Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 16 (01)

விக்ரம் பார்த்தசாரதி 12

நியூயார்க் நகரம்!

டிசம்பர் மாத குளிர் அந்த நகரத்தை மெதுவாக சுற்றி அணைத்துக் கொண்டிருந்தது.

“அவார்ட் வாங்கிட்டியா விக்ரம்?” கைப்பேசியில் என்னிடம் கேட்டார் அம்மா. அவரது குரலில் அத்தனை ஆர்வம்.



Advertisement

எத்தனை வயது ஆனாலும் தனது மகனை சான்றோன் எனக் கேட்பதில் எல்லா அன்னைக்கும் ஓர் உவப்புதான்.

“இப்போதான்மா ஃபங்ஷன்க்கே போயிட்டு இருக்கேன். அவர்ட் வாங்கினதும் சொல்றேன்”

“நீ அவர்ட் வாங்குறதை எனக்கு வீடியோ எடுத்து அனுப்ப சொல்லுடா அர்ஜுனை” குழந்தையாக கேட்டார் அவர்.

Advertisement

“கண்டிப்பா மா”

Advertisement

“நீ நியூயார்க்லே தானே இருக்கே இப்போ. ஆரா பார்த்தியாடா? அவளும் ஃபங்ஷன் வராளா? எப்போ இந்தியா வரா? எதாவது சொல்லுடா”

“மா.. கொஞ்சம் வெயிட் பண்ணுமா. அவ ஃபங்ஷன் வந்தா உடனே உனக்கு கால் பண்ணித் தரேன் நீ பேசு சரியா. எங்க ரெண்டு பேருக்குமே நிறைய வேலை இருக்குமா. அது எல்லாம் முடிஞ்சதும் நாங்களே சொல்லுவோம், கல்யாணம் பண்ணிக்கறோம்னு எல்லாம் சரியா நடக்கும் மா. நீ கவலைப் படாதே”

எப்படியோ அம்மாவை சமாளித்து அழைப்பை முடித்தேன். இது போன்ற கேள்விகள் அம்மாவிடமிருந்து அடிக்கடி வந்து போய் கொண்டிருக்கின்றன. இப்படிதான் எதையவது சொல்லி  சமாளித்துக் கொண்டிருக்கிறோம் நானும் அர்ஜுனும்.

Advertisement

அவள் நடந்ததை வீட்டில் சொன்னாளா இல்லையா என்ற கேள்விக்கெல்லாம் பதிலே இல்லை. எங்களை பெற்றவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்களா என்பது கூட எனக்குத் தெரியவில்லை.

அம்மாவை கூட எளிதாக சமாளித்து விட்டேன். இப்போதெல்லாம் என்னை நானே சமாளித்துக் கொள்வதுதான் மிகக் கடினமாக இருக்கிறது. வேகமாக நகர்ந்து கொண்டிருந்த காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

‘இந்த சாலையில் இருக்கும் ஏதாவது ஒரு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருப்பாளா ஆராதனா?’ அருகில் இருக்கும் அர்ஜுன் அறியாமல் ரகசியமாகத் தேடிக் கொண்டேன் நான்.

இப்போதெல்லாம் எந்த நாட்டில்  சேலைப் பெண்களைப் பார்த்தாலும் ஆராதனாவின் நினைவு  வந்து போக தவறுவதில்லை. ஆனால் இங்கே எல்லாம் சேலைப் பெண்கள் கண்களில் தென்படுவதே இல்லை.

இன்று நானும் அர்ஜுனும்  அந்த பெரிய அரங்கத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். அடுத்த கொஞ்ச நேரத்தில் எனது உதவியாளன் பாலாவும் அரங்கத்துக்கு வந்து சேர்வதாக சொல்லி இருந்தான்.

பல நாடுகளை சேர்ந்த பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கும், வியபார சக்கரவர்த்திகளுக்கும் கிடைக்கும் ஒரு அங்கீகாரம் இந்த விருது.

எனது காலில் இருந்த ஊனம் என்னை புரட்டிப் போட்ட நாட்களை நான் கடந்து விட்ட பிறகு, நான் வியாபார உலகில் குவித்த வெற்றிகள் ஆயிரம் எனும் போதிலும், இது உலக அளவில் கிடைக்கும் ஒரு அங்கீகாரம்.

எப்போதும் அமெரிக்கர்களையே வியக்கும் இந்த நியூயார்க் நகரம்,  இன்று ஒரு மாற்றத்திற்காக என்னை நிமிர்ந்து பார்க்கப் போகிறது என்று தோன்றியது.

நாளை இங்கிருக்கும் ஊடங்களும், சமூக வலைத்தளங்களும் என்னை கொஞ்சமேனும் தொட்டுச் செல்லும் என்றொரு நம்பிக்கை இருந்தது எனக்கு.

“’ஜேடென் மான்கொமுரி” (JADEN MONTGOMERY)  ஜே.எம் என்டர்பிரைசஸ் சேர்மன்’  தெரியுமா அர்ஜுன் உனக்கு?” அவனைக் கேட்டு வைத்தேன் நான்.

எனக்கு இணையான ஸ்யூட் உடையில் இருந்த அவனால் திருதிருவென விழிக்க மட்டும்தான் முடிந்தது.

“நியூயார்க் சிட்டிலேயே  பெரிய புள்ளிடா அவர். இங்கே இருக்குற ஒரு பிசினஸ் டைகூன்ன்னு வெச்சுக்கோ” அவனுக்கு புரியும்படி விளக்கிக் கொண்டிருந்தேன் நான். “இந்த அவார்ட் ஃபங்க்ஷனுக்கு அவர்தான் சீஃப் கெஸ்ட் தெரியுமா?”

“எல்லா நாட்டிலேயும் உனக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்களா விக்ரம்?” அவன் வாய் விட்டு கேட்க சிரித்தேன் நான்.

“இன்னும் நான் அவரை மீட் பண்ணது இல்லை அர்ஜுன். ஆனா கொஞ்ச நாளாவே அங்க இங்க என்னை பற்றி அவர் விசாரிச்சிட்டு இருக்காராம்.  இந்தியாவில் பிசினஸ் கொலாபிரேஷன் செய்யணும் அப்படிங்கறது அவர் நோக்கம். அதிலே நம்மோட ரூபா க்ரூப்ஸ்தான் முதல் இடத்திலே  இருக்கு”

“ஹேய் கிரேட் விக்ரம் உடனே டீல் சைன் பண்ணணுமா?” அர்ஜுன் பரபரக்க

“நோ நோ நோ அவசரப் படக் கூடாது அர்ஜுன்” என்றேன் நான்.

“உன் டீல்ஸ் எதுவும் எனக்குப் புரியறது இல்லை போ” சொல்லி விட்டான் அர்ஜுன்.

அவளுக்குப் புரியுமே’ நினைத்துக் கொண்டேன் நான். இந்த நகரத்தில்தானே வலம் வந்து கொண்டிருக்கிறாள் அவள். ஒரு வேளை இந்த விழாவுக்கு வந்து நிற்பாளோ? மெலிதாக ஒரு ஆசை எனக்குள்ளே.

அப்போது ஒலித்தது எனது கைப்பேசி, அழைத்தது பாலா. ஏற்றேன் அழைப்பை.

“சர்” என்றான் அவன்.

“சொல்லு பாலா”

 “மிஸ்டர் விஷ்ணு பிரசாத் கூட அவர்ட் ஃபங்ஷன் வராராம் சர்”

“ம்?” அனிச்சை செயலாக எனது புருவங்கள் உயர்ந்து இறங்கின. “வரட்டும். லெட் ஹிம் கம்” சொன்னேன் வாய் விட்டு.

விஷ்ணு பிரசாத். ஷ்யாமின் தந்தை. நான் ஷ்யாமுக்கு செய்திருக்கும் உதவியை அறிந்துதான் இருப்பார் அவர்.

‘அவருக்கு கூட இந்த விருது கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறதுதான்’ ஏதோ ஒன்று சொல்லி விட்டு சென்றது எனக்குள்ளே.

‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. விக்ரம்  ஒரு இடத்தில் வந்து நின்று விட்டால், அது அவனது சாம்ராஜ்ஜியமாக மாறிப் போவதுதான் நியதி’ கர்ஜித்தான் எனக்குள் இருக்கும் சக்கரவர்த்தி.

விழா நடக்கும் இடத்தை அடைந்து இருந்தோம் நாங்கள். அந்த வானம் தொடும் மேகத்தூண் கட்டிடத்தின் எட்டாவது தளத்தில்  இருந்தது அந்த விருது விழா அரங்கம்.

அடுத்த சில நிமிடங்களில்  மின் தூக்கி எட்டாவது தளத்தை தொட்டு இருந்தது. அர்ஜுனுடன்  அரங்கத்தை நோக்கி நடந்தேன் நான்.

அர்ஜுனின் பார்வை கூட சுற்றி சுற்றி யாரையோ தேடுவதைப் போல சுழன்றது. அவன் கூட ஆராதனா எங்கேயாவது தென்படுகிறாளா என்று தேடுவானாக இருக்கலாம்.

அவள் என்னை விட்டு பிரிந்து போய் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஒரு மாயம் போலவே கடந்து விட்டன.

அந்த விமான நிலைய சந்திப்புக்கு பிறகு என்னை அவளும் அழைக்கவில்லை அவளோடு நானும் பேசவில்லை. அவள் என்னை மறந்து கூட போயிருக்கக் கூடும்.

நான் யோசித்துக் கொண்டே இருக்கும் போதே எனக்கு அழைப்பு வந்தது எனது குட்டி ஆராதனா விடமிருந்து. அழைப்பை ஏற்றேன்.

“விக்ரம் அங்கிள்” காதுக்குள் கொஞ்சினாள் எனது ஆராதனா. இந்தியாவில் இப்போது அதிகாலை நேரமாக இருக்கும் இப்போதே விழித்து அமர்ந்து கொண்டு என்னை அழைத்துக் கொண்டிருக்கிறாள் குழந்தை.

அவளது தேர்வுகள் முடிந்த பிறகு அவளை என்னுடனே அழைத்து வந்தேனே அப்போதே அவளை என்னுடனேதான் வைத்துக் கொள்ள விரும்பினேன் நான்.

“அவளை நான் சட்டபடி அடாப்ட் கூட பண்ணிக்கறேன் கௌதம்” சொன்னேன் அவனிடம்.

“அவசரப் படாதேடா” என்றான் அவன். அவனிடம் எதையும் சொல்லா விட்டாலும் எனக்கும் ஆராதனாவுக்கும் நடந்தவற்றை அவன் ஓரளவுக்கு படித்துக் கொண்டான் என்று தான் தோன்றியது.

“இந்த வருஷம் ஆரா, நம்ம  சாரா கூடவே படிக்கட்டும். அடுத்த வருஷத்துக்குள்ளே எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்போ நாம முடிவு பண்ணலாம்” என்றான் கௌதம்.

அப்படியும் நான் பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது அவளைச் சென்று பார்த்து வரும் வழக்கத்தை வைத்துக் கொண்டுதான்  இருக்கிறேன்.

“விக்ரம் அங்கிள். நீங்க அவர்ட் வாங்குறதை நான் பார்க்கணுமே” இது குட்டி ஆரா.

“கண்டிப்பா. கண்டிப்பா டா பாப்பா. அர்ஜுன் இஸ் ஹியர். அவனை  நான் அவர்ட் வாங்கும் போது உனக்கு வீடியோ எடுத்து அனுப்ப சொல்றேன் சரியா”

அழைப்பை முடித்து விட்டு அந்த பிரம்மாண்ட வணிக விருது வழங்கும் இரவுக்குள் என்னை புகுத்திக் கொண்டேன். என்னுடனே அர்ஜுன்.

எனக்காக அந்த அரங்கத்தின்  கதவை எனது அர்ஜுன்   திறந்து விட, உள்ளே நுழைந்தேன் நான். அரங்கின் சுவர்கள் கருப்பு, சாம்பல் கலந்த நவீன அலங்காரத்தில் இருக்க, ஒவ்வொரு மூலையிலும் ஒளிர்ந்த நீல நிற வரிசை விளக்குகளால் மிளிர்ந்து கொண்டிருந்தது அரங்கம்.

ஒளியால் மிளிரும் ஆடிட்டோரியத்திற்கு உள்ளே நுழைந்தவுடன், எனது  கண்களுக்கு முதலில் தென்பட்டாள் ஒரு சேலைப் பெண். சத்தியமாக ஒரு நொடி திக்கு முக்காடிப் போனேன்.

‘ஆராதனாவா அது?’

அது அவள் இல்லை என்பதை நான் தெரிந்து கொள்ளவே  ஒரு நிமிடம் பிடித்தது. அது அவள் இல்லை என்று புரிந்த பிறகு எனது முகத்தில் ஓடிய ஏமாற்ற ரேகைகளை அர்ஜுனுக்கு தெரியாமல் மறைக்க பெரும் பாடு பட வேண்டி இருந்தது.

அதன் பிறகுதான்  அவனுமே அந்தப் பெண்ணைப் பார்த்து ஆராதனா என நினைத்து இருக்கிறான் என்பது அவனது முக மாற்றத்தில் இருந்து தெரிந்தது.

‘யாரந்த பெண்?’ யோசித்துக் கொண்டே, தன்னம்பிக்கையின் உச்சியில்  நின்று கொண்டிருக்கும் நியூயார்க் பிசினஸ் உலகத்தின் மனிதர்கள் மீது எனது பார்வையை வைத்துக் கொண்டேன்.

நீல  ஒளியில் மிளிரும் கண்ணாடி சுவர்கள் அவர்களின் பேச்சுகளையும் சிரிப்புகளையும் பிரதிபலித்தன. அவற்றை எல்லாம் வியப்புப்  பார்வை பார்த்துக் கொண்டே நடந்தான் அர்ஜுன்.

“என்ன அர்ஜுன் அப்படி பார்க்குற? இதுதான் நியூயார்க் பிசினஸ் வோர்ல்ட். ஒவ்வொரு ஹேண்ட் ஷேக்குக்கும் சில மில்லியன் டாலர் வால்யூ உண்டு” சொல்லிக் கொண்டே நான் திரும்ப,

அப்போது எனது பார்வையில் விழுந்தார்  சில வருடங்களுக்கு முன்னால் என்னை உரசிப் பார்த்தவர். அவர்  ஷாமின் தந்தை விஷ்ணுப் பிரசாத். அவரைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றும்  இல்லை.

இப்போது நிகழ்ச்சி மேடை பிரகாசிக்க, எதிர்பார்ப்பின் மெல்லிய அலைகள் எல்லார் இதயத்தையும் ஒரு சேர   தழுவின.

இப்போது அரங்கின் மையத்தில் பெரிய திரை ஒளிர்ந்தது அதில் எனது கடந்த கால வெற்றிப் பட்டியல் வரிசை கட்டின. சில நொடிகள்  எனது கடந்த காலம், பிரகாசமான விளக்கொளியில், என் முன்னே  நடனமாடியது .

அப்போது அரங்கத்தில் மெல்ல மெல்ல ஒலி எழுந்தது.  அங்கிருந்த அமெரிக்கர்கள் உட்பட அத்தனை பேரும் எனக்காக கைத்தட்ட துவங்கி இருந்தார்கள்  அர்ஜுன் எனது தோள்களை அணைத்துக் கொண்டான்.

“கங்ராட்ஸ் விக்ரம். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ இன்னும் இது  போல நிறைய நிறைய ஜெயிக்கணும் டா” சந்தோஷ மிகுதியில் அவனது வார்த்தைகள் கூட தடுமாறின.

அந்த நேரத்தில், ஒரு பேரரசனைப் போல மேடைக்கு வந்து நின்றார் அந்த மனிதர். அவர் நான் சற்று முன் சொன்ன ஜேடன்தான்.

பல அமெரிக்கர்களின் தலையெழுத்தை அவர் நிர்ணயித்து இருக்கிறார் என்று சொன்னது அவரது கம்பீரம். அவர் மைக் ஐ தட்டினார். அரங்கம் அமைதியானது.

“தி   அன்ட்ருப்ருனர்  ஆஃப் தி இயர் அவார்ட் கோஸ் டு   மிஸ்டர் விக்ரம் பார்த்தசாரதி ஃப்ரம் இந்தியா ”

மேடையை நோக்கி நடந்தேன் நான். அர்ஜுன்  எனக்காக மகிழ்ந்து கொண்டிருந்தான். அந்த  நேரத்தில் சரியாக பாலா ஓடி வந்து அர்ஜுனின் அருகில் நின்று கொண்டு கைத்தட்டலானான்.

நான் மெல்ல மெல்ல மேடை ஏறினேன். அங்கே எனக்காக காத்திருந்தார் ஜேடன். மேடையேறி திரும்பிய எனது விழிகளில் விழுந்தார்கள் அவர்கள் இருவரும்.

மேடையின் கீழே அர்ஜுனுக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும்.

“ஆரா வா? ஆராவா அது? எனது கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சேலையில் இல்லை அவள் ஏதோ ஒரு மேற்கத்திய உடையில் தான் நின்றிருந்தாள். அவளது அருகே அவனேதான். எட்வர்ட்.

இருவரும் அருகருகே நின்றிருந்தனர். கீழே இருந்தவள் மேடை மீதிருக்கும் என்னையே தான் பார்த்திருந்தாள். நான் அசைவற்றுப் போனேன் சில நொடிகள்.

இப்போது ஜேடனின் குரல் எனது காதில் விழுந்தது

“டு தி யங் மேன் ஹூ டர்ன்ட் லிமிட்ஸ் இன்டு பவர்” (குறுகிய எல்லைகளை பேரும் சக்தியாக மாற்றியவன்).

அவர் பேசியதின் பொருள் கூட எனது மனதில் பதியவில்லை. எனது மனதிற்குள் பல  கேள்விகள்

நான் விருது வாங்குவதில் அவளுக்கு மகிழ்ச்சியா இல்லையா?

‘நான் விருது வாங்கும் போது ஆரா கைத்தட்டுவாளா இல்லையா?’

ஜேடன் விருதை நீட்ட அதைப் புன்னகையுடன் பெற்றுக் கொண்டு அவருடன் கைக்குலுக்கினேன். அரங்கத்தில் கைத்தட்டல்கள் தொடர இப்போது அவசரமாக அவள் மீது பார்வை பதித்தேன் நான்.

கைத் தட்டிக் கொண்டுதான் இருந்தாள் ஆரா. அவளது இதழ்களில் கூட சிறு புன்னகை  இருந்ததைப் போலவே தோன்றியது எனக்கு.

மகிழ்ந்து  போனேன் நான். கையிலிருந்த விருதைக் காட்டிலும் அவளது புன்னகை மிகப் பெரிய விருதாக தோன்றிக் கொண்டிருந்தது எனக்கு.

மறுபடியும் மைக்கை பிடித்தவர் “இந்தியா ஷுட் பி ப்ரவுட் ஆஃப் யூ அண்ட் ஐ ஆம் ப்ரவுட் டு ஷேக் ஹேண்ட்ஸ் வித் யூ.” (இந்தியா உன்னை கண்டு பெருமை கொள்ள வேண்டும். நான் உன்னுடன் கை குலுக்க பெருமை கொள்கிறேன் என்றார்).

அழகாக புன்னகைத்தேன். இன்னமும் ஆராவின் பார்வை என்னை விட்டு விலகவில்லை என்பதை எனக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது எனது உள்ளுணர்வு.

அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்து கொண்டிருந்தது.

அதன் பின்னர் ஜேடனுக்கு நன்றி சொல்லி விட்டு, மேடையில் சம்பிரதாய நன்றி உரையை சுருக்கமாக சொல்லி விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கினேன் நான். இப்போதும் எனது  பார்வை ஆராவின் மீதுதான் இருந்தது.

கீழே இறங்கியதும் பல வகையான வாழ்த்துக்களும், கைகுலுக்கல்களும் என்னை சூழ்ந்து கொண்டிருக்க, எனக்கு அருகில் வந்து நின்றார் விஷ்ணுப் பிரசாத்.

“ஐ ஆம் ப்ரவுட் டு ஷேக் ஹேண்ட்ஸ் வித் யூ.” ஜேடனின் வார்த்தைகள் அவரை சுட்டிருக்க வேண்டும். அதற்கும் மேலாக, அவர் தனக்கு இந்த விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து தோற்று இருக்கிறார் என்றும் புரிந்து இருந்தது எனக்கு.

பல வித தயக்கங்களை கடந்து அவர் என்னைப் பார்த்து மெல்ல புன்னகைத்து “கங்ராட்ஸ் விக்ரம்” என என்னை நோக்கி கரம் நீட்ட, மிக இயல்பாக வெகு சிறிதாக தலை அசைத்து விட்டு அவரைக் கடந்து நடந்தேன் நான்.

அர்ஜுனும் பாலாவும் எனது அருகில் ஓடி வந்தனர். பாலா வாழ்த்தி விட்டு விலகிக் கொள்ள, எனது பார்வை போன திசைக்கே சென்றது அர்ஜுனின் பார்வையும்.

அங்கே நின்றிருந்த ஆராவைப் பார்த்து மெலிதாக மாற்றம் கொண்டது அர்ஜுனின்  முகம்.

அடுத்த நொடி அவள் என்னை நோக்கி நகர எத்தனித்த போது, அவளைக் கரம் பிடித்து தடுத்து நிறுத்தினான் எட்வர்ட்.

நானும் அர்ஜுனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அடுத்த நொடி நான் அவளை நோக்கி நடக்க என்னோடு இணைந்து கொண்டான் அர்ஜுன்.

மேடையில் வேறு சிலருக்கு விருதுகள் வழங்கப் பட்டுக் கொண்டிருக்க அவர்களுக்கான கைத்தட்டல்கள் அங்கே ஒலித்துக் கொண்டிருந்தன.

இப்போது அவளது அருகில் சென்று அவளைப் பார்த்து புன்னகைத்தேன் நான்.

“ஹாய் ஆரா. ஹாய் மிஸ்டர் எட்வர்ட்”

சொல்லி வைத்து அணிந்து வந்திருக்கிறார்களா அல்லது தற்செயலாக அமைந்து விட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. இளம் கிரீம் நிறத்தில் ஒருவருக்கு ஒருவர்  பொருத்தமான உடையில்தான் நின்றிருந்தனர்.

அன்று நாங்கள் இருவரும் நிச்சயதார்த்ததில் நின்றிருந்த காட்சி எனது மனதில் வந்து போனது.

இப்போது எட்வர்ட்தான் துவங்கினான்

“கங்ராட்ஸ் விக்ரம்” என்று கைகுலுக்கினான் அவன். ஆரா பேசாமல் பார்த்திருக்க எட்வர்ட் தொடர்ந்தான்

“டு தி யங் மேன் ஹூ டர்ன்ட் லிமிட்ஸ் இன்டு பவர் ம்ம்ம் ?” சிறு ஏளனம் தொனித்தது அவனது குரலில்.

“ஷுட் இட் நாட் பி டு தி அரகன்ட் மேன் ஹூ டர்ன்ட் மை பெல்லாஸ் ஸ்மைல்ஸ்  இன்டு டியர்ஸ்” (எனது பெல்லாவின் புன்னகைகளை கண்ணீராக மாற்றிய திமிர் பிடித்தவன் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்)”

அவனது வார்த்தைகளில் அர்ஜுனே கொஞ்சம் ஆடிப் போனான். ஆனாலும் அங்கே ஆராவின் முன்னால் எப்படி எதிர்வினையாற்றுவது என்பது அவனுக்கே புரியவில்லை போலும்.

அதற்கும் மேலாக நான் அடுத்து என்ன செய்யப்  போகிறேன் எனும் பயம் கூட வந்திருக்க வேண்டும் அவனுக்கு.

நான் அமைதியாகவே நின்றேன் சில நொடிகள். அது என்னவோ சென்ற வருடம் போல நான் வைஷாலியை வைத்து அரவிந்தனை சீண்டினேனே அந்தக் காட்சி அங்கே மறுபடியும் அரங்கேறுவதை போலவே தோன்றியது.

‘என்ன ஒன்று, நீ  இப்போது அரவிந்தின் இடத்தில் இருக்கிறாய் எட்வர்ட் உன்னிடத்தில் இருக்கிறான். நீ செய்ததே உனக்குத் திரும்புகிறது’ என்னை கொட்டியது மனசாட்சி.

முயன்று புன்னகையை வரவழைத்துக் கொண்டேன். ஆராவைப் பார்த்தேன் நேராக. அந்தப் பார்வையிலேயே சற்றே தடுமாறிப் போனாள் அவள்

சட்டென எட்வர்டின் பக்கம் திரும்பி “எட்வர்ட் கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா நீ” என்றாள் ஆங்கிலத்தில்.

“நான் உண்மையைத் தான் சொல்றேன் பெல்லா” எட்வர்ட் விடவில்லை.

“கமான் எட்வர்ட். கீப் கொயட்” அவள் அவனை அதட்ட எனக்குள்ளே சாமரம் வீசியிருக்க வேண்டும். ஆனால் இல்லை.

அவனை அவள் அதட்டினாள். அமைதியாக இரு என்று உரிமையாக அதட்டினாள்.

‘விக்ரம், டூ வாட் ஐ சே”

“விக்ரம் இது தான் ஃபைனல் டெர்ம்ஸ். சைன் பண்ணுங்க”

“விக்ரம் இதில் எழுதி இருப்பது போல ப்ரஸ் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ”

என்னை இது வரை எவருமே இதை இப்படிச் செய், இப்படி நான் சொல்வது போல பேசு என்றெல்லாம்  சொல்லத் துணிந்ததில்லை.

ஆனால் ஆரா அதை வெகு  இயல்பாக செய்வாள். அவளை என்னவள் என்று நான் உணராத போதே அவளிடம் நான் பணிந்து தான் போயிருந்தேனே. அவள் சொல்வதற்கெல்லாம் நான் தலையாட்டிக் கொண்டிருந்தேனே.

இப்போது இன்னொருவன் தலையாட்டுகிறான்.

சட்டென என்னதான் தோன்றியதோ அவளுக்கு “கங்ராட்ஸ் விக்ரம்” என்று என்னை நோக்கி கை நீட்டினாள் அவள்.

ஒரு கையில் ஊன்று கோல் மற்றொரு கையில் விருது என்று அவளுக்கு கை நீட்ட இயலாத நிலையில் நான் நின்றிருக்க, சட்டென விருதை வாங்கி தனது கையில் வைத்துக் கொண்டான் அர்ஜுன்.

இப்போது எனது கரத்தை தனது இரு கரங்களால் அவள் பற்றிக் கொண்டாள். “கங்ராட்ஸ் விக்ரம்” என்றாள் புன்னகையுடன்.

அவளின் ஸ்பரிசத்தில் நான் நினைத்தே பார்த்திராத ஒரு சந்தோஷ பூ மழை என்னை நனைத்து வைத்த அதே நேரத்தில் ஒரு இமாலய அதிர்ச்சி என்னைத் தாக்கி வைத்தது.

அவளது விரலில் நான் அன்று அணிவித்த மோதிரம் இல்லை.

அவளது விரலை பார்த்து விட்டு நான் அவளது முகத்தை பார்க்க எனது விழிகளில் வழிந்த அதிர்ச்சியை உணர்ந்தவள் அடுத்த நொடி அதற்கான காரணத்தையும் கிரஹித்து இருந்தாள்.

இப்போது அவளது பார்வை அவசரமாக எனது விரலைத் தொட அவள் அணிவித்த மோதிரம் அவளைப் பார்த்து புன்னகைத்தது. இப்போது அவளது விழிகளில் மெலிதான அதிர்ச்சிக் கோடுகள்.

நல்ல வேளையாக எங்களது இந்த நான்கு நொடி பார்வை பரிமாற்றங்களை எட்வர்டும் கவனிக்கவில்லை, அர்ஜுனும் கவனிக்கவில்லை.

அந்த நொடி எனக்கு எழுந்து உணர்வுகளின் தாக்கத்தில் தோற்றுத் தோற்றுத் தோற்றுத்தான் நின்றேன் நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!