Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

82. பட்டர்ஃப்ளை - மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி

மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி 1

மையல் 1:

சென்னை குடும்ப நல நீதிமன்றம்,



Advertisement

அங்கு ஒரு முக்கியமான விவகாரத்து வழக்கு நடந்துக் கொண்டிருந்தது.

அதனை தலைமை தாங்கி எடுத்து சென்றது,சேரன் செங்குட்டுவன்.

Advertisement

Advertisement

ஆறடி உயர ஆண்மகன்,அலை அலையான கேசம்,களையான முகம்,இலேசாக மழிக்கப்பட்ட தாடி மீசை,கட்டுக்கோப்பான உடல்வாகு,கூர்மையான இரண்டு கண்கள்,அழுத்தமான உதடுகள்,உணர்ச்சியற்ற முகம் கொண்ட ஆடவன் அவன்.

அவனிற்கு வயது 35.

Advertisement

சென்னையின் மிக வெற்றிகரமான, முன்னணி விவாகரத்து வழக்கறிஞர்களில் ஒருவன்.

‘கிங் ஆஃப் டிவோர்ஸ்’ என அனைவரிடமும் பட்டம் பெற்ற ஒரு அரக்கனும் கூட!

அதற்காக அவன் அத்துணை கொடூரமானவனா என்று கேட்டால் இல்லை..

அவனது தொழிலுக்கும் வாடிக்கையாளருக்கும் நேர்மையாக இருப்பவன்,இந்த சேரன் செங்குட்டுவன்!

அந்த கட்டிடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் முன்பு அவனது நெஞ்சை இனம் புரியாத பாரம் அழுத்த தொடங்கினாலும்,வழக்கறிஞரின் உடையை அணிந்துவிட்டால் அவனது மனநிலை முற்றிலும் மாறிவிடும்.

நீதிமன்றம் சிலருக்கு சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்ற தரும்,சொர்க்க பூமி.

பலருக்கோ,தங்கள் வாழ்க்கையை மொத்தமாய் நொறுக்கி இருட்டில் தள்ளும் சுடுகாடு.

ஆனால்,வழக்கறிஞர் சேரன் செங்குட்டவனிற்கு?

அது பிழைப்பு நடத்தும் போர்க்களம் மட்டுமின்றி அதுவொரு கடவுளின் சன்னிதானம்!

ஏனெனில்,செய்யும் தொழிலே தெய்வம் என்ற கோட்பாட்டிற்கு உரித்தானவன்.

நீதிமன்றம் கடவுளின் சன்னிதானம் என்றால் அவனது வாடிக்கையாளர்கள் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள்!

அதனால் பக்தர்களின் கோரிக்கையை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் பூசாரியாக அவன் செயல்பட்டான்.

அவனது வாடிக்கையாளர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி,தய எண்ணத்துடன் கூடியவர்களாக இருந்தாலும் சரி…

அவனது கடமையில் இருந்து என்றும் அவன் தவறியதில்லை.

அதனால் தன் சுயவிருப்பு வெறுப்புகளை எல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு தன்னிடம் விவாகரத்து நாடி வரும் மக்களின் வெற்றியை நூறு சதவீதம் ஊர்ஜிதமாக்கிவிடுவான்.

குறிப்பாக,பெண்கள்…

அவனுடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.

பெண்கள் அவனை அசாத்தியமாக நம்பினார்கள்.

ஆண்களின் எண்ணிக்கை சிறிது குறைவு தான்!

மற்றைய வழக்கறிஞர்கள் கூட அவனிடம் வாதாடவே அஞ்சினார்கள்.

நீதிபதிகள் அவனது வாதத்திறமையை கண்டு பிரம்மித்துப்போவார்கள்.

சட்டப்படியாக தம்பதியினரை பிரித்து வைப்பதில் அவன் பெரும் கில்லாடி. 

சில மாதங்களிலேயே அவர்களது திருமண கதையை முடித்துவிடுவான்.

அப்படியொரு வல்லவன்,சேரன் செங்குட்டுவன்.

கனகச்சிதமாகத் தைக்கப்பட்ட அந்த கறுப்பு நிற மேல் அங்கியுடன், நீதிமன்ற தாழ்வாரத்தில் அவன் நடந்து வந்தபோது,அவனது முகத்தில் உள்ள உணர்வுகள் நிர்மூலமாகியிருந்தது.

உணர்ச்சிகளுக்கு அவனது அகராதியில் இடமற்றுப் போய் பல வருடங்களாகியிருந்தது.

கையிலிருந்த வழக்கின் கோப்பை மூடியபடி, தன் இளநிலை வழக்கறிஞரான காவ்யாவிடம் நீட்டினான்.

“கேஸ் க்ளோஸ்டு…ரெண்டு பக்கமும் செட்டில்மெண்ட் காப்பியை அனுப்பிடு காவ்யா” என ஆழ்ந்த குரலில் கூறியவனிற்குள் தீராத மன அழுத்தம்!

ஆயினும்,அவனது குரலில் அவை துளியும் வெளிப்படவில்லை.

அந்த நீதிமன்றத்திற்குள் நுழைந்துவிட்டாலே அவனது சொந்த உணர்வுகள் அனைத்தையும் வெளியில் கழட்டி வைத்துவிட்டு வந்துவிடுவான்.

அதனால் அவனது முகத்தில் எந்த வித உணர்வுகளும் வெளிப்படை வில்லை.

உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு இருந்தது.

அவனிற்கு கீழ் வேலை பார்க்கக்கூடிய பெண் தான் ‘காவ்யா’.

தனது உயர் அதிகாரியின் பேச்சை கேட்டு “சரிங்க சார்” என பெருமூச்சுடன் தலையாட்டினாள்.

ஒவ்வொரு முறை விவகாரத்து நடக்கும் போதும் அவளின் இதயம் கனத்துப் போகும்..

ஆனால் இது தான் அவர்களது பணியென்றான பின்பு அதையும் கடந்து தான் செல்ல வேண்டும் என்று பழகிக்கொண்டாள்.

இருப்பினும்,ஒரு சில நேரங்களில் அவர்களது இந்த கொடூர செயல் அவளிற்குள் தீராத காயத்தை உண்டாக்கும்.

இன்றும் அப்படியொரு நாளாக அமைந்தது அவர்களுக்கு!

ஏனெனில்,அங்கே இருந்த சிமெண்ட் திண்டில் அமர்ந்திருந்த அந்த ஏழு வயது சிறுவன் இடைவிடாது அழுதுக்கொண்டே இருந்தான்.

இன்று விவகாரத்து பெற்ற தம்பதியனரின் குழந்தை தான் அவன்!

“எனக்கு அம்மாவும் வேணும், அப்பாவும் வேணும்…பிளீஸ்…அம்மா அப்பா எனக்கு நீங்க வேணும்” என இருவரின் கையையும் பற்றி கதறி அழுதுக்கொண்டிருக்க,

அந்த மழலையின் அழுகுரல் அந்த தாழ்வாரம் எங்கும் எதிரொலித்து, கேட்பவர் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியது.

அவனின் தாய் அமைதியாகக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, தந்தையோ எரிச்சலாக சுவரை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் அந்த குழந்தையின் கதறலுக்கு துளியும் செவிசாய்க்கும் மனநிலையில் இல்லை போலும்!

ஆனால் அந்த சிறாரின் அழுகை சேரன் செங்குட்டுவனின் இதயத்தில் சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது.

அவன் தன் நடையை ஒரு கணம் நிறுத்தி அந்த குழந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

அதனுடைய கண்ணீர் அவனை வாட்டி வதைத்திட,அவனது முகத்தில் ஒரு தீராத சோர்வும் வெறுமையும் கடந்துப்போனது.

பெற்றோர்களின் பிரிவில் முதலில் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள் தான்!

அதனால் குழந்தைகள் என்றால் அவனுள் ஒரு சிறு இளக்கம் ஏற்படும்.

குழந்தையின் தற்போதைய மனநிலையைப் பற்றி சிந்திக்கும் போது அவனிற்குள் வருத்தம் முகிழ்ந்தது.

ஆனால் அவையெல்லாம் ஒரே ஒரு கணம் மட்டும் தான்!

சடுதியில்,அவனிற்குள் ‘கிங் ஆஃப் டிவோர்ஸ்’ என்னும் ஆன்மா புகுந்ததும் தலையை உலுக்கிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் அவர்களை கடந்து செல்ல ஆரம்பித்தான்.

ஏனெனில்,இதற்கு மேல் அங்கு அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற மனோபாவம் அவனுள்!

அச்சமயம் “சார்…சார்…” என அழைத்துக் கொண்டே அவனது உதவியாளினி காவ்யா ஓடி வந்தாள்.

அவனருகே வந்து அவள் மூச்சிறைக்க நிற்க,அவனோ அவளை ‘என்ன?’ என ஆழ்ந்து நோக்கினான்.

“சார் முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன்…மறந்திட்டேன்…உங்க அம்மா காலையிலிருந்து இத்தோட பதினைஞ்சு முறை கால் பண்ணிட்டாங்க சார்…” என தட்டுத்தடுமாறி கூறியதும்,ஆடவனவன் அவளை தீர்க்கமாக பார்த்தான்.

“சார் இந்த முறை நீங்க ஒத்துக்கலைனா அம்மா உண்ணாவிரதம் இருக்கப்போறாங்களாம்” என அவனது தாய் கூறிய விபரத்தை அவளிடம் தெரிவித்தாள்.

அதைக்கேட்டு “ப்ச்” என நெற்றியை நீவிய ஆடவன் “என் நிம்மதியை குலைக்கவே இது மாதிரி செய்யறாங்க” என்றான் ஒரு வித கடுப்புடன்…

“சார்…” என அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க,

வெடுக்கென்று அவளின் புறம் திரும்பி “ஐ நோ நீ எதுவும் சொல்ல வேணாம்” என கண்டிப்புடன் கூறி முன்னால் திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

அவனுடன் இணைந்து நடந்தவள் “உங்களுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வைச்சிடணும்னு ரொம்பவே அம்மா போரடறாங்க சார்…கொஞ்சம் நீங்களும் உங்க முடிவை மறுபரிசீலனை செய்யலாமில்லை” என மெதுவாக சொல்லிப் பார்க்க,

சட்டென திரும்பி அவளை அழுத்தமாக ஏறிட்ட சேரன் “நீ தெரிஞ்சு தான் பேசறீயா காவ்யா?இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த குரூர சம்பவத்தை பார்த்த பிறகும் நான் கல்யாணத்துக்கு ஒத்துப்பேன்னு உனக்கு தோணுதா?” என தீட்சண்யக் குரலில் கேட்க,

“சார் உங்களோட எண்ணம் புரியுது…ஆனால் எல்லாரும் அப்படி இல்லையே…ஒற்றுமையா சந்தோஷமா வாழற தம்பதிகளும் இருக்காங்களே சார்” என அவனது முடிவை மாற்ற முயற்சிக்க,

“டைவர்ஸுக்காக கோர்ட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் எல்லா ஜோடியும் சொல்லற டையலாக் தான் இது…அவ்வளவு ஏன் உன் லைஃப்பிலே என்ன நடந்தது?நீ ஏன் டிவோர்ஸ் பண்ணே காவ்யா” என முகத்திலடித்தாற் போன்று அவன் கேட்டதும் அவளின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது.

இப்போது அவளை ஏளனமாக நோக்கிய சேரன் “இங்க பாரு காவ்யா…இதுக்கு தான் எதையும் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும்னு சொல்லறது…” என்றவன் சிகையை அழுந்தக்கோதி,

“இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்…எனக்கு இந்த கல்யாணத்து மேலே எல்லாம் விருப்பமில்லை காவ்யா…இதை நான் திரும்ப திரும்ப உன்கிட்ட சொல்லமுடியாது” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவளின் முகம் இன்னும் அதிகமாக வாடிவிட்டன.

அதில் சிறிது இரக்கமுற்றவன் ”சரி விடு…உன்கிட்ட இதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை…நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்…நீ போய் நாளைக்கு நடக்கப்போற டிவோர்ஸ் கேஸுக்கான கேஸ்கட் ரெடி பண்ணி வை…போ” என அவளிற்கான பணியை கொடுத்து அனுப்பிவிட்டான்.

காவ்யாவும் அதன்பிறகு அவனிடம் எவ்வித மறுப்பும் கூறவில்லை.

ஏனெனில்,அவளிற்கும் சமீபத்தில் தான் விவாகரத்து நடந்து முடிந்தது.அதை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தவனும் சேரன் செங்குட்டுவனே?

ஆணாதிக்க மனோ நிலையில் அவளை அடக்கி வீட்டிற்குள் அடக்கி வைத்து கொடுமை செய்த அரக்கனிடமிருந்து அவளை காப்பாற்றி விடுதலை வாங்கிக்கொடுத்த ரட்சகனே அவன் தான்!

இத்தனைக்கும் அவள் காதலித்து மணந்தவன் அவன்.

அவளிற்கு அதுவே தீராத மனக்காயங்களை ஏற்படுத்தி இருந்தது.

கணவனிடமிருந்து விடுதலை மட்டுமின்றி அவளை தனக்கு கீழ் ஒரு பணியில் அமர்த்தி அவளிற்கென சமுதாயத்தில் ஒரு தகுதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தவனும் அவனே!

அதனால் அவனது முடிவில் நியாயமான காரணங்கள் இருந்தது.

அவளும் அதை ஆமோதிக்க வேண்டியதாக இருந்தது.

தன் வீட்டிற்கு வாகனத்தில் பயணமாகிக்கொண்டிருந்தவனின் மனமும் திருமணத்தை வெறுப்பதற்கான காரணங்களை பற்றி சிந்தித்தது.

நூற்றுக்கணக்கான உடைந்த திருமணங்களையும், தவிடுப்பொடியான காதலின் வாக்குறுதிகளையும், துரோகங்களையும், குழந்தை உரிமைக்கான சண்டைகளையும், குடும்ப வன்முறைகளையும் கையாண்டு கையாண்டு…

அவனிற்குள் ‘திருமணம்’ என்ற அமைப்பின் மீதிருந்த நம்பிக்கையே மடிந்துப்போயிருந்தது.

அவனது அகராதியில்,

காதல் என்றால் தற்காலிகமான ஒரு ரசாயன மாற்றம்.

காதல் வாக்குறுதிகள் என்றால் எளிதில் உடையக்கூடிய கண்ணாடி.

திருமணம் என்றால் ஒரு மாபெரும் யுத்தத்திற்கான தொடக்கம்.

அந்த யுத்தம் முடிவடையும் இடம் அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு நீதிமன்றம்.

இவை தான் அவனது எண்ணப்போக்கு.

அதை உறுதியாக நம்பவும் செய்தான்.

மாலை பொழுது சாயும் வேளையில் வீட்டிற்குள் நுழைந்தான் சேரன்.

சேரன் செங்குட்டுவனின் இல்லம் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேலான வர்க்கத்தை சார்ந்தது.

ஆனால் வீட்டிலுள்ள அனைவரும் படித்து பட்டம் பெற்ற கல்வி பட்டதாரிகளாக இருந்தார்கள்.

அவனது தாயும் தந்தையும் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

அவனது தந்தை குசேலன் ஓய்வுப்பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்.

அவனது தாய் மீனாட்சி வங்கி மேலதிகாரியாக இருந்து பணி ஓய்வுப்பெற்றவர்.

அவனது தமையன் பாரி வேந்தன் தற்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறான்.

பாரி வேந்தனின் மனைவி வாசந்தி இப்போது ஒரு பள்ளியில் சமூகவியல் ஆசிரியராக பணியாற்றுக்கொண்டிருக்கிறாள்.

அவர்களது ஒரே மகளான சாம்பவி வெளியூர் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி பத்தாம் வகுப்பு பயல்கிறாள்.

பாரிவேந்தனிற்கு அடுத்ததாக பிறந்த இரண்டாவது தவப்புதல்வன் தான் சேரன் செங்குட்டுவன்.

சேரனிற்கு பின்பு பிறந்தவள் குந்தவை.

அவளிற்கு பக்கத்து தெருவில் வாசிக்கும் ரகுபதியுடன் திருமணமாகியிருந்தது.

அவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்தும் குழந்தைப்பேறு இல்லை.

அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அவர்களுக்கு கவலையில்லை.

குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும் என்ற ஆரோக்கியமான மனநிலையில் இருந்தார்கள்.

இரு குடும்பத்து பெரியவர்களுக்கும் அவர்களின் இந்த மெத்தனம் கடுப்பை வரவழைத்தாலும் ரகுபதியை மீறி எதையும் கேட்டுவிட முடியாது.

ஏனெனில்,மனைவியை கைக்குள் வைத்து தாங்குவான் ரகுபதி.

மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறான்.

அவனை போலவே அவனது மனையாளான குந்தவையும் வேறொரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுக் கொண்டிருக்கிறாள்.

ரகுபதி சேரனை விட ஒரு வயது மட்டுமே பெரியவன்.அதனால் இருவருக்கும் இடையே ஒரு நட்பு இழையோடின.

அவனிற்கும் தனது தங்கையின் கணவனான ரகுபதி மீதி அலாதி மரியாதை இருந்தது.

அதனால் அவனது தாய் இரண்டாவது மகனின் விஷயத்தில் ஏதேனும் பஞ்சாயித்து என்றால் ரகுபதியை மத்தியஸ்தம் செய்ய அழைத்து விடுவார்.

இன்றும் மீனாட்சி அவனை அழைத்திருந்தார் போலும்!

“ரகு நீயே சொல்லுப்பா…இவனை பத்து மாசம் சுமந்து பெத்தது கல்யாணம் பண்ணாமல் இவன் மொட்டைப்பயலா இருக்கிறதை பார்க்கிறதுக்கா?இப்போவே இவனுக்கு வயசு முப்பத்தைஞ்சு ஆகுது…இன்னும் வயசு கூடினால் எவன் பொண்ணு தருவான்?” என தனது மருமகனிடம் நியாயம் கேட்டு புலம்பிக்கொண்டிருக்க,

அவனோ ‘அட அத்தை…அதை ஏன் என்கிட்ட கேட்கறீங்க?உங்க பையன் கிட்ட கேட்க வேண்டியது தானே?’ என மனதிற்குள் குமுறிக் கொண்டு அங்கு அமர்ந்திருந்தான்.

அவரோ தனது மனக்குமுறலை எல்லாம் கொட்டிக்கொண்டே இருக்க ‘ஷப்பா இதெல்லாம் எப்போ முடியும்’ என்ற பாவனை அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

ஏனெனில்,சேரனிடம் அவனும் பலமுறை பேசிப் பார்த்துவிட்டான்.

“டேய் நானெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு மூணு வருஷமா சந்தோஷமா தானே இருக்கேன்…அதே மாதிரி உனக்கும் சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்டா…நம்பி கல்யாணம் பண்ணு” என அறிவுரை சொல்லிப் பார்க்க,

அவனோ “இன்னைக்கு நல்லாயிருக்கீங்க சரி…இன்னும் இரண்டு வருஷம் கழிச்சும் இதே மாதிரி இருப்பீங்கனு உங்களால் உறுதியா சொல்லமுடியுமா?” என்று நக்கலாக கேட்டு புருவம் உயர்த்த,

அதைக்கேட்டு பதறிப்போன ரகுபதி “டேய்‌ விட்டால் நீயே எனக்கும் உன் தங்கச்சிக்கும் டிவோர்ஸ் வாங்கி கொடுத்திடுவே போலிருக்கு…உன்கிட்ட இதை பத்தி பேச வந்தேன் பார்த்தியா எனக்கு இதுவும் வேணும்…இன்னமும் வேணும்” என தலையிலடித்துக்கொண்டான்.

அவனோ “யார் கண்டால் பின்னாடி உங்க இரண்டு பேருக்கும் நானே டிவோர்ஸ் வாங்கி கொடுத்தாலும் ஆச்சரியப்படமுடியாது” என்றான் அலட்சியமாய் தோளை குலுக்கி…

அதில் வெகுண்ட ரகுபதியோ “அட சண்டாளப்பாவி நீ கல்யாணம் பண்ணு பண்ணாமல் போ…தயவுசெய்து என் வாழ்க்கையிலே கும்மியடிச்சிடாதேடா…ஆளை விடு சாமி” என கையெடுத்து கும்பிட்டு ஓடியே விட்டான்.

அவன் ஓடியதை கண்டு அவனிற்குள் இளக்காரமாய் புன்னகைத்துக் கொண்டான் சேரன்.

அதன்பிறகு பலமுறை ரகுபதி பேசிப்பார்த்தும்,அவன் எடுத்த முடிவில் உறுதியாக நிற்க,ரகுபதியாலும்

வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அவன் மட்டுமின்றி அவனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பல விதமாக அவனிடம் பேசிப்பார்த்தும் அவன் முடிவு மாறவில்லை.

ஆனால் அவனது முடிவை மாற்றக்கூடிய மையூறும் விழிக்காரி அவனிற்காக காத்திருப்பதை அவன் அக்கணம் அறியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!