Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 31

அத்தியாயம் 31

 

“ஹலோ!” என்ற எதிர்பார்ப்பான ஈஸ்வர் குரலுக்கு கொஞ்சமும் பொறுத்தமின்றி,

 



Advertisement

“நான் உங்களை மீட் பண்ணனும் சார்!” ஏனோதானோவென்ற வெறும் குரலில் பல்லவி சொல்ல, லதாவும் அதனைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.

 

“என்ன பல்லவி! ஏதாச்சும் இஸ்ஸுஸ்ஸா?” அப்படி இருக்காது என தோன்றினாலும் கீர்த்திஸ்வரன் கேட்டுவிட,

Advertisement

 

Advertisement

“அதெல்லாம் எதுவுமில்ல. ஆனா மீட் பண்ணனும். இம்போர்ட்டண்ட்!” என்றதும் என்னவென்று எதுவும் புரியவில்லை என்பதை விட எதுவும் நினைவிலில்லை லதாவோடு ஈஸ்வருக்குமே.

 

நடந்து முடிந்த பிரச்சனைகளின் சாயலோடே அவர்களின் எண்ணமும் இருக்க, என்னவாய் இருக்கும் என அலைப்புறுதல் தான் இருவருக்குமே!.

Advertisement

 

‘வீட்டுக்கு வர வேண்டியது தானே!’ தோன்ற தான் செய்தது ஆனால் கேட்க முடியவில்லை இவர்களுக்கு.

 

“சரி! எங்க?” ஈஸ்வர் கேட்க,

 

“நீங்களே சொல்லுங்க!” என்றாள். முகத்தில் முறைப்பும் மிச்சமிருந்தது பல்லவிக்கு. இதுவே லதாவாய் இருந்தால் வீட்டிற்கு அழைத்திருப்பார் என்ற எண்ணத்தில் தான் அந்த முறைப்பும்.

 

“ஓகே ஆபீஸ் வா! இல்ல காலேஜ்ல இருக்குறன்னா சொல்லு அங்கேயே நான் வர்றேன்!” ஈஸ்வர் அவளுக்கேன்றே யோசித்து சொல்ல,

 

“அப்படி ஒன்னும் நீங்க அலைச்சல் வச்சுக்க வேண்டாம் சார் எனக்காக. நானே வர்றேன். நாலு மணிக்கு!” என்று சொல்லி பட்டென்று வைத்துவிட்டாள்.

 

“என்னவா இருக்கும் ஈஸ்வர்?” என்ற லதா கண்களில் அப்பட்டமான எதிர்பார்ப்பு.

 

“ம்மா!” என்றவனுக்கு அன்னையை அப்படி காணவே தாள முடியாத ஒரு தவிப்பு. இதில் இவளை என்னவென்று பார்த்திட என ஒரு எண்ணம்.

 

“நீங்களும் வாங்க. என்னனு எனக்கும் தெரியல!” என்றான் ஈஸ்வரும்.

 

“ம்ம்ஹுஹ்ம்ம்! வேண்டாம்.நீ என்னனு கேளு. உன் அப்பா சாப்பிட்டு தூங்குறாரு? இப்ப திடிர்னு ஆபீஸ்க்கு கிளம்பினா என்ன பண்ண? நான் அவரை சமாளிச்சு இங்க வச்சுக்குறேன்!” என உடனே அடுத்தடுத்த எண்ணங்களுக்கு அவர் செல்ல, சிறு மென்னகை ஈஸ்வரிடம்.

 

“அப்பா வந்தா கூட நான் பார்த்துக்குவேன். மறைச்சு வைக்க எதுவுமில்லை!” என்றவன்,

 

“ஓகே! இப்ப நீங்க வேண்டாம். நான் என்னனு கேட்டுட்டு வர்றேன்!” என்று சொல்லி தான் கிளம்பி இருந்தான் வீட்டில் இருந்து.

 

யோசித்தபடியே வந்தாலும் எந்த ஒரு எண்ணமும் ஏன் இந்த அழைப்பு என புரியவே இல்லை அவனுக்கு.

 

அவன் வந்து சேர்ந்த ஐந்து நிமிடங்களில் எல்லாம் பல்லவியுமே வந்துவிட, ரிசெப்ஷனில் அவள் பெயரை சொல்லவுமே உள்ளே செல்ல அனுமதி கிடைத்துவிட்டது.

 

“அடேயப்பா!” என்ற எண்ணத்தோடு தான் அவனறையை தட்டிவிட்டு கதவை திறந்தாள்.

 

“வா பல்லவி!” என்றவன் முகத்தில் கொஞ்சமும் புன்னகை இல்லை. அத்தனை ஆராயும் பார்வை. 

 

“தேடி வந்துட்டேன்னு எல்லாம் ஏளனமா பார்க்க கூடாது சார்!” என்றவள் முகம் காட்டிட கூடாது என்ற நினைப்போடே கசங்கி இருப்பதைக் கண்டவனும்,

 

“ப்ச்! என்ன பேசுற நீ? வந்து உட்கார்!” என்று சொல்லி அவள் அமரவும்,

 

“எதாவது சாப்பிடுறியா?” என்றான். மறுப்பாய் தலை அசைத்தவள் முகம் மாறி இருக்க,

 

“சரி சொல்லு! என்ன விஷயம்?” என தானே கேட்டான் கீர்த்திஸ்வரன்.

 

“என்ன விஷயமா? நான் ஏன் உங்களைத் தேடி வரப் போறேன்னு உங்களுக்கு தெரியாது?” என்று அவள் கேட்டபோதும் கூட சுத்தமாய் அவனுக்கு எதுவும் நியாபகம் வரவில்லை. எண்ணம் முழுக்க என்னவோ என்று மட்டும் தான்.

 

“தெரியல. சொல்லு பல்லவி” என கேட்க,

 

“இந்த செமஸ்டர் முடிஞ்சது. லாஸ்ட் ஒரு ப்ராஜெக்ட் தான். ஆல்ரெடி ஃபீஸ் எல்லாம் பே பண்ணிட்டேன். பாலன்ஸ் ஃபார்ட்டி தௌஸண்ட்” என்று சொல்லியவள் முகமே விழுந்துவிட்டது அவனிடம் கேட்க எண்ணியதை நினைத்து.

 

போன செமஸ்டர் பொழுதே கொடுத்திருக்க வேண்டியது. அப்பொழுது லதாவும் கூட மொத்தமாய் கொடுக்க சொல்லி இவள் கைகளிலும் கொடுத்திருந்தார்.

 

“அவங்க கேட்பாங்க லதாம்மா. அதுக்காக மொத்தமா கொண்டு நீட்டிடுறதா? பணத்தை என்னனு நினைச்சு இப்படி மொத்த மொத்தமா கேட்குறாங்களோ! பாதி போதும். மீதி ப்ராஜெக்ட் ஸ்டார்ட் ஆகட்டும். மெசேஜ் மேல மெசேஜ் போட்டு லெட்டர் போட்டு என்னை தேடட்டும். பணம் வந்தா தான் எக்ஸாம் பண்ண விடுவேன்ன்னு மிரட்டல் வரும் பாருங்க.. அப்புறம் தான் குடுப்பேன். அதுவரை உங்ககிட்டயே இருக்கட்டும்!” என்று சொல்லி இருந்தாள்.

 

“உன்னை எல்லாம்…” என்று சொல்லி அப்போது சிரித்திருந்தார் லதா.

 

“ப்ச் இவ்வளவு தானா!” என்ற கீர்த்திஸ்வரன் குரலில் தான் நினைவுகளில் இருந்து மீண்டு அவனைக் கண்டாள் பல்லவி.

 

கல்லூரி, பணம் என எதுவுமே அவன் எண்ணத்திற்கு இவ்வளவு நேரமும் வரவே இல்லை. இடையில் தந்தை செய்து வைத்த குழப்படி மட்டுமே எண்ணத்தில் சேமிப்பாய் இருக்க, இதற்கு தானா என ஒரு ஆசுவாசம் கிடைக்க தான் செய்தது.

 

“என்ன இவ்வளவு தானா? என்னையும் என் அம்மா அப்பாவையும் அப்படி எல்லாம் திட்டிட்டு இப்ப என் முன்னயே பணம் கேட்டு உட்கார்ந்திருக்கியேனு தானே பாக்குறீங்க!” என்றவள் தன் எண்ணத்தை கோபமாய் கேட்பதாய் நினைத்து கழிவிறக்கத்தில் கேட்டுவிட,

 

“நான் சொன்னேனா அப்படி?” என பதிலுக்கு முறைத்தவன்,

 

“உன்னை அம்மாகிட்ட தானே பணம் வாங்கிக்க சொல்லி இருக்கேன்?” என்றான் அதே முறைப்போடு. 

 

எத்தனை பேசுகிறாள்? அவளே நினைத்து வருந்தி அதைக் கேட்டு வேறு கவலைப்பட்டு என நினைக்கவே ஆயாசமாய் உணர்ந்தான் அவன்.

 

“அம்மாகிட்ட வாங்கிக்கோன்னா. நான் எங்க போய் அவங்களைப் பாக்குறது?” என்றாள் அவளும் முறைத்து. பேச்சுக்கு கூட ஒரு சிறு புன்னகை இருவரிடமுமே இல்லை.

 

“நான் தான் லதாம்மாகிட்ட சொல்லிட்டேனே உங்களை தேடி கூட அந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு!” என்றவளை எதுவும் சொல்லாமல் பார்த்தவன் செயலில்,

 

“என்ன வேனா நினைச்சுக்கோங்க!” என்றவள் தலை தாழ்த்திக் கொண்டு,

 

“எனக்கு கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணியே ஆகணும். அகைன் ஸ்டாப் பண்ண என்னால நினைச்சு கூட பார்க்க முடியல!” எனும் போதே,

 

“அப்படி எதுவும் நான் நினைக்கல பல்லவி. நீயா ஏன் கற்பனை பண்ணிக்குற?” என்றான் அமைதியாய்.

 

“நினைச்சாலும் என்னால என்ன செஞ்சிட முடியும்? கேட்ட உடனே நாப்பதாயிரம் தர்ற அளவுக்கு எனக்கு யாரையும் தெரியாது. என்ன பிரச்சனை வந்தாலும் பேச்சு மாறக் கூடாது. படிக்க வைக்குற பொறுப்பை ஏத்தது நீங்க. அப்ப செஞ்சு தான் ஆகணும்!” என்றவள் சொல்லில் இவன் அவளறியாமல் ஒரு பெருமூச்சைக் கொடுக்க,

 

“உங்களால தான் பார்ட் டைம் ஜாப் தேடலை இவ்வளவு நாளும். இப்ப தேடிட்டு தான் இருக்கேன். கிடைச்சிடும். இல்லைனா கூட நாலு மாசம் தான் காலேஜ் முடிய. முட்டிமோதி உங்க கடனை அடைச்சிடுவேன்!” என்றவளை எதுவும் சொல்லாமல் கூர்மையாய் அவன் பார்வை இருக்க,

 

“என்னை சீண்டி விட்டுட்டார் உங்க அப்பா. எண்ணி குறைஞ்சது அஞ்சு வருஷத்துல உங்க கடனை அடைக்கல..” என்று அவள் சொல்லவும்,

 

“அஞ்சு வருஷமா?” என அதிர்ச்சியாய் அவன் பார்க்கும் போதே,

 

“கடனடைச்சு முடிச்ச கையோட மகேஸ்வரன் பையன் பெரிய இவன்னு ஆணவத்துல இருக்காரே உங்க அப்பா. அவர் முன்னாடி அவர் பையனை விட அழகான, நல்லா உழைக்க தெரிஞ்ச ஒரு பையனை கல்யாணம் பண்ணிட்டு வந்து நான் நிக்கல….” என்றவள் சவாலில் தலையில் கைவைத்துவிட்டான் கீர்த்திஸ்வரன்.

 

“உங்க அப்பாவை சொன்னா உங்களுக்கு கோவம் வருதோ? ஆனா நான் விடமாட்டேன். என்னை ஏன் பகைச்சுகிட்டோம்னு அவரை நினைக்க வைப்பேன்!” என்று அவள் மேலும் பேச, இதழினோரம் சிறிதாய் புன்னகை கீர்த்திஸ்வரனிடம்.

 

“ஓகே! நாலு மாசத்துல ரெடியா இரு!” என அதே புன்னகை மேலேழுந்து விடாமல் கவனமாய் ஈஸ்வர் சொல்ல,

 

“ஏன்?” என்றான் கேள்வியாய்.

 

வரும் பொழுது இருந்ததற்கு நேர்எதிராய் மனநிலை மாறி இருந்தது கீர்த்திஸ்வரன்னிடம்.

 

இன்னுமே எப்படி இதை சரி செய்ய எனும் நினைப்பெல்லாம் மாறிடவில்லை. ஆனாலும் அவளின் இந்த பேச்சு அவளை விட்டுவிடக் கூடாது என இன்னும் அவனை இறுக்கிப் பிடித்தது.

 

“அதான்! வேலைக்கு போகணுமே!” என்றவன் நக்கலை அவள் அறியவில்லை.

 

“போவேன். கண்டிப்பா!” என்ன அதுவரை வீராப்பாய் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென குரல் தேய,

 

“அஞ்சலி எப்படி இருக்கா!” என்று கேட்டாள்.

 

“அவகிட்டயே கேட்டுக்கோ!” என்றான் அசால்ட்டாய்.

 

அதில் முகம் வாடினாலும், “நல்லா தான் இருப்பாங்க. அதான் லதாம்மா இருக்காங்களே! அவங்க பார்த்துக்குவாங்க” என்றாள்.

 

“இங்க பாரு! உன்னை யாரும் அந்த வீட்டுக்கு வர கூடாதுன்னு எல்லாம் சொல்லல. கூடவே ஒவ்வொண்ணுக்கும் இப்படி நீ பயந்தும் கேட்க வேண்டாம்!” ஈஸ்வரன் சொல்ல,

 

“நான் எப்ப பயந்தேன்?” என்றவள் அவன் முறைப்பில் அமைதியாகிவிட்டாள்.

 

“உண்மை என்னனு தெரியாம அதிகமா பேசக் கூடாது பல்லவி. அப்பா பண்ணினது தப்பு. அதை நியாயப்படுத்த போறதில்ல நாங்க யாரும். அதுக்காக அதையே நினைச்சு நீ ஒவ்வொண்ணுக்கும் அம்மாவை விட்டு தூரமா போகாத. வீடு என்னவோ மாதிரி ஆகிடுச்சு இந்த ஒரு மாசத்துல!” என்றான் அவளைப் பார்த்தபடி.

 

“அம்மாவை இவ்வளவு நாளும் இப்படி நான் பார்த்ததில்லை. இப்படின்னா.. இவ்வளவு டல்லா. வீடு முன்னாடியும் கூட அமைதியா தான் இருக்கும். ஆனா இப்போ இருக்குற அமைதி உன்னால தான்!” என்றான்.

 

தன்னை புரிய வைக்க வேண்டும். ஆனால் அதற்கான நேரம் இது இல்லையே. கூடவே தந்தை செய்து வைத்ததில் இதையும் சேர்த்து இப்பொழுது எதற்கு என்று மூச்சே விடவில்லை அதைப் பற்றி.

 

அதற்கு பதில் சொல்லாமல் இருந்தவள் சில நொடிகளில் நினைவு வந்தவளாய், “நான் சிவனேனு வரவும் போகவுமா தானே இருந்தேன். திடிர்னு ஏன் உங்க அப்பாவுக்கு இப்படி ஒரு எண்ணம் என்னைப் பத்தி? “ என்றவள் கேள்வியில் இப்பொழுது திடுக்கிட்டு அமைதியானது என்னவோ கீர்த்திஸ்வரன் தான்.

 

“எவ்ளோ கேவலமா நினைச்சிருக்கார் என்னை. பெரிய பேலஸ் அது. நாங்க பார்த்து மயங்கி அங்கேயே அவர்…. “ என அடுத்து சொல்ல வந்தவள் அவன் பார்வை கண்டு நிறுத்திவிட்டாள்.

 

“தப்பு தான். தப்பான அண்டர்ஸ்டாண்டிங் தான். எல்லாம் சரியாகும். நாலு மாசம் வெயிட் பண்ணு!” என்றான் அப்போதுமே. 

 

“ஓகே! இப்ப அதை பேச வேண்டாம் பல்லவி. நல்லா படி. படிச்சு முடி. அப்புறமா பார்த்துக்கலாம். பதிலும் சொல்லலாம்!” என்றவன்,

 

“உன் அம்மா நம்பர்க்கு அமௌன்ட் அனுப்பிடுறேன். செக் பண்ணிக்கோ!” என்று ஈஸ்வர் சொல்ல,

 

“என் அக்கௌன்ட் இருக்கு. அப்பவும் ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஷன் தான் இல்ல. இப்ப ரெண்டுமே இருக்கு” என்றவள் சொல்லில்,

 

“சரி! அனுப்பிடுறேன்!” என்று ஈஸ்வர் சொல்ல, சரி என தலையசைத்தவள் மனம் வெகுவாய் சஞ்சலமானது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!