ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 19
அத்தியாயம் – 19
இரண்டு நாட்கள் கடந்திருந்தன, நாட்களைக் கடத்தாமல் மிருதுளாவிடம் பேசிச் சீக்கிரமே கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார் சுந்தரம், அவர் இவ்வளவு அவசரப்படுவதற்கு முக்கிய காரணம் ரன்வீர் தான், தன் மகன் மூலம் ரன்வீரும் மிருதுளாவும் காதலித்த விஷயத்தை அறிந்தவர், எங்கே ரன்வீர் மீண்டும் வந்து மிருதுளாவின் மனதை மாற்றி அவளை அழைத்துச் சென்றுவிடுவானோ என்ற பயம் அவருக்கு..
அதனால்தான் அன்றைய இரவு சாப்பாட்டிற்குப் பின், மெல்ல அறைக்குச் செல்லவிருந்த மிருதுளாவை நிறுத்தி… “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா,” என்று கனிவான குரலில் அவர் சொல்ல,.. அவளும் “சொல்லுங்க மாமா” என்றபடி அவர் அருகில் அமர்ந்தாள்…
Advertisement
சுந்தரம் முகத்தில் ஒரு செயற்கையான கவலையை வரவழைத்துக்கொண்டு… “மிருதுளா உன் தாத்தா போனதுல இருந்து நீ ரொம்ப உடைஞ்சு போயிருக்கன்னு எனக்குத் தெரியும், ஆனா, உன் எதிர்காலத்தைப் பத்தி நான் யோசிச்சு ஆகணும்ல? என் அப்பா உயிரோட இருந்தப்பவே ஒரு விஷயம் அடிக்கடி சொல்லுவார்… உன்னை இந்த வீட்டு மருமகளாப் பார்க்கணும், அவனை உன் பையனுக்கே கட்டி வச்சிடலாமானு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு” அவர் சொன்ன அந்த விஷயத்தை கேட்டதும் மிருதுளா மௌனமாகவே இருந்தாள், தன் தாத்தாவிற்கு அப்படியொரு ஆசை இருந்தது அவளுக்கும் தெரியும் தானே!
“அப்போ நான் அந்த விஷயத்துக்கு பெருசா உடன்படல, ஆனா இப்போ நீ யாரும் இல்லாம தனியா நிற்கிறத பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, விஷ்வாவுக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும், உன்னை ஒரு அந்நியன் கையில ஒப்படைக்கவும் எனக்கு இஷ்டம் இல்லை, அப்பாக்கு அப்புறம் உன்னை என் பொறுப்புல வச்சிக்க நான் விரும்புறேன், நீயும் விஷ்வாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் தாத்தாவோட ஆத்மாவும் சாந்தியடையும், எங்களுக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும்,” என்று பாச நாடகத்தை அரங்கேற்றிட,அருகிலேயே நின்று கொண்டிருந்த விஷ்வா,.. “உன்கிட்ட நான் இதுக்கு முன்னாடி ஏதாவது தப்பா பேசி இருந்தா என்னை மன்னிச்சிடு மிருதுளா, உன் மேல இருந்த அதிகப்படியான ஆசையில தான் அப்படியெல்லாம் நடந்துகிட்டேன், நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், என் பாசத்தை காட்ட தெரியாம தான் பைத்தியக்காரன் மாதிரி எப்படியெல்லாமோ பேசி இருக்கேன், ஐம் ஸாரி” என்று நல்லவன் போல் மன்னிப்பு கேட்க,.. “உன் மேல எனக்கு இப்போ எந்த கோபமும் இல்ல விஷ்வா” என்றவள்,.. சுந்தரத்தை நோக்கி,..
”மாமா… இப்போ இதெல்லாம் தேவையா?” என்று மெல்லிய குரலில் கேட்க, “இதுதான் சரியான நேரம்மா, நீயும் விஷ்வாவும் ஒன்னா இருந்தா எல்லாமே சரியாயிடும், அப்பாவும் இதை தான் ஆசை பட்டாரு, இப்போ என்னோட ஆசையும் இது தான், என் தங்கச்சி மகளை என் கூடவே வச்சிக்கனும்னு ரொம்ப விருப்ப படுறேன் ” என்று சுந்தரம் அவளது கைகளைப் பற்றிக்கொண்டார்…
சரஸ்வதி தூரத்தில் நின்று இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார், தன் கணவன் எவ்வளவு அழகாக நாடகமாடி அந்தப் பெண்ணின் வாழ்க்கையை சிதைக்கப் பார்க்கிறார் என்பதை நினைக்கையில் அவருக்கு நெஞ்சே வெடிப்பது போல இருந்தது, ஆனால், சுந்தரத்தின் அதிகாரத்திற்கு முன்னால் அவரால் வாய் திறக்க முடியாதே…
Advertisement
”என்னம்மா யோசிக்கிற? மாமா உனக்கு எப்பவும் நல்லது தான் நினைப்பேன். விஷ்வாவும் உன்னை நல்லா பார்த்துப்பான்,” என்று சுந்தரம் இன்னும் மென்மையாகப் பேசி, அவளது மௌனத்தைச் சாதகமாக்கிக் கொண்டார்.
Advertisement
அந்தக் கணம் மிருதுளாவின் நினைவில் ரன்வீர் தான் வந்து போனான். அவனை அவள் எவ்வளவு ஆழமாக நேசித்தாள்! அவனுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று எத்தனை கனவுகளைக் கண்டிருந்தாள்! ஆனால் அவனோ, தனது சுயநலத்திற்காகத் தன் தாத்தாவையே கொன்றுவிட்டானே என்று எண்ணியபோது அவள் நெஞ்சம் தவித்துப் போனது. ரன்வீர் செய்த அந்த துரோகம் அவளுக்கு ஆறாத வடுவாக மாறியிருந்தது.
அவனைத் தன் வாழ்க்கையில் இனி ஒருபோதும் நுழைய விடக்கூடாது என்பதற்காகவும், தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, கண்கள் கலங்க மாமாவைப் பார்த்தவள், தீர்க்கமான குரலில், “எனக்கு சம்மதம் மாமா,” என்று கூறினாள்.
அவள் சொன்ன அந்த ஒரு வார்த்தை, சுந்தரம் மற்றும் விஷ்வாவின் பேராசை திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியது போல அமைந்தது. தன் வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை, தவறான மனிதர்களை நம்பி அவள் எடுத்துவிட்டாள் என்பதை அறியாமலேயே அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
Advertisement
மிருதுளாவின் சம்மதம் கிடைத்த அடுத்த கணமே, திருமண வேலைகளை புயல் வேகத்தில் ஆரம்பித்துவிட்டார் சுந்தரம். விஷ்வாவோ அளவற்ற குதூகலத்துடன் வீட்டைச் சுற்றி வலம் வந்தவன்.. ‘எனக்குப் பிடித்த பொண்ணோடு சேர்த்து, அவளோட கோடிக்கணக்கான சொத்துக்களும் எனக்கே வரப்போகுது! என்னை எப்படியெல்லாம் இவ இன்சல்ட் பண்ணிப் பேசினா? கல்யாணத்துக்குப் பிறகு உன்னை என்னவெல்லாம் பண்ணுறேன் பாருடி!’ என்று மனதிற்குள் வஞ்சகமாகக் கணக்குப் போட்டுக்கொண்டான்.
ஆனால் மிருதுளாவிற்குள் ஒருவிதமான கலக்கம் மெல்ல ஆரம்பமானது, தாத்தா இந்த உலகத்தை விட்டுப் போய் ஒரு மாதம் கூட இன்னும் நிறைவடையவில்லை, அதற்குள் இப்படி ஒரு கோலாகலத் திருமணமா என்று அவளுக்கு உறுத்த ஆரம்பித்தது, அனைத்தும் அவசரமாக ஏற்பாடு செய்யப்படுவது போன்ற ஒரு நெருடல் அவளுக்குள் எழத் தொடங்கியது…
திருமணத்திற்கு ஏதோ ஒரு வேகத்தில் சம்மதம் கூறிவிட்டாலும், மனதிற்குள் எழுந்த அந்த உறுத்தல் அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை, ரன்வீருடன் இருந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் வந்து இம்சித்தது,..
அன்று பொறுக்க முடியாமல் சுந்தரத்திடம் சென்று முடிந்த மட்டும் இந்த திருமணத்தை தள்ளியாவது போடலாமே என்ற நோக்கில்.. ”ஏன் மாமா இவ்வளவு அவசரமாகக் கல்யாண ஏற்பாடு பண்ணுறீங்க? இன்னும் கொஞ்ச மாதங்கள் போகட்டுமே… தாத்தா நம்மளை விட்டுப் போய் ஒரு மாசம் கூட இன்னும் முடியலையே!” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
சுந்தரம் இதையும் சமாளிக்கத் தயாராகவே இருந்தார். “மிரும்மா, நீ சொல்றது எனக்குப் புரியுது, ஆனா அந்த ரன்வீர் பத்தி உனக்குத் தெரியும்ல? அவன் எந்த நேரமும் எதையாவது பண்ணக் காத்துக்கிட்டு இருக்கான், அவன் மேல கொடுத்த போலீஸ் கேஸை விட்டு கூட ஈஸியா வெளிவந்துட்டான்” என்று கொடுக்காத கேஸை பற்றி பொய் கூறியவர்… “நீ விஷ்வாவுக்கு பொண்டாட்டியா ஆகிட்டா அப்புறம் உனக்கும் ஒரு பாதுகாப்பு கிடைச்ச மாதிரி இருக்கும், உன் தாத்தாவும் இதைத்தான் விரும்புவாரு, சீக்கிரம் ஒரு சுபகாரியம் நடந்தாத்தான் இந்த வீடும் பழைய நிலைமைக்கு வரும்,” என்று மீண்டும் பாச முகமூடி அணிந்து அவளை மூளைச்சலவை செய்யத் தொடங்கினார்…
மிருதுளா அதற்கு மேலும் பேச முடியாமல் மௌனமானாள், ஆனால், அவளது உள்மனம் ஏதோ ஒரு பேராபத்து நெருங்குவதைப் போலத் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருந்தது…
நாட்கள் விறுவிறுவென்று ஓடி, திருமண நாளும் வந்துவிட்டது. கடந்த ஒரு மாதம் எப்படி இவ்வளவு வேகமாக ஓடியது என்பதே மிருதுளாவிற்குப் புரியவில்லை, திருமண மண்டபத்தின் மணப்பெண் அறையில், பளபளக்கும் பட்டுப்புடவையும் நகைகளும் அணிந்து மணக்கோலத்தில் கண்ணாடியின் முன்பு அமர்ந்திருந்தாள். ஆனால், அவள் முகத்தில் கல்யாணக் கலைக்கு பதில் ஒருவிதமான சூனியமே படிந்திருந்தது…
தன் ஒரே மகனின் திருமணம் என்பதால், சுந்தரம் எதிலுமே குறை வைக்கவில்லை, முக்கியமான உறவினர்கள், வி.ஐ.பி-க்கள் என அனைவரையும் அழைத்து, தான் குறித்த நாளில் பிரம்மாண்டமாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார்…
சரஸ்வதிக்குத்தான் மனமே கேட்கவில்லை, தன் கணவன் மற்றும் மகனின் சுயரூபம் தெரிந்திருந்தும், ஒரு பெண்ணாகப் பிறந்துவிட்டு இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி அவரை வாட்டியது, பலமுறை மிருதுளாவிடம் உண்மையை சொல்ல நினைத்தாலும், சுந்தரத்தின் மிரட்டலுக்கும் அதிகாரத்திற்கும் பயந்து வாய்மூடி மௌனியாகவே இருந்து விட்டார்…
கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவின் நினைவுகள் மீண்டும் மீண்டும் ரன்வீரை நோக்கியே சென்றன. ‘ஏன் அவன் அப்படிச் செய்தான்?’ என்ற கேள்வியும், ‘இனி அவன் இல்லை’ என்ற வலியும் அவளைத் துளைத்தது..
சரியாக அந்த நேரத்தில், “முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு, பொண்ணை அழைச்சிட்டு வர சொன்னாங்க” என்றவாறு மூன்று பெண்கள் அறைக்குள் நுழைந்தனர், சரஸ்வதியும் அங்கேயே தான் இருந்தார், அவரது உள்ளம் ‘வேண்டாம்’ என்று கதறினாலும், அதைத் தடுத்து நிறுத்தும் திராணி அவரிடம் இருக்கவில்லை, ஒரு கையறு நிலையில், கண்ணீரை மறைத்துக்கொண்டு மிருதுளாவையே பார்த்துக் கொண்டிருந்தார்…
மிருதுளாவிற்கோ உடல் முழுவதும் ஒருவித நடுக்கம் பரவியது, கால்கள் நிலைகொள்ளாமல் தடுமாறின, அந்தப் பெண்கள் அவளை அழைத்துச் செல்ல, அவள் ஒரு இயந்திரத்தைப் போலவே வேறு வழியின்றி அவர்களுடன் நடந்தாள், திருமண மேடையில் பட்டு வேஷ்டி சட்டையில், மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்தான் விஷ்வா, அவனது கண்களில் ஒருவித குரூரமான ஆசை மின்னியது…
இன்னும் கொஞ்ச நேரத்தில் கழுத்தில் தாலி ஏறப்போகிறது… தான் இனி அவனுக்குச் சொந்தமாகப் போகிறோம் என்று நினைத்துப் பார்க்கவே அவளுக்குக் கசப்பாகவும், குமட்டலாகவும் இருந்தது, ரன்வீருடன் தான் கண்ட கனவுகள் அனைத்தும் சிதைந்து, இன்று அவனையே வெறுத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவனின் அருகில் அமர வேண்டிய கட்டாயம்…
இப்போது அவளுக்கு ஆதரவாக இருப்பது அவளது மாமா குடும்பம் மட்டுமே என்ற ஒரே ஒரு எண்ணம் தான் அவளை அங்கு அமர வைத்திருந்தது. ‘தாத்தாவின் ஆசை இதுதான்… எனக்கு ஆதரவாக இருப்பதும் இந்த குடும்பம் தான், வேறு வழியில்லை’ என்று மனதிற்குள் ஆயிரம் முறை சொல்லிக்கொண்டு, தலைகுனிந்து மணமேடையில் அமர்ந்தாள் மிருதுளா…
புரோகிதர் மந்திரங்களை ஓதத் தொடங்கிட, ஆசீர்வாதம் வாங்கச் சென்றிருந்த மாங்கல்யமும் வந்து சேர்ந்தது, அதனைத் கையில் எடுத்த புரோகிதர், “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்று கூற, மேளச் சத்தம் மண்டபத்தையே அதிரச் செய்தது. விஷ்வா மிகுந்த கர்வத்தோடும் வெற்றியோடும் தாலியை ஏந்த, மிருதுளா அனைத்தும் முடிந்துவிட்டது என்ற விரக்தியில் கண்களை இறுக மூடிக்கொண்டாள், அந்த வினாடி அவளது நினைவில் ரன்வீரின் முகம் மட்டும் மின்னலாய் வந்து மறைந்தது…
தாலி அவள் கழுத்தை நெருங்கிய அந்த மிகச்சரியான நொடியில், “நிறுத்து!” என்ற கர்ஜனை போன்ற குரல் அந்த மண்டபம் முழுவதையும் நிறைத்தது…
