Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

72. மதுமதி - மதுரம் தூவும் மழையே

மழை 8

மரகத்திற்கு கீமோ சிகிச்சை முடிந்தது. வீட்டிற்குத் திரும்பி வந்த அடுத்த நாளே மதுராவும் மதியூரனும் சேர்ந்து கதையை வாசித்து முடித்தனர். கதையாசிரியருக்கு அதை அனுப்பி வைத்த கையோடு பணத்தையும் பெற்றுக் கொண்டனர். பணத்தைப் பெற்றுக் கொண்டதுமே அவனுக்குச் சேர வேண்டிய பங்கைப் பிரித்துக் கொடுத்தாள் மதுரா.

பணத்தை வாங்கிக் கொண்டாலும், முதல் சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட சந்தோஷம் அவன் முகத்தில் இல்லை. குழப்பமும் வேதனையுமாக அவன் முகம் சோர்ந்து இருந்தது. அதைக் கண்டுகொண்டாள் மதுரா!

ஆனால் மதியூரனோ அதை மதுராவிடம் பகிரத் தயங்கினான். எதுவும் பேசாமல் தலையசைப்புடன் விடைபெற்றுச் செல்ல முயன்றவனை அவள் அழைத்தாள்.

அவனும் திரும்பி, “என்ன?” என்பது போல அவளை யோசனையோடு பார்த்தான்.



Advertisement

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், பேசலாமா?”

“ம்ம்…” என்றபடியே திரும்பி வந்தவன், அவளுக்கு எதிரே அமர்ந்து கொண்டான்.

“என்ன பிரச்சனை யூரன் உங்களுக்கு? முதல் சம்பளத்தை வாங்கும் போது இருந்த சந்தோஷம் இப்போ இல்லையே, ஏன்?”

Advertisement

சட்டென அவன் முகம் அதிர்ச்சியைத் தத்தெடுத்தது. மகிழ்ச்சி வற்றிப்போன தன் முகத்தைத் தாய் கூடக் கண்டறிந்து என்னவென்று கேட்டதில்லை… ஆனால், அவள் கவனித்துக் கேட்டதும் உள்ளுக்குள் ஒருவித சிலிர்ப்பு உண்டானது. அவளது இந்த அக்கறையான கேள்வி இதமாக இருந்தது.

Advertisement

“துரா! எ… எனக்கு எ… என்னோட ப்… பி… பியூச்சர நெனச்சு ப… ப… பயமா இருக்கு” என்றான் தயக்கமாக.

“என்ன பயம் யூரன்?”

“இ… இ… இரண்டு முறை க… க… கதை வாசிக்க வா… வா… வாய்ப்பு கிடைச்சது. இ… இதுக்கு அ… அ… அப்புறம் கிடைக்குமா? இ… இ… இதை நம்பி மட்டுமே இ… இ… இருக்க முடியாது இல்லையா? அ… அ… அடுத்து என்ன செ… செ… செய்ய? ஒ… ஒ… ஒரு பயம் எ… எ… என்னை உள்ளுக்குள்ள ஆ… ஆ… ஆட்டிப்படைக்குது துரா!” என நிறுத்தி, எச்சில் விழுங்கியவன் மீண்டும் தொடர்ந்தான்.

Advertisement

“வெ… வெ… வெளிய யாராவது ‘நீ… நீ… நீ என்ன வே… வே… வேலை பார்க்கிற?’னு கேட்டா, நா… நா… நான் என்ன சொல்ல? சொ… சொ… சொல்லிக்கிறது போல ஒரு வே… வே… வேலை வேணும்ல!

அ… அ… அடுத்து என்ன பண்ணப்போ… போ… போ… போறேன்ற கே… கே…கேள்விதான், எ… எ… என் இ… இ… இதயத்துடிப்பை விட நொ… நொ… நொடிக்கும் அதிகமா எ… எ… எனக்குள்ள கே… கே… கேட்டுட்டே இருக்கு!” என வலியோடு திக்கித் திக்கிச் சொன்னான்.

அவளுக்கு அவனது நிலைமை புரிந்தது; பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனால், அதை அவனிடம் காட்டிக்கொள்ளாது புன்னகையுடன்,

“உங்க பயம் எனக்குப் புரியுது யூரன்! ஒரு பொண்ணு வேலைக்கு போனாலும் போகலன்னாலும் யாரும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா ஒரு ஆண் வேலைக்கு போகலைன்னா, அவனை இந்தச் சமூகம் இளக்காரமாதான் பார்க்கும். எனக்கு உங்க வேதனை புரியுது யூரன். நான் ஆறுதலுக்குச் சொல்றேன்னு நினைக்காதீங்க, உங்க குரலுக்காக, உங்க திறமைக்காகக் கண்டிப்பா நீங்க ஆசைப்பட்ட டப்பிங் ஆர்டிஸ்ட் வேலை உங்களுக்குக் கிடைக்கும்!

நாளைக்கு நான் ஒரு விளம்பரத்துக்கு டப்பிங் கொடுக்கப் போறேன். அங்கே மேனேஜரை எனக்கு நல்லாவே தெரியும். அவர்கிட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குதான்னு கேட்டுப் பார்க்கலாம். நாளைக்கு நீங்க என்னோட வாங்க யூரன், நாம முயற்சி பண்ணலாம்” என்று நம்பிக்கையூட்ட, அவன் முகம் தெளிவு பெற்றது.

“நி… நி… நிச்சயம் எ… எ… எனக்கு வா… வா… வாய்ப்பு கி… கி… கிடைக்குமா துரா? என… எ… என்னை அ… அவங்க ட… ட… டப்பிங் பேச அ… அ… அனுமதிப்பாங்களா? இ… இ… இல்லை ‘திக்குவாய்’னு அ… அ… அனுப்பிடுவாங்களா? நி… நி… நிறைய முறை நி… நி… நிராகரிக்கப்பட்டிருக்கேன் துரா! இ… இ… இ… இந்த முறையும் நிராகரிக்கப்படுவேனா? எ… எ… எனக்கு வா… வா… வாய்ப்பு கி… கி… கிடைக்குமா?” என உணர்ச்சிவசப்பட்டுக் கண்களில் நீரோடு கேட்டான்.

அதைக் கண்டதும் அவளுக்குச் சங்கடமாகிப் போனது.

“ப்ச், யூரன்! என்ன இது, கண்கலங்கிட்டு? உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் யூரன்! அப்படியே வாய்ப்பு கிடைக்கலைன்னாலும், அடுத்து அடுத்து முயற்சி செய்யலாம்! அதுக்கு உங்களுக்கு நான் உதவி செய்றேன்.

முன்னாடி மாதிரி இப்போ கால்கடுக்க ஸ்டுடியோ ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டு அலையணும்னு அவசியம் இல்லை. இப்போ எல்லாமே சோசியல் மீடியாதான். நம்ம குரலை அதற்கான இடங்கள்ல பதிவு செய்து வைத்தாலே போதும், வாய்ப்புகள் வரும்! அதுபோக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிங்க! அதுல உங்க குரலை மையமா வச்சு சின்னச் சின்னக் கதைகள் வாசிக்கலாம், வாசித்த கதைகளுக்கு விமர்சனம் கொடுக்கலாம்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஓபன் பண்ணி, உங்க ப்ரோஃபைல்ல ‘வாய்ஸ் ஆர்டிஸ்ட்’னு போடுங்க. ‘ப்ரோமோஷன் வீடியோக்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கிறேன்’னு சொல்லி உங்க குரல்ல வீடியோக்களைப் போடுங்க. வாய்ஸ் ஆப் (Voice App)-ல பதிவு செய்து உங்க ப்ரோஃபைல் லிங்க்கை ஷேர் செய்யலாம். நிறைய வாய்ஸ் ஆர்டிஸ்ட் வாட்ஸ்அப் குரூப்கள்ல பதிவு செஞ்சா வாய்ப்பு வரும். ஆட் ஏஜென்சி மூலமாவும் நான் முயற்சி செய்றேன். நீங்க ஆன்லைன் மூலமா இந்த வேலைகளைப் பாருங்க, நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

முதல்ல நீங்க ஒரு வாய்ஸ் டெமோ (Voice Demo) கிரியேட் பண்ணனும். அதைத்தான் ஏஜென்சிகளுக்கு அனுப்ப முடியும். முதல்ல நீங்க விளம்பரத்துல டப் பண்றது போல ஒரு டெமோ ஆடியோ ரெடி பண்ணுவோம்…” என்றவள், அவனை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

மூன்று வித்தியாசமான விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் வரும் வசனங்களைத் தனியாக எழுதிக்கொண்டாள். ஒருமுறை அந்த விளம்பரங்களை அவனைப் பார்க்கச் சொல்லிவிட்டு, மைக் முன்னே நிற்க வைத்துப் பேசச் சொன்னாள்.

அவள் எழுதித் தந்த வசனங்களை வைத்துக்கொண்டு மைக்கின் முன்னே நின்றவன், கண்களை மூடிப் பெருமூச்சை இழுத்துவிட்டான். முதலில், ஒரு நகைக் கடை விளம்பரத்தில் பேசுவது போல மிக மென்மையாகவும் அன்பாகவும் பேசினான். அதை அவள் பதிவு செய்தாள்.

பின்பு, ஒரு வங்கி அல்லது இன்சூரன்ஸ் விளம்பரங்களில் வரும் கார்ப்பரேட் குரல் போல கொஞ்சம் கம்பீரமாகப் பேசினான். அடுத்து, பைக் விளம்பரத்தில் வரும் துள்ளலான குரலில் பேசினான். மூன்று விதமாகப் பேசப்பட்ட விளம்பரப் பதிவுகளையும் அவனது பெயரோடு MP3 ஆடியோவாக மாற்றினாள்.

அவனையும் அதைக் கேட்க வைத்தாள். சில இடங்களில் தடுமாற்றங்கள் இருந்ததால், மீண்டும் சரியாகப் பேச வைத்துப் பதிவு செய்தாள். பின்னர், அவள் சொன்ன ஆட் ஏஜென்சி குரூப்பில் அவன் பெயரைப் போட்டுக் குரல் பதிவை அனுப்பி வைத்தாள்.

அவள் அவனுக்காக இவ்வளவு மெனக்கெடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இத்தனை வருடங்களாக அவனது உறவினர்களோ, நண்பர்களோ, ஏன்… அவன் உயிராக நேசித்த அர்ச்சனாவோ கூட அவன் உதவி கேட்டபோது எதுவும் செய்ததில்லை.

அர்ச்சனா தனக்குத் தெரியாமல் செய்த ஒரே நல்ல விஷயம், அவனது குரலை மதுராவிற்கு அனுப்பி வைத்தது மட்டும்தான்! சுயநலக் கூட்டங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, வரம் தரும் தேவதையாகத் தெரிந்தாள் மதுரா!

அவள் அவனுக்காகச் சிரத்தை எடுத்து வேலை செய்வதைக் கண்டவனுக்கு, உள்ளுக்குள் ஒருவித மகிழ்ச்சி ஊற்று புதிதாய்ப் பீறிட்டுக் கிளம்பியது. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தான். ஆனால், முன்பு இருந்த குழப்பமும் வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து அகன்றன.

அவன் முகம் தெளிவாவதை அவள் உணர்ந்தாள். அவன் முகத்தில் படர்ந்த அந்தச் சிரிப்பைப் பார்க்கத்தானே அவள் இவ்வளவு செய்தாள்!

“து… து… துரா! உ… உ… உங்களுக்கு எ… எ… எப்படி ந… ந… நன்றி சொல்றதுன்னே தெரியல! எ… எ… எனக்காக நீ… நீ… நீங்க எவ்வளவு மெனக்கெடுறீங்க?! நா… நா… நான் உ… உதவி கேட்டாக்கூட எ… என் உ… உறவுகளுக்கோ, ந… ந… நண்பர்களுக்கோ செ… செ… செய்ய மனசு வ… வ… வராது…

ஆ… ஆனா, கொ… கொ… கொஞ்ச நாள்தான் பழகியிருக்கோம். நீ… நீ… நீங்க எ… என் மே… மே… மேல நம்பிக்கை வ… வ… வச்சு, எ… எ… எனக்காக ஒவ்… ஒவ்வொண்ணும் செய்யும் போது, சொ… சொ… சொல்ல வார்த்தையே இல்லை… ஏ… ஏ… ஏன் இந்தத் தோழியை எனக்கு முன்னாடியே கொடுக்கலைனு க… க… கடவுள்கிட்ட சண்… சண்டை போ… போ… போடணும்போல இருக்கு!” என்று அவன் சொல்ல, வாய்விட்டுச் சிரித்தாள் மதுரா.

“சண்டைலாம் போட வேண்டாம் யூரன்! அதான் இப்ப நண்பர்களாகிட்டோமே, இனி கடந்த காலத்தைப் பத்தி என்ன பேச்சு? உங்களுக்குப் பிடிச்சமான வேலை கிடைக்கிற வரைக்கும் கண்டிப்பா நான் உதவி செய்வேன் யூரன். கவலைப்படாம முன்னேறுவதற்கான வாய்ப்பை மட்டும் தேடிட்டே இருங்க! நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சிரிச்ச முகத்தோடு போயிட்டு நாளைக்கு வாங்க” என்றாள் நம்பிக்கையாக.

அவளது பளிச்சென்ற சிரிப்பும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவனுக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியைத் தந்தன. அவளிடம் பேசிக்கொண்டே இருந்தால், உள்ளுக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச தாழ்வுமனப்பான்மையும் அகன்று, தன்னம்பிக்கை வந்துவிடும் போலத் தோன்றியது அவனுக்கு. அங்கிருந்து செல்ல மனமில்லாமல்தான் அவ்விடம் விட்டு வெளியேறினான்.

பின்னர், தன் தாயிடம் அவன் சொன்னவற்றைப் பகிர்ந்து கொண்டாள் மதுரா. அவரோ, “எப்படியாவது அந்தத் தம்பி வாழ்க்கையில முன்னேற உன்னாலான உதவியைச் செய் மதுரா! உன்னை நம்பி வந்த பிள்ளை, முதல் படி ஏற உதவினால் கூட போதும், அப்புறம் அந்தத் தம்பி பிழைச்சு முன்னேறிடும். உன்னைப்போல ஆதரவான துணை கிடைக்காததாலதான் இந்தச் சின்ன வயசுல அவனுக்கு இவ்வளவு விரக்தி! இனி தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் எதையும் சாதிப்பான். எந்த வகையிலாவது நம்பிக்கையையும் தைரியத்தையும் மட்டும் கொடுத்துடு மதுரா, அந்தத் தம்பி அதைத்தான் உன்கிட்ட எதிர்பார்க்குது” என்றார்.

‘அதோடு சேர்த்து காதலைக் கொடுத்தால் ஏத்துக்க மாட்டாராமா? அவரை நான் காதலிக்கிறேன் மா! எந்தப் புள்ளியில தொடங்கின காதல்னு தெரியல, ஆனா அவர் மீது எனக்குக் காதல் இருக்கு. தன்னம்பிக்கையும் தைரியமும் சொல்லத் தெரிந்த எனக்கு, என் காதலைச் சொல்ல இப்ப தைரியம் இல்லை. ஆனா கண்டிப்பா சொல்லுவேன் மா… அவரை ஜெயிக்க வச்சுட்டுச் சொல்லுவேன்!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், தாயின் கூற்றுக்குத் தலையை மட்டும் அசைத்தாள்.

அவள் கொடுத்த தைரியமும் தன்னம்பிக்கையும் மதியூரனின் முகத்தைப் பிரகாசமாகவும் புத்துணர்வாகவும் வைத்திருந்தது. மகிழ்ச்சியோடு வீடு வந்தவனுக்கு, அப்படியே அது மடிந்து போனது… தாய் கேட்ட அந்த ஒரே கேள்வியால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!