Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 15

     அண்ணன் மோகனன் தற்கொலை முயற்சி செய்ததில் இருந்து பயம் என்னும் பேய் பிடித்துவிட்டது சாருகேசிக்கு. அவனுடைய புலன்கள் எதுவுமே வேலை செய்யவில்லை. முழுக்க முழுக்க பைரவனின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டான்.

     மருத்துவமனையின் பின்பக்கம் நடந்து கொண்டிருந்த கட்டுமானப்பணிக்காக கொட்டி வைத்திருந்த மணலில் தான் மோகனன் விழுந்திருந்தான் என்றாலும் நல்ல அடி. ஏற்கனவே தலையில் இருந்த காயம் கூடுதலாக காயப்பட்டிருக்க, முதலுதவிக்குப் பிறகு மேற்சிகிச்சைக்காக பெரிய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக பெயருக்கு அமிர்தாவுக்கு அறிவித்துவிட்டு மோகனோடு அவனுடைய மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் பைரவன். செல்லும் போது அமிர்தாவையே பார்த்துக்கொண்டு சென்றான் கேசி.

     அக்காவிற்காக சிகிச்சைகளையும், மகளை நினைத்து அழுது கொண்டிருந்த அம்மாவையும் ஒற்றை ஆளாக கவனித்துக்கொண்டிருந்தாள் அமிர்தா. நேற்று வரை பெரிதாக எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றிவந்த பட்டாம்பூச்சி என்பதால் அவளுக்கு திடீரென இத்தனை பொறுப்புகளைத் தாங்க முடியவில்லை. உடலும் மனதும் சோர்ந்து போனது. ஆனாலும் சமாளித்தாள். தகப்பன் திடீரென கொள்ளை போனால் எந்த வயதில் இருந்தாலும் இனி இந்தக் குடும்பத்திற்கு தானேபொறுப்பு என்று ஒரு ஆண் உறுதியுடன் மீண்டெழுவான். அப்படித்தான் அந்த சூழ்நிலையில் எழுந்திருந்தாள் அமிர்தா.



Advertisement

     அடுத்த நாள் மதியம் போல் கண்விழித்திருந்தாள் நீலா. அமிர்தாவும், கல்யாணியும் எவ்வளவோ பேசிப் பார்த்தும் ஒரு வார்த்தை பேசவில்லை. விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள் அவர்கள் இருந்த அறையின் கதவைத் திறந்தபடி வந்த மருத்துவமனை ஆண் ஊழியர் ஒருவனைக் கண்டதும் சாமி வந்தவள் போல் ஆக்ரோஷமாகி கத்தியதோடு இல்லாமல் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் தூக்கி எறிந்தாள். அவளைக் கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருந்தது அமிர்தாவுக்கு.

     கத்திக்கொண்டே இருந்த நீலா ஒருகட்டத்தில் உடல் தொய்வுற மயங்கி விழுந்தாள். நடந்த அதிர்வில் அவளுக்கு மனநலப் பிறழ்வு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர் சொன்ன நொடி, கல்யாணி மனதளவில் செத்தேவிட்டார். அமிர்தாவுக்கும் அந்த நொடியை எப்படிக் கடப்பது, எப்படி ஏற்றுக்கொள்வது என்று புரியவில்லை. சில நாட்கள் முன்பு வரை தன்னோடு சந்தோஷமாக பேசி சிரித்தவளுக்கு இனி தன்னை அடையாளமே தெரியாதா என யோசிக்கையிலே இதயம் வெந்து போனது. ஆறுதலுக்காய் மனம் அவளது கேசியைத் தேடியது.

     அவனுக்கு அழைத்து, “அக்காவுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சாம் கேசி. அவளால் யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது, பேச முடியாதுன்னு டாக்டர் சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒருமுறை இங்க வந்து என்னைப் பார்த்துட்டு போங்களேன்” ஏக்கமாகக் கேட்டாள் அமிர்தா.

Advertisement

     கண்களை அழுந்த மூடித்திறந்த கேசி, “இங்க அண்ணனைப் பார்த்துக்க யாரும் இல்ல அமிர்தா. நான் இங்க இருக்க வேண்டியது கட்டாயம். அண்ணிக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ. நான் அங்க வந்து பார்க்கிறேன்.” என்றான். அவன் குரலில் எப்போதும் உரிமையும், அன்பும் நிறைந்து வழியும். இன்று அது இல்லாதது போல் தோன்றியது அமிர்தாவுக்கு. இருந்தாலும் அனைத்தும் தன் பிரம்மை என்று நினைத்து கடந்தாள்.

Advertisement

     தந்தைக்கு துணையாக வீட்டில் விட்டு வந்த நபரிடம் இருந்து விடாமல் அழைப்பு வரவும், தாயை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனி ஒரு ஆளாய் நீலாவைப் பார்த்துக்கொண்டாள் அமிர்தா.

     பெரும்பாலும் அமைதியாக இருக்கும் நீலா, குரல் கொடுக்காமல் யாரும் அறைக்குள் வந்தாலோ இல்லை யாரும் ஆண்கள் அவள் முன்பு வந்தாலோ கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள். சில நேரம் அறையை விட்டு ஓடிவிடுவாள். அவளை இழுத்துப் பிடித்து திரும்ப அறைக்குள் கொண்டு வருவதற்குள் உயிர் போய் உயிர் வரும் அமிர்தாவுக்கு.

     பத்து நாட்கள் கடந்த பிறகு நீலாவை தங்கள் இல்லம் அழைத்து வந்திருந்தாள். இத்தனை நாட்களில் தானாக அழைக்காமல் கேசி ஒருமுறை கூட தனக்கு அழைக்கவில்லை என்பது ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தினாலும், அவன் மீது இருந்த அளப்பரிய நம்பிக்கையில் அமைதியாக இருந்தாள்.

Advertisement

     வீடு வந்த பிறகு தான் தாயிடம் தெரிந்த மாற்றத்தையே  கண்டுகொண்டிருந்தாள் இளையவள். சமூகவலைதளங்களில் நீலாம்பரி மற்றும் மோகனனைப் பற்றிய செய்திகள் பரவியதில், தினமும் யாராவது ஒருவர் வீடு தேடி வந்து வெந்து போய் இருந்த புண்ணில் ஈட்டியைக் குத்திச்சென்றனர்.

     அக்கறை என்கிற பெயரில், “இதுக்கு மேல நீலாவை என்ன செய்யப் போறீங்க? அவளோட புருஷன் என்ன சொல்றாரு. எனக்குத் தெரிஞ்ச வரை இனி நம்ம நீலா முன்னாடி மாதிரி சந்தோஷமா வாழ்வது கஷ்டம் தான்.

     எதுக்கும் உங்க புருஷன்கிட்ட பேசிப்பாருங்க. அவங்க குடும்பத்தில் யாரும் யாருக்கும் மன்னிக்க முடியாத பாவம் பண்ணி இருக்கப் போறாங்க. அதனால் தான் உங்க குடும்பம் இப்படிக் கிடந்து தவிக்கிறீங்களோ என்னவோ. என்ன ஏதுன்னு கேட்டு எதுக்கும் பிராயச்சித்தம் பண்ணிடுங்க.” என்று கண்டதையும் சொல்லிச்செல்ல மனதிற்குள் மரித்துக்கொண்டிருந்தார் கல்யாணி.

     நீலா திரும்ப வந்த பிறகு அவளைப்பார்க்கிறேன் என மீண்டும் ஒரு முறை படையெடுத்து வந்து அமிர்தாவிடமும் இதே போல பேச, முதல் சில நாட்கள் “என் அக்கா மேல எந்த தப்பும் இல்ல. அவ எதுக்காக கஷ்டப்படப் போறா. கண்டிப்பா அவ உங்களையும் என்னையும் மாதிரி சாதாரணமா மாறுவா. நம்மை விட நல்லபடியா வாழ்வா.” என்று போராடியவள்  அதன்பிறகு வெகுவாக வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டதோடு, வேண்டுமென்றே மனம் நோகும் படி பேசும் நபர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் செய்தாள்.

     கடந்த சில நாட்களாக துணைக்கு கூட ஆள் இல்லாமல் தனியே செயல்பட்டது அவளுள் இருந்த வீரனை வெளியே கொண்டு வந்திருந்தது போலும். தனி ஒருத்தியாக அந்தக் குடும்பத்தை தாங்கினாள்.

     அப்படி இருக்கையில் தான் ஒருநாள் கேசி அவளுக்கு அழைத்து தன் இல்லம் வரச்சொன்னான். இத்தனை நாட்கள் மோகனனைப் பற்றி விசாரிப்பதற்காக அழைக்கும் பொழுதுகளில் எல்லாம், “அண்ணன் நல்லா இருக்கார், நான் உயிரோட இருக்கும் வரை என்ன செஞ்சாச்சும் அவரை நல்லபடியா வாழ வைப்பேன்.” என்பதை திரும்ப திரும்ப மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தானே தவிர, வேறு எதுவும் பேசவில்லை. இன்று அவனே அழைக்கவும், மனதிற்கு சற்று இதமாக இருக்க, நம்பிக்கையோடுஅவனைக் காணச் சென்றாள் அமிர்தா.

     இருபது நாட்கள் இடைவெளியில் இரண்டு வயது மூப்பெய்தியவன் போல கவலையான தோற்றத்துடன் இருந்தவனைக் கண்டு என்னவோ போல் ஆனது அமிர்தாவுக்கு. “மாமா நல்லா இருக்கார் தானே.” பயத்தோடு கேட்டாள். ஆம் என்ற தலையை ஆட்டியவன், வானைப் பார்த்து பெருமூச்சுவிட்டு அவளை தன் வீட்டு வரவேற்பறையில் அமர வைத்தான்.

     “என்னாச்சு கேசி உங்களுக்கு?” அமிர்தா கவலையாய் கேட்க, ஒரு சில கணங்கள் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். அவள் உருவத்தை சின்ன தூசி கூட விடாமல் அப்படியே நகல் எடுத்து தன் மனதிற்குள் புதைத்துக்கொள்வது போல் பார்த்தவன், பெருமூச்சோடு எழுந்து தன் அண்ணனின் அறைக்குள் சென்றான்.

     அங்கே அவனை வரவேற்றது நான்கு பெரிய பெட்டிகள்.. அவை யாவும் அந்த அறையில் இருந்து முற்றும் முழுதுமாய் துடைத்து அப்புறப்படுத்தி இருந்த நீலாவின் பொருட்கள். பெரிய சுமை தான் ஆனால் அதைத் தூக்கி வரும் போது அவன் கைகளுக்குப் பதில் மனம் அதிகமாக வலித்தது.

     “என்ன கேசி இதெல்லாம்?” தன்முன்னே பெட்டியோடு நின்றவனைப் பார்த்து கேள்வி எழுப்பினாள் அமிர்தா.

     “உன் அக்காவோட திங்க்ஸ். இனிமே இது இந்த வீட்டுக்குத் தேவையில்லை. அதனால் தான் திருப்பிக்கொடுக்கிறோம்.” என்றபடி வந்தார் பைரவன். அவர் சொன்ன வார்த்தைகளிலும், அதில் இருந்த வன்மத்திலும் பதறிப்போய் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்ற அமிர்தா கேசியைப் பார்க்க, அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாதவனாய்,

     “அண்ணனோட பிரச்சனை உனக்கே தெரியும். அவன் முன்னாடி இருந்ததை விட இப்ப ரொம்ப மோசமான நிலையில் இருக்கான். அண்ணியைக் காப்பாத்த முடியலேங்கிற குற்றவுணர்ச்சி அவன் மனசு முழுக்க இருக்கு. இந்த நிலையில் அண்ணியோட வாழும் வாழ்க்கை அவனுக்கு நரகமாத் தான் இருக்கும் னு டாக்டர் சொன்னார். அதனால் தான் நானும், அம்மாவும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம்.” என்றுவிட்டு நிறுத்தினான்.

     “என்ன முடிவு கேசி. என் அக்காவை மொத்தமா தொலைச்சுக்கட்டுற முடிவா?” கோபமாய் கேட்டாள்.

     “உன் அக்காவை மட்டும் இல்ல, உன்னையும் சேர்த்து தொலைக்கிறது தான் எங்க குடும்பத்துக்கு நல்லது. என் பையனும் அதைப் புரிஞ்சுக்கிட்டான். உங்க அம்மாகிட்ட இதைச் சொல்றதுக்காக கூப்பிட்டோம். அவங்க நாங்க சொல்ற எதையும் கேட்கும் நிலையில் இல்ல. அதனால் தான் உன்னை இங்க வரவழைச்சு பேசிக்கிட்டு இருக்கோம். எல்லோரும் சந்தோஷமா நின்னு தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைச்சோம். அதே மாதிரி நல்ல முறையிலே இந்த உறவை முறிச்சுக்கலாம்.” என்றபடி வந்தார் பைரவி.

     “கேசி.” நம்பமுடியாமல் அமிர்தா அவனைப் பார்க்க, “இந்தப் பிரச்சனைக்கு வேற வழியே இல்லை அமிர்தா. என் அண்ணன் நீலா அண்ணியைப் பார்த்தா குற்றவுணர்ச்சியில் செத்தே போயிடுவான். அவன் இல்லாம இந்த வீட்டில் சின்ன துரும்பு கூட அசையாது, உனக்கே அது தெரியும். அவனுக்காக நாங்க இந்த பெரிய முடிவை எடுக்க வேண்டியதாப் போச்சு.” அவள் முகத்தைப் பார்க்கும் துணிவு இல்லாமல் தலைகுனிந்தபடி சொன்னான்.

     “அவங்களோட கல்யாணம் மட்டும் பிரியல. நம்ம காதலும் பிரிஞ்சிடுச்சுன்னு உங்க அம்மா சொன்னாங்களே அதுக்கு என்ன அர்த்தம்.”இறுகிவிட்ட குரலில் கேட்டாள் பெண்.

     “கெட்டதிலும் ஒரு நல்லதா அண்ணன் தற்கொலை முயற்சி பண்ணதில் அவனுக்கு பழசு எல்லாம் மறந்திடுச்சு. எங்களைக் கூட நினைவில் இல்ல. வெள்ளைப் பேப்பர் மாதிரி இருக்கான். ட்ரீட்மெண்ட் பார்த்தா பழசு எல்லாம் நினைவு வர வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொன்னார்.

     நினைச்சு சந்தோஷப்படும் அளவுக்கு அவரோட கடந்தகாலத்தில் பெரிய சந்தோஷமான நினைவுகள் இல்லங்கிறதால் அது நினைவுக்கு வராமலே போகட்டும் னு நாங்க முடிவு பண்ணோம்.

     அதுக்காக, அவருக்காக, அவரோட கடந்த காலத்தோட எந்த வித தொடர்பும் இல்லாத ஊருக்கு நாங்க மொத்தமா போகப் போறோம். அதனால்” என்று இழுத்தான். எத்தனையோ முறை தனக்குள் உருப்போட்ட வார்த்தைகள் தான் என்றாலும், அதற்கான சமயத்தில் அவனால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.

     அமிர்தாவால் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. அவளின் கேசியா, அவனா தன்னை வேண்டாம் என்கிறான். அதுவும் தன்மீது சிறு தவறும் இல்லாத சூழ்நிலையில் தன்னை ஒதுக்கி வைக்கிறானா. அவ்வளவு தான் அவன் காதலா? நினைக்கும் போது நெஞ்சு எரிந்தது.

     சில நாட்களாகவே தொடர்ந்து வேதனைகளை மட்டுமே அனுபவித்து வந்த உடல் இனியும் என்னால் தாங்க முடியாது என்பதாய் சோர்வடைந்து அவளை கீழே சாய்க்கப் பார்க்க பாய்ந்து வந்து அவளைப் பிடித்தான் கேசி.

     அவனின் கையணைப்பில் இருப்பதை உணர்ந்ததும், “சற்று முன்னர் நடந்த அனைத்தும் பொல்லாத கனவு என்று சொல்லிவிட மாட்டானா?” என்கிற நினைப்போடு அமிர்தா அவனையே பார்க்க, மனதைக் கல்லாக்கிக்கொண்டு தன் பிடியில் இருந்தவளை தன்னை விட்டு விலக்கி அமர வைத்தவன், “நாங்க போறோம் அமிர்தா. இனி இந்த வீட்டுக்கு வரமாட்டோம்.” எங்கோ பார்த்தபடி சொன்னான். அதில் நீயோ, உன் சம்பந்தப்பட்டவர்ளோ எங்களைத் தேடி இங்கே வரவேண்டாம் என்கிற தகவல் பொதிந்து கிடக்க, உடல் தூக்கிப்போட்டது அமிர்தாவுக்கு.

     பிணம் போல் நின்று தன்னவள் படும் வேதனையைத் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை கேசியால். “போயிடு அமிர்தா. அது தான் எல்லோருக்கும் நல்லது.” மாமனாலும், பெற்றெடுத்த தாயாலும் தன் மனதில் அழுத்தமாக பதிய வைக்கப்பட்ட விஷயத்தை சொன்னான்.

     அன்றுபோல் இன்றும் கண்ணைத் தாண்டி வடிந்த கண்ணீரை அழுத்தமாகத் துடைத்த அமிர்தா, “என் அக்காவை விட்டு பிரிச்சு உங்க அண்ணனை நீங்க காப்பாத்திடுவீங்க. ஆனா என் அக்காவை எப்படி காப்பாத்துறது கேசி.” என்க, அந்தக் கேள்விக்கு பதில் இல்லை அவனிடத்தில்.

     “மாச மாசத்துக்கு அவளுக்குத் தேவையான பணம் கொடுக்கிறோம். அதை வைச்சு அவளை நீயே பார்த்துக்கோ.” என்றது சாட்சாத் பைரவியே.

     “நீங்க எல்லாம் மனுஷங்க தானா? அக்னி சாட்சியா உருவான ஒரு பந்தத்தை, ஊணும் உயிருமா என் அக்கா வாழ்ந்த ஒரு வாழ்க்கையை அவ அவளோட சுயநினைவில் இல்லாம இருக்கும் இந்த நேரத்தில் அவகிட்ட இருந்து பறிக்கப் பார்க்கிறீங்களே இது நியாயமா?” வேகமாகக் கேட்டாள்.

     “தனக்குப் போகத் தான் தானமும் தர்மமும். அந்த வகையில் மகனுக்கு அப்புறம் தான் மருமக. எங்க வீட்டுக்கே மோகனன் தான் ஆணிவேர். அவனுக்காக நாங்க என்ன வேண்ணா செய்வோம்.

     இன்னொரு விஷயத்தை உன் முகத்தைப் பார்த்து சொல்ல  ரொம்ப தயங்குறான் என் சின்ன பையன். நாங்க எங்க மோகனனுக்கு நினைவு இல்லாத இந்த நேரத்திலேயே வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கப்போறோம்.” அசராமல் பிசராமல் பெரிய குண்டை தூக்கி போட்டார் பைரவி.

     “கேசி” பரிதாபமாய் அவள் பார்க்க, “வேற வழி இல்ல அமிர்தா.” பலவீனமாய் தலையாட்டினான் கேசி.

     “உங்க அண்ணனோட மனநலப் பாதிப்பு முழுசா சரியாகிடுச்சுன்னு பொய் சொல்லி என் அக்கா வாழ்க்கையை வம்பாக்கினது போதாதுன்னு இன்னொரு பொண்ணு வாழ்க்கையையும் கெடுக்க திட்டம் போட்டாச்சா? ஒருவேளை நாளைக்கு அந்தப் பொண்ணுக்கும் ஏதாவது நடந்தா என்ன பண்ணுவீங்க. அவளையும் அத்து விட்டுட்டு மூணாவது ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாம் பண்ணி வைப்பீங்களா?

     இதுக்கு நான் விட மாட்டேன். என் அக்காவுக்கும் உங்க அண்ணனுக்கும் விவாகரத்து ஆனா தானே உங்களால் அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க முடியும். என் அக்கா அவளோட சுயநினைவுக்கு வரும் வரை உங்களுக்கு விவாகரத்து கிடைக்காது. அதுக்கு நான் விடவும் மாட்டேன்.

     அப்புறம் என்கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம நமக்குள்ள இருந்த காதலை நீங்க ஒருத்தரே கைவிட்டீங்க இல்ல. இப்ப அதை நான் ஏத்துக்கிறேன். உங்களை மாதிரி சுயநலக்காரர் கூட எனக்கு காதலோ, கல்யாணமோ வேண்டாம்.” என்றுவிட்டு தன் தமக்கையின் பொருட்கள் அடங்கிய பைகளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள் அமிர்தா. அவள் செல்லும் பாதையை வலியோடு பார்த்துக்கொண்டிருந்தான் கேசி. எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள் எல்லாம் மொத்தமாக போய்விட்டது. காற்றில் கரைந்து போகத்தான் இருக்கிறது என்றால் எதற்காக இந்தக் காதல் இத்தனை ஆழமாக தங்களுக்கு நடுவில் உருவாக வேண்டும் என்று கடவுளை சபித்தான்.

     வீட்டிற்கு வந்த அமிர்தா தாயிடம் நடந்த அனைத்தையும் சொல்லி, அவர் மடியில் படுத்து மனக்காயத்தின் வலி குறையும் வரை அழுதுவிட்டு தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். உடலில் இருந்ததை விட மனதில் சோர்வு அதிகமாக இருக்க, அவளுக்கு வேறுவழி இல்லை.

     லீராப்பாக நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள் தான். ஆனால் காதல் கொண்ட மனதால் நடந்த எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களுக்குள் நடந்த இனிமையான நினைவுகளை உருப்போட்டபடி படுத்திருந்தவள் தன்னை மறந்து உறங்கி இருந்தாள்.

     அவள் எழுந்து வந்த போது வீடு மையான அமைதியில் இருந்தது. அந்த வீட்டை கலகலகப்பாக வைத்திருப்பவளே அவள் தான். இப்போது அவளுடைய சோகத்தை வீடும் பிரபலிப்பது போல் இருக்க, தன்னைத் தானே தேற்றிக்கொண்டு தாயைத் தேடினாள். அவர் எங்கும் தென்படாமல் போக இறுதியில் தகப்பன் அறைக்குள் சென்றாள் அமிர்தா.

     அங்கே, தன் கணவரின் காலடியில் தலை வைத்துப் படுத்திருந்தார் கல்யாணி. அவர் படுத்திருந்த தோற்றம் ஏதோ வித்தியாசமாக இருக்க, அருகே சென்று உலுக்கிப் பார்க்க உயிரற்ற உடலாய் அமிர்தாவின் கையில் சரிந்தார் அவர். அப்பா என்கிற அழைப்போடு அவரைப் பார்க்க அவரும் பூத உடலாகத் தான் இருந்தார்.

     சுற்றத்தவர்களின் பேச்சு, மூத்த மகளின் எதிர்காலம், இளையமகளின் திண்டாட்டம் என எதையும் கண்கொண்டு பார்க்க முடியாமல் தன் விதியோடு சேர்த்து தந்தை உயிரையும் முடித்துக்கொண்டார் என்பது புரிய கத்தி அழுதாள் அமிர்தா. அவள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்க, நிலைமை புரிந்தது.

     தற்கொலை வழக்கு, காவல்துறையினர் வருவார்கள். தங்களை விசாரிப்பார்கள் எதற்காக வீண் வம்பு என்று பலரும் ஒதுங்கிக்கொள்ள, சில ஆண்கள் மட்டும் உதவ முன்வந்து காவல்துறையினருக்கு விஷயத்தை சொல்லிக்கொண்டே அந்த வீட்டிற்குள் நடந்தனர்.

     தங்கள் வீட்டிற்குள் அந்நிய ஆண்கள் நடமாட்டத்தை பிடிக்காத அமிர்தா தன் ஒரே நம்பிக்கையான கேசிக்கு அழைத்தாள். அப்போது வரை கேசிக்கு இன்னமும் தன் மேல் காதல் இருக்கும் என்றே நினைத்துக்கொண்டிருந்தாள் அந்த பைத்தியக்காரி.

     தங்கள் வீட்டில் இருந்து அமிர்தா கிளம்பிச் சென்ற நொடியில் இருந்து உடைந்து போய் கண்ணீரைத் துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான் கேசி. அவனால் நடக்கும் எதையும் தடுக்கவும் முடியவில்லை, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. தவியாய் தவித்தான்.

     “ஏன் மா, உனக்கு தான் நாங்க தெளிவா சொல்லி அனுப்பினோமே. எதுக்காக மறுபடியும் இங்க வந்த?” என்கிற பைரவனின் உரத்த குரலும், அதைத் தொடர்ந்த “நான் கேசியைப் பார்க்கணும்.” என்கிற பலவீனமான குரலும் கேட்டது கேசிக்கு. அதற்கு மேலும் உள்ளே சும்மா அமர்ந்திருக்கப் பிடிக்காமல் வேகமாக வெளியே வந்தான்.

     அவனைப் பார்த்தவள் அவன் கை சேரத் துடித்தாள். அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கவலை யாவும் தீரும் வரை வெடித்து அழ வேண்டும் என்று தோன்றியது. அந்த நினைப்போடு சில அடிகள் முன்னேறவும் செய்தாள். ஆனால் பைரவியும், பைரவனும் குறுக்கே நின்று தடுத்தார்கள்.

     “கேசி, அப்பாவும், அம்மாவும் செத்துப்போயிட்டாங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல. ஒரே நாளில் யாரும் இல்லாத அநாதையா நிக்கிறேன். போலீஸ் எல்லாம் வருவாங்களாம். எனக்கு பயமா இருக்கு. என் கூட வாயேன்.” கண்ணீர் மல்க கேட்க, அதிர்ச்சியில் கைகளால் வாயை மறைத்தான் கேசி. அவன் இதை சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

     அண்ணன், தங்கைக்கு கூட இது அதிர்ச்சியான செய்தி தான். ரைபவி கொஞ்சம் இளகுவது போல் தெரிந்தது. ஆனால் பைரவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

     “உன் அக்கா மாதிரி ஒரு பொண்ணைப் பெத்தா யாரா இருந்தாலும் இப்படியான முடிவுக்கு தான் வரணும். தப்பு செஞ்சா விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதைத் தாங்கிக்க முடியாம செத்துப்போனா அதுக்கு யார் பொறுப்பு. இங்க ஏற்கனவே நேரம் சரியில்லை. கெட்டதுக்கு மேல கெட்டதா நடந்துகிட்டு இருக்கு. இதுக்கு மேல துர்மரணம் அடைஞ்சவங்களை வந்து பார்த்து இன்னும் கொஞ்சம் கெட்டதை இழுத்து வைச்சுக்கணுமா? அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு முடிவாகிடுச்சே. அதனால் இங்க இருந்து யாரும் வரமாட்டாங்க.” மனிதத் தன்மையே இல்லாமல் பேசினார் பைரவன்.

     அப்போதும் அமிர்தா கேசியைத் தான் பார்த்தாள். அவள் கண்ணில் தெரிந்த இரைஞ்சுதலில் ஒரு முடிவெடுத்தவனாக அவளை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தவனின் கரம் பற்றித் தடுத்தார் பைரவன்.

     “இப்ப நீங்க அந்தப் பொண்ணு கூடபோனீங்கன்னா மறுபடியும் அவளை விட்டு வர முடியாது. ஒருவேளை உங்களுக்கு உங்க அண்ணனை விட அவ தான் முக்கியம் னு தோணுச்சுன்னா தாராளமாக அவகூட போங்க. என் மருமகனை நான் பார்த்துக்கிறேன்.” என் அவன் காதுக்குள் சொல்ல, கேசி அப்படியே நின்றுவிட்டான்.

     “எனக்கு ஒன்னுமே தெரியாது கேசி. எல்லாரும் என்னை ஒரே நேரத்தில் கைவிட்டா நான் என்ன பண்ணுவேன்.” அழுகையோடு கேட்டவள் முகத்தைப் பார்க்க முடியாமல் திரும்பியவன், “போயிடு அமிர்தா.” என்றான். இப்படி ஒரு வார்த்தை சொன்னாயே என்று தன் நாவைத் தானே தண்டித்தும் கொண்டான். காதலனின் உதாசீனம் உண்மை தான் என்பதைப் புரிந்துகொண்ட நொடி முகத்திலே அடி விழுந்தது போல் துடித்துப் போன அமிர்தா ஒரு நொடி கூட அங்கே நில்லாமல் ஓடினாள்.

     காவலர்கள் வந்தார்கள், அவளின் தாய், தந்தை உடல்களை எடுத்துக்கொண்டு சென்றார்கள். வீடு முழுக்க உறவினர்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. சொல்ல சொல்லக் கேட்காமல் சிலர் நீலாவைப் பார்க்கிறேன் என்று அவள் இருந்த அறைப்பக்கம் போக, அவள்ஒருபக்கம் கத்திக்கொண்டிருந்தாள்.

     ஒரு நொடி கூட நிம்மதி இல்லை அமிர்தாவுக்கு. பிரம்மை பிடித்தவள் போல் இருந்தவளுக்கு சரியான நேரத்தில் உதவிக்கு வந்தார்கள் கல்லூரியில் அவளோடு படித்த நண்பர்கள். தூண் போல நின்று எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார்கள்.

     தாய், தந்தையின் இறுதி ஊர்வலம் துவங்கிய போது அமிர்தா அழுத அழுகையை காணொளி அழைப்பில் பார்த்த கேசிக்கு உடல் மொத்தமும் துடித்தது. உயிருக்கு உயிராக நினைத்தவளை இப்படித் துடிக்க வைத்துவிட்டு தானும் தன் குடும்பமும் என்ன சாதித்துவிடப்போகிறோம் என்று பதறினான். ஆனால் அவன் என்ன செய்ய நினைத்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாக குறுக்கே நின்றார் பைரவன்.

     அமிர்தாவுக்கு உதவியாக தன் நண்பர்களை அனுப்பி வைக்க அவன் முயற்சித்த வேளையில் கூட அவர் குறுக்கே வரத்தான் செய்தார். ஆனால் பைரவி தான் தமையனைத் தடுத்தார். “அவங்க வேண்டாம் னு  ஒதுங்கி தான் நிக்கிறோமே தவிர்த்து அவங்களை பகையாளிகளா நினைச்சு நாம விலகி நிக்கல. நம்ம தானே உதவி செய்யக் கூடாது. நண்பர்கள் உதவி செய்யட்டும்.” என்று சொல்லி அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தில் சிறிதளவையாவது குறைத்தார்.

     துக்கத்திற்கு வந்திருந்த உறவுகள் சில நாட்கள் தங்கி இருந்து வீட்டின் அன்றாட வேலைகளைக் கவனித்து கட்டாயப்படுத்தியேனும் அமிர்தாவையும், நீலாவையும் உணவுண்ண வைத்தார்கள். அவர்களும் சென்றுவிட விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அமிர்தாவுக்கு பசி நடப்பை உணர்த்தியது.

     கவலைகள், கஷ்டங்கள் வரும் தான். அதையும் தாண்டி தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதை மனிதர்களுக்கு நினைவுபடுத்துவதே பசி தான். அமிர்தாவுக்கும் நடப்பு விளங்கியது.

     இன்னும் இரண்டு மாதங்களோடு படிப்பு முடிந்துவிடும். அதற்குப் பிறகு ஏதாவது வேலைக்குப் போய் தன்னையும் அக்காவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவரை தாய் சேமித்து வைத்திருக்கும் பணத்திற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்று முடிவெடுத்து கொஞ்சம் நடமாட ஆரம்பித்தாள். அவள் மனதிற்குள் வைராக்கியத் தீ பற்றி எரிந்தது.

     பரம்பரை பகையாளி வீட்டில் துக்க காரியம் நடந்தால் கூட பகையை மறைந்து போய் பார்க்க வேண்டும் என்பது நியதி. தன் அம்மா, அப்பாவின் இறுதி காரியத்திற்கு தானே சென்று உதவி கேட்டும் கூட வராத கல்நெஞ்சக்காரனான கேசியை வெறுத்தாள். அவன் வேண்டாம் என மனதார உறுதி பூண்டாள். அவன் மட்டும் அல்ல அந்தக் குடும்பத்தோடும் உறவு வேண்டாம் என முடிவெடுத்து அவள் தன்னைத் தானே மீட்டெடுத்துக்கொள்ள முயற்சித்த நேரம் அடுத்த சோதனையாக நீலாவின் கர்ப்ப விஷயம் தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!