத்தாள்.
“என் உலகம் என்கிட்ட வந்தாச்சுன்னு இந்த உலகத்துக்கு நான் சொல்ல வேண்டாமா?” என்ற ம்ருதவ், “அழுத அழுகையெல்லாம், பட்ட வலியெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு ஆகிப்போச்சு யுகா!” என்று அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான்.
அவ்வளவு நெருக்கமாய் அழுத்தமாய் தன் தோள்கள் மோதியிருக்கும் அவனது தோள்களை அவள் பார்க்க,
“இனிமே… இஃப் யூ டோண்ட் மைண்ட்லாம் இல்லை” என்று அவளின் கன்னம் கிள்ளினான்.
அவன் காட்டும் உரிமையை அவளும் ஏற்றவளாக,
ம்ருதவ்வின் கை விரல்களோடு தனது விரல்கள் நுழைத்து, இறுகக்கோர்த்து, தோள் சாய்ந்து…
“எனக்கும் அழுகை, வலியெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு ஆகணும் ம்ருது” என்றாள்.
மித்யுகா சொல்லத் தயாராகிவிட்டாள் என்பது ம்ருத்தவுக்கு புரிந்தது.
எவ்வளவுக்குத்தான் சொல்ல வேண்டாமென காலம் கடத்தினாலும், அவளின் ஆறுதல் தன்னிடம் சொல்வதில் மட்டும் தானே உள்ளதென்று தெரிய, அவள் சொல்லி தான் கேட்க மனதை திடப்படுத்தினான் ம்ருதவ்.
“பீ ஸ்ட்ராங் சிவா” என்று நெஞ்சில் கை வைத்து தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக்கொண்டான்.
“யாருக்காவது இப்படியும் நடக்குமா தெரியாது… ஆனா எனக்கு நடந்த பிறகு, இப்படியெல்லாம் கூட நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்” என்ற மித்யுகா, அவன் தோள் சாய்ந்திருந்த தலைக்கு இன்னும் அழுத்தம் கொடுத்தாள்.
“அந்த நைட் நேரம்… சில்லுன்னு காத்து… பைக் டிரைவ்” என்ற யுகா, “நீங்க சொன்ன மாதிரி, அப்படியே அப்பாவே இந்த பூமிக்கு அந்தப்பக்கம் போயிருக்கலாம் ம்ருது” என்றாள்.
இருவருக்குமே அன்றைய இரவுப் பயணம் நெஞ்சில் தோன்றி புன்னகைக்க வைத்தது.
“அதுதான் நான் சந்தோஷமா சிரிச்சது” என்றவளின் முகம், நொடியில் பொலிவிழந்தது.
அவளிடம் கோர்த்திருந்த கரத்தை பிரித்து, அவளின் தோள் சுற்றிப்போட்டு, அவளின் தலை தன் இதயத்தில் சாய்த்து அரவணைத்திருந்தான்.
உனது எந்த வலியும் என் நெஞ்சம் சேர்ந்து கரையட்டுமென்று செயலால் உணர்த்தியிருந்தான்.
தந்தையோடு வண்டியில் சென்று வீட்டிற்கு வெளியில் இறங்கி, பின்னால் தொடர்ந்து வந்திருந்த ம்ருதவ்வை திரும்பிப் பார்த்த மித்யுகா, தந்தை அவளைத் தாண்டிக்கொண்டு உள் சென்றிருக்கவே, வாயில் படியில் நின்றுகொண்டு, இதழ் குவித்து முத்தை காற்றில் அவனுக்கு அனுப்பி வைத்திருந்தாள்.
அந்த முத்தம் இன்று மார்பு தீண்டிய அவளின் இதழ் உரசலில் உயிர்க்கொண்டது.
‘அன்பின் நிகழ்வு
வழி முழுதும்
கைகொடுக்குமாயின்
வாழ்வு நகர்ந்துவிடும்.’
error: Content is protected !!