Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 9

அத்தியாயம் – 9

 

அடுத்த நாள் காலை வழக்கம் போல் விடிந்தது, ஆனால் மிருதுளாவின் மனக்கண்ணில் மட்டும் ரன்வீர் மண்டியிட்டு நின்ற அந்தத் தருணம் மாறாமல் அப்படியே பதிந்திருந்தது,  இரவு முழுவதும் சரியாகத் தூக்கமில்லாததால் அவளது முகம் சற்றே வாடியிருந்தது…

​அவளது இந்த மாற்றத்தை வீரமாணிக்கம் கவனிக்காமல் இல்லை. காலை உணவு நேரத்தில் அவளை உற்றுப் பார்த்தவர், “என்ன மிருதுளா ஒரு மாதிரி இருக்க? ஏதாவது பிரச்சனையாமா?” என்று வாஞ்சையுடன் கேட்டார்.



Advertisement

​அவரது கேள்வியில் ஒரு நிமிடம் தடுமாறியவள், சட்டென்று தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அப்படியெல்லாம் இல்ல தாத்தா… நேத்து அந்தப் பார்ட்டிக்குப் போனதுல இருந்து அம்மா, அப்பா ஞாபகம் அதிகமா வந்திடுச்சு, அதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு,” என்று பொய் சொல்லி சமாளித்திட, அவளது தந்தை தாய் பற்றிச் சொன்னதும் வீரமாணிக்கமும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அமைதியானார்…

​அவள் ஏற்கனவே ரன்வீரின் அந்த அதிரடி பிரபோசலினால் மனப்போராட்டத்தில் இருக்க, விஷ்வா வேறு போன் செய்து தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். அவனது பெயரைக் கண்டாலே அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

“இவனுக்கு வேற வேலையே இல்லையா!” என்று சலித்துக்கொண்டவள், போனை அணைத்துவிட்டு மெத்தையில் சாய்ந்தாள், இரவு முழுவதும் தூக்கமில்லாத களைப்பில், தன்னையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள்.

Advertisement

​பகலில் சிறிது நேரம் உறங்குவது அவளது வழக்கம் என்றாலும், அன்று எழுந்தபோது மாலை மங்கி இருள் சூழத் தொடங்கியிருந்தது, தூங்கி எழுந்த பிறகும் அவளது சிந்தனை ஓட்டம் ரன்வீரைச் சுற்றியே இருந்தது…

Advertisement

​’இன்னைக்கு நைட் அவன் வருவானா?’ இந்த எண்ணம் தோன்றிய மாத்திரத்திலேயே அவளது இதயம் ஒரு தாளம் தப்பியது. அது பயமா? இல்லை எதிர்பார்ப்பா? என்று அவளுக்கே புரியவில்லை. ஆனால், ஒருவிதப் படபடப்பு அவளது ரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருந்தது…

​இரவு உணவை இயந்திரத்தனமாக முடித்துவிட்டு, வழக்கம் போல் தனது அறையின் பால்கனிக்கு வந்து நின்றாள், குளிர் காற்று அவளது கூந்தலைக் கலைத்தாலும், அவளது விழிகள் மட்டும் அந்த இருளுக்குள் ரன்வீரைத் தேடி அலைந்தன.

ஒவ்வொரு சிறிய சத்தமும், மரக்கிளையின் அசைவும் அவன் வருவதற்கான அறிகுறியோ என்று அவளை ஏங்க வைத்தது,
​நேரங்கள் மெல்ல நகர்ந்தன, மணி பன்னிரண்டைத் தாண்டியது, ஒன்றைத் தாண்டியது… ஆனால் ரன்வீர் வரவில்லை, அவன் வருவான் என்று சொன்ன அந்தத் துணிச்சலும், நேற்றைய அந்த வேகமும் இன்று அங்கே இல்லை, விடிந்தும் விட்டது…

Advertisement

​ஒருவித ஏமாற்றத்துடனும், சொல்லத் தெரியாத வலியுடனும் மெத்தையில் வந்து படுத்தவளுக்குத் தூக்கம் வரவில்லை. ‘அவன் ஏன் இன்னைக்கு வரல? வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டானா?’ அன்று முழுவதுமே இதே யோசனையில்தான் வலம் வந்தாள். அவனது வருகையை வெறுத்தவள், இன்று அவனது வரவை எதிர்நோக்கித் தவிப்பது அவளுக்கே ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது…

​மிருதுளாவின் இந்தத் தவிப்பு, ரன்வீர் அவளது மனதில் ஒரு ஆழமான தடம் பதித்துவிட்டான் என்பதன் முதல் அறிகுறியாக இருந்தது…

அன்றைய இரவும் மெல்லச் சூழந்தது. நேற்று அவனுக்காகக் காத்திருந்து ஏமாந்த அந்தத் தவிப்பு இன்று ஒருவிதமான வைராக்கியமாக மாறியிருந்தது.

‘அவன் பெரிய பிஸினஸ் மேன், அவனுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும், சும்மா டைம் பாஸுக்காக எதையோ சொல்லி என்னை சமாளிக்கப் பார்த்திருக்கான், நான் ஏன் அவனை நினைச்சு என் நிம்மதியை இழக்கணும்?’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவன், ​இனி அவனைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற உறுதியான முடிவோடு, தன் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றாள். ஆனால், விதி அவளிடம் வேறு ஒரு விளையாட்டை வைத்திருந்தது.

​பால்கனி கதவு திறந்திருக்க, திடீரென்று ஒரு மின்னல் வேகத்தில் அந்த இருட்டுக்குள் இருந்து ஒரு உருவம் ஸ்பைடர் மேன் போலப் பாய்ந்து அறைக்குள் குதித்தது. எதிர்பாராத அந்த அதிரடி வருகையில் மிருதுளா ஒரு கணம் அதிர்ந்து, இதயம் தொண்டைக்குழிக்கு வந்து நின்றது…

​எல்லாம் சில கணங்கள் தான்… அடுத்த நொடியே தன் அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு அவனைத் தீயாய்ப் பார்த்தாள். நேற்று அவன் வராமல் அவளைத் தவிக்க விட்ட அந்த ஏமாற்றம், இப்போது எரிமலையாய் வெடிக்க… ​”எதுக்கு மறுபடியும் வந்த?” என்று கேட்டாள் அவனது கண்களை நேருக்கு நேராக முறைத்தபடி. அவளது குரலில் இருந்த அந்த ஆக்ரோஷம், நேற்று அவனுக்காக அவள் சிந்திய அந்த ஒரு துளி ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான் என்பதை ரன்வீர் உணரவில்லை…

​தனது முகமூடியைக் கழற்றிவிட்டு, ஒரு களைப்பான அதே சமயம் வசீகரமான புன்னகையுடன் அவளைப் பார்த்தவன்… “நேத்து வர முடியல மிருதுளா… அதான் இன்னைக்கு வந்தேன்” என்றான் அதே அதிகாரமிக்க குரலில்…

​”உன்னை யாரு இங்கே மறுபடியும் வர சொன்னது? நான் அன்னைக்கே சொன்னேன்ல… இங்கிருந்து போயிடுன்னு, நீ நினைச்ச நேரத்துக்கு வரவும், போகவும் இது என்ன சத்திரமா?” என்று அவள் எகிறிட, ​ரன்வீர் அவளது கோபத்தை ரசிப்பது போல மெல்ல அவளை நோக்கி நகர்ந்தவன்… “நேத்து நான் வராதது உன்னை இவ்வளவு பாதிச்சிருக்கும்னு தெரிஞ்சிருந்தா, எல்லா வேலையையும் விட்டுட்டு வந்திருப்பேனே,” என்று அவன் கிண்டலாகச் சொல்ல, மிருதுளாவுக்கு முகம் சிவந்தது.

​”யார் சொன்னா எனக்குப் பாதிப்புன்னு? நீ வந்தா என்ன வராட்டி என்ன… எனக்கு எந்தக் கவலையும் இல்லை, இப்போவே இங்கிருந்து கிளம்பு,” என்று அவள் கையை நீட்டி வழி காட்டிட,
​ரன்வீர் மெல்ல அவளருகில் வந்தவன்,.. “பொய் சொல்லாத மிருதுளா… உன் கண்ணுல இருக்கிற இந்தக் கோபம், நான் வராததுனால வந்த ஆதங்கம்னு எனக்குத் தெரியாதா?” என்று அவன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் ஒருகணம் மௌனமானவள்… “இப்டிலாம் பேசினா நான் மயங்கிடுவேனா?” என்று அலட்சியமாக வினவ, அவளது அந்தக் கேள்வி ரன்வீரின் இதழ்களில் ஒரு கள்ளச் சிரிப்பை வரவழைத்தது…

​அவளைத் தனது லேசர் விழிகளால் ஊடுருவிப் பார்த்தவன், மெல்ல அவளது காதோரம் குனிந்து, “உன்னை மயக்க என்கிட்ட நிறைய ஐடியா இருக்கு மிருதுளா… ஆனா அதை இப்போ செயல்படுத்தினா, அப்புறம் என்னாலயே என்னை கண்ட்ரோல் பண்ண முடியாமப் போயிடும்,” என்று ஆழமான குரலில் ரகசியமாகச் சொல்ல,
​அவன் சொன்ன அந்த ஐடியா என்ற வார்த்தையும், அவனது மூச்சுக்காற்று அவளது பிடரியைத் தீண்டியதும் மிருதுளாவிற்குள் ஒரு மின்னல் பாய்ந்தது போல இருந்தது.

சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு ஓரடி பின்வாங்கியவள்… ​”என் பக்கத்துல வர வேலை வச்சுக்காத, நீ ரொம்பத் தான் ஓவரா பேசுற, நீ யாருன்னு எனக்குத் தெரியும். ஒரு பிசினஸ் மீட்டிங்ல மத்தவங்களை உன் பேச்சால மயக்குற மாதிரி என்கிட்டயும் உன் வேலையைக் காட்டலாம்னு பார்க்காத,” என்று அவள் தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு படபடவெனப் பேசினாள்…

​ரன்வீர் அவளது படபடப்பை ரசித்தபடி  மெத்தையில் சாவகாசமாக அமர்ந்தவன்.. “பிஸ்னஸ் வேற, நீ வேற மிருதுளா, அங்க நான் ஜெயிக்கப் பேசுவேன்… ஆனா இங்க தோத்துப்போகக் கூடத் தயாரா தான் வந்திருக்கேன்,” என்றான் ஒருவிதமான காதலும் அதிகாரமும் கலந்த குரலில்.

​அவன் காட்டும் இந்த அதீத உரிமை அவளுக்குக் கோபத்தை விட ஒருவிதமான குழப்பத்தையே அதிகப்படுத்தியது, நேற்றைய ஏமாற்றமும், இன்றைய அவனது இந்த அசாத்திய துணிச்சலும் சேர்ந்து அவளைத் தவிக்க வைத்தது…

​”சரி… நேத்து ஏன் வரல? வரேன்னு சொல்லிட்டு வராம இருந்ததுக்கு முதல்ல காரணம் சொல்லு,” என்று அவள் கேட்டும் கேட்காமலும் வினவ, அவளை ஆழமாக பார்த்தவன்… ​”ஏன்… நான் வராதது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்ததா?” என்று அவன் மடக்கிக் கேட்க, மிருதுளா முகம் சிவந்து போனாள்…

​”அ.. அப்படியெல்லாம் இல்ல! வரேன்னு சொன்ன ஒருத்தன் வராம இருந்தா, அவன் ஏமாத்துறான்னு தானே அர்த்தம். அதான் கேட்டேன்,” என்று சமாளிக்க,.. ​எழுந்து அவளை நோக்கி வந்தவன்.. “நேத்து ஒரு முக்கியமான வேலை… அதை முடிச்சா தான் உன்கிட்ட நான் நிம்மதியா பேச முடியும்னு இருந்தது, அதான் வர முடியல. ஆனா, அந்த ஒரு நாள் கேப்ல நீ என்னை இவ்வளவு மிஸ் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல,” என்று அவளது கன்னத்தைச் செல்லமாகத் தட்ட முயல, அவள் அவனது கையைத் தட்டிவிட்டாள்…

​”நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல, நான் எதுக்காக உன்னை மிஸ் பண்ண போறேன்” என்று கேட்டவள்,.. “இப்போவே இங்கிருந்து போயிடு” என்றாள் கோபமாக…

​அவனது உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. “நான் சொல்லிட்டு தானே போனேன். உன்னோட பதிலைக் கேட்க வருவேன்னு,” என்று மிகத் தெளிவாக சொன்னவனை மிருதுளா முறைத்துப் பார்த்துவிட்டு, “எனக்கு இந்த லவ்ல எல்லாம் இண்ட்ரஸ்ட் இல்ல,” என்று முகத்தில் அடித்தாற்போலச் சொன்னாள்…

​”ஏன்?” ரன்வீரின் கேள்வி சுருக்கமாக இருந்தாலும், அவனது அந்த லேசர் கண்கள் அவளது ஆழ்மனதைத் துளைத்தன…

​”இல்லைன்னா இல்ல தான்! அதையும் விட நீ யாருன்னே எனக்குத் தெரியாது, உன்னைப் பத்தி எதுவுமே எனக்குத் தெரியாது, ஒரு மொட்டைக் கடிதாசி மாதிரி ராத்திரியில பால்கனி வழியா வர்ற உன்னை நம்பி, எப்படி என்னால இதைப் பத்தி யோசிக்கக் கூட முடியும்?” என்று அவள் தனது நியாயமான ஆதங்கத்தைக் கொட்டிட ​ரன்வீர் ஒரு கணம் அமைதியாக அவளைப் பார்த்தவன்.. பின்.. “ஓ… இதான் விஷயமா? சரி, என்னைப் பத்தி சொல்றேன் கேட்டுக்கோ” என்றுவிட்டு, மெத்தையின் ஓரத்தில் அமர்ந்து தனது கதையை சொல்லத் தொடங்கினான்…

​”எனக்கு அம்மா, சித்தப்பா, சித்தி, ஒரு தங்கை, தம்பி இருக்காங்க. அவங்கதான் என் உலகம், உன்னோடது ஒரு சின்ன கூட்டு குடும்பம் தான், என்னோட அப்பா… அவர் இப்போ உயிரோட இல்லை,” என்று சொல்லும்போதே அவனது குரலில் ஒரு கணம் கனம் கூடியது…

​மிருதுளா அவன் சொல்வதை மௌனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பிஸ்னஸ் மேக்னட்டின் பின்னணியில் இவ்வளவு பெரிய குடும்பம் இருப்பது அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைத் தந்தது…

​”அப்பா இறந்ததுக்கு அப்புறம் இந்த மொத்த சாம்ராஜ்யத்தையும் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு என் மேல விழுந்தது, அதுக்காக நான் ஓடுன ஓட்டத்துல, காதல் கத்திரிக்காய்னு எதையும் நினைக்க நேரமே இல்லாம போயிடுச்சு, ஆனா, உன்னைப் பார்த்த அந்த நிமிஷம்… முதல் முறையா எனக்காக வாழணும்னு தோணுச்சு,” என்று அவன் உருக்கமாகச் சொல்ல, மிருதுளாவிற்க்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு சிறு அசைவு ஏற்பட்டது…

அத்தனை அதிகாரமும் கர்வமும் கொண்ட ரன்வீரின் குரலில் ஒரு மெல்லிய தவிப்பை அவள் முதன்முதலாக உணர்ந்தாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!