Skip to content
Post Views: 989
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 39
சிவராமன் தற்போது நன்றாகவே தேறி ஆர்டிபிசியல் லெக் வைத்து நடக்க ஆரம்பித்தார்.
கடைக்கும் சென்றுவர ஆசைப்பட்டு கேட்க இரு மகள்களும் மறுத்து விட்டனர்.
வேண்டா சிரா.நீ அங்க போய் சும்மா இருக்க மாட்டே.எதாச்சு காலுலே பட்டுச்சுனா அவ்வளவுதான்.
கெளசி,நான் அங்க போய் எதையும் தொட மாட்டேன்.சும்மா உட்கார்ந்திட்டு மட்டும் வந்துக்கறே.
Advertisement
எப்போதும் அவர் வீட்டில் முடங்கி பார்த்ததே இல்லை. இப்படி குழந்தையாக மாறி கெஞ்ச, கங்காவிற்கு அவர் ஆசைபடுவதை நிறைவேற்ற ஆசை. “சரிப்பா நீ போய்ட்டு வா.ஆனா அங்க போய் எந்த வேலையும் செய்யக் கூடாது.”என்ற நிபந்தனையோடு அனுப்பி வைத்தாள்.
கங்கா வழக்கம் போல ஒரு வாரத்திற்கு, அவள் பள்ளிக்கு கட்டிச் செல்வதற்கு தேவையான புடவைகளை அயர்ன் செய்து வைக்க தயாரானாள்.
பீரோவில் இருந்து புடவைகளை எடுக்க அந்த பச்சை நிற சாரி அவள் கண்ணில் பட்டது.
Advertisement
கண்களில் அன்றைய நாளின் கனவு. முதன்முதலில் சல்மானை சந்தித்த போது, இந்த புடவையைதான் கட்டி இருந்தாள்.அடிக்கடி கட்டினால் பழையதாகி விடும் என்ற எண்ணம். அதனால் அந்த நாளின் நினைவாக அதை பத்திரப்படுத்தி வைத்தாள்.
Advertisement
அது சாதாரண பச்சை நிற காட்டன் புடவை. சிறு கற்கள் பதித்து அழகாக இருக்கும். கங்காவிற்கு பச்சை நிறம் மிகப் பிடித்ததனால் அந்த புடவை பிடிக்குமா?அல்லது அந்த நாளின் பசுமையான நினைவால் அந்த புடவை பிடிக்குமா? எனத் தெரியாது. இருப்பினும் அவளுக்கு பிடித்த புடவையின் பட்டியலில் அது இணைந்து கொண்டது.
நாளை முதன்முதலில் சல்மான் இவளோடு தொலை பேசியில் பேசிய நாள். அவனை பார்த்து அன்றோடு இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. எந்தவொரு போன் காலும்,மெசேஜ்உம் இல்லை என்ற எண்ணம் சற்று மனகலக்கத்தை தந்தது.
கடந்த கால யோசனைகளில் இருந்தவளை “கங்கா குடிக்க தண்ணீ கொண்டு வா” என்ற சிவராமனின் குரல் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
Advertisement
அயர்ன் பாக்ஸை எடுத்து சூடாக ஸ்விட்ச்சை ஆன் செய்து விட்டு,ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு சென்று கொடுத்தாள்.
அந்த பச்சை புடவையை அயர்ன் செய்ய ஆரம்பித்தாள். நித்யா போன் செய்ய, எடுத்து என்ன? வென்று கேட்டாள்.
கங்கா பிஹெச்டிக்கு அட்மிஷன் ஓபன் ஆயிடுச்சுடி.
நான் இப்பதான்டி எண்டரன்ஸ் எக்ஸாம் எழுதி இருக்கே ரிசல்ட் வந்ததும் அப்ளை பண்றே.
அதோடு அந்த கால் முடியாதே ஊர்கதை உலக கதைகளை பேசி விட்டு… “சரி சரி ஊர் வம்பு நமக்கு எதுக்கு” என இருவரும் போனை கட் செய்தனர்.
அதுவரை புடவையை அயர்ன் செய்து பாதியில் விட்டு வந்ததை கங்கா மறந்திருந்தாள்.
புடவையை பார்க்க அது அயர்ன் பாக்ஸின் சூட்டில் கருகி விட்டது. புடவையை விட அவள் மனது கருகி விட்டது என்று தான் கூற வேண்டும்.
ஏற்கனவே அவன் பேசுவதை நிறுத்தி இரண்டு வருடம் ஆகி விட்டது.இவளாக அவனை தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் எரிச்சலாக பேசி வைத்து விடுகிறான்.
மெசேஜ் செய்தாலும் ரிப்ளை இல்லை. போன் செய்தாலும் எடுப்பதும் இல்லை. இந்த துக்கத்தோடு புடவை கருகியதும் சேர்ந்து கொண்டது.
மேற்கொண்டு எந்த வேலையும் செய்யப் பிடிக்கவில்லை.
அமைதியாக இரவு உணவு சாப்பிட்டு தூங்க சென்று விட்டாள்.
சிவராமன்,லட்சுமி,
கெளசி மூவரும் டீவியை பார்த்தவாறே சாப்பிட்டனர்.
“என்ன ஆச்சரியம்! கங்கா இன்னைக்கு சாப்பாடை எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டுட்டு போய் படுக்கறா” என மூவரும் குசலம் பேசியது நன்றாகவே அவள் காதில் கேட்டது.
ஏதேதோ நினைவுகள் அழைக்கழிக்க ஒருவழியாக தூக்கம் வந்தது…அவளின் மொத்த மனநிம்மதியையும் வாரி சுருட்ட…
கனவில் கங்கா அவள் வீட்டு வாசலில் நின்றிருக்கிறாள். அப்போது மூன்று பெண்கள் ஒரு ஐந்து வயது குழந்தை, கங்கா வயதுடைய ஒரு பெண், கொஞ்சம் வயதான மற்றொரு பெண் மூவரும் கண்கள் மட்டுமே தெரியும் படி பர்தா அணிந்திருந்தனர்.
மூவரும் கைகளை நீட்டி “அவளை வெளியே வா” என அழைக்கின்றனர்.
கங்கா ஒருநிமிடம் வெளியே செல்லலாமா? வேண்டாமா? என்ற யோசனையோடு சிவராமனை பார்க்கிறாள்.
சிறிது நேரத்தில் ஒரு பாலைவனம் தெரிகிறது.சூரியன் மறையும் வேளை மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறம் அங்கிருந்த மணல் மேடுகளின் மீது பிரதிபலித்தது.அங்கே ஒரு செங்கல் வைத்த வீடு இடிந்து இருந்தது.
அந்த வீட்டில் கங்கா அழுது கொண்டே நிற்கிறாள்.எதிரே சல்மான் அவன் அருகே ஒரு சிறுமி அழகாக சிரித்துக் கொண்டே ஒரு பொம்மையை கையில் வைத்திருக்கிறாள்.
“வேண்டாம் சல்மான்! உனக்கு நான்தானே வேணும். அந்தக் குழந்தையை ஒன்னும் செய்யாதே. “என அழுது கொண்டே கெஞ்சுகிறாள் கங்கா.
சல்மான் ஒரு ராட்சசனை போல அவளை பார்த்து சிரிக்கிறான். கண்களில் வன்மத்தோடு கங்காவை பார்த்துக்கொண்டே அந்த சிறுமியை ஒற்றை கையால் தூக்கி சுவற்றில் அடிக்க அந்த குழந்தை வாயில் ரத்தம் வர மயங்கிவிட்டது.
கங்கா இரண்டு கைகளையும் தலையில் வைத்து ” ஐய்யோ அம்மா!” என கத்திவிட்டாள்.குடும்பமே எழுந்து விட்டது.
“என்னடி ஆச்சு!” என லட்சுமி எழுந்து லைட்டை ஆன் செய்ய,கெளசி,” எதுக்குடி இப்படி பேய் மாறி கத்தறே” என்றாள்.
கங்கா எதுவும் பேசாது, மெளனமாக எழுந்து பாத்ரூம் சென்று முகத்தில் இருந்த வியர்வையை கழுவி விட்டு மீண்டும் படுக்க போனாள்.
“கங்கா இந்தா கடை சாவி ஏதோ கெட்ட கனவு கண்டிருப்பே போல,தலைகாணி அடிலே இதே வச்சிட்டு தூங்கு” என சிவராமன் சாவியை நீட்ட அதை வாங்கி அவர் சொன்ன படியே செய்தாள்.
“மணி இப்பதான் ஒன்னரை இந்த கங்கா கத்துனதுலே எனக்கு தூக்கமே போச்சு” என சொல்லிவிட்டு அவள் மேலேயே காலை போட்டு தூங்கினாள் அவளின் அன்பு தங்கை.
மூவரும் தூங்க கங்காவிற்கு தூக்கமே இல்லை.விட்டத்தை பார்த்து தனக்குள்ளே கேள்விகளை கேட்டு பதிலையும் சொல்லிக் கொண்டாள்.
சல்மான் இந்த அளவு கொடூர முகம் கொண்டவனா?இல்லை இல்லை அவன் குரலை கூட உயர்த்தி பேசாதவன். எதிரே இருப்பவரின் மனம் நோகாமல் பேசும் சாந்தமான குணத்திற்கு சொந்தகாரன்.
சிவராமனின் கணீர் குரலை கேட்டு வளர்ந்ததனால் ஆண்கள் என்றால் இப்படிதான் இருப்பார்கள் என்ற அவளின் அகராதியை மாற்றி எழுதியவன்.
பற்களும் நாக்கும் கூட அதிராத அளவுக்கு மென்மையாக அதே சமயம் தன்மையாக பேசுபவன்.இன்று ஒரு குழந்தையை கொல்வானா? நிச்சயமாக அது அவளின் சல்மான் இல்லை. அது ஒரு கெட்ட கனவு என அவள் மனம் கூறியது.
கெட்ட கனவு வந்தால் வழக்கமாக அவள் கூறும் ….
“சுற்றும் கருடன்
சூலக் கருடன்
பக்கக் கருடன்
பாய் போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன்”
என்ற மந்திரத்தை ஒன்பது முறை கூறி ரொம்ப கஷ்டப்பட்டு விடியற்காலை நான்கு மணிக்கு தூங்க சென்றாள்.
விடிந்ததும் ஞாயிற்று கிழமை சிவராமனின் அண்ணன் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி பத்திரிக்கை அடித்து விட்டதால் கறி எடுக்க முடியாது. வேறு என்ன சமையல் செய்யலாம் ?என்ற தீவிர விவாதம் பேய்க் கொண்டிருக்க, கண்களையும் முகத்தையும் சுருக்கி அப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்தாள் கங்கா.
ஒருவழியாக மஷ்ரூம் பிரியாணி முடிவு செய்யப்பட வீடு அமைதியானது.கங்கா மனது மீண்டும் அலைமோத ஆரம்பித்தது.
அன்றுதான் சல்மான் போன் மூலம் அவள் வாழ்வில் நுழைந்த நாள். இந்த உறவு என்ன ஆகும்? இப்படியே முடிந்து விடுமா?அவனை திரும்ப வாழ்வில் சந்திப்போமா?என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தாள்.
காலை எட்டரை மணி நித்யா போன் செய்தாள்.என்ன நித்யா எட்டரைக்கே எந்திருச்சிட்டே போல என்றாள். மறுமுனையில் கங்கா உனக்கு ஒரு சேட் நீயுஸ் என்றாள். படுக்கையில் இருந்து எழுந்தவாறே, “முருகா நிச்சயமாக அது சல்மானை பத்தினதா மட்டும் இருக்கவே கூடாது “என வேண்டினாள்.
அடுத்த நொடி “கங்கா சல்மானோட அப்பா இறந்துட்டாருடி” என்றாள். “என்ன? நித்யா சொல்றே எப்படி இறந்தாரு?எப்போ?சல்மான் ஊருலே இருந்து வந்துட்டானா? இப்ப எங்க இருக்காங்க? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக….
எனக்கு எதும் தெரிலேடி சுமந்த் மெசேஜ் பண்ணிருக்கான்.
இன்னைக்கு சண்டே வீட்டுல விடமாட்டாங்க. நான் நாளைக்கு போலானு இருக்கே நீ என்ன பண்றே .
“தெரிலடி வீட்டுல கேக்கிறே” என்று போனை வைத்து விட்டாள்.
“அம்மா என்கூட வேலை செய்றே சாரோட அப்பா இறந்துட்டாராமா,
நா போகட்டுமா?என கேட்க, அவர் முகத்திலும் சற்று சோகம். எப்போ?உடம்பு சரி இல்லாம இருந்தாரா? என கேட்டார்.
எதுவும் தெரிலம்மா அங்கே போனாதா தெரியும் என்றாள். இவர்கள் உரையாடலை கேட்ட சிவராமன் யாரு இறந்தாங்க? என்றார்.
கங்கா வாயை பூட்டிக் கொண்டாள்.
லட்சுமியே விஷயத்தை கூறினார்.அவ கூட வேலை செஞ்ச சாரோட அப்பா இறந்துட்டாராமா…
சல்மான் அவளின் உடன் பணியாற்றியவன் அல்ல.அவளின் தோழன் என்ற உண்மையை சொல்லும் தைரியம் கங்காவிற்கு இல்லை. எனவே உடன் பணிபுரிந்தவன் ஆகி போனான் சல்மான்.
அவர் “எந்த ஊரு? எப்படி இறந்தாங்க? என எல்லாம் கேட்டு விட்டு எங்க அண்ண புள்ளை கல்யாணம் முடிஞ்சதும் போ” என பச்சை கொடி காட்டி விட்டார்.
கங்காவிற்கு சந்தோசமே.. ஆனால் இன்றுதான் தேதி இரண்டு கல்யாணம் பத்தொன்பதாம் தேதி இன்னமும் பதினெழு நாட்கள் இருந்தது.
அதுவரை எல்லாம் கங்காவால் தாக்கு பிடிக்க முடியாது. அவனை இந்த நொடியே பார்க்க வேண்டும் போல இருந்தது.மற்ற நாட்களாக இருந்திருந்தால் எப்படியாவது ஏமாற்றிவிட்டு, கம்பி நீட்டி சென்று இருப்பாள்.
ஞாயிற்று கிழமை அப்பாவை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலை.வீட்டில் இருந்தாலும் அவள் எண்ணங்கள் முழுவதும் சல்மான் மட்டுமே நிறைந்து இருந்தான்.
“முருகா! அவனுக்கு பலத்தை கொடு” என மனதில் வேண்டிக் கொண்டாள்.
மதியம் ஒரு மணி மாலதி போன் செய்தாள்.அழுது கொண்டே, இல்லை இல்லை கதறிக் கொண்டே…கங்கா! “சல்மான் அப்பா இறந்துட்டாருடி.இந்த நிலையை நான் எப்படி கடந்து வருவனே தெரியலடி”
இவ எதுக்கு இப்போ கதறிட்டு இருக்கா என்ற எரிச்சலுடன், தெரியும் மாலு,நித்தி சொன்னா. நீ அங்கே போனியா.
இவள் தனக்கு தெரியும் என்று சொன்ன அடுத்த நொடி அவளது பேச்சில் மாற்றம்,
நா அங்கதான் இருக்கே.
சல்மான் இருக்கானா?
நின்னுட்டு இருக்கான்.
எப்படி இருக்கான். அவங்க அப்பா ஏன் இறந்தாங்க?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறாது.”நா அப்பறம் கூப்டறே கங்கா” என போனை வைத்து விட்டாள்.
கங்கா உடனே நித்யாவுக்கு போன் செய்து,மாலதி அங்கே போய்டாளாம் அவ பேச்சே சரி இல்லடி” என்றாள்.
“நான் ஏற்கனவே சொன்னே இல்ல கங்கா, அவ ஒரு கேடினு. இப்பதா சுமந்த் கூப்டான்.. அங்க கதறி அழுது சீன் போட்டுட்டு இருக்காளாம்” என்றாள்.சுமந்த் நித்யாவின் அபிமானி அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.
கங்காவிற்கு ஏற்கனவே தெரிந்ததுதான் மாலதிக்கு அவன் மீது ஒரு சலனம் உள்ளது என்று இன்று அவள் அங்கு சென்று அழுவது ஏற்கனவே இருந்த மனக்கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது.
அடுத்தநாள் காலை வழக்கம் போல பள்ளி சென்றாள். உடன் வேலை செய்யும் வளர்மதி “ஏன்டி இன்னைக்கு பேஸ் டல்லா இருக்கு என்ன ஆச்சு” என்றாள்.
சல்மானை பற்றியும், அவர்கள் நட்பு பற்றியும்,அவன் அப்பா இறந்துவிட்டது பற்றியும் பகிர்ந்து கொண்டாள்.
அச்சச்சோ! அவங்க அப்பாக்கு என்ன ஆச்சு?என்ற கேள்விக்கு “எதும் தெரிலே மேம். நேத்து நித்யா போன் பண்ணி சொன்னா.அங்கே போனதா தெரியும்”
எங்க பெரியப்பா பொண்ணுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிருக்கறதாலே வீட்டுலே வேண்டானு சொல்லிட்டாங்க. ஆனா நா வீட்டுக்கு தெரியாமா இன்னைக்கு ஈவ்னிங் போறே .
“உங்க அப்பா வேற ரொம்ப ஸ்ட்ரிட் ஆன ஆளு நீ போனது தெரிஞ்சு எதாவது திட்ட போறாரு” என்றாள் வளர்.
தெரிஞ்சாதானே மேம் நான் பர்ஸ்ட்டே போன் பண்ணி மீட்டிங் இருக்கு வர லேட் ஆகுனு சொல்லிறே.
“சரி பார்த்து போய்ட்டு வா” என்று கூறி க்ளாசிற்கு சென்றார் வளர்.
மணி மதியம் ஒன்று, இரண்டு என வழக்கத்திற்கு மாறாக மெதுவாக நகர்வது போல இருந்தது கங்கா “சீக்கிரம் டைம் போகாதா” என குறைபட்டுக் கொண்டாள்.
அப்படி இப்படி என மணி எப்படியோ மூன்றாகி பள்ளி முடிந்து விட்டது.கங்கா வேகமாக சென்று முகத்தை கழுவி துடைத்து ஒரு பொட்டை வைத்தாள்.
தலையையும் வாரிக் கொண்டாள்.
பஸ்ஸில் ஏறி மானசீகமாக கடவுளிடம் பிரார்த்தனை வைத்தாள்.முருகா!” இது நா சல்மான பார்க்கிற கடைசி தடவையா கூட இருக்கலாம். எப்படியாவது அவனை என்கிட்ட பேச வச்சிரு. ஏன்டா அவனை வாழ்க்கையிலே பார்த்தோம்னு? நினைக்கிற அளவுக்கு மட்டும் அங்க எதுவும் நடந்திரக்கூடாது.”
அவனது வீட்டிற்கு பயணம் நெருங்க நெருங்க மனதில் ஆயிரம் கேள்விகள்
போலாமா? வேண்டாமா?அவன் பேசுவானா?மாட்டானா?எடுத்த எடுப்பில் எதுக்கு இங்க வந்தே? உன்னை யாரு இங்க வர சொன்னா? என வழக்கம் போல எரிந்து விழுந்தால் என்ன செய்வது? என்றெல்லாம் குழப்பம்.
அவன் வீடு மெயின் ஏரியாவில் இருந்து சற்று உள்ளே ஒரு மசூதி தெருவில் உள்ளது.அங்கே பஸ் வசதி இல்லாத காரணத்தால் நித்யாவும் கங்காவும் வண்டியில் செல்வதாக முடிவு செய்திருந்தார்கள்.
அதற்கு முன்புதான் காலேஜில் இருந்து பேராசியர்களுடன், சுமந்தும் உடன் சென்றிருந்தான்.
இதுவரை கங்கா சல்மான் வீட்டிற்கெல்லாம் சென்றது இல்லை. இதுவே அவளின் முதல் விஜயம் அவனின் வீட்டிற்கு…எனவே சுமந்த் வழிகாட்ட… நித்யாவின் வண்டியில் சல்மான் வீட்டிற்கு சென்றாள் கங்கா
–தலைவன் வருவான்…
error: Content is protected !!