Skip to content
Post Views: 3,461
*21*
எந்த நேரம் படி என்றானோ குழலி முழுமூச்சில் அதில் இறங்கிவிட்டாள். வேலை நேரங்கள் தவிர்த்து ஏதேனும் குறிப்பு எடுப்பவள் இவன் வந்துவிட்டால் அதனை எல்லாம் ஓரம்கட்டிவிடுவாள்.
“நான் வெய்ட் பண்றேன். நீ படி மலர்.” என்பான்.
“நீங்க வீட்ல இருக்குற டைமே கம்மி இதுல நானும் இப்படி உக்காந்துட்டா நமக்கான டைம் இல்லாம போயிடும். நீங்க வீட்ல இல்லாத சமயம் படிச்சிக்குறேன்.” என்பவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்வான்.
Advertisement
“எப்படிடி இப்போவும் இவ்ளோ சின்சியரா படிக்குற? கடையில கொடுக்குற ப்ராடக்ட் டிஸ்க்ரிப்ஷன் படிக்கவே எனக்கு நாக்கு தள்ளுது இப்போல்லாம்.”
“சின்னதுலேந்தே படிப்புதான் துணையிருக்கும்னு தெரிஞ்சி வளந்ததுனாலோ என்னவோ படிக்கணும்னா ஒருவெறி வந்துடுது.”
“ரொம்ப நல்ல பொண்ணு என் மலர் பொண்ணு.” செல்லமாக அவள் கன்னம் கிள்ளி கொஞ்சியவன்,
Advertisement
“உனக்கு என்ன வேணும்னு சொல்லு வாங்கித்தரேன்.” என்றான் ஆசையாய். அவள் தேவைகளை அவளே பூர்த்தி செய்யுமிடத்தில் இருந்தாலும் ஏனோ பிரியமும் பூரிப்புமாய் தன்னருகில் இருக்கும் மனைவிக்கு ஏதேனும் வாங்கித்தர வேண்டும் என்று அந்நேர உந்துதல்.
Advertisement
“எனக்கு எதுவும் வேண்டாம்ங்க…”
“ம்கூம் உனக்குன்னு வாங்கிக்கனும்னு ஆசை இருந்து வேண்டாம்னு விட்டிருப்பீல்ல, சொல்லு நான் வாங்கித்தரேன்.” பேச்சோடு அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி பின்னிருந்து அணைத்துக்கொண்டவன் தாடை வாகாய் அவள் தோளில் இடம்பிடித்துக்கொண்டது.
சிறிது நேரம் யோசித்தவள் எதுவும் நினைவு வராமல் உதட்டை பிதுக்கினாள்.
Advertisement
“எல்லாமே இருக்கே.”
“சரி சின்ன வயசுல ஏதாவது ஆசைப்பட்டு நிறைவேறாம ஏக்கமா போயிருக்குமே, அப்படி ஏதாவது?”
“சின்ன வயசுல ஏங்குனது எல்லாம் நிம்மதியான வாழ்க்கைக்குதான். அது இப்போ கிடைச்சிருக்கு. நீங்க என்கூட இருக்கீங்க, அதுபோதும்.” அவன் மடியிலிருந்து திரும்பி அவனை அணைத்துக்கொள்ள,
“எப்போவும் இருப்பேன் மலர்.”
“அப்பாட்ட இருந்து அன்பு கிடைக்கலைனு எல்லாம் ஏங்குற நிலைமையில அவர் எங்களை வைக்கல. குறை சொல்லாம வாய்க்கு வந்த வார்த்தையால எங்களை காயப்படுத்தாம, அம்மாவை அடிக்காம இருந்தா போதும்னு தான் எங்களை நினைக்க வச்சார். விவரம் புரியுறதுக்கு முன்னாடி சின்ன சின்னதா ஆசை இருந்துச்சு அதெல்லாம் காலம் மாறவும் காத்தோட போச்சு. இப்போ எங்களுக்கு தேவையானது எல்லாம் நிம்மதியான வாழ்க்கை, கஷ்டம் வந்தாலும் எங்களை தூக்கி கீழ போடாம கூடவே இருந்து தாங்கிக்கிற உறவு. மத்தபடி இந்த பொருள் எல்லாம் அந்த நேர சின்ன சின்ன சந்தோஷம்.”
“சின்ன சின்ன சந்தோஷம்தான் நம்ம ஓஞ்சு போகாம ஓட வைக்கும் மலர்.”
இப்படி வாழ்க்கை குறித்த தீவிர பேச்சுக்களும் இயல்பாக அவர்களுக்கு இடையில் வந்து சீரானதொரு பயணத்தை ஊக்குவித்தது.
அன்று வந்தனாவிற்கு வளைகாப்பு. முக்கியமான அனைவருக்கும் அழைப்பு விடுத்து விமர்சையாகவே செய்தனர். வளையலிட்டு வந்தனாவை வீட்டிற்கு அழைத்து வரும் வரை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தாள் குழலி. உறுதுணையாக முகிலனும் ரிஷியும் இருந்தனர்.
“மச்சினி வளைகாப்புக்கு என்ன ஓட்டம் ஓடுறான் பாருங்க. இவன் என்னைக்கு நல்ல சேதி சொல்ல…” மாரியம்மாள் பொறுமலுடன் மகனை பார்த்துக்கொண்டிருந்தார்.
“நைட்டுக்கு வெளில சொல்லிக்கலாம் மலர். என்ன வேணும்னு பாத்து சொல்லு நான் வாங்கிட்டு வந்துறேன்.” வீடு நிறைய ஆட்கள் இருக்க, மனைவியை தனியாய் பிடித்தான் முகிலன்.
“மதியம் பந்தில போட்ட கலவை சாதமே இருக்குங்க. பத்தலைனா மாவு இருக்கு இட்லி ஊத்திக்கலாம்.”
“எவ்ளோ வேலை ரெண்டு நாளா? இதோட இட்லி ஊத்திட்டு இருப்பீங்களா. ரெஸ்ட் எடுங்க.” என்றவன் அவனே சமையலறை சென்று என்னென்ன இருக்கிறது என்று பார்க்க, பின்னோடு வந்த மாரியம்மாள்,
“வீட்டு சாவி குடு முகிலு. தலைவலிக்குது…” மகன் ஓடியாடி அங்கு வேலை செய்வதை பார்க்க பார்க்க வார்த்தைகள் வெளிவரத் துடித்தது. பேசிடலாம் என்றால் கந்தசாமி அருகில் அமர்ந்து முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தார். இதற்கு மேல் அமைதியாக இருக்கவே முடியாது என்று தெரிந்துவிட்டது. பேசி வீணாக மகனிடமும் பேச்சு வாங்க விரும்பவில்லை.
“சூடா காபி போடவா அத்தை?” அக்கறையாக குழலி கேட்க,
“நான் போட்டு கொடுக்கிறேன், நீ போய் வந்தவங்களை கவனி.” என்று மனைவியை அனுப்பிவிட்டவன், “மேல போலாம் வா’மா.” மேலே அழைத்துச் சென்று காபி போட்டான்.
“என்ன சொல்லிடுவேன்னு அவளை அடைகாத்து அனுப்பி வைக்குற?” மேலே வந்ததும் மகனை பிடித்துக்கொண்டார்.
“என்ன சொல்லுவேன்னு எனக்கு தெரியாதா? எல்லாத்துக்கும் நேரம் வரணும் ம்மா…”
“வயசு ஏறிட்டே போகுது… அவ தங்கச்சிக்கே ஆஸ்பித்திரி போய்தான் உண்டாகியிருக்கா? நீயும் அவளை அழைச்சிட்டு போ’ன்னு சொன்னா மதிக்குறதே இல்லை.”
“கல்யாணமாகி இப்போதான் வருஷம் ஆகியிருக்கு. பொறுமையா இரும்மா. நல்லதே நினை சீக்கிரமே நல்லது நடக்கும்.”
“என் வாயை அடைக்க நல்லா கத்துக்கிட்ட முகிலு.”
“என்னம்மா நீ… உன் பேச்சை எப்போ தட்டியிருக்கேன். நீ தூங்கு முதல்ல, தலைவலிக்குதுனு சொன்னியே.” என்று அவரை அறைக்குள் அனுப்பிவிட்டான்.
‘எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதிருக்கு.’ சலிப்புடனான பெருமூச்சுடன் கீழறங்கியவன் ரிஷியுடன் சேர்ந்து இரவு உணவு வாங்கி வர, தூரத்தில் இருப்பவர்கள் எல்லாம் உண்டு இரவு இரயிலுக்கு கிளம்பிவிட்டனர்.
“நீ இங்கேயே தூங்கு மலர். நான் மேல இருக்கேன்.” என்று மனைவியை கீழே அவள் குடும்பத்திடம் விட்டு வர,
“அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே. வீட்டுக்கு வராம இன்னும் என்ன அவளுக்கு கீழ வேலை?” என்று வீம்பிற்கு நின்றார் மாரியம்மாள்.
“சந்தியாவும் நைட் தங்குது, சேர்ந்து இருக்கணும்னு நினைப்பாங்கனு நாந்தான் விட்டுட்டு வந்தேன். கீழதான இருக்கா…” என்று எரிச்சல் பட்டுக்கொண்டே அறைக்குச் சென்றான்.
“இப்படியே பண்ணிட்டு இருந்தா அப்புறம் இங்க கூட்டிட்டே வரமாட்டேன் பாத்துக்கோ.” என்று கந்தசாமி கண்களை உருட்ட, முணுமுணுப்புடன் இரண்டு நாள் இருந்துவிட்டு ஊருக்கு கிளம்பினார்.
நாட்கள் வேகமாக ஓட, வந்தனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் பிரபா தங்கிக்கொள்ள, இவர்கள் இருவரும் மற்றைய விஷயங்களை பார்த்துக்கொண்டனர். தனக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று முகிலன் ஒன்றிரண்டு முறை முகம் தூக்கினாலும் மனைவிக்கு உறுதுணையாக நின்றான். பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வந்தபின் குழலியின் முக்கால்வாசி பொழுதுகள் கீழேயே கழிந்தது. அவன் வரும்வரை கீழே தான் இருப்பாள், அங்கேயே சமைத்து எடுத்துவந்து விடுவாள்.
“இந்த வீட்டுக்கு தெண்டமா வாடகை கொடுக்கிறேனோ பேசாம கீழ மாறிடுவோமா?” என்று அவன் கேட்கும் அளவிற்கு அவளின் நிமிடங்கள் குட்டி குழந்தையுடன்தான்.
“அவ்ளோதான் வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு ஊருக்கு பொட்டிய கட்ட சொல்லிடுவாங்க அத்தை .” சிரித்துக்கொண்டே சொன்னவள் அவனை நெருங்கி நெஞ்சில் சாய்ந்துகொள்ள,
“என்னவாம்? எம் மலருக்கு திடீர்னு என் மேல கரிசனம்?” அவன் விரல்கள் அவள் சிகைக்குள் நுழைந்து அங்குமிங்குமாய் விளையாடியது.
“இல்லை நமக்கு பாப்பா வந்தா எப்படி இருக்கும்? இந்த குட்டி பையனை பாத்துட்டே இருக்கேனா எனக்கும் ஆசையா இருக்கு.” என்று முகம் சுருக்கி ஆவலாய் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அத்தி பூத்தமாதிரிதான் என் மலருக்கு ஆசை வரும். அதை நிறைவேத்தாம விட்டா குத்தாமாகிடாது.” என்று அவளுள் புதைய முயல, அவனை விலக்கினாள் குழலி. இவன் யோசனையாக பார்க்க,
“இல்லை நாம சரியாதான இருக்கோம். லேட்டாகுதே டாக்டர்கிட்ட போலாமா?”
“ப்ச்… நீயும் ஆரம்பிக்காத.”
“வயசையும் நாம பாக்கணும்ல.”
“அதெல்லாம் ஒன்னும் பாக்க வேண்டாம். என்னைப் பாரு போதும்.” வந்தனா எடுத்துக்கொண்ட சிகிச்சை குறித்து தெரிந்துகொண்டதில் இருந்து அதில் உடன்பாடில்லை அவனுக்கு. அதனால் மனைவியிடம் கண்டிப்பு காட்ட,
“அகன்…” சிணுங்கினாள் குழலி. அவனுக்கான பிரத்தியேக அழைப்பு வந்தாலே அவன் அசைந்துகொடுத்துவிடுவான் என்று தெரிந்து அழைத்தாள் குழலி.
“முடிவு பண்ணிட்டா கேக்க மாட்டேல்ல நீ…” சலிப்புடன் தலையாட்டி, “இன்னும் ரெண்டு மாசம் பாக்கலாம். அப்புறமும் போகலாம்னு தோணுச்சுன்னா போகலாம்.” என வாக்கு கொடுக்க, அதுவே போதுமானதாக இருந்தது குழலிக்கு.
ஆனால் அந்த இரண்டு மாதமும் அத்தனை அலைச்சலாகிப் போனது இருவருக்கும். ஊரில் ஒரு இடம் விற்பனைக்கு வருவதாய் விசாரித்து சொன்னார் கந்தசாமி. இவனும் ஒருமுறை சென்று பார்த்து வந்ததில் திருப்திகொண்டவனாய் மனைவியை அழைத்துச்சென்று காட்டினான்.
“நேரம் வரும்போதே வாங்கிடலாம்.” என்று அவள் சொல்ல, அவன் சேமித்து வைத்திருந்த பணமே போதுமானதாக இருந்தது. ஒரு நல்ல நாளில் அவன் பெயரில் இடம் பதிவு செய்துகொண்டனர்.
“சூட்டோட சூடா வீடு கட்ட ஆரம்பிச்சிடலாம் முகிலு.” என்று மாரியம்மாள் சொல்ல, முகிலன் செவி சாய்க்கவில்லை.
“என்ன பாத்துட்டு இருக்க, சொல்லு. ஊரை விட்டு போய் சம்பாரிக்குறதே வீடு கட்டத்தானே?” என்று மருமகளையும் பிடித்துக்கொண்டார்.
“பேசுறேன் அத்தை.” அவரிடம் சமாதானம் போல் சொன்னவள் முகிலனிடம் பேச,
“கையில பெருசா ஒன்னும் இல்லை, முழுசா லோன் எடுத்தா கையை கடிக்கும் மலர்.” என்று மறுக்க, இரண்டு நாள் யோசித்தவள்,
“நான் லோன் போடுறேன்ங்க. கட்ட ஆரம்பிச்சிடலாம்.”
அதிர்வாய் பார்த்தான் முகிலன், “வேண்டாம் மலர்.”
“ஏன் நான் செய்யக் கூடாதா?”
“ரொம்ப பெரிய அமௌன்ட். கொஞ்சம் பொறுமையா செய்யலாம்.”
“அத்தை மாமா எவ்ளோ நாள் அந்த வீட்ல கஷ்டப்படுவாங்க? கட்டிடலாம்.” இவள் அழுத்தம் கொடுக்க அவன் மசியவில்லை.
“ஏன் நான் லோன் போட்டு கட்டுனா உங்களுக்கு கவுரவக் குறைச்சல் ஆகிடுமா? பொண்டாட்டி காசு வாங்கிக்க அவ்ளோ ஈகோல்ல…” கோவத்தில் வார்த்தை விட்டவளை ஆவேசமாய் அருகில் இழுத்தவன்,
“பேசத் தெரியும்னு ஓவரா பேசாத மலர். என்னைக்கு ஈகோ பார்த்து உங்கிட்ட நடந்திருக்கேன் நான்? என்னை விட அதிகம் சம்பாரிக்குற, சின்ன சின்ன விஷயம்கூட யோசிச்சு செய்யுறனு நான் பெருமைப்பட்டா என்னை இப்படி கீழா நினைச்சிருக்க…” என்று கோபம் கொண்டு இரண்டு நாள் முகம் தூக்கினான்.
இவள் என்ன சமாதானம் சொல்லியும் அவன் இறங்கிவரவில்லை.
“என்ன இப்போ நான் பேசுனது தப்புதான்… அதுக்கு ஒரு பெரிய சாரி, ஒழுங்கா என்கூட பேசிடுங்க இல்லைனா…”
இவன் புருவம் உயர்த்தி தெனாவட்டாய் பார்க்க,
“கோச்சிக்கிட்டு போயிடுவேன்.” என சிறுபிள்ளைத்தனமாக மிரட்டினாள் குழலி. அவள் பேச்சில் துடித்த இதழ்களை சிரமப்பட்டு அடக்கி, “எங்க போவ?” இவன் நமட்டு சிரிப்பு சிரிக்க,
“அதான் பேசிட்டிங்களே, இனிமே எதுக்கு போவணும் நான்?”
“கேடி…” அவள் கன்னத்தை வலிக்க கிள்ளியவன், “நாமளே பேபிக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம். இப்போ போய் உன் பேர்ல லோன் எடுத்து உனக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்க வேண்டாம்னு நினைச்சா என்ன பேச்சு பேசுற…”
“ஓ, அப்படி நினைச்சீங்களா?” என்றவள் முகமே சுருங்கிப் போனது.
“உடனே மூஞ்சு ஏழூருக்கு போவுமே. ஹார்ட் ஒர்க் போட்டாதான் ரிசல்ட் கிடைக்கும்.”
“ஹார்ட் ஒர்க் போடாத மாதிரிதான் பேசுறது.” இயல்பாய் பேசுவது போலிருந்தாலும் உள்ளுக்குள் லேசான வருத்தம். நாட்கள் ஓடுகிறது, நல்ல செய்தி எப்போது என்ற கேள்வி துரத்துகிறது, பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை.
சிகிச்சைக்கு செல்லலாமா என்று அவள் கேட்க வாய் திறக்கும் சமயம் அவள் எண்ணவோட்டம் புரிந்தது போல் அவள் உதட்டில் விரல் வைத்து மறுப்பாய் தலையசைத்தான்.
“கொஞ்ச நாளைக்கு இதை மறந்துட்டு அந்த குட்டி கேடி கூட டைம் ஸ்பென்ட் பண்ணு, எல்லாம் பாஸிட்டிவா நடக்கும்.” என தைரியம் கொடுத்து அவளை வழிநடத்த, வந்தனா குழந்தையுடன் நாட்கள் சென்றது. அவன் சொன்னது போலவே சில மாதங்களில் நற்செய்தி கிடைத்துவிட, ஒட்டுமொத்த குடும்பமும் அவர்கள் வீட்டில் ஆஜராகிவிட்டார்கள்.
பிரபாவுக்கு முன் முந்திக்கொண்டு மாரியம்மாள் அவ்வீட்டில் எல்லா வேலையும் செய்தார். கேலியும் கிண்டலுமாய் சிரித்த முகத்துடன் இருந்த மகனை காண்கையில் அவருள்ளும் நிம்மதி. பேரப்பிள்ளை வரப்போகும் மகிழ்வு குறைகள் எதையும் அவர் மனதை அண்டவில்லை. பத்து நாள் இருந்துவிட்டு ஊருக்கு செல்லவே மனமில்லாமல் சென்றார்.
“அத்தை பாத்துப்பாங்க’மா.” என்று நம்பிக்கை கொடுத்த மகனிடம்,
“கீழயே மாறிடுங்க. தினம் மாடி ஏறி இறங்க வேண்டாம்.” என்று சொல்ல, நெஞ்சில் கைவைத்தான் முகிலன்.
“இப்படிலாம் நெஞ்சு வலி வரவைக்காத. மாடி ஏறி இறங்குறது எல்லாம் பிரச்சனை இல்லைனு சொல்லிட்டாங்க டாக்டர். நீ இங்க வந்து போக இரு.”
“நல்லது சொன்னா கேட்டுக்கவே மாட்டிங்களே ரெண்டு பேரும். வயசாகுது கவனமா இருக்கனும்.”
“இந்த வயசை விடவே மாட்டியா நீ?” என்று சலிப்புடன் அவரை வழியனுப்பி வந்தவன் கிடைத்த தனிமையில் மனைவியை கொண்டாடிவிட்டான்.
அவன் கையணைப்பில் தளர்ந்து அவன் ஈரமுத்தங்களை தனதாக்கிக்கொண்ட குழலி ஆசையாய் அவன் கையை வயிற்றில் எடுத்து வைத்து வருடச் செய்தாள்.
“உன் முகம் பளிச்சுனு மாறிடுச்சு மலர். எப்போவும் இப்படியே இருக்கணும்.”
“எப்போவும் இப்படியே பாத்துக்கோங்க என்னை.”
“அதைவிட வேற வேலை என்ன இருக்கு எனக்கு? என் மலர் எப்போவும் மலர்ந்த மாதிரி இருக்கனும் அதுதான் வேணும் எனக்கு.”
இப்படி காலத்திற்கேற்ப ஒருவருக்கு ஒருவர் துணையாய், தூணாய், கொடியாய், மரமாய் தோள் கொடுத்தனர்.
சில வருடங்கள் கழித்து,
அந்த பிரம்ம முகூர்த்தத்தில் மாலையும் கழுத்துமாய் ஹோமப்புகையின் முன் குடும்பமாய் அமர்ந்திருந்தனர் முகிலனும் குழலியும். இருபுறமும் அவர்களின் பிள்ளைகள் உறக்க கலக்கத்தில் தங்கள் பெற்றோரின் மேல் சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்தனர்.
“ம்மா, கண் எரியுது…” பெரியவன் கண்ணை கசக்கி அவள் மடியில் சாய்ந்தான்.
“கொஞ்ச நேரம்டா பட்டு.” மகன் முகத்தை துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, ஓடிவந்து அவனை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டாள் வந்தனா.
“இவளையும் தூக்கிட்டு போ’மா… கண்ணுல தண்ணி வந்துடுச்சு.” என்று மகளையும் தூக்கிக்கொடுத்தான் முகிலன்.
அன்றைக்கு அவர்கள் புதிதாக கட்டியிருக்கும் வீட்டின் கிரகப்பிரவேசம். பிள்ளைகள் முறையே ஐந்து, மூன்று வயதில் வளர்ந்து நின்றனர். சூட்டோடு சூடாக கட்டினால்தான் உண்டு என்ற மாரியம்மாளின் பேச்சு எத்தனை உண்மை என்பதை இத்தனை வருடத்தில் புரிந்துகொண்டனர். முதல் பிள்ளைப்பேறிலிருந்து அவள் தெளிந்து வரும் சமயம் எதிர்ப்பாராத நேரம் இரண்டாம் முறை கருவுற்றுவிட பிள்ளைகளை சுற்றி ஓடியது அவர்கள் வாழ்க்கை. சின்னவள் கொஞ்சம் வளரவும் மீண்டும் மாரியம்மாள் உந்துதலில் வீடு ஒருவழியாக எழும்பிவிட்டது. இப்போதும் குழலிதான் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறாள். அவள் பெயரில் எடுத்தால் வட்டி குறைவு ஒரு காரணம் என்றாலும் அவள் வேலைக்கும் சம்பளத்திற்கு உடனே கடன் கிடைத்துவிட்டது. ஆம், பிள்ளைகள் வளர்க்க பிரபா உதவிக்கரம் நீட்ட குழலியால் தடங்கலின்றி வேலையை தொடர முடிந்தது. அவ்வப்போது பத்து பதினைந்து நாட்கள் மாரியம்மாள் வந்து பிள்ளைகளை பார்த்துக்கொள்வார். அந்நேரம் குறை சொல்ல நேரம் கொடுப்பதில்லை பேரப்பிள்ளைகள்.
ஆனால் தனித்து சிக்கினால், “ரெண்டு பிள்ளைங்கன்னு ஆச்சு. இப்போவாச்சும் வீட்ல இருந்து புள்ளையை பாத்துக்கலாம்ல.” என்று சொல்லாமல் இல்லை அவர். தம்பதிகள் அதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. குழலிக்கு இந்த வேலை எத்தனை முக்கியம் என முகிலனுக்கு தெரியுமாதலால் அவன் உறுதுணையாக இருந்தான். அவன் வேலையிலும் சீரான முன்னேற்றம் இருந்தது.
வீடு கட்டத்துவங்கியதும் இங்குமங்குமாய் அலைந்ததில் கொஞ்சம் சோர்வாக தெரிந்தான் முகிலன். பார்த்துக்கொண்டிருந்த அமுதன் பால் எடுத்துவந்து கொடுத்தான். ரிஷி உணவு தயாராகும் இடத்தில் நின்று வேலை வாங்கிக்கொண்டிருந்தான். இவன் எப்படி குழலிக்கு உறுதுணையாக அவன் கடமையை செய்தானோ அதே போல் அவள் தங்கைகளும் விட்டுக்கொடுக்காது இவர்களுக்கு தேவைப்படும் நேரம் தோள் கொடுத்தார்கள்.
“என் புள்ளைக்கு மச்சான் இல்லை நாளைக்கு யார் வந்து அவனுக்கு செய்வான்னு புலம்புன. அங்க பாரு அந்த புள்ளைங்க எப்படி உரிமையாக முன்ன நின்னு எல்லாம் செய்துங்கனு.” மனைவியிடம் ரிஷியையும் அமுதனையும் காட்டிச் சொன்னார் கந்தசாமி.
“முகிலு எல்லாருக்கும் செய்யுறான் அதான் அவங்க நிக்குறாங்க. அது அவங்க கடமை.”
“அதான நல்லதா எதுவும் சொல்லிடாத…”
“என்ன நல்லது? முகிலு அங்கேயே இருக்கிறதா? வீடு கட்டிட்டா இங்க வந்துடுவேன்னு சொன்னான்ல. இப்போ என்னன்னா புள்ளைங்க படிப்பு அங்கதான் நல்லாயிருக்கும் லீவுக்கு இங்க வரோம்னு சொல்றான். மாமியார் வீட்டோட ஓட்டிகிட்டான். இதெல்லாம் கேட்க மாட்டீங்களே. ஒரு நல்லது காட்சின்னு ஊர்ல நடக்கும் போது புள்ளைங்க கூட இல்லைனா நல்லாவா இருக்கு?” என்று நொடித்தார்.
“அவன் புள்ளைங்க படிப்பையும் பாக்கணும்ல.” என்றவருக்கும் மகன் சென்னையிலேயே இருப்பது வருத்தம் என்றாலும் மருமகள் வேலை அதையொட்டி வாங்கியிருக்கும் கடன், பேரப்பிள்ளைகள் எதிர்காலம் எல்லாம் கண்முன் வந்து அமைதியாக்கிவிட்டது.
விழா முடிந்து அனைவரும் ஓய்வாக அமர, பிள்ளைகள் வீட்டை சுற்றி ஓடி விளையாடினார்கள். வெளியே நின்று அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன். மூன்று அறை கொண்ட அளவான வீடு மனதை நிறைத்தது. அருகில் இருந்த மனைவியின் கையை பற்றிக்கொண்டான்.
“நீ இல்லைனா இது சாத்தியமே இல்லை மலர்.”
“பொய், நான் எதுவும் பண்ணலைனாலும் ஒருநாள் நீங்களே இதை சாதிச்சிருப்பீங்க.” என்று கணவனுக்கு ஆதரவாக அவனை நெருங்கி நின்றாள்.
“ஆனா நீ சாதிச்சிட்டடி. நான் லோன் போடுறேன்னு சொன்னதை கேக்காம புரியாத மாதிரி ஏதேதோ கணக்கு சொல்லி என் மண்டையை கழுவிட்ட… எப்போவும் கொடுக்குற இடத்துலேயே இருக்கணும்னு நினைக்காத…” செல்லமாய் மனைவியை கடிந்துகொண்டான்.
“எல்லாருக்கும் கொடுப்பேன் ஆனா உங்ககிட்ட மட்டும்தான் திருப்பி அதை வாங்கிக்கனும்னு எதிர்பாப்பேன்.”
“கொடுக்கலாமே… சின்னவளுக்கு மூணு வயசாச்சு…”
“நினைப்பு போகுது பாரு. நோ மோர் பேபீஸ்.” என்று திட்டவட்டமாக சொல்லியவளை சிரிப்புடன் நெருங்கி அவன் தோளோடு அணைத்துக்கொள்ள,
“பப்லிக் பப்லிக்…” என்று வந்தனா அவர்களை நெருங்கி ஏதோ கிண்டலாய் சொல்ல, குழலி வெட்கச் சிரிப்புடன் அவளை அடிக்க, சந்தியாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.
வீட்டு வாயிலில் நின்று தன் பிள்ளைகளைப் பார்த்த பிரபாவின் மனம் நிறைந்து போனது. இதற்காகத் தானே அத்தனையையும் அவர் தாங்கியது. பின் தன் மூத்த மகள் தாங்கியது. இன்று அவளையும் தாங்க ஒருவன் வந்து அவளை அனுசரித்து தன் குடும்பம் முழுமையடைந்துவிட்டது என்று பெருமையும் பூரிப்புமாய் நின்றார்.
அகமுகிலன் பெயரைப் போலவே அவள் அகத்தில் நுழைந்து குளுமை பரப்பியது போல் மைம்மலர்க்குழலியும் மலர்வனமாய் அவன் வாழ்க்கைக்குள் நுழைந்து நறுமணம் வீசுகிறாள். ஆங்காங்கே முட்கள் நிறைந்த மலர்கள் சில பூத்தாலும் அதனை வெட்டிவிட கற்றுத் தேர்ந்திருந்த இவர்களின் மலர்வனத்தை அழகு சேர்க்கவென வந்த மின்மினிகளாய் பிள்ளைகள் சிறகடித்தனர்.
error: Content is protected !!