ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 4
அத்தியாயம் – 4
ரன்வீரின் கார் நகரின் மையப்பகுதியில் இருந்த அந்தப் பிரம்மாண்டமான கார்ப்பரேட் கட்டடத்தின் முன் வந்து நின்றது. ‘RV இம்போர்ட்ஸ் & எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற எழுத்துக்கள் அந்த 12 மாடித் தூணில் மின்னிக் கொண்டிருந்தன, முழுக்க முழுக்கக் கறுப்பு நிறக் கண்ணாடிகளால் ஆன அந்த நவீனக் கட்டடம், ரன்வீரின் ஆளுமையைப் பிரதிபலிப்பது போலவே கம்பீரமாக நின்றது.
கார் போர்டிகோவில் வந்து நின்ற அடுத்த நொடி, அங்கிருந்த செக்யூரிட்டி அதிகாரிகள் ராணுவ வீரர்களைப் போல நிமிர்ந்து நின்று சல்யூட் அடித்திட, ரன்வீர் தனது கோட்டைச் சரி செய்தபடி வெளியே இறங்கினான்…
Advertisement
அவன் கட்டிடத்தினுள் நுழைந்த அந்த நிமிடம், அந்தப் பெரிய வரவேற்பு அறையில் ஒரு நிசப்தம் நிலவியது. அது பயத்தினால் வந்த மௌனம் அல்ல அவனது ஆளுமைக்குக் கொடுக்கப்படும் மரியாதை.
அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் முதல் உயரதிகாரிகள் வரை அனைவரும் எழுந்து நின்று, “குட் மார்னிங் சார்!” என்று ஒருமித்த குரலில் கூறிட,
ரன்வீர் யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை, அவனது பார்வை நேராகவும், நடை வேகமாகவும் இருந்தது, அவன் கடந்து செல்லும் போது அங்கிருந்த ஊழியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதைக் கூட நிறுத்திவிட்டு, மரியாதை நிமித்தமாக நின்றனர்…
அவன் லிஃப்ட்டை நோக்கிச் சென்றபோது, அது அவனுக்காகவே காத்திருந்தது போலத் திறந்து கொண்டது..
Advertisement
12-வது மாடியில் இருந்த அவனது தனி அறை ஒரு சிறிய அரண்மனை போலவே காட்சியளித்தது, அங்கிருந்து பார்த்தால் மொத்த நகரமும் அவனது காலுக்குக் கீழே இருப்பது போலத் தெரியும்…
Advertisement
அவன் தனது இருக்கையில் அமர்ந்ததும், நிதின் மெதுவாக… “ரன்வீர்… போர்ட் மீட்டிங்க்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு, காபி சொல்லவா?” என்று கேட்டிட,
ரன்வீர் ஜன்னல் வழியாகத் தெரிந்த நகரத்தைப் பார்த்தான், அவனது மனதில் இன்னும் அந்த சிக்னலில் பார்த்த அந்தப் பெண்ணின் முகம் தான் நிழலாடிக் கொண்டிருந்தது.
இத்தனைப் பெரிய சாம்ராஜ்யத்திற்கு அவன் அதிபதியாக இருந்தாலும், அந்த சில நொடிப் பார்வை அவனை ஏதோ ஒரு சிந்தனைக்குள் தள்ளியிருந்தது…
”ம்ம்… சொல்லு நிதின். அப்புறம்… அந்தப் போர்ட் மீட்டிங்ல சிங்கப்பூர் ஷிப்மெண்ட் பத்தி எந்தக் குளறுபடியும் இருக்கக் கூடாது, சொல்லிடு,” என்றான் அதிகாரத்துடன்…
Advertisement
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு….
அந்த பிரம்மாண்டமான போர்ட் மீட்டிங் அறையில் நிலவிய நிசப்தம், ரன்வீரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அந்த அறையின் நடுவில் இருந்த நீண்ட தேக்கு மர மேஜையைச் சுற்றி பத்து இயக்குனர்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த பெரிய தொழிலதிபர்கள், ஆனாலும் ரன்வீர் உள்ளே நுழைந்ததும் அவர்கள் அனைவரும் ஒரு வினாடி எழுந்து நின்றனர்…
உள்ளே வந்த ரன்வீர் தனது இருக்கையில் அமர்ந்தான், அவனது விழிகளில் இருந்த தீர்க்கம் அந்த அறையையே ஆக்கிரமித்தது…
“ஜென்டில்மென், லெட்ஸ் நாட் வேஸ்ட் டைம் ஆன் ஃபார்மாலிட்டீஸ், ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் ஆன் த சிங்கப்பூர் ஷிப்மெண்ட், நவ்!” அவனது முதல் வாக்கியமே அதிகாரத்துடன் வெளிப்பட்டது, அவனது உச்சரிப்பு மிகவும் கச்சிதமாகவும், வார்த்தைகள் துல்லியமாகவும் இருந்தன, ஒரு சிறந்த ஆக்ஸ்போர்டு மாணவனைப் போல அவனது ஆங்கிலம் சரளமாகப் பாய்ந்தது…
அங்கிருந்த ஒரு மூத்த இயக்குனர் தயங்கியபடி,.. “சார், தேர்’ஸ் அ ஸ்லைட் டிலே அட் த டெர்மினல் ட்யூ டு சம்க்ளியரன்ஸ் இஷ்யூஸ்…”
என்று இழுக்க, ரன்வீர் இடைமறித்து, தனது பேனாவை மேஜை மீது மெல்லத் தட்டியபடி,
“ஐ டோன்ட் பே யூ ஃபார் ‘ஸ்லைட் டிலேஸ்’, மிஸ்டர் கபூர். ஐ பே ஃபார் சொல்யூஷன்ஸ். தட் ஷிப்மெண்ட் கண்டெயின்ஸ் ஹை-ப்ரையாரிட்டி எலக்ட்ரானிக்ஸ். இஃப் இட் டஸ்ன்ட் லீவ் த டாக் பை மிட்நைட், வீ லூஸ் அ மல்டி-மில்லியன் டாலர் கான்ட்ராக்ட். ஆம் ஐ பீயிங் கிளியர்?” என்று தெளிவாக கூறினான்..
அவனது அந்த ‘ஆம் ஐ பீயிங் கிளியர்?’ என்ற கேள்வி அந்த அறையில் ஒரு இடி முழக்கத்தைப் போல எதிரொலித்தது, அவனது ஆங்கிலப் பேச்சு ஒருவிதமான இசையைப் போல இருந்தாலும், அதில் ஒளிந்திருந்த எச்சரிக்கை அனைவரையும் நடுங்க வைத்தது.
மேலும் அவன்… “லிசன் கேர்ஃபுல்லி, ஐ வாண்ட் எவரி சிங்கிள் கண்டெய்னர் கிளியர்டு அண்ட் ஆன்போர்டு வித்தின் த நெக்ஸ்ட் ஃபோர் அவர்ஸ், யூஸ் எவரி ரிசோர்ஸ் வீ ஹாவ். இஃப் எனிவன் ஸ்டாண்ட்ஸ் இன் த வே பீ இட் த போர்ட் ஆத்தாரிட்டீஸ் ஆர் த கஸ்டம்ஸ் டெல் தெம் தே ஆர் டீலிங் வித் ரன்வீர், ஐல் ஹாண்டில் த கன்சிக்வென்சஸ், யூ ஹாண்டில் த ரிசல்ட்ஸ்” என்று அவன் பேசி முடித்ததும் அந்த அறையில் ஒரு ஊசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது, அவனது ஆளுமைக்கும், அந்த சரளமான பேச்சுக்கும் அங்கே யாரும் மறுப்புச் சொல்லத் துணியவில்லை…
தொடையில் தட்டிவிட்டு எழுந்து நின்றவனோ… “மீட்டிங் அட்ஜோர்ன்ட். நிதின், ஃபாலோ அப் வித் த லாஜிஸ்டிக்ஸ் டீம் இமீடியட்லி” என்று சொல்லிவிட்டு
வெளியேறும்போது அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ரன்வீர் வெறும் தொழிலதிபர் மட்டுமல்ல, அவன் ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என்பதை அவனது ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்தது…
அந்த அதிரடியான மீட்டிங் முடிந்ததும், ரன்வீர் தனது பிரம்மாண்டமான கேபினுக்குள் நுழைந்தான், கதவு தானாக மூடிக்கொள்ள, வெளியுலகின் இரைச்சல் சட்டென நின்றது, தனது விலையுயர்ந்த லெதர் இருக்கையில் மெல்லச் சாய்ந்து அமர்ந்தவன், கண்களை மூடி ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டான்…
நிமிடத்திற்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான டீல்களைப் பேசி முடிக்கும் அவனது மூளை, இப்போது அந்த பிஸ்னஸ் கணக்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அவனின் மூடிய இமைகளுக்குள் மீண்டும் அந்த சிக்னலில் பார்த்த மிருதுளாவின் முகமே நிழலாடியது.
யார் அவள்? அந்த ஒரு நொடிப் பார்வையில் அவன் கண்டது வெறும் அழகல்ல, அது ஒரு ஆழமான அமைதி… இல்லை, ஒரு தீராத வலி. நகரமே ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பரபரப்பான சிக்னலில், அவளது கார் மட்டும் ஒரு தனித்தீவு போலத் தெரிந்தது…
’அந்தக் கண்கள்…’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன், வாழ்க்கையில் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான், அதிகாரத்திற்காகவும், அவனது வசதிக்காகவும் அவனைச் சுற்றி வருபவர்கள் பலர், ஆனால், இவள்? இவளது பார்வையில் எந்தச் சலனமும் இல்லை, தன்னை ஒருவன் உற்றுப் பார்க்கிறான் என்பது கூடத் தெரியாமல், ஏதோ ஒரு சூன்யத்தை வெறித்தபடி இருந்த அந்த முகத்தில் இருந்த மௌனம் ரன்வீரை வெகுவாகப் பாதித்திருந்தது…
சாதாரணமாக எதையும் எளிதில் கடந்து செல்லும் அவனது சுபாவம், இன்று ஏனோ அந்தப் பெண்ணிடம் மட்டும் தடுமாறியது, அவளைப் பற்றிய தேடல் அவனது அடிமனதில் ஒரு மெல்லிய நாவாகத் துளிர்விட்டது…
அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த நிதின்… “ரன்வீர்… சிங்கப்பூர் டீல் ஓகே ஆகிடுச்சு, எல்லா ஷிப்மெண்ட்டும் ரிலீஸ் ஆகிடுச்சு,” என்றான் உற்சாகமாக.
ரன்வீர் கண்களைத் திறக்காமலேயே, “குட்… ஆனா இது போதாது நிதின், அந்த ஏரியால இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ் எடுக்க முடியுமான்னு பாரு,” என்றான் மர்மமாக…
நிதின் குழப்பத்துடன், “எந்த ஏரியா ரன்வீர்? போர்ட் ஏரியாவா?” என்று கேட்டிட,.. ”இல்ல… இன்னைக்கு காலையில நாம நின்னுட்டு இருந்த அந்த சிக்னல், ஒரு வெள்ளை நிறக் கார் நம்ம காருக்குப் பக்கத்துல நின்னுச்சு, அந்த காரோட நம்பர் எனக்கு வேணும்,” என்றான் ரன்வீர். அவனது குரலில் அத்தனை உறுதி இருந்தது,….
ஒரு நிமிடம் திகைத்த நிதின்… “ரன்வீர்… அது ஜஸ்ட் ஒரு டிராஃபிக் சிக்னல் தானே? எதுக்காக…” என்று அவன் இழுக்க, கண்களைத் திறந்து அவனைத் தீர்க்கமாகப் பார்த்தவன்,.. ”கேள்வி கேட்காத நிதின்… சொன்னதை செய், அந்தப் பொண்ணு யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்,” என்றான் ரன்வீர்.
‘பொண்ணா எந்த பொண்ணு?’ என்று குழம்பி போனது நிதின் தான்…
மறுபுறம், மிருதுளாவின் வீட்டில்…
வீரமாணிக்கம் தனது அறையில் அமர்ந்து அந்தப் பழைய டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தார், அவர் தேடிய அந்த எண், அவரது பழைய நண்பர் ஒருவருடையது. அவர் மூலமாக மிருதுளாவிற்கு ஒரு நல்ல வரனைத் தேட முடியும் என்று அவர் நம்பினார்…
ஒரு எண்ணிற்கு டயல் செய்தவர்,.. “ஹலோ… சண்முகம் இருக்காரா?” என்று கேட்க, அங்கே அவரின் உரையாடல் தொடர்ந்தது…
மிருதுளா அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள், காரை நிறுத்திவிட்டு உள்ளே வரும்போது அவளது முகம் இன்னும் அதே வாட்டத்துடன் தான் இருந்தது, ஆனால், இன்று அவளது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.
அந்த சிக்னலில் ஒரு பிரம்மாண்டமான கறுப்பு நிறக் கார் தன் அருகே நின்றதும், அதிலிருந்து ஒரு ஜோடி கண்கள் தன்னை ஊடுருவிப் பார்த்ததும் அவளுக்குத் தெரியாது என்றாலும், ஒருவிதமான பார்வை தன் மீது பட்டதை அவளது பெண்மை உணர்ந்திருந்தது…
நேராகத் தன் அறைக்குச் சென்று ஜன்னல் ஓரம் நின்றாள், வானத்தைப் பார்த்தபடி இருந்தவளுக்குத் தெரியாது நகரத்தின் ஒரு மூலையில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி அவளது அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று!
இரண்டு நாட்கள் மெல்ல நகர்ந்தன, பகல் பொழுதுகள் பழைய நினைவுகளோடும், இரவு பொழுதுகள் தீராத மௌனத்தோடும் கழிந்து கொண்டிருந்தன. அன்றும் அந்த அமைதியான இரவில், தனது அறையின் பால்கனியில் நின்றபடி நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.
குளிர்ந்த காற்று அவளது முகத்தைத் தழுவினாலும், மனதிற்குள் ஒரு தகிப்பு இருந்து கொண்டே இருந்தது, இன்று மாலை அவள் தாத்தா வீரமாணிக்கம் அவளிடம் சொன்ன அந்தச் செய்தி அவளது ஆழ்மனதில் ஒரு பெரிய பாரத்தை ஏற்றிவிட்டது…
”மிருதுமா… உனக்கு
மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சிட்டேன், சீக்கிரமே ஒரு நல்ல வரன் அமையும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு, இதை உன்கிட்ட முன்னாடியே சொல்ல காரணம் மனசளவுல நீயும் அதுக்கு தயாராகனும்ங்கிற காரணத்துக்காக தான், இந்த தடவையாவது தாத்தா பேச்சை கேட்பேன்னு நம்புறேன்” என்று அவர் மென்மையாகக் சொன்னபோது, அவளால் மறுத்துப் பேச முடியவில்லை. அவரது கண்களில் இருந்த அந்த நப்பாசையும், தன் பேத்தி ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆதங்கமும் அவளைக் கட்டிப்போட்டு விட்டது…
ஆனால், இப்போது தனியாக இருக்கும்போது அந்த எண்ணமே அவளுக்கு ஒருவிதப் பிடித்தமின்மையை கொடுத்தது.
’யாரோ ஒரு முகம் தெரியாதவன் கூட எப்படி என்னால வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடியும்? என் மனதின் ரணங்களை அவனிடம் எப்படிச் சொல்ல முடியும்? ஒரு அந்நியனுடன் என்னால் சட்டுனு ஒன்றி வாழவே முடியாது,’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
அந்த விபத்து நடந்த பிறகு, அவளது உலகம் அவளுக்குள்ளேயே சுருங்கிவிட்டது, அந்தச் சிறைக்குள் இன்னொருவரை அனுமதிப்பது என்பது அவளுக்குப் பெரும் அச்சத்தைத் தந்தது, அவள் மாமா சுந்தரம் அவர் மகனுக்கு திருமணம் செய்யும் அவசரத்தில் இருக்க, தாத்தா தன் மீது இவ்வளவு அக்கறை காட்டுவது அவளுக்கு ஒருபுறம் நெகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் அது ஒரு பெரும் சுமையாகத் தான் தெரிந்தது…
அதே சமயம், நகரின் மற்றொரு மூலையில்…
ரன்வீரின் ‘பேலஸ்’ இன்னும் உறங்கவில்லை, தனது மேஜை மீது இருந்த அந்த வெள்ளை நிறக் காரின் புகைப்படத்தையும், அந்தப் பெண்ணின்முழு விவரங்களையும் கொண்டு வந்து வைத்திருந்தான் நிதின்…
ரன்வீர் அந்த ஃபைலைப் பிரித்துப் பார்த்தான். அவளது பெயர், குடும்பப் பின்னணி, மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தத் துயரமான விபத்து என அனைத்தும் அதில் இருந்தன, அவன் எதையோ எதிர்பார்த்து தகவலை சேகரிக்க சொன்னான், ஆனால் அவனுக்கு கிடைத்தது அதிர்ச்சியூட்டும் மற்றொரு தகவலும் கூட..
”மிருதுளா…” அவளது பெயரை முதல்முறையாக உச்சரிக்கும் போது ரன்வீரின் குரலில் ஒரு மென்மை கலந்திருந்தது, அவளது வாழ்க்கையில் நடந்த அந்தப் பெரிய இழப்புதான் அவளது கண்களில் அந்த சோகத்தை விதைத்திருக்கிறது என்பதை அவன் இப்போது புரிந்து கொண்டான்…
நிதின் மெதுவாக… “ரன்வீர்… அவங்க தாத்தா வீரமாணிக்கம் ஒரு பெரிய மனுஷர், இப்போ அவங்களுக்கு வரன் தேடிட்டு இருக்காராம், சீக்கிரமே அவங்களுக்குக் கல்யாணம் முடிச்சு வைக்கணும்னு அவர் பிளான் பண்றதா தகவல் கிடைச்சிருக்கு.”
அந்த வார்த்தையைக் கேட்டதும் ரன்வீரின் கையில் இருந்த பேனா சட்டென நின்றது, அவனது கண்கள் குறுகின…
”கல்யாணமா? அவளுக்கா?”
அவனது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு பொறாமையோ அல்லது உரிமையோ தலைதூக்கியது, அந்தப் பெண், இன்னொருவனுக்குச் சொந்தமாவதா? அந்த எண்ணமே ரன்வீருக்குப் பிடிக்கவில்லை…
