Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 13

அத்தியாயம் 13 

கார்த்திகேயனுக்கு, ஐஐடி கரக்பூரில் மேற்படிப்புக்கு இடம் கிடைத்திருந்தது.



Advertisement

ரத்னாவிற்கு மகனை எண்ணி மிகவும் பெருமையாக இருந்தது. மகனது கடின உழைப்பை உடன் இருந்து பார்த்திருந்தார் அல்லவா?  கார்த்தியை விட விக்னேஷ் தான் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவன் அவனது  நண்பர்களுக்கு எல்லாம் ட்ரீட் கொடுக்க என்று ரத்னாவிடம் பணம் கேட்டுக்கொண்டிருந்தான்.

“டேய், நீ கஷ்டப்பட்டு படிச்சு சாதிச்சு ட்ரீட் வை, கார்த்தி படிச்சதுக்கு நீ எதுக்கு ட்ரீட் வைக்கணும்?”

Advertisement

Advertisement

“இங்க பாருங்க அம்மா.. இனிப்பு பணியாரம் காரமா இருக்க முடியாது, அதே மாதிரி கார பணியாரம் இனிப்பா இருக்க முடியாது.. சிலர் இனிப்பு பணியாரம்.. சிலர் கார பணியாரம்..”

“என்ன சொல்ல வர நீ இப்ப” என்றார் ரத்னா சிரித்து கொண்டே.

Advertisement

“எல்லா பணியாரமும் டேஸ்ட்டா தான் இருக்கு, இன்னும் எனக்கு ரெண்டு வை” என்று கூறிக்கொண்டே பணியாரத்தை உள்ளே தள்ளி கொண்டிருந்தான்.

“அடப்பாவி” 

“ஏன் அண்ணா நீ உன் பிரண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் கொடுக்கலையா?”

“இல்ல விக்கி.. யாரும் கேட்கல.. ஆனா எங்க நந்திதா மேம் குடும்பத்தை மட்டும் வீட்டுக்கு ஒருதடவை கூப்பிடலாம்னு யோசிக்கிறேன். அவங்களும் அம்மாவை ஒரு தடவை பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. நீ என்ன ம்மா சொல்ற?” என்று தம்பியிடம் ஆரம்பித்து அன்னையிடம் முடித்தான்.

“கண்டிப்பா கூப்பிடு கார்த்தி. அவங்க சொல்லலைன்னா நமக்கு இந்த வாய்ப்பே கிடைச்சிருக்காது. இது பத்தி யோசிச்சிருக்கவே மாட்டோம் தானே”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் காமாட்சியும் சுந்தரேசனும் வந்தனர்.

“வாங்க அத்தை வாங்க மாமா” என்று அவர்களை முதலில் பார்த்த விக்கி மகிழ்ச்சியாக அழைத்தான்.

“கார்த்தி போன் பண்ணி விஷயத்தை சொன்னதுமே நேர்ல பார்க்கணும்னு தோணுச்சு. அதான் உடனே கிளம்பி வந்துட்டோம்..”

“நானே இப்ப கொஞ்ச நேரத்துல உங்களை வந்து பார்க்கலாம்னு இருந்தேன்  மாமா. நீங்களே வந்ததுல ரொம்ப சந்தோசம்,” என்று கூறி இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டான்.

“கண்ணன் இருந்திருந்தா இந்நேரம் அவனை கையில பிடிச்சிருக்க முடியாது. அவனுக்கு நீயும் உன் தம்பியும் பெரிய ஆளா வரணும், அது தான் அவன் கனவே..” என்று சுந்தரேசன் கூற,

“ஆமா ண்ணா.. எப்பவுமே அதான் சொல்லிட்டே இருப்பாரு..” என்றார் ரத்னா உணர்ச்சிவசமாக.

முதலில் இவர்களுக்கு உதவி செய்தது என்னவோ சுந்தரேசன் காமாட்சி தம்பதியினர் தான். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு துணையாக நிற்பது ரத்னாவும் கார்த்தியும் என்றால் மிகையாகாது. அவர்கள் பிள்ளைகள் எல்லாம் வெளி ஊரில் இருக்க, இவர்களுக்கு ஒன்னென்றால் உடனே சென்று நிற்பது இவர்கள் தான். 

சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு, அங்கேயே உணவையும் முடித்து கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

மறுநாள் நந்திதா மேம் அவர் கணவர் இருவரையும் விருந்துக்கு அழைத்திருந்தார்கள்.

தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவர அண்ணனும் தம்பியும் மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கே ரேவதியையும் எழிலரசியையும் எதேர்ச்சியாக சந்தித்தனர்.

“ஹேய் கார்த்தி வாழ்த்துக்கள்” என்றார் ரேவதி உற்சாகமாக. ரத்னா மூலம் அவருக்கு விஷயம் தெரிந்திருந்தது. எழிலும் மகிழ்ச்சியாக வாழ்த்து கூறினாள்.

கோவிலில் தனது வேண்டுதலை குறையின்றி முடித்திருந்தாள் எழில். மாமா அத்தையின் காதல் கதையை கேட்ட பிறகு, அதற்குமேல் விஜயனை வற்புறுத்தவில்லை. அத்தையின் கவலையே மாமா தனித்து நின்று விடுவார் என்பது தானே. நல்ல குடும்பம் துணை இருக்கும்பொழுது அவருக்கு தனிமை எப்படி வரும். அவருக்கான இடைவெளியை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டாள். தனக்கு நிதர்சனத்தை புரிய வைத்ததிற்கு ரத்னாவிற்கும் நன்றி கூறினாள். அனுராதாவின் மறைவில் இருந்து முழுதும் வெளியே வந்துவிட்டாளா என்றால், இல்லைதான். ஆனால் அவர் மறைவை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டாள்.

அவ்வப்பொழுது கோவிலில் சந்திக்கும் கார்த்தியிடம் நட்புடன் ஓரிரு வார்த்தை பேசுவது உண்டு. 

“தேங்க்ஸ் ஆன்ட்டி. தேங்க்ஸ் எழிலரசி..” என்றான் கார்த்தி அவர்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு சின்ன சிரிப்புடன்.

எழிலுக்கு கார்த்தியின் இந்த சின்ன சிரிப்பு மிகவும் பிடிக்கும். அது எப்படி எப்பவுமே ஒரே மாதிரி,  ஸ்கேல்ல அளந்து மாதிரி இவ்வளவு சின்ன சிரிப்பு சிரிக்கிறாங்க என்று நினைத்துக்கொள்வாள்.

“அப்புறம் விக்கி, என்ன அண்ணனும் தம்பியும் ஷாப்பிங்கா” என்றார் ரேவதி  விக்கியிடம்.

“இந்த கத்திரிக்காய் வெண்டைக்காய் வாங்கிறது ஷாப்பிங்கா.. உங்க கடைக்கு வந்து ஒரு தங்க பிரெஸ்ட்லெட், ஒரு செயின்.. இப்படி வாங்கினா அது இல்ல  ஷாப்பிங் ஆன்ட்டி?”

“ஓ.. சாருக்கு ஷாப்பிங்னா அப்படி?” என்றார் ரேவதி சிரித்துக்கொண்டே.

“வீட்டுக்கு கெஸ்ட் வர்றாங்க, அதான் அம்மா லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வர சொன்னாங்க” என்றான் கார்த்தி.

பேசிக்கொண்டே விக்கியும் கார்த்தியும் எடுத்து வைத்திருந்த காய்கறிகளை பார்த்து,  “என்ன இப்படி சொத்தையா எடுத்து வச்சிருக்கீங்க?” என்று அதை திருப்பி போட்டுவிட்டார்.

“இங்க பாரு, வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கான்னு, இப்படி காம்பை உடைச்சு பார்த்து வாங்கணும். தக்காளி நீ எடுத்த மாதிரி இருந்தா, வீட்டுக்கு போறதுக்குள்ள சட்னி ஆயிருக்கும்”  என்று பாடம் வேறு எடுத்தார்.

கார்த்தி சீரியசாக அவர் கூறுவதை கேட்டு அதன் படி காய்கறிகளை எடுத்து வைத்தான்.

“ஏன் விக்கி உங்க அண்ணா எப்பவுமே இப்படி தானா? எங்க அம்மாவுக்கே  சுமாரா தான் காய் வாங்க தெரியும், அதை கூட கண்டுபிடிக்காம, அவங்க  எடுக்கிற இந்த மொக்கை காய்கறி கிளாஸ்ஸயே இப்படி கவனிக்கிறாரு?” 

“ஆமா க்கா.. அவன் அப்படி தான்.. கொஞ்சம் படிப்பஸ்.. கொஞ்சம் பொறுப்ப்ஸ்.. கொஞ்சம் பருப்புஸ்..”

“ஹா ஹா ஹா “

“நீங்க எப்படி? நீங்க முருகனுக்கு விரதம் எல்லாம் இருந்தப்ப எங்க அம்மா, உங்களை மாதிரி பொறுப்பான பிள்ளையே இல்லைன்னு ஒரே புகழ்..”

“அது வேற டிபார்ட்மென்ட்.. லார்ட் முருகனுக்கும் எனக்கும் தனி டீலிங்.. மத்தபடி பொறுப்ஸ் படிப்ஸ் எல்லாம் நமக்கு செட் ஆகுது..”

“அப்ப சூப்பர்..” 

“அந்த பக்கம் ஒரு பாட்டி சுட சுட பக்கோடா போட்டு விக்கிறாங்க.. நாம போய் சாப்பிட்டு வருவோமா?”

“சரிக்கா..”

“அம்மா, வாழைக்காய் வேணும்னு சொன்னியே, அந்த பக்கம் நல்லா இருக்கு, நாங்க போய் வாங்கிட்டு வர்றோம்.”

“வாழைக்காய் வேணாம் டி, அப்பாக்கு வாய்வுன்னு சொல்லிட்டு இருந்தாங்க..”

“பெரியம்மா குகன் சிப்ஸ் கேட்டான்னு சொன்னாங்களே, நான் போய் வாங்கிட்டு வரேன். உங்களுக்கு வேணுமா கார்த்தி…”

“கார்த்தி ரத்னா கொடுத்த லிஸ்டில் தேடி பார்த்து கொண்டிருக்க, விருந்துக்கு வாழைக்காய் சிப்ஸ் இல்லைனா எப்படி, நீ வா விக்கி நாம் போயிட்டு வரலாம்” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்று விட்டாள்.

“சூப்பர் அக்கா நீங்க..” என்று விக்கி எழிலுடன் சேர்ந்து கொண்டான்.

பாட்டியிடம் சென்று இருவரும் சுட சுட பக்கோடாக்களை  உள்ளே தள்ளிவிட்டு, “அங்க பாரு டீ..” என்று அடுத்து சென்று இருவரும் டீயும் குடித்துவிட்டு கதை அடித்து கொண்டிருந்தார்கள்.

“எங்க ஆன்ட்டி இவங்களை காணும்”, என்று கூறிக்கொண்டே காய்கறிகளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர் கார்த்தியும் ரேவதியும்.

“இரு போன் பண்ணி பார்ப்போம்..”

இவர்கள் அழைத்ததும் இருவரும் அசைந்தாடி வந்தனர்.

“எங்க டி வாழைக்காய்?”

“நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன் அம்மா.. அப்பாக்கு ஒத்துக்காத ஒன்னை வாங்க மனசு கேட்கலை, அதான் குகனுக்கு பாவக்காய் சிப்ஸ் போட்டுகொடுத்திடலாம்னு வந்துட்டேன்.. நீ பாவக்காய் வாங்கிட்ட இல்ல?”

கார்த்தி அவளை அதே சின்ன சிரிப்புடன் பார்க்க, “விருந்துக்கு வரவங்களுக்கும் வாய்வு வர கூடாது பாஸ்.. அதான் விக்கியையும் வாங்க வேண்டாம்னு சொல்லிட்டேன்”

‘ஏவ்வ்..’ பேசிக்கொண்டிருக்கையிலே ஏப்பம் வேறு.

“என்னத்த மொக்கிட்டு வந்த?”

“சும்மா கேள்வியா கேட்காம வாம்மா..” என்று இவர்களிடம் விடைபெற்று அன்னையுடன் கிளம்பிவிட்டாள் எழிலரசி.

“ரொம்ப ஜாலியா பேசுறாங்க அண்ணா அந்த அக்கா. நானும் அவங்களும் பக்கோடா சாப்பிட்டு, டீ  குடிச்சோம். சூப்பரா இருந்துச்சு.. நீ சாப்பிடறியா?”

“இல்ல விக்கி, டைம் ஆயிடுச்சு.. வா கிளம்புவோம்” என்று இவர்களும் கிளம்பினார்கள்.

—————-

நந்திதா மேமும் அவர் கணவர் ரிச்சர்டும் வந்தார்கள். ரத்னாவும் பிள்ளைகளும் அவர்களை ஆசையாக வரவேற்றார்கள். 

“உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம்” என்றார் நந்திதா மேம் ரத்னாவிடம்.

“எனக்கும் தாங்க.. நீங்க தான் எங்க கார்த்திக்கு சரியான நேரத்துல வழிகாட்டுனீங்க.. “

ரிச்சர்ட் கார்த்திக்கு வாழ்த்து சொன்னார். அவர் பார்க்க சினிமா ஹீரோ போல ஜம்மென்று இருந்தார்.

கணவரை இவர்களுக்கு அறிமுக செய்து வைத்தார் நந்திதா.

விருந்தை அமர்க்களப் படுத்தி இருந்தார் ரத்னா.

அவர்கள் இருவரும் பந்தா ஏதுமின்றி ரசித்து உணவை உண்டார்கள். நீங்களும் உட்காருங்க சேர்ந்தே சாப்பிடலாம், என்று வற்புறுத்தி ரத்னாவையும் அமரவைத்து பேசிக்கொண்டே  உண்டார்கள்.

ரிச்சர்ட் நந்திதா இருவருமே கலகப்பாக பேசினார்கள். அரசியல், பொருளாதாரம் என்று சகலமும் பேசினார்கள்.

விக்னேஷ் பிரமிப்பாக அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன யங் மேன்? எங்களை இப்படி சைட் அடிக்குற?” என்றார் ரிச்சர்ட்  விக்னேஷின் தோளை தட்டிக்கொடுத்து.

“நீங்க ரெண்டு பேரும் மேட் போர் ஈச் அதர் மாதிரி இருக்கீங்க சார்” என்றான் அவன் உள்ளத்தை மறைக்காது.

“தேங்க்யூ” என்றார் அவர் அதனை ரசித்து.

வாங்க வீட்டை சுத்தி காண்பிக்கிறேன் என்று விக்கி தான் அவர்களை அழைத்து சென்று வீட்டை சுற்றி காண்பித்தான்.

கண்ணனின் வர்க் ஷாப்பை பார்த்து ரிச்சர்ட் மிகவும் பாராட்டினார்.

“உங்க அப்பா அனைத்தையும் பார்த்தது பார்த்து செஞ்சிருக்காரு. அதை இவ்வளவு சுத்தமா பராமரிச்சிருக்கீங்களே?” என்றார் பாராட்டுதலாக.

“எல்லாம் விக்கி தான் சார். எப்பவுமே இந்த இடம் தான் அவனுக்கு பிடிச்ச இடம். அவனே சுத்தப்படுத்தி வச்சுப்பான். இப்பலாம் சின்ன சின்ன பொருட்களெல்லாம் கூட செய்றான். எனக்கு டிசைனிங் வரும், ஆனா செய்றதுல அவ்வளவா இண்டெர்ஸ்ட்  இல்லை” என்றான் கார்த்தி தம்பியை பற்றி பெருமையாக.

பெண்கள் இருவரும் ஒருபக்கம் பேசிக்கொண்டிருக்கையில், இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“எங்கே நீ செஞ்சதை காட்டு பார்ப்போம்” என்றார் ரிச்சர்ட் ஆசையாக.

அவன் அழகான ஒரு பூ ஜாடியை காட்டினான். 

“வாவ்.. சூப்பரா இருக்கு..” என்று அதை பார்த்து பாராட்டினார்.

விக்னேஷிற்கு பெருமையாக இருந்தது.

“நீ என்ன படிக்கிற? அடுத்து என்ன செய்ய போற?”

“நான் பிபிஏ படிக்கிறேன் சார்.. அடுத்து என்னன்னு யோசிக்கணும்.”

நீ இந்த ஸ்கில்லை டெவெலப் பண்ணு, யூனிக் டிசைன்ஸ் செஞ்சு அதை சேல்ஸ் பண்ணா நல்லா வியாபாரம் ஆகும். நான் உனக்கு உதவி செய்றேன்”

அடுத்து என்ன என்ன என்று யோசித்து கொண்டிருந்த விக்கிக்கு ஒரு வழி காட்டப்படவே, அவன் மிகவும் மகிழ்ச்சியாகி விட்டான். ரிச்சர்ட் அவரது கைபேசி எண்ணையும் அவர்களிடம் கொடுத்தார்.

மகிழ்ச்சியாக விடைபெற்று சென்றார்கள் நந்திதா மேம் ரிச்சர்ட் தம்பதியினர்.

அன்று கார்த்தியிடம் பேசிய பிறகு , இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இன்றுவரை நந்திதா ஒரு வார்த்தைகூட பேசியது இல்லை. அதுவே அவர் மீது கார்த்திகேயனுக்கும் ரத்னாவிற்கும் பெருமதிப்பை அளித்திருந்தது.

ரிச்சர்ட் கூறியதை அன்னையிடம் கூறினான் விக்கி.

“அப்பாவோட கலை உன்கிட்ட இருக்கு போல விக்கி.. நீ அதை செய்.. நம்ம சுந்தேரசன் மாமாகிட்டயும் போய் வேலை பழகு.. ஆனா படிப்பை விட கூடாது.”

“சரிம்மா” 

—————-

கார்த்திக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது மகிழ்ச்சி என்ற பொழுதிலும் அம்மாவையும் தம்பியையும் விட்டு செல்ல அவனுக்கு மனமே இல்லை.

அதை யோசித்து சோர்ந்து அமர்ந்திருந்தவனை தேற்றுவதற்குள் போதும் போதும் என்றானது ரத்னாவிற்கும் விக்கிக்கும்.

அவன் கிளம்புவதற்கு முன் பாலு, குகன், எழில், தமிழ் நால்வரும் ஒருமுறை வந்து இவர்களை பார்த்தனர்.

“நீங்க எல்லாரும் இவனுக்கு கொஞ்சம்  சொல்லுங்கப்பா, முதல் நாள் ஸ்கூல் போறப்ப அழுகிற பிள்ளை மாதிரி ஊருக்கு கிளம்ப அழுதுட்டு இருக்கான்” என்றார் ரத்னா இவர்களிடம்.

“நாங்க எல்லாம் இருக்கோம்ல கார்த்தி, நாங்க ஆன்ட்டியையும் விக்கியையும் பார்த்துகிறோம்” என்று பாலு கூறவும், கார்த்தி அவனை கட்டி பிடித்துக்கொண்டான்.

கார்த்திக்கு பெரிதாக நண்பர்கள் இல்லை. பொறுப்பாக அம்மாவையும் தம்பியையும் நம்பிக்கையாக யார் பார்த்துக்கொள்வார்கள் என்று பரிதவித்து கொண்டிருந்தவனுக்கு இந்த வார்த்தை மிகவும் தேவையாக இருந்தது.

“என்ன கார்த்தி நீ, நாங்க நிஜாமுலுமே உன்னை எங்க பிரெண்டா தான் பார்த்தோம். நீ அப்படி நினைக்கல போலவே.. நினைச்சிருந்தா இப்படி ஏன் கலங்கணும்.”

“அம்மாவும் விக்கியும் தைரியமா தான் இருக்காங்க. இருந்தாலும் நான் என் படிப்புக்காக அவங்களை தனியா விட்டுட்டு போறது ஒரு மாதிரி இருக்கு..” என்றான் அவன் மெல்ல.

“விடுங்க பாஸ்.. நாங்க எல்லாரும் போய் ஐஐடில படிக்கணும்னு நினைச்சாலும் முடியாது. ஏன்னா நாங்க எல்லாருமே படிப்புல உங்களை மாதிரி புலி இல்ல.. எலி..” என்று எழிலரசி ஆரம்பிக்க,

மற்றவர்கள் இவளை முறைக்கவும்,

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், “நீங்க திரும்பி வர வரைக்கும் உங்க அம்மாக்கும் தம்பிக்கும் நான் பொறுப்பு. ஓகேவா” என்றாள் எழிலரசி கார்த்தியிடம்.

இப்படி சொல்ல வேண்டும் என்று அவள் யோசிக்கவெல்லாம் இல்லை. கார்த்தியின் கலங்கிய தோற்றம் அவளை என்னமோ செய்தது. அவனின் மில்லிமீட்டர் சிரிப்பை பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலில் கூறிவிட்டாள்.

“தேங்க்ஸ்” என்றான் எழிலை பார்த்து அவன் டிரேட்மார்க் சிரிப்புடன்.

ரேவதி, சாந்தி, மீனா என்று அவர்கள் ஒருமுறை வந்து பார்த்து, கார்த்திக்கு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தைரியம் கூறி சென்றார்கள்.

அப்பா இருந்தபொழுது இருந்த நிலை மாதிரி இப்பொழுது இல்லை. இத்தனை பேர் துணைக்கு இருக்கிறார்கள் என்ற ஆறுதலுடன், கொல்கத்தா அருகில் உள்ள கரக்பூர் கிளம்பி சென்றான் கார்த்தி.

எழில், பாலு, குகன், தமிழ் என்று அனைவருமே கார்த்தியுடன் கைபேசியில் தொடர்பில் இருந்தார்கள்.

கூறியதோடு நில்லாமல், அடிக்கடி வந்து ரத்னாவையம் விக்கியையும் பார்த்துக்கொள்கிறார்கள்.

விக்கி கல்லூரி முடிந்து வந்து மாலை பொழுதுகளில் சுந்தரேசன் மாமாவிடம் வேலை பழகி கொள்கிறான். ரிச்சர்டும் விக்கிக்கு வழிகாட்டுகிறார். அவனை சனி ஞாயிறுகளில் கம்ப்யூட்டர் வகுப்புகளிலும் சேர்ந்து கொள்ள கூறினார்.

ரத்னா, அவரது கண்ணன் பணியார ஸ்டாலை இப்பொழுது அடுத்து நிலைக்கு எடுத்து செல்வதை பற்றி யோசித்து கொண்டிருக்கிறார். காமாட்சி அம்மாவிடம் கேட்டபொழுது, அவர் கண்டிப்பா செய் நாகு, நாம ரேவதி வீட்டு ஆளுங்க கிட்ட கேட்போம். அவங்களுக்கு இதுல அனுபவம் ஜாஸ்தி என்று கூரி ரேவதியிடம் இருவரும் பேசினார்கள்.

சண்முகம், சிங்காரம், சரவணன் மூவருமே, “கண்டிப்பா செய்ய சொல்லு ரேவதி, நம்மளாலான உதவியை செய்வோம்” என்றனர்.

விஜயனை  தங்களுடன் இணைந்து தொழிலை பார்க்குமாறு கூறிய மச்சான்களை, எனக்கு ஒத்துவராது, ‘நான் பெட்ரோல் பங்க் ஒன்னு வைக்கலாம்னு யோசிக்கிறேன்’ என்று கூறி, அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார்.

அந்த ஆறுமுகம் அருளால் இப்பொழுது அனைவரின் வாழ்விலும் ஏறுமுகம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!