Skip to content
Post Views: 253
இப்படிக்கு,
அத்தியாயம் – 03
Advertisement
அபினவ்வின் கதை..
அன்னிக்கி காலேஜ் போகும் போதே, கொஞ்சம் லேட்டாயிடுச்சு..எங்க காலேஜ்ல,லெக்சர்ஸ்கு ஒரு நிமிஷம் லேட்டானா கூட,உள்ள அல்லோவ் பண்ண மாட்டாங்க..அதுவும் இல்லாம,அந்த சாரோட லெக்சர்ஸ் கம்பஸ்லரி வேற..
Advertisement
Advertisement
என் கிட்ட பைக் இருந்ததுனால சரி..ஒரு மணிக்கு லெக்சர்ஸ்..இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு..கொஞ்சம் கவனமில்லாம பைக்க ஓட்டிடடேன்..
மழ கொஞ்சமா தூறிக் கிட்டு இருந்தது..காலைல மழயா பேஞ்சதுனால,அங்கங்க சேறு தேங்கி இருந்துச்சா..கவனிக்காம பைக்க ஓட்டி ஒருத்தி மேல,சேத்த வாரி எறச்சிட்டேன்..
Advertisement
அந்த ஒருத்தி தான்,என்ன மாத்தப் போற மகராசின்னு சத்தியமா அப்போ எனக்கு தெரியாது..தெரிஞ்சு இருந்தா ஃபர்ஸ்ட் மீட்டிங்க கொஞ்சம் அழகா மாத்தி இருக்கலாம்னு அடிக்கடி நெனச்சி பாப்பேன்..
என்ன தான் அவசரம்னாலும்,சேத்த அடிச்ச ஸ்பீட்கு நானும் சட்டுன்னு பைக் அ நிப்பாட்டுனா,அவளும் சட்டுன்னு குடய மடிச்சாளா,அவ மடிச்ச ஸ்பீட்ல அதுல இருந்த தண்ணி முழுக்க என் மேல தெறிச்சுது..
“எரும்ம்ம மாடு..” இதழ்கள் மெல்லமாய் அசைந்து கொடுக்க,பார்வையின் முறைப்பை தேக்கி, முதல் தடவை பாவையவள் பார்த்த போது எனக்கொன்றும் ஆகவில்லை,தான்.
அவ்வளவு முறைப்பு அவள் விழிகளில்.விட்டால்,என்னை பார்வையாலே எரித்து சாம்பலாக்கியிருப்பாள்,பாவிமகள்.ஓயாது அசைந்த அவளிதழ்கள்,என்னைத் தான் திட்டித் தீர்க்கின்றனவென்று,எனக்கு புரியாமல் போகாதே.
இரு நிமிடங்கள்,அவள் முறைப்பில் என் கவனம் குவிய,தோழன் கத்தி அழைத்ததில் தான்,மெல்லக் கலைந்தேன் நான்.விரிவுரை இருப்பது மனதைத் தாக்கிட,மின்னல் வேகத்தில் என் வண்டி அங்கிருந்து பறந்தது.
அப்பவுமே,சைட் மிர்ரர் வழியா,அவள கவனிச்சேன்னு தான் சொல்லனும்..அப்பவுமே,அவ ஏதோ சொல்லித் திட்டுறான்னு மட்டும் புரிஞ்சுது..
அப்றமா லெக்சர் பொய்ட்டேன்..அவ நெனப்பும் வர்ல..லெக்சர் முடிஞ்சு வரும் போது,மறுபடி கண்டேன் அந்த மகராசிய..யாரயுமே,பாக்கல அவ..அழகா இருந்தான்னு சொல்றத விட,அவ என் கண்ணுக்கு கெத்தா தெரிஞ்சா..
அவசரமான அந்த நட..ஒரு மாதிரி பதட்டத்தோடவே இருக்குற அவ செய்க..அமைதியா இருந்தாலும் அழுத்தமா காட்டிக்கிட்ட அந்த முகபாவம்..
மத்யானம்,வாங்குன திட்ட மண்டைல வந்து,என்ன கவனிக்க வச்சதுன்னு தான் சொல்லனும்..கொஞ்சமா கவனிச்சேன்..அப்றம் எதுக்குடா இந்த தேவயில்லாத வேலன்னு என்ன நானே தட்டி அடக்கி கிட்டேன்..
அதெல்லாம்,சைட் இல்லபா சொல்லிட்டேன்..அது ஜஸ்ட் பாத்தது தான்..ம்ஹும்,அவள கவனிச்சது தான்..அதுக்கெல்லாம்,வேற மீனிங் எடுத்துக்க கூடாது சரியா..?
புரிஞ்சுதா..?
கேன்டீன்ல சாப்பாடு க்யூல தான் நின்னு எடுக்கனும்..மொத்தமா சாப்பாடு எடுக்க மூனு கவுண்டர் இருக்கு..
ரெண்டு கவுண்டர் வலது பக்கமாவும் அடுத்த கவுன்டர் எடது பக்கமாவும் இருக்கும்..
வலது பக்கத்துல இருக்குற கவுண்டர்ல,ஒன்னுல மட்டுந்தான் ஜூனியர்ஸ்கு சாப்பாடு எடுக்கலாம்..
மத்த ரெண்டும் சீனியர்ஸோடது..பட் சீனியர்ஸால,ஜூனியர் கவுன்டர்லயும் எடுக்க முடியும்…
சமவுடைமை இல்லல..பட் அது தான்,அங்க காலேஜ் ரூல்..லைக் ரேகிங்..
கிட்டக்க இருக்குற ரெண்டு கவுண்டர்ல ஒன்னுல நான்..அவங்களோடதுல அவ..எனக்கு மூனு பேர் முன்னாடி தான்,நின்னு கிட்டு இருந்தா அவ..பின்னாடி நின்னு இருந்தது,அவ ஃப்ரெண்டு போல..குசுகுசுன்னு கதக்கிற பாக்கும் போது கெஸ் பண்ண முடிஞ்சுது..மகராசி,அப்போவும் என்ன கவனிக்கல போல..
அங்க என்னாச்சுன்னா,எங்க பேட்ச் பொண்ணு ஒருத்தி,இவங்க லைன்குள்ள புகுந்து இவளுக்கு முன்னாடி போய் கவுன்டர் கிட்ட நின்னுட்டான்..
மகராசிக்கு பத்தி கிட்டு வந்து இருக்கும் போல..திரும்பி அவ ஃப்ரெண்டு கிட்ட திட்டோ திட்டு..
“எரும மாடு..அறிவில்ல..ஜூனியர்னா அவளுக்கு அவ்ளோ எளக்காரமா போச்சா..? நாங்களும் லைன்ல தான நிக்கறோம்..சீனியர்னா பெரிய கொடுக்கா..” இவ நிறுத்தாம திட்டறா..
“மெதுவா மெதுவாடி..பக்கத்துல சீனியர்ஸ் காதுல கேட்ரப் போகுது..” ஃப்ரெண்டு வேற,இவள அமைதிப்படுத்துறதா இன்னும் பேசி வக்க,எனக்கு மட்டுல்ல என் ஃப்ரெண்ட்ஸ்கும், அவ பேசுனது நல்ல தெளிவா காதுல விழத்தான் செஞ்சுது..
கொஞ்சமா கோபம் வந்துச்சு..என்ன தான் இருந்தாலும்,நா சீனியர்ல..அப்டி இருக்கும் போது,ஜூனியர் இப்டி திட்டறத என்னால ஏத்துக்க முடியாதுன்னு தான் தோணுச்சு..
“தப்புன்னா யாரு செஞ்சாலும் தப்பு தான்..இதே ஜூனியர் நாம பண்ணி இருந்தா இவனுங்க இப்டியா இருந்து இருப்பானுங்க..” அவ கேட்டது உண்மயாப் பட,நானும் சைலன்ட் ஆயிட்டேன்..
என் மனசுல இருந்த கேள்விக்கு பதில் சொல்ற மாதிரி இருந்துச்சு,அவ பேசுனது..சரி தான்னு நானும்,அப்டியே விட்டாலும்,என்னயே அறியாம அவ ஞாபகம் எனக்குள்ள பதிஞ்சு இருக்கனும்..
அப்படியே,அவளைப் பாராமல் கடந்து விட்ட எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,பின்னாளில் அவளைக் காணவென்றே நான் தவம் கிடக்கப் போவது.
●●●●●●●
“வருண் ஸ்டாப்!” அவனின் அதட்டலான குரலுக்கு,கட்டுப்பட்டு அவன் தடுப்பை அழுத்த,வண்டியோ கிறீச்சிட்டு நின்றது.
“இவருக்கு என்னாச்சு..?” என்ற ரீதியில் அவனைப் பார்த்திட,அதற்கு முன்னமே வண்டியை விட்டு,கீழிறங்கிச் சென்றிருந்தான்,அவன்.
சுற்றத்தில் விழிகளை சுழல விட்ட வருணுக்கோ,அப்போது தான் தாமிருக்கும் இடம் உரைத்திட,நெடுமூச்செறிந்தான்.எப்படி இதை மறந்து போனாம் என்று தன்னையே, நொந்து கொள்ளவும் செய்தான்.
பெரிதாய் ஆள் நடமாட்டம் இல்லாத வீதியதில்,அமைந்திருக்கும் பாலமது.பாலத்துக்கு கீழாக,கிளையாறொன்று ஓடிக் கொண்டிருந்தது.
வண்டியில் இருந்து வருண் இறங்கிடவில்லை.அது அவனின் முதலாளிக்கு பிடிக்காதென்று தெரியும்.
பாலத்தின் தடுப்புச் சுவரில் சாய்ந்து,மார்புக்கு குறுக்கே கரத்தை கட்டியவாறு நின்றிருந்தான்,அவன்.
அந்த ஆண்மை காதல் கண்டு,அவன் ஜீவன் உயிர் கொண்ட இடம் அது!
விழிகளை இறுக மூடி,வீசிச் செல்லும் காற்றுக்கு தன்னை தாரை வார்த்தவாறு,நின்றிருந்தவனின் உயிருக்குள் உணர்வுகளின் பிரவாகம்.
“அந்த பொண்ணுக்கு தான் கல்யாணம் ஆயிச்சுன்னு தெரியுதுல்ல..அப்றம் ஏன் இப்டி..?” அவனின் நிலையைக் கண்ட வருணின்,எண்ணப்போக்கு இதுவாகவே இருந்தது.
அடிக்கடி இவ்விடத்தை கடக்க நேர்கையில்,ஓரிரு நிமிடம் தன்னை முழுதாக அவன் காதலுக்கு சமர்ப்பித்து நின்று கொள்வது அவனின் வாடிக்கையாகவே இருந்தது.
அலுவலகத்துக்கு செல்லக் கூடிய குறுக்கு வழி இது.வாகன நெரிசல் என்ன,அவ்வளவாய் வாகனமே இருக்காது.
ஆனாலும்,இந்தப் பாதை வேண்டாமென நெடுவழியிலேயே,பயணத்தை தொடரச் சொல்வான்,அவன்.”எதுக்கு சார் அவ்ளோ தூரம்..? இந்த வழியாலயே போலாம்..” அவனிடம் கெஞ்சி,முதலில் எல்லாம் இவ்வழியில் தான்,அவர்களின் பயணத்தை அமைத்துக் கொள்வான்,வருண்.
அதன் பின்னர்,அவனின் செயலாக்கங்களும் அதன் பின்னர் அவனில் உண்டாகிடும் நடத்தை மாற்றங்களும்,வருணை தன்னாலே நெடுவழியைப் பாவித்திட வைத்திருந்தது எனலாம்.
இப்போதும் அப்படித் தான்.எந்த வித நினைவுகளுமின்றி,அவனின் காதலுக்கு மட்டுமேயாக,தன்னை ஒப்புக் கொடுத்தவாறு தனக்குள் மூழ்கிப் போயிருந்தான்,அவன்.
“ஒன்னுல்ல..ஒன்னுல்ல..” கலங்கிய ஓசையுடன் அவள் வார்த்தைகள் பிரித்தறிய முடியா குரலில்,அவனின் செவியோரம் கதை பேசிட,அவனின் கடைவிழியில் சிறு ஈரம்.
இந்தப் பாழாய்ப் போன காதல்,அவனை அத்தனை வதைத்தது.ஏனோ கத்தி அழ வேண்டும் என்கின்ற உணர்வு,அவனுக்குள்.
கண்ணெல்லாம் கலங்கிச் சிவந்து விட்டது,பையனுக்கு.ஏனோ,இன்று காலையில் இருந்தே ஒரு வித அழுத்தம்,மனதுக்குள் மண்டிக் கிடக்க,அதை தகர்க்க முயன்று தான்,இவ்விடம் அவன் வந்ததே.
ஆனால்,ஏன் தான் வந்தோம் என்று அவனை நினைக்க வைத்து விட்டிருந்தது,மனதுக்குள் சுழன்றடித்த நினைவுகளின் கனம்.ஆயினும்,அவன் பாதங்கள் வேரூன்றி நின்று அகல மறுத்தன.
வலியென்றாலும்,அதிலும் சிறு இதம்.என்னவென்றாலும்,அது அவனின் காதலாயிற்றே.
அப்படியே நின்றிருந்தான்.விழி மூடிய போதும்,கருமணிகள் உருண்ட திரள,உணர்வுகள் காட்ட மறுத்தது,முகவதனம்.
அவன் தோற்றத்தை கண்டதும்,வருணுக்கே மனம் பாரமானது.அவனிடமுமே,பலர் காதல் சொல்லியதுண்டு.ஆனால்,பையன் படும்பாட்டைக் காண்கையில்,அப்படியே கும்பிட்டு மறுப்பு சொல்லி அனுப்பி விடுவான்.
மெல்லமாய் மழையும் தூறத் துவங்க,மழைத்துளிகள் அவனை நனைத்திட,கேசத்தை சிலுப்பியவாறு மீண்டும் வந்து வண்டிக்குள் ஏறிக் கொண்டான்.
வண்டியைக் கிளப்பாமல் வருண் திரும்பி,அவனைப் பார்த்திட,பையனுமே விழிகளால் என்னவென்று கேட்டிருந்தான்.
“ஒன்னு கேக்கட்டுமா சார்..?” இழுத்திட,அவனிடம் அமைதி.சில நொடிகள் கழித்து,”ம்ம்!” என்றான்.
“நீங்க உங்க வாழ்க்கய பாக்கவே மாட்டீங்களா சார்..?நிச்சயம் இல்லன்னு தெரிஞ்சும் இப்டி உங்க வாழ்க்கய வீணாக்கி கிட்டு இருக்குறதுல என்ன நியாயம் சார்..? அவங்க இதுக்கப்றம் உங்க வாழ்க்கைல வர வாய்ப்பே இல்லன்னு தெரிஞ்சி கிட்டு இப்டியே இருக்குறது சரி தானா சார்..? உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கய பாக்குறது..” இழுத்தான்,அவன்.
“என் வாழ்க்கைல அந்த ஒருத்தி வந்தாலும் இல்லன்னாலும் என் காதல் அந்த ஒருத்திக்கு மட்டுந்தான்னு முடிவெடுத்ததுக்கு அப்றமா தான்,நா லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்..”
காற்றைக் கிழித்து நீண்ட நெடிய பதில்.அதன் பிறகு,வருணும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
●●●●●●●●
*மித்ராவின் கதை..*
எனக்குள்ள எப்டி காதல் வந்துச்சுன்னா..
அத என்னால சத்தியமா சொல்லத் தெரியாது..ஆனா,பிரிவு காதல ஃபீல் பண்ண வச்சிரும்னு சொல்லுவாங்கல..அது என்னோட விஷயத்துல சத்தியமான உண்ம..
ரெண்டு வாரம்..ரெண்டே ரெண்டு வாரம்,வெளியூர் கெளம்பி போயிருந்தாரு,அவரு..
அவர முன்னாடியே எனக்கு தெர்யும்..நல்ல மனுஷன்னு நா யோசிச்சு இருந்தாலும்,நா லவ்னு எல்லாம் யோசிச்சதே கெடயாது..சின்னதா ஒரு ஈர்ப்பு இருந்தது உண்ம..க்ரஷ்ஷுன்னு கூட முழுசா சொல்ல முடியாது..பட்,சின்னதா ஏதோ ஒன்னு இருந்தது..
ஆனா,அது ஜஸ்ட் இன்பாக்ஷுவேஷன் தான்..அவர பாக்காம இருந்தா எல்லாம் ஓகே ஆயிரும்னு நா நெனச்சேன்..அப்டி தான்,என்னோட மனசு நெனச்சி கிட்டு இருந்துது..
உனக்கு யாராயாச்சும் புடிச்சு இருந்தா,நீ சொல்லு..நல்ல பையனா இருந்தா நாங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணி தருவோம்னு வீட்ல சொல்லி இருந்தாலும்,இப்டி லவ்னு போய் நின்னா வீட்டாளுங்க என்ன சொல்லுவாங்களோன்னு எனக்கு ஒரு பயம்..
அப்பா அடிக்கடி சொல்லுவாரு..யாராயாச்சும் புடிச்சதுன்னா,நீ தாராளமா வந்து சொல்லு..ஆனா,லவ்வுன்னுட்டு வெளில சுத்தற வேல எல்லாம் வேணா..அது எனக்கு தப்பாவும் தோணல..என் காதல எப்பவுமே,மரியாதயா வச்சுக்க தான் எனக்கு புடிக்கும்..
என்ன பொருத்த வர,ஒருத்தர் மேல வர்ர இந்த காதல் உணர்வுக்கு நாம கொடுக்கக் கூடிய ரொம்பப் பெரிய அங்கீகாரம்..அதே உணர்வோடு அவங்கள வாழ்க்க முழுசும் நம்ம கூட வச்சிக்க தயார் ஆகறது தான்..ஐ மீன் கல்யாணம் பண்றதுக்குரிய எஃபோர்ட் போட்றது..என் காதல் உண்மன்னா நா ஏன் சும்மா தயங்கி கிட்டு நிக்கனும்னு ஒரு தாட்..
ஆனா,எனக்குள்ளவும் அந்த காதல் வந்தப்போ தான்,அடுத்த ஸ்டெப் எடுத்து வக்கிறது அவ்ளோ ஈஸி இல்லன்னே புரிஞ்சுது..அவரு மேல வந்த ஃபீல் லவ்வுன்னு ரியலைஸ் பண்ண வச்சது,அந்த டைம் பீரியட் தான்..
கெளம்பறதுக்கு முன்னாடி சொல்லிட்டு தான் போனாரு..அப்போலாம் பெருசா எதுவும் தெரியல..
அவரு கெளம்பி போன அன்னிக்கி காலைலயே,ஒரு பெரிய ப்ளேன்க் மனசுக்குள்ள..என்னடா இதுன்னு யோசிச்சாலும்,ஒன்னுமே புரில..
ஆனா,என்னிக்கிம் மாதிரி இன்னிக்கி அவர பாக்க முடியாதுங்குறதே,மனசுல ஒரு பெரிய பாரமா தோணுச்சு..
அன்னிக்கி லன்ச் டைம்ல திடீர்னு அவரு மாதிரியே ஒருத்தர் க்ராஸ் ஆக,கண்ணு மின்னல் வேகத்துல திரும்பினது எனக்கே ஷாக் தான்..அப்டியே,அவரு இல்லன்னதும் ஒரு மாதிரி ஆயிடுச்சு மனசு..
என்னடா இதுன்னு யோசிக்க,கொஞ்சமா புரிஞ்சாலும் என்னால அது ஏத்துக்க முடியல..அதப் பத்தி யோசிக்கிறத விட்டுட்டு,அப்டியே என் வேலைல கவனமாயிட்டேன்..
என்ன தான் மத்தவங்கள ஏமாத்தினாலும்,நம்ம மனசாட்சிய நம்மளால ஏமாத்த முடியாதுல..என்னோட வேலைல கவனமா இருந்தாலும்,அடிக்கடி அவரு நெனப்பாவே இருந்துது..
மனசு முழுக்க ஒரு மாதிரி அழுத்தம்..கத்தி அழனும் மாதிரி ஒரு ஃபீல்..அப்டியே ஒரு வாரம் கடந்துது..
அந்த ஒரு வாரமும் நான் நானாவே இல்ல..யார் கூடவும் சரியா பேச முடில..எல்லாத்துக்கும் அவ்ளோ எரிச்சல்..யாரப் பாத்தாலும்,அவரு மாதிரியே இருக்கு..என்னடா இதுன்னு ஆகிப் போச்சு..
கை பாட்டுக்கு தன்னால ஏதோ கிறுக்குது..
உன் விம்பம் நிறைக்காவிடின் யாவும் மறந்து விடும் என்றெல்லாம் கனவு கண்டேன்!
உன் இருப்பு இல்லையென்றால் என் இயல்பு நிலைக்கும் என்றெல்லாம் எண்ணியிருந்தேன்!
அப்படியல்ல என்று அழகாய் உணர்த்தி விட்டு வேடிக்கை பார்க்கிறது என் நாட்கள்!
அடிக்கடி உன்னைக் காண்கையில் கூட இத்தனை நான் தேடியதில்லை – உன் தரிசனம் நாடியதில்லை!
உன் இருப்பு இவ்விடம் இல்லை என்று நிச்சயம் தெரியும் – விழிகளில் ஏக்கம் தீர்ந்தபாடில்லை;மனதின் எதிர்ப்பார்ப்பு நீர்த்துப் போகவில்லை.
ஏனோ இதயத்தின் ஓரம் கொஞ்சம் வலிக்கிறது – மனம் மொத்தமாய் கனக்கிறது.
திரையிடும் விழிநீரும் அடிக்கடி மௌனமாய் ஏதோ கூறி விட்டுப் போக,என்ன – எனக்குத் தான் அதை ஏற்கும் மனமில்லை..
என்னவோ ஒன்று,போ!
முதன் முறையாய் நானே உன் விம்பம் கேட்கிறேன் – நானே தான் கேட்கிறேன்..
காணாதிருக்கும் உன் சாயலைக் கண்டிட அல்ல..
காணும் யாவரையும் உன் சாயலாய்க் காணாதிருக்க!
தொடரும்.
🖋️அதி..!
2026.05.15
error: Content is protected !!