Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் – 22

அத்தியாயம் – 22

 

ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும், ரன்வீர் வேகமாகக் கடந்து சென்ற அந்த வழியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவின் நினைவலைகள் மெல்லப் பின்னோக்கிச் சென்று, தன் தாத்தாவின் அந்த கடைசி நிமிடங்களில் வந்து நின்றன…

அவள் கண்களால் பார்த்த வரையில், ரன்வீர் தான் தன் தாத்தாவைக் கொலை செய்தான் என்பதற்கான அத்தனை சாட்சிகளும் அவனுக்கு எதிராகவே இருந்தன, அவன் ஏதோ ஒரு ரகசியக் கோப்புக்காக தான் தன் தாத்தாவைக் கொன்றுவிட்டான் என்று இப்போதும் அவளது மனம் ஆணித்தரமாக நம்பியது…



Advertisement

​மறுபுறம் விஷ்வா… அவன் ஏன் தாத்தாவைக் கொல்லப் போகிறான்? விஷ்வா எவ்வளவு பணம் கேட்டாலும் தாத்தா தட்டாமல் கொடுப்பார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும், அப்படி இருக்கையில், அவன் தன் சொந்தத் தாத்தாவையே கொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவள் பார்த்த அத்தனை காட்சிகளும், சூழ்நிலைகளும் ரன்வீரைத் தான் குற்றவாளி என்று கை காட்டின, பிறகு எப்படி அவளால் அவனை நம்ப முடியும்? அவன் நாடகமாடுகிறான் என்று ஆத்திரம் தான் வந்தது அவன் மீது…

​அவள் குழப்பத்திலும், ஆத்திரத்திலும் ஆழ்ந்திருந்த அந்த நேரத்தில், அறையின் கதவு மெல்லத் தட்டப்படும் சத்தத்துடன் ஒரு பெண் பணிவாக உள்ளே நுழைந்து… ​”சார் இதை உங்களுக்குக் கொடுக்க சொன்னாரும்மா…” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு, அங்கிருந்த டீபாயில் ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய ஜூஸை வைத்துவிட்டு… “ரொம்ப ரிக்வஸ்ட் பண்ணி குடிக்க சொன்னதா சொல்ல சொன்னாரும்மா” என்று சொல்ல, மிருதுளாவிற்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ரன்வீரின் அந்த அதிகாரத்திற்குப் பின்னால் இருந்த ஒரு மெல்லிய தயக்கம் அவளை ஏதோ செய்தது…

​வந்த அந்தப் பெண் அதோடு செல்லாமல், தரையில் நொறுங்கிக் கிடந்த பீங்கான் துண்டுகளையும், சிதறியிருந்த ஜூஸையும் சத்தமில்லாமல் சுத்தம் செய்துவிட்டு வெளியேறிட, அறை மீண்டும் நிசப்தமானது, அந்த ஜூஸ் டம்ளரையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, என்ன நினைத்தாளோ தெரியவில்லை மெல்ல அதனை எடுத்து பருகத் தொடங்கினாள்…

Advertisement

​மிதமான இனிப்பும், குளிர்ச்சியும் கலந்த அந்த ஜூஸ் தொண்டையை நனைத்த அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் அவளது உடலில் ஒரு புது தெம்பு வந்தது போல இருந்தது, பசியும் சோர்வும் அவளை இவ்வளவு நேரம் வாட்டியிருப்பது அப்போதுதான் அவளுக்கு உரைத்தது…

Advertisement

​சற்று நிதானமடைந்தவள், இப்போது அந்த அறையை மெல்ல நோட்டமிட்டாள், அது ஒரு சாதாரண அறையைப் போலத் தெரியவில்லை, ஒரு குட்டி அரண்மனை போல பிரம்மாண்டமாக இருந்தது, தேக்கு மர வேலைப்பாடுகள் கொண்ட பீரோக்கள், கலைநயம் மிக்க ஓவியங்கள், மென்மையான தரை விரிப்புகள் என ஒவ்வொரு பொருளும் ரன்வீரின் வசதியையும் அவனது ரசனையையும் பறைசாற்றின…

​ஆனால், இவ்வளவு வசதிகளுக்கு நடுவிலும் அந்த அறை அவளுக்கு ஒரு தங்கக் கூண்டாகவே தோன்றியது, மெல்ல அங்கிருந்த பெரிய கதவைத் திறக்க, குளிர்ந்த காற்று சீறிக்கொண்டு வந்து அவள் முகத்தில் வீசி, அவளது கலைந்த கூந்தலை வருடிட, மெல்ல வெளியே அடியெடுத்து வைத்தாள். அது ஒரு விசாலமான பால்கனியாக இருந்தது, அதன் ஒரு ஓரத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஊஞ்சல் மெல்ல ஆடிக்கொண்டிருந்தது…

​அந்தப் பால்கனியைப் பார்வையால் ஒரு சுற்றுச் சுற்றியவள், தடுப்புக் கம்பிகளின் அருகில் வந்து கீழே குனிந்து பார்க்க, அந்த வீட்டின் பிரம்மாண்டம் அவளை மலைக்க வைத்தது, கீழே விரிந்து கிடந்த அந்தப் பரந்த தோட்டப் பகுதி, வானம் இருட்டி இருந்தாலும் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளின் ஒளியில் ஒரு ஓவியம் போலக் காட்சியளித்தது…

Advertisement

​மிருதுளாவிற்குச் செடி கொடிகள் நிறைந்த தோட்டம் என்றால் உயிர் அல்லவா! எவ்வளவுதான் ரன்வீர் மீது கோபம் இருந்தாலும், அந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்காமல் இருக்க அவளால் முடியவில்லை, விதவிதமான பூச்செடிகளும், நந்தவனமும் அந்த இரவிலும் ஒரு தனி அழகைத் தந்தன…

அவ்விடத்தை அளந்தவள், அந்தப் பிரம்மாண்ட காம்பவுண்டைச் சுற்றி இருந்த இடங்களையும் பார்வையைச் சுழற்றிப் பார்த்தபடி வெகுநேரம் அங்கு தான் நின்றாள், நேரம் போவதே தெரியாமல் நின்றாள்,..

எத்தனை நேரங்கள் கடந்ததோ அது அவளுக்கே வெளிச்சம், குளிர்ந்த காற்றின் தாலாட்டில் தன் துயரங்களை மறக்க முயன்று தோற்றுப்போய் அங்கேயே நின்றிருந்தவள், அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்ட பின்னர் தான், சுயநினைவு வந்து அறைக்குள் சென்றாள்…

​மீண்டும் அதே பெண் தான் வந்திருந்தாள், இந்த முறை அவளுக்காக தட்டில் இரவு உணவைக் கொண்டு வந்திருந்தவள்.. ​”சாப்டுடுங்கமா…” என்று பணிவாகச் சொல்லிவிட்டு அங்கே சாப்பாட்டை வைத்துவிட்டு வெளியேறிவிட, ஒரு பெருமூச்சுடன் வந்து படுக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு அந்த கணம், தான் அணிந்திருந்த கனமான பட்டுப்புடவை அவளுக்குப் பெரும் அசௌகரியத்தைக் கொடுத்தது…

​திருமணத்திற்காக அவள் அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகள் இப்போது அவளது உடலில் இல்லை, சட்டென்று கவனித்தபோது தான் அவை அனைத்தும் நேர்த்தியாக அங்கிருந்த ஒரு டேபிளின் மீது வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது, அவள் மயக்கத்தில் இருந்தபோது ரன்வீர் தான் இவற்றைச் செய்திருக்க வேண்டும் என்பது புரியவே, மீண்டும் அவளிடம் பெருமூச்சு..

​உடையை மாற்றிக் கொண்டால் தான் நிம்மதியாக இருக்கும் என்று தோன்ற, அங்கிருந்த ஒரு பெரிய அலமாரியைத் திறந்தாள், திறந்தவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் விரிந்தன…

​அங்கே அவளுக்குத் தேவையான அனைத்து உடைகளும் வகை வகையாக அடுக்கப்பட்டிருந்தன, புடவை, சுடிதார், நைட்டி என அனைத்தும் புதியதாக, அவளது ரசனைக்கு ஏற்றார் போல இருக்க.. ‘எல்லாம் பிளான் பண்ணி பண்ணியிருக்கான் போல’ என்று முணுமுணுத்துக் கொண்டே, அதிலிருந்து இரவு உடை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.

​கோபம் வந்ததுதான், ஆனால் அவளுக்கு இதை விட்டால் வேறு வழியும் இருக்கவில்லை. உடை மாற்றிவிட்டு வந்தவள், வெகுநேரம் இன்று நடந்த களேபரங்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள், பசி வயிற்றைக் கிள்ளினாலும், சாப்பிடும் எண்ணம் கொஞ்சமும் வரவில்லை.

​அப்படியே அந்தப் படுக்கையில் சோர்வாக விழுந்தவளுக்கு, தன் தாத்தாவை எண்ணி கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது, தாய் தந்தைக்குப் பிறகு தனக்கு உற்ற துணையாகவும், உலகமாகவும் இருந்தவர், தான் மனதார விரும்பியவனின் கையாலேயே இறந்து போனதை நினைக்க நினைக்க ஆத்திரமும் கண்ணீரும் தான் வந்தது…

​”ஏன் ரன்வீர்? ஏன் இப்படி பண்ணின? உன்னை நிஜமா  காதலிச்சதுக்கு நீ எனக்கு  கொடுத்த தண்டனையா?” என்று வாய்விட்டுப் புலம்பி, வெகுநேரம் தேற்றுவோர் யாருமின்றித் தனிமையில் அழுது கொண்டிருந்தவள், அந்த அழுகையின் பாரத்திலேயே தன்னையும் அறியாமல் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்…

இங்கு ​மிருதுளாவிடம் பேசிவிட்டுத் தனது மாளிகைக்குள் நுழைந்த ரன்வீரின் முகம் இறுகிப் போய் இருந்தது, மிருதுளா தன்னை கொலைகாரனாகப் பார்க்கும் அந்தப் பார்வை அவனை மிகவும் ரணப்படுத்தியது…

ரன்வீரை இந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்காத நிதின், “என்ன ரன்வீர், இன்னைக்கும் இங்க வந்திருக்க?” என்று கேட்டபடியே அருகில் வந்தவன், அவனது நெற்றியில் இருந்த பேண்டேஜைக் கண்டதும் திடுக்கிட்டு, “என்னாச்சுடா? எப்படி காயமாச்சு?” என்று பதற்றத்துடன் வினவிட,..
​ரன்வீர் அவனது கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை,..

நேராகச் கிச்சனிற்கு சென்று ப்ரிட்ஜைத் திறந்து ஒரு மது பாட்டிலை எடுத்தவன், அதனை அப்படியே வாயில் வைத்து சரித்தான்…

இதை கண்ட நிதின்.. ​”டேய்… டேய்… என்னடா பண்ற? நிறுத்துடா!” என்று பதறிப்போய் பாட்டிலைப் பறிக்க முயல, அவனோ அவனைத் தடுத்துவிட்டு, இன்னும் ஒரு பாட்டிலையும் கையோடு எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் சரிந்து அமர்ந்து குடிக்கத் தொடங்கினான்…

​”இப்போ என்ன டென்ஷன் உனக்கு? மிருதுளா கூட ஏதாவது பிரச்சனையா?” என்று நிதின் நிதானமாகக் கேட்க, ரன்வீர் அவனை வலியுடன் நோக்கிவிட்டு..
​”பிரச்சனைன்னா பரவாயில்லை நிதின்… ஆனா அவ திரும்பத் திரும்ப என்னை கொலைகாரன்’னு சொல்றது தான் என் நெஞ்சையே அறுக்குதுடா!” என்று கூற, நண்பனின் வலி புரிந்தவன் அவன் தோளில் அழுத்தம் கொடுத்து,.. ​”எல்லாம் சரியாகும் ரன்வீர், அவ இப்போ இருக்கிற மனநிலையில யாரு என்ன சொன்னாலும் கேட்க மாட்டா, அவளுக்கு உண்மை தெரிஞ்ச அன்னைக்கு, உன்கிட்ட பேசுன ஒவ்வொரு வார்த்தையையும் நினைச்சு அவளே ரொம்ப வருத்தப்படுவா. விடு… எல்லாம் ஒரு நாள் மாறும்,” என்றான் நிதின்…

“என்னால முடியல நிதின், ரொம்ப பெயினா இருக்கு! என் மேல அவளுக்கு இருந்த காதல் அவ்வளவு சீக்கிரம் செத்துப் போயிடுச்சா? கண்ணு முன்னாடி பார்த்ததை மட்டும் தான் நம்புவாளா? அந்த விஷ்வா சொன்னதை நம்புறா? என் வார்த்தை மேல அவளுக்கு  கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா? இவ்வளவு தான் அவ என்னை நம்புறாளா?” என்று ஆதங்கமாகக் கேட்டான்… ​மதுவின் தாக்கமும், மனதின் பாரமும் சேர்ந்து அவனை இன்னும் நிலைகுலையச் செய்தது… “தான் நேசிக்கிற பொண்ணு, தன்னை ஒரு பர்சென்ட் கூட நம்பலைனா ஒருத்தனுக்கு எப்படி இருக்கும்? அவளுக்கு ஏன் அது புரியவே இல்லை? நான் அவளைக் காப்பாத்தத் தான் இவ்வளவு போராடுறேன்னு அவளுக்குத் தெரிய வேண்டாமா?” என்று விரக்தியுடன் வினவிட, ​நிதின் அவனைப் பார்த்து… “ரன்வீர், கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருடா… அவ அந்த சூழ்நிலையில எதைப் பார்த்தாளோ, அதைத்தான் நம்புறா. அவ தாத்தா மேல அவ வச்சிருக்கிற அதீத அன்பு இப்போ அவ கண்ணை மறைச்சிருக்கு, உண்மையை உணர விடாம தடுக்குது, நீ பொறுமையா இருந்தா மட்டும்தான் அவளை மீட்டெடுக்க முடியும், அதை விட்டுட்டு இப்படி குடிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை, வீணா உன் உடம்புதான் கெட்டுப் போகும்,” என்று நிதின் மிகுந்த கவலையுடன் நண்பனைத் தடுத்தான்…

​”போடா… உடம்பு கெட்டா என்ன, கெடாட்டி என்ன? வாழ்க்கையே வெறுத்துப் போன மாதிரி இருக்குடா, அவளை என் உயிரா நேசிச்சேன்… இப்போ வரைக்கும் நேசிச்சிட்டுதான் இருக்கேன், ஆனா, இன்னைக்கு அவ என்னை பார்த்த அந்த அருவருப்பான பார்வை இருக்கே, அது என் உயிரையே எடுக்குற மாதிரி இருந்ததுடா!” என்று விரக்தியின் விளிம்பிலிருந்து கூறியவன்,  மீண்டும் மதுவை அருந்தினான்…

​அவனுடைய அந்த பிடிவாதத்தையும், சொல்ல முடியாத மன வலியையும் கண்ட நிதின், அதற்கு மேல் அவனைத் தடுக்க முடியாமல் வருத்தத்துடன் மௌனமாக நின்றான்…

​அந்த இரவு இருவருக்குமே பாரமானதாக மெல்ல நகர்ந்தது, ஒருபுறம் ரன்வீர், ஆழமான வலியோடு மதுவின் போதையில் ஆழ்ந்து போனான், மறுபுறம் மிருதுளா,  உள்ளுக்குள் அழுதுகொண்டு, அந்தத் தவிப்பிலேயே கண்ணீருடன் உறங்கிப் போயிருந்தாள்…

​விடியப்போகும் அந்தக் காலைப் பொழுது, இவர்களது வாழ்க்கையில் ஒரு தெளிவைக் கொண்டு வருமா?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!